6.7.25

ஞாயிறு பட உலா – நெல்லைத் தமிழன் நான் சென்ற இடங்கள் – மெக்சிகோ - படங்களுடன் - 05

 

அங்கு பகலில் கான்ஃபரன்ஸில் கலந்துகொண்டேன்அங்கு ஒரு நாள் சுற்றுலா (60 டாலர் என்று நினைவு) கூட்டிச் செல்கிறேன் என்று ஒருவர் கடை விரித்தார். நானும் மறுநாள் கான்ஃபரன்ஸ் செல்லவேண்டாம், அதற்குப் பதில் இந்தச் சுற்றுலா சென்றுவிடலாம் என்று நினைத்து பணம் கட்டினேன். வாய்ப்பு கிடைக்கும்போது விடுவானேன்? நான் சென்றது சிச்சன் இட்ஸா என்ற வரலாற்றுப் புகழ் பெற்ற இடத்திற்குஅது பற்றி வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

தற்போது சோழர் காலக் கோயில் மற்றும் சிற்பங்கள் பற்றி ஒரு தொடர் எழுதிக்கொண்டிருக்கிறேன் அல்லவா? நாம் எங்கிருக்கிறோம், மெக்க்சிகோ எங்கிருந்தது என்பது நினைவுக்கு வந்துதான் மெக்சிகோ பற்றிய படங்களைப் பகிரும்விதமாக நான் எழுதத் தொடங்கினேன். சிச்சன் இட்ஸா படங்கள் வரும்போது உங்களுக்குத் தெரியும்.

எனக்கு முன்பு வாசனை அறியும் திறன் மிக அதிகம். (சின்ன வயதிலேயே அதாவது 5ம் வகுப்பு படிக்கும்போது, பள்ளிக்கூடம் விட்டு வீடு வரும்போது, வீட்டின் அருகில் வரும்போதே அம்மா என்ன டிபன் அல்லது உணவு செய்திருக்கிறார் என்று எனக்கு வாசனை வரும். நாம் அம்மாவிடம் வீட்டில் நுழைந்ததும் கேட்பேன். அனேகமா எல்லா முறையும் சரியாச் சொல்லிவிடுவேன்) கொரோனா காலத்திற்குப் பிறகு அது மிகவும் குறைந்துவிட்டது போலத் தோன்றுகிறது (மனைவி சொல்றா, நீங்க நிறைய பெர்ஃப்யூம் போட்டுக்கறீங்க, அதனால வாசனை அறியும் திறன் குறைந்திருக்கலாம் என்று. நேற்று இரவு லிவிங் ரூம் (அங்குதான் டைனிங் டேபிளும் உண்டு) சென்றபோது, என்ன  தோசை வாசனை அடிக்கிறது, தோசை பண்ணினயா என்றேன். அவளோ, ஒரு மணி நேரம் முன்னால் ஒரு தோசை பண்ணிச் சாப்பிட்டேன். இன்னமுமா உங்களுக்கு அந்த வாசனை தெரியுது என்றாள். பரவாயில்லை திறன் இன்னும் இருக்கு என்று நினைத்துக்கொண்டேன்).

நான் முதலில் வேலை பார்த்த இடத்தில், ஒரு நாள் மாலை, அங்கிருந்தவர்களிடம் எங்கேயோ ஷார்ட் சர்க்யூட் ஆகுது, வயர் எரியும் வாசனை தெரியுது என்றேன். அங்கிருந்த ஒருவருக்கும் அந்த வாசனை தெரியலை. நான் உடனே செக் பண்ணச் சொன்னதும் அவங்க பார்த்துட்டு, அங்கிருந்த ஏராளமான கம்ப்யூட்டர்கள்ல, ஒன்றன் பின்னால் வயர் ஷார்ட் சர்க்யூட் ஆயிருக்கு லைட்டா புகை வருது என்று கண்டுபிடித்தார்கள்அங்கேயே (இன்னொரு நாள்) எனக்குப் பின்னால் வேலை செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்தேன் (கர்நாடகாவிலிருந்து அங்கு வந்திருந்தாள்). அவளிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவள் சொன்னாள், அவளுக்கு வாசனை அறியும் திறனே சுத்தமாக இல்லையாம். எதனுடைய வாசனையும் அவளுக்குத் தெரியாதாம். சிலிண்டர் லீக் ஆனால் பிரச்சனை என்று அவள் கணவன் அதற்கு ஒரு இண்டிகேட்டர் அலார்ம் வாங்கி வைத்திருக்கிறாராம். உணவோ, பழமோ, பெர்ஃப்யூமோ எதனுடைய வாசனையும் அவளுக்குத் தெரியாதாம். இப்படியும் ஒரு குறைபாடு உண்டு என்று எனக்கு அன்றுதான் தெரிந்தது.

முன்பே முதலில் மொபைல் போன் எனக்கு வந்த விதம் பற்றி எழுதியிருந்தேன்அதற்கு முன்பு எனக்கு முந்தைய கம்பெனியில் பேஜர் கொடுத்திருந்தார்கள் (1995-96).  பேஜரில் call வந்தால், நாம் இருக்கும் இடத்தில் உள்ள லேண்ட் லைனிலிருந்து அந்த நம்பருக்கு திரும்ப கூப்பிடணும்.

அந்தக் கம்பெனியில் இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. ஒருவன் இந்த மாதிரி call return பண்ணலை. ஆபீஸுக்கும் வரலை. (அது கம்ப்யூட்டர் கன்சல்டன்சி கம்பெனி).  Call return  பண்ணலைன உடனே, பாஸ், டிரைவரை அனுப்பி போலீஸ் ஸ்டேஷன்ல பார்த்துட்டு வரச் சொன்னார்அவர் நினைத்த மாதிரியே அவன் போலீஸ் ஸ்டேஷன்ல லாக்கப்ல இருந்தான். அப்புறம் அவனை வெளியே கொண்டுவந்தது தனிக்கதை. என்ன நடந்தது என்றால், முந்தைய தினம் இரவு அவன் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிருக்கிறான். அங்கு சில பல பொருட்கள் வாங்கினவன், சில பெர்ஃப்யூம் பாட்டில்களை சட்டைப் பைக்குள் மறைத்து வைத்திருக்கிறான். CCTV Camera காட்டிக்கொடுத்துவிட்டது. கவுண்டரில் எல்லாப் பொருட்களையும் ஸ்கேன் செய்து பணம் கொடுத்து கவுண்டரை விட்டு வெளியே வரும்போது அவனைப் பிடித்து, போலீஸைக் கூப்பிட்டு அவர்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள். பணம் செலுத்துவதற்கு முன்னால் அவனைப் பிடித்திருந்தால், மறைத்து வைக்கவில்லை, கவுண்டருக்கு வந்து எடுத்துக் கொடுத்து பணம் கொடுக்கலாம் என்றிருந்தேன் என்று தப்பிக்கக்கூடாதில்லையா? (இது நடந்தது 1995)






இந்தப் பகுதிக்குள் பாம்புகள் இருக்குமோ? இதுவும் ரிசார்ட்டின் ஒரு பகுதிதான்.



இந்தக் கடலைப் பார்க்கும்போது நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊரை/தேசத்தைச் சுற்றியிருக்கும் கடல் நினைவுக்கு வருது. அது ஒரு தீவு என்பதால், சுற்றிலும் கடல், ஆனால் பார்க்க பெரும்பாலும் ஏரி மாதிரித்தான் இருக்கும், எந்தக் கடற்கரைக்குச் சென்றாலும்சட சடவென 100 அடிக்கு மேல் நடந்து சென்றுவிடலாம் (கடலில்) முழங்கால் ஆழம்தான் இருக்கும்).  அப்படி ஒரு தடவை 200 அடி தூரம் (அல்லது அதிகம்) சென்றுவிட்டேன். இடுப்புக்கு சற்று அதிகமாக நீர். குளித்துக்கொண்டிருந்தபோது திடுமென நீரின் பாதை மாறுவது போலவும். நீரின் அளவு அதிகமாவதுபோலவும் எனக்குத் தோன்றியதால் பயத்தில் வேகமாக கடற்கரைக்கு வந்துவிட்டேன். Tide னால், நீரின் உயரம் அதிகமாக ஆக ஆரம்பித்திருந்தது. மற்றபடி பொதுவா பிரச்சனை இல்லாத கடற்கரைகள். அந்தப் படங்களும் நான் பிறகு ஒரு சமயம் பகிர்கிறேன்.




வெஜிடபிள் பிட்சா, கேக், பழங்கள், டோஸ்ட், தேன்….  காலை உணவு. 


இன்னொரு நாள் காலை உணவு. கேட்டதையெல்லாம் கொண்டு வந்து கொடுத்தாங்க. மதிய உணவைப் பற்றிக் கவலையில்லாமல் காலை உணவை ஒரு பிடி பிடித்துவிட்டேன். இனி இரவு சாப்பிட்டால் போதும்.


இரவு இன்னொரு ரெஸ்டாரண்டில். இப்போ தைரியம் வந்துவிட்டது. இருக்கவே இருக்கு பிட்சா, ப்ரெட், பழங்கள், கேக், ஐஸ்க்ரீம் போன்றவை

மறுநாள் நான் சிச்சன் இட்ஸா (Chichen Itza) என்ற இடத்திற்குப் போய்விட்டு இரவு 9 மணி வாக்கில் வந்துசேர்ந்தேன்அன்றைக்கு இரவு கொஞ்சம் புயல் போன்று இருந்தது. இரவு மழை வேறுமறுநாள் காலையிலும் தென்னை மரங்கள் ரொம்பவே ஆடிக்கொண்டிருந்தன. கடலின் அலைகள் ஆவேசமாக ரொம்ப தூரம்வரை (கிட்டத்தட்ட பார்டர் வரை) வந்தன.





கடல் அலை நீச்சல் குளம் வரை வந்துவிட்ட ஃபீலிங். அவ்வளவு அலை இருந்தது.


அப்போது நீச்சல் குளத்தில் இருந்து ஒரு படம் எடுத்துக்கொள்ள வேண்டாமாபடத்தில் நான் இருப்பது தெரிகிறதா?

அங்கு இருந்த 7 நாட்களிலும் எனக்கு நீச்சல் குளத்தில் குளிக்க சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. ரொம்பவே பிஸியாக இருந்தேன். அதுவும் தவிர, நீச்சல் குளத்தில் என்ன பெரிய அனுபவம் இருக்கு என்று நினைத்துக்கொள்வேன். நான் தங்கும் எல்லா இடங்களிலும் நீச்சல் குளங்கள் உண்டு.




எனக்கு கொஞ்சம் அசட்டுத் தைரியம்தான். அவ்வளவு ஆரவாரமாக அலைகள் வரும்போது கடலில் குளித்தேன். அங்கிருந்த அமெரிக்கர் ஒருவரிடம் கேமராவைக் கொடுத்து படங்கள் எடுத்துத் தரச் சொன்னேன். இப்போது நினைத்தால் எதற்காக அந்த ரிஸ்க் எடுத்தேன் என்று தோன்றுகிறது.


மெக்சிகோ செல்வதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் நான் இரண்டு இடங்களில் நீச்சல் கற்றுக்கொண்டிருந்தேன்எதிலும் இறங்கினால் நான் தீவிரமாக இறங்குவேன். அதனால் 200 மீட்டராவது தொடர்ச்சியாக நீச்சல் அடிக்கும்படியாக இருக்கவேண்டும் என்று ஆரம்பித்தேன். நீச்சலடிப்பது தெரிந்தவுடன், தொடர்ந்து 200 மீட்டர் நீச்சலடிக்கும்படியாகக் கற்றுக்கொள்ளாமல் அது நின்றுவிட்டதுஆபீஸ் சம்பந்தமான பயணங்கள், ப்ராஜக்டுகள் என்று ஏதோ காரணங்கள்இந்த ரிசார்ட்டில் இருந்தபோது இருவர் வந்து, கடலில் ஆமை போன்றவைகளையும் கோரல்களையும் பார்க்கக் கூட்டிச் செல்கிறேன் 40 டாலர் கட்டணம் என்று சொன்னார்கள். (கூபா டைவிங் மற்றும் ஸ்னார்க்ளிங்) நான் அவர்களிடம் எனக்கு நீச்சல் அவ்வளவு தெரியாது, ஆனால் எனக்கு கோரல் ரீஃப் மற்றும் கடல் உயிரிங்களைக் காண ஆவல் என்று சொன்னேன். பணம் அதிகமானாலும் பரவாயில்லை என்றேன். ஆனால் அவர்கள் என்னைக் கூட்டிக்கொண்டு செல்லமுடியாது, ஏற்கனவே கடலில் நீச்சல் அடித்த அனுபவம் வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்அவர்கள் சொன்ன இடம் ரிசார்ட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிறது.

ஆனாலும் மெக்சிகோ கடலில் இரண்டு முறை குளித்தேன். இதைப் பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

 (தொடரும்) 

33 கருத்துகள்:

  1. பாம்புகள் இருக்கும் கட்டிடம் என்று நீங்கள் போட்டிருக்கும் படம் நான் வ்சசித்த தஞ்சை ஹவுசிங் யூனிட் குடியிருப்பை நினைவு படுத்துகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். இப்போ எல்லாம் அத்தகைய இடங்கள் இருக்காது.எல்லா இடங்களிலும் கட்டிடங்கள் வந்திருக்கும்.

      நீக்கு
  2. கேட்டதை எல்லாம் கொடுத்தாங்கன்னு என்னென்ன கொடுத்தாங்கன்னு லிஸ்ட் போட்டிருக்கலாம்.  நான் கண்ணெல்லாம் போடமாட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய இடத்தில் மற்றவர்கள் இருந்தாங்கன்னா எல்லா உணவையும் வரவழைத்திருக்கலாம். அவங்க ஒரு ஆள்தானே என்றெல்லாம் பார்க்கலை. நான் என்ன கேட்டுவிடப் போகிறேன்? பழங்கள், டோஸ்டட் ப்ரெட், தேன், வெண்ணெய், ஜூஸ். கார்ன்ஃப்ளெக்ஸ். இதையே இரண்டிரண்டு கேட்டாலும் தந்தார்கள்.

      நீக்கு
  3. புயலடித்த இரவில் நீச்சல் குளத்தின் அருகே நீங்கள் இருப்பது குண்ட்ஸா தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் படமெடுத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசைதான். ஜெயகுமார் சொல்வதுபோல பதிவிடவேண்டும் என்ற ஆசையினால்ல்ல

      நீக்கு
  4. (நீச்சல்) குளத்தின் அருகே சலவைக்காரி யாராவது தெரிகிறார்களா என்று பார்த்தேன். ஊஹூம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை எழுதுகிறேன், எனக்குத் தெரிந்து, இவ்வளவு அழகாக இருக்கிறார்களே என்று எண்ணும்படி நான் ஒரு மெக்சிகோகாரியையும் காணவில்லை.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரார்த்தனைக்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம்.

      நீக்கு
  6. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இந்த வார மெக்சிகோ பயண கட்டுரையும், படங்களும் நன்றாக உள்ளது. படங்கள் மிக அழகு. அதுவும், நீல வானமும், நிலவும் படம் மிக அழகாக இருக்கிறது.

    எனக்கும் எந்த வாசனையை அறியும் சக்தி உண்டு. உங்களைப் போலவே பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் போதே அம்மா என்ன உணவு செய்திருக்கிறார்கள் எனக் கூறி விடுவேன். இப்போதும் அது உள்ளது. (ஜலதோஷங்கள் என்ற சந்தர்பங்களைத் தவிர்த்து) இப்போது காதுகள் கேட்கும் திறன்கள்தான் கம்மியாகி விட்டது.

    நீங்கள் சாப்பிட்ட உணவு வகைகள் சிறப்பு. ஆனாலும் எப்போதும் பிரெட், பீட்சா என்றால் போரடிக்காதா?

    அதிகமாக ஆட்கள் இல்லாத போதும், அலைகளின் ஆர்ப்பாட்டங்களின் போதும் கடற்கரையில் குளித்து வந்த தங்களது தைரியத்தை பாராட்டுகிறேன். கடலுக்குள் சென்று கடல் வாழ் உயிரினங்களை கண்டு வர வேண்டிய மற்ற தகவல்களும் படித்தேன். எதையும் சிறப்பாக கற்றுத் தேற வேண்டுமென்ற உங்களின் எண்ணங்களுக்கு வாழ்த்துகள். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். எனக்கு என் வாசனை அறியும் திறமை பற்றி ரொம்பப் பெருமை. ஒருவேளை நாமெல்லாம் ஒரு ஜென்மத்தில் நன்றியுள்ள விலங்காகப் பிறந்திருப்போமோ?

      நான் ஒரு வாரத்துக்கு மேலும் பல இடங்களுக்குப் பயணித்திருக்கிறேன். வெறும் பிரெட், பழங்கள் வைத்துக்கொண்டு சமாளித்திருக்கிறேன். பிறகு பயணம் முடிந்து வீட்டை அடைந்தால் எத்தனை நேரமானாலும் (இரவு பத்து மணி), உடனே சாதம், குழம்பு, கறியமுது சமைத்துச் சாப்பிட்ட பிறகுதான் உயிர் வரும்.

      கடலில் குளிக்க தைரியம் (அசட்டுத்) போதும். ஆபத்து நிறைந்தது நீர்நிலைகள் என்பது என் எண்ணம்.

      நீக்கு
    2. /ஒருவேளை நாமெல்லாம் ஒரு ஜென்மத்தில் நன்றியுள்ள விலங்காகப் பிறந்திருப்போமோ?/

      ஹா ஹா ஹா. எழுதும் போதே நானும் அதைத்தான் நினைத்தேன். ஆனால், அது உங்களையும் சேர்த்து சொன்னதாகி விடுமே என்ற தயக்கத்தில் சொல்லவில்லை.

      நீக்கு
    3. கமலா ஹரிஹரன் மேடம்.. சமீப யாத்திரையில் சில சகோதரிகளைச் சந்திக்க நேர்ந்தது. விலங்குகளின் மீது அதீத பாசம் கொண்டவர்கள் அவர்கள். அதிலும் அடிபட்ட நாய், பூனை மற்றும் பசு போன்றவற்றை வளர்ப்பவர்கள். அவர்கள் சொன்னாங்க, நாய் போல நன்றி உடைய, எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு செலுத்தும் பிராணி கிடையாது என்றார்கள். மனிதர்கள் இரண்டாம்பட்சம்தானாம். அவங்களுக்கு (நாய்களுக்கு) தன்னைப் பிடிக்காதவர்களிடம் அண்டாதாம். அவங்க வீட்டிலேயே யாருக்கேனும் அவற்றைப் பிடிக்காது என்றால் பக்கத்தில் போய் ஈஷாதாம். பத்து நாள் யாத்திரை முடிந்து எப்போடா அவங்களை (அதுகளை அல்ல) பார்ப்போம் என்றிருக்கிறதாம் அவர்களுக்கு. நாய்களுக்கும் இவங்க போன உடனே அவ்வளவு சந்தோஷத்தைக் காண்பிக்குமாம்.

      அது சரி... புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் தரவேணும் என்பதுபோல, நாயாகப் பிறந்தாலும் நல்ல பணக்காரர்கள் வீட்டில் பிறந்தால்தான் மவுசு. தெரு நாயாக இருந்தால் கல்லெறி வாங்கவேண்டியிருக்கும். இல்லையா?

      நீக்கு
  7. புயல், அன்று நீங்க நீச்சல் குளத்துல இருக்கறது தூரத்துல தெரியுதே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. படங்கள் எடுக்கக்கூடிய சூழ்நிலை அமைந்தால் உடனே படமாக எடுத்துவிடுவேன். ஆர்ப்பரிக்கும் அலை வெகு தூரத்திற்கு அன்று வந்தது

      நீக்கு
  8. உணவு வரிசையைப் பார்த்ததுமே வயிறு ரொம்பிடுச்சு!!! எல்லாம் சுவைக்கணும்ன்ற ஆசையும் கூடவே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு உணவை வீணாக்குவது அறவே பிடிக்காது. எங்கள் அவுட்லெட்டில் சில சமயங்களில் உணவை, பயனாளர்கள் வீண்டிப்பர். அதுபற்றி பின்னர் எழுதுகிறேன்.

      நீக்கு
    2. இங்கும் பார்க்கிறேன் உணவை ரொம்ப வீணாக்குகிறார்கள்.

      நாங்களும் உணவை வீணாக்குவது இல்லை தேவைப்பட்டதை மட்டும் வாங்கிக் கொள்வது என்றுதான்

      கீதா

      நீக்கு
    3. என்னுடைய உறவினர் வீட்டுத் திருமணத்தில் ரிசப்ஷனில் 7-8 இனிப்புகள் இருந்த பஃபே. ஆரம்பத்தில் போனவங்க எல்லா இனிப்புகளிலும் ஒவ்வொன்று அல்லது இரண்டு எடுத்து நிறைய வீணாக்கினாங்க. கடைசியில் 30 சதம் பேருக்கு இனிப்பே கிடைக்கலை. நான் யாத்திரையிலோ இல்லை எங்குமோ, இன்னும் கொஞ்சம் என்று சாம்பாரைக் கேட்டாலும், அவங்கள்ட சொல்லிடுவேன் கொஞ்சகூட வீணாக்க மாட்டேன் என்று

      நீக்கு
  9. இப்போ தைரியம் வந்துவிட்டது. இருக்கவே இருக்கு பிட்சா, ப்ரெட், பழங்கள், கேக், ஐஸ்க்ரீம் போன்றவை//

    இவை எல்லாம் இங்குமே கூட எந்த ஊருக்குப் போனாலும் கிடைக்குமே.

    கேக் அவங்க எல்லாம் முட்டை போடாம பண்ணமாட்டாங்களே. இங்கயும் கூட முன்பெல்லாம் அப்படித்தான். ஆனா இப்ப முட்டை போடாத கேக்குகள் நிறைய கிடைக்கின்றன. மேலை நாடுகளிலும் கூட முட்டை அலர்ஜி இருக்கறவங்களுக்குன்னு தயாரிக்கறாங்க.

    இங்க பயணம் செஞ்சாலும் கைல தேன் மட்டும் வைச்சுக்கிட்டா போதும் ப்ரெட் டோஸ்ட் வாங்கித் தடவிச் சாப்பிடலாம், நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவில் பெரும்பாலும் பிரச்சனை இல்லை, உணவுக்கு. குறைந்தபட்சம் ரோட்டி தால் கிடைக்கும். வெளிநாடுகளில் இப்போது பிரச்சனையில்லை. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு நான் இப்படித்தான் சமாளித்தேன்.

      நீக்கு
  10. எனக்கும் நல்ல நுகரும் திறன் இருந்தது. ஆனால் 2012 ல் கீழே விழுந்ததில் பின் மண்டை அடியில், நுகரும் திறன் இல்லாமல் போய்விட, அதனால் உணவின் நறுமணம் தெரியாததால் சாப்பிடும் போது எந்த மணமும் தெரியாமச் சாப்பிடுவதுண்டு. மூச்சுப் பயிற்சி தொடர்ந்து செய்துவருவதால் கொஞ்சம் பரவாயில்லை என்றாகி இப்ப அவ்வப்போது தெரியாமல் போனாலும், பரவாயில்லை இடையில் தெரிகிறது. இன்று நன்றாகவே தெரிந்தது,!!!

    இதை எப்பவும் எல்லாரும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது அதாவது சுவை என்பது நாம் எல்லோரும் அறிந்த அறுசுவை புளிப்பு உப்பு காரம், இனிப்பு துவர்ப்பு கசப்பு.

    நுகரும் திறன் போயிருந்தாலும் இந்தச் சுவை தெரியும் சிலருக்கும். மணம் தான் தெரியாது என்பதால் சாப்பிடும் போது கண்ணால் பார்த்தால் சாம்பார் என்று தெரிந்தாலும் சாப்பிடும் போது அதன் மணம் குணம் தெரியாது. ஆனால் உப்பு புளிப்பு காரம் தெரியும். நுகரும் திறன் இல்லைனா கண்டிப்பாகச் சாப்பிடும் போது சாப்பாடின் மணம் தெரியாது. எனவே நாவிலும் தெரியாது.

    ஆனால் சிலருக்கு இந்தச் சுவையும் கூடத் தெரியாமல் போகும் வாய்ப்புண்டு. அப்படியும் இருக்கிறார்கள். மணம் குணம், சுவை எதுவும் எதுவும் அறியும்திறனற்ற குறைபாடு இருந்தால் சாப்பிடுவது எல்லாம் சப்புன்னு இருக்கும்.

    நுகரும் திறன் இல்லாதவங்க மருத்துவரிடம் செல்லும் போது, நுகரும் திறன் இல்லை மணம் தெரிவதில்லை என்று சொல்ல வேண்டும் சுவை தெரியாது என்றால் உப்பு புளிப்பு காரம் என்றாகிவிடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடா.... நீங்க இனி வீட்டுக்கு வந்து நான் செய்து தரும் உணவைச் சாப்பிட்டு வெளியில் குறையே சொல்லமுடியாது. என்ன மணம் என்ன ருசி..அவ்வளவு அருமையாக அன்று நான் செய்திருந்தேன் என்று அடித்துவிட்டுவிட முடியும். நீங்க உங்க மறுமொழியை எழுத முடியாது. தப்பித்தேன்.

      நல்ல உணவு என்பதற்கு என்னுடைய புரிதல், ஆறி இருந்தாலும் மிகச் சுவையாக இருக்கவேண்டும். சமீபத்தில் சென்றிருந்த யாத்திரையில் நான் சாப்பிடும்போது உணவு ஆறியிருந்தது (காரணம் எங்க பேருந்து மத்தவங்களைவிட 1 மணி நேரம் தாமதமாக வந்தது). செய்திருந்த பருப்பு சாத்துமதின் ருசி அவ்வளவு அருமையாக இருந்தது (இதைப் படித்துவிட்டு எனக்கு ஆறின எதுவும் தரவேண்டாம். கொதிக்கக் கொதிக்க இருந்தால்தான் எனக்குச் சாப்பிடப் பிடிக்கும்).

      நாக்கு சப்பென்று ஆவது, வயதான பிறகு என்று தோன்றுகிறது. அப்போதான் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற மனநிலை வந்துவிடும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. நெல்லை, எனக்கு நுகரும் திறன் சில சமயம் இல்லாமல் போனாலும், என் மனம் அதற்குத் தனியாக ஒரு அகராதி வைத்துக் கொண்டுள்ளது. எனவே நீங்க எப்படிக் கொடுத்தாலும் கண்டுபிடித்துவிட முடியும்!!!!!!

      கீதா

      நீக்கு
  11. எனக்கு வாசனை அறியும் திறன் சற்று குறைவதான். என் தோழி ஒருத்தி தெருவுல் நடந்து வரும்பொழுதே,"யார் வீட்டிலோ வெந்தய தோசை, யார் விட்டிலோ அரிசி உப்புமா" என்றெல்லாம் சொல்லுவாள்.
    சில வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் காய் அடுப்பில் ஏதோ பிரச்சனை, காஸ் லீக் ஆகிக் கொண்டிருந்தது. கவனித்து சிலிண்டரை மூடுவேன். ஒரு நாள் இரவு நான் ஹாலில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன், வெளியிலிருந்து வந்த என் மகன்,"என்னம்மா, இவ்வளவு கேஸ் வாசனை வருது, தெரியலையா?" என்று கேட்டதும்தான் அதை உணர்ந்தேன். உடனே சிலிண்டரை மூடி, கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து வைத்தோம். மறுநாளே பிரஸ்டிஜ் அடுப்பை சரி செய்தோம்.
    இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். மற்ற நாட்களில் கேஸ் லீக் ஆனதை உணர்ந்த நான் அன்று உணராததற்கு புத்தகம் படிக்க ஆரம்பித்தால் உலகத்தையே மறந்து விடும் என் சுபாவம் காரணமாக இருந்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். எனக்கும் முக்கியமான எதையோ படித்துக்கொண்டிருந்தாலோ இல்லை காணொளி கேட்டுக்கொண்டிருந்தாலோ இல்லை படம் பார்த்துக்கொண்டிருந்தாலோ மற்றவர்கள் பேசுவது கேட்காது, கவனம் இருக்காது. அதனால் பல முறை என் மனைவி என்னிடம் பேசும்போது எனக்கு கவனம் இல்லை என்று சொல்லிடுவேன், சில நேரம் அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தாமல், பார்த்துக்கொண்டிருப்பதைத் தூக்கிவைத்துவிட்டு அவள் சொல்வதைக் கேட்பேன்.

      இப்போதும் நடைப்பயிற்சி முடித்துவிட்டு (அது என்ன பயிற்சி? நடைசெல்வது என்று சொன்னால் போதாதோ?) லிஃப்ட் பக்கம் வரும்போது யார் வீட்டிலோ வெங்காய டிபன் சாம்பார் அல்லது பூரி மசால் வந்தால், நம் வீட்டிலும் பண்ணச் சொல்லணும் என்று நினைத்துக்கொள்வேன். குளித்து பிறகு அன்றைய எடையைப் பார்த்துக் குறிக்கும்போது சாப்பிடும் ஆசையே போய்விடும். இப்போல்லாம் வாரத்துக்கு ஒரு நாள் சாதம் எடுத்துக்கொள்வதே அதிகம்.

      நீக்கு
    2. //புத்தகம் படிக்க ஆரம்பித்தால் உலகத்தையே மறந்து விடும்// இந்த கூர்கவனிப்புத் தன்மை எதனால் பாடப்புத்தகங்கள் படிக்கும்போது வருவதில்லை? (பலருக்கும் எனக்கு உட்பட)

      நீக்கு
    3. மற்ற நாட்களில் கேஸ் லீக் ஆனதை உணர்ந்த நான் அன்று உணராததற்கு புத்தகம் படிக்க ஆரம்பித்தால் உலகத்தையே மறந்து விடும் என் சுபாவம் காரணமாக இருந்திருக்குமோ?//

      அக்கா நான் சொல்ல நினைத்தேன்....நீங்களே சொல்லிட்டீங்க.

      எனக்கும் இந்தப் பிரச்சனை ரொம்பவே உண்டு. வீட்டில் திட்டு ரொம்பவே வாங்குவேன். எழுதுவதில் வாசிப்பதில், அல்லது ஏதேன்ம் காணொளி பார்ப்பதில் ஆந்துவிடுவேன். சுற்றி நடப்பதைக் கவனிப்பது சிரமம்.

      அதனாலேயே இப்போது வாசிப்பதும் எழுதுவதும் சிரமமாகி வருகிறது.

      கீதா

      நீக்கு
  12. அலைகள் தீவிரமாக இருந்தபொழுது கடலில் குளித்த உங்களை உங்கள் மனைவியின் தாலி பாக்கியம்தான் காப்பாற்றியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு சில இடங்களில் நீராடுவது டேஞ்சர் என்று தோன்றும். ஒரு தடவை மஹாபலிபுரத்தில் அவ்வாறு நடந்திருக்கிறது. சிறு வயதில் தாமிரவருணி வெள்ளப்பெருக்கில், படித்துறையில் குளித்துக்கொண்டிருந்தபோதும் அப்படியே. வர்கலா பீச், மிகவும் டேஞ்சர். அங்கு இரண்டு மூன்று முறை குளித்திருக்கிறோம். ஒவ்வொரு தடவையும் ரொம்பவே பயமாக இருக்கும், காரணம் அலை திரும்பும்போது வெகு வேகமாக மண்ணோடு இழுக்கும் (சரிவின் காரணமாகவும் இருக்கலாம்)

      இந்த மாதிரி அசட்டுத் தைரியத்தால் ஆபத்தில் மாட்டிக்கொள்வது போன்ற மோசமான காரியம் எதுவும் இல்லை (அதிலும் படிக்கும் இளைஞர்/இளைஞி, மருத்துவ மாணவர்கள் நீர்வீழ்ச்சி, ஆற்றில் மூழ்கி இறந்தார்கள் என்று கேள்விப்படும்போது மிகவும் கோபம் ஏற்படும். பெற்றோர்களைப் பற்றி அக்கறை இல்லாதவர்கள் என்று)

      நீக்கு
  13. மெக்ஹிக்கோ பயணம் கண்டோம்.

    வானம்,கடல்,பூமி,நீச்சல் குளம் என வெவ்வேறு அழகிய படங்கள் காண்பதற்கு கிடைத்தது.

    கடல்குளியல் எப்பொழுதும் மகிழ்ச்சி தரும். அதன்பின்பு நினைத்தால் பயத்தையும் தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். நான் சில பல இடங்களில் கடலில் குளித்துள்ளேன் (அரைகுறை நீச்சல்காரன் நான். 1 நிமிடத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது). அந்தப் படங்கள் இங்கு ஒருநாள் பதிவிடுவேன்.

      மிக்க நன்றி

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!