புதன், 21 டிசம்பர், 2022

மழை/வெள்ளத்தின் போது உங்கள் வீட்டில் தண்ணீர் புகுந்து அவதிப்பட்ட அனுபவம் உண்டா?

 

ஜெயகுமார் சந்திரசேகரன் : 

கடவுளுக்குக் கடிதம் எழுதும் கோவிந்து திரும்ப வந்துட்டான். அம்மா சக்ரத்தாழ்வாருக்கு இரண்டு விளக்கு போட எண்ணெய் எடுத்துப்  போவதை பார்த்த அவனுக்கு உதித்த கேள்விகள்? 

1. எள் + நெய் தான் எண்ணெய். அப்படியானால் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் என்றெல்லாம் ஏன் கூறுகிறோம். கடலை நெய், தேங்காய் நெய் என்று தானே கூற வேண்டும்? 

# ஆம். இலக்கணப்படி அப்படித்தான் சொல்ல வேண்டும்.

2. செக்கில் ஆட்டிய எண்ணெய் தான் சிறந்தது என்கின்றனர். ஏன்? 

$ காந்திஜி கூட கதர் அணிவது நல்லது என்றார். செக்கு எண்ணையும் கிராமத்து தொழில் அபிவிருத்தி உத்தியாயிருக்கலாம். 

# அதிகம் உஷ்ணம் ஏற்படாமல் பிழியப் படுவதால் இருக்கலாம். ஆனால் செக்கு எண்ணெய் உண்மையிலேயே சிறந்ததா என்று தெரியவில்லை. 

3. மண் எண்ணெய் என்று ஏன் கூறுகிறோம்? மண்ணை ஆட்டினால் எண்ணெய் கிடைக்குமா? 

$ மரக்கறி உணவு என்றால் கடந்து பொய்விடுவீர்கள் போலும்! 

# மண்ணுக்கடியிலிருந்து எடுக்கப் படுவதால் மண் எண்ணெய். 

4 .தீபாவளி  காலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் காரணம் என்ன? 

# ஆதி காலத்தில் எண்ணெய்க்குளியல் ஒரு ஆடம்பரம், கொண்டாட்டம். 

5.  தவிட்டு எண்ணெய் எப்படி எடுக்கிறார்கள்? ஆட்டமுடியாதே 

$ hexane என்னும் பெட்ரோலிய solvent இல் ஊற வைக்கும் போது தவிட்டில் இருக்கும் தவிட்டு நெய் அதில் கரைந்து வரும் Solvent ஐ ஆவியாக்கி தவிட்டு நெய் தனிமைப் படுத்தப் படுகிறது.

6 . சில எண்ணெய்களை காய்ச்சி எடுக்க முடியும். உதாரணம் தேங்காய் எண்ணெய். அப்படி எடுக்கப்படும் சில எண்ணெய் வகைகளை கூறுக? 

$ பாம் ஆயில், ஆமணக்கு நெய்

7.  எல்லா விதைகளில் இருந்தும் எண்ணெய்  கிடைக்குமா? எள், சூரியகாந்தி, சோயா, இலுப்பை போன்று?

$ கிடைத்தாலும் உண்ணக் கூடியவை சில மட்டும் விளைச்சல், செலவு, நேரம் இவை பொருத்து. 

# கிடைக்கிறது.

வாலாஜா முரளிதர சாமிகள், மைசூர் கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள், செங்குன்றம் புவனேஸ்வரி சாமிகள், என்று பல சாமியார்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்புகளில் இருந்து மறைந்து விட்டார்களே? காரணம் ஏதாவது உண்டா?

$ சாமியார்களே மறைந்திருக்கலாம். 

# இரண்டு காரணம் இருக்கக் கூடும்.

ஒன்று, தொலைக்காட்சிக்காரர்கள் நிகழ்ச்சி விரும்பப் படவில்லை என்று எண்ணி இருக்கலாம். ( சரக்கு தீர்ந்து போய்விட்டது). 

இரண்டு:  காசு கொடுத்து நிகழ்ச்சி போட வைப்பதில் பிரயோஜனம் இல்லை என்று அவர்களே ஒதுங்கி இருக்கலாம்.

கீதா சாம்பசிவம் : 

ரயில் பயணம்/பேருந்துப் பயணங்களின் போது மழை/வெள்ளத்தினால் பயணம் தடைப்பட்டுப் பாதி வழியில் நின்று தவித்திருக்கிறீர்களா?

$ பல நேரங்களில் வெள்ளத்தால் அவதி அடைந்தது உண்டு. 

# அதிர்ஷ்டவசமாக, இல்லை.

& நிறைய தடவைகள் அந்த அனுபவம் உண்டு. அலுவலகம் செல்லும்போது ஒருமுறை பார்க் ரயில் நிலையத்தின் அருகே ஒருமுறை பலத்த காற்று மழை காரணமாக ரயில் எங்கும் நகராமல், ரயிலிலேயே 3 மணி நேரம் உட்காரந்திருந்து பிறகு தட்டுத் தடுமாறி அலுவலகம் போய்ச் சேர்ந்தபோது மாலை மூன்று மணி ஆகிவிட்டது! 

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை! அந்த நல்லார் இப்போ யாராயிருக்கும்?

$ நம்மை நல்லவராக வைத்திருக்க சொல்லப் பட்டது.

# மழை நல்லோரால் உண்டாவது என்பதல்ல குறிப்பு. நல்லவர்கள் இருப்பார்களனால் வேண்டும்போது பெய்யும் மழை போல அருமையான விஷயம் என்பது கருத்து. நல்லவர்களுக்காக மழை பொழிகிறது  என்றாலும் அது எல்லாருக்கும்தான் நன்மை பயக்கும் என்பதும் உட்குறிப்பு.

மழை/வெள்ளத்தின் போது உங்கள் வீட்டில் தண்ணீர் புகுந்து அவதிப்பட்ட அனுபவம் உண்டா?

$ 3 அடி தண்ணீர் 1 மணி நேரத்தில் வீட்டில் புகுந்து நிறைய நஷ்டம் 2015 இல். 

& உண்டு. 1985 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். காலையில் ஜில் என்று ஏதோ உடலில் பட,  கண் விழித்துப் பார்க்கையில் படுக்கையைச் சுற்றி தண்ணீர்! (அப்போது கட்டில், மெத்தை எல்லாம் கிடையாது. தரையில் பாய்  விரித்துத்தான் நான், மனைவி, இரண்டு குழந்தைகள் எல்லோரும் படுத்து உறங்குவோம். அவசரம் அவசரமாக எழுந்து, குழந்தைகளை பக்கத்து வீட்டிற்கு ( அவர்களின் வீடு உயரத்தில் அமைந்திருந்தது.) ஏற்றுமதி செய்து, அவர்கள் வீட்டிலேயே காலை உணவு, சாப்பாடு எல்லாம் சாப்பிட்டு, இருபது மணி நேரம் கழித்து, வீட்டில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்தபின் வீட்டுக்குத் திரும்பிவந்தோம்! 

திரை அரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்க்கும் வழக்கம் இப்போதும் உண்டா?

# அவ்வப்போது (ஆண்டுக்கு ஒன்றிரண்டு) பார்ப்பதுண்டு.

& இல்லை. கடந்த பத்து வருடங்களில் எந்தத் திரையரங்குக்கும் சென்றது இல்லை. 

அங்கே கட்டாயமாய்ப் பாப்கார்ன் போன்ற நொறுக்குத் தீனிகளை அங்கே விற்பவரிடமே வாங்க வேண்டும் என்னும் கட்டாயம் இருப்பதாய்ச் சொல்லுவது உண்மையா? இது அநியாயம் இல்லையோ?

# தின்பண்டங்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பது உண்மைதான். 

எனினும் படம் பார்ப்பதை ஒரு பிக்னிக் மாதிரி அனுபவிக்கும் மனப்பாங்கு உள்ளவர்கள்  அதிக விலை கொடுத்து வாங்கத் தயங்குவது இல்லை. இஷ்டம் இருந்தால் வாங்குகிறார்கள். வாங்கித்தான் தீர வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லாததால்  அநியாயம் என்று சொல்வதற்கில்லை.

பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் பார்த்தாச்சா? எங்கே? திரை அரங்கு? ஓடிடி?

# மாயாஜால் அரங்கில் ₹180 (ஆறு பேர்) இரவு 11 மணிக் காட்சி.

$ பொன்னியின் செல்வன் அரங்கிலும் டிவி யிலும் பார்த்தாயிற்று

அதிக சப்தத்துடன் அரட்டை அடிப்போரும் கதை சொல்பவர்களும் இப்படிப் பல இடையூறுகள் இன்றி வீட்டில் rewind bajji fast forward உடன் நன்றாக இருந்தது.

& அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் பார்த்தேன். 

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உரிய நேரத்தில் நிவாரணங்கள் செய்து விட்டது என்னும் மனத் திருப்தி உங்களுக்கு உண்டா?

# இயன்ற அளவு செய்ததாகவே நினைக்கிறேன். இது அரசுக்கு நல்ல பெயர் சம்பாதிக்கும் வாய்ப்பு என்பதால் முறைகேடுகள் இருப்பினும் மக்களை நேரடியாக பாதிக்காத வகையில் இருக்கும். 

புயல் சென்னையை நெருங்கும்போது பலவீனம் அடைந்து விட்டது. அதிகம் பாதிப்பு இல்லை. ஆனாலும் அரசு பெரும்புயலையும் இந்த அரசு சாமர்த்தியமாகச் சமாளித்துவிட்டது எனச் சொல்லுவது ஏன்?

# கடும் மழை காற்று என்பது நிகழ்ந்த ஒன்று. அதை பெரிய அசம்பாவிதம் இல்லாமல் சமாளிப்பது நல்ல விஷயம். பாராட்டுவதை பெரிதாகக் குறை கூறுவது சரியல்ல. இது போன்ற பாராட்டுக்கள் அரசு நன்கு செயல் பட ஊக்கம் தரலாம் அல்லவா ?

$ மழை விட்டதும் GST சாலையில் மதுராந்தகம் வரை சென்று வந்தோம். 

வீழ்ந்த சாய்ந்த மரங்களை வேகமாக அப்புறப் படுத்தும் வேகம் பிரமிக்க வைத்தது. புள்ளி விவரங்கள் சற்றே மிகை.

90km வேகம் குறைவு என்று யார் சொன்னார்கள்? கடற்கரை 11 km இருக்கும் எங்கள் வீட்டில் நாவல் மரம் முறிந்தது..மாடி செடிகள் சாய்ந்தன. தேங்காய்கள் மட்டைகள் உதிர்ந்தன . மின் வெட்டு மிகக் குறைவு.

அம்பத்தூரில் கூட தண்ணீர் தேங்கவில்லை என்பதே நல்லதுதானே !

நெல்லைத்தமிழன் : 

சாதா காரியத்துக்கு போலீஸ் ஸ்டேஷன் போவதே சௌகரியமாக இல்லையே இந்தியாவில். வெளிநாடுகளில் ரொம்ப comfortable ஆக உணர்வேன். காரணம் என்னவாக இருக்கும்?

# கவனிக்கச் சொல்வதாக இல்லாதவரை நன்று.

காலங்களில் (கோடை, குளிர், வசந்த..) எது சுகமானது?

# உலா வர கோடை, உறங்கி மகிழ குளிர், எழுத்தாளர்களுக்கு வசந்தம்..

எந்தப் படைப்பையுமே படைப்பாளியால் படைக்கும் போது வெற்றிபெறுமா எனக் கணிக்க முடியாது என ஸ்ரீராம் எழுதியிருந்தார். அப்படி இருக்குமா?

# மாறாக, "அற்புதப்படைப்பு"  என்ற தப்பபிப்ராயம் உண்டாகும்.

= = = = = = = =

கேள்விகள் கேட்ட எல்லோருக்கும் எங்கள் நன்றி. 

ஏற்கெனவே நீண்ட பதிவாக இருப்பதால், வேறு எதையும் இன்றைய பதிவுடன் சேர்க்கவில்லை. 

= = = = = =

சு நா மீ - flash: 

டிசம்பர் 24, 2004 அன்று வீட்டை விட்டு வெளியேறிய நாகராஜ், சரியாக பதினெட்டு வருடங்கள் கழித்து டிசம்பர் 24, 2022 அன்று திரும்ப திருவாரூருக்கு, தன்னுடைய வீட்டிற்கு, திரும்பி வறப்போவதாக engalblog மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பியுள்ளார். 

சு நா மீ கதை - ஆமை வேகத்தில் நகர்ந்துகொண்டிருப்பதால், இந்த வருடத்துக்குள் முடியாது போலிருக்கு!  ஜனவரி மாத இறுதிக்குள் முடியும் என்று கதாசிரியர் உறுதியாளித்துள்ளார்! பார்ப்போம்!!

= = = = = = = = =

35 கருத்துகள்:

  1. குறிப்போடு நிறுத்திக் கொண்டீர்கள். இந்த புதன் சுநாமீ- யின் அடுத்த பகுதி பிரசுரமாகும் என்று எண்ணியிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. டிசம்பர்--24/2022 அன்று ஒரு பகுதி சுநாமீ வெளிவந்தால் அட்டகாசமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளி வீடியோவில் இணையலாம்!

      நீக்கு
    2. ஓ.. பேட்டியா? நானே சொல்லலாம் என்று நினைத்தேன்.

      நீக்கு
    3. ஹா.. ஹா.. ஹா... நான் கதையை வெள்ளியில் தொடரலாம் என்று சொல்ல வந்தேன்!

      நீக்கு
  3. சுநாமீ--யின் பழைய பதிப்பை நான் படித்திருக்கிறேனாக்கும்.
    நீங்கள் எபியில் இப்பொழுது பிரசுரித்து வருவது அதன் புதிய பதிப்பு போலும். இன்னும் இன்னும் முடிந்த வரை ஊதிப் பெருசாக்கும் முயற்சின்னு நினைக்கிறேன். ஜனவரி 2023 இறுதி வரை நீடிக்கும் என்றால் எந்தளவுக்கு விரிவாக்கம் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது. நடக்கட்டும்
    எது செய்தாலும் அந்தக் கதைக்கு அழகூட்டும் தான்.

    பதிலளிநீக்கு
  4. ஒருவர் -- கேள்விக்குறி
    இன்னொருவர் -- ஆச்சரியக்குறி.

    பதிலளிநீக்கு
  5. இது சு நா மீ பற்றியது. இதுதான் அய்யன் "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்று சொல்லியிருக்கிறார். இப்படி சுட்டுவதை மன்னிக்க வேண்டுகிறேன். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!!

    பதிலளிநீக்கு
  8. மரச்செக்கு எண்ணெய் தான் மிகவும் சிறந்தது என்பது உண்மை! மரச்செக்கில் விதைகள் 30 டிகிரி சென்டிகிரேடில் அல்லது அதற்குக்கீழான வெப்பத்திலே தான் பிழிந்தெடுக்கப்படுகிறது. பிழியப்படும்போது அந்த விதைகளிலுள்ள கொழுப்புச்சத்து TRANSFAT எனப்படும் கெட்ட கொழுப்பாக மாறாமல் நல்ல கொழுப்பாக மாறுகிறது. மற்ற எண்ணெய்கள் ரோட்டரி, எக்ஸ்பெல்லர் போன்ற செக்குகளில் மிக அதிக வெப்பத்தில் பிழிந்தெடுக்கப்படுவதால் கெட்ட கொழுப்புச்சத்தும் அதோடு உற்பத்தியாகி எண்ணெயில் தேங்குகிறது.

    பதிலளிநீக்கு
  9. செக்கு எண்ணை/physically filtered oil தான் நல்லவை.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. வெள்ள அனுபவங்கள் நிறையவே உண்டு. வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட அனுபவங்களும் உண்டு. சிறிய வயது முதல்....

    கீதா

    பதிலளிநீக்கு
  11. காலங்களில் பிடித்தது குளிர் காலம். வசந்தகாலம் நம்மூர்ல இருக்கா என்ன?!!!!!!!!!!!!! (எல்லா மரங்களும் வெட்டப்படுகின்றனவே அதனால தோணிச்சு)

    கீதா

    பதிலளிநீக்கு
  12. எண்ணெய்யும் அளவோடு இருந்தால் போதும்...!

    பதிலளிநீக்கு
  13. கேள்வி பதில்கள் பலதும் கண்டோம்.

    நாங்கள் வசிக்கும் இடத்தில் கோடையில் அதிகமான வெப்பமும் மழைகாலத்தில் கொட்டும் மழையும் அதிகமாக இருப்பதால் வசந்தம் பிடித்தமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!