திங்கள், 17 ஜூன், 2024

"திங்க"க்கிழமை   :  தஞ்சாவூர்  சாம்பார்ப் பொடி    - துரை செல்வராஜூ ரெஸிப்பி

 தஞ்சாவூர் சாம்பார் பொடி..

*** *** ***

சாம்பார் வைக்கும் போது அதற்கான கூட்டுப் பொருட்களை அம்மியில் அரைத்து செய்த கலாச்சாரத்தினை மசாலாத் தூள் நாகரிகம் வந்து விரட்டியடித்து ஒழித்தே விட்டது.. 

உண்மையில் இன்றைய சாம்பார் ஏதோ ஒரு நிலையில் மராட்டிய மன்னர் சம்பாஜி காலத்தில் தஞ்சை அரண்மனை சமையல் கூடத்தில் தோன்றியது.. 

இன்றைக்கு - வெந்தயத்தை வறுத்துப் போட வேண்டும் வெங்காயத்தை வதக்கிப் போட வேண்டும் என்றும்  என்றும் உளுந்தை உடைத்துப் போட வேண்டும் என்றும் கடுகை பொடித்துப் (!?) போட வேண்டும் என்றும் பல்வேறு  செய்முறைகள் சொல்லப்படுகின்றன..

மிளகாய்த் தூள், மல்லித்தூள் (சென்னையில் - தனியா தூள்) சீரகத் தூள், மிளகுத் தூள், இந்தத் தூள், அந்தத் தூள் - என்று தனித்தனியாக வந்தன..

அப்படி வந்தவற்றை  சரியான அளவில் சேர்த்து குழம்பு வைப்பதற்கும் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை..

மசாலாப் பொடிகளைத் தனித்தனியாக சேர்க்கின்ற  வழக்கமும் அதுவாகவே ஒழிந்து போனது.. 

இப்போது கூட்டு மசாலாப் பொடிகளின் காலம்..

இந்தப் பக்கத்தில் வீட்டு விசேஷங்களிலும் சாப்பாட்டுக் கடைகளிலும் சாம்பார் என்பது மிகவும் எரிச்சலை உண்டாக்குகின்றது... 

அந்த அளவுக்கு மிளகாயின் காரம்..


உங்களுக்காகவே என்ற  மசாலாத் தனத்துடன் விளம்பரங்களில் காட்டப்படுகின்ற தளுக்கு குலுக்கு மசாலாப் பொடிகள் இருக்கவே இருக்கின்றன..

ஆனால் இத்தகைய மசாலா பொடிகளின் மீது நம்பிக்கை இழந்தவர்களுக்காக - இந்தப் பதிவு..

ஆற்றில் குளித்த நீரில் மீண்டும் குளிக்க முடியாது என்கிற மாதிரி சாம்பார் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பக்குவம்..

தாயைப் போல சமைக்க தாய்க்கு மட்டுமே ஆகும்.. அக்கா தங்கைக்கு அவரவர் கைப்பக்குவம்..

மூன்று முடிச்சுக்குப் பின் - " ஆம்..தேவி..  ஆமாம் தேவி!.. " -  சரணாகதியே உத்தமம்..

அது ஒரு பக்கம் இதுக்கட்டும்..  சரியான அளவில் மசாலா பொடிகளைச் சேர்க்கா விட்டால் சாம்பார் சுவையாக இருக்காது என்பது பிரச்னை.. என்றால் - மசாலாப் பொடிகளின் தரத்தின் மீதான நம்பிக்கையிலும் பிரச்னை..

இதற்கு ஒரு தீர்வும்  ஒரே தீர்வும் - நாமே நமக்கான சாம்பார் பொடியை தயார் செய்து கொள்வது தான்.. 

அஞ்சறைப் பெட்டி சரக்குகளை அளவாக எடுத்து அம்மியில் அரைத்தே குழம்பு வைத்த பக்குவம் மெல்ல மெல்ல தூள் வழி சமையலுக்கு மாறி விட்டது..

இந்த குறிப்பு எங்கள் வீட்டின் செய்முறை.. வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல வேறு வேறு செய்முறைகளும் இருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும்..


சாம்பார் பொடி செய்வதற்குத்
தேவையானவை : 
மிளகாய் வற்றல் - 150 கிராம்
கொத்தமல்லி - 400 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
கடலைப் பருப்பு - 25 கிராம்

விரலி மஞ்சள் - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
மிளகு - 25 கிராம்..
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி

மிளகாயை மட்டும் நல்ல வெயிலில் நன்கு காய வேண்டும். 

கறிவேப்பிலையை நல்ல வெயிலின் நிழலில் உலர்த்திக் கொள்ளவும்..

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, கொத்தமல்லி
ஆகியவற்றை தனித் தனியாக அடுப்புத் தணலில் வைக்கப்பட்ட மண் சட்டியில் இட்டு  வறுத்துக் கொள்வது அந்நாளைய பழக்கம்..

இன்றைய நிலையில் விறகு அடுப்புகள் ஏது!.. 

ஆதலால்,
மிதமான தீயில் மிளகு, சீரகம் இரண்டை மட்டும்  சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.  

மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்..

எந்தப் பொருளும் கருகி விடக் கூடாது..

வறுத்தெடுத்த பொருள்கள்
ஆறியதும்  மிளகாய் வற்றல், மஞ்சளுடன்  சேர்த்து அறவை இயந்திரத்தில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்..

விருப்பம் எனில் மிளகாயைக் குறைத்துக் கொண்டு மிளகை  கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்

ஐந்து பேருக்கு குழம்பு கூட்டும் போது குறைந்த பட்சமாக இருவகை காய்களுடன் தேங்காய் அரைத்த விழுதுடன் இந்தப் பொடியை இரண்டு தேக்கரண்டி (15 கிராம்) சேர்த்துக் கொள்ளவும்.. புளி அவசியம் இல்லை..

பெருங்காயம்/ தூள் - சாம்பார் வைக்கின்ற போது சேர்த்துக் கொள்ளவும்...

இந்தப் பொடியை புளிக் குழம்பு மற்றும் கூட்டு வகைகளுக்கும் உபயோகிக்கலாம்..  காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்வது நல்லது.. 

தஞ்சாவூர் சாம்பாரின் மணம் உங்கள் வீட்டு சாம்பாரிலும் மணக்க வேண்டும் என்றால் அதற்குத் தரமான துவரம் பருப்பும்  காய்களும் எல்லாவற்றுக்கும் மேலாக காவேரித் தண்ணீரும் அவசியம்..

இதில் இலக்கணம் இலக்கியம் ஏதும் கிடையாது.. தெரியாது!.. எனினும்
இக்குறிப்பினை இயன்ற வரை எல்லாரும் பின்பற்றி பயன்பெற வேண்டும்.. 

(இருப்பினும் கட்டாயம் என்று எதுவும் இல்லை!..)

ஃஃஃ

42 கருத்துகள்:

  1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று..

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று சமையற் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. செய்முறை ஒவ்வொரு வீட்டிற்கும் வித்தியாசப்படும் என்பது உண்மைதான்.

    பெண்ணுக்கு அம்மாவின் சாம்பார்பொடியில் வைத்த குழம்பும், மாப்பிள்ளைக்கு அவருடைய அம்மா பண்ணின சாம்பார்பொடியில் வைக்கும் குழம்பும் பிடிப்பதைப்போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// பெண்ணுக்கு அம்மாவின் சாம்பார்பொடியில் வைத்த குழம்பும், மாப்பிள்ளைக்கு அவருடைய அம்மா பண்ணின சாம்பார்பொடியில் வைக்கும் குழம்பும் பிடிப்பதைப்போல.///

      இதுதான் நிதர்சனம்...

      மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
    2. பெண்ணுக்கு அம்மாவின் சாம்பார்பொடியில் வைத்த குழம்பும்//

      ம்ஹூக்கும்!! நெல்லை நாங்கலாம் அப்படி இல்லையாக்கும்!!!!! எங்க மாமியார் செய்வதை ரசித்துச் சாப்பிட்டு எப்படிச் செய்வாங்கன்னு குறித்துக் கொண்டு செய்வதும் உண்டு!!!!!!!!

      பொதுவாக எனக்கு என் அம்மா பாட்டி செய்வதுதான் பிடிக்கும்னு இல்லை உங்க ஹஸ்பன்ட் சமைத்தாலும், ஸ்ரீராமின் பாஸ் சமைத்த்தாலும் வித்தியாசமாக இருந்தால் கேட்டுத் தெரிந்து கொண்டுவிடுவேன். என் மகனும் அப்படியே. கணவரும் அப்படியே!!!

      கீதா

      நீக்கு
    3. கீதா ரங்கன்(க்கா)... உங்க சமையலுக்கு கஸ்டமர் யாரு? முதலில் ஹஸ்பன்ட. அப்புறம் எப்படி நீங்கள் மாமியார் செய்முறையைக் குறித்துக்கொண்டு ஃபாலோ செய்யாமல் இருப்பீர்கள்? ஹிஹிஹி. இதுவே உங்க ஹஸ்பன்ட் எழுதியிருந்தார்னா அதுல ஒரு நியாயம் இருந்திருக்கும்.

      நீக்கு
  6. சாம்பார் மணக்க காவிரித் தண்ணீர் அவசியம் என்றால் எங்க ஊருக்கு வந்துதான் நீங்க சாம்பார் வைக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைத்து விடுவோம்...
      எல்லாம் அவன் செயல்...

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா துரை அண்ணா நெல்லைய கேட்க வேண்டாமோ? சும்மா விடுறீங்களே!!! இங்க வீட்டுக்கு வர தண்ணி காவிரி தண்ணியான்னு கேளுங்க!

      இல்லைனா காவிரி பிறக்கும் இடத்துக்கு அருகில், மலைகளில்தான் அடுப்பு மூட்டி சமைக்கணும். அதுக்குக் கீழ வரப்ப பல இடங்கள்ல காவிரிய அழுக்கு பண்ணித்தானே விடறாங்க மக்கள்! காவிரி என்றில்லை எல்லா நதிகளையும்தான்.

      கீதா

      நீக்கு
    3. என்னுடைய வீடுகளுக்கு காவேரி தண்ணீர்தான். ஒரு வீட்டில் அதோடு டேங்க் தண்ணீரைக் கலந்து சுத்தப்படுத்தி அனுப்பறாங்க.

      நீக்கு
  7. கடை சாம்பார் பொடிகள் நன்றாக இருப்பதில்லை. அதிலும் மக்களை ஏமாற்ற பிராமின் சாம்பார்பொடி, ..... என்றெல்லாம் கதைவிட்டு வியாபாரம் செய்கிறார்கள். நான் முடிந்தவரை சக்தி மசாலா இல்லைனா வட இந்திய பிராண்டுகளை உபயோகிப்பேன் (மிளகாய் பொடி, மஞ்சள் பொடி.... போன்றவைக்கு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, நீங்க சொல்லியிருக்கும் ப்ரான்ட் வேண்டாம்.

      கீதா

      நீக்கு
    2. அக்கா அவர்களுக்கு
      நல்வரவு...

      இந்தக் கொள்கை தான் எங்கள் வீட்டிலும்..

      மகிழ்ச்சி..
      நன்றி அக்கா...

      நீக்கு
    3. இதை இன்று எழுதணும் என்று நினைத்து மறந்துவிட்டேன். நான் ரெகுலராக சாம்பார் பொடிக்குத் தேவையானவற்றை வாங்கி அருகில் மாவு மில்லில் சோம்பு போடலையா என்று கேட்டுக்கொண்டு நன்கு அரைத்துவிடுவேன். சென்ற முறை (சில வாரங்களுக்கு முன்) ரெகுலர் அரவை மில் மூடியிருந்ததால் சிறிது தள்ளியிருந்த அரவை மில்லுக்குச் சென்று எல்லாவற்றையும் கொடுத்து அரைத்துத்தா என்று சொன்னதற்கு, துவரம் பருப்பைத் தவிர்த்து மற்றவற்றைப் போட்டு நன்கு இரண்டு முறை அரைத்துவிட்டு, கடைசியில் துவரம்பருப்பைப் போட்டு ஒரு முறை அரைத்துக்கொடுத்தான். அதில் பருப்பு 1/4, 1/2 என்று நிறைய இருந்தது. அவனிடம் எல்லாம் பொடியாக அரை என்று சொன்னதற்கு, நீங்க சாம்பார் பொடி அரைப்பது முதல் தடவையா? துவரம்பருப்பை முழுதாக பொடி பண்ணக்கூடாது, அடுத்த முறை மனைவியிடம் கொடுத்தனுப்புங்க என்று சொன்னான். அப்புறம் அவனிடம், மனைவிக்கு எல்லாமே பொடியாகணும் என்று சொல்லி, இரண்டாவது தடவை அரைக்கச் சொல்லி நைஸா அரைத்து வாங்கினேன். அப்புறம்தான் தெரிந்தது கர்னாடகாவில் சாம்பார் பவுடரில் துவரம் பருப்பை ரொம்ப நைஸாக அரைக்காமல் அரையும் குறையுமாகப் பொடித்துக் கொடுத்துவிடுவான் என்று.

      நீக்கு
    4. கீசா மேடம் எழுதறதைப் பார்த்ததும், எனக்கும் கொஞ்சம் வயதானால் தமிழ் மறந்துவிடுமோ என்று தோன்றுகிறது. ஹி ஹி

      நீக்கு
    5. காலைல நெல்லைக்குப் போட்ட கமென்ட் போஅகவே இல்லை போல...

      நெல்லை நீங்க சொல்லியிருக்கும் ப்ராண்ட் பொடி வேண்டாமே...

      கீதா

      நீக்கு
  8. /// கடை சாம்பார் பொடிகள் நன்றாக இருப்பதில்லை. அதிலும் மக்களை ஏமாற்ற பிராமின் சாம்பார் பொடி, ..... என்றெல்லாம் கதை விட்டு வியாபாரம் செய்கிறார்கள்.///

    உண்மை தான்..

    சாதிக்கொரு சாம்பார்ப் பொடி விரைவில் வரக்கூடும்!..

    நெல்லை அவர்களுக்கு நன்றி..

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிராமின் பிரான்ட் ஓனர் முஸ்லீம் கம்பெனி. ஹா ஹா ஹா

      நீக்கு
    2. /// பிராமின் பிரான்ட் ஓனர் முஸ்லீம் கம்பெனி.
      ஹா ஹா ஹா.. ///

      நமக்கு நாமே தயாரித்துக் கொண்டால் எல்லா பிரச்னைகளில் இருந்தும் தப்பிக்கலாம்...

      மனசுக்கும் நிம்மதி!...

      நீக்கு
  9. துரை அண்ணா குறிப்பு நன்று.

    நம் வீடுகளில் சாம்பார் பொடிக்கு ஜீரகம் சேர்ப்பதில்லை. வெந்தயம் சற்றுக் கூடுதலாக இருக்கும்,

    நான் இப்பவும் மண் சட்டி பயன்படுத்துகிறேன் ஆனால் காஸ் அடுப்பில்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் பழக்கத்தில் வெந்தயம் காரக் குழம்புகளுக்குத் தான்...

      சாம்பாரில் சேர்ப்பது இல்லை..

      சாம்பாரில் வெந்தயம் சேர்ப்பவர்களும் இருக்கின்றனர்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி சகோ

      நீக்கு
    2. Yes. No jeerakam for sambar. Venthayam undu, thxlippilum.

      நீக்கு
    3. நான் எங்கள் பழக்கத்தை சொன்னேன் அக்கா...

      நீக்கு
  10. உங்கள் குறிப்புகளையும் குறித்துக் கொண்டிருக்கிறேன்.

    நம் வீடுகளில் ரசப்பொடி, சாம்பார் பொடி என்று தனியாகச் செய்வதால்ர் ரசப்பொடியில் ஜீரகம் சேர்ப்பதுண்டே அதற்கு ஜீர்கம் வாசனை வேண்டுமே ஆனால் சாம்பாரில் ஜீரகம் சேர்த்தால் அந்த வாசனை வந்து வித்தியாசம் அவ்வளவா தெரியாதுன்னு சேர்க்கறதில்லை.

    ஆனா கர்நாடகா ரசப் பொடியே ஜீரகம் வெந்தயக் கலவை உண்டு.
    குறிப்பா உடுப்பி, மங்களூர் பொடி. அது ஒரு தனி சுவை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமையற்கலை என்பது மிகப் பெரிய கடல்..

      அதில் கரை காண்பது அரிது...

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ.

      நீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. சாம்பார் பொடி நல்ல செய்முறை. குறித்துக் கொள்கிறேன்.
    எங்கள் நாட்டில் குழம்புக்கு மல்லி,சீரகம்,சோம்பு,வெந்தயம்கறிவேற்பிலை, மிளகாய் மிளகுவறுத்து அரைத்ததூள், உபயோகிப்போம்.

    மசாலாதூள் ,மல்லித்தூள் .,சீரகத்தூள் பொடிகள்,அரைத்து வைத்திருப்போம். நான் பருப்பு பொடியும் வைத்திருப்பேன்.

    ரசம் , உடனே அரைத்து வைப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. /// மசாலா தூள் ,மல்லித் தூள் .,சீரகத் தூள் பொடிகள் ,அரைத்து வைத்திருப்போம். நான் பருப்பு பொடியும் வைத்திருப்பேன்.///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி.

      நீக்கு
  13. சாம்பார் பொடி விளக்கம் அருமை ஜி

    பதிலளிநீக்கு
  14. சாம்பார் பொடி செய்முறை குறிப்பு, படங்கள் அருமை.
    சாம்பார் பொடி வறுத்து அரைத்து செய்வேன். முன்பு மெஷினில் கொடுத்து அரைப்பேன். இப்போது கொஞ்சம் மிக்ஸியில் திரித்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இப்போது கொஞ்சம் மிக்ஸியில் திரித்து கொள்கிறேன்///

      வீட்டில் செய்து கொள்வதே நல்லது...

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவாக தங்களது சாம்பார் பொடியின் விளக்கங்கள் அருமை. பொடிக்கு தேவையானவற்றை குறித்துக் கொண்டேன். முன்பு நானும் ஒரு மாதத்திற்கொரு முறை வீட்டிலேயே சாம்பார் பொடி வறுத்து அரைத்துக் கொண்டேன். இப்போது தேவைப்படும் போது அவ்வப்போது வறுத்து அரைக்கிறேன். அது போல சீரகம் ரசப்பொடிக்கு மட்டுமே சேர்க்கிறேன். பருப்பு பொடி, இட்லி மிளகாய் பொடிகள் காலியானவுடன் உடனே அரைப்பேன். வெளியில் எதையுமே வாங்குவதில்லை. தங்கள் செய முறை அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இப்போது தேவைப்படும் போது அவ்வப்போது வறுத்து அரைக்கிறேன்... ///

      இதுவே என்றும் நல்லது..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  16. இன்றைய பதிவுக்கு வருகை தந்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி..

    மகிழ்ச்சி..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  17. சாம்பார் பொடி - எங்கள் வீட்டிலும் இதனை வெளியில் வாங்குவதில்லை - வீட்டிலேயே எல்லாவற்றையும் கலந்து, காய வைத்து கடையில் கொண்டு போய் அரைத்து வருவோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!