நெல்லைத்தமிழன்:
சில பல உறவினர்கள் அவங்க வீட்டில் அசந்தர்பங்கள் (டைவர்ஸ் ஆவது, குழந்தையின்மை, வேற்று ஜாதித் திருமணம் போன்று) நிகழ்ந்துவிட்டால் பிறருடன் பேசுவதையோ இல்லை திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு வருவதையோ தவிர்த்துவிடுகிறார்களே.. அது ஏன்? நம் கையை மீறி நடக்கும் விஷயங்களுக்கு நாம் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்? என்பது என் மனதில் தோன்றும் கேள்வி.
# இது அவரவர் எதை "அவமானகரமான" தாகக் கருதுகிறார்கள் என்பதைப் பொருத்த விஷயம். அந்த உணர்வு சரிதானா என்பது பற்றி நாம் என்ன சொன்னாலும் அவர்களுக்கு அது ஏற்புடையதாக இருப்பதில்லை.
& அவரவர் கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வுகளுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் வெட்கமோ வேதனையோ அடையத் தேவை இல்லை என்பதுதான் என் கருத்தும்.
மனிதன் செத்த பிறகு எங்கு செல்கிறான் என்றெல்லாம் ஆராய்ச்சிகளும், ஆன்மீக வாதிகளின் விசாரங்களும் நடைபெறுகிறதே.. ஒருவன் செத்த பிறகு எங்கு சென்றால் என்ன? அதை அவனும் நம்மிடம் வந்து சொல்லப்போவதில்லை, நாமும் பார்க்கப்போவதில்லை. அப்படி இருக்க அதைப் பற்றித் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம்?
# மரணத்திற்குப் பின் நமக்கு நல்ல அனுபவங்கள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு, அல்லது நாம் தண்டிக்கப்படுவோமோ என்கிற பயம் இந்த இரண்டில் ஏதோ ஒன்று மனிதனை மரணத்திற்கு பின் என்ன என்ற கேள்வியைக் கேட்க வைக்கிறது - அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது.
& இருக்கின்றார்; இல்லாமல் ஆகிவிடுகிறார். சுருக்கமாக இவ்வளவுதான். இதில் ஆராய்ச்சிகள், விசாரங்கள் தேவை இல்லை.
இறைவன் உலகைப் படைத்தது உண்மையானால், அவருக்குத் தெரியாதா எந்த எந்த நிலத்தில் என்ன என்ன வளரவேண்டும் என்று? அப்படி இருக்க, சைனாவின் டிராகன் பழம், மலேஷியாவின் டுரியன் பழம் என்று வேற்று நிலங்களுக்கு இயற்கையானவற்றை நாம் ஏன் விளைவித்து உண்ணுகிறோம்? ஓட்ஸ், மக்காச்சோளம் போன்றவற்றைப் பற்றியும் அதே எண்ணம்தான்.
# மனிதர்களாகிய நாம் நமது ஐம்புலன்களின் ஆசைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறோம் எனவேதான் புதுப்புது சுவை புதுப்புது அனுபவங்களை நாடி அலைகிறோம். ஓட்ஸ் மக்காச்சோளத்தை பொருத்தவரை அது ஏதோ அரிசியைவிட சத்து மிக்கது அல்லது கெடுதல் செய்யாதது என்கிற மூடநம்பிக்கைதான் அவற்றை நாம் நாடுவதன் காரணம்.
& டிராகன் / டுரியன் / கிவி எல்லா பழங்களின் விலையும் மிக மிக அதிகம். நம்ம ஊரு வாழைப்பழத்தில் இல்லாத சுவையா / சத்துகளா மற்ற பழங்களில் வந்துவிடும்?
கிரிக்கெட்டோ இல்லை எந்த ஸ்போர்ட்ஸோ.. அதை நேரலையில் பார்ப்பதால் என்ன நன்மை? பிறகு ரிசல்ட் தெரிந்துகொண்டால் போதாதா? சரி... கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் விளையாடுபவர்களை ஸ்டேடியத்திலிருந்து பார்ப்பதால் என்ன நன்மை?
# விளையாட்டு மைதானத்திற்கு நேராகச் சென்று அங்கு எல்லோரும் சேர்ந்து உற்சாகக் கூச்சல் போட்டு நமது முகம் தொலைக்காட்சித் திரையில் தெரிகிறதா என்று பார்த்து ஆனந்தப்படுவது - இது ஒரு வகை ஜாலி. இதனால்தான் மக்கள் மைதானங்களுக்கு நேரடியாகச் சென்று விளையாட்டுகளைக் காண விழைகிறார்கள்.
& இளைஞர்கள் / இளைஞிகள் விளையாட்டு மைதானம் சென்று விளையாட்டைப் பார்ப்பதற்கு வேறு சில காரணிகளும் இருக்கும்!
# பொதுவாக வயதானவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே இருக்கிற வயது வேறுபாடு அவர்களுடைய மனப்போக்கு வெவ்வேறு விதமாக அமையக் காரணமாக இருக்கிறது.
பெரியவர்கள் என்கிற ஒரே காரணத்தினால் அவர்கள் என்ன சொன்னாலும் சரியாக இருக்கும் என்று நினைப்பதும் சரி இல்லை அல்லவா ?
இந்தக் காலத்தில் பல விஷயங்களில் பெரியவர்களை விட இளையவர்களிடம் அறிவும் அனுபவமும் சரியான கண்ணோட்டமும் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
ஆனால் நமக்கு நாம் சொல்வதுதான் நியாயமானது அதுதான் சரியானது என்கிற திடநம்பிக்கை இருப்பதும் கருத்து வேறுபாட்டுக்கு ஒரு காரணம்.
வயதானால் ஆபீசிலிருந்து ரிட்டயர் ஆகிவிடுகிறோம் ஆனால் வீட்டு நிர்வாகத்திலிருந்து ரிட்டயர் ஆக மறுக்கிறோம். கருத்து வேற்றுமைகளுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. முன்பெல்லாம் 20 24 வயதுக்குள் பையன்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடந்து விடும். இப்போது அப்படி இல்லை. அந்த காலத்தில் அனுபவம் இன்மை காரணமாக பெரியவர்களை திருமண விஷயத்தில் கேட்டு நடப்பது வழக்கமாக இருந்தது . இப்போது அப்படி இருக்க வேண்டும் என்கிற நியாயமோ, கட்டாயமோ இல்லை.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
சினிமாக்களிலும், சீரியல்களிலும் வரும் துப்பறியும் நிபுணர்கள் எக்ஸென்ட்ரிக்காகத்தான் இருக்க வேண்டுமா?
# முன்னோடிகள் காட்டிய வழியில் தொடர்ந்து செல்கிறார்கள். ரசிகர்கள் ஆவலைத் தக்க வைத்துக் கொள்ள இப்படி சில யுக்திகள் செய்யப் படுவது சகஜம்.
அது சரி, இப்போது துப்பறியும் சினிமா - தொடர் ஏதும் வருகிறதா என்ன ?
& எல்லாம் ஷெர்லாக் ஹோம்ஸ் கேரக்டர் பார்த்து காபி அடிக்கப்பட்டவை !
தொடர்ந்து ஒரே வகை பழத்தையே சில நாட்கள் சாப்பிடுவது அலுத்து விடாதா?
( இது போன வாரம் - நெல்லையிடம் ஸ்ரீராம் - பின்னூட்டத்தில் கேட்ட கேள்வி - நெ. த பதில் சொல்லட்டும்!)
இதுவும் போன வார பின்னூட்டத்திலிருந்து ..
இத்தனைக்கும் கழுதைக்கு பஞ்ச கல்யாணி ன்னு பேர்..
ஆமாம். அப்படி பெயர் உண்டு. ஆனால் ஏன்?