செவ்வாய், 25 ஜூன், 2024

சிறுகதை : ஏன்... எதற்கு? 2/2 - துரை செல்வராஜூ

 ஏன்...  எதற்கு? 2/2

-----------------------------

" குறி கேக்கலையோ.. குறீய்!..

சாமீ.. குறி கேக்கலையோ.. குறீய்!.. "

தெருவில் இளம் பெண்கள் இருவர் மஞ்சள் புடவையுடன் சென்று கொண்டிருந்தனர்..

ஒருத்தியின் கையில் ஒரு முழத்துக்கு வெள்ளிப் பூண்களுடன் பிரம்பு... இன்னொருத்தியின் தோளில் சிவப்பு நிற பை.. இருவர்
நெற்றியிலும் வடிவாகக்  குங்குமம்.. கண்களில் மை.. அள்ளி முடித்த கூந்தலில் மல்லிகைச் சரங்கள்.. கைகளில் நிறைவான வளையல்கள்..

இங்கே பிள்ளைகள் இருவரும் ஓடி வந்து தோளில் தொற்றிக் கொண்டு,
" அப்பா.. அப்பா.. " - என்றனர்..

" என்னடா... " 

சாலையில் சென்று கொண்டிருந்தவர்களைச் சுட்டிக் காட்டினர்..

" அது.. ஏன்டா?...  வாயில் வந்ததைச் சொல்லிட்டுப் போவாங்க.. மனசு கஷ்டமாயிடும்.. "

" நீங்க தான் தைரியமான ஆள் ஆச்சே.. " இடங்கண்டு இடித்தாள் இல்லத்தரசி..

" அவங்க உள்ள வந்து பார்க்கலாமா.. உள்ளே வர்றதுக்கு அனுமதி உண்டா?.. " 

விடுதி வாசற்கதவின் அருகில் இருந்த மீசைக்காரரிடம் கேட்டார் மூர்த்தி..

" ம்ம்... "

" யம்மா... இங்கே வாங்க..."

மூர்த்தி அந்தப் பெண்களை அழைத்ததும் பிள்ளைகள் இருவரும் துள்ளிக் குதித்தனர்.. 

மா மரத்தின் நிழலில் அமர்ந்து கொள்ள, " ஜெய்ஸ்ரீ கையைக் காட்டும்மா... "  என்றார் மூர்த்தி..

" நா உங்க கண்ணப் பார்த்தே அவங்களுக்குச் சேதி சொல்லுவேன்.. " - என்றவள் மூர்த்தியின் கண்களை உற்று நோக்கினாள்.. 

கண்களுக்குள் அம்பு பாய்ந்த மாதிரி இருந்தது அவருக்கு..

" உங்க பங்களாவுக்குப் பக்கத்துல புத்து இருக்குதானே.. "

 " ஆமா...  "

 " ரெண்டு தடவை அதை  இடிச்சிருக்கீங்கதானே!...  "

" ஆமா.. "

" அப்புறம் இங்கே எதுக்குடா வந்தே நாக தோஷம் தீரணும் ன்னு?... " அந்தப் பெண் நாகம் எனச் சீறினாள்...

மூர்த்தியின் மனைவியிடம் விசும்பல்..

" நான் அன்னைக்கே சொன்னேன்...இவங்கதான் கேக்கலை... இப்போ என்னம்மா செய்றது?.. பெரியவளுக்கு நாக தோஷம் தீரணும் ன்னு பரிகாரம் செய்ய வந்துருக்கோம்,.. "

" மஞ்சளிலே குளிச்சிருக்கும்
மாதரசி வாருமம்மா..
மடியேந்தி நிக்கறப்போ
மனங்குளிரத் தாருமம்மா!..

கொடி வாட விடலாமோ
கொடிமுத்து நாயகியே
கோபம் தவிர்த்திடுவாய்
கோலவிழி ரத்தினமே!.. 

வைகுந்தன் சோதரியே
வாசலுக்கு வந்திடம்மா..
வாக்கு திரு வாக்கு சொல்லி
வாசல் வழி காத்திடம்மா.. "

பிரம்பு வைத்திருந்தவளிடம் மெல்லிய புன்னகை..

மூர்த்தியின் கண்களில் ஈரம்..

" கோயில்ல  சாமி தரிசனம் மட்டும் பண்ணுங்க... நாகவல்லி மன்னிப்பு கொடுத்துட்டாங்க... "

" அப்போ பரிகாரம்?.. "

" ஊருக்குப் போற வழியில நாலு பேருக்கு இடுப்புத் துணி வாங்கிக் கொடுங்க... அது தான் பரிகாரம்.. வீட்டுக்குப் போன மூணாம் நாள் ஜாதகம் ஒன்னு வரும்.. அது தான் மன்னிப்புக்கு சாட்சி..  பெரியவளுக்கு வைகாசியில திருமாங்கல்யம்.. ஆறாவது மாசம் சின்னவளுக்கும் திருமாங்கல்யம்.. "

குறி சொல்லிய பெண்ணின் முகத்தில் வியர்வைத் துளிகள்... அவளுடன் வந்திருந்தவள் தோள் பைக்குள் வைத்திருந்த மடிப்பு விசிறியை எடுத்து விசிறி விட்டாள்..

மூர்த்தி கண்களைத் துடைத்துக் கொள்ள - அவரது மனைவி ஆகாயத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டாள்..

" ரெண்டு நாளா ஐயா மனசுக்குள்ள குடைச்சல்.. அதை சரி செய்யட்டுமா!.. "

" ம்!.. "

" கோயிலுக்கு வந்தமா.. சாமி பார்த்தமா.. ஊர்க்குப் புறப்பட்டமா ன்னு இருக்கணும்.. இங்க  நடக்கிற விசயத்தை எல்லாம் ஆராய்ச்சி பண்ணக் கூடாது..   புரியுதா?.. "

" ம்.. "

" ஊர் காக்கும் உத்தமியே..
உஜ்ஜயினி காளியம்மா..
ஓங்காரப் பேரழகி..
ஒய்யார நாயகியே!..

சீர் காக்க வாருமம்மா
சிங்கார நாயகியே..
சிவசக்தி ஆனவளே
சிந்தையில வாருமம்மா..

உம்பேரச் சொல்லிடவும்
உத்தரவு தாருமம்மா..
உம்பிள்ளை கூப்பிடவும்
உம்முகத்தைக் காட்டுமம்மா

உள்ளிருக்கும் ரகசியத்த
ஊரறியச் சொல்லிடம்மா..
உத்தமியே முத்தழகி
உன்பாதம் சரணம் அம்மா..

ஏழைக்குன்னு இரங்குனவன்
இந்தமகன் வாடுவதோ?..
உண்மையது எங்கேயின்னு
ஊர்முழுக்கத் தேடுவதோ!.. "

குறி சொன்னவள் கண்களை மூடியபடி -

" என்ன புரியுதா?.. " என்றாள்..

 " புரியுதும்மா.. " - என்றார் மூர்த்தி..

" போகும்வழி புரியாம
போனதொரு புல்லுருவி
நடந்தது  நல்லது ன்னு
நடப்பதை நீ கவனி..

காணாத காட்சியின்னு
கட்டுரைக்கும் வேளையில
நாடு மாறி நல்லவன் தான்
நாதியத்த கும்பலுக்கு..

பொண்ணு ன்னும் தெரியாது
கண்ணு ன்னும் புரியாது
கன்னியரை அழிக்க வந்த
கருவேல முள்ளு அவன்..

நல்ல வழி நடந்ததில்லே
நல்ல சொல்லு கேட்டதில்லே..
நாலுபேரு மத்தியில
நானுரைக்க நீதியில்லே..

கன்னியர்க்குப் பெருந்துயரம்
களவாணித் தனத்தாலே..
காத்திருந்த தேவி அவ
வகுந்தாளே நகத்தாலே...

வச்ச பயிர் வாழணுமே
வரப்பெடுத்துக் காக்கணுமே
களையெடுக்கும் கோவத்துல
காளியவள் ஆடிவந்தா..

தேவியவள் முடிவெடுத்தா
தீர்க்காம விட மாட்டா..
திக்கு திசை அதிர விட்டா..
திட்டு திடல் அலற விட்டா..

அங்க ஒரு தடயம் இல்லே
ஆகிவரும் விஷயம் இல்லே..
பின் தொடர்ந்து போகாம
பிள்ளைகளை கவனியப்பா!..

உம்பிள்ளை உனக்காக
உங்கையில் கொடுத்தேனே
உம்மீது பாசத்தினால்
உள்ளதையும் உரைத்தேனே..

சிட்டென்றும் சிமிழ் என்றும்
மனை வாழும் மங்கலத்தில்
மஞ்சள் முக மகராசி
மாறாத நெஞ்சகத்தில்..

தங்க மகன் சஞ்சலிக்க
சக்தி வடிவாகி வந்தேன்..
மஞ்சளயும் பார்த்திருப்பேன்
குஞ்சுகளை காத்திருப்பேன்..

வேலோடு மயிலாடி 
வாசல் வரும் நேரமப்பா..
சேவல் ஒன்னு சேர்ந்து வரும்
தண்டனிட்டு கும்பிடப்பா!... "

அந்தப் பெண்ணிடமிருந்து ஸ்ஸ் ஸ்ஸ் - என்ற ஒலி மெல்லியதாய்க் கேட்டது..

பாட்டுப் பாடி குறி உரைத்த பெண் - முகத்தில் வியர்வை முத்துக்களுடன் அரை மயக்கத்தில்  இருக்க - அருகில் இருந்த பெண் வியர்வைத் துளிகளை மெல்ல ஒற்றிக் கொண்டிருந்தாள்..

அமர்ந்திருந்த பெண்ணின் காலடியில் ஐநூறு ரூபாய் தாள் இரண்டை வைத்துக் கும்பிட்டார் மூர்த்தி.. 

" இதை அந்த மீசைக்காரர் கிட்ட கொடுத்துட்டு வா.. அன்னைக்கு ரொம்பவும் பயந்துட்டார்.. நான் கொடுக்கச் சொன்னேன் னு சொல்லு.. " - என்றபடி எழுந்து பிள்ளைகள் கன்னத்தை வருடி முத்தமிட்டாள்.. அருகில் இருந்தவளும் எழுந்தாள்..

மீசைக்காரரிடம் பணத்தைக் கொடுத்து விட்டு வந்த மூர்த்தியிடம் மீண்டும் சந்தேகம்..

" எல்லாம் புரியுது ம்மா.. ஆனா கடைசியில ஒரு துப்பு கூட கெடைக்கலையாமே.. என்ன தான் ஆனது?.. "

" அவனுக்குத் தெரியும்!.. "

" எவனுக்கு?.. "

" அதோ!.. "  - என்று கை காட்டிய திக்கில் திருஷ்டி பொம்மை இருந்தது.. 

இரு பெண்களும் வாசலை நோக்கி நடந்தனர்.. 

" கொடுத்த பணத்தையும் செக்யூரிட்டிக்கிட்ட கொடுக்கச் சொல்லிட்டாங்க.. இவங்க செலவுக்கு என்ன பண்ணுவாங்க.." - மூர்த்தியின் இல்லத்தரசி கவலைப்பட்ட நேரத்தில்  மூர்த்தி சொல்லிக் கொண்டிருந்தார்..

" கடைசியில - கண் திருஷ்டி பொம்மை க்குதான் தெரியும் ன்னு கை ய காட்டிட்டாங்க!... "

" அந்த புற்றை இடிச்சது ல உண்மை இருக்கு தானே.. அப்போ இந்த திருஷ்டி  பொம்மையிலயும் உண்மை இருக்கும்!.. " - மூர்த்தியின் இல்லத்தரசி..

" அம்மா சொல்றது தான் சரி.. " பிள்ளைகள் இருவரும் சிரித்தனர்..

எழுந்து நடந்த பெண்கள் சாலை வளைவில் திரும்பி -  காற்றினில் கரைந்து கொண்டிருந்தனர்..

ஃஃஃ

' என்னடா இது?.. ' என்பவர்களுக்கு.. இத்தளத்தில் வெளியான
' காற்றினிலே.. ' ஆறு பகுதிகளையும் மீண்டும் படித்துப் பார்க்கவும்..

சுட்டிகள் : 







இங்கே வந்தவர்கள் - அந்தத் திலகபுரி நாட்டின் இளவரசி - அவந்திகா ஸ்ரீ ஷாந்தினியும் ஆத்மார்த்த தோழி மித்ரா சுபாஷினியும் -  தான் என்பது புரியும்!..


***

37 கருத்துகள்:

  1. செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை.

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    கண் கவரும் ஒளிப் படங்களுடன் அழகு செய்த சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  6. " இரண்டாண்டுகளுக்கு முன் வெளியான கதையின் இணைப்புகளை இங்கு மீண்டும் தர வேண்டும்... "

    நினைத்துக் கொண்டேன்...
    அவ்வளவு தான்... அன்பிம் ஸ்ரீராம் அவர்களிட்ம் சொன்னேனா... நினைவு இல்லை...

    இன்று பதிவில் அனைத்து இணைப்புகளுடன் சிறப்பு...

    ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாண்டுகளா ஆகிவிட்டன?  காலம் ஓடுகிறது!  சிரமம் எடுத்து இணைத்தது நான் அல்ல..  KGG.  நானே காலை பார்த்தபோதுதான் தெரிந்தது!

      நீக்கு
    2. கௌதம் ஜி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. காற்றினிலே தொடரின் தொடர்ச்சியாக இக்கதை என்று புரிகிறது.

    ஆனால் இப்போதைய கதையில் முடிவு நான் எதிர்பார்த்தது போல அல்லாமல் முந்தைய தொடரோடு தொடர்புடையதாக.

    போன பகுதியில் வந்த அந்தக் குறி சொல்பவள் இப்பகுதியில் க்ளூ கொடுப்பாள் அதை வைத்து மூர்த்தி தேடிக் கண்டுபிடிப்பார் என்று எதிர்பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுக்கு தேடிக் கண்டு பிடிக்கணும்?...

      குற்றவாளி கோதுமை அல்வா சாப்புடுறதுக்கா...

      இந்த மாதிரி அம்பாள் கிளம்பி சில்லுண்டான்களை சிதற வேணும்..

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
    2. கதைப் பாட்டு என சொல்லியிருக்கின்றேன்..

      அதுபற்றி ஏதாவது சொல்லி இருக்கலாம் சகோ!...

      நீக்கு
    3. துரை அண்ணா, காலையில் சொல்ல வந்து வேறு வேலைகள் வந்து அடுத்து அந்தக் கருத்தை போட முடியாமல் போனது.

      பாட்டால் குறி சொல்வதிலேயே கதையை சொல்லியிருக்கீங்க. பாடலும் அதில் கதையும் நன்றாக இருக்கு. உங்கள் பாடல்கள் பற்றிச் சொல்லணுமா!!! விளையாடுவீங்க!

      கதையின்போக்கையும் முடிவையும் என் எண்ணத்தில் சொன்னேன் அண்ணா அவ்வளவுதான். இப்போதைய காலகட்டத்தின் படி. அவ்வளவுதான். ஏன்னா, என்னால் இப்படி முன் ஜென்மம் மற்றும் தெய்வத்தோடு தொடர்புபடுத்தி அமானுஷ்ய ரீதியாகப் பார்க்கும் அமானுஷ்ய அறிவோ சிந்தனையோ, பழக்கமோ இல்லாததால், துரை அண்ணா.

      மற்றபடி அமானுஷ்ய கதையாக நன்றாக இருக்கு. எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜனும் நினைவுக்கு வருகிறார்.

      கீதா

      கீதா

      நீக்கு
    4. சும்மா லுலுலுலுவா க்கு எழுதினேன்..

      தங்களது மனம் தெரியாதா!...

      அன்பினுக்கு மகிழ்ச்சி..
      நன்றி சகோ

      நீக்கு
  9. கதையும் கதைக்கு ஏற்ற படமும் அருமை.

    கதையை முன்னைய பகிர்வுடன் இணைத்துக் கொண்டோம். வித்தியாசமான கதை.

    பதிலளிநீக்கு
  10. அப்போது எழுதிய தொடர்கதையோடு இணைந்த கதை என்று நினைக்கவில்லை. ஆச்சரியம் நன்றாக இணைத்துக் கொண்டு வந்துள்ளீர்கள். குறிக்காரியின் வாக்குகள் எப்படியோ அவர்களுக்கு ஒரு தீர்வைக் கொடுத்தது. அப்படி என்றால் மூர்த்தி தேடும் பையன் முடிவு அந்த திருஷ்டி பொம்மைக்குத்தான் தெரியும் என்பதா? அதனால்தான் அவர்களும் காற்றில் மறைந்துவிடுகின்றனர். கதையின் தொடக்கம் இக்காலத்திலும் முடிவது அமானுஷ்யமாகவும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வெறியனின் சடலத்தை திருஷ்டிப் பொம்மைக்குள் இருக்கின்ற துர்தேவதையே எடுத்துக் கொண்டது...

      இதை எவராலும் கண்டு பிடிக்க முடியாது.. கண்டு பிடித்தாலும் ஒன்றும் செய்ய இயலாது..

      அவன் கள்ளக் குடியேறி...


      தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. கதை நன்றாக இருக்கிறது.
    குறி சொல்பவர் மூர்த்தியின் மனகவலையை போக்கி விட்டார்.இனி அவரின் கடமைகளை நிம்மதியாக செய்வார்.
    இப்படி துஷ்டர்களை சத்தம் காட்டாமல் அடக்கினால் நல்லது தான்.
    முந்திய பதிவு நினைவு இருந்தது, மீண்டும் பார்த்து வந்தேன்.

    //இங்கே வந்தவர்கள் - அந்தத் திலகபுரி நாட்டின் இளவரசி - அவந்திகா ஸ்ரீ ஷாந்தினியும் ஆத்மார்த்த தோழி மித்ரா சுபாஷினியும் - தான் என்பது புரியும்!.//

    அவர்களை அழகாய் ஓவியம் வரைந்து தந்து விட்டார் KGG. சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌதம் ஜி அவர்களது பணி சிறப்பானது..

      அவருக்கு நன்றி..

      //துஷ்டர்களை சத்தமில்லாமல் போட்டுத் தள்ளி விட வேண்டும்..//

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..
      நலம் வாழ்க...

      நீக்கு
  12. வித்தியாசமான கதை. எப்போதுமே துரை செல்வராஜு சாரின் கதைகள் நல்லனவற்றையே கொண்டிருக்கும்.

    தொடர் கதை என்பதால் சென்றவாரம் கருத்திடவில்லை. காலையிலேயே படித்துவிட்டேன்.

    நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான கதை.

      அன்பின் நெல்லை அவர்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  13. கேஜிஜி சாரும், தன்னுடைய வேலைகள் நிறைய இருந்தாலும், ஏனோ தானோவென்று வெளியிடாமல், அதற்கொரு படத்தையும் இணைக்க மெனெக்கெட்டிருக்கிறார். அவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித்திரச் செல்வர் அவர்களுக்கு
      வேலைகள் நிறைய இருந்தாலும், ஏனோ தானோவென்று வெளியிடாமல் பொறுப்புடன் வெளியிட்டிருக்கின்றார்...

      சிறப்பு..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே.

    இன்றைய கதைப்பகுதி நன்றாக உள்ளது. பழைய கதையுடன் கூடிய இணைப்பும் பொருந்தி வருகிறது. பழைய இணைப்புகளுக்கு சென்று படித்து வந்தேன். திலகபுரி இளவரசி அவந்திகா ஸ்ரீ சாந்தினியையும் அவளது தோழி மித்ரா சுபாஷினியையும் மறக்க முடியுமா? ஆறு வாரங்களாக சுவாரஸ்யமான தொடராக சென்ற கதை இப்போதும் நன்றாக நினைவில் உள்ளது. இப்போது அதை தொடர்ந்து புதியதான கதை ஒன்று தந்து பழையதை நிறைவு செய்து விட்டீர்கள். அவர்களது குறிப் பாட்டும் அருமையாக உள்ளது. படித்து ரசித்தேன். தங்களது இம்மாதிரியான புதிய புதிய முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    கதைக்கு ஏற்றவாறு குறி சொல்லும் பெண்களை ராஜ உடைகளோடு வரைந்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// கதைக்கு ஏற்றவாறு குறி சொல்லும் பெண்களை ராஜ உடைகளோடு வரைந்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்... ///

      கௌதம் ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்...

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி..

      நீக்கு
  15. இன்று கதைக் களம் கருத்துரைத்த அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  16. கதையில் உங்கள் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது இயல்பாக வந்தது... திட்ட்மிட்டது அல்ல...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. கதையில் குறிசொல்பவர்கள் சொல்வதாக வரும் கவிதை நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!