ஞாயிறு, 30 ஜூன், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 26 : நெல்லைத்தமிழன்

 

தாஜ்மஹலைப் பார்த்த பிறகு, தங்கியிருந்த சத்திரத்திற்கு (கோவிலுக்கு) வந்து குளித்து உடை மாற்றிக்கொண்ட பிறகு, நல்ல உணவு உண்டோம். பிறகு எங்களுக்கு இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓய்வு நேரம் இருந்ததால், நான் ஆக்ரா கோட்டையைப் பார்க்கச் சென்றேன். கொஞ்சம் வெய்யில் அதிகம்தான். ஆனால் அதைவிட எனக்கு ஆர்வம் அதிகம். முகலாயர் சரித்திரங்களைப் படித்து, பிறகு மதன் ஆனந்தவிகடனில் (தற்போதுள்ள முரசொலி விகடன் அல்ல) எழுதிய 'வந்தார்கள் வென்றார்கள்' தொடரைப் படித்து, இன்னமுமே முகலாய அரசர்கள் சம்பந்தமான இடங்களுக்குச் சென்று பார்க்கும் ஆர்வம் வந்தது. ஆனால் அதற்குரிய வேளை வரவேண்டுமே...  ஆக்ரா கோட்டையைக் காணும் ஆசையினால் அதற்குச் சிறிது தூரம் நடந்து சென்றேன். நுழைவு வாயிலில் டிக்கெட் பெற்றுக்கொண்டேன்.  ஒரு வழிகாட்டி (பலமுறை சென்றிருக்கிறேன். அதில் ஒரு முறை) அன்றைக்கு யாரும் வராதாலோ என்னவோ, நூற்றைம்பது ரூபாய் கொடுங்கள், ஒரு மணி நேரம் உங்களுக்குச் சுற்றிக் காண்பிக்கிறேன் என்றார். அவரது உதவியைப் பெற்றுக்கொண்டாலும், அவர் சரித்திரத்தில் விட்ட பல தவறுகளை நான் சுட்டிக் காட்டினேன். ஆனாலும் அவர் சொன்னது உபயோகமாக இருந்தது.

பத்து மணிக்கு காலை உணவு. அந்தக் கோவில் மண்டபத்திலேயே

பஞ்சதுவாரகை, கயா யாத்திரை, பத்ரி யாத்திரை, முக்திநாத் யாத்திரை போன்ற பல யாத்திரைகளில் நாங்கள் ஆக்ராவைத் தொட்டுச் செல்வோம். சில சமயங்களில் நேரம் கிடைக்காதுஆக்ரா கோட்டையை நான் மூன்று முறை சென்று பார்த்திருக்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்தில் அந்தக் கோட்டையைப் பற்றி விலாவாரியாக படங்களுடன் எழுத நினைக்கிறேன். இதுவே சில பல வாரங்கள் போகும். பிற்பாடு மற்ற யாத்திரைகள் பற்றி எழுதும்போது தாஜ்மஹலையும் ஆக்ரா கோட்டையையும் வெறுமனே குறிப்பிடுவேனே தவிர விளக்கமாகப் படங்களுடன் எழுத மாட்டேன்.

ஆக்ரா கோட்டை



தங்கியிருந்த இடத்திலிருந்து எதிரே தெரியும் ஆக்ரா கோட்டை

இதனை ஆக்ராவின் சிவப்புக் கோட்டை என்று சொல்கிறார்கள். ஆக்ரா முஸ்லீம் அரசர்களின் மிக முக்கியமான நகரம். பிற்காலத்தில்தான் ஆக்ராவை விட்டு தில்லிக்குக் குடிபெயர்ந்தனர். இங்கு 14ம் நூற்றாண்டிற்கு முன்பே ஒரு கோட்டை இருந்திருக்கவேண்டும். 14ம் நூற்றாண்டில் இந்தக் கோட்டை ராஜபுத்திரர்கள் வசம் இருந்தது. இப்ராஹிம் லோடியின் வெற்றிக்குப் பிறகு, ஆக்ராவின் முக்கியத்துவத்தை அறிந்து, இந்தக் கோட்டையைத் தன் வசப்படுத்திக்கொண்டான் இப்ராஹிம் லோடி. லோடி வம்சத்தவரிடம் 22 வருடங்கள் இருந்த பிறகு, முதலாம் பானிபட் போரில் பாபரிடம் லோடி தோற்ற பிறகு, பாபர் வசம் 1526ல் இந்தக் கோட்டை வந்தது. இங்குதான் அவரது மகனான ஹுமாயூன் 1530ல் முடிசூட்டிக்கொண்டார். ஹுமாயுன் பிறகு ஷெர் ஷா (சூரி வம்சம் என்கிறார்கள்)வினால் 1540ல் தோற்கடிக்கப்பட்ட பிறகு அவர்கள் வசம் கோட்டை வந்தது. அதன் பிறகு பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அக்பர் இவர்களை வென்று, இந்தக் கோட்டையைக் கைப்பற்றினார். (1556). அப்போதிலிருந்து சுமார் 200 வருடங்கள் இந்தக் கோட்டை  முகலாயர் வசம்தான் இருந்தது. இப்போதிருக்கும் தோற்றம் அக்பரிலிருந்து ஷாஜஹான் காலம் வரை நடைபெற்ற கட்டுமானங்களால் பொலிவு பெற்றது. பதினைந்து வருடங்கள் மராத்தா அரசர்களிடம் இருந்த  பிறகு பிரிட்டிஷார் வசம் வந்த இந்தக் கோட்டையை அவர்கள் ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்தினர். 140 வருடங்கள் அவர்கள் வசம் இருந்த இந்தக் கோட்டை, சுதந்திரத்திற்குப் பிறகுதான் இந்தியாவின் வசம் வந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது? வரும்போதும் யாரும் எதையும் கொண்டுவரவில்லை, போகும்போதும் எதையும் கொண்டுபோகவில்லை. இந்த அரச வம்சத்தை நினைவில் வைத்திருங்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களின் படங்கள் வரும்போது எழுதுகிறேன்.

இருந்தாலும், வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த இடம். முகலாய அரசர்கள் வாழ்ந்த இடம் என்ற வகையில் இந்தக் கோட்டை மிக முக்கியமானது. அதனால் கோட்டையின் ஒவ்வொரு இடத்தைப் பார்க்கும்போதும், அதன் முக்கியத்துவத்தைக் கேட்கும்போதும், இந்த மண்ணில் அரசாண்ட மன்னர்கள் உலவிய இடம் என்ற எண்ணம் வந்தது. பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஔரங்கசீப் போன்ற  முகலாய மன்னர்களைப் பற்றி வரலாற்றில் படித்திருக்கிறோம். அவர்கள் ரத்தமும் சதையுமாக உலவிய இடம் அக்பர் கோட்டை. சரி, அங்கு பார்த்த இடங்களை படங்களின் மூலமாகக் காணலாம். முதலில் பழைய காலத்தில் எடுத்த புகைப்படங்களைப் பார்த்துவிடுவோம்.

1900ல் எடுக்கப்பட்ட படம்

1908ல் எடுக்கப்பட்ட படம். 

1870ல் எடுக்கப்பட்ட படம்

பழைய புகைப்படங்களைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றுவது, பெரும்பாலான பெரிய சாலைகள் எல்லாம் பழையகாலத்தில் இருந்த மாட்டுவண்டிச் சாலைகள்தாம் (அல்லது கௌரவமாக ராஜபாட்டைகள்தாம்). அவற்றின்மீதுதான் தார்ச்சாலைகள் அமைத்திருக்கிறார்கள். டைம் மெஷினில் போக முடிந்தால், அப்போதைய காலத்துக்குப் போய் சில இடங்களை வாங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. (இப்போதானே வரும்போது ஒன்றும் கொண்டு வரலை, போகும்போது ஒன்றும் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை என்று பஜனை பாடின.. என்று மனம் சொல்கிறது)

கோட்டையின் நுழை வாயில். கோட்டையைச் சுற்றியும் அகழி இருக்கிறது (தண்ணீர் இல்லை). அதுபோலவே, பழைய சரித்திரக் கதைகளில் வருவது போலவே கோட்டைக் கதவுகளை அடைக்கும்படியாக சங்கிலிகளையும் பார்த்தேன்.


கோட்டையைச் சுற்றியுள்ள அகழி

எதிரி வருகிறான் என்றால் இரும்புப் பாலத்தை, இரும்புச் சங்கிலியால் தூக்கிவிடுவார்கள். கோட்டை முழுவதுமாக அகழியால் சூழப்பட்டிருக்கும்.

கோட்டையை உடனே மூடுவதற்காக, இரும்புப் பாலத்தை இழுப்பதற்கான அமைப்பு. எனக்கு பாஹுபலி படம் நினைவுக்கு வந்தது.

ஆக்ராவின் சிவப்புக் கோட்டை.

அகழியைத் தாண்டி கோட்டைக்குள் நுழைந்தால் உள்ளே காணப்படும் இன்னொரு கோட்டை

கோட்டையைச் சுற்றி வரும் அகழி. அதோ தூரத்தில் தெரிகிறதா தாஜ்மஹல்?

இரண்டாவது நுழைவாயிலில் நுழைந்ததும் காணப்படும் நெடிய பாதை. நான் முதல் முறை இந்தக் கோட்டைக்குச் சென்றபோது ஒரு டூரிஸ்ட் கைடை வைத்துக்கொண்டேன். அவர்கள்தாம் முக்கியமான விஷயங்கள் சொல்லுவார்கள் என்றுகோட்டையே முழு வட்ட வடிவில் இல்லாமல் வளைந்து நெளிந்து இருக்கிறது. கோட்டைக்கு நான்கு வாயில்கள் உண்டு. தெற்குப் பகுதி வாயில் அமர்சிங் நுழைவாயில் என்றும் வடக்குப் பகுதி வாயில் தில்லி வாயில் என்றும் அழைக்கப்படுகிறது. டூரிஸ்டுகள் நுழையும் வாயில் அமர்சிங் வாயில். இது தவிர, கிழக்குப் பகுதியில் உள்ள வாசல் கிஸ்ரா வாசல் என்று அழைக்கப்படுகிறது. அது நேராக யமுனை நதிப்பக்கம் திறக்கும். மேற்குப் பகுதி வாசல் யானை வாசல் எனப்படுகிறது. அமர்சிங் மற்றும் தில்லி வாயில்களின் வழியாகத்தான் எதிரிகள் நுழைய முடியும் என்பதால் அந்த இரு இடங்களிலும் இரும்பு தூக்கு பாலங்களை நிறுவியிருக்கிறார்கள். அக்பர் இந்தக் கோட்டைக்கு வருவதற்கு முன்பு செங்கல்களால்தான் கோட்டை கட்டப்பட்டு மிகவும் பழுதுபட்ட நிலையில் இருந்தது. அக்பர் இந்தக் கோட்டையின் முக்கியத்துவம் கருதி, ஜெய்ப்பூரிலிருந்து சிவப்புக் கற்களை வரவழைத்து (Red Sand Stone) 8 வருடங்களில் கோட்டையை முழுவதும் சீரமைத்துப் பொலிவுபெறச் செய்தார். அக்பர் காலத்தில் இந்தக் கோட்டைக்குள் கிட்டத்தட்ட 500 அழகிய கட்டங்கள் இருந்ததாம். பிரிட்டிஷார் இந்தக் கோட்டையை ஆக்கிரமித்திருந்த போது, பலவற்றையும் தளவாடங்களுக்காகவும், போருக்கு ஏதுவாகவும் அழித்துவிட்டார்களாம். தற்போது சுமார் 30 கட்டிடங்களே எஞ்சியிருக்கின்றன.

அமர்சிங் நுழைவாயிலிலிருந்து வடிவத்தில் வந்தால்தான் இந்த நெடிய பாதை வரும்நேர் பாதை இல்லாத தால், எதிரிப் படை குழம்பும். பாதையின் இரு பகுதிலும் சிறிய கதவுகள் வழியாக போர் வீரர்கள் கண்காணிக்கவும், உடனே உள்ளே வரும் படையை மறித்துவிடவும் முடியுமாம். அந்தப் பாதையும் ஸ்மூத்தாக இல்லாமல் இருக்கும். இதன் காரணம், அப்போதுதான் குதிரை வீர்கள் வேகமாக வரமுடியும் என்பதாம்.

மதிய வெயிலில் இடம் அழகாக இருந்தாலும் நடக்கக் கொஞ்சம் கஷ்டம்தான். பாதையின் நடுவே நீங்கள் பார்ப்பது ஜஹாங்கீர் உபயோகித்த குளியல் தொட்டி. (1580)  

இது இந்த இட த்தில் ஆரம்பத்தில் இல்லை (பின்னஎல்லோரும் பார்க்கும் இடத்திலா குளியல் தொட்டியை வைத்துக்கொள்வார்கள்? இருந்தாலும் அரசர்களுக்கு Privacy என்பது மிகவும் குறைவு. எப்போதும் அவர்களை பாதுகாவலர்கள் சூழ்ந்து இருப்பார்கள்.) எனக்கு இதுல ஒரு சந்தேகம் வரும். காவலர்கள் வேலை பாதுகாப்பது. ஆனால் அரசரும் அமைச்சர்களோ இல்லை அரசியோ பேசிக்கொள்ளும்போது ஜோக் அடித்தார்கள் என்றால் காவலருக்கு சிரிப்பு வராதோ? தலை கழுத்துல தங்குமா?

அழகிய புல்வெளிகளாக தற்போது இருக்கும் இடத்தில் ஏகப்பட்ட கட்டிடங்கள் இருந்திருக்கவேண்டும்படைகள் தங்குவதற்காக பிரிடிஷார் அதனை அழித்திருக்கவேண்டும்.

முதலில் பாதையின் வலது புறமாகத் திரும்புகிறோம். நம்மை எதிர்கொண்டு அழைப்பது அக்பரின் மகன் சலீம் (இவர்தான் ஜஹாங்கீர் என்று பட்டப்பெயர் வைத்துக்கொண்டவர்) உபயோகித்த குளியல் தொட்டி.

குளியல் தொட்டிக்குள் படிகள் வைத்திருந்திருக்கிறார். அவருக்கு ஏன் நீச்சல் குளம் கட்டலாம் என்று தோன்றவில்லை?  (நீச்சல் குளம் கட்டி, அதற்கு தினமும் இமயமலைப்பகுதியிலிருந்து ஐஸ் கட்டிகளை வெட்டிக் கொண்டுவரச் செய்து குளிர் குளியல் அனுபவித்த ரஜபுதன ராஜாக்கள் உண்டு)

ஒற்றைக் கல்லால் ஆன குளியல் தொட்டி. இது 5 அடி உயரமும் 8 அடி குறுக்களவும் கொண்டது. இதன் வெளிப்புறத்தில் ஜஹாங்கீரின் குளியல் தொட்டி என்று பெர்ஷியன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. 1610ம் வருடத்தைச் சேர்ந்ததாம்.  58 வயதுதான் வாழ்ந்த ஜஹாங்கீர், தன் 48ம் வயதில் உபயோகித்ததாம் இதுஇதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. தன் மகன் சலீமை அக்பர் வெறுத்தார். இந்தப் பக்கமே வந்துவிடாதே என்று விரட்டிவிட்டார். அப்படிப்பட்ட சலீம்தான் அக்பருக்குப் பிறகு பட்டத்திற்கு வந்தார். அக்பர் 63 வயது வரை வாழ்ந்தார்.

முகலாயர்களில் அரசர்கள் ஒவ்வொருவரும், அவருடைய இடத்தைப் பிற்பாடு பிடித்துக்கொள்ளும் மகனை வெறுத்தார்கள். அதனால் அரசுரிமை இன்னொரு மகனுக்குப் போகும் அபத்தமும் நிகழ்ந்தது இதன் விதிவிலக்கு (எனக்குத் தெரிந்து) பாபர். அவர்தான், ஹுமாயுனிடம், எந்தக் காரணம் கொண்டும் உன் சகோதரர்களை வெறுத்துக் கொன்றுவிடாதே என்று சத்தியம் வாங்கிக்கொண்டவர். அதனால் ஹுமாயுன் பட்ட பாடும் மிக அதிகம். அக்பரை வெறுத்த சலீம், தான் ஜஹாங்கீராகப் பதவியேற்றதும், தன் பையன் குஸ்ரூவை வெறுத்தார், கண்களை நோண்டி எடுத்துவிட்டார். இரண்டாவது பையன் குர்ரம்தான் அரியணை ஏறினார். (ஷாஜஹான்). ஷாஜஹான், தன் மூத்த மகன் தாராவைத்தான் அவன் தனக்கு அடங்கியிருப்பான் என்று  கொண்டாடினார், மிகத் திறமையான ஔரங்கசீப்பை வெறுத்தார். எது எப்படியோ…  அரசாட்சி தனக்கு வரவேண்டும் என்பதற்காக மனசாட்சி இல்லாமல் நடந்துகொண்டவர்கள் முகலாய அரசர்கள் பெரும்பாலானவர்கள். அடுத்த வாரம் விவரமாகப் பார்க்கலாம்.

(தொடரும்) 

60 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. ஆக்ரா கோட்டை படங்களும் விவரங்களும் அருமையாக இருக்கிறது.
    பழைய கால படங்களும் நன்றாக இருக்கிறது.
    வரலாறு சிறப்பு பாடமாக எடுத்து படித்தேன். யாருக்கு பின் யார் ஆண்டார்கள் என்பதை எழுதியும், அவர்களின் ஆட்சி எங்கிருந்து எங்கு வரை பரவி இருந்தது என்பதை இந்திய வரைபடத்தில் வரைந்து ஆலபம் தயார் செய்து இருந்தோம். இன்னும் அது என்னிடம் இருக்கிறது.

    முகலாயப் பேரரசு யார் காலத்தில் உன்னத நிலை அடைந்தது, யார் காலத்தில் வீழ்ச்சியை அடைந்தது என்று படித்த நினைவுகள் நீங்கள் அளித்த வரலாறு படித்தவுடன் நினைவுக்கு வருகிறது.

    அனைத்து படங்களையும் ரசித்துப்பார்த்தேன். நாங்கள் போன போது எடுத்த படங்கள் ஆல்பத்தில் உள்ளது.

    ஒற்றைக் கல்லால் ஆன குளியல் தொட்டி. இப்போதும் நல்ல நிலையில் இருப்பது வேலி போட்டதால்தான்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்... எனக்கும் இந்தப் பகுதியில் நிறைய எழுத ஆசை. அப்புறம் உப்பு சப்பில்லாத வரலாறாக ஆகிவிடுமோ என்று நினைத்ததனால் ரொம்பவே எழுதவில்லை. ஆக்ரா கோட்டை அங்கு நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளால் மிகவும் புகழ்பெற்ற இடம் அது.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. கோட்டையின் வரலாற்றை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.  ஹோம்ஒர்க் செய்தீர்களோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள், மற்றும் படித்தவற்றை இன்னுமொரு தடவை பார்த்துக்கொண்டேன் ஸ்ரீராம். நன்றி

      நீக்கு
  5. அழகிய படங்கள்.  மனத்தைக் கவர்கிறது.  ஒரு படத்தில் குதிரை வண்டி, இன்னொரு படத்தில் மாட்டு வண்டி.  பொதுவாக அந்த திங்களின் மாற்றங்களை பார்க்கையில் காலம் எவ்வளவு மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்றும் தெரிகிறது.  இன்னமும் அவர்கள் மறைத்து வைத்திருந்த பொக்கிஷங்கள் அங்கே மறைவாக இருக்கலாம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் கோகுலம் பத்திரிகையில், கண்ணில் மையைத் தீட்டிக்கொண்டால் தாங்கள் விரும்பும் தேசத்துக்குச் சென்றுவிடலாம், அங்கு இருப்பவற்றைப் பற்றி அந்த வாரப் பகுதியில் எழுதுவார்கள். அதுபோல பூமிக்கடியில் புதைந்துகிடக்கும் செல்வத்தைக் காணும்படியாக ஏதேனும் மை கிடைத்தால் நல்லது.

      நீக்கு
    2. ஆக்ரா கோட்டைச் சுவற்றின் வெளிப்பகுதியில் பல கல்லறைகள் இருக்கின்றன. இவற்றை கடந்த 100 ஆண்டுகளுக்குள் செய்திருப்பார்கள் (தொல்லியல் துறை எடுத்துக்கொள்வதற்கு முன்பு கோட்டையைச் சுற்றி மரங்களடர்ந்த பகுதி இருந்திருக்கவேண்டும். தற்போதுதான் சாலை வரை வேலி அமைத்திருக்கிறார்கள்

      நீக்கு
  6. என்னடா...  ஜஹாங்கீர் இப்படி தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு வேப்பங்குச்சியால் பல் துலக்கியபடியே நடந்து வந்து இவ்வளவு தூரத்திலா குளிப்பார், சுற்றிலும் அப்போது மரங்கள் இருந்திருக்குமோ என்று தோன்றியது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசர் உடையில்லாமல் வந்திருந்தாலும் யாரேனும் அவர் பக்கம் திரும்பிப் பார்த்திருக்க முடிந்திருக்குமா என்ன?

      நீக்கு
    2. இந்த குளியல் தொட்டி அரண்மனையின் ஒரு பகுதியில் இருந்திருக்கும். ஆங்கிலேயர் காலத்தில் இந்தக் கோட்டைக்குள் எடுத்துவரப்பட்டு, ஒரு ஆங்கிலேயருக்குத் தோன்றியபடி நட்ட நடு இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

      நீக்கு
  7. காலயந்திரத்தில் சென்று அந்த இடங்களையும் அப்போதிருந்த மனிதர்களையும் பார்க்க வேண்டும் என்று தோன்றுவது இயல்பு.  அப்போதே நிலம் வாங்கி பட்டயம் செய்து விட்டு திரும்ப வேண்டும் என்று எப்படி தோன்றியது?  அந்தக் காலத்தில் இருந்த ஒரு மரம், புல்லாவது (புல் பூண்டு என பூண்டை நான் சேர்க்கவில்லை...) இப்போதும் எங்காவது அங்கு இருக்குமா?  மௌன சாட்சியாக அங்கு மாறி மாறி வரும் கால மனிதர்கர்களையும் அவர்கள் குணாதிசயங்களையும் பார்த்தபடி புன்னகைத்துக் கொண்டிருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்.. இதுபற்றி நிறைய எழுதணும் என்று தோன்றும். நான் பெங்களூர் வந்த புதிதில் (அதாவது திருமணமாகி, வருட விடுமுறைக்கு வரும்போது) ஜெ.பி. நகருக்கு மெஜெஸ்டிக்கிலிருந்து ஆட்டோவில் 40-45 ரூபாய்க்குச் சென்றிருக்கிறேன், ஜெ.பி.நகரை அடைவதற்கு முன்பு சுமார் 1 கிமீ வெறும் சாலைதான், கட்டிடங்கள் அடர்ந்திருந்ததில்லை. அப்போதே இடங்கள் வாங்கும் வசதி எனக்கு வந்திருந்தாலும் வாங்கும் எண்ணம் வந்ததில்லை. என் FIL சொல்லி, நான் சேமித்து வைத்திருந்த பணத்தில் மாத்திரம்தான் இடம் வாங்குவேன், வங்கிக்கடனோ இல்லை க்ரெடிட் கார்டோ வாழ்நாள் முழுவதும் வைத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லியதால் சிறிய இடமாக வாங்கினேன். ஒருவேளை நான் நினைத்திருந்தால், அடுத்த பத்து வருடங்களுக்குள், பத்து கிரௌண்டுகளாவது வாங்கியிருக்கலாம் (எல்லாம் நகர்ப்பகுதிக்குள்). இந்த எண்ணம் மனதில் இருப்பதால்தானோ என்னவோ நிலத்தை முன்னமே வாங்கியிருக்கலாம் என்று தோன்றும். அது சரி.. வாங்கி என்ன செய்திருக்கப்போகிறோம்? ஒன்றும் இல்லை

      நீக்கு
  8. கோட்டைக்குள் முன்பகுதியில் இருக்கும் நிறைய கட்டிடங்களை ஆங்கிலேயர்கள் அழித்திருப்பார்கள் என்கிற வரி மனதைப் பிசைகிறது.  என்னென்ன அழித்தானோ..  இதற்கெல்லாம்  ஆணவம் ச்சே..  ஆவணம் வைத்திருப்பானோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கிலேயப் படைகளுக்கு, தளபதிகளுக்கு கோட்டையில் ஆயுதங்கள் சேமிக்கணும், படைகளுக்கு இடம் வேண்டும் என்பதுதான் முன்னுரிமை அதனால் சிதைந்த வரலாற்றுச் சின்னங்களை அழித்திருப்பார்கள். அங்கிருக்கும் புதையல்கள், மற்றும் பணம், வரலாற்றுத் தொன்மை வாய்ந்த பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு சென்றிருப்பார்கள். சமீபத்தில், பிரிட்டனில், இங்கிருந்து கொண்டுசெல்லப்பட்ட (திருடப்பட்ட) திருமங்கை ஆழ்வார் செப்புச் சிலையை திருப்பித் தரும் process நடந்துகொண்டிருப்பதாகப் படித்தேன். அதற்காக கோகினூர் வைரம், மயிலாசனம் போன்ற பல விலையுயர்ந்த பொருட்களைத் திருப்பித் தந்துவிடுவார்களா என்ன?

      நீக்கு
  9. படங்களைப் பெரிது பண்ணி பார்க்கும் போது கோட்டையின் பிரமாண்டம் விளங்குகிறது. படங்களை சும்மா அடுக்கி வைக்காமல் தக்க விளக்கங்களுடன் வரலாற்றையும் சேர்த்து எழுதியிருக்கும் இந்த கட்டுரை சிறப்பாக உள்ளது. ஒரு சரித்திர பாடம் படித்த உணர்வு. வாழ்த்துக்கள்.

    நான் கவனித்த வரையில் இந்திய அரசர்கள் கட்டிய கொட்டைகள் தற்போதும் மனிதர்கள் வாழும் இடமாக உள்ளன. `ஆனால் முகலாயர் கட்டிய கொட்டைகளோ அரண்மனைகளோ தற்காலத்தில் புழக்கம் இல்லாமல் வெறும் காட்சிக் கட்டிடங்களாகவே உள்ளன.

    J​ayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொட்டைகளோ என்பதை கோட்டைகளோ என்று திருத்திக்கொள்ள வேண்டுகிறேன்.
      Jayakumar

      நீக்கு
    2. வாங்க ஜெயகுமார். கருத்துக்கு நன்றி.

      எல்லா கோட்டைகளிலும் மனித நடமாட்டம் கிடையாது. ஒரு சில கோட்டைகளில் (ஜெய்ப்பூர் போன்று) முற்றிலும் மனிதர்கள் வாழ்விடங்களாக இருக்கின்றன.

      நீக்கு
    3. முகலாயர் கட்டிய கோட்டைகளில் அரசர்கள், சேடிகள், பணிப்பெண்கள் மாத்திரமே வாழ்ந்திருக்கின்றனர். அமைச்சர்கள் போன்றவர்களுக்கு வசிப்பிடங்கள் இல்லை. அவர்கள் கோட்டைக்கு வெளியில் வாழ்ந்திருக்கின்றனர். அதனால் மனித நடமாட்டமே இல்லாதது போலத் தெரிகிறது

      நீக்கு
  10. என்னைப் போன்ற என்ஜினீயர்களுக்கு வருகின்ற ஒரு சந்தேகம் :
    அவ்ளாம் பெரிய கல் (குளியல் ) தொட்டிக்கு எப்படி நீர் நிரப்பியிருப்பார்கள்? (மின்சாரம், பம்ப் இல்லாத காலம்) - அரசர் குளித்து முடித்த பின்பு, அந்தத் தண்ணீரை எப்படி drain-out செய்திருப்பார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதாவது ஒரு பக்கம் வெளியேறும் வழி கீழே வைத்திருப்பார்கள். இல்லாட்டி பெரிய பெரிய விறகு கொண்டு நெருப்பு வைத்து சுற்றிலும் சூடு செய்வார்கள் தண்ணி ஆவியாயிடும்!

      நீக்கு
    2. மன்னர் வெந்நீர்க் குளியல் வேண்டும் என்று நினைத்தால் - ?

      நீக்கு
    3. கல் தொட்டி குளியல் தொட்டி அல்ல, குடிநீர் தொட்டி என்று தோன்றுகிறது. கோட்டை முற்றுகை மாதக்கணக்கில் நீளும்போது மாசு படாத வகையில் உபயோகித்திருக்கலாம். அதாவது தொட்டி மற்றுமொரு கிணறு போன்று. ஊற்று தான் இல்லை.
      Jayakumar

      நீக்கு
    4. //மன்னர் வெந்நீர்க் குளியல் வேண்டும் என்று நினைத்தால் - ?//

      ஹீட்டரை ஆன் செய்து விடுவார்கள்.

      நீக்கு
    5. கேஜிஜி சார்... தண்ணீர் வெளியேறும் இடம் அந்தத் தொட்டியில் இருக்கும். ஏறுவதற்கு படிகளும் உள்ளே இறங்குவதற்குப் படிகளும் உண்டு.

      யமுனையிலிருந்து ஆக்ரா கோட்டைக்கு உள்ளே நீர் ஏற்ற அவர்கள் ஒரு மெகானிஸம் வைத்திருந்தார்கள். நம் ஓவர் ஹெட் டேங்கர் மாதிரி. அதுமட்டுமல்ல, அறைகளை சூடாகவும் குளிராகவும் (காலநிலைகளுக்கு ஏற்றவாறு) வைக்க ஒரு மெகானிசம் உண்டு.

      நீக்கு
    6. //கல் தொட்டி குளியல் தொட்டி அல்ல// எதனால ஜெயகுமார் சாருக்கு இந்தச் சந்தேகம் வருது? அந்த குளியல் தொட்டியில் இருவரோ இல்லை மூவரோ சேர்ந்து குளிக்கும் அளவு அகலமானது.

      ஆக்ரா கோட்டையில் முற்றுகையின்போது, மாதக்கணக்கில் பாதுகாக்க ஒரு அம்சமும் இல்லை. இதுபற்றி வரும் வாரங்களில் வரும்.

      நீக்கு
    7. வெந்நீர் குளியல் - மன்னருக்கு இது தேவையென்றால், சூடான நீர், மூலிகைகள் கலந்து அரசரைக் குளிப்பாட்ட ஆட்கள் இருக்கும்போது அவருக்கு எதற்கு வெந்நீர் குளியல்தொட்டி?

      நீக்கு
  11. நெல்லை அந்த நல்ல உணவு மெனு சொல்லாம விட்டிட்டீங்களே!!!!!

    நீங்க என்னதான் கோயில் பத்தி எழுதினாலும் எனக்கு இந்த திங்கறதுதான் கண்ணுல படும் ஆர்வம் கூடும்!!!! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூடான சாம்பார், வடை, வெல்ல அல்லது ஜீனியில் பாயசம், ஒரு கறியமுது, ஒரு கூட்டு... என்று மெனு இருக்கும். ஒவ்வொரு முறையும் மெனு வித்தியாசப்படும். ஏனோ எழுத விட்டுப்போய்விட்டது.

      நீக்கு
  12. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  13. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க

    பதிலளிநீக்கு
  14. பழைய புகைப்படங்களைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றுவது, பெரும்பாலான பெரிய சாலைகள் எல்லாம் பழையகாலத்தில் இருந்த மாட்டுவண்டிச் சாலைகள்தாம் (அல்லது கௌரவமாக ராஜபாட்டைகள்தாம்). //

    இந்தச் சாலைகள் என்ன அழகா இருக்கு பாருங்க. ஆனா ஆள் நடமாட்டமே இல்லையே. இதே கோட்டைய இப்ப எடுத்தா மனுஷ தலைகள்தான் அதிகம் தெரியும் யாரும் இல்லாம எடுக்கணும்னா காலைல இல்லைனா மாலை கடைசி நேரத்துலதான் எடுக்கணும்.

    பாருங்க டைம் மெஷின் சொல்லி அப்ப கூட நிலம் வாங்கிப் போடணும்னுதான் ஹாஹாஹாஹாஹா.....உலாத்திட்டு வரலாம்னு தோணலை...ப்ராக்கெட்ல கொடுத்திருக்கற வரியை நான் அப்படியே டிட்டோ செய்யறேன். ரெண்டுக்கும் இடைலதான் மனுஷன் பற்றுப் பைத்தியம் பிடிச்சு அடிச்சிக்கிறான் என்னதான் தத்துவம் படிச்சாலும்!!! இதிலிருந்து நாம என்னிக்கு விலகி நிற்கிறோமோ அன்று நமக்கு Bliss!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்...(க்கா).. தத்துவம் ஒரு புறம்... ஆசை மறுபுறம். என்ன சொல்றீங்க? அதுதானே வாழ்க்கைத் தத்துவம்

      நீக்கு
  15. நெல்லை, நான் இந்தக் கோட்டைய ரசித்துப் பார்த்தேன் வியந்தும். ஆனா ஒரே ஒரு முறைதான். பல வருஷங்களுக்கு முன்ன. (அந்த கறுப்பு வெள்ளை காலத்துல இல்லை!!!ஹிஹிஹிஹிஹி)

    படங்கள் ரொம்ப நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரிவேணி சங்கமம் செல்லும்போது அலஹாபாத்தில் யமுனைக் கரையில் ஒரு கோட்டை பார்த்தேன். அதுபற்றி அந்த யாத்திரை வரும்போது எழுதுகிறேன்.

      ஆக்ரா கோட்டை மிக அழகுதான் கீதா ரங்கன்

      நீக்கு
  16. பள்ளியில் சரித்திர ஆசிரியர் ஸ்ரீ S.R.கோவிந்த ராஜூ அவர்களிடம் படித்த நாட்கள் நினைவுக்கு வந்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதைய ஆசிரியர்கள் போல வருமா? போன காலங்கள் போனதுதான்

      நீக்கு
  17. அந்தக் காலத்தில் குளிக்கின்ற வழக்கம் இருந்ததா!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க துரை செல்வராஜு சார்? ஒரு ராஜபுதன மன்னன், தினமும் இமயமலையிலிருந்து பனிக்கட்டிகளைக் கொண்டுவரச் சொல்லி தன் நீச்சல் குளத்தில் போட்டபிறகு வெயிலில் குளித்து அனுபவித்திருக்கிறார் (150 வருடங்களுக்கு முன்பு)

      நீக்கு
  18. இப்படியும் அரச தந்தைகள்! அதிகார நாற்காலி வெறி என்னவெல்லாம் செய்ய வைக்கிறது!

    பழைய படங்களில் மனித நடமாட்டமே இல்லாதது போல இருக்கு. இப்ப உள்ள படங்களிலும்தான் எல்லாம் நேரம் பார்த்து எடுத்திருப்பாங்க போல! படங்களும் வரலாறும் என்று பதிவு நல்லாருக்கு நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகாரம் என்பது போதை. ஏன் சமீபத்தைய காலத்தில்கூட, கட்சியின் தலைவர் பதவியை சாகும் வரை விட்டுக்கொடுக்காத தலைவர்களைப் பார்த்திருக்கிறோமே

      நீக்கு
  19. வணக்கம் தமிழரே...
    வரலாற்று தகவல்கள் சுவாரஸ்யமாக சொல்லி வருகிறார்கள் படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

    இப்ராஹிம் லோடி வசமிருந்த கோட்டை தற்போது நரேந்திர மோடி வசமாகி விட்டதோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி... நன்றி.. மோடி வசமிருக்கும் கோட்டை அடுத்தவருக்குச் செல்ல எத்தனை காலமாகிவிடும்?

      நீக்கு
  20. கோட்டையையும் அங்குள்ள பொருட்களையும் பற்றி படங்களுடன் விரிவாகத் தந்துள்ளீர்கள்.

    சரித்திரங்கள் கண்டு பலதும் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
  21. கோட்டையை மூடுவதற்காக இரும்புப் பாலம் இங்கும் மாத்தறை டச்சுக் கோட்டையில் இருக்கிறது. இரு வருடங்கள் முன் நாங்கள் சென்று பார்த்தபோது எங்களுக்கு திறந்து மூடிக் காட்டினார்கள் இப்பொழுதும் இயங்குவது ஆச்சரியம். இது சிறிய கோட்டை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மாதேவி அவர்கள். எவ்வளவு பாதுகாப்புடன் கோட்டைகளை அந்தக் காலத்தில் கட்டியிருக்கின்றனர் என்பது மிக்க ஆச்சர்யம்தான்

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    ஆக்ரா கோட்டையைப் பற்றிய செய்திகள் அருமை. நல்ல விபரமாக சொல்லியுள்ளீர்கள். படங்கள் அனைத்தும் அருமை. நானும் பள்ளியில் விருப்பப் பாடம் சரித்திரந்தான் எடுத்திருந்தேன். அப்போது நன்கு மனதில் பதிந்ததுதான். ஆனால், இப்போது நீங்கள் அழகாய் மன்னர்களின் வாழ்க்கை முறைகளை சொல்லச் சொல்ல கற்றவயெல்லாம் நினைவுக்கு வருகிறது. நீங்கள் கோட்டை அமைப்புகளை நேரடியாக கண்டு விபரமாக சொல்லுவதால் பதிவு சுவாரஸ்யமாக இருக்கிறது. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். மிக்க நன்றி. எனக்கும் சரித்திரத்தில் மிகுந்த ஆர்வம். கிருஷ்ணதேவராயர் கதையைச் சொல்லும்போது (ரா கி ரங்கராஜன் அவர்கள்), இளவரசனை அரண்மனையின் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு முதுகில் சுமந்து செல்ல மகளிர் உண்டு என்று படித்தேன் (அது சரி... இளவரசனைச் சுமந்து செல்ல ஆண்களையா உபயோகிப்பார்கள்?) இந்த மாதிரிச் செய்திகள் நம் கற்பனையை விரிவடையச் செய்யும் (இளவரசர்களின் தினப்படி வேலைகள், நடைமுறைகள் போன்றவைகளை அறிவதில்). நன்றி

      நீக்கு
  23. இன்றைக்கு வேறு வேலைகள் வந்துவிட்டதால், வீட்டில் இல்லை. அதனால் உடனுக்குடன் பதிலெழுதவில்லை. இப்போதுதான் நேரம் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  24. ஆக்ரா கோட்டை குறித்த தகவல்கள் நன்று. மீண்டும் படித்து, பார்த்த இடங்களை, கேட்ட கதைகளை நினைத்துக் கொண்டேன்.

    தொடரட்டும் பயணமும் பதிவுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். உங்க வாரணாசி பயணமும் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!