புதன், 9 அக்டோபர், 2024

சர்ச்சில் பற்றி சுவையான சம்பவம் ஏதாவது .. **

 

வாசகர் கேள்விகளுக்கு

                                                                                   
                                                            ஜீவியின்   பதில்கள்  

அநாமதேயர் : 

1.  கேள்வி: பிரமாதமான தகுதி எதுவும் இல்லாவிட்டாலும் அளவுக்கு மீறிய புகழ்/அந்தஸ்து பெற்ற தமிழ் எழுத்தாளர் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்:  யாரை மனதில் நினைத்து இந்தக் கேள்வியை  கேட்கிறீர்கள் என்று சொல்லுங்கள். உங்களுக்குத் தெரியாத அவர் தகுதி பற்றி நான் சொல்கிறேன்.

2.  கேள்வி: ஆனந்த விகடனுக்கு ஆசிரியராக இருந்த ஜெமினி எஸ்.எஸ்.வாசன் எழுத்துத்துறையில் ஏதாவது எழுதியிருக்கிறாரா?** 

பதில்: இருக்கிறார். இவரது  கன்னி முயற்சி 'இல்வாழ்க்கையின் ரகசியங்கள்' என்ற நூல்.  இந்த நூல் ஆங்கில மொழிபெயர்ப்பாகவும் வெளிவந்தது.  அதற்குப் பிறகு விகடனிலேயே சதி லீலாவதி என்ற தொடர்  நாவலையும் எழுதினார்.  
அது திரைப்படமாகவும் உருவாகி எம்.ஜி.ஆரின் முதல் படமாகவும் ஆயிற்று.  போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் எம்.ஜி.ஆருக்கு. கதாநாயகன் எம்.கே.ராதா.  வாசனுக்கும் சரி, எம்.ஜி.ஆருக்கும் சரி, இதுவே முதல் திரையுலகப் பிரவேசமாயிற்று.  மதுவின் தீமையால் ஒரு குடும்பம் பட்ட துன்பங்களைச் சொல்லும் கதை இது, 

கொசுறு:  விகடன் தாத்தா லோகோ இவர் கற்பனையில் உதித்ததே.  

3.  கேள்வி: தமிழ் நன்றாகப் படித்து தமிழ் எழுத்தாளர்களின், தமிழ்ப் புலவர்களின் படைப்புகள் என்று எல்லாவற்றையும் தேடி எடுத்து ரசித்துப் படித்துத்தான் ஆக வேண்டும் என்கிற நிர்பந்தம் இருக்கிறதா?

பதில்: இல்லை, இல்லை, இல்லவே இல்லை.   இவ்வளவு அழுத்தமாக கேள்வி கேட்கும் பொழுதே நீங்கள் விரும்பும் பதில் இதுவாகத்தான் இருக்கும் என்பதும் தெரிந்ததே.

4.  கேள்வி:  எல்லாரும் இலக்கியத்தை ரசித்தே ஆக வேண்டுமா?  ஆம் என்று சொன்னால் கூட அவர்கள் நன்கு பயின்ற மொழியில் (ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது மலையாளம் என்று வைத்துக் கொள்ளுங்கள்) உள்ள சிறந்த இலக்கியங்களைப் படித்தால் போதாதா?

பதில்:  ரசித்தே ஆக வேண்டுமா?  படித்தால் போதாதா? -- என்பது தான் அடிப்படை கேள்வி போலத் தெரிகிறது.  படிக்கும் பொழுதே ரசிக்கத் தெரிந்தால் ரசிக்கலாம்.  தனக்கே தெரியாவிட்டாலும் இன்னொருத்தர் அதையே ரசித்துச் சொல்லும் பொழுது இஷ்டப்பட்டால் ரசிக்கலாம். ரசித்தாலும் (மனசுக்குள் உன்னை விட பெரிய ஆளாக்கும் நான் என்ற நினைப்பில்)  அதை வெளியே காட்டிக் கொள்ளாமலும் இருக்கலாம்.  எல்லாம் அவரவர் இஷ்டப்படியே. நம்மைத் தீர்மானிப்பது நாமே என்ற கருத்தில் உறுதியாக இருங்கள்.

5.  கேள்வி:  1729  -- இந்த எண்ணைப் பற்றி ஏதாவது தெரியுமா?**

பதில்: ஹையா!  தெரியுமே!  கணிதமேதை ராமானுஜத்தை அவர் நண்பர் ஹார்ட்லி பார்க்க வருகிறார். ஹார்ட்லி வந்த டாக்ஸி நம்பர் இது. பேச்சு வாக்கில் ஹார்ட்லி இந்த நம்பரைச் சொன்னதும், "ஆகா!" என்று ராமானுஜம் வியக்கிறார்.  இரண்டு வெவ்வேறு க்யூப்களின் கூட்டுத்தொகையாக இரண்டு விதங்களில் அடையாளம் காட்டும் எண் இதுவாக்கும் என்று சந்தோஷத்தில் குதூகலிக்கிறார்.   
1729 என்பது 10 மற்றும் 9 க்யூப்ஸின் கூட்டுத்தொகை - 
10 க்யூப்  10x10x10=1000
9 க்யூப்  9x9x9= 729   
ஆக, 1000+729 = 1729
 
6.  கேள்வி: தமிழ் நவீன இலக்கியங்களில் பெரும்பாலும் திருமண வரம்பை மீறிய காதல் பற்றி அதிகம் பேசப்படுகிறது.  இதைக் கருத்தளவில் ஒத்துக் கொள்ள முடியுமா?

பதில்:  திருமண வரம்பை மீறிய காதல் என்றால் புரியவில்லை.  புரியாததற்கு காரணம், ஆண்-பெண் உறவில்  திருமண வரம்பை மீறி விட்டால் அது காதல் என்ற பெயரையே கொள்ளாது என்பதால் தான். 'காதல்' என்ற மூன்றெழுத்தை ஆளுக்கு ஆள் வெவ்வேறு விதங்களில் அர்த்தப்படுத்திக் கொள்வதால் விளையும் வினை இது.
 
திருமண பந்தம் என்ற ஒன்றில்லாமலேயே உறவு கொள்ளுதல் காதல் அல்ல. அதற்கு வேறு பெயர்.  'நவீன தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலும்' என்று வேறு சொல்கிறீர்கள்.  அப்படியான ஒன்றின் பெயராவது சொல்ல முடியுமா?

7.  கேள்வி: இது தேவை தானா?  இதற்கு விசேஷமான அந்தஸ்து என்று எதை வைத்துச் சொல்ல முடியும்?

பதில்:  எது தேவை தானா?  தெளிவாகக் கேள்வியை அமைப்பதில் உங்களுக்கு ஏதோ தயக்கம் அல்லது சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. பின்னூட்டத்தில் தெளிவாகச் சொல்லுங்கள். அடுத்த புதனில் பதில் சொல்கிறேன்.

(அநாமதேயர் - இந்தக் கேள்வி, ஆறாவது கேள்வியின் ஒட்டுக் கேள்வி என்று தெரிவிக்கிறார் ) 

8.  கேள்வி: 'திராவிட' எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்? ஏன்?

பதில்:  திராவிட எழுத்தாளர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு எழுதுவோர் யாருமில்லை.  அப்படியானவர்களின் பெயர்களை வரிசைபடுத்தினீர்கள் என்றால் இதை வாசிப்பவர்களும் தெரிந்து கொள்ளலாம்.            

ஸ்ரீராம்
9. கேள்வி:  அவசரக்குடுக்கை என்கிற பதம் எங்கிருந்து வந்தது? எப்படி நமக்கு பழக்கமானது?

பதில்:   தெலுங்கு கொடுக்கு, குடுக்கை ஆகி இருக்கலாம்.  தெலுங்கில்  கொடுக்கு என்றால்  பையன். ஆக, பதட்டமான பையன்.  எப்படி நமக்குப் பழக்கமானது?  சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்தால்  நாளாவட்டத்தில் பழக்கமாவது பெரிய விஷயமா, என்ன?..

அநாமதேயர் : 

10. கேள்வி: மொழி அறிவு சற்றும் இல்லாவிட்டாலும் கூட நல்ல இசை, ஸ்தோத்திரம், மந்திரம், இவை நம்மைக் கவரக் காரணம் என்ன?  ஒலி என்பதற்கு பொருளை மீறிய கவர்ச்சி அல்லது சக்தி உண்டா?

பதில்:  நம் ஈடுபாடுகளுக்கேற்பவே இவை அமைகின்றன. கவர்ச்சி, சக்தி என்பனவெல்லாம் நமக்கு அப்படி இருந்தால் எல்லோருக்கும் அப்படியே இருக்கும் என்று நாமே  நினைத்துக் கொள்ளும் பிரமை தான்.  எல்லாமுமே எல்லோருக்கும் பிடித்து விட்டால் அவை பற்றிய புனிதங்கள் மலினமாகி விடும்.    

நெல்லைத்தமிழன்:

11. கேள்வி:   இறந்த பிறகு உயிர் இப்படிப் பிரியும், இந்த வழியாகச் செல்லும் என்றெல்லாம்  சொல்கிறார்களே! இதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? யாருடைய உயிராவது பிரியும் போது பார்த்திருக்கிறார்களா?

பதில்: குழந்தைகள் விளையாடும் ஒரு பேட்டரி கார் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அது ஒரு பாதையில் சுற்றி வரும் பொழுது 'டக்'கென்று ஓடுவதை நிறுத்தி நின்று விடுகிறது.  உடனே அதை எடுத்துக் கொண்டு ஓடி வரும் குழந்தை, "அப்பா! பேட்டரி மாத்திக் கொடு.. கார் நின்னுடுத்து.." என்று தந்தையிடம் முறையிடுகிறது.  

இந்த பேட்டரி போலத்தான் உயிர் என்று நாம் பெயர் கொடுத்திருக்கும் உடல் இயங்குவதற்கான இயக்கு சக்தியும். உடலில் இதயம், நுரையீரல், மூளை போலவான உறுப்புகளை நாம் பார்க்க முடிவதை போல எந்த ஸ்கேனிலும் சிக்காதது இது. இயக்கு சக்தி இல்லாமல் இயக்கமில்லை என்ற விஞ்ஞான பூர்வமான உண்மையால்  உயிர் என்ற வார்த்தையும் உயிர் வாழ்கிறது.     

அது சரி, கூடு விட்டுக் கூடு பாயும் உயிர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?..  இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் 'இது ஒரு தொடர்கதை'க்காக இதைத் தான் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.

அநாமதேயர் : 

12. கேள்வி:  கவிஞர் வாலியின் பேச்சுக்கள், பேட்டிகள் எல்லாம் கேட்டிருக்கிறீர்களா?** 

பதில்:  ஓ!  கலைஞரைப் பற்றி அவர் எது சொன்னாலும் அவை தனி கவர்ச்சி முலாம் பூசிக் கொண்டு ரசிக்கும் படியாக இருப்பதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் கூட ரசிக்கும்படியாக இருக்கும்.  பொது நிகழ்ச்சிகளுக்குப் போகும் முன் கண்ணாடி முன் நின்று ரிகர்ஸல் பார்த்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

 13. கேள்வி:  வி.சி. கணேசன் (சிவாஜி)  தந்தையார்  ஊர்  விழுப்புரமா?** 

பதில்:  இல்லை. அவர் தாயார் ராஜாமணி அம்மையார் ஊர்தான் விழுப்புரம். தந்தையார் தஞ்சாவூர்காரர்.  தஞ்சை மாவட்ட வேட்டைத்திடல்.  சிவாஜி பிறந்த நாளே ரொம்பவும் உணர்வு பூர்வமானது. தந்தையார் சின்னையா மன்ராயருக்கு வெள்ளையர் காலத்தில் ரயில்வேயில் பணி. தேசபக்தி மிக்க அவர்  வெள்ளையர் சென்ற ரயில் வண்டிக்கு வெடிகுண்டு வைத்ததாக கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டாராம்..  அவரைக் கைது செய்த நாளன்று தான்  நம்ம (சிவாஜி) கணேசன் பிறந்தார். நினைத்துப்  பாருங்கள், அந்தக் குடும்பத்திற்கு  எவ்வளவு சோகமும் சந்தோஷமும் கலந்த நாள் அது என்று. 

================= ================
இந்த வாரத்திலிருந்து இந்தப் பகுதிக்கு கேள்விகள் அனுப்புவோரின்  பெயர்கள்  குறிப்பிடப்படாமலேயே  அவர்கள் கேள்விகள் இடம்பெறும். தங்கள் பெயரை வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டால் மட்டுமே பெயர் வெளியிடப்படும்.  வழக்கம் போலவே  கேள்வி கேட்பவர்கள், தங்கள் கேள்விகளுக்கு - ஜீவி பதில் வேண்டுமா அல்லது  சீ & சி (எபி) பதில் வேண்டுமா என்று குறிப்பிடவும்.  

கேள்வி கேட்பவர்கள் கருத்துரைப் பகுதி மட்டும் இன்றி என்னுடைய வாட்ஸ்அப் எண் (9902281582 -- குரல் அழைப்புகள் வேண்டாம்)  மற்றும் engalblog@gmail.com மின்னஞ்சலுக்கும் வாரம் பூராவும் தங்கள் கேள்விகளை அனுப்பி வைக்கலாம்.    

===================

எ பி பதில்கள் : 

நெல்லைத்தமிழன்: 
1. இறந்தபிறகு உயிர் இப்படிப் பிரியும், இந்த வழியாகச் செல்லும் என்றெல்லாம் பலர் பேசுகின்றார்களே... எந்த ஆதாரத்தில் இப்படிப் பேசுகிறார்கள்? யாருடைய உயிர் பிரியும்போது பார்த்தார்களா?  

# ஆத்மா ,  கடவுள்,  இறப்புக்குப் பின் என்ன -  இதைப் பற்றியெல்லாம் ஒரு அனுமானத்தில்தான் எதுவானாலும் சொல்லப் படுவதாகத் தான் நான் நினைக்கிறேன். நாம் பார்க்கின்ற சூழ்நிலைகளுக்கு ஒத்து வருவதாக நாம் நினைத்தால்  இந்த அனுமானங்களை எல்லாம் ஏற்க வேண்டியது ஆகிறது. நமக்கும் வேறு வழி இல்லை .‌

2. திருமணச் சடங்குகளில் பல (ஜாதகர்ம நாமகர்ம.... போன்ற பலதும்) அந்த அந்த வயதுகளில் செய்யாததை அப்போது செய்யறாங்க. இதில் ஏதேனும் அர்த்தம் இருக்கின்றதா?   

# ஜாதகர்மம் உபநயனம் போன்ற எதுவும் அந்தந்த வயதில் செய்ய வேண்டும் என்றுதான் சாஸ்திரம் சொல்லுகிறது. என்ன காரணத்தினாலோ அது பல சமயம் செய்ய முடியாமல் போகிறது. இதற்கு ஒரு சமாதானமாக கல்யாணத்துக்கு முதல் நாள் பூணூல் போடுவது போன்ற நிகழ்ச்சிகள் நடப்பதைப் பார்க்கிறோம். காலதேச வர்த்தமானத்தை அனுசரித்து போவது புரோகிதர்களுக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டது. அவர்கள் பிழைப்பும் நடக்க வேண்டும் அல்லவா ? கிராப்புத் தலை நடுவே ஒரு கற்றை முடி வளர்த்து அதைக் குடுமியாகக் காட்டுவது, விசேஷ நாட்களில் பஞ்சகச்சம் கட்டிக் கொள்வது போல எல்லாமே ஒரு ஒப்புக்குத்தான் நடக்கிறது இப்போது. இதுவே பல்கிப் பெருகும் போது சாஸ்திரம் என்பது இதுதான் இப்படிச் செய்தால் போதும் என்று ஆகிவிடும். அது தவிர்க்க முடியாதது.‌

3.  பொதுவா இரவில் தூக்கம் கலைவது அல்லது இரண்டு மூன்று முறை முழித்துக்கொள்வதின் காரணம் என்ன? அதை எப்படித் தவிர்க்கலாம்?   

& ஒவ்வொருவருக்கும் வயதைப் பொருத்து ஒரு sleep cycle இருக்கும். என்னுடைய தற்போதைய sleep cycle ஒன்றரை மணி நேரம். இரவு ஒன்பது மணிக்கு தூங்க ஆரம்பித்தால் பத்தரைக்கு ஒரு விழிப்பு. பாத்ரூம் போய் வந்து படுத்தால் அடுத்து 12 மணிக்கு ஒரு விழிப்பு, மீண்டும் பா ரூ & ரிட்டர்ன். ஒன்றரை மணிக்கு ஒரு விழிப்பு! பிறகு மூன்று மணி. நான் பொதுவாக மூன்று மணிக்குப் பிறகு காலை நாலரை மணி வரை blog எழுதும் வேலை செய்து நாலரையிலிருந்து அன்றைய வேலைகளை செய்யத் தொடங்குவேன். 

4. யூடியூப் தேடுதலில் ஒரு தடவை அதிரசம் எப்படிச் செய்வது என்று ஒரு வீடியோ பார்த்தால், அடுத்தது ஏகப்பட்ட அதிரச வீடியோக்கள் வருகிறதே... இந்த மாதிரி யூடியூப் செய்வதில் அர்த்தம் இருக்கிறதா? 

# நாம் எதை பார்க்கிறோம் என்பதை வைத்து நமக்கு அந்த வகை பிடிக்கும் என்று முடிவு செய்து youtube தானே அதை பதிவேற்றி வைக்கிறது. இது ஒரு வியாபார யுக்தி. அதிரசம் செய்வது வேண்டுமானால் திரும்பத் திரும்பப் பார்க்கத் தேவையில்லாமல் இருக்கலாம்.  வேறு பல விஷயங்கள் அப்படி இருக்காது அல்லவா ?

5. சீசனல் பழங்கள் என்பதில் ஏன் ஆப்பிள் மாத்திரம் வருவதில்லை? வருடம் பூராவும் கிடைக்கிறதே.... எந்த எந்தப் பழங்கள் எந்த எந்த சீசன் என்று சொல்ல முடியுமா? (உதாரணம்  திராட்சை ஃபெப்-ஏப்ரல்,  மாங்காய்-மார்ச்-ஏப்ரல், மாம்பழம்-ஏப்ரல்-ஜூன், பலா-மார்ச்-ஆகஸ்ட் என்பது போல)

# சீசனல் பழங்கள் பற்றிய என் அறிவு மிகச் சொற்பம்.‌. இப்போது எல்லாம் எல்லா  நாட்களிலும் கிடைக்கிறது. குளிர்பதனம் செய்து வைத்திருந்து கொடுக்கிறார்களா அல்லது இப்போது எல்லாமே எப்போதுமே விளைகிறதா என்று தெரியவில்லை.

6. இல்லாத பேய்க்கு ஏன் இப்படிப் பலர் பயப்படுகிறார்கள்?

பயம் என்பது சுற்றிவர என்ன இருக்கிறது அது நமக்கு என்ன செய்யும் என்பதை பற்றி ஏற்படுவது என்ன நடக்கும் என்று தெரியாத சந்தர்ப்பங்களில்தான் மனிதர்களுக்கு அச்சம் அதிகமாகிறது.‌ " ஒரு வேளை பேய் இருப்பது உண்மையானால் ?" என்கிற எண்ணமே பயத்தை ஏற்படுத்தும்.‌ Fear of the unknown.

அநாமதேயர் : 

சர்ச்சில் பற்றி பல சம்பவங்கள் ஜோக்குகள் உலா வருகின்றன. அவற்றுள் உங்களுக்குப் பிடித்தது எது? ** 


& ஒருமுறை சர்ச்சில் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு சமயோசிதமாக, புத்திசாலித்தனமாக பதில்கள் அளித்து கைதட்டல்கள் நிறைய பெற்றார். சர்ச்சிலின் மேதாவிலாசத்தை எல்லோரும் பாராட்டினார்களாம். 

எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், சர்ச்சில் சிக்சர் அடிக்கத் தோதுவாக லூஸ் பால்(!) கேள்விகளை அவரே தயார் செய்து - அந்தக் கேள்விகளை உறுப்பினர்களிடம் கேட்கச் சொல்லி - பதில்கள் அளித்து கைதட்டல்கள் பெறுகிறார் என்பதைத் தெரிந்துகொண்டார். (கலைஞர் கூட இப்படிச் செய்தது உண்டு என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.)  

அந்த எ க உறுப்பினர், கேள்வி கேட்க எழுந்து நின்றார். சர்ச்சில் உட்பட எல்லோரும் அவரை ஆர்வத்துடன் நோக்கினார்கள். எ க உறுப்பினர் சர்ச்சிலை கொஞ்ச நேரம் மௌனமாகப் பார்த்துவிட்டு பிறகு அவரிடம், " சாரி சார் - நான் என்ன கேள்வி கேட்கவேண்டும் என்று நீங்கள் நேற்று சொல்லியிருந்தீர்களோ - அந்தக் கேள்வி மறந்துபோய்விட்டது " என்று சொல்லி உட்கார்ந்துவிட்டார். 

அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் செய்த ஆரவாரம் அடங்க ரொம்ப நேரம் ஆனது!** 

= = = = = = = = = =

இன்றைய பதிவு ரொம்ப நீளமாகிவிட்டது என்பதாலும், நேரம் இன்மையாலும் KGG பக்கம் அடுத்த வாரம் இடம் பெறும். 

= = = = = = = = = =

கேட்காத கேள்வி : 

இந்தப் பதிவில் சில கேள்விகளுக்கு முடிவில் ** குறியீடு எதைக் குறிக்கிறது? 

சொல்லாத பதில் : 

" பாட்டும் நானே, Bபாவமும் நானே " 


= = = = = = = = = = = = =
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!
= = = = = = = = = = = = = 

40 கருத்துகள்:

  1. இன்றைய கேள்விபதில்கள் அனைத்துமே சிறப்பு.

    ஜீவி சார் பதில்களில் ஒரு ப்ரொஃபஷனல் அப்ரோச், அதாவது பத்திரிகை கேள்வி பதில் தெரிகிறது. பாராட்டுகள்.

    அநாமதேயர் - நல்ல முடிவு. அப்போதான் கேள்வி பதிலைப் படிக்கும்கோது முன்முடிவு ஏற்படாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை! உங்களிடம் உரிமையுடன் ஒரு கோரிக்கை வைக்கிறேன். சின்னச்சின்னதாய் இரண்டே வரிகளில் அமைகிற மாதிரி வாராவாரம் 6 கேள்விகளுக்கு குறையாமல் நீங்கள் இந்தப்பகுதிக்கு கேள்விகள் கேட்க கேட்டுக் கொள்கிறேன். அந்த கேள்விகள் விதவித சப்ஜெட்டுகளில் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு. வானத்தின் கீழிருக்கும் எது பற்றி வேண்டுமானாலும் கேள்விகள் இருக்கட்டும். கேள்விகள் அதிகரிக்க அதிகரிக்கத் தான் இந்தப் பகுதி சிறக்கும் என்பது உள்ளங்கை நெ.கனி.
      நீங்கள் ஒருவர் தான் இந்த நேரத்யில் கேள்விகள் கேட்பதில் ஆர்வம் கொண்டிருப்பதால் இந்த நேரத்தில் இந்த கோரிக்கை உங்களிடம். இந்த ஆர்வம் மற்ற வாசகர்களிடமும் பற்றிக் கொண்டால் எபிக்கு கொண்டாட்டம் தான்.
      இந்த பூவுலகில் அட்சதை போட்டு ஒருவர் ஆர்வத்துடன் ஆரம்பித்து வைப்பது தானே ஆல் போல் தளைத்து விழுதுகள் விட்டு பல்கிப் பெருகியிருக்கின்றன? அதை மனத்தில் வையுங்கள். இந்த ஆர்வம் எல்லோரையும் பற்றி எபி பெருமையில் பூரித்து திளைக்க இறைவன் அருளட்டும். சகோதர சகோதரிகள் அனைவரும் இந்தப் பகுதியின் எதிர்கால சிறப்புக்கு உங்கள் மனதில் படும் கேள்விகள் கேட்டு ஒவ்வொரு புதனையும் பொன் போல ஜொலிக்க வைக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

      --- உங்கள் சகோதரன்

      நீக்கு
  2. புத்திசாலிகளையோ இல்லை நல்லது செய்பவர்களையோ மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. அவங்களுக்கு எது நல்லது, லாபம் என்று நினைக்கிறார்களோ அந்த அரசியல்வாதி/கட்சிக்கே வாக்களிக்கறாங்க. அதனால்தான் அரசியலில் நல்லவர்களும் நல்லது செய்கின்ற எண்ணமும் அறுகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  3. தனுசு ராசிக்கார்ர்களுக்கே முழுமையான இரவுத் தூக்கம் கிடையாதா?

    பதிலளிநீக்கு
  4. திருமணவரம்பு மீறிய காதல்... Living togetherஐச் சொல்லியிருப்பாரோ? எதை எதைத்தான் மேற்கத்தைய உலகத்திலிருந்து காப்பியடித்துப் பீற்றிக்கொள்வது என்று தெரியாத முற்போக்குக் கூட்டம் அதிகமாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேற்கத்தையவர்கள் உடலின் தோற்றத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நாம் கொண்டிருக்கும் கற்பு பற்றிய அர்த்தம் அவங்க அகராதில கிடையாது. ஒருத்தன்ட பழகும் வாழும் காலத்தில் மாத்திரம் அவன, அவள் உண்மையா இருக்கணும் என்பதே அவங்க கற்பு. நம் நாட்டில் இந்த முன்னேற்றம் (ஹாஹா) வர இன்னும் நூற்றாண்டுகளுக்கு மேலாகும்

      நீக்கு
  5. இரண்டாவது தடவையாக, படம் வராமல் பிளாங்காக இருக்கிறதே. அவசரத்தில் கேஜிஜி சார் கவனிப்பதில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சாரின் ஈமெயிலிலிருந்து copy செய்து பேஸ்ட் செய்யும்போது, பதிவில் எனக்கு படம் தெரிகிறது. ஆனால் png வடிவில் இருக்கும் படம் மற்றவர்களுக்கு தெரிவதில்லை போலிருக்கு. அதை நான் மீண்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்துச் சேர்த்தால், அது தெரிகின்றது. எங்கே என்ன குழப்பம் என்று சரியாகத் தெரியவில்லை!

      நீக்கு
  6. படங்கள் இரண்டும் இப்போது தெரிகின்றனவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். எம்ஜிஆரின் இந்தப் படத்தைப் போட்டதற்கு தெரியாமலேயே இருந்திருக்கலாம் ஹாஹாஹா

      நீக்கு
  7. முருகன் திருவருள் முன் நின்று காக்க

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. பதிவின் நீளம், அகலம் கருதி, இன்று என் பக்கம் வெளியிடவில்லை.

      நீக்கு
    2. எதையோ சொல்லி மனசை தேத்திக்கோங்க...

      மர்மக் கத எழுதுறதுக்கே ஆள் வெச்சி மெரட்டுற காலம்

      எதுக்கும் கவனமா இருங்கோ..

      நீக்கு
  9. ஏன் அனாமதேயர் என்று கேள்வி கேட்பவரின் பெயரை மறைக்கிறீர்கள் என்பது புரியவில்லை.
    கேள்வி பதில் பகுதியை பழைய மாதிரி எல்லா கேள்விகளுக்கும் ஆசிரியர் குழுவும், ஜீவிஸாரும் பதில் அளிப்பது போல வைக்கலாம். ஜீவிஸார் பதில்களுக்கு ஒரு "ஜி" என்று அடையாளம் கொடுக்கலாம்.

    இன்றைய பதிவு நீளமானது தான். பதில்கள் படமாக அமையும் இடங்களில் மட்டும் படங்கள் சேர்த்தால் போதுமானது என்று கருதுகிறேன்.

    முன்பே குறிப்பிட்டபடி ஒரு சிறந்த கேள்வி என்று ஸ்டார் கடையாளம் கொடுப்பதை பற்றி பரிசீலிக்கவும்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    கேள்வி பதில் பக்கம் - புதிது புதிதாக யோசிக்கிறீர்கள்… பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. கௌதமானந்த ஜி...

    சுவாமிகள் சும்மா தானே மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு குந்தி இருக்கின்றீர்கள்...

    எமது தளத்தின் பக்கம் வரலாமே..

    தங்களது ஆசிகளுடன் தொடங்கப்பட்ட வாராந்திரப் பதிவு..

    இன்று புதன் கிழமை!..

    பதிலளிநீக்கு
  13. சுவாரஸ்யமான கேள்வி பதில்கள்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்விகள் பதில்கள் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தது. ஸ்டார் குறியிட்டு வந்த கேள்வி பதில்களை ரசித்தேன். சகோதரர் ஜீவி அவர்களும், எபி ஆசிரியர்களும் நல்லதொரு முறையில் கேள்விகளுக்கு தக்க மாதிரி பதில் அளித்து சிறப்பித்த முறை நன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. தங்கள் வாசிப்புக்கும் ரசித்ததை பின்னூட்டமிட்டுச் சொன்னமைக்கும் மிக்க நன்றி, சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பல வேலைகளின் சுமைகளுக்கு நடுவே உடன் வந்து தந்த நன்றிக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நீக்கு
  16. கேள்வி பதில்கள் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!