ஞாயிறு, 13 அக்டோபர், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – மனைவியுடன் யாத்திரை – பகுதி 01 (திருநீர்மலை) நெல்லைத்தமிழன்

 

முகவுரை: 

நான் பெரும்பாலும் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அத்யாபகருடன் யாத்திரை செல்வேன். அப்படி அவருடன் ஒரு சில திவ்யதேசக் கோவில்கள் தவிர மற்ற எல்லாவற்றையும் தரிசனம் செய்திருக்கிறேன். அவற்றில் நிறைய கோவில்களை ஒரு தடவைக்கு மேல் தரிசனம் செய்திருக்கிறேன். அவருடன் செல்லாத கோவில்களை நாங்கள் தனியே சென்று தரிசனம் செய்திருக்கிறோம். வைணவ திவ்யதேசக் கோவில்களில் 106 கோவில்களை இந்த நிலவுலகில் தரிசிக்கலாம். அவற்றில் ஒரே ஒரு கோவில் திருநீர்மலை. நாங்கள் நினைத்த போதெல்லாம் செல்ல முடியாமல் தடங்கல்கள் ஏற்பட்டிருந்தன. நாங்கள் பெங்களூரில் இருப்பதால், அவருடைய ஒரு நாள் யாத்திரையில் அமையும் அப்படிப்பட்ட கோவில்களைத் தரிசனம் செய்ய வாய்ப்பில்லாமல் இருந்தது.  குரோம்பேட்டையில் தங்கியிருந்தபோதும் எங்களால் திருநீர்மலை பெருமாளை தரிசனம் செய்யும் வேளை வந்திருக்கவில்லை.

இப்படி இருக்கும்போது, என் பெண்ணுடைய திருமணப் பத்திரிகையை உறவினர்களைச் சந்தித்துக் கொடுப்பதற்காக காரை ஏற்பாடு செய்திருந்தோம். என் மனைவியின் உறவினர் ஒருவர் அடையாறில் இருக்கிறார். அவர் வீட்டிற்கு காலை 9 ½ மணிக்குப் பத்திரிகை கொடுக்கச் சென்றிருந்தபோது, அவருடைய கணவர், திருநீர்மலை இன்னும் நாங்கள் தரிசனம் செய்யவில்லை என்பதை அறிந்து, நீங்கள் அருகிலிருக்கும் இன்னொரு உறவினர் வீட்டில் பத்திரிகை கொடுத்துவிட்டு நேரே கோவில் சென்றுவிடலாமே. மதியம் 12 மணிக்குத்தான் நடை சாத்துவார்கள் என்றார். அவர் சொன்னது இறைவன் அழைப்பதாக என் மனதிற்குத் தோன்றியது. உடனே திட்டத்தை மாற்றிக்கொண்டு, 10 ½ மணிக்கெல்லாம் அடையாறிலிருந்து புறப்பட்டு திருநீர்மலை சென்றோம்.

நான் எழுத நினைத்து ஆரம்பித்தது, ஜூலை மாதம் நாங்கள் சென்றிருந்த நாலைந்து கோவில்கள் பற்றி. ஆனால் திருநீர்மலை கோவிலை இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் எழுத வாய்ப்பு கிடைக்காதோ என்றெண்ணி இந்த வாரம் எழுதுகிறேன்.

திருநீர்மலை, பல்லாவரத்திலிருந்து சுமார் 6 கிமீ தூரத்தில் இருக்கிறது. இங்கு சுமார் 200 அடி உயரமுடைய சிறிய மலை இருக்கிறது. மலையின் அடிவாரத்தில் ஒரு கோவிலும், மலை மீது ஒரு கோவிலும் உண்டு.  அடிவாரத்தில் உள்ள கோவிலில் நீலமுகில் வண்ணன் நின்றதிருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தாயாரின் திருநாமம் அணிமாமலர் மங்கை (ஜீவி சார்… நம் திருக்கோவில்களில் பெருமாள், தாயார், ஏன் பல்வேறு சைவ சமயக் கோவில்களிலும் சிவன்/பார்வதி திருநாமங்கள் மனத்தைக் கொள்ளைகொள்ளும் தமிழில் அமைந்துள்ளதைக் கண்டிருக்கிறீர்களா?). தாயார் தனிக்கோவிலில் சேவைசாதிக்கிறார்.

மலை மீது இருக்கும் கோவிலில் மூன்று சன்னிதிகள் இருக்கின்றன.  வீற்றிருந்த திருக்கோலத்தில் சாந்த நரசிம்ஹரும், மாணிக்க சயனத்தில் ரங்கநாதரும், நடந்த திருக்கோலமாக திரிவிக்ரமனும் சேவைசாதிக்கின்றனர்.

திருமங்கையாழ்வார் இந்தத் தலத்தைப் பாடும்போது, (2ம் பத்து, 4ம் திருமொழி), நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மாமலையாவது நீர்மலையே என்று பாடியிருக்கிறார்.  திருமங்கையாழ்வார் இந்தத் தலத்தை தரிசிக்க வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைத் தாண்டிச் சென்று சுவாமியைத் தரிசிக்க இயலவில்லை. கோவில் எதிரிலுள்ள மற்றொரு மலையில் ஆறு மாதங்கள் தங்கி, நீர் வடிந்த பிறகு பெருமாளை தரிசித்தார் என்பது வரலாறு. நான்கு நிலைகளில் பெருமாள் காட்சி தருவதால், இங்கு இறைவனை வழிபட்டால், நான்கு திவ்யதேசங்களான நாச்சியார்கோவில், திருவாலி, திருக்குடந்தை மற்றும் திருக்கோவிலூரை வழிபட்ட பலன்களை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.

முதலில் கீழே இருக்கும் நீர்வண்ணப் பெருமாள் கோவிலுக்குச் சென்றோம். அவர்களோ, மலைக் கோவிலை 12 மணிக்கு நடை சார்த்திவிடுவார்கள், அதனால் அங்கு முதலில் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் என்றனர். நிறைய படிகள் இருக்குமே என்று முதலில் தயக்கம் இருந்தது (நேரத்துக்குள் கோவிலை அடையவேண்டுமே).

திருநீர்மலையை அடையப்போகிறோம்.

திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் கோவில் ராஜகோபுரம்  (நேரே தெரிவது இராமர் சந்நிதி)

மலைக்கோவிலுக்குச் (ரங்கநாதர் கோவில்) செல்லும் பாதை

கொஞ்சம் படிகள் ஏறியதுமே, வலப்புறத்தில் ஒரு சிறிய பாதையில் சென்றால் ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.


ஒரு வழியாக மலைக்கோவிலுக்கு வந்து சேர்ந்துவிட்டோம்.

மலைக்கோவிலை அடைவதற்குச் சிறிது முன் ஒரு மண்டபம் உள்ளது.

இந்த மண்டபம் கல்கி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இதனை கல்கி சதாசிவம் தம்பதியினர் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்.

மலைக்கோவில் நுழைவாயில். த்வஜஸ்தம்பம் தெரிகிறதா?

மலைக்கோவிலின் ராஜகோபுரமும் த்வஜஸ்தம்பமும். 



இந்தக் கோவிலில் நுழைந்தவுடன் பிரதான மூலவர் சன்னிதிக்குச் செல்கிறோம். அங்கு இறைவன் கிடந்த கோலத்தில் ரங்கநாதராக சேவை சாதிக்கிறார்.

இணையத்திலிருந்து – திருநீர்மலை ரங்கநாதர்

தாயார் சன்னிதி

பிறகு பிரகாரத்தைச் சுற்றிவரும்போது, நடந்த கோலமாக உலகளந்தானாகவும், இருந்த கோலமாக சாந்த நரசிம்மராகவும் காட்சியளிக்கும் பெருமாளை இரண்டு சன்னிதிகளில் தரிசனம் செய்தோம்.

ரங்கநாதர் சன்னிதியைச் சுற்றியுள்ள பிராகாரம். அதில் வலதுபுறத்தில்தான் உலகளந்த பெருமாள் சன்னிதியும் அதன் அருகில் சாந்த நரசிம்ஹர் சன்னிதியும் அமைந்துள்ளன.

சாந்த நரசிம்ஹர் (இருந்த திருக்கோலம்)

உலகளந்த பெருமாள் (நடந்த திருக்கோலம்), சாந்த நரசிம்ஹர் (இருந்த திருக்கோலம். பாலக நரசிம்ஹர் என்றும் சொல்கிறார்கள்)

மலை மீதிருந்து ஊரின் தோற்றம்


ரொம்ப வயல்களாகத் தெரிகிறதே என்று அஞ்ச வேண்டாம். இன்னும் ஒரு சில தசாப்தங்களில் அங்கெல்லாம் ஊர்கள் வந்துவிடும்.

 இன்னும் மலைமீதுதான் இருக்கிறோம். பிறகு மலைமீதிருந்து கீழே இறங்கி நீர்வண்ணப் பெருமாள் கோவிலுக்குச் செல்லவேண்டும். அடுத்த வாரம் தொடர்வோமா? 

(தொடரும்)

57 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் திருநீர்மலையைத் தரிசிக்க எண்ணம் உண்டு...

    நேரம் கூடி அமைய வில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்... சென்னைக்கு வந்தால் தரிசனத்துக்குத் தடையேது?

      நீக்கு
  3. ஆஹா.. எத்தனை எத்தனை சன்னதிகள்? 'நின்றார், இருந்தார், கிடந்தார், நடந்தாற்கு இடம் மாமலையாவது நீர்மலையே!' என்று எத்தனை கோலங்கள்? இது வரை நான் இத்திருத்தலத்திற்கு செனறதில்லை. இப்பொழுது பார்வையிலாவது தரிசனம் கிடைத்ததில் மிக்க சந்தோஷம், நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். தாம்பரம் நோக்கிப் பயணித்தால் திருநீர்மலை தரிசனம் கிட்டும். மலைமேல் உள்ள கோயிலை ரங்கனாதன் கோவில் என்று அழைக்கின்றனர். படி ஏறுவது ரொம்பக் கடினமல்ல

      நீக்கு
  4. தமிழகத்தின் பல கோயில்களிலும் இறைவன், இறைவியரின் பெயர்களாவது தமிழில் அமைந்திருக்கிறதே என்ற மகிழ்ச்சி தான்.
    இந்த உணர்விலாவது வருங்காலத்தில் பக்தியுள்ள குடும்பங்களில் குழந்தைகளுக்கு கடவுளரின் திரு நாமத்தைச் சூட்டுவார்களாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில்கள் (திருவீழிமலை, திருப்பெருந்துறை, திருவரங்கம், திருவானைக்காவல், திருவிடைமருதூர், ......) அமைந்துள்ள ஊர்களின் பெயரும் அழகு தமிழில்தான் அமைந்துள்ளன. ஆனால் காலப்போக்கில் பெயர்கள் திரிபடைகின்றன.

      ஆனாலும் குழந்தைகளுக்கு வடமொழிப் பெயர்களே சூட்டப்படுகின்றன. இது வருத்தத்திற்குரியது. பெரியார், திமுக ஆரம்பக் காலங்களில் நிறைய தமிழ்பெயர்கள் (கடவுளர் பெயர்களல்ல) சூட்டப்பட்டன என்பதையும் மறுக்க இயலாது. பிறகு இந்த வழக்கம் அறுகிவிட்டது.

      நீக்கு
  5. எபியில் சமீப காலங்களில் இரண்டு தினங்களில் திருக்கோயில்கள் கட்டுரைகள் தவறாது இடம் பெருகின்றன. இரண்டிற்கும் உள்ள நுண்ணிய வித்தியாசங்கள் இரண்டு வித கோணப் படப்பிடிப்பாய் மனதிலும் படிந்திருக்கின்றன. நதிகள் பலவாயினும் சங்கமிக்கும் கடல் ஒன்று தானே என்கிற திருப்தியும் நடுவில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜீவி சார். ஶ்ரீராம் நன்றாக எழுதுவார்.

      நீக்கு
    2. இல்லை நெல்லை.  கோவில் பதிவுகளில் உங்கள் பதிவுகளில் உள்ள ஆழமும், அழகும், படங்களின் சிறப்பும் விவரங்களை சொல்லும் ஞானமும் என் பதிவுகளில் கிடையாது, வராது.

      நீக்கு
    3. "ஆமாம்..நான் நன்றாக எழுதுவேன்.. அந்த எழுத்துத் திறமை என் தந்தையால் வந்தது. எனக்கு நிறைய விவரங்கள் தெரியும், நேரமில்லாததால் கோயில் பதிவுகள் நிறைய எழுதுவதில்லை" என்றெல்லாம் ஸ்ரீராம் எழுதினால்தான் ஆச்சர்யம். 'அடக்கம்'.

      நீக்கு
  6. திருநீர்மலை திருநீறு மலை ஆவதால் ஒரு சிவன்கோயில் உள்ள இடம் என்றே இது வரை நினைத்திருந்தேன். திருநீர் மலையை திரு நீர் (தண்ணீர்) மலை என்றே பதம் பிரிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். ஐயம் விடுபட்டது.

    விவரங்கள் புதிது. படங்களும் நன்றாக உள்ளன.

    தமிழ்ப்படுத்தப்பட்டதால் தான் வைணவம் தமிழ்நாட்டில் சிறப்புடன் இருக்கிறது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். கோவில் ஆகமங்கள், வழிபாட்டு நடைமுறைகள் வேறு. ஆனால் கோவிலிலும் தமிழ் பிரபந்த வழிபாட்டுமுறைகள் உண்டு. தமிழ்படுத்தப்பட்டதனால் என்று சொல்வதைவிட, தமிழ் பிரபந்தங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதால் வைணவத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகமானார்கள்.

      நீக்கு
    2. //திருநீறு மலை ஆவதால் ஒரு சிவன்கோயில் உள்ள இடம் // ஹா ஹா ஹா. நீங்கள் எழுதியதைப் படித்தவுடன் எனக்கு 'திருநீறில் மருந்திருக்கு தெரியுமா' பாடல் நினைவுக்கு வந்தது. வெள்ளியில் ஸ்ரீராம் பகிர்ந்துவிட்டாரா இல்லை இனிமேல் பகிர்வாரா? தெரியலை

      நீக்கு
  7. எல்லா ஆர்வங்களுக்கும் ஆர்வக் கோளாறுகளுக்கும் அடிப்படை பொருளாதாரம்..

    அது சரியாக அமைவதில்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றிர்க்கும் காரண காரியம் இருக்கும் இல்லையா துரை செல்வராஜு சார். கரணம், காரணம், கர்த்தா

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் கோமதி அரசு சகோதரி.

      நலமா? உங்கள் வீட்டில் கொலு வைபவங்கள் சிறப்பாக நடைபெற்றதா? அது பற்றிய உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வாங்க கோமதி அரசு மேடம். வாழ்க வளமுடன்.

      நீக்கு
  9. தாங்கள் திருநீர்மலை யை
    பற்றி படங்களுடன் விவரித்ததை பார்த்த உடன்
    அங்கே சென்று பார்க்க வேண்டும் என்று ஆவலைத்
    தூண்டிவிட்டது.
    நன்றி ஐயா
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சக்ரபாணி சார். நிச்சயம் சென்றுவாருங்கள். நீங்கள் குடந்து சக்ரபாணி கோயிலுக்குச் சென்றிருக்கிறீர்களா?

      நீக்கு
  10. திருநீர்மலை என்னுடைய குரோம்பேட்டை வீட்டிலிருந்து மிக அருகே உள்ளது.‌அடிக்கடி சென்றுள்ளேன். கொடி மரத்தின் வலது பக்கத்தில் அமைந்திருக்கும் மண்டபத்தை ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு செப்பனிட்டு புதிதாக கட்டியவர், என் வீட்டில் குடியிருந்த என் நண்பர் இளங்கோவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கௌதமன் சார்..நீங்கள் கீழிருக்கும் கோயிலின் அனுமான் மண்டபத்தைச் சொல்கிறீர்களா? இளங்கோவன் அவர்களது செயல் பாராட்டப்படக்கூடியது

      நீக்கு
    2. படிகள் ஏறிச் சென்றபின், துவஜஸ்தம்பத்திற்கு வலதுபக்கம் இருக்கும் மண்டபத்தின் மேற்கூரை என்று ஞாபகம். இளங்கோவன் அவர்களிடம் கேட்டு விவரம் சொல்கிறேன்.

      நீக்கு
    3. நண்பர் இளங்கோவன் அனுப்பியிருக்கும் தகவலை நெல்லை வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளேன்.

      நீக்கு
    4. அவருக்கு இறைவன் கொடுத்த பாக்யம் அது. யாருக்கு கைங்கர்யம் செய்ய வாய்ப்பு கொடுக்கணுமோ அவருக்குத்தான் அந்த பாக்கியம் கிட்டும்

      நீக்கு
    5. ஆம். அதைத்தான் அவரும் சொன்னார்.

      நீக்கு
    6. திருநீர்மலைக்கு அருகில் என்னுடைய குரோம்பேட்டை வீடு
      உள்ளது -- என்று அந்த வாக்கியம் இருக்க வேண்டும் KGG. நானும் அதைத்தானே எழுதியிருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம்.
      திருநீர்மலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் வீட்டை பின்னுக்குத் தள்ள வேண்டும்.

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. புரட்டாசி சனிக்கிழமை ( இங்கு மாலை 6.37)திருநீர்மலை ரங்கநாதர்
    தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    இந்த கோவிலை முன்பு நேரில் பார்க்கும் முன் சினிமாக்களில் பார்த்து இருக்கிறேன் நிறைய தடவை.

    நேரில் இந்த கோவிலை பார்த்து பல வருடம் ஆகி விட்டது. மிக அருமையான கோவில் படங்கள்.
    கோவில் பகிர்வுக்கு முன் உங்கள் முன்னுரை அருமை.

    //நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மாமலையாவது நீர்மலையே என்று பாடியிருக்கிறார்.//

    இந்த பாசுரத்தை பாடி தாயார் அணிமாமலர்மங்கை, நீலமுகில்வண்ணன் தரிசனம் செய்து கொண்டேன்.

    நீர்வண்ணப் பெருமாளை தரிசிக்க வருகிறேன்.

    பேரன் பக்தபிரகலாதா நாடகம் செய்தான் கொலுவுக்கு.

    ஸ்ரீ சாந்த நரசிம்மர் , பால நரசிம்மர் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த சினிமாக்களில் வந்திருக்கிறது?

      நீங்கள் அனேகமாக எல்லாக் கோவில்களையும் தரிசனம் செய்திருப்பீர்கள்.

      பக்தபிரகலாதா நாடகம்... கவினின் ஆர்வம் பாராட்டப்படக்கூடியது. அதனை உரமிட்டு வளர்க்கும் பெற்றோர்களுக்கும் பாராட்டுகள்.

      நீக்கு
    2. //எந்த சினிமாக்களில் வந்திருக்கிறது?//

      எனக்கு நினைவு இல்லை, நிறைய படங்களில் பார்த்து இருக்கிறேன். என் கணவர் இந்த கோயில் திருநீர்மலை என்று சொல்லி இருக்கிறார்கள். அது போல குன்றத்தூர் முருகன் கோவிலும் இடம் பெறும் சினிமாக்களில்.
      உங்களுக்கு தெரிந்தால் சொல்லாம் என்று பார்த்த போது இந்த வீடியோ கிடைத்தது பாருங்கள் நேரம் கிடைக்கும் போது.

      https://www.youtube.com/watch?v=qdBNXHpjrKQ இந்த சுட்டியில் இந்த கோவில் எந்த சினிமாக்களில் இடம் பெற்று இருக்கிறது என்று ஒருவர் காணொளி கொடுத்து இருக்கிறார்.

      நீக்கு
  13. 61வது திவ்ய தேச பகிர்வு அருமை. நான்கு கோலத்தில் தரிசனம் .தலவரலாறு அருமை.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய கோவில் யாத்திரை துவக்க பதிவு மிக அருமையாக உள்ளது.

    தீருநீர்மலை கோவில் பற்றிய சிறப்பான தகவல்களை தெரிந்து கொண்டேன். நாங்கள் பல வருடங்கள் சென்னையிலிருந்தும் கூட, இங்கெல்லாம் சென்றதில்லை. (கடமைகள் கால்களை கட்டி விட்டது. அவ்வாறு கட்டிப் போட்டவனும் "அவன்" தானே..! தாயின் அன்புக்கு, அச்சுறுத்தலுக்கு என எத்தனை முறை அவனே அந்த கட்டுதலுக்கு ஆளாகியிருக்கிறான்.)

    இக்கோவிலுக்கு செல்லும் முன் அவன் அழைப்பிற்கு காரணம் காட்டி தாங்கள் தந்துள்ள முன்னுரை அருமை. இதுதான் ஒரு சந்தர்ப்பம் தானாகவே அமைவது என்கிறோம் அல்லவா? எல்லாம் இறைவன் செயல்.

    கோவிலைப்பற்றிய விபரங்கள், படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. புரட்டாசி கடைசி சனிக்கிழமைக்கு மறுநாள் இந்த திவ்ய தரிசனங்கள் கிடைத்தது குறித்து மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என பல வடிவங்களில் பெருமாளையும் உடனிருக்கும் தாயாரையும் தரிசித்து கொண்டேன். படங்களின் வாயிலாக இத்தகைய இறை தரிசனங்களை எங்களுக்கு அளித்த உங்களுக்கு என் அன்பான நன்றி. அடுத்து நீலவண்ண பெருமாளை காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... இந்தத் தொடரில் தனிக் கோயிலாகத் தரிசனம் செய்தவற்றையும் சேர்த்து எழுதுவேன்.

      எனக்கும், பரிகாரங்கள் காரணம் இல்லாமல், குலதெய்வம் என்ற காரணத்தால் வருடாவருடம் திருப்பதி போனது தவிர, கோயில் உலாக்கள் போனதில்லை. அத்தற்கு நேரம் காலம் வரவேண்டுமல்லவா? யாத்திரை என்று ஆரம்பித்தது, 2008ல் மேற்கொண்ட முக்திநாத் யாத்திரை.

      நன்றி

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    படங்களும், அதன் விபரங்களுமாகிய இந்தப்பதிவை ரசித்தேன்.

    /ரொம்ப வயல்களாகத் தெரிகிறதே என்று அஞ்ச வேண்டாம். இன்னும் ஒரு சில தசாப்தங்களில் அங்கெல்லாம் ஊர்கள் வந்துவிடும்/

    ஹா ஹா ஹா. இதில் யார் அஞ்சப் போவது? இறைவனா ? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குமே வயல்களைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. சமீபத்தில் தஞ்சைப் பெஉதிகளைச் சுற்றியபோது, கொஞ்சம் கொஞ்சமாக வயல்கள், நகர்களாக ப்ளாட் போட்டுள்ளதைக் கண்டு திடுக் எனத் தோன்றியது. 90ல் திருவரங்கத்தில் வயல்கள் தோப்புகளைப் பார்த்திருக்கிறேன். கோயிலின் உள் இடுப்பளவு உயரம் இருக்கும் புல் வயல்போல் படர்ந்திருந்ததைக் கண்டிருக்கிறேன். தற்போது?

      நீக்கு
  16. இரண்டு மூன்று முறை சென்றிருக்கிறேன் நெல்லை. கொஞ்சம் படங்களும் எடுத்திருந்தேன். எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டும்

    அங்கிருந்த குட்டி ஆஞ்சுகளுக்கு கோவிலில் கொடுத்த புளியோதரை பிரசாதத்தைக் கொடுத்தேன் எல்லாம் கை நீட்டிக் கொண்டிருந்தன!!!! பழக்கம் போல!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நீங்க போகும்போது ஆஞ்சு இருந்ததா? அங்கிருக்கும் பிரசாதக் கடையில் நிறைய வகை பிரசாதங்கள் இருந்தன

      நீக்கு
  17. உங்கள் படங்கள் சூப்பர் நெல்லை.

    //ரொம்ப வயல்களாகத் தெரிகிறதே என்று அஞ்ச வேண்டாம். இன்னும் ஒரு சில தசாப்தங்களில் அங்கெல்லாம் ஊர்கள் வந்துவிடும்.//

    அதைச் சொல்லுங்க. நாங்க போறப்பவே வரத் தொடங்கிவிட்டதே ப்ளாட் போட்டிருந்தாங்களே. ஆனா அப்ப மழைக்காலம் தண்ணி தேங்கியிருந்தது.

    எப்படிக் கட்டுவாங்கன்னு யோசித்தேன் கட்டினாலும் தண்ணி வ்ராதோ? என்னவோ போங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் தனி வீடு வாங்கணும். ஆரம்ப்த்துல குளத்துல அல்லது சேத்துல போட்ட பிளாட்டுன்னு யோசிக்க மாட்டாங்க. அப்புறம் நல்ல மழை பெய்யும்போது கஷ்டமாக இருக்கும். அது ஓரிரு வாரங்கள்தானே என்று சமாதானமாயிடுவாங்க.

      அது சரி... நம்மைக் காப்பாற்ற வட இந்தியர்கள் இருக்கும்வரை (அதாவது கோதுமை விளைவித்து... நமக்கு புரோட்டாவிற்குச் சிக்கல் வந்திடக்கூடாது) நமக்கென்ன கவலை

      நீக்கு
  18. ஆமாம் நெல்லை நானும் தாயார்/அம்மன் பெயர்களைக் கேட்கும் போது வியந்ததுண்டு. ரசித்ததுண்டு. அழகான தமிழ்ப்பெயர்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்(க்கா).. எனக்கு ரொம்பவே வியப்பாக இருக்கும். சமஸ்கிருதப் பெயர், அதற்கு ஏற்றவாறு தமிழில் பெயர் என்று அனேகமாக எல்லாக் கோவில்களிலும் கண்டிருக்கிறேன். மட்டுவார்குழலி-தேன் நிறைந்த மலர்களைச் சூடிக்கொண்டிருப்பவள், புண்டரீகாக்ஷன் - செங்கமலக் கண்ணன்.. இதுபோன்று பலப் பல இடங்களில் கேட்டிருக்கிறேன். மிகுந்த ஆச்சர்யமளிக்கும். தமிழ்பெயர் முதலில் வந்ததா இல்லை சமஸ்கிருதப் பெயரைத் தமிழ்ப்படுத்தினார்களா என்று.

      நீக்கு
  19. வழக்கம் போல அழகான படங்களுடன் பதிவு.,.

    சிறப்பு..

    பதிலளிநீக்கு
  20. /// அது சரி... நம்மைக் காப்பாற்ற வட இந்தியர்கள் இருக்கும் வரை///

    கடந்த சில நாட்களில் த்மிழ்கத்தின் ஈரோட்டிலும் கர்நாடகத்திலும் வட இந்திய ருக்கு மேலாக வங்க தேசிகள்
    நாட்டின் அரச முத்திரையுடன் கூடிய போலிச் சான்றுகளை
    சிக்கியிருக்கின்றனர்.. (தினமலர் செய்தி)

    நமக்கென்ன பராட்டாவே பிரதானம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்போதெல்லாம் நிறைய நேபாளிகள் கர்நாடகாவில் வேலைபார்க்கின்றனர் (செக்யூரிட்டி, வீட்டுப் பாதுகாப்பு, அப்புறம் வீட்டில் உதவியாளராக). பெரும்பாலும் அவர்களால் நிறைய க்ரைம் நடக்கிறது என்று ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர் சொன்னார் (நேற்று). அவங்க மூலமா தகவல் பெற்று, நேபாளிகள் வந்து வீட்டைக் கொள்ளையடிப்பது, வீட்டில் உள்ளவர்களைத் தாக்கி பணம் சுருட்டுவது என்று க்ரைம் மிக அதிகமாகிறதாம். இதில் வட இந்தியர்களும் அடக்கம்.

      ஆனாலும் நமக்கென்னவோ மிக முக்கியம் பானிபூரியும் பரோட்டா சமோசாவும்.

      நீக்கு
  21. சிறப்பான தொடக்கம். எனக்கும் இங்கே செல்லும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை.

    இங்கே அவ்வப்போது திருமணங்களும் நடக்கிறது. எனது சித்தப்பா ஒருவரின் திருமணம் இங்கே தான் நடந்தது. நான் மட்டும் வீட்டில் இருக்க வீட்டில் மற்றவர்கள் அனைவரும் நெய்வேலியிலிருந்து திருமணத்திற்காக சென்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட்.... இன்னும் இந்தக் கோயிலுக்கான நேரம் உங்களுக்கு அமையலை போலிருக்கு. விரைவில் தரிசனம் வாய்க்கட்டும். பிரசாதமும் மலைமேல் உள்ள கடைல வாங்குங்க.

      நீக்கு
  22. //வாருங்கள் கோமதி அரசு சகோதரி.//

    நன்றி கமலா உங்கள் வரவேற்புக்கு.

    //நலமா? உங்கள் வீட்டில் கொலு வைபவங்கள் சிறப்பாக நடைபெற்றதா? அது பற்றிய உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.//

    நான் நலமாக இருக்கிறேன். வீட்டில் கொலு வைபவம் நன்றாக நடந்தது இறைவன் அருளால். நாங்களும் சில வீடுகளுக்கு சென்று வந்தோம்.
    மகன், மருமகள் நட்புகளின் அன்பு மழையில் நனைந்தேன். பதிவு போடுகிறேன் கமலா நன்றி.

    பதிலளிநீக்கு
  23. திருநீர்மலை அழகிய படங்களுடன் கண்டு தரிசித்தோம்.
    தகவல்கள் பலவும் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!