நெல்லைத்தமிழன்:
யூடியூபில், யார் யாரோ, தங்களுக்குச் சம்பந்தமில்லாத திரைப் பிரமுகர்களை, கன்னா பின்னா என்று பேசுகிறார்களே.. (விஜய் டிவி பிரியங்கா, பல திரைப்பட நடிகைகள், ஜெயம் ரவி, தனுஷ்... என்று). தனிப்பட்ட முறையில் ஆபாசமாக இவர்களைப் பற்றிப் பேசும் உரிமையை பேச்சுரிமை வழங்குகிறதா? பிரபலமானவர்களான பயில்வான் ரங்கநாதன், சுசித்ரா, தமிழா பாண்டியன் என்று லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்கிறதே. இவர்களுக்கு தண்டனை எதுவும் கிடையாதா?
# கருத்து சொல்ல அடிப்படை உரிமை இருக்குமே தவிர ஒருவரைக் குறித்து அவதூறு பேசுவதற்கு சட்டத்தில் எந்தவிதமான பாதுகாப்பும் கிடையாது. என்றாலும் இந்த வகையில் பேசுபவர்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். யாரை அவதூறு செய்கிறார்களோ அவர்கள் முயற்சி எடுத்தால் அவதூறு செய்பவர்கள் மேல் வழக்குத் தொடுத்து அவர்களைத் தண்டிக்க இயலும். ஆனால் அதற்காகிற பெரும் செலவு, அது தவிர , அப்படி ஒரு வழக்குப் போடுவதனால் இந்த அவதூறு செய்பவர்களுக்குக் கிடைக்கும் அனாவசிய விளம்பரம் இவற்றைக் கருதிப் பலரும் வழக்கு எதுவும் தொடுப்பதில்லை. மேலும் இது போன்ற வழக்குகளால் மக்கள் கவனிக்காத அவதூறான செய்திகளை கவனிக்கச் செய்வது எளிதாகி விடுவதால் வழக்குகள் தவிர்க்கப்படுகின்றன. பல செய்திகளில் சற்று உண்மையும் கலந்திருப்பதுவும் கூட, பாதிக்கப்பட்டவர்கள் வழக்குப் போடுவதைத் தடுத்து விடுகிறது. அவதூறான செய்திகளைப் படிப்பதில் மக்களுக்கும் ஒரு தனி ஈடுபாடு இருக்கிறது . அதை முதலாக்கி , காசு பார்ப்பவர்கள் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இணையம் சார்ந்த நாகரீகத்தின் ஒரு அவலம் இது.
& நல்லவேளை - எனக்குக் காது குறைபாடு ஆரம்பித்த நாளிலிருந்து நான் youtube பக்கம் போனதே இல்லை. நிம்மதியான வாழ்க்கை!
பானுமதி வெங்கடேஸ்வரன்:
மது அருந்த துவங்கும் முன், மது நிரம்பிய கோப்பைகளை லேசாக இடித்து 'சியர்ஸ்' செல்வதில் தாத்பரியம் என்ன?
# அது உற்சாக பானம் என்பதை ஒருமுறை உரக்கச் சொல்கிறார்களோ ?
& மது அருந்த ஆரம்பிக்கும்போது ஸ்டெடியாக இருப்பார்கள். கோப்பையில் மது இருக்கும்போது ஜாக்கிரதையாக, லேசாக ( மது கீழே சிந்தாமல் இருக்க) மெதுவாக 'கிளிங்' செய்வார்கள். அதுவே குடித்து முடித்ததும் 'கிளிங்' செய்வது என்று இருந்தால், போதையில் நிதானம் இன்றி மோதும் காலிக் கோப்பைகள் உடைந்து தூள் தூளாகிவிடும். அதனால்தான் மது அருந்தத் துவங்கு'முன்' லேசாக இடித்து சியர்ஸ் சொல்கிறார்கள்!கே. சக்ரபாணி சென்னை 28:
1. அமைச்சர்கள் பதவியேற்கும்போது எடுத்துக்கொள்ளும் சத்யபிரமாணம். கோர்டடில். சாட்சிக்கூண்டில் சொல்லும் சத்யபிரமாணம் ஒப்பிடுக
# ஒன்றில் பொய் சொன்னால் பிடிபட வாய்ப்பு இருக்கிறது. இன்னொன்றில் அப்படி இல்லை. இரண்டுமே சுயநலம் சார்ந்தது இரண்டுக்குமே பொது வெளியில் மரியாதை ரொம்பக் குறைவு. இரண்டையுமே யாரும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதில்லை.
2. யூனிஃபாமில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை ரசிக்காத பெற்றோர்கள் இருக்கமாட்டார்கள். அது ஒரு அழகுதான். அதேபோல் போலீஸ்காரர்கள் யூனிஃபாம் அணிந்தால். அவர்களுக்கு தானாகவே ஒரு மிடுக்கு + கம்பீரம் வந்துவிடும். தொழிற்சாலைகளில் மற்றும். அலுவலகங்களிலும். யூனிஃபாம் அணிந்து வேலை செய்தால் ஒரு தனித்தன்மை வந்துவிடும். யூனிஃபாம் என்பது ஒரு Owner Ship ஐ கொடுத்துவிடும். நாம் செய்யும் தொழிலுக்கு நாம்தான் முதலாளி என்ற உணர்வை கொடுத்து வேலை செய்யத் தூண்டும் என்பது என் கருத்து. தங்கள் பார்வையில் எப்படி?
# எந்த அமைப்புக்கான சீருடை என்பதைப் பொறுத்து அதை அணியும்போது மிடுக்கு, மகிழ்ச்சி, பெருமிதம், நிறைவு போன்ற உணர்வுகள் தங்கியிருக்கும். ஆனாலும் நகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் சீருடை குறித்து அப்படிச் சொல்ல இயலுமா ? சுத்தமாகப் பராமரிக்கப் படும் சீருடை கௌரவமான தோற்றத்தை அளிக்கும்.
3. மகிழ்ச்சி. ஆனந்தம் சந்தோஷம். இவை. எல்லாம் ஒன்றாகுமா?
# உணர்வின் அளவை வைத்து ஏறு வரிசையில் சொல்வதானால் சந்தோஷம் - மகிழ்ச்சி - ஆனந்தம் என்று சொல்லலாம். வெளித் தூண்டுதல் ஏதுமின்றி குறையற்று இருக்கும் நிலை ஆனந்தம் என்று சொல்வதுண்டு.
= = = = = = = = =
இந்த வாரம், 'ஜீவியின் பதில்'களுக்கு குறைந்த அளவே கேள்விகள் வந்துள்ளதால், நிறைய கேள்விகள் சேர்ந்தவுடன் பதில் அளிப்பதாக ஜீவி தெரிவித்துள்ளார். வாசகர்கள் அவரிடம் நிறைய கேள்விகள் கேட்கவும். கலை, இலக்கியம், கதைகள், கதாசிரியர்கள், அரசியல் பற்றிய கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கத் தயாராக உள்ளார்.
= = = = = = =
KGG பக்கம்.
kgs வேலை பார்க்க ஆரம்பித்தது அருவங்காடு கார்டைட் ஃபேக்டரி. அந்த சமயத்தில், நான், என்னுடைய இரண்டாவது அண்ணன், இரண்டாவது அக்கா, தங்கை எல்லோரும் எமரால்ட் என்ற ஊரில் இருந்தோம். எமரால்ட் - அருவங்காடு இடையே தூரம் அதிகம் கிடையாது.
kgs ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை அருவங்காட்டிலிருந்து பேருந்து மூலம் எமரால்ட் வீட்டிற்கு வந்துவிடுவார். ஞாயிற்றுக்கிழமைகளில், இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா, ஒரு தங்கை இவர்களோடு சேர்ந்து அரட்டை, அவலாஞ்சி டாம், அருகில் உள்ள ஊர்கள் எல்லாம் சென்று வருவோம். மிகவும் சந்தோஷமாகக் கழிந்த அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் ஆனந்தமாக இருக்கிறது. திங்கட்கிழமை அதிகாலையில் kgs அருவங்காடு திரும்பிச் செல்ல பஸ் பிடித்து சென்றுவிடுவார்.
1963 தீபாவளி சமயம், எனக்கு டிராயர், சட்டை, தங்கை + அக்காவுக்கு துணிமணி எல்லாமே இரண்டு அண்ணன்களும் சேர்ந்து எங்களுக்கு வாங்கிக் கொடுத்தவைதான். kgs அருவங்காடு கேண்டீன் தயாரிப்பான பாதாம் அல்வா, லட்டு, மிக்சர் என்று ஸ்வீட், காரம் பலவும் வாங்கி வந்திருந்தார். அப்பொழுது அவர் வாங்கி வந்த பாதாம் அல்வாவில், கேண்டீன் ஆட்கள் பாதாம் எசென்ஸ் கொஞ்சம் அதிகமாகக் கலந்துவிட்டார்கள் என்பதால், பா அ வில் மூட்டைப்பூச்சி மருந்து வாசனை வந்தது. ஆனாலும் விடாப்பிடியாக நாங்கள் எல்லாவற்றையும் சுவைத்துச் சாப்பிட்டோம்! (ஒன்றும் ஆகவில்லை!) நான் அப்போது நஞ்சநாடு போர்ட் ஹை ஸ்கூலில் ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். தங்கை உள்ளூர் ஸ்கூலில் இரண்டாம் வகுப்பு.
அப்பொழுது தங்கை ஒருநாள் சொன்னது எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. " நாளைக்கு மிகவும் கஷ்டமான வீட்டுப்பாடம் எழுதவேண்டும். பெரிய பாடம். ஸ்லேட் முழுவதும் எழுதியாகவேண்டும் " ' அது என்ன - கஷ்டமான வீட்டுப்பாடம்? ' என்று கேட்டேன்.
" பனைமரமே , பனைமரமே - ஏன் வளர்ந்தாய் பனைமரமே " பாடம். மிகவும் பெரிய பாடம். எழுதுவது கஷ்டம் என்று சொன்னாள் தங்கை! அந்தப் பாடம் - அவளுடைய சிறிய அளவு தமிழ்ப் புத்தகத்தில் ஒன்றரைப் பக்கம் மட்டுமே இருந்த சில வரிகள் ! ஆனாலும் இரண்டாம் வகுப்புக்கு அது அதிகம்தான்!
இரண்டு அண்ணன்களும் அந்த நாட்களில், எங்களுக்கு ( எனக்கும் என் தங்கைக்கும் ) விதவிதமான புதிர்கள், புதிர்க் கணக்குகள், அறிவை வளர்க்கும் விளையாட்டுகள் எல்லாம் சொல்லிக்கொடுத்தார்கள். என்னுடைய இரண்டாவது அண்ணன் அந்த நாட்களில், கர்நாடக இசை கேட்பதில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினார். பாட்டின் ராகம் கண்டுபிடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுத்தார்.
அப்படி ராகம் கண்டுபிடிக்க அவர் கற்றுக்கொடுத்ததில் நான் முதன் முதலில் தெரிந்துக்கொண்ட ராகம் மோகனம். அதன் பிறகு கானடா.
எமரால்ட் வீட்டில், இரண்டாவது அண்ணன் அவரே இணைத்து செய்த வால்வு ரேடியோ இருந்தது. அதில் இலங்கை வானொலி, மதராஸ் ஸ்டேஷன் (சிற்றலை) எல்லாம் கேட்போம்.
அப்பொழுதெல்லாம் இலங்கை வானொலியில் காலை நேரத்தில் பிரபல கர்நாடக சங்கீத வித்வான்களின் பாடல் - இசைத்தட்டுகளை ஒலிபரப்புவார்கள்.
மதுரை மணி ஐயர் பாடிய 'கபாலி - மோகன ராகப் பாடல், 'சுகி எவரோ ' - கானடா ராகப் பாடல் ஆகியவைகளைத் திரும்பத் திரும்பக் கேட்டு ராகம் கண்டுபிடிக்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு, முல்லை மலர் மேலே - மொய்க்கும் வந்து போலே - என்ற பாட்டைக் கேட்கும்போது அது கானடா ராகம் என்று கண்டுபிடித்தேன்.
அப்புறம் என்ன - தோடி, காம்போதி, பைரவி என்று பல ராகங்கள் கண்டுபிடிக்கக் கற்றுக்கொண்டேன்.
= = = = = = = = =
முருகன் திருவருள் முன் நின்று காக்க.
பதிலளிநீக்குமுருகனருள் நம் எல்லோருக்கும் வேண்டுவோம்.
நீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குஅருவங்காடு என்று நீங்கள் எழுதியிருப்பதை அரவங்காடு என்று உச்சரித்து எனக்குப் பழக்கம். எது சரி என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குஎனக்குமே, பாம்புகள் அதிகம் இருக்கும் பகுதி என்ற பொருளில் அரவங்காடு என்றே இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. தெலுங்கர்கள், சென்னைப் பகுதியிலுள்ள மக்களை அரவாடு என்றழைப்பதையும் ஒப்பிடலாம்.
நீக்குAruvankadu as per Wikipedia. Aravankadu as per Railway station board.
நீக்குஅரவங்காடு வாழ்க்கை எனக்கும் மறக்க முடியாத ஒன்று. நாங்களும் சனி, ஞாயிறுகளில் குன்னூரில் சிம்ஸ் பார்க், ஊட்டி போன்ற இடங்களுக்குச் செல்வோம். ரயில் சேவை இருந்தால் நிறுத்தி நிறுத்திப் போகும் என்பதால் இஷ்டப்பட்ட இடத்தில் இறங்கிப் பார்ப்போம். பைகாராவுக்கும் அப்படித் தான் போயிட்டு வந்தோம். குன்னூரில் லக்ஷ்மி விலாஸ் என்னும் ஓட்டலில் தயிர் வடை நன்றாக இருக்கும். தயிர் வடையும் காஃபியும் அங்கே வாங்கிச் சாப்பிடுவோம்.
நீக்குஎனக்கு அங்கே வீடு வாங்கும் எண்ணம் கூட இருந்தது. ஆனால் நம்ம ரங்க்ஸுக்கு இஷ்டம் இல்லை. வீடு இருந்தால் வெயில் நாட்களில் போய்த் தங்கலாம். அதோடு ஊட்டியின் அழகு கொடைக்கானலில் கிடையாது. கொடைக்கானல் 2,3 முறை போயும் என்னைக் கவரவில்லை.
நீக்குகேஜிஜி பகுதி நன்றாக இருக்கிறது. அவர் இருக்கும்போதே எழுதியிருந்திருக்கலாமோ?
பதிலளிநீக்குகலாம். ஆனால் என்ன தயக்கம் என்றால், அவரே அதை விரும்பமாட்டார். மற்றும் உயிருடன் இருக்கும் மற்ற உடன் பிறப்புகள் - நான் இவனுக்கு எவ்வளவு செய்துள்ளேன் - என்னைப்பற்றி ஒரு வார்த்தைகூட எழுதவில்லையே இவன் என்று நினைக்கக்கூடும்.
நீக்குKGS (பற்றிய) பகுதி என்று இருந்திருக்க வேண்டும்.
நீக்குசரி.
நீக்குகுழந்தைகள் யூனிஃபார்மில் அழகு. ஆனால் யூனிஃபார்ம் இருப்பதால் நமக்கு சூப்பர்மார்கெட்டில் வேலைபார்ப்பவர், நர்ஸ் என்று தெரிந்து சட்டெனப் போய் உதவிகேட்க முடிகிறது. இல்லைனா, நானும் பொருள் வாங்க வந்திருக்கிறேன், நான் பேஷன்ட் கூட வந்திருப்பவள் என்று கடுப்படிப்பார்கள்.
பதிலளிநீக்குகரெக்ட்.
நீக்கு1967-லிருந்து 1970 வரை நான் குன்னூர் தொலைபேசி நிலையத்தில் பணியாற்றினேன். மேல் குன்னூரில் சிம்ஸ் பார்க் எதிரே அலுவலகம் இருந்தது. குறைந்த பட்ச ஊதியத்தை முக்கிய டிமாண்டாகக் கொண்டு 1968-ல் மத்ய அரசு ஊழியர்களின் அகில இந்திய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நிகழ்ந்தது. இரயில்வே, தொலைபேசி, போஸ்ட் ஆபிஸ், கார்டைட் ஃபேக்டரி என்று அனைத்து இலாகா ஊழியர்களும் கலந்து கொண்டு வெற்றிகரமாக நடைபெற்ற வேலை நிறுத்தம் அது. அப்பொழுது எங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட
பதிலளிநீக்குJoint Action Committee-க்கு நான் தான் செயலாளர். காட்டைட் ஃபேக்டரியில் அந்த சமயத்தில் செல்வராஜ் என்ற தோழர் செயலாளராக இருந்தார். பல வருடங்களுக்கு முன் எங்கள் அசோக் நகர் வீட்டில் நாமெல்லாம் சந்தித்த பொழுது தோழர் செல்வராஜ் பற்றி உங்களுக்குத் தெரியுமா என்று Kgs- அவர்களிடம் கேட்டதற்கு அவர் என்ன சொன்னார் என்று நினைவில்லை. 1967--70 காலகட்டத்திலா நீங்கள் எமரால்டில் வசித்தீர்கள்?
கேஜிஎஸ் 1963 முதல், 1973 / 1974 வரை கார்டைட் ஃபாக்டரி வேலை.
நீக்குநான் எமரால்ட் பகுதியில் ஏழாம் வகுப்பு படித்தது 1963-64. ஆனால் இரண்டாவது அண்ணன் எமரால்ட் / குந்தா / குன்னூர் பகுதிகளில் எலக்டிரிசிடி டிபார்ட்மெண்ட் வேலையில் 1958 தொடங்கி பதினைந்து ஆண்டு காலம் பணியாற்றியிருக்கிறார்.
தங்கள் இரண்டாவது அண்ணா பெயர் என்ன?
பதிலளிநீக்குஎ பி ஆசிரியர்கள் பெயர்ப் பட்டியலில் பார்க்கவும்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. படித்து ரசித்தேன்.
தங்கள் பகுதியில் தங்கள் அண்ணாவை பற்றிய நினைவுகளும் படிக்க நன்றாக உள்ளது. சிறு வயது பிராயத்தில் நடந்த சம்பவங்களை நினைவு வைத்து எழுதுகிறீர்கள். , இப்படி தாங்கள் நினைவு கூறும் போது எனக்கும் எங்களின் (நானும் என் அண்ணா மட்டுந்தான்) சிறு வயது சம்பவங்கள் நினைவுக்குள் வருகின்றன. ஆனால், தங்களைப்போல இப்படி கோர்வையாக கூற முடியுமா எனத் தெரியாது. . தங்கள் அபார நினைவாற்றலுக்கு பாராட்டுக்கள். பாசத்துடன் வரும் இந்தப் பகுதியோடு தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தொடர்வதற்கும் பாராட்டுக்கும் நன்றி.
நீக்குகேஜிஎஸ் பற்றிய உங்கள் நினைவுகள் அனுபவங்கள் அருமை.
பதிலளிநீக்குஆனந்தம் என்பதற்குப் பதில் ஆசிரியர் சொன்னதே என் பொருளும்.
பரமானந்தம், நித்தியானந்தம், நித்திய பேரின்பம் என்போமே அப்படியான ஒரு நிலை. அது இந்த பூமி வாழ்க்கை ஒட்டியதல்லாமல் ஒரு eternal bliss ஞானிகளின் நிலையான மனம் எனலாம் என்பது என் புரிதல்.
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு'சியர்ஸ்' - மதுவைக், கண் பார்த்து மகிழ்கிறது. நாசி முகர்ந்தது மகிழ்கிறது. மெய், கிக் இல். வாய் சுவைத்து மகிழ்கிறது. செவிக்கின்பம் வேண்டுமே! அதற்குத்தான் கோப்பைகளை லேசாக இடித்து 'சியர்ஸ்' .
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குகேள்வி பதில்கள் கண்டோம்.
பதிலளிநீக்குKgs பக்கத்தில் அவரின் பல திறமைகளையும் காண்கிறோம்.
நன்றி.
நீக்குகௌதமன் ஜி அவர்களது கை வண்ணம் அருமை...
பதிலளிநீக்குமகாளய பட்சம் திருப்பூந்துருத்தி நேற்றே சென்று அங்கு இரவு தங்கி காலையில் குடமுருட்டியில் குளித்து விட்டு தர்ப்பணம் செய்து மதியம் தான் திரும்பினேன்..
வாழ்க நலம்.
கேஜிஜி கைவண்ணம்??
நீக்குபற்பல சிவனடியார்களைப் பார்த்துப் பேசியதில் மகிழ்ச்சி...
பதிலளிநீக்குகண்கள் பனிக்க தேவார சம்பவங்கள் சிலவற்றைப் பேசி மகிழ்ந்ததில் நெஞ்சுக்கு நிம்மதி..
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
நீக்குநினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே !
மனைவியும் மகனும் சிவ கண அடியார்களுடன் மகாளய பட்சத்திற்கான மாபெரும் அன்னதான ஆயத்தப் பணிகளில் முனைந்திருக்க
பதிலளிநீக்குமுழங்கால் வலியனாகிய நான் மட்டும் கொர்ர்ர்ர்...
எப்படியோ எனக்கும் நல்ல மகிழ்ச்சி..
__/\__
நீக்குகேள்வி பதில்கள் சிறப்பு. Kgs குறித்த தகவல்கள் நன்று. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குகேள்விகள் , பதில்கள் அருமை.
பதிலளிநீக்குஅண்ணாவின் நினைவுகள் அருமை.
பனைமரமே , பனைமரமே - ஏன் வளர்ந்தாய் பனைமரமே " பாடம். மிகவும் பெரிய பாடம். எழுதுவது கஷ்டம் என்று சொன்னாள் தங்கை!//
அந்த பாடல் படங்களுடன் படித்த நினைவு இருக்கிறது.
இப்போது ஒரு நகரத்தார் அம்மா இதை பாடி வாட்ஸ் அப் பகிர்வு வந்தது எனக்கு.