வியாழன், 10 அக்டோபர், 2024

கொலுகொலு குளுகுளு சார்மிங் பியூட்டிஃபுல் சுண்டல்...

 சுண்டலின் கவர்ச்சி இந்த முறை அதிகம் இல்லாமல் போனதற்குக் காரணம் எங்கள் வீட்டிலேயே கொலு வைத்து விட்டதுதான்.


மருமகள் கொலு வைக்க ஆசைப்பட்டதால் துணிந்து இறங்கிவிட்டோம்.  எடுத்த உடனேயே ஏழு படிகள்.  சம்பந்தி அனுப்பிய பொம்மைகள் தவிர்த்து மயிலை சென்று நாங்களும் கொஞ்சம் பொம்மைகள் வாங்கினோம்.  படிகள் அமைப்பதற்கு முன் அங்கிருந்த பெரிய சோஃபாவைப் பிரித்து எங்கே தள்ளுவது என்பதே முக்கால் நாளை இழுத்தது.

எப்போதும் பாஸின் உறவு வகையான இந்த கொலுதான் நாங்கள் செல்லும் வீடுகளில் பெரிய கொலுவாக இருக்கும்.  


இந்த முறை அதை ரசித்து விட்டு இரண்டு மூன்று வீடுகளுக்குப் பிறகு தங்கையின் உறவு வகையில் இந்த வீட்டுக்கு போனால், இருகோடுகள் தத்துவம் போல இந்த கொலு வென்றது.  அந்த ஹாலின் மூன்று புறமும் வைத்திருந்தார்கள்.




வரிசையாக சுண்டல் கலெக்ஷனுக்கு போகும்போது சட்சட்டென அடுத்தடுத்த வீடு முடித்தால்தான் நிறைய வீடுகள் ஒரு நாளில் முடிக்க முடியும். பெரும்பாலும் சுண்டல்களை 'பேக்' செய்து வாங்கிக் கொண்டோம்!  சில வீடுகளில் பாடல் காட்சி உண்டு.  சில இடங்களில் எஸ்கேப்!  பத்தாவது படிக்கும் பெண் ஒருத்தி அருமையாக பாடியது மறக்க முடியாதது.  என்ன ராகம் என்று நம் எக்ஸ்பர்ட் கீதா ரெங்கனைக் கேட்டுக் கொண்டேன்.  அந்தப் பாடலில் அவரும் வசீகரிக்கப்பட்டார் என்று தெரிந்தது.

சென்ற சில கொலுக்களின் படங்களும், அதிலிருந்து எடுக்கப்பட்ட சிறப்புப் படங்களும் இனி...

சக்கரத்தாழ்வார் 

காகிநாடாவில் வாங்கப் பட்ட இந்த பொம்மை 7,000 ரூபாயாம்.




கோபியர் கொஞ்சும் ரமணா....

நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்...

பச்சை ஊஞ்சலில் ஆடினார்... பாசப்பாட்டு பாடினார்...

செல்லப்பிள்ளை 

தோள்களிலே தூக்கி வந்தான் ராமலக்ஷ்மணனை...


திரையின்றி நிற்கின்றாய் கண்ணா...  உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்... 

நின்ற .களைப்பு தீர...

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் ஊஞ்சலிலே பிள்ளையைப்போல் மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ....



குகனோடு ஐவரானோம்....


வண்ணக்குதிரை வாகனமாக ஊர்வலமாக நான் வருவேனே...


வரதா...  வரதா...  .அத்திவரதா..


வீட்டில் ஒரு பையன் ப்ளஸ் டூ பரீட்சை எழுத இருப்பதால் இந்த வீட்டில் இந்தமுறை சிம்பிள் கொலு.  இல்லாவிட்டால் ஆர்ப்பாட்டமாய் இருக்கும்.

சில வீடுகளில் நூற்றாண்டுகளைக் கடந்த பொம்மைகள் உண்டு.  இங்கு நடுவில் இருக்கும் அஷ்டலஷ்மி செட் 40 வருட பழசு.






காதல் கிளியே...












மகன் மதுரையிலிருந்து வாங்கி வந்த, நடுவில் நிற்கும் இந்த நான்கு பொம்மைகள் யாரென்று அவர்களுக்கே தெரியவில்லை!


வித்தியாச கிருஷ்ணா....

ஆதிசிவன் தாள்பணிந்து அருள்பெறுவோமே...

தந்தைக்கு மந்திரத்தை சாற்றி பொருளுரைத்த முந்துதமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்.. 



செட்டாக, பெரியோர்களை மட்டும் வைத்து ஒரு கொலு...

நான் பார்த்த வித்தியாசமான பூஜை அறை.  கொசகொசவென நிறைய படங்கள் எல்லாம் இல்லை.  அளவாய் அழகாய் அமைக்கப்பட்ட சில தெய்வங்களின் ப்ரதிமைகள்.


பூஜை அறையின் கதவை மூடியதும்....








\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

நியூஸ் ரூம் 


பானுமதி வெங்கடேஸ்வரன் 

-  டில்லியில் பிரபல மாலில் ஆர்டர் செய்யப்பட்ட உணவை டெலிவரிக்காக வாங்கச் சென்ற சொமேட்டோ சி.இ.ஓ., தீபீந்தர் கோயல் அலைக்கழிக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

-  அமெரிக்காவில் 18 ஆண்டுக்கு முன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் போட்டோவை ஏ.ஐ., கேரக்டராக உருவாக்கியிருப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ந்து போயினர்.

-  வாங்கிய கடனைக் கொடுக்காததால் மதுரையில் ரூ.3 லட்சம் கேட்டு கட்டட பொறியாளர் கடத்தப்பட்ட விவகாரத்தில் சில மணி நேரத்திலேயே அவரை மீட்டு 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

-  ஸ்டாக்ஹோம்: இயற்பியலுக்கான நோபல் பரிசுஅமெரிக்காவின் பிரி்ன்ஸ்டன் பல்கலை விஞ்ஞானி ஜான் ஜே ஹாப்பீல்டு மற்றும் கனடாவில் வசிக்கும் பிரிட்டன் விஞ்ஞானி ஜெப்ரே ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. செயற்கை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் மிஷின் லேர்னிங் தொடர்பான கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

-  ஆசிய நாடான சிங்கப்பூரில் அமைச்சராக இருந்தவர், இந்திய வம்சாவளி ஈஸ்வரன், 62. மிக நீண்ட அரசியல் அனுபவம் உள்ள இவர், அமைச்சராக இருந்தபோது 2.60 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.  அவருடைய பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, தனி சிறை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இது, 74 சதுர அடி பரப்பளவு உள்ளது; ஒரு பாய், இரண்டு போர்வைகள் வழங்கப்படும். வாரத்தில் இரண்டு முறை குடும்பத்தாரை சந்திக்கலாம். மேலும், நான்கு மின்னணு கடிதத்தை அனுப்பலாம்.  

அது நாடு..  அது சட்டம்.  ஆனா அங்கேயும் நம்மாளுதான் ஊழல் செஞ்சுருக்கான்.

-  ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யுமான முகமது அசாருதீன், 61; ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக, 2019 - 22ல் இருந்தார். அப்போது கிரிக்கெட் சங்கத்தில், 20 கோடி ரூபாய் நிதி மோசடிகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.  இது தொடர்பாக மாநில போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறது. இதில் நடந்துள்ள பணமோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, அசாருதீனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.  

திருந்தவே மாட்டாரா அசார்?

-  காத்மாண்டு: நேபாளத்தில், தவுலகிரி மலையில் ஏறிய ரஷ்யாவைச் சேர்ந்த ஐந்து மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர்.  ரஷ்யாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள், கயிறு வாயிலாக தவுலகிரி மலையின் உச்சிக்கு சமீபத்தில் செல்ல முயன்றனர். சில மணி நேரங்களுக்கு பின், மலையடிவார முகாம் உடனான தொடர்பை அவர்கள் இழந்தனர். இதையடுத்து, அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

-  பெய்ரேலி: உத்தரப்பிரதேசத்தில் வயிற்று வலியால் துடித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த 2 கிலோ முடியை அகற்றினர்.  அந்த பெண்ணுக்கு அரிய உளவியல் பாதிப்பு இருந்திருக்கிறது. இந்த பாதிப்புக்கு டிரைகோலோடோபேமனியா என்று பெயர். இதுபோன்ற பாதிப்பை உடையவர்கள் தன்னை அறியாமலே முடியை சாப்பிடுவார்கள். சிறுவயதில் இருந்தே இந்த பெண்ணுக்கு இத்தகைய பாதிப்பு இருந்திருக்கிறது. பெரேலி பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் இத்தகைய பாதிப்பு கொண்ட ஒரே பெண் இவர்தான்.

சென்னை:'ரூட் தல' விவகாரத்தில் நடந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சென்னை மாநிலக் கல்லுாரி மாணவர் சுந்தர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்தாக்குதலில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

கர்நாடகா,சாம்ராஜ்நகர்: நள்ளிரவில் பூட்டை உடைத்து கடைகளில் புகுந்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை சேதப்படுத்தியதோடு,'கண்காணிப்பு காமிராக்களை அப்புறப் படுத்துங்கள், இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று மிரட்டல் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கின்றனர்.

புதுடில்லி: டில்லியில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குப் சென்ற இரு சிறுவர்கள் டாக்டர் ஜாவேத் அக்தர் துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு  தப்பிச் சென்றிருக்கின்றனர்.

கவிஞர் மு.மேத்தா, பின்னணி பாடகி பி.சுசிலா ஆகியோருக்கு 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப் பட்டது. இவர்களுக்கு விருதுடன் ரூ. பத்து லட்சத்திற்கான காசோலை, நினைவுப் பரிசு முதலியன வழங்கப்பட்டன.

கான்பூர்: இஸ்ரேலில் இருந்து கொண்டுவரப்பட்ட டைம் மிஷின் எனப்படும் கால இயந்திரத்தின் வாயிலாக இளமையை மீட்டெடுக்கலாம். இந்த கருவி வாயிலாக ஆக்ஸிஜன் தெரபி அளிக்கப்படும் என்றும், அதிலிருந்து வரும் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசித்தால், 60 வயது முதியவர் 25 வயது இளைஞரைப் போல காட்சியளிக்க முடியும் என்றும் கூறி முதியவர்களிடம் 35 கோடி ரூபாய் வரை ஏமாற்றிய தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். அந்த தம்பதியினர் வெளிநாடு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

வெங்காயம்,தக்காளி, உருளை விலையில் விவசாயிகளுக்கு கிடைப்பது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. சந்தைப்படுத்துதலில் சீர்திருத்தம் தேவை - ஆர்.பி. ஐ.

தாராசுரம்: ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் இருக்கும் இடத்தில் புதிதாக மற்றுமொரு டாஸ்மாக் திறக்கப் பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண்கள் டாஸ்மாக் ஊழியரை கடைக்குள் வைத்து பூட்டி ஆர்பாட்டம் செய்தனர்.

சென்னை:  விமானப்படை  சாகச நிகழ்வுகளை காண மெரீனாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். அவர்கள் போட்டுவிட்டு போன குப்பை 21.5 டன் மட்டுமே - ஸ்வச் பாரத்!

சட்டீஸ்கரில் ஒரு கிராமத்தில் SBI ன் கிளை தொடங்கப் போவதாக ஒரு அலுவலகத்தை செட் அப்  செய்து, வாசலில் போர்ட் மாட்டி, பட்டம் பெற்ற சில இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, நேர்முகத்தேர்வு நடத்தி, எஸ்.பி.ஐ.யின் லெட்டர் பேடில் அப்பாயின்மெண்ட் ஆர்டரும் வழங்கப் பட்டிருக்கிறது. அந்த இளைஞர்களிடம் ஆறு லட்சம் வரை டெபாஸிட் வேறு வாங்கியிருக்கிறார்கள். பக்கத்து ஊர் எஸ்.பி.ஐ. கிளையில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் அங்கு சென்ற பொழுது, அந்த மேலாளரிடம் தங்கள் ஊரில் புதிய கிளை வந்திருப்பதாக  கூற, சந்தேகப்பட்ட வங்கி மேலாளர் விசாரிக்க, தொடங்கப்பட்டதாக செல்லப்பட்ட வங்கி டுபாகூர் என்று அறிந்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருக்கிறார்கள். - கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் இல்லையா?

===============================================================================================




தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை நடித்தவர் நெப்போலியன். தனது மூத்த மகன் தனுஷுக்கு ஏற்பட்டுள்ள தசை சிதைவு நோய் காரணமாக சிகிச்சை செய்ய அமெரிக்காவுக்கு சென்றவர், பின்னர் அங்கே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். 

அதோடு தனது மகன் தனுஷுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்து, சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடத்தினார்.  ஆனால் தசை சிதைவு ஏற்பட்டுள்ள மகனுக்கு எதற்காக இவர் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பலரும் சோஷியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள்.  இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் இன்ஸ்டாவில் ஒரு உருக்கமான வேண்டுகோள் வைத்திருக்கிறார்.  அதில்,

"அன்பு நண்பர்களே...  உலகம் எங்கும் வாழும் தமிழ் சொந்தங்களே...  இந்தியாவில் பிறந்தாலும், சூழ்நிலை காரணமாக அமெரிக்காவில் வசிக்கிறோம்.  ஒரு வருடமாக ஜப்பான் செல்ல திட்டமிட்டு ஆறு மாதங்களாக அதற்கு செயல்பாடும் கொடுத்து, ஒரு மாத பயணம் செய்து, எனது மகனின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறோம்.  

எங்களது வாழ்வை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.  நம்முடைய பெற்றோரின் கனவுக்காகவும், நமது கனவுக்காகவும், பிள்ளைகளின் கனவுகாகவும் அவசியம் வாழ்ந்தாக வேண்டும்.  கடமையை நிறைவேற்ற வேண்டும்.  வாழ்க்கை என்பது ஒரு முறைதான். அதை வாழ்ந்து தான் பார்ப்போமே.. உண்மை தெரியாமல், கருத்து சுதந்திரம் என்ற பெயரில், மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் விமர்சனம் செய்யாதீர்கள்.  உங்களைப் போன்று எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது.  ஒரு பக்க சொல், ஒரு யானை பலம்.  எல்லாரையும் வாழ்த்துங்கள். பிடிக்கவில்லை என்றால் இழிவாக மட்டும் பேசாதீர்கள். 

ஏனென்றால் அது ஒரு நாள் உங்களுக்கே திரும்பி விடும்.  எண்ணம் போல் தான் வாழ்க்கை அதனால் சிந்தித்து செயல்படுங்கள்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

அக்டோபர் ஒன்றாம் தேதி சர்வதேச காஃபி தினத்தை முன்னிட்டு Face Book ல் பகிர்ந்திருந்தேன்.  இங்கும் இப்போது பகிர்கிறேன்.


காஃபியை மிஞ்சின பானமும் இல்லை; கந்தனை
மிஞ்சிய கடவுளும் இல்லை என்று பழமொழி இருக்கிறது!

- பாலில் தண்ணீர் விடாமல் காய்ச்சி காஃபி போடுவது எனக்கு அவ்வளவு விருப்பமில்லை. ஏதோ ஒரு தடிமனான சுவர் நாக்குக்கு காஃபிக்கும் நடுவில் இருப்பது போல தோன்றும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு காய்ச்ச வேண்டும். நிறைய அல்ல.
- முதலில் இறங்கும் டிகாக்ஷன் துளிகளில் காஃபி கிடைப்பது பாக்கியம். ஏனெனில் அதை அப்படியே முதலில் செலவு செய்துவிட்டால், வீட்டில் மற்ற அங்கத்தினர்கள் காஃபி குடிக்கக் காத்திருந்தால் இப்படி கிடைப்பதில் சிரமம் இருக்கும். ஏனெனில் மற்றவர்களுக்கு இரண்டாம் தர காஃபிதான் கிடைக்கும்.
கள்ளிச் சொட்டு என்பார்கள். ஏனோ எனக்கு அந்த பதம் பிடிப்பதில்லை.
- காஃபியில் சர்க்கரையை அள்ளித்தூவி அதை பாயாசமாக மாற்றிக் குடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. காஃபி என்பது கசப்பாக இருக்க வேண்டும். தேவையானால் ஒரு சிட்டிகை ஒரு கண் துடைப்புக்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்..!
- சிலபேர் காஃபியை ஆற்று ஆற்று என்று ஆற்றி டபராவிலிருந்து டம்ளருக்கு மாற்றி முகத்தை அண்ணாந்து, வாயைத் திறந்து, தண்ணீர் குடிப்பது போல காபியைக் குடித்து முடித்து விட்டு, டபரா டம்ளரை கீழே வைப்பார்கள். ஆனால் காஃபி கேட்கும்போது என்னவோ சூடாகத்தான் கேட்பார்கள்! இப்படியா காஃபி குடிப்பது?
- காஃபி குடிக்கிறேன் என்று ஒரு லோட்டா நிறைய ரொப்பிக் கொண்டு குடிப்பதும் பிடிக்காது. வயிற்றை அடைத்து விடும். அளவுக்கு மீறினால் அதுவும் அலுத்துவிடும்! ஒருமுறை குடித்தால் மறுமுறைக்கு வாய் ஏங்காது.
மாறாக, 50 எம் எல் காஃபி எடுத்து, சூடு குறையாமல் கொஞ்சம் கொஞ்சமாக நாவில் விட்டுப் பாருங்கள்... சூடும் குறையாது, சுவையும் அலுக்காது. அப்பப்போ இப்ப டி ஸ்மால் டோஸ் அடிக்கலாம்!
- நுரைபொங்க காஃபியா. நுரையில்லாத காஃபியா...
எனக்கு நுரையுடன்தான் வேண்டும்.
சிலபேர் நுரையில்லாமல் கேட்பார்கள். நுரை இருந்தால் வழித்து எடுத்து கீழே எறிவார்கள்..
ஆனால் இந்த நுரை என்பது பால் பொங்கியவுடன் மேலே சேர்ந்து மூடியிருக்குமே நுரை, அதிலிருந்து எடுக்கக் கூடாது. காபியை சூடாகக் கலந்த உடன் ஒரு ஆற்று ஆற்றியவுடன் வருமே அந்த நுரை.
- பித்தளை டம்ளரில் குடித்தால் காஃபிக்கு ஒரு ஸ்பெஷல் ஃபீல் வருவது என்னவோ உண்மைதான். ஆனால் தரமான காஃபியாக இருக்க வேண்டும்!
- இன்னொரு முக்கியமான விஷயம்... சிக்கரி சேர்க்க மாட்டேன் என்று சொல்ல மாட்டேன். அதன் ருசியைவிட, எனக்கு அளவாக சிக்கரி சேர்த்து டிகாக்ஷன் தயார் செய்வதுதான் பிடித்திருக்கிறது. நிறமும் வரும், சுவையும் வரும். சுவையை enhance பண்ணிக்கொடுக்கும்.அரை கிலோ காஃபிப்பொடிக்கு 50 கிராம் சிக்கரி .
- கண்முன்னே காஃபிபொடி அரைத்து வாங்குவதையே விரும்புகிறேன். PB மற்றும் ஸ்பெஷல் ப்ளான்டேஷன் A இரண்டும் வாங்கும் மொத்த அளவில் பாதி பாதி கலந்து, அரைக்கும்போதே அதில் சிக்கரி சேர்த்து அரைத்து வாங்கி விடுவேன்.
- இன்ஸ்டன்ட் காஃபி பிடிக்காது.  ஃபில்டரில் டிகாக்ஷன் இறக்கி (பித்தளை ஃபில்டராக இருந்தால் கண்ணுக்கு / மனதுக்கு ஒரு நிறைவு!) பாலில் கலந்து குடிப்பதையே விரும்புகிறேன். ஒரு முக்கியமான விஷயம்... டிகாக்ஷன் இறங்கவில்லை என்று ஃபில்டரை லொட்டு லொட்டு என்று தட்டக் கூடாது.
- சிலர் சர்க்கரை குறைச்சல் என்றாலே காஃபியில் ஏராளமான டிகாக்ஷன் விட்டு கடும் காப்ப்ப்பியாக மாற்றிக் கொண்டு வந்து வைப்பார்கள். கர்ர்ர்ர்..... பாலில் டிகாக்ஷன் கலக்கும் அளவும் ஒரு கலை.

இன்று சர்வதேச காஃபி தினம் என்பதால்தான் இவ்வளவு தூரம் உங்களை Bore அடித்திருக்கிறேன். எனவே சிலருக்கு காஃபி குடித்தால்தான் கக்கா வரும் கதையெல்லாம் எழுதப்போவதில்லை!
#International Coffee Day

  =================================================================================================

Facebook ல் நெற்குப்பைத்தும்பி அவர்கள் பகிர்ந்த பதிவிலிருந்து....

Answer by : வி.ராஜமருதவேல் கொடிக்கமுண்டார்
·
கேள்வி::::::
கம்பராமாயணத்தில் ராமன் சீதைக்கு தாலி கட்டினாரா? தாலி கட்டும் வழக்கம் அப்போது இல்லை என்று வரலாறு சொல்கிறதே.
விடை :::::
கம்ப ராமாயணத்தில் திருமணம் நடந்தது என்ற வாக்கியம் வருகிறறே. நீங்கள் திருமணம், கல்யாணத்திற்கு போகிறேன் என்று சொல்லுவீர்களா? அல்லது தாலி கட்டுறதுக்கு போறேன்னு சொல்லுவீர்களா? கம்பர், வால்மீகி பொதுவாக கூறி விட்டார்கள். ஆனால், இளங்கோவடிகள் தெளிவாக கூறினார். கம்பரை விட ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவர்.
வெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தன
அகலுள் மங்கல அணி யெழுந்தது
மாலைதாழ் சென்னி வயிரமணிvத் தூணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார் கண் நோன்பென்னை
இரண்டாயிரம் வருடம் முன்பே பெரிய வாயோதிக ஐயர், வேதம் முழங்கி மங்கள நாண் அதான் தாலிக் கயிறை எடுத்துக்க கோவலன் கண்ணகிக்கு கட்டி தீ வலம், அதான் அக்கினி குண்டத்தை வலம் வந்தான்.
இரண்டாயிரம் வருடம் முன்பே தாலி கட்டும் முறை இருந்தது. அதுவும் வேதம் படித்தவர் தான் செய்து வைப்பார்.
அடுத்தது புறநானுறு.
மிகப் பழமையான புறநானூற்றைப் பார்ப்போம். புறநானூற்றில் 127-ம் பாட்டில்,
“ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின் றென்ப ஆய் கோயில்”
அதாவது வள்ளல் ஆயின் மனைவி கழுத்தில் உள்ள தாலியை தவிர மற்ற நகைகளை பிறருக்கு கொடுத்தவள் என்று கூறியுள்ளனர்.
நெடுநல்வாடையில்,
“ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்
பின்னமை நெடுவீழ் தாழத் துணை துறந்து”
நெடுஞ்செழிய பாண்டியன் போருக்குச் சென்றிருந்த போது அவனுடைய மனைவியான கோப்பெருந்தேவி மன்னன் கூட இருந்த போது முத்துமாலை அப்பெருந்தேவியின் மார்பில் அணி செய்திருந்தது மாறி இப்போது அவள் மார்பில் தாலி நாண் ஒன்று மட்டும் தாழ்ந்து தொங்குகிறது என்ற பொருள்பட பாடல் கூறுகிறது. பின் என்பது பிடரி; பிடரியைச் சுற்றி மார்பில் தாலி தொங்குதல் தாலி ‘பின்னமை நெடுவீழ்’ எனப்பட்டது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ‘குத்துதல் அமைந்த நெடிய தாலி நாண்’ என்று உரை எழுதினார்.
இது போல பதினெண் கீழ்க் கணக்கில் ஒன்றான திணைமாலை நூற்றைம்பதில் 66 – ஆம் பாடலில் இப்படி ஒரு வரி வருகிறது:
“பவளக் கொழுந்தின் மேல் பெண் தாலி பாஅய்த்
திகழக் கான்றிட்டன”
இவ்வாறாக சங்க இலக்கியங்களில் தாலி பற்றி பல இடங்களில் பேசப்படுகிறது.
வரலாறு தாலி காட்டும் வழக்கம் இல்லை என்று, எப்போது கூறிற்று??

=================================================================================

நேற்று சர்வதேச அஞ்சல் தினம்.  அதையொட்டி முகநூலில் நான் இரண்டு வருடங்களுக்கு முன் பகிர்ந்திருந்த ஒன்று....

1960 கள் ... 1970 கள் ஏன், 80 களிலும் சொல்லலாம்..
காலை ஒன்பதரையைத் தாண்டி பத்து மணி பத்தே கால் மணி என்று ஆகிக் கொண்டிருக்கிறது.
கணவர் அலுவலகம் சென்றிருக்க, குழந்தைகள் பள்ளி சென்றிருக்க, இல்லத்தரசிகள் மிகுந்த ஆவலுடன் ஒருவரை எதிர்பார்த்து நின்றிருப்பார்கள். கைகள் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தாலும் காதுகள் ஒரு சத்தத்துக்காகக் காத்திருக்கும். வீட்டில் மூத்த அங்கத்தினர்கள் இருந்தால் அவர்களும் எதிர்பார்ப்போடு நிலைகொள்ளாமல் உள்ளறையிலோ , முற்றத்திலோ காத்திருப்பார்கள். ஈஸிசேரில் அமர்ந்து கையில் விசிறியும், கண்ணில் எதிர்பார்ப்புமாக....
வந்து வாசலையும், வாசலில் நின்று தெருமுனையையும் எட்டிப் பார்ப்பார்கள்.
"கண்லயே காணோமே...."
யாரை?
போஸ்ட்மேன்!
நிறைய வீடுகளில் சந்தோஷங்களையும், சில வீடுகளில் துக்க, வருத்தங்களையும் விநியோகிப்பவர். ஊரில் எல்லோருக்கும் உறவானவர்.
மூன்று வீடு தள்ளி அவர் வருவது கண்ணில் பட்டுவிட்டால் போதும்.. காய்ந்து கொண்டிருக்கும் துணியை இழுத்து விட்டபடி, செடிகளிலிருந்து இலைகளை பறித்தபடி..என்று வாசலில் வந்து நின்று விடுவார்கள். ஈஸிச்சேர் தாத்தாவும் படிக்கட்டில் நின்றிருப்பார். தபால்காரரிடமிருந்து கடிதங்களை யார் வாங்குவது என்பதிலேயே போட்டி நிலவும்.
"பார்த்து.. பார்த்து.. கிழிஞ்சிடப்போவுது..."
உறவுகளிடமிருந்தும் நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்களுக்கு அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது அப்போது. வரவேற்பு இருந்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்து விட்டால் மகிழ்ச்சி வெள்ளம்தான், திருவிழாதான். நீ இதைப் படி, நான் அதைப் படிக்கிறேன் என்று பிரித்துக் கொள்வதில் போட்டி. ஆனால் கடைசியில் ஒவ்வொன்றாகப் பிரித்து ஒருவர் வாசிக்க, நடுநடுவே உச் கொட்டிக்கொண்டும் சபாஷ், அச்சச்சோ என்று உணர்ச்சிகளைக் காட்டிக்கொண்டும் மற்றவர்கள் கேட்பது சுகம்.
கணவன் மனைவிக்கு எழுதும் கடிதங்கள் பொதுவில் படிக்கப்படாது. அதை அந்த மனைவி ஜாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்திக் கொள்வதை மாமியார் ஓரக்கண்ணால் கவனிப்பார்.
மதியத்துக்கு மேல் ஜாடையாக மருமகளை பார்த்து "என்ன எழுதி இருக்கான் அவன்?" என்று தாங்கமுடியாமல் ஒரு கேள்வி விழும்.
"எல்லோருக்கும் எழுதிய லெட்டரில் இருப்பதைதான் எனக்கும் எழுதி இருக்கார்"
மாமியாரின் முகவாய் என்ன செய்யும் என்பது உங்களுக்குத் தெரியும்!
சில கடிதங்களில் சில வரிகள்... மீண்டும் தனிமையில் எடுத்துக் படிக்க வைக்கும். அல்லது கண்ணீர் வரவழைக்கும். அல்லது கோபத்தில் அந்தத் வரிகளே கசங்கிக் கிழியும்!
சில வரிகள் பென்சிலால் அல்லது சிவப்பு மையினால் அடிக்கோடிடப்படும். பதில் எழுதும்போது சிறப்பு கவனம் பெறவேண்டி...
மாலை அலுவலகத்திலிருந்து கணவர் வந்தததும் கைகால் கழுவிக்கொண்டும் வர, வந்து அமர்நததும் அவரும் ஆவலுடன் கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் படிப்பார். மறுபடி கடிதம் படிக்கும் படலம். யார் எந்தக் கடிதத்துக்கு பிரையாரிட்டி தருகிறார்கள் என்று கவனிக்கப்படும்!
ஏரியாவுக்குள் வரும்வரைதான் போஸ்ட்மேனால் சைக்கிளில் அமர்ந்து பெடல் பண்ணி வரமுடியும். அப்புறம் ஒவ்வொரு வீடாய் தள்ளிக் கொன்டுதான் வரவேண்டும். எத்தனை நூறு வீடுகள் இருந்தாலும் அவர்கள் பெயர், சுய விவரங்கள், அவர்கள் தேவை போஸ்ட்மேனுக்கு அத்துபடி.
"என்னம்மா.. பையனுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அடிச்சுட்டாங்க போல..."
"மருமகளுக்கு குழந்தை பொறந்துடுச்சாமா?"
"சார் எப்போ வர்றாராம்? இந்த வாரமாவது லீவு கிடைச்சுதாமா?"
"உங்களுக்கு இன்னிக்கி ஒண்ணும் லெட்டர் வரலை பெரீம்மா..." சங்கடத்துடன்தான் ஒலிக்கும் அவர் குரல். பெரீம்மா முகத்தில் கவியும் ஏமாற்றம் காணப் பிடிக்காமல் தலைகுனிந்து அடுத்த வீட்டுக்கு நகர்வார்.
சில வீடுகளில் ரெகுலராக மோரோ, காபியோ அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கும்.
மே மாதங்களில் பள்ளிப்பிள்ளைகளுக்கு அவர் பெரிய பூச்சாண்டி! ரிசல்ட் கார்ட் கொண்டுவரும் பூதம்!
இப்போதைய காதலர்களிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும். செல்போன் இருக்கிறது, வாட்சாப் இருக்கிறது, ஸ்கைப் இருக்கிறது, வாட்சாப் வீடியோ எல்லாம் இருக்கிறதுதான்... உங்களுக்குள் லெட்டர் பரிமாறிக் கொள்வதுண்டா? அது இல்லா விட்டால் என்ன சுவாரஸ்யம் சொல்லுங்கள்...
ஆனால் பெரும்பாலும் திருமணத்துக்கு முந்தையதான காதல் கடிதங்கள் போஸ்ட்மேனால் தரப்படுவதில்லை. அது ஒன் டு ஒன் சேவைதான். சிலசமயங்களில் சாக்லேட் சார்ஜுதன் தம்பி தங்கையரால் தரப்படும்!
எளிமையான இனிமைகளை இன்று நாம் இழக்கிறோம். இழந்தால்தானே அருமை தெரிகிறது..
#உலக அஞ்சல் தினம்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

கனவா கவிதையா?


=====================================================================================================

நண்பன் தொலைபேசினான்.  வீட்டில் கொலு வைத்திருக்கிறானாம்.  ஒன்பதாவது மாடியில் 199 ம் நம்பர் வீடாம்.. வரச்சொல்லி அன்புடன் அழைத்திருக்கிறான்.  கட்டாயம் வரணுமாம்.  பின்குறிப்பாயும் ஒன்று சொன்னான்.  லிஃப்ட்  வேலை செய்யவில்லையாம்.  சாயந்திரம் கிளம்பணும்!!


=========================================================================================================================


பொக்கிஷம் 


எம்ராய்டரி போட்டியில் முதல் பரிசு பெற்றவர் யார் என்று பார்க்கவும்.  புன்னகைக்க வைக்கும் ஆச்சர்யம்.


அரசு அலுவலகங்களில் 'காதி' யிலும், 'கோ - ஆப்டெக்ஸி'லும் தீபாவளி சமயம் ஆயிரம் ரூபாய்க்கு கடனில் துணி எடுக்க அனுமதி தருவார்கள்.  வட்டியில்லா கடன்.  இப்போதெல்லாம் கிடையாது!  கோ ஆப்டெக்ட்ஸில் போர்வை, பெட்ஷீட் எடுப்போம்.



திராவிடமாடல் ஒண்ணும் புதுசு இல்லை போலவே....  

ஐயா...  நகைச்சுவையா இது....  நகைச்சுவையா இது என்று கேட்கிறேன்...!   

இப்படி ஒரு துணுக்கு எழுத்தாளர் / ஓவியர் நான் கேள்விப்பட்டதே இல்லையாக்கும்!

76 கருத்துகள்:

  1. நியூஸ் ரூம் செய்திக் குவியலில் 10-வது செய்தி.
    கவிஞர் மு.மேத்தா பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியிருக்க --

    எனற செய்தியைப் படித்துத் திடுக்கிட்டேன்.
    இதில் இரண்டு திருத்தங்கள்:

    1. பின்னணிப் பாடகி என்றிருப்பதை பின்னணிப் பாடகர் என்று
    திருத்தி விடவும். (மரியாதை நிமித்தம்)
    2. ஆகியிருக்க என்ற வார்த்தையை ஆகியோருக்கு
    என்று மாற்றி விடவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகியோருக்கு என்பதை சரி செய்து விட்டேன்.  பாடகி என்பதில் தவறில்லை.  ஊடகங்கள் யாவற்றிலும் அப்படியே சொல்கிறார்கள். 

      நீக்கு
    2. ஊடகங்கள் சொன்னால்? நாம் சொல்ல வேண்டுமா, என்ன?
      அவர் திறமைக்கும், இழையும் குரல் இனிமைக்கும், நீண்ட கால
      திரையுலக அனுபவத்திற்கும், நாம் அவர் மேல் கொண்டுள்ள மரியாதைக்கும் பாடகர் (இது பாடகிக்கு ஆண்பால் இல்லை; அவர் என்று குறிப்பிடுவது போலத் தான்) என்று அழைப்பதே முறை.

      நீக்கு
    3. பாடகி என்று குறிப்பிடுவதில் மரியாதைக் குறைவு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

      நீக்கு
    4. //கவிஞர் மு.மேத்தா பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியிருக்க ../ தவறுக்கு வருந்துகிறேன். நாம் எழுதியதை நாமே திருத்தும் பொழுது என்ன எழுதியிருப்போம் என்ற நினைப்பிலேயே படித்து விடுகிறோம்.
      தவறை திருத்திய ஸ்ரீராமுக்கு நன்றி.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    தங்கள் வீட்டு கொலு அழகாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நவராத்திரி வாழ்த்துகள்.

    கொலு படங்களும், அதன் தொடர்ச்சியாக பாடல் வரிகளுடன் அருமையாக உள்ளது. ஒவ்வொரு வீட்டு கொலுவையும் ரசித்தேன். எத்தனை விதமான பொம்மைகள். பார்க்கப் பார்க்க கண்களை கவரும் வண்ணம் அமர்க்களமாக இருக்கிறது.

    தங்கள் நண்பரின் 9 தாவது மாடி வீட்டு கொலுவுக்கு எப்போது போகப் போகிறார்களோ? அந்த வீட்டின் அமைப்பே ஒரு கொலு மாதிரிதான் உள்ளது. ஹா ஹா.

    அத்தனையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா..  படங்கள் நிறைய இருந்ததால் சிலவற்றை மட்டும் தெரிவு செய்து வெளியிட்டேன்.

      நீக்கு
  4. இங்கு அமெரிக்காவில் என் பெண் வீட்டிலும் 5 படிகள் கொண்ட கொலு.
    நேற்று வேர்கடலை சுண்டல். இன்று கடலைப்பருப்பு சுண்டல்
    நெய்வேத்தியம்..

    பதிலளிநீக்கு
  5. சட்டீஸ்கர் செய்தி அதிர்ச்சி. ஏற்கனவே வடக்குப் பகுதியினரின் கைதேர்ந்த ஆன்-லைன் பணச்சுருட்டல் செய்திகளை அறிந்திருக்கிறோம். எங்கே செல்கின்றன, வட மாநிலங்கள்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிது புதிதாக யோசித்து ஃபிராட் செய்கிறார்கள்!

      நீக்கு
    2. வடக்குப் பகுதியினர் என்பது உங்க்கள் பதிலில் விட்டுப் போயிற்று.

      நீக்கு
    3. வடக்கென்ன, தெற்கென்ன...  எல்லாம் ஒன்றுதான்! 

      சிங்கப்பூரில் ஈஸ்வரன்  செய்ததை படித்தீர்கள்தானே?

      நீக்கு
  6. ஹி..ஹி.. நுரை பொங்க?.. ஹோட்டல்களில் 'நுரை பொங்க' என்பது கொள் அளவை (Quantity) குறைக்கும் தந்திரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். ஹோட்டல்களில் எதிர்பார்க்கும் தரமும் எதிர்பார்க்க முடியாது. நான் சொல்வது வீட்டில்!

      நீக்கு
    2. எப்பொழுதுமே பின்னூட்டங்கள் ராஜா என்றால் அதற்கேற்ற உங்கள் பதில்கள் ராணியாக இருக்க வேண்டும்.
      கேள்விகளைப் போலவே பதில்களிலும் சுவையூட்டப் பாருங்கள்.
      இல்லையென்றால் பதில்கள் 'சப்'பென்று போய்விடும்.

      நீக்கு
    3. சிரமம்.  

      நாம் சுவாரஸ்யம் என்று நினைப்பதை எதிராளியும் அப்படியே நினைப்பார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை! கா த கு பொ கு என்று நாமாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்!!

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய செய்தியறை பகுதியும் சுவாரஸ்யம். பல செய்திகளை அறிந்து கொண்டேன். பானுமதி வெங்கடேஸ்வரன் சகோதரிக்கும் உங்களுக்கும் நன்றிகள்.

    காஃபி பதிவும், தபால் பதிவும் மிக அருமையாக உள்ளது. இரண்டையும் நன்றாக ரசித்து எழுதியுள்ளீர்கள்.தங்களின் திறமையான எழுத்து நடைக்கு பாராட்டுக்கள்

    இப்போதைய நவீன மாற்றங்களில் பால், தபால் இரண்டின் சேவைகளும் இப்போது தேவையற்றதாக ஆகி விட்டது. பால் அருந்தினால் உடல் நலத்திற்கு பல கெடுதல்கள் வருகின்றன என்கிறார்கள். தபால் வரவை ஒதுக்கி வாழ்வும் கற்று கொண்டாகி விட்டது. இனி இப்படி எழுதி படித்து ஆனந்திக்க வேண்டியதுதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுகளுக்கு, ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  8. கனவு என்பது மூளை காட்டும் சினிமா!

    வாசல் வெளிப்பூட்டைத் திறந்து வீட்டுக்குள் போவோம். அதோடு நிற்காது. சிலர் உள் அறைக்கும் பூட்டுப் போட்டிருப்பார்கள். உள் அரைக்குள் இருக்கும் இரும்பு அலமாரிக்கும் பூட்டு. அலமாரிக்குள் இருக்கும் சேஃப்டி லாக்கருக்கும் பூட்டு. மொத்தப் பூட்டுகளுக்குமான சாவிகள் கொண்டிருக்கும் குட்டி லாக்கருக்கும் பூட்டு. அந்தப் பூட்டின் சாவிகளில் ஒற்றை சாவி மட்டும் வெளியே செல்லும் பொழுது கைவசம் இருக்கும்.

    இந்த மாதிரி தான் கனவுக்குள் கனவுகள் வருவதும் ஒன்றிற்கு ஒன்று முடிச்சு போட்டு இணைப்பு கொண்டிருக்கும். ஒவ்வொன்றாக அவிழ்த்துப் பார்க்கும் பொழுது தூங்குபவரின் முகம் பார்த்தால் புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கும். எல்லாமே உடற்கூறு ரகசியத்தில் உள்ளுக்கு உள்ளே பொதித்து வைத்து பூட்டப்பட்டிருப்பவை தான். இந்த பூட்டின் சாவி மட்டும் தூங்குபவரின் மன ஆழத்தில் புதையுண்டு கிடக்கும். சாவி என்பது பெயருக்கு தான். மனம் நினைத்தால் கொட்டாவி தாலாட்டுப் பாடித் தூங்க வைத்து தன்னாலே திறக்க வைத்து சினிமா காட்டும் சக்தி வாய்ந்தது.

    பதிலளிநீக்கு
  9. கொலு படிக்கட்டுகளை கோபுரம் மாதிரி அடுக்கியது புதுமை என்றாலும் கோபுரம் படம் எடுக்கும் போது ஒரு பக்கம் சாய்ந்துவிட்டது. மேலும் சீரியல் லைட் குறுக்கே போவது நன்றாக இல்லை. ஓ போட நினைத்து போட்டது பிரண்டை கொடி ஆகிவிட்டது. சுண்டல் பாத்திரத்தை தேடினேன். கடைசி கொலு (பெரியோர்களை வைத்து) அழகாக இருக்கிறது.

    ஒரு கனவே நினைவில் நிற்பதில்லை. உங்களுக்கு கனவும், அதற்குள் வந்த கனவும் என்று சங்கிலி போல் கனவுளை கண்டது ஞாபகத்தில் வருவது ஆச்சர்யம் தான்.

    கான்கிரிட் காடு என்பது சரியான உவமை தான். அடுக்கு மாடி கட்டிடம் கிளைகளை பரப்பி கான்க்ரீட் மரமாய் நிற்கிறது.

    பொக்கிஷம் செய்தி பற்றி: அது ஒரு காலம். வீட்டில் இருந்த பெண்களுக்கு பொழுது போக்கு எம்ப்ராயடரி, க்ரோச்சே, ஸ்வட்டர் பின்னுதல், போன்ற மேல் நாடு விஷயங்கள். என்னுடைய அம்மா இதில் எல்லாம் எக்ஸ்பெர்ட். அதன் பின் 60, 70 களில் பிளாஸ்டிக் வெயர் கொண்டு கூடைகள், பொம்மைகள், போன்றவை செய்து பொழுது போக்கினார்.
    கோ-ஆப்டெக்ஸ் "எப்படி இருந்த நான்" கதையாகி விட்டது வருத்தத்திற்குரியது.
    கடைசி போட்டோ நம்முடைய "கீதா" ரங்கனுடையதா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொலுவைப் பொறுத்தவரை ப்ரொபெஷன் பீரியடில் இருக்கிறேன்!  பொம்மைகளை அடுக்கியபின் ஓ போட நினைத்ததால் அப்படி.  இனிதான் கொஞ்சம் கொஞ்சமாக அகிற்கவேண்டும்!

      கவிதைக்கு பொய்யழகு!

      கான்க்ரீட் காடு பெரிய எழுத்தாளர் யாரோ சொன்ன உவமை.  யாரென்று கேட்டு விடாதீர்கள்!!  நினைவில் இல்லை!

      எமராய்டரிக்கெல்லாம் போட்டி..  அதில் வெற்றி பெற்றிருப்பவர் ஒரு மதர் சுப்பீரியர் என்பது சிறு வியப்பு!

      // கடைசி போட்டோ நம்முடைய "கீதா" ரங்கனுடையதா? //

      ஹா..  ஹா..  ஹா...   கீதா ரெங்கன் தங்கபாமணி லெவலே வேற....

      நீக்கு
    2. ஹாஹாஹா இன்னிக்கு கொஞ்சம் எட்டிப் பார்த்து கருத்து போட வந்தா நம்ம தலை எல்லாம் உருளுதே!!!! ஹாஹாஹா முதல்ல இது கண்ணுல பட்டுவிட்டது.

      என்ன ஸ்ரீராம்....என் லெவல் எல்லாம் ஒன்றுமே கிடையாது!

      கீதா

      நீக்கு
    3. ஹா.. ஹா..  ஹா...   முதல்லேயேவா? உங்க தங்கமணி லெவல் சொன்னேன். நீங்களும் குறைந்தவர் இல்லைங்கறது எல்லோருக்கும் தெரியும்.

      நீக்கு
  10. கன்னி முயற்சி கொலு நன்றாகவே வந்திருக்கு ஸ்ரீராம். அந்த ஓம் லைட்டிங்க் அடுத்த முறை சரியா செட் பண்ணிடுவீங்க...இந்த முறை பொம்மைகள் அடுக்கிவிட்டுச் செய்ததால்...நீளமும் கம்மியாகிவிட்டது இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தமுறை ஒரு Focus Light வைக்கும் எண்ணமும் இருக்கிறது!

      நீக்கு
  11. கொலு படங்கள் அதுவும் அந்த பெரிய கொலு எல்லாமே சூப்பர்!

    இப்படிப் பெரிய கொலு வைக்க வீட்டில் இடம் வேண்டுமே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ஆமாம் ஸ்ரீராம் அந்தப் பாடல் லலிதா என்பது என் அனுமானம்...இதழில் கதை எழுதும் மெட்டில் போட்டிருக்காங்க. அந்தப் பாடல் தமிழில் எழுதப்பட்டிருப்பதால் என்னை ஈர்த்தது. அந்தப் பெண்ணும் நன்றாகப் பாடியிருந்தார்.

    முடிந்தால் அந்த வரிகளை வாங்கித்தாங்க ப்ளீஸ்! மறக்காம என்பதையும் சேர்த்துக் கொள்கிறேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுமானமா? அச்சச்சோ... நான் அங்கு தீர்மானமாக லலிதா ராகம் என்று சொல்லிவிட்டேனே..! :))

      லிரிக்ஸ் கொடுங்க என்று கேட்டதற்கு அந்த பாட்டிலிருந்து எழுதிக் கொள்ள வேண்டியது தான் என்கிறார் அவர் அம்மா சிம்பிளாக!

      நீக்கு
  13. எக்ஸ்பர்ட் கீதா ரெங்கனைக் //

    ஆ! ஆ! ஸ்ரீராம் எக்ஸ்பெர்ட் இல்லை ஸ்ரீராம். பல சமயங்களில் மண்டையை மூளைய ரொம்ப குடைஞ்சு குடைஞ்சுதான் ஹிஹிஹிஹி கண்டுபிடிப்பேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி.... ஆனால் அது கூட எனக்கு வரமாட்டேன் என்கிறதே..!

      நீக்கு
  14. முருகன் திருவருள் முன் நின்று காக்க...

    பதிலளிநீக்கு
  15. காக்கிநாடா பொம்மை - யம்மாடியோவ்...

    உழவன் பொம்மை சூப்பர்

    கோபியர், காளிங்க நர்த்தனம் எல்லாம் இறங்கி சில வருஷங்கள் ஆச்சு. நேபால் - தண்ணீரின் நடுவில் பள்ளி கொண்ட இறைவன் பொம்மை கூட வந்து 3, 4 வருடங்கள் ஆயாச்சு.

    என் தங்கை பெண்ணிடம் கேட்க வேண்டும் இந்த வருஷம் என்ன புதுசு என்று அவள் வாங்குவது உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் பார்ப்பதும் ஒரு சுவாரஸ்யம் தான் இல்லை?

      நீக்கு
  16. காளிங்கநர்த்தனம் பொம்மை மிக அழகா இருக்கு

    ஹனுமான் தோளில் ராமன் லக்ஷ்மணன் எனக்குப் புதுசு...

    குகனோடு ஐவரானோம் நான் வாங்கிய வருடம் 1994

    பெருமாள் கருட சேர்வை - முதன் முதலில் அறிமுகமான போது நான் காதியில் வாங்கினேன் மாமியார் வீட்டு கொலுவிற்கு... 1987. 100 ரூபாய்!

    ஆமாம் ஆண்டுகள் கடந்த பொம்மை செட் என் மாமியாரிடம் இருந்தது.

    பிள்ளையார் கோயில் செட்டும் எனக்குப் புதுசு. சூரியன் ரதம் சூப்பர்.

    பெரியோர்கள் கொலு கவர்ந்தது.

    பூஜை அறை சூப்பர்! நல்ல ஐடியா பராமரிப்பதும் எளிது. எனக்கு இப்படி அமைக்கும் ஆர்வம் இருந்தது ஆனால் ...பாருங்க அதுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. எனக்கும் பூஜை அறை என்பது சிம்பிளாக இருப்பது சௌகரியம் பராமரிப்பது..

    கீதா

    பதிலளிநீக்கு
  17. கொலு காட்சிகள் கலை நயம்.. அழகு..

    பதிவு நீளமோ நீளம்.

    அயர்ந்து விட்டேன்..

    பதிலளிநீக்கு
  18. கான்கிரீட் காடுகள் உவமையை உருவாக்கியவர் பாலகுமாரன். Concrete jungle என்னும் ஆங்கில பத்தை அப்படியே தமிழ் படுத்தியிருக்கிறாரோ?முதிர்கன்னி(முப்பது வயதைக் கடந்தும் திருமணமாகாத பெண்) என்னும் வார்த்தையும் அவரது கொடைதான்.

    'நகரம்' என்ற தலைப்பில் அவரது புதுக்கவிதை

    பறவைகள் அடையும்
    மரங்களை அழித்து
    மனிதர்கள் அடையும்
    கல்மரங்கள் முளைத்த காடு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... நன்றி பானு அக்கா... உங்கள் ஞாபகசக்தி வாழ்க...

      நீண்ட நாட்களுக்குப் பிறகு வியாழன் பதிவில் உங்கள் கமெண்ட்...

      நீக்கு
  19. கொலு பார்க்கப்போன வீட்டில் ஒரு சிறுமி பாடிய பாட்டின் ராகத்தை கீதா சொன்னாரா? அவரும் உங்களோடு வந்திருந்தாரா?

    பதிலளிநீக்கு
  20. கொலுநன்னா இருக்கு.
    சிறப்பு பதிவு.

    காஃபி யை மிஞ்சிய பானமும் இல்லை
    கந்தனை மிஞ்சிய கடவுளும்
    இல்லை புது மொழி. அருமை.
    ரசித்தேன்.
    கே. சக்ரபாணி
    சென்னை 28

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    சற்றே நீண்ட பகிர்வு. கொலு படங்கள் அனைத்தும் அருமை. உங்கள் வீட்டு முதல் கொலுவும் நன்று. திருவரங்கம்/திருச்சியிலும் நிறைய வீடுகள்/கடைகள்/ஆலயங்கள் என அங்கே பார்த்தாலும் கொலு. நேற்று கடை வீதியில் பிரம்மாண்ட கொலு ஒன்று பார்த்தேன். அட்டகாசமாக இருந்தது.

    செய்திகள் தொகுப்பு சிறப்பு. சில பாசிட்டிவ் என்றால் சில நெகட்டிவ்.

    துணுக்குகள், கவிதை என அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசிட்டிவ் செய்திகள் என்பது சனிக்கிழமை மட்டும் தான். பிற செய்திகளை இன்று தருகிறோம். சுவாரஸ்யமான செய்திகள், வித்தியாசமான செய்திகள் என்று....

      நன்றி வெங்கட்

      நீக்கு
  22. ஏழைக்கு இரங்குவீர்
    ஏகாம்பரேசனே...

    பெரிய பெரிய கதம்ப மாலைகளைப் படிக்கின்ற வல்லமையைத் தாரும் ஐயா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருமளவு படங்களால் நிறைந்த பதிவு தானே....

      நீக்கு
    2. செய்திகளும் இந்த வாரத்தில் அதிகம்...

      நீக்கு
    3. ​குறைக்கிறேன். அடுத்த வாரம் முதல் குறைக்கிறேன்.

      நீக்கு
  23. ஜொமாட்டோ சி இ ஓ செய்த விஷயம் சூப்பர்!!! இப்ப ட்ரெண்டிங்க் வார்த்தையான 'சம்பவம்' செய்தார் னு சொல்லிக்கலாம்!!!!!

    ஏ ஐ வியக்க வைக்கும் சமாச்சாரம். ஆபத்தும்.

    சிங்கப்பூர் - அது நாடு....ஆனா பாருங்க அங்கயும் நம்மாளு ஹூம் ஒரு வேளை இது நம் நாட்டின் அரசியல்வியாதியோ?

    அதென்ன ரூட் தல....பசங்க சரியில்லைங்க...

    மருத்துவரைக் கொன்ற சிறுவர்கள்!!! வளர்ப்பு...குடும்பம் ...ம்ம்ம் என்ன சொல்ல?

    Marketing management and Price control கண்டிப்பாக நம் நாட்டிற்குத் தேவை...நம்ம ஊர் பொருளாதாரத் துறை என்ன செய்து கொண்டிருக்கிறதோ!?

    எல்லா செய்திகளும் பார்த்தாச்சு..

    கீதா

    பதிலளிநீக்கு
  24. உண்மை தெரியாமல், கருத்து சுதந்திரம் என்ற பெயரில், மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் விமர்சனம் செய்யாதீர்கள். உங்களைப் போன்று எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. ஒரு பக்க சொல், ஒரு யானை பலம். எல்லாரையும் வாழ்த்துங்கள். பிடிக்கவில்லை என்றால் இழிவாக மட்டும் பேசாதீர்கள். //

    இதை இதை கன்னாபின்னான்னு ஆதரிக்கிறேன். மீடியாவை யாராவது கன்ட்ரோல் பண்ணமாட்டாங்களான்னு எனக்கு அப்பப்ப ரொம்ப தோணும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அவர் கருத்து பிடித்துப் போனதால்தான் பகிர்ந்தேன்.  மற்றபடி அவர்மேல் பெரிய மரியாதை எல்லாம் இருந்ததில்லை.

      நீக்கு
  25. ஸ்ரீராம் இத்தோடு இன்று முடித்துக் கொள்கிறேன்....இன்னும் மற்ற தளங்கள் சுற்றிவிட்டு வேலையில் இறங்கணும்...

    மீதியை அப்பால வாசிக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓகே கீதா... கனமான பணிச்சுமைக்கு நடுவே நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி.

      நீக்கு
  26. கொலு படங்கள் அழகு........ ஆமாம் கொலு வைப்பதன் காரணமென்ன?

    நவராத்திரியில் பிற பெண்களை அழைத்து வெற்றிலை பாக்கு கொடுக்கவேண்டும். அதற்கு ஒரு சாக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொம்மை விற்பவர் முதல் பூ விற்பவர் வரை பிழைக்கவேண்டும்.. ஒருவரை ஒருவர் மதித்து அன்பு காட்டி பழகவேண்டும்.  பெண்களை மதிக்கவேண்டும்.  ஆன்மீக உணர்வு பெருகவேண்டும் இத்யாதி..  இத்யாதி...

      நீக்கு
    2. ஸ்ரீராமானந்த அடிகள் சொல்கிறார்... பெண்களை மதிக்கவேண்டும், ஆன்மீக உணர்வு பெருகவேண்டும்... ஆமாம் இதற்கும் நவராத்திரிக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கொண்டாட்டங்கள் இல்லைனாகூட, பெண்கள் இல்லாவிட்டால் வீட்டில் ஒரு காரியம் உருப்படியா நடக்காதுன்னுதான் எல்லாருக்கும் தெரியுமே. அதனால நவராத்திரினாலதான் மதிக்கணும்னு இல்லை, இல்லையா?

      நீக்கு
    3. இல்லையோ பின்னே?  நாளெல்லாம் பெண்களை மதித்தாலும் வுமன்ஸ் டே என்று ஒன்று ஏன் ஒரு நாள் கொண்டாடறோம்?!!!  ஹிஹிஹி...

      நீக்கு
  27. எங்கள் வீட்டில் (பரம்பரையாக) கொலு வைப்பதில்லை. என் மாமனார், நீங்க ஆரம்பியுங்க, பெண் இருக்காளே என்று சில பல வருடங்களுக்கு முன்னால் சொன்னார். நான் ஆர்வம் காட்டவில்லை.

    பெண் இந்த வருடம் கொலு வைத்தார். (அவங்க வீட்டுல வழக்கம்) அதற்கு எங்கள் சார்பாக நான்கைந்து கொலுபொம்மைகள் கும்பகோணத்திலிருந்து வாங்கி அனுப்பினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொலு எங்கள் வீட்டிலும் பழக்கமில்லை.  மருமகள் விரும்பி ஆரம்பித்தது.  மருமகள் கால் கால் என்று அலுவலக வேலையில் இருக்க பாஸ்தான் பாதி வேலை செய்ய வேண்டி இருக்கிறது!

      நீக்கு
  28. நவராத்தி கொலு படங்கள் அனைத்தும் கண்டோம்.எத்தனை விதமான பொம்மைகள்.

    நியூஸ்ரைம் பலவித செய்திகளுடன் அருமை.

    பொக்கிசம் சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
  29. பதிவு மிக அருமை.
    கொலு படங்கள் மிகவும் அருமை.
    மருமகள் வேலையில் இருக்க மாமியாருக்கு வேலை அதிகமாகி விட்டது. இங்கும் எங்கள் பங்கு அதிகமாகி விட்டது. மருமகள் வேலையும் பார்த்து கொண்டு வருபவர்களுக்கு (தினம் 30, 40 பேர்) சாப்பாடு தயார் செய்ய வேண்டியது இருந்தது, அதனால் நானும், சம்பந்தியும் கூட மாட ஒத்தாசை செய்ய வேன்டி இருந்தது, மற்றவர்கள் வீட்டு கொலு வேறு இன்று வரை போய் வந்தோம்.
    அதனால் வலை பக்கம் வர முடியவில்லை.

    நியூஸ் ரைம் செய்திகள் படித்தேன், பொக்கிஷபகிர்வுகள் அருமை.

    பதிலளிநீக்கு
  30. தங்கள் வீட்டில் கொலு வைத்திருப்பது பார்த்து மிக்க மகிழ்ச்சி. அருமையாக உள்ளது. நீங்கள் சென்ற வந்த கொலுக்களின் படங்கள் அனைத்தையும் ரசித்தேன்.

    அஞ்சல் தினம்.. கடிதங்களின் காலம், நாம் தொலைத்து விட்ட அழகான கனாக்காலம்.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!