ஞாயிறு, 20 அக்டோபர், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – மனைவியுடன் யாத்திரை – பகுதி 02 (திருநீர்மலை) நெல்லைத்தமிழன்

 

நான் (ங்கள். மனைவியையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமல்லவா) 105 வைணவ திவ்யதேசக் கோவில்களையும் தரிசித்துவிட்டாலும், திருநீர்மலைக் கோவிலை தரிசனம் செய்ய வேளை வரவேண்டியிருந்தது. திருமங்கையாழ்வாரையே ஆறு மாதங்கள் காத்திருக்கச் செய்த பெருமாள், எளியனான என்னைத் தன் கோவிலைக் கடைசியாக தரிசிக்கவைத்தார்.

ஏப்ரல் 2024ல் தரிசித்த நாங்கள், இந்த ஆகஸ்டில் உறவினரின் நிச்சயதார்த்தத்திற்காக குரோம்பேட்டையில் தங்கியிருந்தபோது, நிச்சயதார்த்தம் மாலை 6 மணிக்குத்தான் என்பதால், காலையில் சிலபல கோவில்களுக்கு காரில் சென்றோம். அப்போதும் திருநீர்மலையை, இன்னும் அவசரப்படாமல் நிதானமாகச் சேவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது என் பெரியம்மாவையும் (82 வயது) கூட்டிச் சென்றிருந்தேன். அவர் ரொம்பவே சுறுசுறுப்பு. இருந்தாலும் திருநீர்மலையில் மலைக்கோவில் படியில் ஏறும்போதுதான், இவ்வளவு படிகளை அவர் ஏறவேண்டுமே என்று கவலைப்பட்டேன். ஆனால் அவர், இரண்டு மூன்று இடங்களில் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, எங்களுடன் மலைக்கோவிலுக்கும் வந்து தரிசனம் செய்தார். சென்னையிலேயே பிறந்து, திருமணம் ஆனபின் தில்லி வாசத்தில் இருந்தாலும், அன்று நான் கூட்டிச்சென்ற கோவில்களுக்கு எல்லாம் அவர் முதல் முறை தரிசிக்க வந்திருக்கிறாராம். எனக்கு ரொம்பவே மன மகிழ்ச்சி.

மலைக்கோவிலில் ரங்கநாதர், தாயார், உலகளந்த பெருமாள், பால நரசிம்ஹரை தரிசனம் செய்தபிறகு கோவில் வளாகத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

கோவில் வளாகத்திலேயே பிரசாதக் கடை இருக்கிறது. புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தோசை என்று விதவிதமான பிரசாதங்கள். நாங்கள் மிளகாய்ப்பொடி போட்ட தோசை சாப்பிட்ட நினைவு.

மலையில் ஏறி பெருமாளைச் சேவிக்க வந்தவர்களுக்கு இந்தப் பிரசாதக் கடை ஒரு வரப்பிரசாதம்.

பிரசாதக் கடைக்கு அடுத்த பகுதியில் (உள்கோபுரத்தின் வலதுபக்கத்தில்) நாகருக்கான ஒரு சிறு சன்னிதி இருக்கிறது.

ஆதிசேஷன் சன்னிதி

நல்ல தரிசனத்திற்குப் பிறகு மலையிலிருந்து கீழிறங்கினோம். அங்கு நீர்வண்ணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று நீர்வண்ணரை தரிசனம் செய்வதற்காக.

இறங்கும் வழியில் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தோம்.

கீழே இருந்த கோவிலில் கட்டுமானப் பணிகள் (ஏப்ரல்) நடந்துகொண்டிருந்தன. கூட்டம் இல்லாதால் நீர்வண்ணர் சேவை மிக நன்றாக இருந்தது. தரிசனம் செய்துவிட்டு கோவிலை வலம் வந்தோம்.  (ஆகஸ்டில் சென்றபோது, நிறைய நேரம் இருந்ததால், முதலில் நீர்வண்ணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கு தரிசனம் முடிந்த பிறகு மலைக்கோவிலுக்குச் சென்றோம்)

நீர்வண்ணப் பெருமாள் கோவிலிலிருந்து மலைக்கோவில் தெரியும் காட்சி

நீர்வண்ணப் பெருமாள் கோவில் த்வஜஸ்தம்பம். அருகே ஆஞ்சநேயர் இருக்கும் மண்டபம்.

கோவிலில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. (ஏப்ரல் 24)

ஆகஸ்டில் அந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தபோது

நீர்வண்ணப் பெருமாள் கோவில்

பொதுவாக எல்லா திவ்யதேசங்களிலும் ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்களை (அந்தக் கோவிலுக்கானது) பதித்து வைத்திருப்பார்கள். திருநீர்மலையில் திருமங்கையாழ்வார் பாடிய ‘அன்றாயர் குலக்கொடியோடு’ பதிகம்.

ஆலயப் பிராகாரத்தை வலம் வரும்போது கோவிலின் பழைமை தெரிந்தது.

இந்த மாதிரி கோவில் சுவர்களில் உள்ள மாடங்களில் சிலைகள் இருக்கிறதென்றால் அந்தக் கோவில் அந்த அளவு சேதப்படுத்தப்பட்டதில்லை என்று புரிந்துகொள்ளலாம்.

துளசிமாடம், பழமையான கோவில் சுவர்கள்.

நீர்வண்ணப் பெருமாள் சன்னிதி கோபுரமும், துளசி மாடமும்.

நீர்வண்ணப் பெருமாள் கோவிலின் இராமர் சன்னிதி (இராமனாகக் காட்சிதருதல்). அருகிலேயே தாயார் சன்னிதி (அணிமாமலர் மங்கை. இந்தப் பெயர் திருமங்கையாழ்வார் பிரபந்தத்திலேயே இருக்கிறது. எவ்வளவு அழகான தமிழ்ப்பெயர்)

நீர் வண்ணப் பெருமாள் நின்ற திருக்கோலம். 

நீர்வண்ணப் பெருமாளைச் சேவித்துவிட்டு, இராமர் சன்னிதிக்கும், அதன் அருகிலிருக்கும் தாயார் சன்னிதிக்கும் (அணிமாமலர் மங்கை) சென்றோம். இராமர் சன்னிதி மண்டபத்தில் திருநீர்மலை கோவிலின் மாடல் வைத்திருந்தார்கள்.

திருநீர்மலைக் கோவில் மாடல்

நீர்வண்ணப் பெருமாள் கோவில் பிரகாரத்திலிருந்து மலைக்கோவிலின் தோற்றம். 

வெயிலில் நடக்க வசதியாக பெயிண்ட் அடித்த தரை.

கோவிலில் பிராகாரத்தில் இருந்த கல்வெட்டுகள்

கோவிலின் பழைமையை கல்வெட்டுகள் கொண்டு அறியலாம்.

நெடுநாள் கைகூடாமல் போக்குக்காட்டிவந்த திருநீர்மலை தரிசனம் அன்று மிகவும் திருப்தியாக அமைந்தது. அதன் பிறகு நாங்கள் திருமணப் பத்திரிகை கொடுக்கும் வேலையைத் தொடர்ந்தோம். இந்த வருடமே இரண்டாவது முறையும் திருநீர்மலை கோவில் தரிசனம் வாய்த்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

அடுத்த வாரம், நாங்கள் சென்னையிலிருந்து பயணித்து தரிசித்த கோவில்களைப் பற்றிப் பார்க்க ஆரம்பிக்கலாம்.

 (தொடரும்) 

31 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார். இப்போ பிரயாக்ராஜ் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். ஒன்பது மணி வாக்கில் திரிவேணி சங்கமத்தில் நீராட

      நீக்கு
    2. மிக்க.மகிழ்ச்சி நெல்லை. தங்கள் ஆன்மீகப் பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள்.

      நீக்கு
  2. நிறைய படங்கள். நிறைவாக இருந்தது.
    மலைக் கோயிலில் ஸ்ரீ ரங்க நாதர், தாயார், உலகளந்த பெருமாள்,
    பால நரசிம்ஹர் சன்னதிகள்.
    கீழ்க் கோயிலில் நின்ற கோலத்தில் நீர்வண்ண பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராமர் சன்னதி, அருகே தனி சன்னதியாய் தாயார் அணிமாமலர் மங்கை சன்னதி, தனியாய் ஆஞ்சநேயர் சன்னதி.
    திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற ஸ்தலம்.
    நிறைய படங்களுடன் நிறைவான தரிசனம்.
    மிக்க நன்றி நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். அனைத்து சந்நிதிகளையும் கோர்வையாச் சொல்லிட்டீங்க. மிக்க நன்றி

      நீக்கு
  3. விவரங்களும் படங்களும் அழகாக உள்ளன.
    எனக்கு ஒரு சந்தேகம். சிவாலயங்களுக்கு இருப்பதை போன்று வைணவ ஆலயங்களுக்கு ஸ்தலபுராணம் உண்டு என்று நினைக்கிறேன். ஆனால் அவை பற்றிய விவரங்கள் தங்களுடைய கட்டுரைகளில் காண்பது அரிதாக உள்ளது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். நான் பெரும்பாலும் புராணக் கதைகளோ இல்லை தலவரலாறுகளோ குறிப்பிடுவதில்லை. அது அதீத நம்பிக்கையின்பாற்பட்டது என்பது என் எண்ணம். எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது. அபூர்வமா தமிழ் பிரபந்த வரிகளைக் குறிப்பிடுவேன். ஆனால் தலத்தின் படங்களை முடிந்த அளவு இங்கு கோர்த்துவிடுவேன். அதுதான் ஞாயிறு பட உலாவுக்கு ஏற்றதாக இருக்கும் என்பது என் கருத்து

      நீக்கு
  4. மூலவர் படங்கள் எடுக்க தடை இல்லையா?

    சாரத்தின் கீழ் நிழல்களின் நடுவில் நிற்கும் போட்டோ கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம் போன்றதொரு கற்பனையாக தோன்றியது. க்ளோஸப் அல்லாமல் மிடில் ஷாட் எடுத்தவருக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூலவர் படங்களை எடுக்கக்கூடாது சிலர் எடுத்துப் பகிர்ந்திருப்பார்கள். அவற்றை உபயோகித்துக்கொள்வேன்.

      சென்றமுறைபோல் அல்லாமல் இந்த முறை கயா விஷ்ணு பாத கோவிலில் மொபைல் உள்ளே எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் பண்டாக்கள் (அர்ச்சகர்கள்) நிறையபேர் கொண்டுசெல்கின்றனர். வாட்சப்பில் பகிரப்பட்ட படங்களை உபயோகித்துக்கொள்வேன்

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய கோவில் யாத்திரை பகிர்வும் அருமை.

    படங்கள் அனைத்தும் வழக்கம் போல நன்றாக உள்ளது சரியான கோணங்களில் ஒவ்வொன்றையும் அழகாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். பிறகு ஒவ்வொன்றாய் பெரிதாக்கி ரசித்துப் பார்க்கிறேன். நீர்வண்ணபெருமாளின் தரிசனம் பெற்றுக் கொண்டேன். தங்களால் இக்கோவில் பற்றிய அருமை யான தகவல்கள் கிடைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    தங்களது தற்போதைய புனித யாத்திரைக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களது ஆன்மிக பயணங்கள் நல்லபடியாக நடக்க என் பிரார்த்தனைகளும். வாழ்த்துகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம். சென்றமுறை பிரயாக்ராஜ் அனுமார் கோவிலுக்குள் கேமரா எடுத்துச்செல்ல முடியாது. இன்று ஒன்றும் சொல்லவில்லை. படங்களுடன் இருந்தால்தானே பதிவு நன்றாக இருக்கும்?

      நீக்கு
  7. முருகன் திருவருள் முன் நின்று காக்க

    பதிலளிநீக்கு
  8. திருநீர்மலை பற்றிய தகவல் களுடன் அழகிய பட்ங்கள்...

    சிறப்பு..

    என்னென்று சொல்வது!..

    பதிலளிநீக்கு
  9. மூலத்தானத்துள் படம் எடுக்க அனுமதி உண்டா!?..

    பதிலளிநீக்கு
  10. படங்கள் அனைத்தும் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

    தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. படங்கள் எல்லாம் நேரில் தரிசனம் செய்த நிறைவை கொடுத்தது.
    மிகவும் அருமையாக இருந்தன் படங்கள். தங்கள் பெரியம்மாவுக்கு வணக்கம். அவருக்கு பெருமாள் மனபலத்தை கொடுத்து ஏறவைத்து விட்டார். அவரை நீங்கள் பல கோவில்களுக்கு(அவர்கள் பார்க்காத கோவில்) அழைத்து சென்றது மகிழ்ச்சி.

    உங்கள் பயணம் இனிமையாக தொடரட்டும். நேற்று என் மாமா, பெண்ணும், என் தங்கையும் திருவேணி சங்கமத்தில் நீராடினார்கள்.
    இன்று காசி செல்வார்கள். நேற்று அயோத்தி ராமனை தரிசனம் செய்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.

      நேற்று காலை திரிவேடிசங்கமத்தில் நீராடினோம். இன்று சித்திரகூடம் மந்தாகினியில் நீராடுவோம். நாளை சரயுவில். அதற்கு மறுநாள் நைமிசாரண்யம் கோமதி ஆற்றில். ஹாஹாஹா

      நீக்கு
    2. உங்கள் புனித நீராடல் தொடரட்டும். இறைவன் எல்லா நலங்களையும் அருள வேண்டும்.

      நீக்கு
  13. திருநீர்மலை பெருமாள் தரிசனம் பெற்றோம்.

    நிறைந்த படங்களுடன் கண்டுகொண்டோம்.

    நட்பின் மரணம் மனது சஞ்சலம் பட்ட நேரம் இது. பெருமாள் எமக்கு ஆறுதலை தரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். நட்பின் மூன்று பெண் பிள்ளைகளை நினைத்தால் வருத்தம் மேலிடுகிறது. அவங்க வாழ்க்கை நல்லா இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்

      நீக்கு
  14. சிறப்பான தரிசனம். படங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். உங்களைப் பற்றித்தான் (நீங்கள் எப்போதும் அயோத்யாஜி எனக் குறிப்பிடுவதை) மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தேன். நாளை அதிகாலை அயோத்தியை அடைகிறோம். இரவு நைமிசாரண்யம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!