செவ்வாய், 4 ஜூன், 2024

​சிறுகதை : ஊஞ்சல் - துரை செல்வராஜூ

 ஊஞ்சல்

துரை செல்வராஜூ 

*** *** ***
தெற்கு வடக்காக  கிளுவை மரங்கள்  உயிர் வேலியாக வளர்ந்திருக்க மூங்கில் தட்டிக் கதவைத் திறந்து கொண்டு சைக்கிளுடன் நுழைந்த சுந்தரம் அருகிருந்த புங்க மரத்தின் நிழலில் சைக்கிளை நிறுத்தினான்... 

இந்த சைக்கிள் - கல்யாணத்தின் போது  கேட்காமலேயே மாமனார் வாங்கிக் கொடுத்த சீதனம்..

சுந்தரத்தின் தந்தைக்கு இதிலெல்லாம் இஷ்டமில்லை என்றாலும் சம்பந்தி வீட்டார்களின் மனம் நோகக் கூடாது என்று அமைதியாக இருந்து விட்டார்.. 

சைக்கிள் வீட்டில் இருந்தால் அதை எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி அலைந்து பசங்கள் கெட்டு விடுவார்கள் என்ற எண்ணம் அவருக்கு.. 

" கண்ணுக்கு எட்டிய வரை வயற்காடு இருக்கே.. போய் பார்த்து விட்டு வருவதற்கு ஆகுமே.. " - என்றால்,

" அதான் வில்லு வண்டி இருக்கே.. காள ரெண்டு இருக்கு.. கலியனும் இருக்றான்.. அதுல போனாத் தான் கௌரவம் பாதுகாப்பு... " - எனபார்..

இப்படியாகப்பட்டவர் - ஸ்ரீதன சீர்வரிசையுடன்  சைக்கிளும் வந்தபோது அமைதியாக இருந்து விட்டார்...

வாழை மரத்தின் அருகே தொட்டித் தண்ணீரில் கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தபோது முன் கூடத்து ஊஞ்சலில் காமாட்சி அமர்ந்திருந்தாள்.. 
அவளைச் சுற்றிலும் அந்தத் தெருவின் பெண்கள் சூழ்ந்து காபி அருந்தியபடி பேசிக்  கொண்டிருந்தனர்.. அவர்களுக்கிடையே சுந்தரத்தின்  தங்கை  கல்யாணியும் இருந்தாள்..

' என்ன விசேஷம் இன்றைக்கு?.. '  - மனம்  திகைத்தாலும்  - 

" வாங்க... வாங்க... " என்று முக மலர்ச்சியுடன் வரவேற்றான் சுந்தரம்..

சுந்தரத்தைக் கண்டதும்  கூடியிருந்தவர்களிடம் பரபரப்பு.. அனைவரும் வாரியடித்துக் கொண்டு எழுந்து ஒதுங்கி நின்றனர்.. ஊஞ்சலில் இருந்த காமாட்சி இறங்கி நின்றாள்..

" ஏன் எழுந்திரிச்சிட்டீங்க?..  நம்ம புள்ள தானே!... "  - சுந்தரத்தின் தாய்..

" கொடி மாத்திப் போடறதுக்குள்ள நல்ல சேதி கிடச்சிருக்கு..  இப்படித்தான் வீரியமா இருக்கணும்.. புள்ளைங்களுக்கு மொளகாய் சுத்திப் போடுங்க அத்தாச்சி.. "

இளம் பெண்கள் சிலர் வெட்கப் புன்னகையுடன் தலை குனிந்து கொண்டனர்.. 

" என்னம்மா இது?!.. "

" எல்லாம் நல்ல சேதி தான்.. உங்க அப்பா தாத்தா ஆகிட்டாங்க... " 

கூட்டத்திலிருந்து வந்தது மேல் விவரம்..

நாணத்துடன் நகர முயன்றாள் காமாட்சி.. அவளைப் பிடித்து இழுத்து தன்னருகில் நிறுத்திக் கொண்டாள் பக்கத்து வீட்டு அக்கா..

' அட. அப்படியா!..' காமாட்சியைக் கட்டித் தழுவிக் கொள்வதற்கு சுந்தரத்தின் கைகள் துடித்தன..

வந்திருந்தவர்களுக்கு  கல்கண்டும் தாம்பூலமும் வழங்கப்பெற்றது.. 

காரை வீட்டு ஆத்தா மட்டும், " இன்னும் ரெண்டு மாசத்துக்கு கவனமா இருந்துக்கணும் செல்லம்மா.. "  - என்று சொல்லி விட்டு நகர்ந்தார்கள்..

" நீ சைக்கிள எடுத்துக்கிட்டுப் போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம்  வயித்தப் புரட்டுது அத்தே ன்னு சொன்னதோட துவண்டு போய்ட்டா... நான் ஓடிப்போய் காரை வீட்டு ஆத்தாவ கூட்டிக்கிட்டு வந்தேன்.. அவங்க தான் நாடி பார்த்துட்டு நல்ல சேதி ன்னு சொன்னாங்க.. அக்கம் பக்கத்துல சொல்லி தாம்பூலம்  கொடுப்போம்.. ந்னு வரச் சொன்னது.. நாலு பேர் முகத்தைப் பார்த்தாத் தானே மனசுக்குள்ள தெம்பு வரும்.. "

அம்மா பேசிக்கொண்டு இருக்க காமாட்சியை அருகில் வரும்படி கண்களால்  அழைத்தான் சுந்தரம்..

காமாட்சியும் கண்களைக் காட்டி.. ' அப்புறமாக.. ' என்றாள்..

அப்புறம் என்றால் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு...

அடக்கடவுளே!.. ஆடி மாசத்துக்கு இன்னும் வெகுநாள் இருக்குதுன்னு சந்தோஷப்பட்ட மனசுக்கு இப்படியொரு சோதனையா!..

' இருக்கட்டும்.. இருக்கட்டும்.. ' உள்மனம் பொங்கியது..

நெஞ்சுக்குள் ஒரு யோசனை குறும்புத்தனமாக..

" காமாட்சி.. காபி எடுத்துட்டு வா!.. " - என்றபடி சுந்தரம் உள் அறைக்குள் நுழைய காமாட்சியின் முதுகுத் தண்டிற்குள் சில்லென்று இருந்தது.. 

" நொய்யி நொய்யி.. ன்னு இனிமே காமாட்சிய அலைய விடாதே சுந்தரம்... " பின்கட்டிற்குள் இருந்து அம்மாவின் குரல்.. 

இது ஒன்றும் கதைக்கு ஆகாது என்று சுந்தரம் நினைத்திருக்க இரவு சாப்பாடும் நிறைவேறியது..

".. நான் வேணா  கூடத்துல தூங்கவா.. "

சுந்தரத்தின் கேள்வியில் ஏக்கம் ததும்பியிருந்தது.. 

" இது உன்னோட சொத்து.. நிதானமா இருந்துக்க.. "

உள் அறையிலேயே தூக்கம் என்றானதும் இருவர் மனதிலும் சந்தோஷக் கூச்சல்..

வெட்கம் குறையாமல் அருகில் வந்த காமாட்சியின் நெற்றியும் கன்னங்களும் ஈரமாகின.. 

வழக்கம் போல சுந்தரம் முணுமுணுத்தான்..

ஏடறியா 
மொழியும் நீ
எழுத்தறியாச் சிலையும் நீ
வழி அறியா வலையும் நீ
விழி அறியா கலையும் நீ..

பூவிதழில் 
மேவி வரும்
அமுதம் நீ... 
அழகும் நீ...
பொன்னிதழால் பேசி வரும்
தமிழும் நீ!... சுவையும் நீ!...

ஒருவர் கைக்குள் மற்றவர் என்று சிறைப்பட்டிருக்க பொழுதும்  விடிந்து விட்டது..

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வில் வண்டியில் வந்து இறங்கினாள் சின்ன அக்கா..

" நமக்கே நேத்து சாயங்காலம் தான் சேதி தெரியும்..  சின்னக்கா எப்படி இவ்ளோ சீக்கிரமா!.. "

சுந்தரத்தின் ஆச்சர்யத்திற்கு அப்பா பதில் கூறினார்..

" நான் தான் கலியன் கிட்டே அஞ்சு ரூபாய் கொடுத்து வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போய் எல்லாருக்கும் சொல்லிட்டு வா.. ன்னு சொன்னேன்... "

பெருமிதம் அவருக்கு..

" காமாச்சி..  கண்ணு.. "

உண்மையான பாசமும் நேசமும் சின்ன அக்காவின் குரலில்...

அம்மாவும் கல்யாணியும் ஓடி வந்து வரவேற்ற போது -  " என்னம்மா பாட்டியாள் ஆகிட்டே.. சந்தோஷம் தானே.. ஒருபடி பச்சரிய ஊறப் போடுங்க.. அஞ்சல ய விட்டு இடிக்கச் சொல்லி காமாட்சிக்கு அதிரசம் செஞ்சு கொடுக்கணும்.." - என்றாள்...

" பெரியவ வந்து என்ன செய்யப் போறாளோ!.. "

" அக்கா வந்து நெய் முறுக்கு செய்யட்டும்!.. அக்காவுக்கு அதுதான் கைப் பக்குவம்.. " என்றாள் புன்னகை மாறாமல்..

" சரி..சரி.. காமாட்சி இங்கே வாம்மா.. என்று அழைத்து ரெண்டு கைகளிலும் கண்ணாடி வளையல்களை அடுக்கி விட்டு கன்னங்களை வருடி திருஷ்டி கழித்தாள்..

" இதோ பார் காமாட்சி.. மருதாணி இலை கொண்டு வந்திருக்கேன்.. அரைச்சு போட்டு விடறேன்... சாப்பிட்டியா நீ?... "

" இல்லீங்க அத்தாச்சி.. "

" பரவாயில்லை நான் ஊட்டி விடறேன்!. நீ மருதாணி  போட்டுக்க.. டேய்.. கல்யாணி இந்த மருதாணிய அரச்சுக் கொடு!.."

" என்ன அக்கா இதெல்லாம்...  ஏழாம் மாசந்தானே  செய்வாங்க?.. "

அருகில் வந்து அமர்ந்து கொண்டான் சுந்தரம்..

" இதோ வந்துட்டாரு ஐயா.. இவருக்கு ரொம்பவும் தெரியும்!.. "

வாஞ்சை மிக -  தம்பியின் தலைமுடியைக் கோதி விட்டாள் இளைய சகோதரி.. 

" வெளயாட்டா வெளையாடுனது.. என்னமோ ஏதோ தெரியலையே.. ன்னு.. உள்ளுக்குள்ள பயந்து போயிருப்பா.. இந்த நேரத்துல இப்படியெல்லாம் நாம நடந்துக்கிட்டா தான் டா அவளுக்கே அவமேல நம்பிக்கை வரும்.. தைரியம் வரும்.. களுக்குன்னு புள்ளயப் பெத்துக் கொடுத்துடுவா!.. " என்றபடி தம்பியை அரவணைத்துக் கொண்டாள்... 

சுந்தரத்தின் கண்கள் கலங்கின...

" முன்ன மாதிரி இல்லாம இனிமே தான் நீ பொறுப்பா நடந்துக்கணும்... அப்பா அம்மா மனசு நோகாம நடந்துக்கணும்!.. "

" ஏங்க்கா... நா ஏதும் தப்பு பண்ணிட்டனா?.. " -  சுந்தரத்தின் குரல் தளுதளுத்தது..

" சேச்சே.. நா அந்த அர்த்தத்துல சொல்லலை.. இனிமேதான் அப்பாவுக்கு தோளுக்குத் தோளா இருக்கணும்... தாத்தா ஆயிட்டமே.. நரையும் திரையும் வந்துடுச்சே.. நாம இனிமே அவ்வளவு தானா.. ன்னு ஒரு ஏக்கம் பயம் யாருக்கும் வந்துடும்.. அது அப்பாவுக்கு வராம பார்த்துக்கணும்... " 

சின்ன அக்காவின் நிதர்சனத்தில் உருகிய சுந்தரம் சட்டென அவளது மடியில் தலை வைத்துக் கொண்டான்..

' எப்படியாகப்பட்ட உறவை எல்லாம் கொடுத்திருக்கே முருகா!.. ' - நினைத்துக் கொண்ட காமாட்சியின் கண்கள் கலங்கின..

" பாம்... " - என்ற சத்தத்துடன் சிவப்பு நிற ராமவிலாஸ் பஸ் புழுதியைக் கிளப்பிக் கொண்டு சென்றது.. 

அடுத்த சில  நிமிடங்களில் இரண்டு சவாரி வண்டிகள் வாசலில் வந்து நின்றன..

ஒன்றிலிருந்து பெரிய அக்கா இறங்கினாள்.. அவளுடன் கூடவே சில கூடைகள்..

அடுத்த வண்டியில் இருந்து காமாட்சியின் அம்மா அப்பா.. உடன் அவளது தம்பி..

" காமாச்சீ... " - தாயின் குரலைக் கேட்டதும், காமாட்சி அழுதே விட்டாள்...

" என்னடா.. என்னடா.. அதான் எல்லாரும் கூட இருக்கோமே.. எல்லாத்துக்கும் மேலா மகமாயி மாதிரி அத்தை!.. உனக்கு என்ன குறச்சல்.. எதுக்கு கண்ணுல தண்ணி?.. "

" அது.. ஒன்னுமில்லே.. எல்லாரையும் ஒன்னாப் பார்த்ததுல அண்ணிக்கு சந்தோசம்... "

கல்யாணி சிரித்தாள்..

".. இன்னும் ரெண்டு மூனு மாசத்துல உனக்கும் இப்படித் தான்.. மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாச்சே.. "

சின்ன அக்கா சிரித்ததும் கல்யாணியின் முகம் வாடி விட்டது..

" ஏன்டி.. உனக்கு கல்யாணம் வேண்டாமா?.. " 

" வேணுந்தான்...  ஆனா இப்போ வேணாம்!.. "

" அதென்ன ஒருபக்கம் வேணும்.. மறுபக்கம் வேணாம்?.. "

" இன்னும் மூனு நாலு மாசத்துல அண்ணிக்கு வளைகாப்பு ஆகிடும்..  நானும் கல்யாணம் கட்டிக்கிட்டுப் போய்ட்டா வீடு வெறிச் ன்னு இருக்கும்.. அம்மாவுக்கு கை ஒத்தாசைக்கு ஆள் இருக்காது.. "

" அடி.. என் செல்லமே!... "

" அண்ணிக்கு பையன் பொறக்கணும் ன்னு மகமாயிக்கு  நான் முடிஞ்சு வெச்சிருக்கேன்.. "  - என்றவாறு கல்யாணி நகம் கடிக்க எல்லாரும் சிரித்தார்கள்..

' இனிமே அந்த மாதிரி  காலம் எல்லாம் வராது.. ' -   பழைய நினைவுகளுடன் காமாட்சியம்மாள் ஊஞ்சலில் இருந்தபோது,

" அத்தே.. ஒன்பது மணி ஆச்சு.. மாமா காய்கறி வாங்கப்  போனவங்க இன்னும் வரலை என்ன சமையல் செய்யட்டும்?... " - வித்யா கூடத்திற்கு வந்தாள்.. 

பேறு வாய்த்திருந்த  மருமகள் கையில் குழந்தையுடன்  எதிரில் வந்து நிற்பதாக மனக்கண்ணில்  தோன்றியது..

" நீ கொஞ்ச நேரம் ஓய்வா இரும்மா.. நான் சமையலை பார்த்துக்கறேன்...  "- என்றபடி காமாட்சியம்மாள் எழுந்து சமையலறைக்குள் சென்றார்..  

வித்யா உண்டாகியிருக்கும் செய்தியை நேற்று அவள் வீட்டுக்கு அலைபேசியில் தெரிவித்தபோது எவ்வித உற்சாகமும் இன்றி, " என்ன இவ்வளவு சீக்கிரமா?.. " என்றார்கள்.. அவ்வளவு தான்..

அதற்கு மேல் அங்கிருந்து ஒன்றும் கேட்கவில்லை.. இங்கிருந்தும் சொல்லவில்லை.. 

பெற்றவர்கள் ஏதும் தன்னிடம் விசாரிக்க வில்லையே என்ற ஏக்கம் வித்யாவின் கண்களுக்குள் இருப்பதை சுந்தரமும்  காமாட்சியம்மாளும்   உணர்ந்து கொண்டனர்..

வாசலில் ஸ்கூட்டியுடன் ஆட்டோவின் சத்தம்..

வித்யா ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்.. 

வாசலில் விட்டல்.. அவனது மனைவி.. இருவரிடமும்  பைகள்.. அவற்றில் ஆரஞ்சுப் பழங்களும் ஏதேதோ தின்பண்டங்களும்..

அவர்களுக்குப் பின்னால் காய்கறிகளுடன் சுந்தரம்..  சுந்தரத்தின் முகத்தில் புன்னகை..

சமையலறையில் வித்யாவுக்கு அதிரசம் செய்து கொடுக்க வேண்டும் என்று  ஒருபடி பச்சரிசியை ஊறப் போட்டார்  காமாட்சியம்மாள்..

கூடத்தின் ஊஞ்சல் மெல்ல அசைந்து கொண்டிருந்தது...

***

35 கருத்துகள்:

  1. மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு..

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    கண் கவரும் ஒளிப்படத்துடன் அழகு செய்த சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  6. இருந்தாலும்,
    ஊஞ்சல் சித்திரம் அற்புதம்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  7. கதை நன்று, துரை அண்ணா.

    இதுவரை ஊரிலும், எங்கள் சமூகத்திலும் இந்த நிகழ்விற்கு இப்படியாகக் கூடுவதும் நிகழ்வாகவும் கண்டதில்லை. உறுதியாகத் தெரிந்த பிறகுதான் மெதுவாக அதுவும் மிக நெருங்கிய உறவுகளுக்குச் சொல்லப்படும். நிகழ்வுகள் எல்லாம் 5 மாதத்திற்கு மேல் தான்.

    ஊர் திருவிழா, குறிப்பாகத் தேரோட்டம் போன்ற ஒரு உணர்வு வந்தது, துரை அண்ணா. ஏன்னா எங்க ஊர்ல திருவிழாவுக்கு இப்படிக் குடும்ப உறுப்பினர்கள் வந்து ஜே ஜே என்று இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவிழாவிற்கு உறவினர்கள் வந்தாலும், அதிரசம் செய்வார்களா?

      நீக்கு
    2. அந்தக காலத்தில் எங்கள் தஞ்சை மாவட்டத்தில் இது வழக்கம்..
      அப்படி இப்படி விடியற் காலைத் தென்றல் என விஷயம் வெளியில் பரவியதும் புன்னகையுடன் கூடி விடுவார்கள்..
      அவரவருக்கும் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் இந்த மாதிரி நேரத்தில் தோளுக்குத் தோள் நிற்பார்கள்...

      இன்றைக்கு மஞ்சள் நீராட்டு விழா தேவையில்லை என்று ஒரு கும்பல் கிளம்பி இருக்கின்றது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
    3. நெல்லை, நிஜமா, நிறைய பேர் கூடுறப்பதான் நம்ம வீட்டுல அதிரசம், அல்வா, கை முறுக்கு, தட்டை எல்லாம். மற்ற நாட்கள்ல இதெல்லாம் கண்ணுல கூடக் காட்ட மாட்டாங்க!!! மற்றபடி வீட்டில் அதிரசம் எல்லாம் செஞ்சு பார்த்ததில்லை.

      புகுந்த விடிடில் அதிரசம் செய்வது என்பது திவசத்தும் போது மட்டும்தான்!!!

      கீதா

      நீக்கு
    4. என் அப்பா வழிப்பாட்டி அதிரசம் செய்வதற்கான மாவு செஞ்சு வைச்சுருப்பாங்க. அப்பப்ப கொஞ்சமா செய்வாங்க. நல்லா செய்வாங்க. நான் அவங்ககிட்டக் கற்றுக் கொண்டதுதான் அதிரசம், சொஜ்ஜி அப்பம், மனோஹரம் செய்முறை.

      கீதா

      நீக்கு
    5. முறுக்கு செய்றதை விட் அதிரசம் செய்றது தான் சுலபம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    6. என் மனைவி நல்லா முறுக்கு சுத்துவா. அந்த மாவின் வாசனையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். துபாய் வந்த புதிதில் அதிரசம் செய்தாள். அதிலிருந்து எண்ணெயைப் பிழிவதைப் பார்த்தபோதுதான் அதிரசம் எப்படி எண்ணெயை உறிஞ்சும் என்பது தெரிந்தது. இரண்டுமே அருமையான பட்சணங்கள்.

      நீக்கு
    7. /// அதிலிருந்து எண்ணெயைப் பிழிவதைப் பார்த்தபோதுதான் அதிரசம் எப்படி எண்ணெயை உறிஞ்சும் என்பது தெரிந்தது.///

      எங்கள் வீட்டில் அதிரசத்தின் எண்ணெயைப் பிழிவதற்கென்றே கட்டைகள் இருந்தன..

      நீக்கு
  8. கௌ அண்ணா, படம் நல்லாருக்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது. உறவு சுற்றம் என்பதெல்லாம் கொஞ்சம் அந்நியப்பட்டுவிட்டதோ...

    சிறுகதையில் காலமாற்றம் நன்றாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் மாறியதா...
      காட்சிகள் மாறியதா?..

      சுற்றுப் புற சூழ்நிலை கெடுக்கப்பட்டது என்பதே உண்மை..

      நெல்லை அவர்களது
      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  10. யாரோ சொன்னார்கள்... தமிழகம் முன்னேற வேண்டுமானால் 55+ கும்பல் காலத்திற்குப் பிறகுதான். அவங்கதான் நாட்டைப் பற்றிக் கவலைப்படாமல் காசுக்கும் சின்னத்துக்கும் வாக்களிப்பவர்கள்னு.

    இருந்தாலும் உறவும் பாசமும் கலாச்சாரமும் அவங்கள்டேர்ந்துதானே அடுத்த தலைமுறைக்கு வரணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இருந்தாலும் உறவும் பாசமும் கலாச்சாரமும் அவங்கள்டேர்ந்து தானே அடுத்த தலைமுறைக்கு வரணும்... ////

      உண்மை தான்..

      நீக்கு
  11. மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!
    உள்ளார்ந்த பாசமும் அன்பும் கிண்டலும் கேலியும் சிரிப்புமாய் இருந்த உறவுகள் இப்போதெல்லாம் அருகிப்போய் விட்டது! உங்களின் சிறுகதையை படித்து முடித்த போது பெரிய பெருமூச்சு தான் வெளி வந்தது! நமது வழித்தோன்றல்கள், இளைய தலைமுறை இதையெல்லாம் ரசிக்கவோ உணரவோ வாய்ப்பேயில்லை! எல்லாவற்றிலும் மாற்றங்கள் வந்தது போல உறவுகளிற்கிடையேயும் இடைவெளிகள் வந்து விட்டன!! எப்படியிருந்தாலும் அன்பான உறவுகளுக்கிடையே வாழ்ந்தது பொற்காலம் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// உள்ளார்ந்த பாசமும் அன்பும் கிண்டலும் கேலியும் சிரிப்புமாய் இருந்த உறவுகள் இப்போதெல்லாம் அருகிப் போய்
      விட்டது!.. ///

      உண்மை தான்...
      நன்றி.. நன்றி..

      நீக்கு
  12. எல்லாவற்றிலும் மிகவும் சிரமமானது அதிரசம் செய்வது தான்! கொஞ்சம் கூட எண்ணெயில்லாமல் மிருதுவாக, சரியான வெல்லப்பாகு கலந்து பொன்னிறத்தில் இப்போது யார் அதிரசம் செய்கிறார்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரசம் என்ற பெயரில் ஏதோ ஒன்று விற்கப்படுகின்றது..

      நீக்கு
  13. அன்றைய காலத்திலிருந்து இன்றைய நிகழ்வுக்கு வந்தது அருமை ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி ..

      நீக்கு
  14. படிக்கும் போதே மனதுக்கு இதமாக இருந்தது.எங்கள் பக்கங்களில் 1960 -70 களில் இப்படி இருந்தது.

    காலமாற்றமும் மனங்களின் மாற்றங்களும் இப்போ எங்கேயோ சென்றுவிட்டன.

    நிகழ்காலத்தையும் தொட்டு நின்றது கதை.

    உறவுகள் வெவ்வேறூ ஊர்களில் வசிப்பதும் தனிக்குடித்தனங்களும் ஒரு காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// உறவுகள் வெவ்வேறூ ஊர்களில் வசிப்பதும் தனிக்குடித்தனங்களும் ஒரு காரணம்... ///

      உறவுகளே இல்லாமல் போபதும் ஒரு காரணம்..

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.. நன்றி மாதேவி..

      நீக்கு
  15. நல்ல கதை.
    நல்ல விஷயம் கேள்வி பட்டதும் உறவுகள் பலகாரங்களுடன் வந்து பார்ப்பது உண்டு. அதுவும் பிள்ளைதாச்சிக்கு பிடித்த பலகாரங்கள் செய்து கொடுப்பார்கள். அன்பும் ஆதரவாக இருப்பதை அழகாய் கதையில் கொண்டு வந்து இருக்கிறார்.

    வயதானவர்கள் சொல்வது பொறுப்பாய், கவனமாக இருக்க சொல்வது உண்டு. இரவு வேளை வெளியே போய் வர தடை. பயணத்தில் கவனம் எல்லாம் சொல்வார்கள்.


    கவிதை நன்றாக இருக்கிறது.

    அன்றும், இன்றும் கதையில் கொண்டு வந்தது நன்றாக இருக்கிறது.

    இப்போதும் அந்த கொண்டாங்கள் உண்டு வேறு மாதிரி இருக்கிறது.
    உறவுகள் கேலி,கிண்டல்கள், நட்புகள் வருகை. என்று காலத்துக்கு ஏற்ற மகிழ்ச்சிகள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக வருக
      தங்களுக்கு நல்வரவு..

      நீக்கு
    2. தங்களது நெகிழ்வான கருத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி..

      நீக்கு
  16. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. உறவும், அன்பும் சூழ்ந்து குடும்பங்கள் அமையப் பெறுவதே ஒரு வரப்பிரசாதம். தங்கள் தொடர் கதையாக வரும் இக்குடும்பம் அன்பும், பாசமுமாக இருப்பதை படிக்கும் போதே மனம் மகிழ்வுறுகிறது.

    கதையில் மாமியார் தன் இளமை காலத்தை நினைவு கூர்ந்து, தன்னைப் போலவே தன் மருமகளையும் பாவிப்பது அவரின் நல்ல அன்பை வெளிப்படுத்துகிறது. மருமகளுக்கு செய்து தரப் போகும் அதிரசத்தை போல அவர்களின் வாழ்வு என்றும் தித்திப்பாக இருக்கட்டும் என மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். கதையை நன்றாக எழுதியுள்ளீர்கள். படித்து ரசித்தேன். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!