புதன், 30 அக்டோபர், 2024

தலை தீபாவளி - தி சு நிகழ்வுகள்

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

தொலைகாட்சிகளில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள், பத்திரிகைகளில் திபாவளி சிறப்பு மலர் ஒற்றுமை வேற்றுமைகள் என்னென்ன?

# இரண்டுமே நான் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகின்றன.

இரண்டுமே தீபாவளியுடன் தொடர்பு, இரண்டிலும் கதம்பமான உள்ளீடுகள், சினிமா மோகம் , இரண்டிலும் சற்று முதிர்ச்சியின்மை அப்போது நான் கவனித்த ஒற்றுமை. 

வேற்றுமை:

மலர்களில் பட்டி மன்றம் இராது. சற்று அறிவார்ந்த பகுதிகள் இருக்கும்.  பிரபல எழுத்தாளர் , ஓவியர் பங்களிப்பு இருக்கும்.‌ ஆன்மீக விஷயங்கள் காணப்படும்.‌ 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.‌

& தொலைக்காட்சி தீ சி நி - பவர் கட் ஆனால் அம்பேல் - போயிந்தி it இஸ் கான் ! அல்லது வீதியில் இருக்கும் தீவிரவாதிகள் 1000 வாலா 10000 வாலா எல்லாம் வெடித்தால் சிறப்பு நிகழ்ச்சியில் பேசுபவர் என்ன சொன்னார் என்று தெரியாமல் முழிக்க வேண்டும். கொஞ்சம் வெளிச் சத்தம் குறையும் நேரத்தில், விளம்பர இடைவேளை வந்து கழுத்தை அறுக்கும் - அதுவும் ஒரே விளம்பரத்தைத் திரும்பத் திரும்பப் போட்டு இன்னும் வெறுப்பு ஏற்றுவார்கள். . 

தீபாவளி சிறப்பு மலர்கள் அப்படி இல்லை. பக்கத்தில் இடி விழுந்தால் கூட தொந்தரவு இல்லாமல் படிக்கலாம். விளம்பர பக்கங்களில் kazana ஜ்வெல்லரி தமன்னா, சென்னை சில்க்ஸ் நடிகை என்று படங்களை விருப்பம் இருந்தால் மட்டும் பார்க்கலாம். 



கே. சக்ரபாணி சென்னை 28: 

1.  உங்கள்  தலைதீபாவளி  தித்திக்கும். சுவாரஸ்யமான   சில  நிகழ்வுகள்  பகிரவும். 

# என் தலை தீபாவளி கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. அதிலே குறிப்பிட்டு சொல்லத் தக்கதாக எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் விசேஷம். இரண்டு குடும்பங்களும் மிகவும் எளிய பொருளாதார நிலையில் இருந்ததால் ஆடம்பரமாக பட்டாசுகளோ பலகாரங்களோ இல்லை. புத்தாடைகளும் மிகவும் சாதாரணமானவையாகவே இருந்தன.

& என்னுடைய தலை தீபாவளிக்கு மனைவி செய்த கோதுமை அல்வா மிகவும் பிரமாதமாக, தித்திப்பாக இருந்தது. ஆபீஸில் லீவு கிடைக்காததால், மாமனார் வீட்டுக்குப் போகஇயலவில்லை. சென்னையிலேயே சிறப்பாகக் கொண்டாடினோம். 46 வருடங்கள் ஆகிவிட்டதால் இப்போது அன்றைய சுவாரஸ்ய நிகழ்வுகள் எதுவும் ஞாபகம் இல்லை. 

2. லிவ்விங் டுகெதர்   கலாசாரம் பற்றி தங்கள்  கருத்துகள்?

# திருமணம் செய்யாது சேர்ந்து வாழ்கிற அமைப்புக்கு நான் எதிரி. இதில் எழக்கூடிய சிக்கல்களை மக்கள் புத்திசாலித்தனமாக அணுகுவதில்லை என்பதே என் கணிப்பு.

& நமது கலாச்சாரத்திற்கு ஏற்றது அல்ல. 

3.  டெல்லி கணேஷ். கோவை சரளா   சூலமங்கலம்  சிஸ்டர்ஸ் போன்று.  நாகை என்றால்  உங்கள்  நினைவுக்கு  வருபவர்  யார்?

# நாகை என்றால் என் நினைவுக்கு வருபவர் கவி காளமேகம். கத்து கடல் சூழ் நாகை காத்தான் தன் சத்திரத்தில் என்று தொடங்கும் நாலடி செய்யுளை அவர் இயற்றி இருப்பதே அதற்குக் காரணம். மிகவும் சுவாரசியமான பாடல். 

நாகை என்றதும் அடுத்தபடியாக எனக்கு நினைவுக்கு வருபவர் நீங்கள் அனேகமாக அறிந்திடாத ஒருவர். என் அப்பாவுக்கு முதலாளியாக இருந்தவர்.  மிகவும் ஆழ்மையான முருக பக்தி கொண்டவர். திருமுருக கிருபானந்த வாரியாரின் பரம ரசிகர் - போஷகர்.  கந்த சஷ்டியின் போது அவர் ஆறு நாட்கள் கடுமையான விரதம் இருந்து சஷ்டி முடிந்த பின் பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தித் தன் விரதத்தை முடித்துக் கொள்வார். அது  வரை ஒரு நாளில் ஒரு தடவை பால் பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார். வசதியான ஒரு நபர் இவ்வளவு பக்தி சிரத்தையோடு விரதம் இருந்து அதுவரை நான் பார்த்ததில்லை. ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது என்பார்கள்.  ஊரை நீங்கள் சொல்லி விட்டீர்கள். பெயரை நான் சொல்கிறேன் அவர் பெயர் ஜெ. மு. குரு நமசிவாயம்.‌ நாகப்பட்டினம் மதுரை திருச்சி ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் மிகவும் பிரபலமாக இருந்த ஜவுளிக் கடைகளின் அதிபர்.

& நாகை முகுந்தன் ஆன்மீக சொற்பொழிவாளர் 

    நாகை முரளிதரன் - வயலின் வாசிப்பவர். 

= = = = = = = = = = 

KGG பக்கம் :

kgs  நினைவுகள். 

என்னுடைய ஆரம்பப் பள்ளி நாட்களில், ஹை ஸ்கூல் படித்துக்கொண்டிருந்த kgs எங்களிடமும், குடித்தனம் இருந்த மற்ற சிறுவர்களுடனும் சில சில சுவாரஸ்யமான விளையாட்டுகள் விளையாடியது எனக்கு ஞாபகம் வருகிறது. 

அந்த நாட்களில் நாகையில் எடுக்கப்பட்ட படம் : 


(ஃபோட்டோ எடுத்தவர் என்னுடைய இரண்டாவது அண்ணன் kgy 1957?) 

படத்தில் இருப்பவர்கள் :

1 kgs 

2 kgg (நான்!) 

3 சின்ன அண்ணன் விசு(வேஸ்வரன்)

4 சின்ன அக்கா (வனமாலினி) 

5 சித்தப்பாவின் மகன் (நாகையா) 

(இதில், என்னைத் தவிர வேறு யாரும் இப்போது உயிருடன் இல்லை)

kgs சொல்லாடல்கள் :

(அப்போது எங்களுக்கு தமிழ் & தெலுங்கு. பேசத் தெரியும். பெரியவர்களுக்கு தமிழ், தெலுங்கு ஆங்கிலம் தெரியும்) 

ஒருநாள் எங்களிடம் ஒரு கேள்வி கேட்டார். 

" ஒரு போட்டி - நான் கேள்வி கேட்கின்ற பாஷையில் பதில் சொல்லக் கூடாது. சரியா ? "

நான் : " சரி " 

kgs : " அவ்வளவுதான் - நான் தமிழில் கேட்டதற்கு நீ தமிழில் பதில் சொல்லிவிட்டாய். நீ அவுட்."

நான் : " சரி - சரி திரும்ப ஆடலாம். "

அதற்குப் பின் அவர் தமிழில் கேட்டால் நான் யோசித்து தெலுங்கில் பதில் சொல்வது; தெலுங்கில் கேட்டால் தமிழில் பதில் சொல்வது என்று ஆட்டம் தொடர்ந்தது. 

kgs : " ரொம்ப நேரம் யோசிக்க எடுத்துக்கொள்ளக்கூடாது. உடனடியாக பதில் சொல்ல வேண்டும். " 

கொஞ்ச நேரம் கேள்வி பதில் தொடர்ந்தது. கிடு கிடுவென பதில் சொல்லி வந்தேன். 

kgs : " ஹிந்தியில் கேள்வி கேட்கலாமா /"

நான் : " கூடாது "

அவ்வளவுதான் - நான் அவுட்! 

---

அப்புறம் வேறு ஒருநாள் என்னிடம், " உன்னை பச்சை என்று சொல்லவைக்கவா ?"

நான் : " உம் "

அவர் : " நீ போட்டிருப்பது என்ன கலர் சட்டை? "

நான் : " வெள்ளை"

அவர் : " சுண்ணாம்பு என்ன கலர் ?"

நான் : " வெள்ளை "

அவர் : " வான வில்லின் நிறங்களில் ஐந்து நிறங்கள் சொல்லு "

நான் : " நீலம், ஊதா, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் "

அவர் : " ஹா ஹா ஹா - நீ அவுட் மஞ்சள் என்று சொல்லிவிட்டாய் !"

நான் : " இல்லை இல்லை போட்டியில்  'பச்சை' என்றுதான்  சொல்லக் கூடாது. நான் மஞ்சள் என்றுதானே சொன்னேன். "

அவர் : " இப்போ அவுட் ! பச்சை சொல்லிவிட்டாய்! 

போட்டிகளில் அவரை ஜெயிக்க முடியாது! 

= = = = = = = = = = =

59 கருத்துகள்:

  1. அந்தக்கால போட்டோ அன்றைய அளவீடுகளில் சிறந்ததாக கருதலாம். இத்தனையும் வருடங்கள் கழிந்தும் செபியா இல்லாமல் பிரிண்ட் அழிந்து போகாமல் இருப்பது பாக்கியம், பொக்கிஷம்.
    கேள்விகள் குறைவு. ஜீவி சார் பதில்கள் பகுதி காணவில்லை.
    வார்த்தை விளையாட்டு வித்தியாசம். புண்படுத்தாதவரை எந்த விளையாட்டும் நல்லதே.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. ஜீவி ஸாருக்கு என குறிப்பிட்டு தனியாக கேள்விகள் கேட்க வேண்டும் அப்படி யாரும் கேட்கவில்லை ஆதலால் அந்த பகுதியை இடம்பெற முடியவில்லை.

    வாசகர்களுக்கு நினைவில்லையோ என்னவோ , ஜீவி சாருக்கு கேள்வி கேட்பவர்கள், அவரை குறிப்பிட்டு இது அவருக்கான கேள்வி என்று குறிப்பிட்டால் அவர் பகுதி தொடரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில கேள்விகள் ஜீவி சாருக்கு அனுப்பியுள்ளோம். குறைந்தபட்சம் ஆறு ஏழு கேள்விகள் சேர்ந்ததும் பதில் அனுப்புவதாக கூறியுள்ளார்.

      நீக்கு
  3. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. சக வாசக அன்பர்களுக்காக இரண்டு கேள்விகள்:
    1)திரு. கே. சக்ரபாணி அவர்களின் முதல் கேள்விக்கு இருவர் பதிலளித்திருப்பதாகக் கொள்ளலாம்.. இதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?
    2) முதல் பதிலில் ஒரு தவறு இருக்கிறது. அது என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சாரின் சந்தேகங்களுக்கு பதில்.
      1. punctuation mistake. தித்திக்கும் சுவாரசியமான
      2. இரன்டு சகோதரர்களுக்கு இடையில் வயது வித்தியாசம் கிட்டத்தட்ட 14 வருடங்கள்.
      Jayakumar

      நீக்கு
    2. இருவர். # மற்றும் &

      எந்த முதல் பதிலில்?

      நீக்கு
    3. என் தலை தீபாவளி கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது -- என்று சொல்லியிருப்பவரின் தற்பொழுதிய வயது என்ன?

      நீக்கு
    4. //என் தலை தீபாவளி கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது -- என்று சொல்லியிருப்பவரின் தற்பொழுதிய வயது என்ன?// தற்போதைய வயது - திருமணம் எந்த வயதில் செய்துகொண்டார் என்பதைப் பொருத்தது ! கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் என்ற தகவல் தவறு. அவருடைய தலை தீபாவளி 1967. என்னுடைய தலை தீபாவளி 1978.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான தீபாவளி நல்வாழ்த்துகள். சகோதரர் ஸ்ரீராம் அவர்களது மகனுக்கு இனிதான தலை தீபாவளி நல்வாழ்த்துகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பான வாழ்த்துக்களில் நானும் கலந்து கொள்கிறேன், சகோ.

      நீக்கு
  8. நாகை என்றால் சட்டென்று என் நினைவுக்கு வருபவை:
    1. பொன்னியின் செல்வனில் நாகை சூடாமணி விகாரம் பற்றி வாசித்தது.
    2. பிற்காலத்தில் நாகை புயலின் போது ஊரை விட்டு ஓடி விடாமல் ஜெமினி கணேசன் அங்கேயே தங்கியிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. ஜெமினி கணேசன் புயல் உதவி எந்த ஆண்டு?

      நீக்கு
  9. இன்றைய பதிவு மிகவும் சிறப்பு..

    தீபாவளி மலர் பற்றிய நினைவுகள் நெஞ்சை அழுத்துகின்றன..

    பதிலளிநீக்கு
  10. நாகப்பட்டினம் விஹாரைதான் என் நினைவுக்கு வந்தது.

    ஒருவர் வாழும்போதே அவரைப் பற்றிய வரலாறு, சிறப்புகளைச் சொல்லவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றாத்து அதிசயம். வாழும் ஒருவரை அவர் செய்த செயல்களுக்குப் பாராட்டுவது போன்று எதுவும் அமையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாகை சூடாமணி விஹாரம் பின்பு கோர்ட் ஆனது. அங்கு சுதந்திர தினம், குடியரசு தின சமயத்தில் உள்ளே சென்று பார்த்தது உண்டு.

      நீக்கு
  11. 14ம் தேதி ஆரம்பித்து இன்றுவரை தொடர் பயணங்கள்.

    லிவிங் டுகேதர், திருமணமே செய்துகொள்ளாமல் இருந்துவிடுவது என்பதெல்லாம் இந்தக் காலத்தின் அனர்த்தங்கள்.

    பதிலளிநீக்கு
  12. கோதுமை அல்வா தித்திப்பாக இருந்தது என்று எழுதும்போதே நீங்கள் நாக்கின் சுவையைச் சொல்கிறீர்களா இல்லை மனத்தின் சுவையைச் சொல்கிறீர்களா என்று உங்களுக்கே சந்தேகம் எழவில்லை?

    பதிலளிநீக்கு
  13. அந்த கால நிழற்படம் - பொக்கிஷம்.

    கேள்வி பதில்கள் சிறப்பு.

    லிவிங் டுகெதர் - தேவையற்ற ஆணி.

    இன்றைய பதிவினை ரசித்தேன். என் பதிவில் ஸ்ரீராம் பின்னூட்டத்தில் சொன்ன கேள்வி பதில் புதிர், இங்கே வந்ததும் புரிந்தது! :)

    பதிலளிநீக்கு
  14. நாகை நாட்கள் அருமை...

    அந்த கால நிழற்படம் தான் எத்தனை அழகு.
    .

    பதிலளிநீக்கு
  15. உளங் கண்டு வாழாமல்
    உடல் கொண்டு வாழ்வ தெல்லாம்
    ஊரைக் கெடுக்கின்ற வேலை..

    கேடு கெட்ட கசடுகளுக்கு
    இது ஒன்றே சூளை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சை மண்ணால் செய்யப்பட்டசட்டி பானைகளைச் சுட்டெடுக்கின்ற மிகப் பெரிய அடுப்பு..

      செங்கற்களை சுட்டெடுப்பதற்குக் காளவாய் என்று பெயர்..

      சென்னையில் குயவர் பாளையம் அழிந்து விட்டது...

      ஆனாலும் சூளை என்றொரு பகுதி இருக்கின்றது..

      நீக்கு
  16. பழைய நாகப் பட்டினத்தாருக்கு

    சூளை என்றால் என்ன? என்று தெரியாதது விசித்திரம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வார்த்தை எல்லாம் கேட்டு 50 வருடங்கள் ஆகிவிட்டன!

      நீக்கு
  17. பொற்காலம் திரைப்படத்தில் காட்டப்படும் என்று நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொற்காலம் - தஞ்சாவூரு மண்ணெடுத்து - மீனாதான் ஞாபகம் இருக்கு.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.

    தீபாவளி மலர் முன்பு அம்மா வீட்டில் படித்தது நினைவுக்குள் வருகிறது. அதற்காகவே காத்திருந்த தீபாவளிகளும் உண்டு. தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர்தான் அதை தொட வேண்டுமென்ற கண்டிஷன்களும் நினைவுக்குள் மலர்கின்றன.

    உங்கள் பக்கத்தில் தங்களது குடும்ப புகைப்படம் அருமையாக உள்ளது. கருப்பு, வெள்ளை புகைப்படங்கள் அந்த காலத்திய மறக்க இயலாத சின்னங்கள்.

    உங்கள் அண்ணா கேட்ட கேள்விகளும், அதற்கேற்ப பதில்கள் தந்தும் மாட்டிக் கொள்ளும் விளையாட்டுகளும், நாங்களும் சிறு வயதில் விளையாடி உள்ளோம். அப்போதெல்லாம் இந்த மாதிரி புதிர் கேள்வி, பதில்கள், சினிமாக்களின் இல்லை சினிமாக்களில் வரும் பாடல்களின் முதல் எழுத்தை ஒவ்வொருவராக சொல்லி விளையாடும் போட்டிகளுடன் முழு ஆண்டின் விடுமுறை தினங்கள் கழிந்துள்ளன. (காரணம் வெய்யிலில் விளையாட வெளியில் செல்லக் கூடாது என்ற பெற்றோர்களின் பாசம் கலந்த கண்டிப்புக்கள்.) தங்கள் பக்கத்தை படிக்கும் போது மலரும் நினைவுகள் வருகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. கேள்வி, பதில்கள் அருமை.


    kgs நினைவுகள் மிக அருமை.

    அண்ணாவின் நினைவுகள், பழைய குடும்ப படம் எல்லாம் அருமை.
    வார்த்தை விளையாட்டு மிகவும் நன்றாக இருந்தது, நினைவாக பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

    வீட்டில் உங்கள் குடும்பத்தினர்களுடன் அடிக்கடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்களா?

    இப்போது உங்கள் குடும்பத்தின் இளைய தலைமுறையினர் தெலுங்கு பேசுகிறார்களா?

    நாகை என்றதும் அப்பாவின் முதலாளி நினைவுகளை பகிர்ந்து கொண்டது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதில் என் அண்ணன் kgy expert.
      இளைய தலைமுறையினர் பெரும்பாலோர் தெலுங்கு பேசுகிறார்கள். சிலர் தமிழ் பேசுகிறார்கள்.

      நீக்கு
  21. ஸ்ரீராம் மகன், நெல்லைத் தமிழன் மகள் இருவருக்கும் தலை தீபாவளி நல் வாழ்த்துகள், வாழ்க வளமுடன் புதுமண தம்பதியினர்.

    அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துகள்.

      நீக்கு
    2. கோமதி அரசு மேடம்.... நன்றாக நினைவு வைத்துக்கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததற்கு மிக்க நன்றி.

      நீக்கு
    3. @கோமதி அரசு: தில்லையகத்து கீதாவின் மகனுக்கும் இந்த வருடம் தலை தீபாவளி.

      நீக்கு
    4. கீதா மகன், மருமகளுக்கு அவர்களிடம் வாழ்த்து சொல்லி விட்டதால் இங்கு மறந்து விட்டேன். நினைவு படுத்தியதற்கு நன்றி பானு.

      நீக்கு
  22. தீபாவளி மலர் அந்தக்கால காத்திருப்புக்குப் ஒன்று. ஓவியம் ஜோக்ஸ்,ஆன்மீகம் என அருமை.
    Kgg, பக்கங்கள் பழைய நினைவலைகள் உங்கள் அண்ணனின் விளையாட்டுகள் சுவாரசியம். படம் பொக்கிசம்.

    நெல்லைத்தமிழன் மகள்,ஸ்ரீராம் மகன் தம்பதிகளுக்கு தலை தீபாவளி வாழ்த்துகள். இருவீட்டிலும் களைகட்டும் இத்தீபாவளி மகிழ்ந்திருங்கள் .வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மாதேவி அவர்கள். பெண் மாப்பிள்ளை தலைதீபாவளி கடல் கடந்து அவர்கள் வசிக்கும் இடத்தில்.

      நீக்கு
  23. நாகப்பட்டிணத்திற்கும், டில்லி கணேஷுக்கும் என்ன சம்பந்தம். அவர் திருநெல்வேலி ஜில்லாக்காரர். தஞ்சாவூர் ஜில்லாவில் என் பெண்ணை கொடுக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். ஆனால் மூத்த பெண்ணை தஞ்சாவூர் ஜில்லா பிள்ளைக்குத் தான் கொடுத்திருக்கிறார். அவருடைய மூத்த மகளே சொன்னது இது.

    பதிலளிநீக்கு
  24. பத்மா சுப்பிரமணியம் நாகப்பட்டிணக்காரர்தான்.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம். சகோதரர் நெல்லைத்தமிழர் அவர்களின் மகள், மருமகனுக்கும், சகோதரி கீதாரெங்கன் அவர்களது மகன் மருமகளுக்கும் இனிதான தலை தீபாவளி நல்வாழ்த்துகள். இரு வீட்டார்களின் புது மணமக்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  26. கீதாரெங்கன் மகன் , மருமகளுக்கு தலை தீபாவளி வாழ்த்துகள் , வாழ்க வளமுடன் . புதுமண தம்பதியினர் வாழ்க பல்லாண்டு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!