செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 60க்கும் மேற்பட்ட யானைகளின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. சரியான நேரத்தில் சுதாரித்து, சமயோசிதமாக நிலைமையை கையாண்டு, யானைகள் உயிரை காப்பாற்றியதில் முக்கிய பங்கு வகித்த ரயில் டிரைவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அசாம் மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பம் உதவியால், தண்டவாளத்தை கடந்த 60 யானைகளின் உயிரை ரயில் டிரைவர் காப்பாற்றி உள்ளார். செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்கு வங்கம், அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும், தமிழகத்தில் கோவையிலும் கஜ்ராஜ் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. இதன்படி, தண்டவாளங்கள் அருகே செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) சென்சார்கள், கேமிராக்கள் பொருத்தப்படும். இந்த கேமிராக்களில் சாதாரண வீடியோ, தெர்மல் வியூ எனப்படும் வெப்ப காட்சி என இருவகையான வீடியோ காட்சிகளை பார்க்கலாம். தண்டவாளம், அதன் இருபக்கம் 100 அடி வரையில் யானைகள் வந்தால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது வேலை செய்யும். யானை எங்கிருக்கிறது என்பது கண்டறியப்பட்டு, அருகில் உள்ள ரயில் நிலையம், அங்கு பணியில் இருக்கும் அதிகாரி, வனத்துறை ஊழியர்களுக்கு மெசேஜ் அனுப்பப்படும். அதாவது, யானை எந்த டிராக்கில் எத்தனையாவது மைல் கல் அருகே நிற்கிறது என்ற விவரங்கள் அந்த மெசேஜ் மூலம் தெரிவிக்கப்படும். அடுத்த நொடியே இதே மெசேஜ், ரயில் டிரைவர், உதவி டிரைவர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு படிப்படியாக ஹாரன் அடித்துக் கொண்டே ரயிலானது மிக மெதுவாக இயக்கப்படும். யானைகள் மட்டுமின்றி எந்த வனவிலங்குகள் தண்டவாளம் அருகில் வந்தாலும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செயல்படும்.
================================================================================================
நான் படிச்ச கதை (JKC )
கதை ஒன்று ; ஆசிரியர்கள் இரண்டு ; புனைவுகள் மூன்று.
பகுதி 2/2
பகுதி 1/2 ன் சுட்டி:
பகுதி ஒன்றின் சுருக்கம்:
பகுதி ஒன்றில் புதுமைப்பித்தனின் ‘அகல்யை’ மற்றும் ‘சாபவிமோசனம்’ என்ற இரண்டு கதைகளின் சுருக்கங்களை பார்த்தோம். கௌதமரின் மனைவி அகல்யை இந்திரனிடம் கற்பை இழக்கிறாள். புதுமைப்பித்தன் ‘அகல்யை’யில் கௌதமர் சபித்ததை நாசூக்காக விட்டுவிட்டு கௌதமர் இந்திரனை மன்னித்து போய் வா என்று சொல்வதாக கதையை முடித்து விட்டார். ஆனால் அகல்யை மனதில் ஊழித்தீ.
இரண்டாம் கதையான ‘சாபவிமோசனம்’ அகலிகை ஸ்ரீ ராமனின் கால் பாதம் பட்டு சாப விமோசனம் அடைந்தாள் என்று துவங்குகிறது. கௌதமனும் தனது நிஷ்டையில் இருந்து புற்றை உடைத்து வெளி வருகிறார். விஸ்வாமித்ரர் கௌதமனையும், அகல்யையும் சேர்த்து வைக்கிறார். இருவரும் சரயு நதிக்கரையில் ஒரு குடில் அமைத்து வாழ்கின்றனர். கோதமர்க்கு (கௌதமர் இக்கதையில் கோதமர் ஆகிவிட்டார்). ஒரு குற்ற உணர்வு. எது தர்மம் என்ற விசாரத்தில் ஆழ்கிறார்.
அகல்யை மற்றவர்களால் ஒதுக்கப்படுவதை கண்டு வருந்துகிறாள். சாப விமோசனம் அடைத்தாலும் பாப விமோசனம் அடைய முடியவில்லையே என்று கலங்குகிறாள்.
கோதமரும் அகல்யையும் தீர்த்தாடனம் செய்யலாம் என்று புறப்படுகிறார்கள். முதலில் மகன் சதானந்தனை சென்று காண்கிறார்கள். அவன் ஜனகர் நடத்தும் தத்துவ விசாரத்தில் கலந்து கொள்ள மிதிலைக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறான். இருவரும் அவனுடன் ஜனகரின் அரண்மனையில் நடக்கும் விசாரத்தில் கலந்துகொள்கிறார்கள்.
பதினான்கு வருடங்கள் முடிந்து ஸ்ரீ ராமன் நாட்டுக்கு திரும்பும் நாள் வந்து விட்டது. ஒரு நாள் அகல்யை ஆற்றின் கரையில் கைகேயியைக் காண்கிறாள். கைகேயி “பரதன் பிராயோபவேசம் செய்யப் போகிறானாம். அக்கினி குண்டம் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறான்” என்று கூறி அவனைத் தடுக்க கோதமர் முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள். அனுமன் செயலால் பரதனுக்கு ஒன்றும் நேரவில்லை.
ஸ்ரீராமன் அயோத்திக்கு வந்த பின்னர் சீதை அகல்யையின் உற்ற தோழி ஆகிறாள். அக்கினி பிரவேசம் பற்றி சீதை அகல்யையிடம் கூற அகல்யையின் கணிப்பில் அவர் (ராமர்) அவன் (ராமன்) ஆகிவிட்டான். “மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வம்சத்துக்குச் சத்துரு” என்று கொதித்தாள் அகலிகை.
சாப விமோசனம், பாப விமோசனம், தத்துவ விசாரம், தர்ம விசாரம் என்று இடையில் ஏகப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்ட ‘சாபவிமோசனம்’ கதை அகல்யை மீண்டும் கற்சிலை ஆவதாகவும், கோதமர் துறவியாகி இமயமலை நோக்கி செல்வதாகவும் முடிகிறது.
முன்னுரை
பின்வரும் ‘சரயு’ கதை சீதை, அகல்யையை அவளுடைய குடிலில் சந்திப்பதாக துவங்குகிறது. இந்திரன் பாபவிமோசனம் பெற கௌதமரின் ஆசிரமத்திற்கு வருகிறான்…. கடைசியில் சீதை ராவணனை மன்னித்தாள் என்று முடிகிறது. இக்கதை புதுமைப்பித்தன் எழுதியது போன்றே அவரது நடையில் அமைந்ததாக கருதுகிறேன்.
சரயூ- வையவன் (கதை சுருக்கம்)
தேவேந்திரன் சரயூ நதிக்கரையில் நின்றிருந்தான். ஓடக்கரையில் ஓர் ஓடக்காரன் நின்றான்.
இந்திரனை ஒரு கரைகடக்க விரும்பும் பயணியாய்ப் பார்த்தான்.
‘எங்கே போகவேண்டும்?” கேட்டான்..
‘அயோத்திக்கு..’
‘அயோத்தி என்றால் அதோ தெரிகிறதே அது தான். அயோத்தியில் எந்த இடம்? எந்தக் கரை?’ஓடக்காரன் வெருட்டிக் கேட்டான்.
‘கௌதம மகரிஷி ஆசிரமம்’
‘அப்படித் தெளிவாகச் சொல்லவேண்டும். சரயூவின் கரை நெடியது. கடத்திக் கூட்டிச் செல்ல இரண்டு பணம் ஆகும்!’
தேவேந்திரன் ஏறி அமர்ந்தும் படகில் பளு இல்லை. தேவனாகையால் காற்றைப் போல் லேசாக இருந்தான். வெற்றுப்படகு போல துடுப்பு போடுவது லேசாக இருந்தது.
‘ஸ்ரீ ராமச்சந்திரபிரபுவின் பட்டாபிஷேகம் பார்த்தீர்களா?’ ஓடக்காரனை இந்திரன் விசாரித்தான்.
‘ஓ! கண்கொள்ளாக் காட்சி. இந்தப் பிறவி செய்த புண்ணியம். இதோ இப்போதுதான் ஸ்ரீ ராமச்சந்திரப் பிரபு எங்கள் தலைவர் குகனை வழியனுப்பப் போய்க்கொண்டிருக்கிறார்.’ நல்லது.
ஆசிரமக்கரையோரம் ஓடம் நின்றது.
இந்திரன் ஓடக்காரனுக்கு நன்றி கூறிவிட்டு இறங்கி ஆசிரம எல்லையில் நுழைந்தான்.
இந்திரன் ஆசிரமத்திற்குள் பிரவேசித்தபோது கௌதமர் அங்கு இல்லை. அகல்யா கண்ணில் பட்டாள். மனசில் காமத்தின் விஷம் தலை தூக்கியது. அடங்கியது.
ஒரு விசேஷ அதிசயமாக சீதாப்பிராட்டி நின்றிருந்தாள்.
“நீங்களா?”
முதலில் கேட்ட அகல்யாவின் குரலில் அச்சமில்லை . அதட்டிக் கேட்கும் கம்பீரம்.
‘எதற்கு வந்தீர்கள்?’ அகல்யா கேட்டாள் இந்திரன் தலை குனிந்து நின்றான். மிக அருகில் யாரோ வரும் மரக்காலடிகளின் ஓசை கேட்டது. இந்திரன் திரும்பிப்பார்த்தான், கௌதமர். .
அவர் தான் சபித்து ஏற்படுத்திய இந்திரனின் ஆயிரம் கண்களின் மெளன துக்கத்தைப் பார்த்துக்கொண்டே போய் அவன் வலப்புறத்தில் வந்து நின்றார்.
யுகயுகங்களுக்கும் இனி தலைநிமிர்வு இல்லை என்று வளைந்த இந்திரனின் முதுகெலும்பு குற்ற ஒப்புதல் சாட்சியம் அளித்தது.
அகல்யா நிமிர்ந்து நூறு அக்கினிப் பிரவேசங்களைக் கடந்து வந்த கற்பின் கனல் சுடர் வீச நின்றாள்.
அவளது கண்கள் பச்சாத்தாபத்தோடு பார்த்தன.
தேவராஜனாய் இருந்தும், மண்ணாகப்போகிற மனிதனுக்குரிய பலவீனம் அவனைப் பற்றிய அந்த இழுக்கிற்கு ஆளாக்கிய இரக்கம் அவளில் மிதந்தது. என்ன செய்வது! மனிதனாகப் பிறந்து செய்த புண்ணியங்களின் பதவி தானே அது’ தேவனாகலாம். தேவேந்திரன் ஆகலாம். தனது பேரழகு, காண்கிற எல்லோரையும் அது வசிகரிக்கின்ற காந்தம். இவைதான் காரணம் என்ற விடுபடல் அந்த இரக்கத்தில் வெளிப்பட்டது.
கௌதமரோ சாபம் இடுமளவு கொதித்த சினம் சாம்பல் மேடாகி, அதை மௌனமாகக் கடந்து வரும் சாம்பசிவம் போன்று உணர்ச்சியற்று நின்றார்.
அவர் சீதையைப் பார்த்தபோது அவள் சரயூவைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.!
இடுப்பின் மேல் கைவைத்தபடி இந்திரனை விசாரிக்கிற அகல்யா. சற்றும் பதறாமல் அருகே நிற்கும் கௌதமர்.
சீதா முதலில் திகைத்தாள். ஏதோ அசம்பாவிதமோ? தான் அங்கே நிற்கவேண்டுமா? காண விரும்பாமல் விலகி நடக்க முயன்றாள்
“நில்லுங்கள் தேவி .’ என்று தடுத்தாள் அகல்யா. சீதா நின்றாள், “இந்திரன் ஏன் வந்தார்?” சீதா அகல்யாவைக் கேட்டாள்…..
‘அவனையே கேளுங்கள்!’ சொல் இல்லை. முகம் திரும்பி இந்திரனைச் சுட்டும் சைகை.
‘தேவேந்திரா!’ சீதை நீதிபதி போல் இன்றி கருணை காட்டும் கனிவோடு கேட்டாள்.
சற்றே நிமிர்ந்து சீதையைப் பார்த்த இந்திரன் அதில் நிலவிய தெய்வவீக ஒளி கண்டு சட்டென்று குனிந்து அவளது பாதங்களைத் தொடப் போனான். நகர்ந்து நின்ற சீதை சொன்னாள்:
“நான் மனுஷி, நீங்கள் தேவேந்திரர்.”
அருகில் நின்ற கௌதமர் மார்பில் கைகட்டி நின்றார்.
தூரம் அகன்றாலும் சீதையின் முன் தரையைத் தொட்டு வணங்கி இந்திரன் சொன்னான்.
‘இல்லை . அன்னையே! தாங்கள் மறந்திருக்கலாம். நான் மறக்கவில்லை . பாற்கடலில் அறிதுயிலில் உள்ள மகாவிஷ்ணுவின் துணைவி. எந்தப் பாத தூசுக்கு விமோசன சக்தி உள்ளதோ அவரது பத்தினி தாங்கள்.’
‘இது ராமாவதாரம்.’
“இங்கே ஏன் மீண்டும் வந்தீர்கள்?”
‘பாப விமோசனம் கேட்க வந்தேன்.’
‘அகல்யாவிடமா?’
‘ஆம், அன்னையே!’
கௌதமரைக் காட்டி சீதா கேட்டாள். “சாபம் கொடுத்தவர் இவர். இவர் இல்லாத சமயத்தில் இங்கு வந்தால்.. இவ்வளவும் நடந்த பின் மீண்டும் வந்தால் அதற்கு என்ன பொருள்?’
‘சாபமிட அகல்யாவை ஆளாக்கிய என் பாவத்திலிருந்து விமோசனம் வேண்ட வந்தேன்’.
‘அகல்யா தேவி என்று சொல்!”
சீதை சொன்ன மரியாதைப் பன்மையை மனத்தில் ஏற்றுக் கொண்டு ‘மன்னியுங்கள்’ என்று வேண்டினான்.
‘என்ன எளிமையாக விமோசனம் கேட்கிறான் இவன்!’
‘எனக்கு ஸ்ரீ ராமன் காலடி பட்டு சாபவிமோசனம் கிடைத்து விட்டது. ஆனால் பாபக்கறை போகவில்லையே, போக விடாத எத்தனை பார்வைகள்! அருவருப்பு. ஏளனம்.. இந்திரனாய்த் தன்னை நினைத்துத் தனக்குள் தோன்றும் சபலம் மறைத்த பரிவுகள்.
“இவள் தான் அகல்யா..’ என்னைச் சுட்டிக் காட்டி அடையாளம் சொல்லும் எத்தனை ஆண்கள் . எத்தனை பெண்கள். ரிஷிபத்தினிகள் முதல் இளவரசிகள் வரை. சாபங்களுக்கு அஞ்சி நரிப்பார்வை பார்க்கும் கோழைகள்’ அகல்யா சீற்றம் தணியாத பார்வையோடு இந்திரனைப் பார்த்தாள்.
எதிர்பாராமல் கௌதமர் பேசினார்:
‘சாபம் கொடுத்தது என் பலவீனம்.’ என்றார்.
அவர் குரல் கம்மியிருந்தது.
சீதா அவரை வியப்போடு பார்த்தாள்.
இந்திரனின் தலை மீண்டும் ஒரு முறை குனிந்தது .
“சீதா!” கௌதமர் அவளை மெல்லிய குரலில் அழைத்தார்.
‘ராமனைப் பார்க்க வந்த குகன் சரயூவின் இக்கரையில் காத்திருக்கிறான். அங்கே ராமனோடும் குகனோடும் அனுமனும் இருக்கிறான். அவனும் உன்னைக் காண வேண்டிக் காத்திருக்கிறான். நாம் போவோமா?’
“உள்ளே போன அகல்யா வந்து விடட்டுமே!
“இல்லை. நாம் போவோம். இந்திரன் அவளிடம் பாப மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறான். மன்னிப்புக் கேட்பவர், கொடுப்பவர் இருவருக்குமே முன்னால் வேறு சாட்சிகள் இருப்பது தர்மசங்கடம்’
ஒருமுறை இந்திரனையும், கதவுக்கு அப்பாலிருந்த அகல்யாவையும் பார்த்துவிட்டு கௌதமரின் கம்பீரமான பெருந்தன்மைக்குக் கட்டுப்பட்டு சீதா அவரைப் பின்தொடர்ந்தாள்.
அந்த இருவரை ஒன்றாகப் பார்த்ததால் சபித்தவர், இப்போது இருவரையும் தனியே இருக்க அனுமதித்து விட்டு வருகிறார். அந்தக் கண்ணியம் அவள் நெஞ்சில் ஒரு கல்லாக விழுந்து அலைகளாய்ப் பரவியது.
“இன்று போல் நான் அகல்யாவை அன்று உணர்ந்திருக்கவில்லை. எதையும் பொறுத்துக் கொள்ளும் தபோபலம் அன்று இல்லை. ஒரு பெண் என்னுடைமை என்ற ஆதிக்கம் மறையவில்லை. பரம்பொருள் என்னைத் தொலைவிலேயே அகற்றி வைத்திருந்தது. நான், என்னுடையது என்ற எண்ணம் நீங்கவே வாய்ப்புக் கொடுத்திருந்தது பரம்பொருள்.’
சீதா அவரது கண்களில் நிலவிய சாந்தத்தை மனசிற்குள் வாங்கிக் கொண்டாள்.
‘சபிக்கும் அளவுக்கு அப்போது நான் பலவீனன்.. ஒரு ரிஷிபத்தினி சாபங்களுக்கு அப்பாற்பட்டவள். சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவள் தான்.. என் அறிவீனம் அவள் சபலங்களுக்கும் அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தது. என்ன அகந்தை! விளைவு பல ஆண்டுகள் அவள் சுமந்தது கல்லின் கடினத்தை. இந்திரனுக்கு இட்ட சாபத்தால் அவனைக் காண்பவர்கள் எல்லாரையும் அகல்யாவின் வீழ்ச்சியை நினைக்கச் செய்து விட்டேன்’ எதிரில் ஒரு பெரிய பாறை தென்பட்டது. ‘அம்மா சீதா அங்கு போய் சற்று அமர்ந்து பேசுவோமா?’ என்று கேட்டார்.
“ஆகட்டும் மகரிஷி!” இருவரும் ஒருவரை ஒருவர் எதிரெதிரே பார்த்தபடி அமர்ந்தனர்.
“என் மனசில் வளர்ந்திருக்கும் புற்றிலிருந்து நான் வெளிவரவேண்டும் அம்மா சீதா!”
சீதா புன்னகையோடு அவரை ஒரு குழந்தையைப் பார்ப்பது போல் பார்த்தாள்.
‘அகல்யா பிரம்மாவின் மகள். அவரது கற்பனையை எல்லாம் குழைத்து இனி இவளுக்கு மேல் ஓர் அழகு இருக்கக் கூடாது என்ற சங்கல்பத்தோடு உருவாக்கிய பேரழகி. தேவாதி தேவர்களையெல்லாம் ஓட்டப்பந்தயம் ஓடவைத்துப் பார்த்துவிட்டு என்னை அவளது தந்தை பிரம்மா தேர்ந்தெடுத்தார். முனிவனுக்கு மனைவியாக இருப்பது மட்டுமே போதும் என்று இயற்கையை நிர்ப்பந்திக்க முடியாது. அதுவும் தேவர்களுக்கே தலைவனான இந்திரன் தன்னை இச்சிக்கிறான் என்ற கர்வத்திலிருந்து விடுதலையாகி நிற்க எந்தப் பெண்ணால் முடியும்? அப்படி இருக்க அகல்யாவுக்குக் கற்பிக்கப் படவில்லை .
ஆண் பெண் என்ற பாலின பேதம் கடந்த ஞானியாக எதிர்பாராவிதமாக கௌதமர் வெளிப்படுவதைக் கண்டு சீதா அந்த ஞான சாந்நித்தியத்தில் நிற்கிற அனுபவம் பெற்றாள்.
‘சீதா! உன் வைராக்கியம் பூஜிக்கத்தகுந்தது. அகல்யாவின் பலவீனம் மன்னிக்கத் தகுந்தது.’
‘மகரிஷி .. தாங்கள்..?’ சீதா வாசகத்தை முடிக்காமல் இழுத்தாள்.
“இந்திரன் மன்னிக்கப்படவேண்டியவன். என்ன செய்கிறோம் என்பது அறியாமல் ஒரு கணத்தில் தவறிழைத்து விட்டான். பாபம் அவனைச் சாராது.’
‘பின் யாரைச் சாரும்?’
‘அகல்யாவின் வடிவழகை… அந்தச் சிருஷ்டியை. அதை உருவாக்கிய சிருஷ்டிகர்த்தாவை.’
ஒருகணம் கண் மூடி யோசித்து வானத்தைப் பார்த்தார். பிறகு எதிரிலிருந்த சீதையைப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்
‘இல்லை, தெளிவாக யோசித்தால் பிரம்மதேவர் கூட இதற்குப் பொறுப்பாக மாட்டார். தான் ஒரு பேரழகியாக இருக்கவேண்டும் என்று ஒரு பேரழகை அகல்யா தனக்குள் இச்சித்தாள். பிரம்மா அனுக்கிரகித்த வடிவம்: அது. வழங்கியது பிரம்மா. நாம் நம்மையே சிருஷ்டித்துக் கொள்கிறோம். அகல்யா அப்படி இச்சித்துப்பெற்ற அனுபவத்தால்தான் தனது அழகின் பிரமையில் இருந்து இப்போது விடுபட்டிருக்கிறாள்.
சீதைக்கு ராவணன் நினைவு வந்தது!
எவ்வளவு மகா சக்திமான்! எப்பேர்ப்பட்ட வீரன்! கைலயங்கிரியைத் தன் கைகளால் அசைத்துப் பார்த்தவன். எட்டுத்திசைகளையும் தன் கட்டில் கொண்டு வந்தவன். எப்படி என் அழகில் மூழ்கி அழியாத அவப்பெயருக்கு ஆளானான்? அவன் பாவங்களை இராமபாணம் துருவித் துளைத்தெடுத்து விட்டது. அவன் மன்னிக்கப்பட்டிருப்பானா? இருக்காது என்ற எண்ணம் தோன்றியது. அவன் சிந்தையைக் குலைத்த அழகிற்குத் தானே காரணம் என்று நினைவு வந்தது. தான் இந்தப் பேரழகை இச்சித்தோமோ? நடந்தது என்ன? விதி எழுதிய ஒரு பெரிய சோக நாடகமா? திரை விழுந்து விட்டது, பின் உணர்ச்சிகளுக்கு வேலையில்லை,
சீதை ராவணனை மன்னித்தாள். அவன் பாவங்களை எல்லாம் மன்னித்தாள். திரும்பி தூரத்தில் தெரிந்த சரயூவைப் பார்த்தாள். வெள்ளை வெளேரென்ற நுரைவெள்ளத்தோடு அது சிரிப்பது தெரிந்தது. பரிபூரணமான சாந்தி அவளுள் பிரவேசித்தது.
இந்த சாந்தியை அகல்யாவும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாள்.
வேறொன்றும் பேச்சின்றி ‘போவோம் மகரிஷி!’என்றாள்.
இருவரும் சரயூவின் கரை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினர்.
பாபவிமோசனம் பெற்ற தேவேந்திரன் ஒடக்கரை நோக்கி நடந்து வந்தான். அவன் மீண்டு வருவதைக் கண்டு ஐராவதம் வான்வெளிக்குத் திரும்பும் முன் சரயூ வளர்ந்த வனத்திடமிருந்து விடைபெற்றது.
பின்னுரை.
வையவன் “சாப விமோசனத்தில்” உள்ள சீதை அகல்யை சந்திப்பு என்ற நிகழ்வை கருப்பொருளாக்கி சீதை ராவணனை மன்னித்தாள் என்று ஒரு கருத்தை முன்வைக்கிறார். இந்திரனையும் ராவணனையும் ஒப்பிட வேண்டி இந்திரனை மீண்டும் அகல்யையை சந்திக்க வைக்கிறார். பெரிய குற்றம் (கற்பழிப்பு) செய்த இந்திரனையே அகல்யை மன்னிக்கும் போது தன்னைத் தொடக்கூட இல்லாமல் தன்னுடைய சம்மதித்திற்காக காத்திருந்த ராவணன் மேல் சீதைக்கு அனுதாபம் தோன்றுகிறது, அவன் மன்னிக்கத் தகுந்தவன் என்று (மரித்தவனை) மன்னிக்கிறாள் என்று அவருடைய விருப்பத்தை கதையில் புகுத்தி முடிக்கிறார்.
கதையின் தலைப்பு “சரயு” என்பது கதையின் கருவுக்கு பொருந்தவில்லை. “பாவ மன்னிப்பு” என்று தலைப்பு வைத்திருக்கலாம்.
முடிவுரை.
ஆராய்ச்சி என்றால் ஆராய்ச்சியின் பயன் அல்லது முடிவு என்று ஒன்று வேண்டும். அப்படி கிடைத்த முடிவு.
● மூன்று கதைகளிலும் அகல்யை குற்றமற்றவள் ஆகிறாள்.
● நடந்த சம்பவங்களுக்கு யார் அல்லது எது பொறுப்பு என்பதில் ஆசிரியர்கள் வேறுபடுகிறார்கள். புதுமைப்பித்தன், கௌதமர் தன்னுடைய அவசர சாபத்தை எண்ணி வருந்துவதாக கூறுகிறார். வையவன் இந்தக் காரணம் இல்லை, இது இல்லை என்று ஒவ்வொன்றாக நீக்கி கடைசியில் அகலிகையின் அழகே எல்லாவற்றிற்கும் காரணம் படைத்த பிரம்மா போலும் அல்ல அவளே பொறுப்பு என்று உணர்வதாகக் கூறுகிறார்.
● கீமாயணம் ஆகாவிட்டாலும் “சாப விமோசனம்” ராமனையும் ஒரு சாதாரண மனிதனாகவே காட்டுகிறது.
● ஆணாதிக்கம் பற்றி இரண்டு ஆசிரியர்களும் குறை சொல்கிறார்கள். அதற்காக பெண்ணாதிக்கம் வேண்டும் என்று சொல்லவில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்று கருதினால் போதும் என்று கூறுகிறார்கள். ஆண்டான் அடிமை என்று ஆண்கள் பெண்களை அடிமைகளாகவே வைத்திருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.
கடைசியாக:
எழுத்தாளர்களுக்குக் கற்பனை என்பது ஒரு மடை திறந்த வெள்ளம் போன்றது. கற்பனை பெருக்கெடுத்தால் வார்த்தைகள் தானே வந்து வாக்கியங்களை அமைக்கும். அப்படி வெளிவரும் கதைகள் சில சமயங்களில் ஒரு புரட்சிகரமான கருத்துள்ள கதையாகவும் அமையலாம். அப்படி எழுதும் எழுத்தாளன் அதனால் வரும் எதிர் வினைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. (ராஜாஜி “சாப விமோசனம்” புதுமைப்பித்தனை சாடியிருக்கிறார்)
ஒரே எழுத்தாளர் ஒரே கருத்தை வெவ்வேறு சமயங்களில் கதையாக்கும்போது கதை வடிவமும் வேறுபட்டு மாறுகிறது. நடை, வார்த்தைகளின் தேர்வு போன்றவை வித்தியாசப்படலாம். புதுமைப்பித்தனே பல கதைகளை வித்தியாசமான நடைகளில் எழுதியிருக்கிறார்.
சரயு கதையின் சுட்டி - ======>இங்கே<======
ஆசிரியர்கள் அறிமுகம்: சுட்டிகள்:
புதுமைப் பித்தன்: =======>சுட்டி<========
வையவன்: ==========>சுட்டி<===========
==========>சுட்டி<==========
இந்தக் கதையின் விளைவாக எழுந்த சிந்தனைகளை சகோதரி கமலா ஹரிஹரன் ஒரு பதிவாகவே வெளியிட்டுள்ளார். அதைப் படிக்க இங்கே சுட்டவும்.
அகல்யை இந்திரனை மானசீகமாக காதலித்தாள் என்பது போன்ற ஒரு கருத்தை "கனவும் கமலாவும்" பக்கத்தில் கமலா அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இக்காரணத்தால் தான் அகல்யை இந்திரனை மன்னித்தால் என்று கூறலாமோ? இக்காரணத்தால் தான் இந்திரன் கூடியபோது வாளாவிருந்தாள் என்றும் சொல்லலாமோ? இது போன்ற ஐயங்கள் பலவும் ஏற்படுகின்றன. இத்தகைய மாறுபட்ட கருத்துக்களையும் கமலத்துவம் பதிவில் காண்பீர்.
பதிலளிநீக்குJayakumar
மன்னித்தாள்
நீக்குhttps://kamalathuvam.blogspot.com/
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்கு/அகல்யை இந்திரனை மானசீகமாக காதலித்தாள் என்பது போன்ற ஒரு கருத்தை "கனவும் கமலாவும்" பக்கத்தில் கமலா அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்./
இது என் எண்ணத்திலோ, கற்பனையிலோ தானாக உதித்து வந்த கருத்தல்ல.. அதன் விபரங்களை என் வலைப்பக்கத்தில் உங்களுக்கு பதிலாக கருத்தில் சொல்லியுள்ளேன்.
தங்கள் கருத்தையும் என் பதிவின் விளம்பரத்தையும் படித்ததும் எனக்குள் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், அதையும் மீறி ஒரு தடுமாற்றம் கலந்த தயக்கம் வந்து விட்டது. அதனால்தான் எவ்விதமான விவாதங்களுக்குள்ளும் நான் பிரவேசிக்க விரும்ப மாட்டேன். நம் நட்புகள் தந்த தைரியத்தில், இந்த முறை சற்று ஆராய முற்பட்டேன் . மற்றபடி புராண கதைகளை அதன் நிலை மாற்றி விமர்சிக்கும் அளவிற்கு நான் இலக்கியங்களை ஆழ்ந்து படித்ததில்லை. என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
சகோதரி கீதாரெங்கன் அவர்கள் என் பதிவுக்கு இன்னமும் வரவில்லையென்பதால் அவரும் என் எழுத்தை தவறாக நினைக்கிறாரோ என ஐயமுறுகிறேன்.
மற்றபடி உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்கள் எனக்கு மகிழ்வை தருகிறதோடு மட்டுமின்றி, இக்கதைகளைப்போல மற்ற சமூக, சரித்திர கதைகளைப் பற்றியும் , என் மனதில் தோன்றும் பலவித எண்ணங்களை கண்டறிய ஆவல் கொள்ள வைக்கிறது என்பதாலும் தங்களுக்கு என் பணிவான நன்றிகள் பல கூறிக் கொள்கிறேன். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
JKC Sir.... நான் பதிவிலேயே லிங்க், காலையிலேயே கொடுத்திருக்கிறேன், பார்க்கவில்லையா?
நீக்குகதை பகிர்வு நன்று. இரண்டு நாட்களுக்கு முன்பு சரயுவின் இரண்டு வெவ்வேறு இடங்களில் ந்தியின் அழகைப் பருகினேன். அதனால் கதையுடன்ஒன்ற முடிந்தது.
பதிலளிநீக்குஇந்திரன் ஆசைப்பட்டபோது, அந்தக் கணத்தில் தன் அழகை எண்ணி கர்வமுற்றுவிட்டாள் அகலிகை என்றே படித்திருக்கிறேன். கணத்தில் செய்யும் தவறுகள் நமக்குத் தீராத அபகீர்த்தியைக் கொடுத்துவிடுகின்றன.
நெல்லை! அகலிகைக்கு அபகீர்த்தி விளைவிக்க என் மனம் ஒப்பாது. அவள் ரிஷி பத்தினி. தெய்வாம்சம் பொருந்தியவள். அவள் தன் அழகில் கர்வப்பட புதுசாக ஏதுமில்லை.
நீக்கு'இந்திரன் ஆசைப்பட்ட பொழுது .. கர்வமுற்று விட்டாள்'
என்று நீங்கள் படிக்க நேர்ந்த பொழுது 'என்னய்யா, கைலே பேனா கிடைச்சுட்டா எது வேணாலும் எழுதிடுவியா?.. தன் கணவர் என்றே அவள் எண்ணியிருக்கும் பொழுது எதுக்கோ 'அவள் கர்வப்பட்டாள்' என்று நீ உளறுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கா?' என்று உங்கள் மனசு சாடியிருக்க வேண்டாமா?
ஜெகேஸிக்கு எதைப் படிச்சாலும் தத்துவ விசாரமாகவும், தர்ம விசாரமாகவும் தோன்றுவது வேடிக்கை. எல்லாம் காலத்தின் கோலம்.
ஜீவி சார்.. நான் படித்தது நினைவுக்கு வந்து எழுதினேன். I will come back on this subject before i travel today
நீக்குஜீவி அய்யா J K யின் சொற்பொழிவுகளை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதே JK ஆகிய நானும் கொஞ்சம் தத்துவ பிதற்றல்களில் மூழ்குவதில் வியப்பில்லை.
நீக்குஜீவி சார்... படித்த என் நினைவில் இருந்ததை நான் எழுதினேன். ஒருவேளை தவறான ஏதேனும் புத்தகத்தைப் படித்துவிட்டு அது என் நினைவில் இருந்ததோ என்று அஞ்சினேன். அதனால்தான் பிறகு எழுதுகிறேன் என்று எழுதினேன்.
நீக்கு------------------------
நீண்ட காலம் அவரும் அவர் மனைவி அகலிகையும் இங்கே இருந்து வந்தார்கள். இடையூறின்றி அவர்களுடைய தவமும் நடந்துவந்தது. ஒருநாள் இந்திரன் சமயம் பார்த்து, ஆசிரமத்தில் முனிவர் இல்லாத காலத்தில் கௌதமருடைய உருவத்தையும் முனி வேஷத்தையும் தரித்துக்கொண்டு ஆசிரமத்துக்குள் புகுந்தான். அகலிகையின் உலகப் பிரசித்தமான அழகை நினைத்து அவளையடையும் கெட்ட எண்ணத்துடன் வந்தான். இவ்வாறு திருட்டுத்தனமாக வந்த தேவராஜன் அகல்யா தேவியைப் பார்த்து, 'அழகியே எனக்கு ஆசை மேலிட்டிருக்கிறது. இந்த நிலையில் காலப்பொருத்தம் பார்க்கலாகாது. நாம் கூடுவோம்' என்று முனிவர் சொல்வதுபோல் சொன்னான்
ரிஷியின் மனைவி உடனே விஷயத்தைத் தெரிந்து கொண்டுவிட்டாள். இவன் தன் புருஷன் இல்லை. இந்திரன் என்பது அவளுக்குத் தெரிந்துவிட்டது. ஆயினும், தேவராஜனே தன்னைத் தேடிவந்தான் என்று தன் அழகைப்பற்றிக் கர்வப்பட்டு மனநிலை இழந்துவிட்டாள். தேவராஜனுடைய விருப்பத்துக்கு உடன்பட்டுவிட்டாள்.
பிறகு, 'தேவராஜனே! சீக்கிரம் புறப்பட்டுப் போ. பெரும் அபாயத்தினின்று எப்படியாவது காப்பாற்றிக்கொள்' என்று எச்சரித்தாள். இந்திரனும், 'உனக்கு நன்றி' என்று சொல்லிவிட்டு, வேகமாகத் திரும்பிப் போனான்.
------------------------
மேற்கண்ட பகுதி, இராஜாஜி அவர்கள் எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் புத்தகத்தில் பக்கம் 57-58ல் வருகிறது. இப்போது உங்களுக்குச் சந்தேகம் நீங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.
தண்டவாளத்தைக் கடக்கும் விலங்குகளைக் காக்கும் கண்டுபிடிப்பு பாராட்டத் தக்கது. இதைப் படிக்கும்போது, அப்துல் கலாம் அவர்கள் கால் பழுதுபட்ட சிறார்களின் காப்பகத்திற்குச் சென்றதும், அதன் தலைவர், குழந்தைகள் கடுமையான டையுள்ள செயற்கைக் காலைத் தூக்கமுடியாமல் கஷ்டப்படுவதை விளக்கி தீர்வு கேட்டபோது, ராக்கெட்டுக்கான மெடீரியலை உபயோகித்து அந்தப் பிரச்சனையைத் தீர்த்ததுமான சம்பவம் நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குதக்காளி ஷீட், வெங்காய ஷீட் போன்ற கண்டுபிடிப்புகள் யாருக்கு வரப்பிரசாதமாக இருக்க வேண்டும்? இடைத் தரகர்களுக்கல்ல, விவசாயிகளுக்கு. இதுபோல வெண்டை, சௌசௌ, போன்ற பல காய்கறிகளுக்கும் தீர்வு வந்தால் நல்லது. சில நேரங்களில் கிலோ பத்து ரூபாய்க்குச் சீரழியும்.
பதிலளிநீக்குநெல்லை ரொம்ப கரெக்ட் உங்க பாயின்ட். ஆனா இதை விவசாயிகளே செய்யலாம் செய்து பலன் பெறலாம்.
நீக்குவெண்டை வத்தல் போல வெண்டையை சின்ன துண்டுகளாக நறுக்கி, கத்தரிக்காய், குறிப்பாக வாழைக்காய்...(அங்கு கிடைபப்து அரிது என்பதால்) உப்பிட்டு காரம் கொஞ்சம் கலந்து காய வைத்து மகனுக்கு முதலில் அனுப்பியதுண்டு அங்கு ஸ்டீம் செய்து பொரியலாகச் செய்து கொள்ளலாம். இப்ப அவன் இருக்கும் ஊரில் வாழைக்காய் தவிர மற்றவை கிடைக்கின்றன. வாழைக்காய் மட்டும் அனுப்பினேன்.
கீதா
கீதா ரங்கன்(க்கா)... நீங்க ரொம்ப திறமைசாலி. உங்களுக்கு ஸ்பான்ஸர் யாராவது அகப்பட்டால், எப்போதோ பெரிய தொழிலதிபர் ஆகியிருப்பீங்க. வெளிநாட்டு வாழ் நம் மக்கள் உங்கள் ப்ராடக்ஸ் னால மிகுந்த பயன் பெற்றிருப்பாங்க.
நீக்குஅது சரி.. அப்படி பெரிய தொழிலதிபரா ஆனப்பறம் எதுக்கு பிளாக் அக்கப்போருக்கு நுழையப்போறீங்க?
ஹாஹாஹாஹா நெல்லை அதை ச் சொல்லுங்க!!! இப்படிக் கனவாச்சும் கண்டுக்கலாம்....
நீக்குஎனக்கெல்லாம் நடக்காது நெல்லை. அப்படி இருந்திருந்தா 2001 லியே தக்காளியை அரைத்து மரச்சீனி அப்பளம் போல போட்டுச் செய்தது மார்க்கெட் பண்ணிருப்பேனே!!!! அந்தச் சாமர்த்தியம் எண்ணம் எதுவுமே இல்லை.
சமீபத்தில் கூட என் நாத்தனார் எங்கிட்ட சொன்னாங்க அண்ணா மட்டும் ரொம்ப principled ஆக இல்லாம இருந்திருந்தா எவ்வளவோ செஞ்சிருக்கலாம்....அவரும் சரி நீங்களும் சரின்னு...
சாப்பாட்டுப் பொருளை விக்கக் கூடாதுன்றது - எங்க வீட்டு - principles ல் ஒன்று!!!! அதனால ஸ்பான்சர் கிடைச்சிருந்தாலும் நோ சான்ஸ்.
//அப்படி பெரிய தொழிலதிபரா ஆனப்பறம் எதுக்கு பிளாக் அக்கப்போருக்கு நுழையப்போறீங்க?//
நெல்லை, மனோ அக்கா பன்முகத் திறமை உணவகம் நடத்துவது உட்பட.
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தக்காளி ஷீட் என்பது தக்காளி
பதிலளிநீக்குவடகம். போன்றது என்று நினைக்கிறேன்.
கே. சக்ரபாணி
இன்றைய பாசிட்டிவ் செய்திகளில் முதல் செய்தி என்னை மிகவும் ஈர்த்தது. மிக மிக அருமையான விஷயம். இந்த ஆலோசனை வழங்கி செயல்படுத்தியவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகீதா
என்னங்க தக்காளி ஷீட் பத்தி இப்ப. இது மிகவும் பழைய விஷயம் ஆச்சே. என்ன ஒன்று என்றால் நமக்கெல்லாம் இப்படி வெளியில் சொல்லிக்க முடியாத காலம் அப்ப. இது பல பல வருடங்களுக்கு முன்னரே நான் தக்காளி, வெங்காயம், பூண்டு போன்றவற்றை நன்றாகச் சின்னதாக நறுக்கி வெயிலில் நன்றாகக் காய வைத்து பொடியாகவும், தக்காளியை இப்படி ஷீட் போன்று மரச்சீனி அப்பளம் ஸ்டைலில் போட்டு அனுப்பியதுண்டு.
பதிலளிநீக்குஎல்லாத்துக்கும் ஒரு மச்சம் வேண்டும் போல!!!!!!
மாம்பழம் கூட அமெரிக்காவில் கிடைக்காது குறிப்பாக நம்ம ஊர் சுவையான மாம்பழம்...எனவே மாம்பழ ஜெல்லி அப்பளம் போன்று செய்து கொடுத்ததுண்டு. அப்படித் தக்காளியும். ஆனால் நான் வேறு வெளிப்பொருள் எதுவும் கலக்கமாட்டேன்.
கீதா
ஆமாம் மாம்பழம் கிடைப்பது அரிது. கொய்யா போலும் கிடைப்பதில்லை. ஆனால் வரிக்கை சக்கை, வாழைத்தண்டு, மரசீனி ஆகியவை கிடைக்கின்றன. விலை தான் அதிகம்.
நீக்குஆமாம் ஜெ கே அண்ணா இப்ப இந்தியக்கடைகள் நம்மூர் ஆட்கள் நடத்தும் க்டைகள், மலையாளத்தவர் நடத்தும் க்டைகள், இலங்கைத் தமிழர் நடத்தும் கடைகளில் எல்லாமே கிடைக்கின்றன.
நீக்குகீதா
வையவன் அவர்களின் கதை உரையாடல் எழுத்து நடை அட்டகாசம்.
பதிலளிநீக்குஅதுவும் கௌதம முனிவரின் உரையாடல் செம. அந்த மன நிலை பெற பல பல படிகள் நாம் கடக்க வேண்டும். மிக மிக உயர் நிலை அது. இப்படி அனுபவங்களில் இருந்துதானே பல படிப்பினைகள் கிடைக்கின்றன. அப்படி கௌதம முனிவரையும் வையவன் இங்கு கற்பனைப்படுத்தி எழுதியிருக்கிறார்!!
எனக்கு ஒன்றே ஒன்றுதான் ஒப்ப மறுக்கிறது. அகலிகையின் பலவீனம் என்ற அந்தச் சொல். அகலிகை அழகாக இருந்தது தவறா? அல்லது அவள் தான் அழகி என்று நினைத்தது தவறா? அந்த ஒரு சில நொடித் துளிகள் கர்வம் அவள் அறிவை மறைத்துவிட்டது என்று பொருள்படச் சொல்லியிருக்கிறார். இதுவும் ஒரு நல்ல பாடம் தான்.
ஆனால் அப்படியே கர்வம் இருந்தாலும் அவளுக்கு வந்தவர் தன் கணவரின் உருவத்தில் இருந்ததால் தானே அவள் வசப்படுகிறாள்? கணவரிடமும் கூட தன் அழகுதான் அவரை ஈர்க்கிறது என்ற மனோபாவம் கூடாதா என்ன? அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு முறை இணையும் போதும் அது இருந்திருக்கலாம் இல்லையா?
என்னைப் பொருத்தவரை இந்திரன் தான் கடபடக்காரன். செய்தது மிகப் பெரிய கொடிய செயல். அதுவும் தேவேந்திரன்...இதிலிருந்து தேவனே என்றாலும் மனம் சஞ்சலம் என்பது வரும் என்ற பாடமா? அப்ப மனிதனுக்கும் தேவருக்கும் என்ன வித்தியாசம்?
தேவலோகப் பிரஜ்ஜைக்கு இப்படியான எண்ணம் வருவதும் அவன் செய்வதும் நியாயப்படுத்தலாமா? இதையே மனிதன் செய்திருந்தால் அது கற்பழிப்பு....தேவேந்திரன் என்பதால் ஒரு ஷணம் அவன் மனம் தவறிழைத்து நிகழ்ந்துவிட்டது என்று சொல்வது சரியாகுமா?....
இந்த இடங்கள் மட்டும் எனக்கு ஏற்கமுடியலை ஆனால் இது ஆசிரியரின் கற்பனையில் விளைந்தவை...அவர் மிக உயர்நிலை மனதை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் என்பதால் அதைப் பாராட்டலாம்
கீதா
அதுவும் தேவர்களுக்கே தலைவனான இந்திரன் தன்னை இச்சிக்கிறான் என்ற கர்வத்திலிருந்து விடுதலையாகி//
நீக்குஎன்னவோ எனக்கு இந்த வரியில் உடன்பாடில்லை.
கீதா
சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் அப்படித்தான் அவருடைய இராமாயணம் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அதனால் ஒரிஜனல் புத்தகத்திலும் அப்படித்தான் இருக்கவேண்டும். (வால்மீகியின் எழுத்தில்)
நீக்கு‘அகல்யா தேவி என்று சொல்!”//
பதிலளிநீக்குஇந்த வரி எனக்கு மிகவும் பிடித்தது. அது போல அகல்யாவின் மனச் சிந்தனைகளும் சீற்றமும் சொல்லும் வரிகள் மிகவும்
//‘சாபம் கொடுத்தது என் பலவீனம்.’ என்றார்.//
அதே! ஆசிரியரின் இந்தச் சிந்தனை என்னை மிகவும் கவர்ந்தது. அது போல கௌதம முனிவர் தன் தவறு என்று சீதையிடம் சொல்லும் வரிகளும்.
சீதைக்கும் அகல்யைக்கும் நடந்த நிகழ்வுகளை இணைத்து இருவரையும் சந்திக்க வைத்திருப்பதும் இருவரின் எண்ண ஓட்டங்களும் எப்படி இருக்கின்றன என்பதையும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இது சூப்பர்.
இதில் சீதை ராவணனை மன்னித்தாள் என்று சொல்லும் போது அகல்யை அங்கு இந்திரனிடம் என்ன சொன்னாள் என்பதையும் ஆசிரியர் சொல்லியிருக்கலாம். ஏனென்றால் இருவரையும் சந்திக்க வைக்கிறார்.....கதையும் அகல்யைக்கு நடந்ததைத்தான் சொல்கிறது அப்படியிருக்க அதையும் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது. அகல்யையின் கதை சீதையின் மனமாற்றத்தைச் சொல்வதாகவே இருக்கிறது இது
ஜெ கே அண்ணா சொல்லியிருபப்து போல் கதையின் தலைப்பு சரயு பொருந்தவில்லை.
அவர் சொல்லியிருக்கும் தலைப்பு பொருத்தமாக இருந்திருக்கும். எனவே அகல்யையின் முடிவையும் சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் கதை இன்னும் முழுமை பெற்றிருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்.
கீதா
அகலிகை பற்றிய விவாதங்கள் சுவாரஸ்யம்!
பதிலளிநீக்குதக்காளி ஷீட் பற்றி அறிந்தேன். பொதுவாக தக்காளி பேஸ்ட் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். ஆனால் அதில் கெமிக்கல் கலந்திருக்கும். இதில் கெமிக்கல் எதுவும் கலக்கவில்லையென்றால் பெண்களுக்கும் விவசாயிகளுக்கும் இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்!!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.முதல் செய்தி மிகவும் நல்ல செய்தி. தண்டவாளங்களை விலங்குகள் கடப்பதை கண்டறிய வீடியோ தொழிற்நுட்பம் மூலமாக தெரிந்து கொண்டு செயலாற்றுபவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ஆட்டோவில் பயணித்த ஒருவர் தவற விட்ட தங்கச்செயினை நேர்மையுடன் காவல்துறையில் ஒப்படைத்த அந்த ஆட்டோ ஓட்டுனரை பாராட்டுவோம். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
தக்காளி ஷீட் நல்லதொரு கண்டுபிடிப்பு. படித்து விபரங்கள் அறிந்து கொண்டேன். உலர் நெல்லி, நார்த்தங்காய், மாம்பழம் போன்றவற்றை பயன்படுத்தி உள்ளோம். அந்த வகையில் தக்காளியும் சேர்ந்தது பயனுள்ள செய்தி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வையவன் கதை சீதா அகலிகை பற்றியது இப்பொழுதுதான் படித்தேன். அவரவர் பார்வையில் சுவாரசியம்.
பதிலளிநீக்குதக்காளி சீற் பலருக்கும் பயன்படும் செய்தி.
யானை மற்றும் விலங்குகளை காப்பாற்றும் தொழில் நுட்பம் சிறந்த கண்டுபிடிப்பு காப்பாற்றியவர்களுக்கு பாராட்டுகள்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதை பகிர்வும் அருமை. ஆசிரியர் வையவன் அவர்கள் சரயு நதியைப் பற்றி ஏதேனும் சொல்ல வருகிறாரோ என முதலில் எண்ண வைத்தது ஆனால் ஆரம்பம் முதல் நதி நீருடன் பயணித்த கதையும் நதியின் அமைதியான நடையைக் போல சுபமாக முடிகிறது.
தாங்கள் தந்த சுட்டிக்கும் சென்று முழுக்கதையையும் படித்து வந்தேன்.
கதையில் ஒவ்வொருவரின் இயற்கையான குணநலன்களை ஆசிரியர் உணர்த்திய விதம் நன்றாக இருந்தது.
"தான் அவசரப்பட்டு சாபமளித்து விட்டேனோ"? என கௌதம மகரிஷி வருத்தப்படும் இடம் அருமை.
இரண்டாவதாக, பாவ மன்னிப்பு கேட்க வந்த இந்திரனையும், அதை கொடுககப் போகும் தன் மனைவியையும் எவ்வித களங்கமிள்ளாத மனதுடன் தனியே விட்டு விட்டு
/மன்னிப்புக் கேட்பவர், கொடுப்பவர் இருவருக்குமே முன்னால் வேறு சாட்சிகள் இருப்பது தர்மசங்கடம்/ என அவ்விடம் விட்டு அகன்று போகும் அந்த இடத்தில், அவரது "தான் சாபமளித்தது தவறு" என்ற மனப்பான்மை அவரிடத்தில் முழுமையாக ஐக்கியமாகி விட்டதென்பதை குறிக்கிறது. இந்த தன்மை வர மனம் எவ்வளவு பக்குவமடைய வேண்டும்...!
சீதாதேவியின் ராவணனை பற்றிய எண்ணங்களும், அவள் அகல்யையும் தன்னைப் போலவே இந்த மாதிரி இந்திரனை மன்னிக்கும் நிலையை அடைய வேண்டுமென விரும்புவதும், "மேற்கொண்டு நாம் ஏதும் பேச வேண்டாம் மகரிஷி என எழுந்து கொள்வதும் கதையின் சிறப்பு.
/பாபவிமோசனம் பெற்ற தேவேந்திரன் ஒடக்கரை நோக்கி நடந்து வந்தான்.அவன் மீண்டு வருவதைக் கண்டு ஐராவதம் வான்வெளிக்குத் திரும்பும் முன் சரயூ வளர்ந்த வனத்திடமிருந்து விடைபெற்றது./
இந்திரனும் அகல்யையிடம் பாப விமோசனம் பெற்று விட்டான். வான்வெளி மூலமாக அவனை சுமந்து வந்து சரயு நதியோரம் இறக்கி விட்ட தருணத்தில் "இன்று எதற்கோ இவன் வருகை? "என அவனது வருகையில் முதலில் ஐயமுற்ற ஐராவதமும், அவனின் அமைதியான நடைக்கண்டு தூய்மையான சரயு நதியின் உள்ளம் போல் அனைத்தும் நல்லவிதமாகத்தான் நிறைவேறியிருக்கும், மற்றும் சீதாதேவியின் விருப்பமும் நடந்தேறியிருக்கும் என்ற உண்மையையும் உணர்ந்திருக்கும். இது ஐராவதத்தின் குணநலனை வெளிப்படுத்துகிறது.
கதைக்கு தங்களின் முன்னுரை, முடிவுரை இரண்டும் அருமை. தங்களின் நல்லதொரு கதைகளின் தேர்வுக்கும்,, அதை சிந்தித்து நிறைய படித்து அலசல் செய்ய வாய்ப்பளித்தமைக்கும், மிக்க நன்றி. 🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கதையைப் பற்றி கருத்து கூறியவர்களுக்கும், வருகை புரிந்தோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குJayakumar
பாஸிடிவ் செய்திகள் அருமை.
பதிலளிநீக்குஅகலிகை கதை ஓவ்வொருவர் பார்வையில் வேறுபடுகிறது .
//சீதை ராவணனை மன்னித்தாள். அவன் பாவங்களை எல்லாம் மன்னித்தாள். திரும்பி தூரத்தில் தெரிந்த சரயூவைப் பார்த்தாள். வெள்ளை வெளேரென்ற நுரைவெள்ளத்தோடு அது சிரிப்பது தெரிந்தது. பரிபூரணமான சாந்தி அவளுள் பிரவேசித்தது.
இந்த சாந்தியை அகல்யாவும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாள்.//
மன்னிப்பு எல்லா மன துன்பங்களையும் போக்கி விட்டால் சாந்திதான்.
கதைபகிர்வுக்கு நன்றி.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநெல்லை!
பதிலளிநீக்குவால்மீகி ராமாயணத்தை அடியொற்றி ராஜாஜி சக்ரவர்த்தி திருமகனை எழுதியிருப்பதால் அது அப்படி அமைந்திருக்கிறது.
நாம் நம் கம்பன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
இராமனின் காற் துகள்பட்டு சாபவிமோசனமுற்ற அகலிகையை,
கௌதம முனிவரிடம் அழைத்துச் செல்கிறார் விசுவாமித்திரர்.
அவளைக் கௌதமரிடம் ஒப்புவித்து, ‘மனத்தினாற் பிழை செய்யாத இவளை ஏற்றுக்கொள்’ என, உரைக்கிறார் அவர்.
அச்செய்தியைச் சொல்லும் பாடல் இது.
‘அஞ்சன வண்ணத்தான் தன் அடித்துகள் கதுவா முன்னம்,
வஞ்சி போல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பிலாளை நீ அழைத்திடுக! என்ன,
கஞ்சமா மலரோன் அன்ன முனிவனும், கருத்துட் கொண்டான்.’
இப்பாடலில் அகலிகையை, ‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’ என, விசுவாமித்திரர் கூறுகின்றார். பிரம்ம ரிஷியாகிய விசுவாமித்திரர், நிதானத்துடன் உரைக்கும் இக்கூற்று, ஆகமப்பிரமாணமாய்க் கொள்ளத் தக்கதேயாம். ‘நெஞ்சினாற் பிழைப்பிலாள்’ என, விசுவாமித்திரரைச் சொல்ல வைத்ததன்மூலம், அகலிகையை இந்திரன் வஞ்சித்தே கெடுத்தான் என்பதையும், தான் தவறுவது தெரியாமல், உடலளவில் மாத்திரமே அகலிகை கெட்டுப்போனாள் என்பதையும், அதனாற்றான் அவளுக்கு இராமனால் சாபவிமோசனம் கிட்டியது என்பதையும், கம்பன் நமக்கு உணர்த்துகிறான்.
ஜெஸி ஸார்!
பதிலளிநீக்குஜெயகாந்தனின் 'அக்னி பிரவேசம்' சிறுகதையைப் படித்திருப்பீரள் என்று நினைக்கிறேன். ஆனந்த விகடனில் இந்தக் கதை வெளிவந்த பொழுது பெருத்த விமர்சனத்திற்கு உள்ளானது.
கம்பன் அறிந்திருந்த இந்த மனம் - உடல் வித்தியாசத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதிய சிறுகதை தான் அது.
மனம் என்பது ஈடுபாடுகளை உணர்வது.
ஆனால் உடல் என்பது வெற்று மாமிச சட்டை.
மனத்தின் ஈடுபாடற்ற உடலைக் கையாள்வது என்பது சடலத்தைக் கையாண்டதற்கு ஒப்பாகும்.
அக்னிப் பிரவேசத்தில் வரும் கங்கா என்னும் பள்ளி செல்லும் பருவமடைந்த 'சிறுமி', பிரபு என்பவனால் ஒரு சிறுபிள்ளை விளையாட்டு போல இப்படித்தான் கையாளப்படுகிறாள்.
இது தெரிந்து பதறிய அவளைப் பெற்ற தாய், ' நீ ஒண்ணும் தெரியாத குழந்தை. உன் மனதின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்த விபத்து இது. நீ களங்கமற்ற சிறுமி. இது பற்றி வெளியே யாருக்கும் சொல்லாதே!' என்று சொல்லி குளியலறைக்கு அழைத்துப் போய் ஒரு குடம் நீரை அந்தச் சிறுமியின் மேல் கவிழ்த்து, "எல்லா சனியனும் உன்னை விட்டுப் போய் விட்டது.. நீ பரிசுத்தம் அடைந்து விட்டாய்!" என்று வாரி கட்டி அணைத்துக் கொள்கிறாள்.
இது தான் அக்னிப் பிரவேசம் கதை.
தன் கணவன் தானே என்ற நினைப்புடன் அகலிகைக்கும் நடந்தது இதே போன்ற ஒரு விபத்து தான்.
நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு அடுத்த நாளும் வந்து 'ஏதாவது பின்னூட்டம் வந்திருக்கிறதா?' என்று பார்ப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டுகிறேன். இதனால் உங்கள் பதிவுகளுக்கு மற்றவர்களின் பிரதிபலிப்பையும் தெரிந்து கொள்கிற வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது.
பதிலளிநீக்குகமலத்துவம் பிளாகில் கோமதி அரசு அவர்கள் தேனம்மையின் பதிவை சுட்டி அதில் அடங்கியுள்ள 19 பெரியவர்களின் அகல்யை பற்றிய கருத்துக்கள் உள்ளதை குறிப்பிட்டுள்ளார். முடிந்தால் அங்கு சென்று அதையும் பார்க்கலாம்.
பதிலளிநீக்குhttps://honeylaksh.blogspot.com/2019/03/19.html
பதிவு பலரையும் சென்றடைந்ததில் மகிழ்ச்சி. நன்றி.
Jayakumar
பதிலளிநீக்குஜீவி சார்
கமலத்துவம் பிளாகில் கோமதி அரசு அவர்கள்தேனம்மையின் பதிவை சுட்டி அதில் அடங்கியுள்ள 19 பெரியவர்களின் அகல்யை பற்றிய கருத்துக்கள் உள்ளதை குறிப்பிட்டுள்ளார். முடிந்தால் அங்கு சென்று அதையும் பார்க்கலாம்.
https://honeylaksh.blogspot.com/2019/03/19.html
பதிவு பலரையும் சென்றடைந்ததில் மகிழ்ச்சி. நன்றி.
Jayakumar
செய்திகள் அனைத்தும் நன்று.
பதிலளிநீக்கு