திங்கள், 14 அக்டோபர், 2024

"திங்க"க்கிழமை   அவகேடோ - இரு சட்னிகள் -  கீதா ரெங்கன் ரெஸிப்பி 

 

 அவகேடோ பழம் பயன்படுத்தி இரு சட்னிகள்

Avocado / அவகேடோ பழத்தைப் பற்றி முந்தைய செய்முறையில் (Gaucamole) சொல்லியிருப்பதால் அதைப் பற்றி ======>ஒரு Recap இங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம்<====== என்பதால் இன்றைய செய்முறையை தொடர்கிறேன்.

முதலில் தேவையான பழத்தை தயாராக வைத்துக் கொண்டு விடுவோம். கொட்டையை எடுத்துவிட்டு, ஒரு ஸ்பூனால் பழத்தின் உட்பகுதியை வழித்து ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு மத்தாலோ பருப்பு மசிக்கும் கரண்டியாலோ நன்றாக மசித்து தயாராக வைத்துவிடலாம். படங்கள் கீழே. 




பழத்தை வழித்து மசித்து வைத்தது தயார்

இனி செய்முறைக்கு

அவகேடோ (வெள்ளை) சட்னி - 

வதக்கி, வறுத்து அரைக்க

வதக்குவதற்கு - நடுத்தர அளவு பெரிய வெங்காயம் - 1 தோல் எடுத்து விட்டு, வதக்கி அரைக்கப் போவதால் ரொம்பச் சிறிதாக எல்லாம் நறுக்கத் தேவையில்லை, ஓரளவு நடுத்தரமாக நறுக்கிக் கொள்ளுங்கள். 

சாம்பார் வெங்காயம் - 15 தோல் உரித்து வைத்துக்கொள்ளவும்

பூண்டு -  1 இதழ் தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்

பச்சைமிளகாய் - 4  அல்லது உங்கள் தேவைக்கேற்ப 

வறுக்க -

வெள்ளை உளுத்தம்பருப்பு -  1 1/2 மேசைக்கரண்டி

(பாதி அளவு பருப்புகளுடன்கைப்பிடி நிலக்கடலையும் வறுத்துச் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது கடலை மட்டும் இரண்டு கைப்பிடி வறுத்துச் சேர்த்துக் கொள்ளலாம்.)

உப்பு -   தேவைக்கேற்ப 

எலுமிச்சைச் சாறு - எலுமிச்சை பழத்தின் சாறு (எலுமிச்சைக்குப் பதில்ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு புளியும் சேர்த்துக் கொள்ளலாம்)

கொஞ்சம் கறிவேப்பிலை அரைப்பதுடன் சேர்த்துக் கொள்ள

தாளிக்க - கடுகு - 1 தேக்கரண்டி, கொஞ்சம் கறிவேப்பிலை

வாணலியில் சிறிது எண்ணை விட்டு உளுத்தம் பருப்பு நிலக்கடலை எதுவானாலும் அல்லது இரண்டும் கலந்தோ பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணை விட்டு பச்சைமிளகாயை வதக்கி கூடவே வெங்காயம்பூண்டு, வதக்கி கறிவேப்பிலையும் சேர்த்து பிரட்டிவிட்டு எடுத்து தட்டில் மாற்றி ஆறவிடவும். உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்
வறுத்த சாமான்கள்வதக்கியவை இவற்றுடன் கொஞ்சம் கறிவேப்பிலையும் போட்டு நன்றாக அரைத்து மசித்து வைத்திருக்கும் அவகேடோ பழத்தோடு சேர்த்து அதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி விட்டுஒரு ஸ்பூன் எண்ணையில் கடுகு கறிவேப்பிலையை தாளித்து சேர்த்துவிடவும்

சட்னி தயார்.

அவகேடோ சிவப்புச் சட்னி

வதக்கி, வறுத்து அரைக்க

வதக்குவதற்கு - நடுத்தர அளவு பெரிய வெங்காயம் - 1 தோல் நீக்கி நடுத்தரமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

சாம்பார் வெங்காயம் - 15 தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்

பெரிய தக்காளி - 1. சின்னதாக இருந்தால் 2. 

துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டு -  4 இதழ்தோல் எடுத்து வைத்துக் கொள்ளவும்

வறுப்பதற்கு -

வெள்ளை உளுத்தம்பருப்பு -  1 1/2 மேசைக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி

(பாதி அளவு பருப்புகளுடன்கைப்பிடி நிலக்கடலையும் வறுத்துச் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது கடலை மட்டும் இரண்டு கைப்பிடி வறுத்துச் சேர்த்துக் கொள்ளலாம்.)

மிளகாய் வற்றல் - 4  அல்லது உங்கள் தேவைக்கேற்ப 

அரைப்பதற்குக் கொஞ்சம் கறிவேப்பிலை

உப்பு -  தேவைக்கேற்ப 

எலுமிச்சைச் சாறு - எலுமிச்சை பழத்தின் சாறு (எலுமிச்சைக்குப் பதில்ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு புளியும் சேர்த்துக் கொள்ளலாம்)

தாளிக்க ; கடுகு - 1 தேக்கரண்டிகறிவேப்பிலை

வாணலியில் ஸ்பூன் எண்ணை விட்டு உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கும் போதே மிளகாய் வற்றலையும் போட்டு கருகாமல் வறுத்து எடுத்துக் கொண்டு விடவும். அடுத்து கடலைப்பருப்பு போட்டு (நிலக்கடலை சேர்த்தால் அதையும்) பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொன்டுவிடவும். ஆறட்டும்.

அதே வாணலியில் இன்னும் ஸ்பூன் எண்ணை விட்டு நறுக்கிய வெங்காயம்பூண்டு போட்டு நன்றாக வதங்கியதும்நறுக்கி வைத்திருக்கும் தக்காளியும் சேர்த்து வதக்கவும்நன்றாக வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து பிரட்டிவிட்டு ஆறவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும். 

வறுத்த மிளகாய்வற்றல்பருப்புகள் உப்பு இவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொண்ட பிறகு அதில் வதக்கிய வெங்காயம் பூண்டு தக்காளி கூடவே கொஞ்சம் கறிப்வேப்பிலை போட்டு நன்றாக அரைத்து அதை மசித்து வைத்திருக்கும் அவகேடோ பழத்துடன் சேர்த்துஎலுமிச்சை பிழிந்து கலந்துவிட்டுவாணலியில் எண்ணை ஸ்பூன் விட்டு கடுகுகறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்துவிட்டால் அவகேடோ சிவப்புச் சட்னி தயார்.

அவகேடோ பழத்தை வதக்காம, வேக வைக்காம செய்யறது நல்லது. அதன் சத்துகள் மாறாமல் இருக்கும். உடனே செலவாக்குவதும் நல்லது.

வேறு செய்முறைகள் செய்திருந்தாலும், அவகேடோ தொடருக்கு முற்றுப் புள்ளி. No more Avocado Recipes! Cool!

35 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை அண்ணா....

      இன்று நம்ம பதிவு என்பதே மறந்து போச்சு. யாருன்னு பார்க்க வந்தா....இந்தப் பதிவு

      கீதா

      நீக்கு
  2. இரண்டு சட்னிகள் அவகேடோ உபயோகித்து. வித்தியாசமாக இருக்கிறது.

    நான் அவகேடோ சாப்பிட்டதில்லை. சாப்பிடாமலேயே, இது எனக்குப் பிடிக்காது என்ற முன்முடிவுதான் காரணம்.

    அவகேடோக்குப் பதில் பறங்கி உபயோகித்தாலும் இந்தச் சட்னிகள் நல்லா இருக்கும்னு தோணுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை,

      பறங்கி, கத்தரிக்காய் உபயோகித்தாலும் நன்றாகத்தான் இருக்கும்

      ஆனால் வித்தியாசம் அவகேடோவை அப்படியே உபயோகிப்பது. வதக்கல் வேகவைத்தல் எதுவும் இல்லை

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  3. அவகேடோ, டிராகன் ஃப்ரூட் போன்றவை இப்போது மார்க்கெட்டில் சக்கைப்போடு போடுது. எல்லாம் மார்க்கெட்டிங் உபயம். இல்லைனே ஓட்ஸ், கார்ன்னுக்கெல்லாம் இந்த வாழ்வெ வந்திருக்குமா?

    ஆமாம் GK என்பது ஜெனரல் நாலெட்ஜா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம ஊர் பழங்களுமே சாமானியனுக்கு எட்டாத உயரத்தில் தான் இருக்கின்றன.

      ஒட்ஸ் சொல்றீங்க.....நம்ம ஊர் சிறுதானியங்களை சொல்லுங்களேன்...நீங்க சாப்பிடுறீங்களா?

      உங்கள் கருத்து ஒரு சார்புடைய கருத்து நெல்லை.

      ஆமாம் GK என்பது ஜெனரல் நாலெட்ஜா?//

      ஆமாம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்

      கீதா

      நீக்கு
    2. நாம் சாப்பிடுற மாத்திரைகள் 'ஆங்கில' மருத்துவ மாத்திரைகள்தான்!! அதுவும் சில மாத்திரைகள் animal products உட்படுத்தப்பட்டவை. அதில் சிவப்பு புள்ளி இருப்பதைப் பார்க்கலாம்.

      நம்ம ஊர் ஆயுர்வேதத்துக்குப் புகழ்பெற்றது ஆனா நம்ம ஊர்ல கிடைக்காத மருந்துகள் வெளிநாட்டு அமேசானில் கிடைக்கின்றன. என் மகன் பயன்படுத்தும் ஆயுர்வேத மருந்து இங்கு கிடைப்பதில்லை.

      பல மருந்துகள் தரமற்றவையாக இருக்கின்றன குறிப்பிட்ட புகழ்பெற்ற இரு ஆயுர்வேத மருந்துகள் கொடுக்கும் கம்பெனிகளின் மருந்துகள் பலன் அளிப்பதில்லை. இதை ஆயுர்வேத மருத்துவம் படித்து மருந்துகளில் மேற்படிப்பு படிக்க இருக்கும் என் தம்பி மகளும் உறுதிப் படுத்தினாள். இங்கு தயாரிப்பவை வெளிநாடுகளில் விற்கப்படுகின்றன.

      எப்படி மூன்றாம் தரம் நான்காம் தரம் டீத் தூள் இங்கு விற்கப்படுகிறதோ அப்படி...முதல் தரம் டீ த் தூள் வெளிநாட்டிற்குப் போகிறது இங்கு கொள்லை விலை சாமானியர்கள் வாங்கும் வகையில் இல்லை

      கீதா

      நீக்கு
    3. இதைப் பற்றி பேசத் தொடங்கினால் closed economy for some products and open economy for some products என்று நீண்டு நம் பொருளாதாரக் கொள்கை பற்றி விமர்சனம் நீண்டு விடும்.

      கீதா

      நீக்கு
    4. ஆமாம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்...ஹாஹாஹா சிரித்துவிட்டேன் அங்க விட்டுப் போச்சு எக்ஸ்டென்ஷன் இங்கு!!

      கீதா

      நீக்கு
    5. ஏன் ஒருபக்கச் சார்புன்னு சொல்றீங்க? நம்மிடம் இருக்கும் சிறுதானியம், கீரை ஆவியில் வேகவைத்தவைகள் இவைகளைவிடவா ஓட்ஸ், கார்ன் சிறந்தது?

      நீக்கு
    6. கார்ன்? வெள்ளைச் சோளம் நல்லதுதானே...மஞ்சள் சோளம் நம்ம ஊர்ல விளைவதுதானே...அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சொல்லலை.

      ஆனால் சிலருக்கு சிறுதானியங்கள் ஒத்துக் கொள்வதில்லை அதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் நெல்லை. ஏனென்றால் அதில் உள்ள் ஃபைபர். ஜீரண சக்தி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். என் மாமியார் மாமனாருக்குச் சிறு தானியங்களை விட ஓட்ஸ் நன்றாகச் செரிமானம் ஆனது. நான் அவர்களுக்குச் சிறு தானியங்களை அறிமுகப் படுத்திய போது தெரிந்தது.

      அது போல என் நாத்தானார் ஒருவருக்குக் கீரை ஜீரணம் ஆகவில்லை. எனவே நல்லது என்பதும் கூட ஒவ்வொருவரது உடல் மெட்டபாலிஸம், ஜீரண சக்தி என்பதைப் பொருத்து மாறுபடும். பொத்தாம் பொதுவாக இது நலல்து என்று நாம் சாப்பிடுவது நல்லதில்லை, நமக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்று பார்க்க வேண்டும்.

      கீதா

      நீக்கு
    7. ரொம்பவும் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் கீதா!! ஓட்ஸ் பற்றி நிறைய மருத்துவர்கள் நல்ல விதமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்! ஓட்ஸ் கஞ்சி அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் சர்க்கரையும் குறைகிறது!
      அது போல வெள்ளை சோளம் மட்டுமல்ல, frozen cornமே நல்லது என்று என் மருத்துவர் சொன்னதால் உப்புமா, கிச்சடி, நூடுல்ஸ் எல்லாவற்றிலுமே இதையும் நான் எப்போதுமே ஒரு கைப்பிடி சேர்ப்பேன். வெள்ளாரி, தக்காளியுடன் இந்த கார்ன் சேர்த்த சாலட் ரொம்பவும் உடம்புக்கு நல்லது.
      நீங்கள் சொன்னது போல இப்போதெல்லாம் முந்தைய காலத்தில் மிகவும் பிடித்த கீரை இப்போதெல்லாம் ஜீரணமாவதில்லை!

      நீக்கு
  4. இங்கே அமெரிக்காவில் Avocado ரொம்ப விலை மலிவு. ஸ்பூனில் குடைந்து எடுத்து வெண்ணை மாதிரி இருக்கும் உள்பாகத்தை உள்ளே தள்ளுவது அநுதினமும் பிடித்துப் போன வழக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அங்கு விலை மலிவுதான் ஜீவி அண்ணா. அது அங்குதானே முதலில் விளைந்தது.

      மிக்க நன்றி ஜீ வி அண்ணா

      கீதா

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    புதிது புதிதாக சமையல் முயற்சிகள்… நன்று. உணவாக இறைவன் அளித்த அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என்பதும் ஒரு விதத்தில் சரி தான்.

    முயற்சித்துப் பார்க்க தோன்றவில்லை :) என்றாலும் என்றைக்காவது, பொழுது போகாத ஒரு நாளில் செய்து பார்க்கலாம் என்று நினைவில் வைத்துக்கொண்டேன். தில்லியிலும் கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு

  6. /// நம்முடைய சிறுதானியம், கீரை ஆவியில் வேகவைத்தவைகள் இவைகளைவிடவா ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ் சிறந்தது?.. ///

    தொண்டை கிழியக் கத்தினாலும் நம்மவர்கள் கேட்டுக் கொள்ள மாட்டார்கள்..

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. என் அப்பாவின் நண்பர் ஒருவர் இருந்தார்.  அவரை நாங்கள் GK என்றுதான் அழைப்போம். 

      நாங்கள் மட்டுமல்ல, எல்லோரும். 

      அவர் பெயர் கோபாலகிருஷ்ணன்.  அவர் காதல்மணம் புரிந்தவர். 

      மனைவி அவரைவிட பத்து வயது மூத்தவர்.  சிலகாலம் ஒரே தெருவில் குடியிருந்த நேரம் அவர் அப்பாவை விட என்னுடனும் சுகுமாருடனும் அதிகம் பேசிக் செல்வார்!

      நீக்கு
  8. குவைத்தில் இருந்த போது அவகேடோ அதிகம் சாப்பிட்டிருக்கின்றேன்.. மில்க் ஷேக், fruit salad இந்த மாதிரி..

    கால சூழ்நிலைக்கு அதில் சட்னி சாம்பார் காரக்குழம்பு என்பனவெல்லாம் புதியது..

    சிறப்பான செய்முறை..
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  9. பழத்தைப் பழமாக சாப்பிட்டால் தான் நல்லது.. என்ன நாரதா!?..

    உண்மை
    உண்மை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
    2. அப்படியே சாப்பிட்டா அப்புறம் நாங்க எப்படி 'திங்க'கிழமை பதிவு போடுவது செல்வாண்ணா?!!

      நீக்கு
  10. கீதா! இது வரை அவகேடோ பற்றிஅதிகம் அலட்டிக்கொண்டதில்லை. துபாயில் பல நாடுகளில் விளைந்த பல வகை அவகேடோ கிடைக்கும். இப்போது தஞ்சையில் இருக்கிறேன். அடுத்த வாரம் துபாய் சென்று விடுவேன். அங்கே சென்றதும் உங்கள் சட்னியை செய்து பார்க்க வேண்டும். ரொம்பவும் வித்தியாசமான, சிறப்பான முயற்சிக்கு உங்களை நிச்சயம் மனதார பாராட்ட வேண்டும்!!
    திரு.ஜீவி சொன்னது-சும்மாவே சாப்பிடுவது பற்றி-அறிந்து ஆச்சரியமாக இருந்தது! அதையும் சும்மாவே ருசித்துப்பார்க்க வேண்டும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மனோ அக்கா உங்கள் மனதாரபாராட்டிற்கு. எனக்குப் புதுவிதமாக செய்து பார்க்க பிடிக்கும். எல்லாமே புதுசா வித்தியாசமா. செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்க மனோ அக்கா. ஆமாம்.மகனும்.சும்மாவே அப்படியே சாப்பிடுகிறான்.

      மிக்க. நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  11. எனக்கும் கீரை வகைகள் ஒத்துக் கொள்வதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பச்சைக் கீரையை, சில பல சமாச்சாரங்கள் சேர்த்து ஸ்மூத்தியாக தினமும் சாப்பிடுகிறேன் என்று சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். ஆனால் ஒரு வகைக் கீரை வாரத்தில் 2 நாட்கள்தான். அதனால் தண்டு, அரை, பாலக் என்று வெவ்வேறு கீரைகள் வாங்கிவந்து (ஆய்ந்துகொடுத்து) உபயோகிக்கிறேன்

      நீக்கு
  12. நல்ல செய்முறை.

    அவகாடோவில் சட்னி செய்ததில்லை. செய்து பார்க்கிறேன். ஏனைய முறைகளையும் தரலாமே ?

    நாங்கள் அவகாடோவை மசித்து கட்டித் தேங்காய்பால்விட்டு பச்சைமிளகாய் வெங்காயம் கறிவேப்பிலை இஞ்சி சிறிதளவு கலந்து உப்பு எலுமிச்சை சாறு விட்டு சம்பல் ஆக செய்வதுண்டு. எலுமிச்சைக்கு பதில் மாங்காய் துருவியும் கலக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி, நான் மாங்காய் சேர்த்தும்.செய்துவிட்டேன். சட்னியாகவும், சாலடாகவும். நீங்கள் சொல்லியிருக்கும் இலங்கை சாம்பல் தேங்காய்ப்பால் விட்டு செய்து பார்த்தாச்சு மிக நன்றாக இருந்தது. கிரேவயும் செய்தேன். வேகவைக்காமல்.

      சிலதுக்குப் படங்கள் எடுக்கவில்லை.

      மிக்க நன்றி மாதேவி ஆர்வத்துடன் பதில் கொடுத்த தற்கும் ஊக்கம் கொடுத்ததற்கும்.

      கீதா

      நீக்கு
  13. கீதா, நன்றாக இருக்கிறது அவகாடோ சட்னி. இரண்டு வகை சட்னியும் அருமை.
    படங்களுடன் செய்முறை மிகவும் அருமை.
    மாதேவி சொல்வது போல எலுமிச்சைக்கு பதில் கிளிமூக்கு மாங்காய் துருவி போட்டு , அல்லது அரைத்து கலந்து செய்யலாம். ஒருநாள் அதையும் செய்து பாருங்கள் கீதா. மதுரையில் பழக்கடைகளில் அவகாடோ கிடைக்கிறது. காய்கறி சந்தையில் கிடைக்காது.
    செய்து பார்க்கிறேன்.


    மகன், மகள் வீட்டில் பயன்படுத்துகிறார்கள்.
    மகள் அப்படியே கிண்ணத்தில் போட்டு சாப்பிட சொல்வாள் என்னை.
    சப்பாத்தியில் போட்டு பிசைந்து செய்யும் போது சப்பாத்தி மிகவும் மெத் மெத்தென்று இருக்கும். மகன் , மருமகள் மதியம் சாலட் செய்யும் போது அவகாடோவை சேர்த்து கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்கா மிக்க நன்றி. மாதேவி சொன்னது போல் மாங்காய் சேர்த்து செய்திருக்கிறேன் . நீங்கள் போனமுறை குறிப்பிட்டது போல் சப்பாத்தி மாவில் கலந்து செய்தேன்...நீங்கள் சொல்லியிருப்பது போல் மென்மையாக நன்றாக இருந்தது. அப்பாக்கு இவருக்குக் கடிக்க எளிதாக இருந்தது.

      அங்கு எல்லாருமே பயன்படுத்துகிறார்கள் ...

      மிக்க நன்றிகோ மதிக்கா

      கீதா

      நீக்கு
  14. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவில் தங்களது அவகேடோ பழ சட்னிகள் செய்முறைகள் நன்றாக உள்ளது. இந்த பழத்தைதான் பட்டர் ஃப்ரூட் என்கிறார்களா? இந்த பழம் ஜூஸ் கடைகளில் வெள்ளை கலந்த பழுப்பு கலரில் இருந்தது. ஆனால், நீங்கள் பதிவில் காண்பித்த பழம் பச்சை கலரில் உள்ளது. இல்லை அது வேறு பழமா..? அதனால்தான் இந்த சந்தேகம்...! ஒரிரு தடவைகள் வெளியில் செல்லும் போது ஜூஸ் கடைகளில் இதை சாப்பிட்டுள்ளேன். இதன் சுவை எனக்கு மிகவும் பிடித்தது. அடிக்கடி சாப்பிட்டதில்லை. ஒத்துக் கொள்ளாமல் போய் விடுமோ என்ற பயந்தான். .

    நீங்கள் இந்த பழத்தை வைத்து செய்த இரு முறையிலான சட்னிகளும் நன்றாக உள்ளது. காணொளியும் கண்டேன். அதிலும் விபரமாக சொல்லியுள்ளீர்கள். மிகுந்த பொறுமையுடன் செய்முறைகளை ஒவ்வொரு ஸ்டெப்பிலும் படங்கள் எடுத்து பதிவை அழகாக தந்துள்ளீர்கள். நான் இந்த பழம் கிடைத்தால் (வீட்டில் வாங்கி வந்தால்) கண்டிப்பாக இதே முறையில் செய்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    இன்று காலையிலிருந்து ஏதேதோ வேலைகள். எப்போதும் போல் பதிவுலகிற்கு வர இயலவில்லை. தாமதமான வருகைக்கு மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அக்கா பாட்டர் ப்ரூட் என்பதுதான் இது. அக்கா இது வெளியில் பச்சை...உட்புறம் மஞ்சள் கலந்த கிரீம் கலரி ல இருக்கும். வெண்ணெய் போன்று. முதல் படங்களில் காட்டியுள்ளேன்...குடைந்து எடுப்பது. அப்படிக்குடையும் போது சில சமயம் தோலின் கொஞ்சம் வன்றுவதால் குடைந்து வைத்திருப்பது பச்ச நிறம் கலந்து இருப்பது போல் இருக்கு. கடைகளில் மெளாப்ள குடைந்து எடுத்து செய்யறாங்களா இருக்கலாம்.

      சக்கரை சேர்க்காமல் சாப்பிடுங்கள். இது சுகருக்குப் பிரச்சினை இல்லை. என்றாலும் உங்களுக்குப் பிடித்தா ிடித்திருந்தால், உடல் ஏற்றுக்கொண்டால்.சாப்பிடலாம்.

      மிக்க நன்றி கமலாக்கா.

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!