வியாழன், 7 ஜூலை, 2022

நிம்(மி)மதி(வாணன்)

 காணாமல் போய்விட்டது என்று நீங்கள் தேடிய ஒரு மதிப்பு வாய்ந்த பொருள் ஏழெட்டு மாதங்கள் கழித்து திருப்பிக் கிடைத்தால் சந்தோஷமாக இருக்குமா?  வருத்தமாகவோ, குறையாகவோ இருக்குமா?

"நான் இங்கே வச்சிருந்த பேப்பரைப்  பார்த்தியா...  எங்க தேடியும் கிடைக்க மாட்டேங்குது..   சே என்னடா வீடு இது..."  மதி கத்திய கத்தலில் கையில் கரண்டியுடன் அங்கு ப்ரசன்னமானாள் நிம்மி.

அதே சமயம் மேஜை டிராயரில் குப்பையைக் கலைத்துத் தேடிக்கொண்டிருந்த மதி கண்ணில் பட்டது 'அது'.  நிம்மியைக் கண்டதும் சட்டென டிராயரை மூடினான்.

"எதுக்கு கத்தறீங்க?  உங்க பேப்பரை நான் ஏன் எடுக்கப் போறேன்? "

"இந்த வீட்ல எல்லாத்தையும் தேட  வேண்டியதாய் இருக்கு..  எதுவும் வச்ச இடத்துல இருக்கறதில்ல..."

"வச்ச இடத்துல தேடினா கிடைக்கும்..  எங்க வச்சீங்களோ... நீங்க எதை உருப்படியா பத்திரமா வச்சிருந்திருக்கீங்க.."

"சப்பாத்திக்கு அப்பளம் இடறதுக்கு எதையாவது எடுத்துத் தொலைச்சியா?"

"அவ்ளாம் பெரிய பேப்பரா அது?"  அதை எப்படிங்க தொலைக்கிறீங்க.."

"சனியனே..  ஆபீஸ் பேப்பர் சைஸ்தான் அது..  உன் புத்தியைச் சொன்னேன்.."

"என் புத்திக்கென்ன குறைச்சல்?  உங்களைக் கட்டிக்கிட்டது தவிர மிச்சம் எல்லாம் சரிதான்..  உங்க அம்மாதான் அப்பளம் இடுவாங்க..  அவங்களைக் கேட்க வேண்டியதுதானே"

மேஜை மேல் தேடியவள், புத்தகங்களுக்கு இடையில் எல்லாம் தேடினாள்.  

"அங்க எல்லாம் பார்த்துட்டேன்...  இல்ல.."

"நீங்க பார்க்கற லட்சணமும் பார்த்திருக்கேனே.."

ஒரு பக்கம் தான் தேடிய இடத்திலிருந்தே பேப்பரைத் தேடி எடுத்து விடுவாளோ என்கிற எரிச்சல் ப்ளஸ் பயம் கலந்த எதிர்பார்ப்பும் மதியிடம் இருந்தது.

இங்கே இல்லையென்றதும் ரூமுக்குள் சென்றாள்.

"ஏய்.. ஏய்...  அங்க என் பீரோவைத் திறந்து என்ன செய்யறே?"

"அங்கதானே எல்லாத்தையும் ஒளிச்சு வைப்பீங்க...   இது என்ன File?""

எட்டிப்பார்த்த மதியின் முகம் கரண்ட் போய்விட்டு திருப்பியதும் எரியும் பல்பு போல ப்ரகாசமானது..

"அதாண்டி..  அதாண்டி...  அப்பாடி...  என் கண்ணே...  நிம்மியும் மதியும் சேந்தாதான் நிம்மதி..."

"ரொம்ப வழியாதீங்க..   அப்படி கத்தவும் வேண்டாம்..  இப்படி வழியவும் வேண்டாம்.."

ஓரமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மதியின் அம்மாவின் முகவாய் தோளுக்குச் சென்று திரும்பியதை ஹாலில் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்த நிம்-மதியின் மகனும், மகளும் பார்த்து, ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.

அவள் அந்தப் பக்கம் போனதும் டிராயரைத் திறந்தான் மதி.  உள்ளே சிரித்துக் கொண்டிருந்தது சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன் காணாமல் போனதாய் நினைத்துக் கொண்டிருந்த நிம்மியின் இரண்டு பவுன் மோதிரம்.

இப்போது அவளை அழைத்துக் கலாய்க்க நினைத்தபோது சட்டென ஒரு எண்ணம் பளிச்சிட்டது.  இன்னும்  மூன்று நாட்களில்  நிம்மியின் பிறந்த நாள்.  அப்போது சர்ப்ரைஸாக தரலாம்.  சமீப பிறந்த தினங்களில் அவளுக்கு தான் ஒன்றும் தரவில்லை என்பது நினைவுக்கு வந்ததும் புன்னகைத்துக் கொண்டான்.  

காத்திருக்கிறது அவளுக்கு இனிய சர்ப்ரைஸ்..  

வெளியில் சென்று வந்தபோது அதை  கிஃப்ட் ராப்பர் சுற்றி தயார் செய்து கொண்டான்.

பிறந்தநாள் அன்று காலை நிம்மியை மெல்ல தோளோடு சேர்த்து அணைத்து "ஹேப்பி பர்த்டே நிம்மி" என்றவன், சர்ப்ரைஸாக அவளிடம் எடுத்து நீட்டினான்.  
நிம்மி மகிழ்ந்து போனாள்.  மகன் மகளிடம் சென்று பெருமையாகக் காட்டினாள்.  மதி புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.  

"என்னங்க அது?"

"சஸ்பென்ஸ்...  பிரித்துப் பார்..."

நிம்மி அதைக் கொண்டுபோய் ஸ்வாமி அலமாரியில் வைத்தாள். கண்களை மூடி சிலநொடிகள்  ஸ்வாமியை வணங்கி விட்டு மாமியாரை அழைத்து நமஸ்கரித்தாள்.

இவனையும் அங்கு நிற்க வைத்து நமஸ்காரம் செய்தாள்.

மதி பார்த்துக் கொண்டிருக்க, மெல்ல ஆசையுடன், பூரிப்புடன் அதைப் பிரித்துப் பார்த்தவள் முகம் முதலில் மலர்ந்து உடனே மாறியது...

"ஏய்..   இது என்னோட காணாம போன மோதிரம்..."

"ஆமாம்..   கிடைச்சுடுச்சு பார்...  சந்தோஷம்தானே?   நான் எதுவும் பத்திரமா வச்சுக்கறதில்லைன்னு எப்பவும் என்னைச் சொல்வியே..   ஒன்பது மாசம் இருக்குமா, நீ அப்போ தொலச்ச மோதிரம்..."

நிம்மி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.    அவள் கண்கள் சிவந்திருந்தன.


"ஏய்..." என்று அவள் முகத்தை உயர்த்திய மதி அரண்டு போனான்.

"அசிங்கமா இல்லை உங்களுக்கு?  புதுசா கிஃப்ட் கொடுக்க வக்கில்லன்னா இப்படியா செய்வாங்க...  அல்லது நான் உங்களை சொல்றேன்னு காத்திருந்து பழி வாங்கறீங்களா...  எடுத்து ஒளிச்சு வச்சுட்டு...  ச்சே...   உங்களை எல்லாம்..."

"ஏய்..   நிம்மி...   இப்போ ரெண்டு நாள் முன்னாடி ஆபீஸ் பேப்பர் தேடினேனே..   அன்னிக்கிதான் கிடைச்சுது..  உடனே உன் கிட்ட கொடுக்க வந்தபோது திடீரென தோன்றி சர்ப்ரைஸா உன் பர்த் டே அன்னிக்கு கொடுக்கலாம்னு பிளான் பண்ணினேன்..  அவ்வளவுதான்..  என்ன, இதைப் போய் இவ்வளவு சீரியஸா..."
நிம்மி கோபத்துடன் உள்ளே போய்விட்டதால் நிம்மி இல்லாமல் அதாவது நிம்மதி இல்லாமல் மதி மட்டும் தனியாய் விழித்துக் கொண்டு நிற்கிறான்.  

அவனுக்கு எப்படி உதவி செய்வது?  நிம்மியை எப்படி சமாதானப் படுத்துவது...



சொல்லுங்க ப்ரெண்ட்ஸ்..  சொல்லுங்க...

=========================================================================================================================

பழைய பதிவிலிருந்து.....

உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் செம்மொழி மாநாடாகி ஜூன் ஜூலை என்று அல்லாடி இப்போது ஜனவரியில் நடக்கப் போகிறதாம்.​  ​உலகத் தமிழ் ஆராய்ச்சி சங்கம் ஒப்புதல் தராததால் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு உலக செம்மொழி மாநாடாகி விட்டது.  
     
     தமிழ்த் தாய் என்கிறோம். தெலுங்கில் மா தெலுகு தல்லி என்கிறார்கள். கனாடர்களும் கன்னட தல்லி என்கிறார்கள். ஆக மொழியை வைத்துக் கொண்டு ஆளாளுக்கு உணர்ச்சி வசப்படுகிறோம். தகவல் பரிமாற்றத்தில் உதவும் இந்த மொழியை யோசிக்கும் போது இந்தியாவில் தமிழ், மலையாளம் தெலுகு, கன்னடம், அப்புறம் ஹிந்தி என்று நினைக்கத் தோன்றும். அதாவது வட இந்திய பாஷை முழுதும் ஹிந்தி போலத் தோன்றும் 

     நண்பர் விக்கியை கேட்டபோது இந்தியாவில் இந்தோ யுரோபியன், இந்தோ ஆர்யன், திராவிட, என்றெல்லாம் பிரித்து ஆக மொத்தம் 1991 கணக்கெடுப்பின்படி 1576 தாய்மொழிகள் இந்தியாவில் உள்ளதாக நீளப் பட்டியல் வந்தது! 2001 கணக்கெடுப்பின்படி 29 மொழிகள் ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் பேசும் மொழியாகவும், 60 மொழிகள் ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள் பேசும் மொழியாகவும்,   10,000 மக்களுக்கு மேல் பேசும் மொழிகள் 122 எனவும் கணக்கிடப் பட்டுள்ளது. 

     தேவநாகரி எழுத்துருவில் ஹிந்தி இந்தியாவின் அங்கீகரிக்கப் பட்ட ஆட்சி மொழி. ஆனாலும் ஆங்கிலம் இரண்டாவது மொழியாக துணை நிற்கிறது.

     மிகுந்த பழமை மொழியாக தமிழ் அறியப் பட்டு 2004 இல் செம்மொழியாக அறிவிக்கப் பட்டது. பிறகு 2005 இல் சமஸ்க்ருதமும் 2008 இல் கன்னடமும் தெலுங்கும் செம்மொழியாக அறிவிக்கப் பட்டன. இன்னும் சில நாட்களில் திரைப்பட விருது போல எல்லா மொழிகளுக்கும் இது வழங்கப் பட்டு விடும் என்று நம்பலாம். 

     எல்லாவற்றையும் பட்டியலிட இடமும், படிக்கப் பொறுமையும் இருக்காது என்பதால் இந்தியாவின் சில முக்கிய மொழிகள் பற்றி...
அஸ்ஸாமிஸ், அவாதி, பாக்ரி, பெங்காலி, பில்லி, போஜ்புரி, சத்திஸ்கரி, டெக்கான், டோக்ரி-காங்க்ரி, கார்வாலி, குஜராத்தி, ஹர்யான்வி,ஹிந்தி, ஹோ, கநௌஜி, கன்னட, கான்தேசி, காஷ்மிரி,கான்தேசி, கொங்கனி (2), குமாணி, கருக்ஸ், லாமணி, மகாஹி, மைதிலி, மலையாளம், மாளவி, மராத்தி, மார்வாரி, மெயதெய், முண்டாரி, நேபாளி, நிமாடி, ஒரியா, புன்ஜாபி, சாத்ரி, சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுகு, துளு, உருது, ...

     அப்பாடி... இன்னும் எவ்வளவோ மொழிகள் இருந்தாலும் குறைந்த பட்சம் ஒரு மில்லியன் மக்களாவது பேசும் மொழிகள் இவை.

     73 மில்லியன் மக்களுக்கு மேல் பேசப் படுகிறது தமிழ் மொழி. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னாலிருந்தே தமிழ் மொழி இருப்பதாக அறியப் படுகிறது. தமிழ்நாடு, புதுவை, மாநிலங்களில் ஆட்சி மொழியாகவும், மலேசியா, பிஜி, இலங்கை போன்ற இடங்களில் ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் தமிழ் உள்ளது.

===========================================================================================

பழைய பதிவொன்றில் மஞ்சுபாஷிணி சம்பத்குமாரின் பின்னூட்டம்~!

எண்ணங்கள் சிலருக்கு ஒரே போல் அமையுமாமே.. சிந்தனைகள் வேறாகி இருந்தாலும்?

சிந்திக்கிறதுன்னா பிரயத்தன்யம் செய்து ஏதேனும் யோசிக்கிறது.. ஆனா எண்ணங்களுக்கு மட்டும் தடையே போடமுடியாதபடி போய்க்கிட்டே இருக்கும்....

அதுபோல உங்களுடைய வரிகள் எல்லாம் படிக்கும்போது நான் சிலசமயம் சின்னவயதில் இருந்து இதோ இப்ப வரை விடை கிடைக்காமல் பல தடவை தோணினதை தான் அப்படியே கொடுத்திருக்கீங்க....

கடமைகள் இருக்கு இன்னும் முடிக்க...ஆனாலும் ஒரு பற்றில்லாத்தன்மை சட்டுனு வந்து மனதை வெறுமையாக்கும்...

இங்கே எழுதி இருப்பதை பார்க்கும்போது மரணத்தை வரவேற்க தன்னை தயார் செய்துக்கொள்ளும் விதத்தை ஒவ்வொரு ஸ்டேஜா ரொம்ப நுணுக்கமா எழுதி இருப்பதை பார்க்கும்போது பிரமிப்பா இருக்குப்பா...

ஆரம்பமே ரொம்ப அசத்தல்.. ஏதோ ஒரு கவலைல இருக்கும்போது எதிர்ப்பார்க்காதப்ப சட்டுனு கடவுள் எதிர்ல வந்தா அப்ப என்ன மனசுல இருக்கோ அதை தான் கேட்போம் என்பது மிகச்சரியே....

நிறைய விஷயங்கள் நம்மை நாம் அறிய ரொம்ப ஆழ்ந்து யோசிக்கும்போது இதோ நீங்கள் இங்கே எழுதியது போல நடக்க நூறு சதவீதம் வாய்ப்பிருக்கு..

அசந்துவிட்டேன் நீங்கள் எழுதியதை படிக்கும்போது.. இப்படி தான் இப்படியே தான் நினைப்பதுண்டு... இறந்த பின் எங்கே போவோம்? திரும்ப ஜனிப்போமா? இப்படி நிறைய கேள்விகள் குடையும் மனதில்....

கடமைகள் முடித்துவிட்டதால் வருத்தமோ எதிர்ப்பார்ப்போ எதுவுமில்லைன்னு நீங்க எழுதியது எத்தனை சத்தியமான வார்த்தை தெரியுமா? உண்மையே.. வயதான பின் சட்டுனு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு விட்டு போகிறது.... தனிமையை மெல்ல நாடுகிறது...

குட்டி குட்டி ஆசைகள் பீச்ல உட்கார்ந்து மிளகாய் பஜ்ஜி சாப்பிடுவது... ஆனால் பாராட்டத் தோன்றியது ஆசைகள் எல்லை மீறாதவை என்ற வார்த்தையை படித்தபோது...

முடிவு நச் நு முடிச்சீங்க... பிடிச்சிருந்தது ஸ்ரீராம்....

அசத்தலான பதிவுக்கு அன்பு நன்றிகள்பா...

கருடபுராணம் நானும் படிச்சு பயந்துட்டேன்.. ஐயோ பகவானே இத்தனை கொடுமைகள் இருக்கா என்று...

அதே பதிவில் சீனுவின் கமெண்ட்!

ஆழமான வரிகள்... ஒரு வாசித்தலில் புரியவில்லை.. ஒவ்வொரு வரிகளையும் மேலும் மேலும் வாசித்தேன்... என்னால் கருத்து கூற இயலவில்லை.... என்னால் என்ன கூற முடியும் சொல்லத் தெரியவில்லை....

=======================================================================================

முன்னர் படத்துக்கு பொருத்தமாக எழுதிய கவிதைகள்..  படம் இல்லாமல் படிக்கும் வண்ணம் இருக்கும் இரண்டு மட்டும் இங்கு இப்போது...

எதிரில் வரும்
ஒரு மனிதன்
சொல்லக் கூடும்
இந்தப் பாதை
எங்கு முடிகிறதென...
அல்லது
எங்கு தொடங்குகிறதென..

கிளையில்லாப்
பாதையில்
வளைவுக்கு ஒன்றும்
குறைவில்லை!

================================================================================================================


இணையத்தில் ரசித்தவை வரிசையில்....



======================================================================================================


வெ சீதாராமனே ஒரு மருத்துவர் தெரியுமோ...


பார்வை ஒன்றே போதுமே...


"எங்கே..  இப்போ கோல் போடுங்க பார்ப்போம்!"


இல்லைன்னா மட்டும்.....

ஆனாலும் அவர் தாராளம்! 

80 கருத்துகள்:

  1. வியாழனும் கதை நாளாகி விட்டது. படங்கள் பொருந்தவில்லை. "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி" அலைவது சகஜம் தான். ஆனால் அந்த மோதிரம் தான் குட்டுகிறது. 

    மஞ்சுபாஷிணி இளைய தலைமுறை சாப்ட்வேர் என்ஜினீயர் ஆக இருப்பார் போல!.

    எண்ணங்கள் OS போல. சிந்தனைகள் APP போல. OS பொது. App வேறு வேறு.
     
    //சிந்திக்கிறதுன்னா பிரயத்தன்யம் செய்து ஏதேனும் யோசிக்கிறது.. ஆனா எண்ணங்களுக்கு மட்டும் தடையே போடமுடியாதபடி போய்க்கிட்டே இருக்கும்....// (OS எப் போதும் ஓடிக்கொண்டே இருக்கும்!)  

    //கடமைகள் முடித்துவிட்டதால் வருத்தமோ எதிர்ப்பார்ப்போ எதுவுமில்லைன்னு நீங்க எழுதியது எத்தனை சத்தியமான வார்த்தை தெரியுமா? உண்மையே.. வயதான பின் சட்டுனு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு விட்டு போகிறது.... தனிமையை மெல்ல நாடுகிறது...//

    உங்கள் கடமைகள் எப்போது முடிவடைந்தது?

    மகன்கள் திருமணம் முடியவில்லையே?

    வயதான பின்  நடப்பதாக சொல்லப்படும் பிடிப்பு விடுதல், தனிமை நாடல் இரன்டும் என் அனுபத்தில் நேர் எதிர். பிடிப்பு கூடுதல் (மனைவி, குழந்தைகள் பேரில்), தனிமை பயத்தல் (பார்க்கும் தூரத்தில் யாராவது துணை வேண்டும்) என்று இருக்கிறது. 

    பாட்டுக்கு பாட்டு 

    பாதை நேர் என்றால்
    தொடக்கம் முடிவு
    எல்லாம் தெரியும்
    வளைவுகள் இல்லையேல்
    பயணம் அலுத்து விடும்
    வாழ்க்கையும்!

    நடைவண்டி பரவாயில்லை. செய்தால் விலை கூடும், மரத்தை விட. 

    கடைசி ஜோக் ஜோக் அல்ல. நடப்பதுதான்.  கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவது நடப்பது தான், அவர்கள் வரவை எதிர்பார்த்து. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட கருத்துக்கு நன்றி. கதையோ, கட்டுரையோ ஒப்பேற்றியாகி விட்டது!! படங்கள் சும்மா இணையத்திலிருந்து உருவியது!

      மஞ்சுபாஷிணி கருத்து சம்பந்தப்பட்ட பதிவுக்கு ஒத்து வரும்.

      எசப்பாட்டு ஓகே.

      நீக்கு
    2. //உங்கள் கடமைகள் எப்போது முடிவடைந்தது?

      மகன்கள் திருமணம் முடியவில்லையே?//

      அந்த 'நானை' நீங்கள் ஏன் ஸ்ரீராமாய்   பார்க்கிறீர்கள்?!

      நீக்கு
  2. ஓர் இணக்கமான தம்பதிகளின் உரையாடல் ரசிக்க வைத்தது.

    மனுசன் வாழ்ந்தால்தான் மொழி வாழும் ஆனால் இங்கு மொழியால் மனுசன் சாகுறான்.

    பதிலளிநீக்கு
  3. தலைப்பையும் முதல் வரி/பத்தியையும் இணைத்துப் பார்த்து...ஹாஹாஹா

    அட காணாமல் போன நிம்மதி வந்த மகிழ்ச்சி என்று எண்ணினேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போய்ட்டு போய்ட்டு வருவதுதான் நிம்மதி,!!! ஹி..ஹி..ஹி..

      நீக்கு
    2. போய்ட்டு போய்ட்டு வருவதுதான் நிம்மதி,!!! //

      ஒரு காமெடி - இதை வாசிச்சிட்டு இருக்கும் போது ...

      வீட்டில் கணவர் - அடிக்கடி போய்ட்டு போய்ட்டு வருது என்றார். நான் டக்கென்று திரும்பிப் பார்த்தேன்...என்னது இது ஸ்ரீராமின் கமென்ட் இங்கு இவர் வாயிலிருந்து வருது!!!
      கடைசியில் சொன்னார் --- ச்சே இந்த நெட் என்று!!!

      கீதா

      நீக்கு
    3. இணைய இந்த வாய்ப்பு ஆனாலும் நிம்மதி போச்!  வந்த உடனே வந்துடும்!

      நீக்கு
  4. பொதுவாக எல்லார் வீட்ட்லும் நடப்பது.....இதை நானும் கதையாக எழுதி வைத்திருக்கிறேன்...மறதி, பிக் பாஸ் என்று இரண்டாக.....ஆனால் 4,5 வருடங்களுக்கு முன் எழுதியது அப்படியே இருக்கிறது!!!!!!

    //"அதாண்டி.. அதாண்டி... அப்பாடி... என் கண்ணே... நிம்மியும் மதியும் சேந்தாதான் நிம்மதி..."//

    ஹாஹாஹா மதி எவ்வளவோ பரவால்ல!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, நீங்களும் எழுதி வைச்சிருக்கீங்களா? முடிச்சு அனுப்புங்க சீக்கிரம்.

      நீக்கு
  5. "ஏய்.. இது என்னோட காணாம போன மோதிரம்..."//

    வாசித்துக் கொண்டு வரும் போதே ஊகித்துவிட்டேன்!!!!!!

    கொஞ்சம் கஷ்டமான கேஸ்பா ஸ்ரீராம்!!!! ஆறப் போடணும்!!! விளையாட்டு வினை!!! விளையாட்டிலும் கவனமாக இருக்கணுமே!!

    ரொம்ப நல்லா இருக்கு முடிவு!! மீண்டும் நிம்மதி காணமல் போய்விட்டதே!!! எங்கே நிம்மதி...எங்கே நிம்மதி!!! பாடிக் கொண்டிருக்கும் மதியின் மதி!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மஞ்சுபாஷிணி, சீனு,......அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு இவர்களை,

    மஞ்சுபாஷிணியின் கருத்து அருமை!! அவங்க நீளமா (கிட்டத்தட்ட என்னைப் போல!!? கீதாக்கா போல!!!) போடுவாங்கன்னு தெரியும்

    எந்தப் பதிவுக்கு ஸ்ரீராம் இது? அந்தச் சுட்டியும் கொடுத்திருக்கலாமோ? நான் வாசிக்காத பதிவோ?

    //இறந்த பின் எங்கே போவோம்? திரும்ப ஜனிப்போமா? இப்படி நிறைய கேள்விகள் குடையும் மனதில்....//

    இது ஒரு காலத்துல நானும் இப்படித்தான் யோசித்த்துண்டு. ஆனால் யோசிக்க யோசிக்க இந்த நிமிடத்து மகிழ்ச்சியைத் தொலைத்துவிடுவோம்!! அப்புறம் மனம் யதார்த்தத்தில் இருந்து விலகிவிடுவோம் என்ற பயமும் வந்துவிடும்...

    அதீதமாக யோசிக்காமல் இன்றைய இந்த நொடியினை அனுபவித்துக் கொன்டே போவோம்...'நிம்மதியை' இழக்காமல்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் கணக்கு அல்லது கடவுள் காலம் என்னும் பதிவுக்கான பின்னூட்டம்.

      நீக்கு
    2. அல்லது ஒரு வியாழன் அந்தப் பழைய பதிவை மீள்பதிவாக்கி விடுகிறேன்!

      நீக்கு
  7. இந்த வியாழன் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைச்சல்தான்.
    பிறந்த நாளுக்கு புதிதாக கொடுப்பது போல் பில்டப் கொடுத்து விட்டு, பழசை கொடுத்தால் கோபம் வரத்தான் செய்யும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை பிடிக்கலையா? வியாழனில் கதையா இருந்தா பிடிக்கலையா?

      நீக்கு
  8. மஞ்சுபாஷிணியின் கருத்து தவறு. வயது ஆக ஆக பற்றும், பயமும் அதிகரிக்கும்.
    இப்போதெல்லாம் யாரும் ஐயா, சாமி என்று அழைத்து பிச்சை கேட்பதில்லை.

    பதிலளிநீக்கு
  9. பானுமதி வெங்கடேஸ்வரன்7 ஜூலை, 2022 அன்று AM 7:22

    மன்னிக்கவும் முந்தைய கருத்துகளில் பெயரை குறிப்பிட மறந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம்..  வாங்க துரை செல்வராஜூ ஸார்..   தஞ்சாவூர்க் காரர்கள் இருவரும் ஒரே கமெண்ட்டில் உறவாடுகிறீர்களே...!!  அட!!

      நீக்கு
  11. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்...

    பதிலளிநீக்கு
  12. @ பெயரில்லா..

    // வயது ஆக ஆக பற்றும், பயமும் அதிகரிக்கும்..//

    காலையில் பதிவைப் படித்தபோது சற்றே மயங்கி விட்டேன்..

    தாங்கள் சொல்வதே சரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தக்கருத்து சொன்னாலும் அது சரி என்று தோன்றுகிறதா?

      நீக்கு
    2. வயது ஆக ஆக பற்றும், பயமும் அதிகரிக்கும்.//

      ஆமாம் வயதாகும் போது மனம் பக்குவம் அடைந்து தத்துவப் பாதையில் செல்ல வேண்டும் என்று சொல்வாங்க...ஆனால் இப்பத்தான் பாசம் பற்று அதிகரிக்கிது!!!

      கீதா

      நீக்கு
    3. விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவியைப் போல நிற்கும் மனங்களும் உண்டு.

      நீக்கு
  13. வர வர வியாழன் பதிவுகள் என்னுள் மலைப்பை , அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன...

    சித்தர்கள் மாநாடு மாதிரி இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அயர்ச்சியை?

      சோர்வை?  ஏன்?  அலுத்துப் போகிறதா?

      நீக்கு
  14. மதி 007-க்கு இது தேவை தானா...? திருட்டு பட்டம் வேற...! நிம்"மதிக்கு" சிரமம் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடக்கப்போவதை அக்கணம் மறந்தாரா, சிக்கனம் பார்த்தாரா...  ஏதோ நேரம்!

      நீக்கு
  15. மஞ்சுபாஷிணி அவர்களின் கருத்துரை தனி உற்சாகம் தரும்... ம்... அந்தக் காலம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  நீளமான பின்னூட்டங்களுக்கு சொந்தக்காரர்.  ஒவ்வொரு பதிவையும் ஊன்றிப் படித்து நிறுத்தி  நிதானமாக பின்னூட்டமிடுபவர்.

      நீக்கு
  16. @ ஸ்ரீராம்..

    // எந்தக் கருத்து சொன்னாலும் அது சரி என்று தோன்றுகிறதா?.. //

    மனம் ஒரு குரங்கு தானே!..

    திருவிழாவுக்குச் சென்ற குழந்தை போலத் தான் எல்லாரும்!..

    இதைப் பார்த்தால் இது.. அதைப் பார்த்தால் அது..

    காலையில் எழுந்து தளத்துக்கு வந்து படித்தபோது அந்தக் கருத்துகள் சரி என்று தோன்றியது.. இருந்தாலும் மனம் தெளிவு பெறவில்லை..

    ஆயினும் அதை ஆதரித்து ஒன்றும் சொல்ல வில்லையே!..

    இப்போது பெயரில்லா வின் கருத்துகள்.. காரணம் அந்த அவஸ்தையில் இருந்து நான் மீண்டு வந்திருப்பதால்!..

    பதினைந்து நாட்களுக்கு முன்பு வரை நள்ளிரவில் திடுக்கிட்ட விழிப்பின் போது வரும் பயம்.. மனைவி மக்கள் பாசம்..

    பேத்திகளின் அன்பு முகம், இன்னும் வீட்டுக்கே வராத மருமகள்,, 2023 மே மாதம் வரையிலும் வரிசை கட்டியும் இன்னும் எபிக்கு அனுப்பப்படாமல் மின்னஞ்சலுக்குள்ளேயே காத்து நிற்கும் எனது கதைகள் எல்லாமும் நினைவுக்குள் வந்து பாடாய்ப் படுத்தின..

    இன்னமும் மீண்டு வர இயல வில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் மருமகள் வீட்டுக்கு வந்து வாழ்ந்து வாழவும் வைக்கப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. எங்கள் வாழ்த்துகளும்!

      நீக்கு
  17. கவிதை நன்றாக இருக்கிறது....முடிவே இல்லாத பாதையாக இருந்தாலோ?!!!

    வளைந்து நெளிந்து போகும் பாதை - நினைவுக்கு வந்தது இரண்டாவது வலப்புறம் வரிகளுக்கு...

    தத்துவங்கள் உள்ள வரிகள்,,,,ரசித்தென்...ஆனால் இப்போது கதைக்க நேரமில்லையே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. ஆஹா அந்த சைக்கிள் செம. மிகவும் ரசித்தேன். இப்படிக் கிடைக்குமா? ஹையோ எனக்கு ஓட்ட வேண்டும் போல் இருக்கிறதே....அதுவும் என் உயரத்துக்குச் சரியா இருக்கும் போல.
    எனக்குப் பெரும்பாலும் சைக்கிள் இருக்கை கஷ்டமாக இருக்கும் இப்படி சாய்வு இல்லனாலும் குஷன் சீட் வைச்சாவது கிடைக்குமா!!

    சூப்பரா இருக்கு சைக்கில் இந்த எடையைத் தாங்குமோ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கூட ஒரு சிறிய சைஸ் சைக்கிளில்தான் பழகினேன்!

      நீக்கு
  19. பிளம்பரொட வேலை ஹாஹாஹாஹாஅ நல்ல கற்பனை CREATIVE IDEA!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அதை ரசித்ததால்தான் அவர் பகிர்ந்ததை எடுத்து, பகிர்ந்தவர் பெயருடன்  நானும் பகிர்ந்தேன்!

      நீக்கு
  20. யம்மாடியோவ் இம்புட்டு மொழிகளா? இத்தனை மொழிகள் உணர்ச்சியில் மனுஷன் அடிச்சுக்கிறான். எவ்வளவு பிரச்சனைகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில், வாழ்வில் வேறு முக்கிய வேலைகள் இருப்பவர்கள் இவ்வளவு உணர்ச்சி வசப்பட மாட்டார்கள்!  என்ன சொல்கிறீர்கள்!

      நீக்கு
  21. ஜோக்குகளை ரசித்தேன்.

    வெ சீதாராமன் - ஓ மருத்துவரா..., இரா சக்திவேல் பெயர்கள் நினைவுகளின் இடுக்கில்...

    கீதா

    பதிலளிநீக்கு
  22. அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  23. கதையின் தலைப்பு நன்றாக இருக்கிறது.
    ஆனால் இப்படி மதி நிம்மியை ஏமாற்றி இருக்க வேண்டாம்.

    மேஜை டிராயரில் குப்பையைக் கலைத்துத் தேடிக்கொண்டிருந்த மதி கண்ணில் பட்டது 'அது'. நிம்மியைக் கண்டதும் சட்டென டிராயரை மூடினான்.


    பதிலளிநீக்கு
  24. அவசரபட்டு பதிவு ஆகி விட்டது.

    பதிலளிநீக்கு
  25. மோதிரம் கிடைத்த போதே நிம்மியிடம் கொடுத்து இருக்கலாம்.
    நீ ஒரு பொருளை தேடி கொடுத்தாய் நன்றி. நானும் நீ தேடி கொண்டு இருந்த மோதிரத்தை கண்டு பிடித்து கொடுத்து விட்டேன் என்று சொல்லி நிம்மியை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கலாம்.

    பிறந்த நாளுக்கு அவர் விரும்பும் பரிசை சர்ப்ரைசாக கொடுத்து அசத்தி இருக்கலாம்.

    ஆனால் அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டார் மதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறந்த நாளுக்கு நிம்மி பரிசை எதிர்பார்த்திருக்க மாட்டார்.  கொடுப்பது புதிதாக இல்லையே என்கிற கோபம்!

      நீக்கு
  26. மஞ்சுபாஷிணி, சீனு வின் கருத்துக்கள் யோசிக்க வைக்கிறது.
    உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
    சிரிப்புகள் நன்றாக இருக்கிறது.

    பிளம்பரொட நடைவண்டி அருமை.
    நிறைய இது போன்ற பொருட்கள் வீட்டை ஒதுங்க வைக்கும் போது இருந்தவைகளை இனி வீடு கட்டுபவர்களுக்கு உதவும் என்று கொடுத்து விட்டேன்.
    சைக்கிள் அருமை.

    பதிலளிநீக்கு
  27. தலைப்புக்கு இத்தனை ப்ராக்கெட்டுகளா? அல்லது ப்ராக்கெட்டுகள்தான் தலைப்பா!

    பதிலளிநீக்கு
  28. நிம்மதி நாம் ஒன்றை அணுகும் விதத்தில் உள்ளது என்பது உண்மை. நிம்மியின் கோபத்தையும் தவறு என சொல்ல முடியாது. மதியின் எதிர்பார்ப்பையும் தவறு என சொல்ல முடியாது.

    கவிதைகள் இரண்டும் மிக அருமை.

    பகிர்ந்த பின்னூட்டங்கள் நன்று. தொடர்புடைய பதிவின் இணைப்பையும் கொடுத்திருக்கலாம்.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ராமலக்ஷ்மி.  

      "மிக அருமை. பல வரிகள் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டின."

      என்பது அங்கு உங்கள் கமெண்ட்!

      நீக்கு
  29. பிறந்த நாளன்று வாழ்த்து மட்டும் சொல்லி இருக்கலாமோ? நல்லவேளையா எங்க வீட்டில் எல்லாம் இதெல்லாம் இல்லை. எல்லா நாளையும் போல அன்றும் ஓர் நாள். இணையத்துக்கு வந்தால் தான் எனக்கு என்னோட பிறந்தநாள்னு தெரியும். சில/பல சமயங்கள் ட்ராஃபிக் ஜாம் ஆகிவிடும் அளவுக்கு வாழ்த்துகள் வரும். :) பரிசே கொடுக்காட்டியும் பரவாயில்லை. தொலைந்த பொருளை மெனக்கெட்டு கிஃப்ட் பாக்கெல்லாம் பண்ணிக் கொடுத்துட்டு! கடைசியில் ஏமாந்தால் பிறந்தநாளைய ஏமாற்றம் லேசில் மறக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி..  மறக்காதுதான்.  பாவம் நிம்மி...   

      அப்புறம் கீதா அக்கா...   கதையோடு ரொம்ப ஒன்றி விட்டீர்கள் போல..   இது கதை, கற்பனைதான்!  எங்கும், குறிப்பாக எங்கள் வீட்டில் நடக்கவில்லை.  100 சதவிகிதம் கற்பனை!

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நடந்ததுனு எங்கே சொல்லி இருக்கேன்! நடக்கும் என்பதற்கான சாத்தியங்கள் இருக்கே!

      நீக்கு
  30. கவிதைகள் தத்துப்பித்துவம். கூடவே எசப்பாட்டுப் பாடி இருக்கும் ஜேகே சாரும் அருமை. மஞ்சுபாஷிணியின் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட கருத்துகள் இப்போதெல்லாம் வருவதில்லை என்பது வருத்தம் தான். திடீரென வாட்சப்பில் வந்து குதிச்சுட்டு "பயப்படாதீங்கப்பா! நான் தான் மஞ்சு!" என்பார். ஜோக்குகள் எல்லாம் எப்போதும்போல்! படங்கள் ஓகே ரகம்.அதிகப்படி வேலை காரணமா? அல்லது எழுத ஒண்ணும் இல்லையா? சரக்குத் தீர்ந்து விட்டதா? சுவாரசியம் குறைந்திருக்கே? அல்லது பாதியில் பப்ளிஷ் கொடுத்துட்டீங்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதிய கதையை எப்போதுதான் வெளியிடுவது!  நீங்களே ஒருதரம் கேட்டீர்கள், ஸ்ரீராம் எழுதி வச்சதை எப்போ வெளியிடுவார் என!  அப்போ கதை சுவாரஸ்யமா இல்லையா?  எது சுவாரஸ்யம் இல்லை?

      நீக்கு
  31. கதை மிக அருமை ஸ்ரீராம்ஜி. தொலைந்த பொருளையே பரிசாகக் கொடுத்தது குறும்பு என்றாலும் நிச்சயமாய் மனைவிக்குக் கோபம் வரத்தான் செய்யும். மதியின் தொலைந்த நிம்மதி விரைவில் கிடைத்துவிடும். அதற்கு வழிகளா இல்லை. முடிவு நன்றாக இருக்கிறது. பகுதி 2 கூட எழுதலாம் போல. வருமோ?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியாகச் சொன்னீர்கள். நன்றி துளசி ஜி.

      நீக்கு
  32. மஞ்சுபாஷிணி அவர்களின் கருத்திலிருந்து உங்கள் பதிவும் தத்துவப் பதிவு என்று தெரிகிறது.

    அதை ஒட்டியே கவிதைகளும் அமைந்தது போல் தோன்றுகிறது. கவிதைகளை ரசித்தேன், ஸ்ரீராம் ஜி.

    நம் நாட்டில் எவ்வளவு ஜாதிகள் இருக்கின்றன என்பது ப்ரொஃபஷனல் கல்லூரிகளில் சேர்க்கைப் படிவத்தை நிரப்பும் போது அறிந்ததுண்டு. அப்போது தோன்றியது மொழிகளும் இருக்கும் என்று என்றாலும் பதிவின் தகவலில் பல கேட்டிராத மொழிகளும் உள்ளன. ஆச்சரியம்.

    ஜோக்குகளை ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை இதை ஒட்டி என்று போடவில்லை.  அப்படித் தோன்றுகிறது!  ஜாதிகளை ஒழிப்போம் என்பது அரசியவியாதிகள் சொல்லும் மஹா பொய்.  ஒவ்வொருவர் மனதிலும் ஜா'தீயை' எரிய விட்டிருப்பபது அவர்கள் சாதனை.  மொழியையும் அதே அளவு உணர்ச்சி வசப்படவைக்கும் சாதனமாக மாற்றி வருகிறார்கள்.

      நீக்கு
  33. வணக்கம் சகோதரரே

    வியாழன் கதம்பம் நன்றாக உள்ளது. தங்கள் எண்ணங்களுக்கு பதிலாக ஒரு வித்தியாசத்துடன் நிம்(மி)மதி யின் எண்ணங்கள் கதையாக வந்ததை ரசித்தேன். தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்திருப்பது எவ்வளவு சந்தோஷம் தரும் என்பதை நானுமறிவேன். ஆனால் அது தன் கையில் கிடைத்த நேரம் ஒரு காரணத்துடன் சம்பந்த பட்டிருப்பதை நிம்மியால் தாங்க முடியாமல் போனது சோதனைதான். அதனால் இருவரின் நிம்மதியும் போய் விட்டது. கதை நன்றாக உள்ளது.

    பதிவர் மஞ்சு பாஷிணியின் கருத்துரைகளை முன்பு நான் வலைத்தளம் வந்த புதிதில் சிலரது பதிவுகளில் படித்துள்ளேன். ஆழமான கருத்துரைகள்தாம்.

    இன்று எல்லாவற்றையும் படித்த பின் எனக்குள் வந்த கருத்திது.

    "கடமைகள் முடிந்து விட்டதென நிம்மதியாக இருக்க முடிவதில்லை. வளைந்து வளைந்து செல்லும் பாதைகளில் மீண்டும் கடமைகள் வந்து
    கண்களை கட்டுகின்றன. களைப்பூட்டுகின்றன. முடிவில்லா பாதையில் ஓர் முற்றுப்புள்ளியாகி விடாமல் தொடங்கிய பாதையிலேயே பயணங்கள் தொடர்வதை
    அது வேடிக்கையும் பார்க்கின்றன."

    தத்துவ கவிதைகள் அருமை. சைக்கிள் படங்கள் வித்தியாசமாக உள்ளன. நடை வண்டி நவீனமாக உள்ளது. சின்ன வயதை நினைவூட்டி. ஜோக்குகள் அருமை.
    பி. எல் படிப்பே டாக்டர் ஆவதற்கும் அப்போது உதவும் போலிருக்கிறது.

    பார்வை சரியில்லை யென்றால்... ஹா ஹா. அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    இன்று காலை வர இயலவில்லை. தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை வெளியிட்டது வித்தியாசமாக இருந்தது என்று சிலாகித்திருப்பதற்கு நன்றி கமலா அக்கா.  அதைப்பற்றிய மதிப்பீடும் சூப்பர்.

      பதிவைப் படித்தபின் உங்களுக்குள் வந்த கருத்து சூப்பர். அழகாக இணைத்திருக்கிறீர்கள்.  ஜோக்ஸ் உட்பட அனைத்தையும் ரசித்திருப்பதற்கும் நன்றி.

      நீக்கு
  34. வித்தியாசமான கதை கோபத்தை மாற்ற வழி ? புரிய வைப்பது தான்.

    பைசிக்கிள் இக் காலத்துக்கு நமது நாட்டுக்கு மிகவும் ஏற்றது.
    நடை வண்டியும் வித்தியாசமாக உள்ளது.
    ஜோக்ஸ் ரசனை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!