செவ்வாய், 18 ஜூன், 2024

சிறுகதை : ஏன்... எதற்கு? 1/2 - துரை செல்வராஜூ

 ஏன்.. எதற்கு?. 1/2

*** *** ***

" அவன ன் கேக்கறீங்க?.. "  அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த மீசைக்காரரிடம் வியப்பு..

" போன தடவ வந்தப்போ - வெளியில போக வர ரொம்ப உதவியா இருந்தான்.. இப்போ ஆளக் காணலை... அதான் கேட்டேன்... "

சாதாரணமாக சொன்னாலும் உள்ளுக்குள் மனக்குருவி கிடந்து காச்... காச்... என்று கத்தியது...

மூர்த்தி.. மேற்கு மாவட்டம் ஒன்றின் தொழிலதிபர் இரும்பு சம்பந்தப்பட்ட  
தொழில்கள் என்பதால் பொறுப்பில் உள்ளவர்களுடன்  சகஜமான பழக்கம் உடையவர்.. 

ஒருநாள் ஒரு இடத்தில் ஒன்றைப்  பார்த்து விட்டால்  மறுநாள் அவ்விடத்தில் இருகின்றதா என்று கவனிப்பார்.. அது அவ்விடத்தில் இல்லை என்றால் விடமாட்டார்..  ஏன்.. எதற்கு.. எப்படி.. என்று ஆராய்ச்சியில் இறங்கி விடுவார்..

எதையும் தோண்டித் துருவி தெரிந்து கொள்வது பிறவிக் குணம்..

இருந்தாலும் நல்ல மனிதர்.. ஏழைகளுக்கு இரங்கி உதவுகின்றவர்.. அவரது உதவியால் மூன்று சிறுவர்கள் படித்துக் கொண்டு இருக்கின்றனர்.. இரும்புத் தொழில் என்றாலும் இளகிய மனம்...

" அவன யேன் கேக்கறீங்க?... "  மீசைக்கார பெரியவரின்  கேள்விக்குள் ஏதோ அதிகாரத் தனம் இருப்பதாக அவருக்குப் புலப்பட்டது..

இத்துனூண்டு கிராமத்துல அவ்ளோ பெரிய ஹோட்டல் - தங்கும் விடுதி.. 

நிம்மதியா தங்கி இருந்து பக்கத்துல இருக்குற கோயில் குளத்தை எல்லாம் தரிசனம் செய்றதுக்கு நல்ல வசதி..  திருவிழாக் காலத்துல இங்கே தங்கறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாலயே பதிவு பண்ணி வைக்கணும்.. 

இரண்டு வருடங்களில் இந்த  விடுதி நன்றாக முன்னேற்றம் ஆகி இருக்கின்றது....

நேற்று  இங்கே வந்ததுமே அவனைப் பற்றித் தான் கேட்டார்..

அங்கு வரவேற்பில் இருந்த அந்தப் பெண் நம்ம ஊர்ப் பெண்.. 

குண்டூசி நுனியால் வைக்கப்பட்ட நெற்றிப் பொட்டு.. இரு தொங்கல்களாகத் தலைமுடியை பிரித்துப் போட்டு உதட்டுக்குச் சிவப்பு அடித்திருந்தாள்.. கண் இமைகளிலும் ஏதோ சாயம்.. 


-  " I'm new to this reseption..I don't  know anything about  that  guy.. you please cotact our supervisor.. " என்றபடி கை காட்டினாள்.. 

அங்கே AK Neelu., BSc., Floor in Charge.. என்ற குறிப்புடன், வட புலத்து வனிதை ஒருத்தி கணினிக்குள் இருந்தாள்..  மேஜையில் சின்னஞ்சிறியதாய் அயோத்தி பாலராமர்..

அவளிடம் அவனைப் பற்றிக் கேட்க நின்ற போது - மென்மையாகத் திரும்பிப் புன்னகைத்தாள்.. நெற்றியில் மூண்டெழுந்த சுடராய் ஸ்ரீ சூர்ணம்..

 " நன்றாகத் தான் இருந்தான்.. திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ போய் விட்டான்.. ஒரு தகவலும் தெரியவில்லை.. அவனுடைய ஊருக்கே போயிருக்கலாம்..  "

நன்றாகத் தமிழ் பேசினாள்..

" அவன் இல்லேன்னா என்ன?... இதோ இன்னொரு பையன் வந்து நிற்கிறான்.. வாங்க.. அவனைப் பத்தி அப்புறமா விசாரிச்சுக்கலாம்!.. " 
- மனைவியிடம் முணுமுணுப்பு..

மூத்த பெண்ணுக்கு நாக தோஷ பரிகார பூஜை..  அத்தோடு வேறு சில கோயில்களின் தரிசனம் என்று நாலு நாள் பயணத் திட்டம்..

' நாம வந்திருக்கற வேலயப் பார்க்காம அவனைக் காணோம்.. இவனைக் காணோம்.. ன்னு ஆராய்ச்சி..  பெரிய துப்பறியும் புலி ன்னு நெனப்பு இவருக்கு.... ' - தாயின் கணிப்பைக் கண்டு பிள்ளைகளுக்குக் களிப்பு..

வந்து நின்ற பையனுடன் இன்னொருவனும் சேர்ந்து பெட்டிகளை எடுத்துக் கொள்ள - அவர்களுக்கான வில்லாவை நோக்கி நடந்தனர்..

இன்று மறுபடியும் வரவேற்புக் கூடத்தில் அந்த வட தேசத்துப் பெண்ணிடம் விசாரணை..

" ரெண்டு வருசம் ஆச்சே.. அவனத் தேடிக்கிட்டு அவங்க ஊர்ல இருந்து யாரும் வரலையா.. கடைசியா சம்பளம் வாங்கிக்கிட்டானா?.. ஆளு காணாமப் போனதும் போலீஸ்ல கம்ப்ளெயிண்ட்  கொடுக்கலையா?.. "

" அதெல்லாம் மேனேஜரிடம் பேசிக் கொள்ளுங்கள்.. நீங்கள் ஏன் அவனைப் பற்றிக்  கேட்கின்றீர்கள்?.. " - என்ற கேள்வியுடன் முடித்துக் கொண்டாள்..

நேற்று மற்ற பசங்கள் அவனைப் பற்றி ஆர்வத்துடன்  சொன்னதற்கும் இன்று இந்தப் பெண் ஏனோ தானோ என்று சொல்வதற்கும் -  மூர்த்தியின் மனம் குழம்பிக் கிடந்தது...

அவன் நல்ல வேலைக்காரன் என்பது பொதுவான கருத்து.. இங்கே தான் வேலைக்கு நல்ல ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறதே..
அப்படியிருக்க வேலைக்கு வரவில்லை.. ஆளைக் காணவில்லை என்றால் நிர்வாகம் ஏன் பதறவில்லை?..

அவன் தங்கியிருந்த  அறையில் துணிமணி எல்லாம் போட்டது போட்டபடியே கிடக்க ஒருவாரம் கழிச்சு தான்  சுத்தம் செஞ்சிருக்காங்க...

' நேத்திக்கு இருந்தான்.. இன்னைக்குக் காணோம்.. சரி... காணாமப் போனதுக்கு கவலப்பட வேணாமா?.. என்ன தான் ஆனது ன்னு தெரிஞ்சுக்க வேணாமா?..  என்னடா இது!.. மாயாஜாலம் மாதிரி?.. '

அவனைப் பற்றி இவர் ஏன் கவலைப்பட வேண்டும்.. காரணம் பெரிதாக எதுவும் இல்லை.. போன தடவை வந்த போது விடுதி வளாகத்தில் இருந்த பழைய காலத்து ராஜ மாளிகை விடுபட்டுப் போயிற்று.. மறுமுறை பார்க்கலாம் என்றிருந்தார்.. 

' ராஜாவின் அந்தப்புரம்.. படுக்கை அறைகள் எல்லாம் இருக்கின்றன.. உள்ளே அழைத்துச் சென்று காட்டுகின்றேன்.. ' - என்று தாறுமாறாக அவன் சொல்லி வைத்திருந்தான்.. 

இப்படிச் சொல்லி வைத்திருந்தவன் இந்த மாளிகைக்குள்ளேயே மறைந்து போனான் என்பதை அறியாமல் அரற்றிக் கொண்டு இருந்தது அவரது மனம்..

நிறைந்த ஆவலுடன்  இங்கே வந்தால் - ஆவலைத் தூண்டி விட்டவனைக் காணவில்லை.. கேட்டால்,

 ' எங்கே போனானோ தெரியவில்லை.. ' - என்று சர்வ சாதாரணமாக சொல்கின்றார்கள்...  இப்படி இருந்தால் சுற்றுலா எப்படி வளரும்?..

காலைப் பொழுதில் விடுதியின் முன்புறம் இருந்த புல்வெளியில் நடை பயின்று கொண்டிருந்தவரின் பார்வையில் பட்டது அந்த மாளிகை..

× எச்சரிக்கை ×
பழைமையான கட்டிடம்..
அருகே செல்லக் கூடாது..
- என்றொரு அறிவிப்பும் இருந்தது..

ராஜ மாளிகை..  சயன அறைகள்.. செல்லரித்த சித்திரங்கள்.. அங்கே தான் இருக்கின்றன.. அவற்றைப் பார்க்க இயலாத  ஏமாற்றம் அவரைக் குடைந்தது... அது தான் இத்தனைக்கும் காரணம்..

நல்ல ஆரோக்கியமா  வேலை செய்து கொண்டிருந்தவன் திடீரென்று வேலைக்கு வரவில்லை என்றால்... என்ன ஏது என்று பார்க்க வேண்டாமா?.. அவன் எங்கே என்று தேட வேண்டாமா?..  அவனைப் பற்றிய தேடுதலில் நிர்வாகத்திற்கு அக்கறை இல்லை என்றால் - நடந்தது என்ன?...குற்றம் யாரிடத்தில்?.. 

நெஞ்சுக்குள் - திடும் திடுக்.. திடும் திடுக்.. என்று ஆந்தைகளின் அலறல் 
நரிகளின் ஊளைச் சத்தங்களுடன்  பேரிரைச்சல்.. திகிலான பின்னணி இசை..

' பொறந்து வளந்த ஊர்ல சோத்துக்கு கஷ்டம்.. ந்னு வெள்ளாடு மாதிரி வேலியத் தாண்டிக் குதிச்சு - படாத பாடுபட்டு அங்கேருந்து தமிழ்நாட்டுக்குள்ளே  வந்தவனுக்கு ஊரு எப்படி வெறுத்துப் போகும்.. சோறு எப்படி கசந்து போகும்?.. அவனப் பத்தி எந்தத் தகவலும் தெரியாமலா வேலைக்குச் சேத்துக்கிட்டாங்க?... எங்கேயாவது அடிபட்டு ஏதோ நடந்துருந்தாக் கூட போலீஸ் வந்து பொரட்டி பொரட்டி எடுத்துருக்குமே.. போலீசுக்கே சேதி தெரியாது.. ன்னா ஏதோ நடக்கக் கூடாதது நடந்துருக்கு!...  எல்லாருமா சேர்ந்து அதை மறைக்கிறாங்க.. '

காணாமல் போனவனின் பின் புலம் அவனது பிறவிக் குணம் எதையும் அறிந்திராத மூர்த்தியின் மனம் சும்மா இருக்க மாட்டாமல்  துள்ளியது...

அவருடைய நண்பர் ஒருவர் அந்தத் துறையில் இருப்பது நினைவுக்கு வந்ததும் மனதுக்குள் மணியடித்தது..

அதே நேரத்தில் உஜ்ஜயினி ஸ்ரீ மாகாளேஸ்வரரின் கோயிலிலும் மணியோசை..

நான்கு விழிகள் விழித்தன.. சுற்றிச் சுழன்றன..

விடுதிக்குள் இருந்து மூர்த்தியின் மனைவியும் மகள்களும்  இவரை நோக்கி வந்து கொண்டிருக்க - காற்று வாக்கில் ஒரு குரல்...

" குறி கேக்கலையோ.. குறீய்!..
சாமீ.. குறி கேக்கலையோ.. குறீய்!.. "

(தொடரும்) 

***

33 கருத்துகள்:

  1. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு..

    வாழ்க குறள்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  6. கண் கவரும் ஒளிப்படத்துடன் அழகு செய்த சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  7. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  8. கண் கவரும் ஒளிப்படத்துடன் அழகு செய்த சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள்... ///

      தங்களுக்கு நல்வரவு..

      நீக்கு
  10. துரை அண்ணா, கதை மர்மமாக த் தொடங்கியதும்...ஆஹா என்று ஆர்வத்தோடு வாசிக்கத் தொடங்கினேன்....கதை எப்படிச் செல்லப் போகிறது என்ற ஆவலான எதிர்பார்ப்புடன். அதுவும்

    /அவருடைய நண்பர் ஒருவர் அந்தத் துறையில் இருப்பது நினைவுக்கு வந்ததும் மனதுக்குள் மணியடித்தது..//

    இந்த வரி வரை வந்ததும் இன்னும் ஆவல் கூடியது....த்ரில்லிங் என்று....

    ஆனால் கதையின் முடிவு இப்படி முடிந்தது ஏமாற்றம்.

    கடைசி வரி சொல்பவன் தான் அந்தப் பையனா?. துரை அண்ணா , முடிவு ஏமாற்றம். அழகான த்ரில்லர் கதை...ஆனால்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// ஆனால் கதையின் முடிவு இப்படி முடிந்தது ஏமாற்றம்.///

      இன்னொரு பகுதியும் இருக்கின்றது...

      அதன் பிறகு
      சொல்லுங்கள்...

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  11. முடிவு கதையோடு ஒட்டாதது போன்று உள்ளது...ஒரு வேளை என் புரிதல் சரியில்லையா தெரியலை...என் எதிர்பார்ப்பு வேறு என்று நினைக்கிறேன் துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ துரை அண்ணா, அடுத்த பகுதி வருதுன்னு இப்பதான் கம்ப்யூட்டர்ல வந்த பிறகு பார்க்கிறேன். காலைல மொபைலில் ஸ்க்ரோல் செய்து வேலை செய்துகொண்டே வாசித்து குரல் வழி கருத்து கொடுத்ததால், தலைப்பில் இருந்த அந்த 1/2 பார்க்காம விட்டிருக்கிறேன்.

      ஓ அப்ப முடிவு எப்படி இருக்கும் என்று அறிய ஆவல்.

      கீதா

      நீக்கு
    2. அதனாலதான் என்னவோ ஒட்டாதது போல இருக்கேன்னு தோன்றியது துரை அண்ணா.

      முழுவதுமே போட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

      கீதா

      நீக்கு
    3. அடுத்த பதிவு அமர்க்களமாக இருக்கும் என நினைக்கிறேன்,.

      நீக்கு
  12. கதை தொடருமோ... ?

    தலைப்பு 1/2 ?
    இப்படி இருக்கிறதே....

    பதிலளிநீக்கு
  13. கௌ அண்ணா, கதையில் வரும் முதல் ரிசெப்ஷன் பெண்ணைப் பற்றிய குறிப்புகளுடன் படம் நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  14. கதை திரில்லாக போகிறது .....

    கதைக்கு படம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  15. அந்தப் பையன் என்ன ஆனான் என்பதை அறிய ஆவல். அமானுஷ்யம் கலந்த முடிவாக இருக்குமோ அடுத்த பகுதியில்?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  16. /// அந்தப் பையன் என்ன ஆனான்!..///

    யாருக்குத் தெரியும்?..


    கில்லர் ஜி அவர்களது உடுக்கையடி உலகநாதனுக்குத் தெரியுமோ என்னவோ!...

    மகிழ்ச்சி..
    நன்றி துளசி..

    பதிலளிநீக்கு
  17. கதை நன்றாக இருக்கிறது. மர்ம தொடர் போல இருக்கிறது.

    வரவேற்பில் இருந்த அந்தப் பெண் நம்ம ஊர்ப் பெண் அந்த பெண்ணை வர்ணித்தது அதற்கேற்றார் போல சாரின் ஓவியம் நன்றாக இருக்கிறது.

    //ராஜ மாளிகை.. சயன அறைகள்.. செல்லரித்த சித்திரங்கள்.. அங்கே தான் இருக்கின்றன.. அவற்றைப் பார்க்க இயலாத ஏமாற்றம் அவரைக் குடைந்தது... அது தான் இத்தனைக்கும் காரணம்..//

    நீங்கள் சமீபத்தில் போய் வந்த தஞ்சை அரண்மனை கதைக்கு கரு தந்தது என்று நினைக்கிறேன்.

    தஞ்சாவூர் அரண்மனையும் அதன் நிலவறையும் நினைவுக்கு வந்தது.

    உஜ்ஜயினி ஸ்ரீ மாகாளேஸ்வரி குறி சொல்பவர் மூலம் ஏதாவது சொல்லி இருப்பார். அடுத்த பதிவில் அது என்னென்று தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நீங்கள் சமீபத்தில் போய் வந்த தஞ்சை அரண்மனை கதைக்கு கரு தந்தது என்று நினைக்கிறேன்.. ///

      தஞ்சை அரண்மனை கதைக்கு கரு தந்தது... - அதுவல்ல.. இது வேறு

      /// உஜ்ஜயினி ஸ்ரீ மாகாளேஸ்வரி குறி சொல்பவர் மூலம் ஏதாவது சொல்லி இருப்பார்....///

      நல்ல மதியூகம் தங்களுக்கு..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  18. இன்றைய பதிவில் கருத்துரைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    வணக்கம்..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    கதை அருமையாக உள்ளது. நல்ல சுவாரஸ்யமான சமயத்தில் தொடரும் என போட்டு விட்டீர்கள். இதன் அடுத்தப் பகுதியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். நேற்று காலைக்குப் பிறகு பதிவுலகிற்கு வர இயலவில்லை மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் என்ன!..
      தங்கள் நலனே முக்கியம்...

      அன்பின் வருகைக்கும்
      கருத்திற்கும் மகிழ்ச்சி..
      நன்றி ...

      நீக்கு
  20. மர்மக் கதை. குறி சொல்பவர் என்னச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!