செவ்வாய், 11 ஜூன், 2024

சிறுகதை : சட்னி சாம்பார் - துரை செல்வராஜூ

 சட்னி சாம்பார்

துரை செல்வராஜூ 

*** *** *** *** *** 
"அண்ணே.. இன்னொரு பாக்கெட் சாம்பார்  கொடுங்கண்ணே.."

"என்னது இன்னொரு பாக்கெட் டா?.. வாங்குறது ரெண்டு செட் இட்லி.. ரெண்டு பார்சலுக்கு ரெண்டு பாக்கெட் எக்ஸ்ட்ராவே கொடுத்திருக்கேன்.. நீ இன்னொன்னும் கேக்கறியா... விளங்கிடும்... அதெல்லாம் தரமுடியாது.. " - மணி கடுப்படித்தான்..

மனசு இரங்காதா என்ற யோசனையுடன் அந்தச் சிறுமி அங்கேயே நின்று கொண்டிருந்தாள்...

" அந்தப் பிள்ளைக்கிட்ட ரெண்டு செட் பார்சல் இட்லிக்கு காசு வாங்கிக்கிடுங்க.. ஐயா... " என்ற சத்தத்துடன் அந்தப் பக்கமாகக் கையைக் காட்டினான்..

வேறு வழியின்றி நகர்ந்த சிறுமி அங்கே காசு வாங்கிக் கொண்டிருந்த பெரியவரிடம் தயங்கித் தயங்கிக் கேட்டாள்..

" தம்பி.. மணி... இந்தப் பிள்ள கேட்கறதைக் கொடுத்தா என்னடா?.. "

" கொடுத்திருக்கேன்.. கொடுத்திருக்கேன்..அந்தப் பிள்ள மறுபடியும் எக்ஸ்ட்ரா கேக்குது... "

" போனாப் போகுது கொடுத்து விடுடா.. " 

- என்றபடி எழுந்து வந்த பெரியவர் பார்சல் மடிக்கின்ற மேஜையில் இருந்து குருமா பாக்கெட் இரண்டை எடுத்துக் கொடுத்தார் அந்தச் சிறுமியிடம்..

மகிழ்ச்சியுடன் துள்ளிக் கொண்டு ஓடினாள் அவள்..

" அந்தப் பிள்ளை யாருன்னு தெரியுமா?.. " 

" தெரியும் டா  தெரியும்.. அதோட வறுமை பசி ன்னாலும் தெரியும்.. " மெலிதாக புன்னகைத்தபடி நகர்ந்தார்..

அவர் குருசாமி... 

ஐயப்ப குருசாமி எல்லாம் இல்லை.. அவர் பெயர் குருசாமி... 

குருசாமி ஹோட்டல் என்று நாற்பது வருசமாக இங்கே உணவகம்.. 

மேற்கேயிருந்து ஓடி வருகின்ற ஆறு.. வடக்கு தெற்காக நெடுஞ்சாலை..
ஆற்றுக்கு அந்தப் பக்கம் கோயில்களும் நகரமும்...
இந்தப் பக்கம் சின்னதா கிராமம்.. 

ரோட்ல ரெண்டு பக்கமும் குடை மாதிரி இருந்த புளிய மரங்கள் எல்லாவற்றையும் பிடுங்கிப் போட்டு பல வருசம் ஆயிற்று.. 
இப்போ பார்க்கிறதுக்கு பாலைவனச் சோலை மாதிரி அழகா இருக்கு..

இவரது கடைக்கு கொஞ்சம் தள்ளின மாதிரி வர்ற போற  பேருந்துகள் நிற்கிற இடம்.. அதனால ராத்திரி பத்து மணி வரைக்கும் ஜே ஜே ன்னு இருக்கும்.. 

குருசாமியோட அப்பா அந்த காலத்துல இங்கே வந்து - இந்த இடத்துல வீடும்  கடையும் கட்டி பொழப்பை ஓட்டினார்.. இப்போ இவர் - குருசாமி  ரெண்டு பொண்ணுங்களையும்  கரையேத்திட்டார்... மகன் கல்லூரிப் படிப்பில்.. 

படிப்பு முடிந்ததும் கடையில் உட்காருவானோ வேறெதுவும் செய்வானோ.. இப்போதைக்கு தெரியாது.. கவலையும் இல்லை.. 

ஆனாலும் உள்ளூர் போக்கிரிகளால் ரெண்டு மாசமா இடைஞ்சல்.. 

ராஜா காலத்துப் பாலத்தை இடிச்சுத் தள்ளிட்டு புதுசா பாலம் கட்டப் போறதா பேச்சு கிளம்புனப்போ இவரது கடைப் பக்கம் கையைக் காட்டி விட்டார்கள்..  யார் செய்த புண்ணியமோ இவரது இடமும் வீடும் கடையும் தப்பித்தன... 

ஐந்து மணியில் இருந்து இட்லி தோசை இடியாப்பம்... ஒன்பது மணிக்கு மேல் உளுந்து வடை பருப்பு வடை பத்தரைக்கு மேல் சாப்பாடு.. வெள்ளிக்கிழமைகளில் பாயாசம்... அமாவாசை கார்த்திகையில் கேசரி.. இதற்காக விலையில் மாற்றம் செய்வதில்லை..

மூன்றரை மணிக்கு மேல் பணியாரம், பகோடா, ஆறு மணியில் இருந்து மறுபடியும் சிற்றுண்டிகள்.. டீ, காஃபி தனி.. அவரது கடையில் மைதா பயன்படுத்துவது  இல்லை..

உணவகம் ஆரம்பித்ததில் இருந்தே ஒரு பழக்கம்.. கார்த்திகை மாசம் பொறக்கறதுக்கு நாலு நாளைக்கு முன்னாலயே கடைக்கு வெள்ளை அடிச்சு தட்டு முட்டு சாமான்கள மாத்திடுவாரு.. 

அதுக்கு மேல ஐயப்பன் பார்த்துப்பான்..  ந்னு இருந்துடுவார்...
மலைக்குப் போகின்ற சாமிகளும் மற்றவர்களும் நிம்மதியா வந்து சாப்பிடுவாங்க.. 

இத்தனைக்கும் அவரோட கடை கால காலமா சைவ உணவகம் ... இருந்தாலும் சுத்தம் சுகாதாரத்துல குறியா இருப்பார்..

இதுக்காக கறுப்பு வேட்டி கட்டிக்கிறதும் இல்லை.. சந்தனம் பூசிக்கறதும் இல்லை..  எப்போதும் போல விடியக் காலையில குளியல்..  விபூதியும் குங்குமம் தான்..

" சாமி மாலை போட்டுக்கலையா.. மலைக்கு எப்போ ?.. "

யாராவது கேட்டால் -

" ஆயுளக் கொடுக்கணும்.. ஆரோக்கியத்தைக் கொடுக்கணும்.. நோய் நொடியில்லாம நல்லா இருக்கறதுக்கு சாமி தான்  பிச்சை போடணும்... அதுக்கு மேல வேற என்ன வேணும்.. எல்லாம் அவன் செயல்.. செய்யும் தொழிலே தெய்வம்.. தெய்வமே துணை.. " அப்படி ன்னு சொல்லிடுவார்..

இப்படி ஒதுங்கி இருந்தாலும் தொழிலில் போட்டி பொறாமைகள் இல்லாமல் இல்லை..

புதுசா பாலம் கட்னதும் பாலத்துக்குப்  பக்கத்திலயே கவுச்சிக் கடை போட்டானுங்க.. கவுச்சிக் கடைக்குப் பக்கத்திலேயே பிரியாணிக் கடை தெந்தானுங்க..

ஏதோ மாசத்துல ஒருநாள். ரெண்டு நாள் ன்னு இருந்த ஜனங்க - தினப்படி கவுச்சிக்கு மாறிட்டாங்க..

தினப்படி கவுச்சி திங்கிற அளவுக்கு ஜனங்க கையில பணப் புழக்கமும் ஜாஸ்தி ஆகிட்டது.. 

ஒரு சமயம் கத்தரிக்கா கிலோ நாப்பது ன்னு விற்றால் சத்தம் போடுற ஜனங்க - மறு நேரம் கத்தரிக்கா கிலோ இருவதுக்கு விக்கிறதைப் பற்றி யோசிக்கறது இல்லை.. கத்தரிக்கா விலை ஏறுனா சத்தம் போடறவங்க முட்டை விலை ஏறுறப்ப மௌன விரதம் ஆகிடுவாங்க.. 

கவுச்சிக் கடைக் கழிவை எல்லாம் ஆத்துக்குள்ள கொட்டினாலும் ஏன்டா.. ன்னு கேக்க ஆளில்லாமப் போய்ட்டாங்க... 

சாயங்காலத்துல புரோட்டா ன்னு இருந்த காலம் மாறி மனுசன் முழிச்சு இருக்குற நேரம் கடை தெறந்து இருக்குற நேரம் எல்லாம் புரோட்டா ன்னு ஆகிட்டது.. 

இதுக்கு இடையில - இந்தப் பிரியாணி அந்தப் பிரியாணி ன்னு எந்நேரமும் கூச்சல் வேற.. 

இப்படியாகப்பட்ட கடையில புரோட்டா அடிக்கிறவனா இருந்தவன் தான் காலையில  எக்ஸ்ட்ரா சாம்பார் பொட்டலம் கேட்டு நின்னாளே ஒரு சின்னப் பொண்ணு.. அந்தப் பொண்ணோட அப்பன்.. சுருட்டை முடியோட இருப்பான்.. அவன் பேரு.. அவன் பேரு.. பேரு சட்டு ன்னு நினைவுக்கு வரலை.. விட்டுடுவோம்..

அவங்கிட்ட ஒரு பழக்கம்... புரோட்டா அடிச்சிப் போடறப்போ - அந்த வறுவல் இருக்கு..  இந்த பொரியல் இருக்கு.. - ன்னு கத்திக்கிட்டே போடுவான்..

புரோட்டாவோட மசாலா தூக்கலா கார சாரமா குழம்பு ஊத்துறதால ஏவாரமும் படு ஜோர் .. 

அந்தக் கடைக்காரனுங்க " ஒரு  பாக்கெட்  பிரியாணிக்கு இன்னொரு பாக்கெட் பிரியாணி பிரீய்ய்ய்.. அத்தோட அவிச்ச முட்டை ரெண்டு பிரீய்ய்ய்.. ன்னு  தெருத்தெருவா ஆட்டோ ல போய் கத்துனதும் ஜனங்களுக்குத் தலையும் புரியலை.. காலும் புரியலை..

ஒரு பாக்கெட் பிரியாணி நூத்தி இருபது ரூபாய்.. அதுக்கு இன்னொரு நூத்தி இருபது ரூபாய் பிரீய்ய்ய்.. ன்னா அதுல என்னடா உள்குத்து இருக்கு ன்னு யோசிக்க யாருக்கும் நேரமில்லாமப் போனது தான் ஆச்சர்யம்..

நாளாவட்டத்துல குருசாமி கடையில நாலு ஈடு இட்லி விக்கிறதுக்கே " ததிங் கிணத்தோம் " என்று ஆகி விட்டது..

அந்தக் கறி வறுவல்.. இந்தக் கறி வறுவல்.. - என்று ஆரம்பித்த களேபரம்  - சுட்ட கறி.. சுடாத கறி வரைக்கும் வந்து விட்டது..

என்னமோ ஒரு ரொட்டிக்குள்ள எதையோ வச்சி சுருட்டித் திங்கறதாமே... அதுக்குள்ள வந்து நின்றது ஆட்டமும் கொண்டாட்டமும்..

அந்த ரொட்டிய வாங்கித் தின்னவங்கள்ள யாரோ ரெண்டு பேருக்கு வாந்தி பேதி ஆனதும்  ஆஸ்பத்திரி ல போய்ப் படுத்ததும் பெரிய பிரச்னை ஆகிட்டது..

அவுங்க இவுங்க ன்னு பெரிய ஆபீசர் எல்லாம் வந்து ராவோட ராவா கடைய இழுத்து மூடிட்டுப் போய்ட்டாங்க.. 

இந்த குருசாமி தான் போட்டுக் கொடுத்தார் ன்னு மறுநாள் ஒரு கூட்டம் வந்து  ஓட்டல் வாசல்ல நின்னு வாள் வாள் ன்னு கத்திட்டுப் போனது..

ஆனா, அந்த புரோட்டாக் கடைக்குள்ள கெட்டுப் போன  இறச்சி வகையறாக்கள் இருந்தது ந்னு டீவி பேப்பர் எல்லாமும் சேதி சொன்னதும் தான் வால சுருட்டிக்கிட்டு அடங்குனானுங்க..

அதுக்கு அப்புறம் அவனுங்களே வேற பேர்ல கடை ஆரம்பிச்சதும் உள்ளூர் ஜனங்களே போலீஸ் ல புடிச்சுக் கொடுத்துட்டாங்க...

இப்போ எதிர் ல புரோட்டாக் கடையும் இல்லை.. காள் காள்..  ன்னு சத்தமும் இல்லை..

" ஒரு செட் இட்லி ரெண்டு வடை காபி.. "

" முப்பது பத்து பதினைஞ்சு...  அம்பத்தைஞ்சு ரூபா சார்... "

வாடிக்கையாளரிடம் குருசாமி பணம் வாங்கிக் கொண்டிருந்தபோது
திடீரென கடை வாசலில் சத்தம்... 

" கொடுத்தா கொடுக்கற காசுக்கு சட்னி சாம்பார் கொடுக்கணும்...  எதுக்குடா எக்ஸ்ட்ரா கொடுக்குறீங்க..  எதுக்கு கொடுக்குறீங்க?.. "

தொடர்ந்து கீழ்த்தரமான வசவுகள்..

நாலைந்து பாக்கெட்கள் கடைக்குள் வந்து விழுந்து சிதறின.. சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் ஒரு கணம் அதிர்ந்தனர்..

மின்னல் பொழுதில் ஒதுங்கிக் கொண்டதால் மேஜைக்கருகே நின்றிருந்தவருடைய உடுப்புகள் தப்பித்தன..

அந்த சுருட்டை முடியன் தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தான்..

விறு விறு என இறங்கிய அவர் நேராகச் சென்று சுருட்டை முடியனுக்கு ரெண்டு அறை விட்டார்..

" யார் யா நீ.. என்னய எதுக்கு அடிக்கிறே.. உனக்கு என்ன தெரியும்?... "

" உம் பொண்ணு தான் டா எக்ஸ்ட்ரா பாக்கெட் கேட்டா.. இவர் பாவப்பட்டு கொடுத்தா உனக்கு எகத்தாளம் வந்து ஆடுதா.. "

" அதச் சொல்ல நீ யார் யா?.. " 

அறைந்தவரின் நெஞ்சில் கை வைத்துத் தள்ளினான் சுருட்டை முடியன்..

" நானா.. நாந்தாண்டா டவுன் போலீஸ்.. இன்னுங் கொஞ்ச நேரத்துல எல்லாம் புரியும்!.. " - என்றவாறு அவனது கையை இறுகப் பிடித்தபடி -
சட்டைப் பைக்குள்ளிருந்த செல்போனை எடுத்து டவுன் போலீஸ் நிலையத்துடன் பேசினார்.. மறுபடியும் ஒரு அறை விட்டார்..

" இதுக்குத் தான் நான் அப்பவே சொன்னேன்.. ரொம்பவும் பாவ புண்ணியம் பார்க்காதீங்க ன்னு.. " மணியிடம் சீற்றம்.. தரையை சுத்தம் செய்வதற்கு வாளி துடைப்பத்துடன் வந்தான்..

" தம்பி மணி.. நீ டேபிளை  பார்த்துக்க.. "  - என்ற குருசாமி,

" சார்.. அவன மன்னிச்சு  விட்டுடுங்க.. வேலை வெட்டி இல்லாம இருக்கான்.. பாவம் புள்ள குட்டிக்காரன்.. விரட்டி விடுங்க.. "

சொல்லிக் கொண்டே  கடைக்குள் சிதறிக் கிடந்த சட்னி சாம்பார் குருமா பாக்கெட்டுகளை சுத்தம் செய்வதற்கு முனைந்தார்..

ஃஃஃ

39 கருத்துகள்:

  1. காலமாறுதலை வெளிச்சம் போட்டுக் காட்டும் கதை.

    நன்று. இந்த மாறுதல்களுக்கெல்லாம் காரணம் மக்கள்தானே. அவர்களின் ஆசைதானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை அவர்களுக்கு நல்வரவு.. மகிழ்ச்சி.. நன்றி..

      இன்றைய
      உணவின் மோசமான நிலைக்கு மக்களே முக்கிய காரணம்...

      நீக்கு
  2. எதையெல்லாம் அபூர்வமாக உண்ணும் உணவு என்று கொண்டிருந்தோமோ அவையெல்லாம் தினப்படி உண்ணும் அத்தியாவசிய உணவு என்று ஆகிப்போனது. ஒபாமா, இந்தியர்கள் அளவுக்கு மீறி உண்ணுவதால் உணவுப் பஞ்சமும் விலை ஏற்றமும் நிகழ்கிறது என்று சொன்னால் காள்காள் என்று நாம் குதித்தோம்.

    உண்மைதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியர்கள் அளவுக்கு மீறி உண்ணுவதால் உணவுப் பஞ்சமும் விலை ஏற்றமும் நிகழ்கிறது என்று ஒபாமா அன்றைக்கு சொன்னபோது காள் காள்... காள் காள்
      என்று கத்தினார்கள்...

      தமிழர்களின் உணவுப் பழக்கம் மாற்றப்பட்டு விட்டது.. இதற்கு முக்கிய காரணம் தமிழ்ப் பழக்க வழக்கம் அற்ற தமிழர்களே!...

      நீக்கு
  3. வியாபாரத்தில் அறம் என்பதே அருகிவிட்ட காலம். இது இன்னும் மோசமாகத்தான் போகும்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கதை, துரை அண்ணா.

    காலம் மாறிப் போச்சு என்பதை விட மக்களின் எண்ணங்கள் மாறியது எனலாம். உணவினால் இந்தியா சர்க்கரை வியாதியின் தலைநகரம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இதில் பல உள் விஷயங்கள் உண்டு.

    அதே சமயத்தில் இப்போது மீண்டும் உணவு பற்றிய விழிப்புணர்வும் வந்து கொண்டுதான் இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. நன்றி.. நன்றி சகோ..

      /// இப்போது மீண்டும் உணவு பற்றிய விழிப்புணர்வும் வந்து கொண்டுதான் இருக்கிறது...///

      ஆனால் அதையும் மீறியதாக இருக்கின்றது உணவின் மீதான வெறி..

      குறிப்பாக ப்ரியாணி...

      கோயில் நகரங்களில் கோயில் தரிசனம் முடிந்ததும் தின்பதற்கு வசதியாக கோயிலுக்கு அருகில் பிரியாணி கடைகள்...

      நெல்லை அவர்களைக் கேட்டுப் பார்க்கவும்...

      நீக்கு
    3. உணவில் இரண்டு ஆபத்தான உணவுகள். ஒன்று மைதா எண்ணெயில் தயாரிக்கப்படும் பரோட்டா, இரண்டாவது பிரியாணி. இரண்டுக்கும் போட்டியில் விலை குறைக்க அறமற்ற கெட்டுப்போன புலால் வகைகள். ஏழைகளுக்கோ, 25 ரூபாய்க்கு புரோட்டா சாப்பிட்டால் வயிறு நிரம்பிவிடும் என்ற அப்பாவித்தனமான எண்ணம், காசு மிச்சமானால் டாஸ்மாக்குக்கு உபயோகம் என்ற நல்லெண்ணம்.

      எங்கே மக்கள் திருந்திவிடுவார்களோ என பயந்து கிடைத்த சந்து பொந்துகளில் பிரியாணிக்கடைகள் வகை தொகை இல்லாமல். அரசின் ஆதரவு மாத்திரம் கிடைத்துவிட்டால், பிரசாத ஸ்டால்களில் பிரியாணி வரும் நாள் தொலைவில் இல்லை

      நீக்கு
    4. /// பிரசாத ஸ்டால்களில் பிரியாணி வரும் நாள் தொலைவில் இல்லை.. ///

      உண்மை.. உண்மை..

      நீக்கு
  5. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..


    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  8. 1960 கள் என்று நினைக்கிறேன் ஒரு பாடல் பழைய பாடல் வெங்கட்ஜி தளத்தில் பகிர்ந்திருந்த நினைவு...அந்தப் பாட்டில் காலம்மாறிப் போச்சு ரொட்டி க்ளப் என்று சொல்லிவரும்...பாடல் மறந்து போச்சு. அந்த கால கட்டத்திலும் காலம் மாறிப் போச்சு என்றார்கள், என் வீட்டு பெரியவர்களும் காலம் மாறிப் போச்சு என்றார்கள். நாமும் சொல்கிறோம் இனி வரும் தலைமுறைகளும் இதைச்சொல்லலாம் ஆனால் குறைவாக இருக்கும். ஏனென்றால் தலைமுறைகளின் எண்ணங்களில் மாறுதல்கள் வருகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு அளவு கோல் வைத்துதான் இது சொல்லப்படுகிறது என்று தோன்றும்.

    காலம் மாறிப் போச்சு, மக்கள் மாறிட்டாங்க என்பதை விட நமக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு கடந்துவிடுவது நல்லது என்றும் தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// காலம் மாறிப் போச்சு, மக்கள் மாறிட்டாங்க என்பதை விட நமக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு கடந்து விடுவது நல்லது ///

      நல்லது தான்... ஆனால் நல்லது எது கெட்டது எது என்று இன்னமும் யாருக்கும்
      தெரிய வில்லையே...

      என்ன செய்வது சகோ??...

      நீக்கு
    2. திண்டுக்கல் நத்தம் அருகே ஜூன் 7 அன்று பானிபூரி சாப்பிட்ட இளைஞர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு இறந்து விட்டார்..

      தினமலர் செய்தி..

      நீக்கு
  9. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு
    நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  10. எல்லாமே மாறிக்கொண்டே போகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// எல்லாமே மாறிக்கொண்டே போகிறது..///

      உண்மை தான்.. மாறிக்கொண்டே போகட்டும்...

      நீதி நியாயம் கூடவா?..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  11. காலம் மாறிப்போச்சு... உண்மை தான். உடல் நலத்திற்காக உணவு என்பது போய், எப்போதும் நாக்குச் சுவைக்கு மட்டுமே அடிமையாகிப் போன மனிதர்கள். எங்கே பார்த்தாலும் இப்படியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்ஜி.. நலமா? தில்லி வெங்கட்டா இல்லை திருவரங்கம் வெங்கட்டா?

      நீக்கு
    2. நான் நலம். நீங்கள் நலமா? நேற்றிலிருந்து தில்லி வெங்கட் :)

      நீக்கு
    3. /// உடல் நலத்திற்காக உணவு என்பது போய், எப்போதும் நாக்குச் சுவைக்கு மட்டுமே அடிமையாகிப் போன மனிதர்கள். எங்கே பார்த்தாலும் இப்படியே!.. ///

      உண்மை...
      உண்மை தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  12. இரங்கும் மனிதர். அதனால் வந்த தீமை .

    இப்பொழுது மக்களின் உணவுப் பழக்கங்கள் மாறியதுதான் காரணம்.

    பதிலளிநீக்கு
  13. இரக்கமும் ஓரளவுக்குத் தான்..

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி மாதேவி..

    பதிலளிநீக்கு
  14. நல்ல ஒருகதை. ஆபத்தான உணவுத் தயாரிப்பு பற்றிய விழிப்புணர்வும், நல்லோருக்கு இறைவன் துணையிருப்பார் என்ற கருத்தும் கதையில் இடம் பெற்றிருக்கின்றன.

    என்றாலும் இவ்வளவு தூரத்திற்கு நல்லவராக இருந்தால் அதுவும் இந்தக்காலத்தில் எப்படி? என்ற ஒரு ஐயமும் கூடவே எழுந்தது இறுதி வரியை வாசித்த போது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இவ்வளவு தூரத்திற்கு நல்லவராக இருந்தால் அதுவும் இந்தக்காலத்தில் எப்படி? என்ற ஒரு ஐயமும் கூடவே எழுந்தது ///

      பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே..

      இது நமது தாத்பர்யம்...
      காலகாலமாகத் தொடர்ந்து வருவது!..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி துளசிதரன்..

      நீக்கு
  15. அருமையான கதை.
    குருசாமி அவர்களின் உதவும் உள்ளம் , முடியவில்லை என்றாலும் வீராப்பும் கோபமும் கொண்ட குழந்தையின் அப்பா என்று கதாபத்திரங்கள் கண் முன் கொண்டு வந்து விட்டது.

    சாப்பிடும் முறை மாறி வருகிறது. கோவிலில் மசாலா போட்டு தக்காளி சாதம் பிரசாதமாக கொடுக்கிறார்கள், கோவை பக்கம்.
    பிரியாணி வாசம் அடிக்கிறது.


    //உணவகம் ஆரம்பித்ததில் இருந்தே ஒரு பழக்கம்.. கார்த்திகை மாசம் பொறக்கறதுக்கு நாலு நாளைக்கு முன்னாலயே கடைக்கு வெள்ளை அடிச்சு தட்டு முட்டு சாமான்கள மாத்திடுவாரு..//

    அசைவம் சாப்பிடும் மக்கள் கூட நாள், கிழமை, விரத நாட்கள் என்று சுத்த பத்தமாக தனி தனி பாத்திரம் வைத்து சமைத்தார்கள். விரத நாட்களில் மசாலா பொருட்களை தவிர்த்தார்கள்.

    //ஆயுளக் கொடுக்கணும்.. ஆரோக்கியத்தைக் கொடுக்கணும்.. நோய் நொடியில்லாம நல்லா இருக்கறதுக்கு சாமி தான் பிச்சை போடணும்... அதுக்கு மேல வேற என்ன வேணும்.. எல்லாம் அவன் செயல்.. செய்யும் தொழிலே தெய்வம்.. தெய்வமே துணை.. " அப்படி ன்னு சொல்லிடுவார்..//

    குருசாமி அவர்கள் கொள்கை நல்ல கொள்கை.
    செய்யும் தொழிலில் நேர்மை, இரக்கம், அன்பு, சுத்தமாக இருக்கிறார்
    அது போதும். அதுவே தெய்வ வழிபாடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// கோவிலில் மசாலா போட்டு தக்காளி சாதம் பிரசாதமாக கொடுக்கிறார்கள், கோவை பக்கம்.
      பிரியாணி வாசம் அடிக்கிறது.///

      இந்தப் பக்கமும் இப்படித்தான் செய்கின்றனர்..

      நான் வெளிக் கடைகளில் சாப்பிடுவது இல்லை..

      நீக்கு
    2. /// குருசாமி அவர்கள் கொள்கை நல்ல கொள்கை.
      செய்யும் தொழிலில் நேர்மை, இரக்கம், அன்பு, சுத்தமாக இருக்கிறார்///

      இப்படியானவர்களே தர்மத்தின் அடிப்படை...

      தங்களது அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      வீட்டு வேலைகளில் என் நேரம் சரியாக இருக்கிறது. உங்களின் பதிவுகள், மற்றும் வழக்கமான பதிவுகள் ஆகியவற்றிற்கு முறையாக வர இயலவில்லை. மன்னிக்கவும். உங்களின் பதிவுக்கு படிக்க பிறகு(நாளை கூட ஆகலாம்) வருகிறேன். மன்னிக்கவும் சகோதரி. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. நிதானமாக வந்து வாசிக்கவும்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    5. வணக்கம் சகோதரரே

      உங்களது சென்ற திங்கள், மற்றும் செவ்வாய் பதிவுகளுக்கு அப்படித்தான் வந்து கருத்துக்கள் தந்துள்ளேன். (நேரமின்மை காரணமாக தாமதமாக, நிதானமாக. ) நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை நன்றாக உள்ளது. இப்போது காலங்கள் மாறி விட்டது. முன்பு வெறும் சட்னிகள், மாறி அதில் மசாலா பொருட்களை சேர்த்து அரைத்து வைத்து பரிமாற துவங்கி விட்டனர். (சிலருக்கு அந்த வாசனைகள் பிடிக்குமா என அறிந்து கூட கொள்வதில்லை. அதனால் வெளி உணவகங்களில் சாப்பிட கூட தயக்கம் வருகிறது.)

    கதையில் குருசாமி அவர்களின் அன்பும், பண்பும் மனதை நிறைக்கிறது. இது போன்று தயாள குணத்துடன் அனைவரையும் மன்னித்து செல்பவர்களும் நாட்டில் உள்ளார்கள். அவர்களுக்காகத்தான் மழைகளும் பெய்கின்றன . அருமையான கதை பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///வெறும் சட்னிகள், மாறி அதில் மசாலா பொருட்களை சேர்த்து அரைத்து வைத்து///

      உண்மை தான்..

      கண்ணில் கண்டதில் எல்லாம் மசாலா... மசாலா தான்

      வெறுப்படிக்கின்றது..

      நீக்கு
    2. தங்களுக்கு நல்வரவு..

      ///தயாள குணத்துடன் அனைவரையும் மன்னித்து செல்பவர்களும் நாட்டில் உள்ளார்கள். அவர்களுக்காகத்தான் மழைகளும் பெய்கின்றது ///

      தங்களது அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  17. பதிவின் வழி கலந்துரையாடிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    மறுபடியும் சந்திப்போம்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  18. நல்ல கதை. மாறி வரும் ஆபத்தான பழக்க வழக்கங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள். அப்போதெல்லாம் மிலிடரி ஹோட்டல் ஒன்று இரண்டுதான் இருக்கும், இப்போது புற்றீசல் விதம் விதமான பெயர்களில் நான் வெஜ் ஹோட்டல்கள். இவற்றிற்கெல்லாம் சப்ளை எங்கிருந்து? என்பது புரியாத புதிர்.
    குருசாமி போன்ற மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது ஆறுதல்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!