1.7.25

படத்திற்கு கதை: மனங்களின் சலனம்: கமலா ஹரிஹரன்.

 


 "கண்ணா.. சாப்பிட வர்றியா? உனக்காக இன்னைக்கு ஞாயிறு லீவாச்சேன்னு அடை, அவியல் பண்ணி வச்சிருக்கேன்...!" பாட்டி காலையிலிருந்து மூன்றாவது முறையாக நிர்பந்தித்து விட்டாள்.

"வர்றேன் பாட்டி.! கொஞ்சம் பொறுத்து தான் வர்றேனே..! என்ன அவசரம்.? என்றான் கண்ணன் சற்று சலிப்புடன்.

" என்னடா இப்படி சலித்துக் கொள்கிறாய்..? உனக்கு எப்பவும் இந்த டிபன் பிடிக்குமே..அவியல் சூடா இருக்கு...! அதான் வறுப்புறுத்தி கூப்பிடறேன்..! என்னவோ போ..!! இன்னைக்கு காலையிலிருந்தே நீ சரியில்லை...! "பாட்டி அங்கலாய்த்தவாறு சற்று கோபத்துடன் உள்ளே சென்றாள்

"என் நிலைமை உனக்கெங்கே புரியும் பாட்டி..! இன்றுதான் அவள்....! அதுதான் நான் காதலிக்கும் ஜோதி இங்கு நம் வீட்டுக்கு வருகிறேன் என்று கொஞ்சம் மனமிறங்கி பச்சைக் கொடி காட்டியிருக்கிறாள் . இன்றுதான் அவளை உங்களுக்கு அறிமுகப்படுத்தி, அவளைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என உங்களிடமிருந்து சம்மதம் வாங்கப் போகிறேன். இப்போப் போய் நான் அடை அவியலை ருசித்துக் கொண்டிருந்தால், அவள் என்ன நினைத்துக் கொள்ளுவாள்..!! 

" நான் வரப்போகிறேன் எனத் தெரிந்தும், எனக்காக வாசலில் காத்திராமல், ஜாலியாக உள்ளே உட்காந்து பாட்டி செய்த டிபனை முழுங்கி கொண்டிருக்கிறாயா....! சரியான சாப்பாட்டு ராமா..! திண்டி மாடா..! என முகத்துக்கு நேராகவே கேட்டு விடுவாளே..!" 

அப்புறம்" என்னடா பெண் இவள்..! இப்படியெல்லாம் பேசுகிறாள்.. இவளை து(ம)றந்து விட்டு நம் ருக்குவை கட்டிக் கொள்...!என நீயும் தாத்தாவும் புலம்ப ஆரம்பித்து விடுவீர்கள். நீங்கள் எப்படியும் சம்மதித்து விடுவீர்கள், என் பேச்சை மறுக்க மாட்டீர்கள் என்றுதான் ஜோதியை நான் மனதாற காதலித்து விட்டேன். அவள் இப்படி என்னிடம் கொஞ்சம் துடுக்குத்தனமாக பேசுவாளே தவிர,ரொம்ப நல்லவள் பாட்டி..! உங்கள் இருவரையும் புரிந்து கொண்டு, நம்முடன் சேர்ந்து இருப்பாள் பாட்டி..! " மனதுக்குள் பேசியவாறு முகத்தில் கவலை ரேகைகள் படிய அவள் வரவை எதிர்பார்த்து  காக்க ஆரம்பித்தான் கண்ணன்.

" ஏங்க நீங்களாவது டிபன் சாப்பிட வாருங்களேன்...!! "என்றபடி கணவர் இருந்த அறைக்குள் எட்டிப்பார்த்த பாட்டி திகைத்தாள் . காலையில் தந்த காப்பி  சிறிது குடித்தும், கொஞ்சம் குடிக்காமலும் கோப்பையில் கிடந்தது. ஒரு பாத்திரத்தில் வெந்நீரும், மருந்தும் சகிதமாக  கன்னத்தில் கை வைத்தபடி அவர் அமர்ந்திருந்தார்.

படபடப்புடன் அருகில் வந்து "என்னங்க  என்னாச்சு"என்றவளிடம், "தனக்கு பல்வலி உயிர் போகிறது..! " என்பதை ஜாடையாக காட்டினார் . 

"எப்போதிலிருந்து? காலையில் நான் காப்பி தரும் போது கூட நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே..! டாக்டரிடம் போவோமா? என்றவளுக்கு பதில் வாய் திறந்து பதில் தர முடியாமல், வேண்டாம்..! வேண்டாம்..! என மறுத்தவர் "காலையிலிருந்துதான்..! பிறகு பார்த்துக் கொள்ளலாம்..! நான் உப்பு வென்னீர் கொப்பளித்து மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்....! இப்போதைக்கு சாப்பிட ஒன்றும் வேண்டாம்...! என்ற பாவனையில் தன் முன்னாடி இருந்தவற்றை கண்களாலும், தன் பேச்சை  சைகையாலும் காண்பித்தவாறு, மீண்டும் கண்களை மூடியபடி கன்னங்களை கைகளால் தாங்கிக் கொண்டார்.

"சரி..! ஓய்வெடுங்கள்..! கொஞ்சம் குணமானதும், பிறகு சாப்பிடலாம்." என்றவாறு பாட்டி நகரவும், அவர் ஒரு பெருமூச்செறிந்தபடி" நல்லவேளை..! நேற்று நண்பருடன் வெளியில் சென்றிருந்த போது அவரின் வறுப்புறுத்தலினாலும், மேலும் தனக்கே உண்டான  ஆசையினாலும் சாப்பிட்ட உணவினால்தான், (அதில் இரண்டு ஐஸ்கிரீம் வேறு ) பல்வலி ஆரம்பித்தது என்றால், இவள் எப்படியெல்லாம் கோபப்படுவாள்...! " என்று நினைத்தவாறு அதை மறைத்த  தன் சாதுர்யத்தை நினைத்து  அத்தனை பல் வலியிலும் மனத்துள் மகிழ்ந்தார்.

" என்னம்மா..! இன்னைக்கு எப்போதும் போலில்லாமல் தேய்கிற பாத்திரம் ரொம்ப கம்மியா இருக்கு..! யாரும் இன்னமும் காலையிலே சாப்பிடலை போலிருக்கு...! நீங்களும் ஏம்மா இப்படி கவலையா இருக்கீங்க.." என்றபடி வேலை செய்யும் அன்னம் வரவும் தன் யோசனைகளிலிருந்து கலைந்தாள் பாட்டி. 

"என்னவோ போ..! நான் எதைன்னு சொல்வேன். நீயும் இந்த குடும்பத்துல ஒருத்தியா எவ்வளவு காலமா இங்கு வேலை செய்றே ..!  எங்கள் மகனும், மருமகளும், அந்த விபத்தில் போன துக்கத்தோடு இந்த குழந்தையை நான் எடுத்து வளர்க்க எத்தனை சிரமங்களை சந்தித்து அவனை நல்லபடியா  ஆளாக்கியிருக்கேன்னு உனக்கே நல்லாத் தெரியும். இப்போ என்னடான்னா கொஞ்ச நாளா அவன் எதையோ என்கிட்டே மறைக்கிறான்னு புரியுது. என் தம்பி பேத்தி ருக்குவை அவனுக்கு முடிக்கலாமுனு, பேச்சை எடுக்கும் போதெல்லாம் ஏதோ சொல்லி தட்டிக் கழிக்கிறான். அன்னிக்கு நீ பாத்துட்டு வந்து சொன்ன மாதிரி வேறு யாரையாவது மனசல வச்சிகிட்டு இப்படி பேசுறானான்னு நினைப்பு வரும் போது எனக்கு மனசு திக்குனு அடிக்குது. நான் என்ன செய்வேன்னு சொல்லு..! 

இந்த மனுஷர் வேறு எதையும் கண்டுக்காம அவர் பழகிய நண்பர்களோட வெளியிலே போறதும், வர்றதுமா காலத்தைக் கழிக்கிறார். நேத்து கூட பாரு..! எங்கேயோ போய், வயித்துக்கு ஒத்துக்காததை சாப்பிட்டு விட்டு இன்னைக்கு காலை டிபனை கூட சாப்பிட வராமே பல்வலின்னு சொல்லிகிட்டிருக்கார். இவரை சமாளிக்கிறதா? இந்தப்பையனை பாக்கிறதான்னு எனக்கு ஒரே கவலையா இருக்குப் போ....! இதுலே நான் நினைக்கிற மாதிரி சொந்தத்திலே அவனுக்கு கட்டி வச்சா எங்களுக்கும் பின்னாடி  நல்லதா இருக்கும். அவனை வறுப்புறுத்தும் தெரியல்ல..! அவன் மனம் கோணாதபடிக்கு செல்லமா வளர்த்திட்டேன். எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல்ல போ..!!" ஒரே மூச்சில் தன்மனதில் உள்ளதை கொட்டியபடி  கன்னத்தில் கைவைத்து கவலையோடு அமர்ந்தாள் பாட்டி. 

"அம்மா..! நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க..! நா அன்னைக்கே பார்த்ததை உங்ககிட்டே அப்படியே வந்து சொன்னேன். அந்தப் பெண்ணும் கண்ணுக்கு லட்சணமா நம்ப தம்பிக்கு ஏத்த மாதிரி பொருத்தமாக இருக்கும்மா..! நீங்க தம்பிக்கு பிடிச்ச மாதிரியே நடந்துக்கோங்கம்மா? அப்பத்தான் அவருக்கும் மனசு சந்தோஷமா இருக்கும். அந்த சந்தோஷத்திலே உங்க பேரன் உங்களை காலம் முழுக்க வைச்சு நல்லபடியா காப்பாத்துவராம்மா. உங்க நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராதும்மா..! கவலை படாதீங்க..! நீங்களாவது போய் சாப்பிடுங்கம்மா.." என்றாள் அன்னம். 

" சரிடி.. நீ இப்படி சொல்றது எனக்கும் கொஞ்சம் ஆறுதலாதான் இருக்கு..! நடக்குறதுதானே எப்பவும் நடக்கும். அது நல்லதாகவே நடக்கட்டும். " என்ற பாட்டி" "நீயாவது சூடா இருக்கும் போதே இரண்டு அடை அவியல் எடுத்துகோ..! என்றபடி அவளுக்கு அடையை எடுத்து வைக்க சமையல் அறைக்குள் சென்றாள் பாட்டி. 

= = = = =

49 கருத்துகள்:


  1. படங்களுக்குப் பொருத்தமான கதைதான். நன்றாக இருந்தது.

    வீட்டின் உதவியாளரையும் குடும்ப உறுப்பினரைப் போல நடத்தும் விதமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      வாங்க சகோதரரே. நலமா? பிராயணமெல்லாம் நல்லபடியாக நடந்து இறைவனின் தரிசனங்கள் நன்றாக கிடைத்திருக்குமென நம்புகிறேன்.

      நீங்கள் இன்றைய கதைப்பகிர்வுக்கு காலையில் உடனடியாக முதலில் வந்து நல்ல கருத்துரையை தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றி சகோதரரே. உங்கள் ஊக்கம் மிகுந்த பாராட்டுக்கள் என் எழுத்திற்கு நல்ல பலமான ஆணி வேராக இருக்கிறது எனக் கருதுகிறேன். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. இறை தரினங்களுக்குக் குறையில்லை. குருக்ஷேத்திரத்திலிருந்து இருவருக்கும் ஜலதோஷம் உடல்நிலை சரியில்லை. இரண்டு நாட்கள் 7 மணிக்குத்தான் எழுந்தேன்

      நீக்கு
    3. அடாடா..! ஜலதோஷமா..? பிரயாணம் சென்று தரிசனம் பெற்று வந்த விவரங்களுக்கு மகிழ்ச்சி சகோதரரே. ஆனால், உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள். உடல்நிலை பாதிக்கும் பொழுது ஓய்வு எடுத்துக் கொள்வதில் தவறில்லை. நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டு நலம் பெறுங்கள். விரைவில் பூரண நலமடைய நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி.

      நீக்கு
    4. நெல்லை..  நான் தலயாத்திரை போகாமலேயே ஜலதோஷத்துல மாட்டிகிட்டு ரெண்டு வாரமா அவஸ்தைப் படறேன்!!!

      நீக்கு
    5. ஹா ஹா ஹா. நாம் தலயாத்திரை எங்கும் போகாமல் இருப்பதே ஒரு தோஷமல்லவா..? இங்கும் அதே தோஷங்கள்தான். /கோளாறுகள்தான்.. வீட்டிலிருந்தபடியே கோளறுபதிகம் பாடினால் சரியாகி விடுமா..?

      நீக்கு
    6. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருமாதிரி காலநிலை. பத்ரியில் அமாவாசை தர்ப்பணத்திற்காக நல்ல மழையில், தப்த் குண்டத்தில் குளித்து, கசகசவென மழையில் நடந்து.. அதுபோல ஹரித்வார், ரிஷிகேஷில் பயங்கர சூடு, போதாக்குறைக்கு கிளம்பும் அன்று ஹரித்வாரில் நல்ல மழை, அதிலேயே கங்கைக்குச் சென்று குளித்தோம் (மூன்றாவது முறை). குருக்ஷேத்திரத்தில் ரொம்பவே சூடு, அதுபோல தில்லியும். இந்தகைய காலநிலையால் கொஞ்சம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

      ஜலதோஷத்துக்கு இரண்டு வாரமா? 4 நாட்களில் சரியாகிவிடாது? இதனை எழுதும்போது ஒன்று நினைவுக்கு வருது. அது என்னுடைய பதிவுகளில் எழுதுகிறேன்.

      நீக்கு
    7. :)))) சந்தோஷமும் ஒரு தோஷமா ?

      நீக்கு
    8. // நாம் தலயாத்திரை எங்கும் போகாமல் இருப்பதே ஒரு தோஷமல்லவா..? //


      அடிச்சீங்களே ஒரு அடி! சேம் சைட் கோல் போட்டுட்டீங்களே...

      நீக்கு
    9. // ஜலதோஷத்துக்கு இரண்டு வாரமா? 4 நாட்களில் சரியாகிவிடாது? //

      நாங்க எதுலயுமே ஸ்பெஷல் ஆச்சே.... இருமல்தான் ஹீரோ!

      நீக்கு
    10. ஹா ஹா ஹா. ஆமாம்..! இருமல் ஹீரோ என்றால், ஹீரோயின் ஜலதோஷத்திற்கு கொண்டாட்டந்தானே..! விட்டுத் தராமல், உடனிருந்து விட்டு போனால்தான் அதற்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

      சொன்னால் நம்ப மாட்டீர்கள். எனக்கு சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து மாதக்கணக்கில் ஜலதோஷம் வந்து தங்கியிருந்து பாடாய் படுத்தியது. அதற்குமுன் வீட்டிற்கே ஜலதோஷம் (தண்ணீர் கஸ்டம் சென்ற பிப்ரவரியிலிருந்து ஆகஸ்ட் வரை. ) வந்து படுத்தியது.

      தங்கள் ஜலதோஷங்கள் கூடிய விரைவில் நிவர்த்தியாக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    11. /சந்தோஷமும் ஒரு தோஷமா ?/

      ஆமாம்..! அதிக சந்தோஷங்களும் ஒரு தோஷங்கள்தானே. ..! :))) இரத்தத்தின் அளவை கூட்டி, மருந்துகளின் வீரியத்தை அதிகப்படுத்தி, அதனால் வரும் தோஷங்களை கண்டு சந்தோஷபடுமல்லவா..!

      நீக்கு
  2. பதில்கள்
    1. வாருங்கள் சகோதரரே. நலமாக இருக்கிறீர்களா? முருகன் அனைவரையும் நல்லபடியாக வைத்திருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்காத நாட்கள் இல்லை. முருகா சரணம் என்ற வரிகளை கண்டதும் "அவன்" மனம் மகிழ்ந்து நமக்கு எப்போதும் அவனருளை வழங்கி விடுவான். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  3. அடை அவியல் படத்தைச் சேர்க்கத் தெரிந்தவருக்கு அன்னத்தையோ இல்லை ருக்கு ஜோதி படங்களையோ சேர்க்கத் தோன்றவில்லையே.

    படத்திற்கான கதை எழுதியவர்தான் திங்கக்கிழமையிலிருந்து மீண்டு வரவில்லை என்றால், கதையை வெளியிட்டவருமா,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      ஏற்கனவே அந்த கதைக்கேற்ற படங்களுக்குத் தானே இந்த கதைகள் பிறக்கிறது. மேலும் கூடுதலாக அடை, அவியலுடன் சிறப்பாக்கி பகிர்ந்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      /படத்திற்கான கதை எழுதியவர்தான் திங்கக்கிழமையிலிருந்து மீண்டு வரவில்லை என்றால்,... /

      ஹா ஹா ஹா. இன்று என்னுடைய கதைப் பகிர்வு எனத் தெரியும். இருப்பினும், ஒரு சூழ்நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான காலை சமையலில் நான் புகுந்து விட்டேன். அவர்களுக்கு மதியம் எலுமி சாதம், காலை பூரி உ. கி மசாலா என செய்து விட்டு வெளி கொஞ்சம் வரத்தாமதமாகி விட்டது. உங்கள் அன்பான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. "வெளியில் வர" என சேர்த்துப் படிக்கவும். "வெளி" எனபது மட்டும் இல்லாமல், "கொஞ்சம்" என்ற வார்த்தையை அவசர தவறுதலாக தட்டச்சு செய்து விட்டது. (கைகள்தாம். ) நன்றி.

      நீக்கு
    3. இன்று மனைவியை பூரி மசாலா செய்யச் சொல்லப் போகிறேன். ஐடியாவிற்கு நன்றி

      நீக்கு
    4. நன்றி சகோதரரே.

      நீக்கு
    5. அதென்னவோ வீட்டுல பூரி செஞ்சா கடைல வர்ற மாதிரி வர மாட்டேங்குது. மினி சைஸ், உப்பல் காணாமப்போய் கனமான சப்பாத்தி போலன்னுல்லாம் வருது. சோடா உப்புல்லாம் நாம சேர்க்கறது இல்ல...

      நீக்கு
    6. இன்று இங்கு எனக்கு பூரி மிருதுவாக உப்பலுடன் வந்ததே..! ஆனால் ஒரளவு சின்ன அளவுதான். இங்கு "ஆசிர்வாத் செலக்ட்தான்" (கோதுமை மாவு) எப்பவும் வாங்குகிறோம். பெரிய பூரிஅளவு வேண்டுமானால், இங்கு "மையாஸ்" போனால் கிடைக்கும். அது ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் சாப்பிடவே முடியாது.வயிறு நிறைந்து விடும்.( பில்லை பார்த்தாலும்.) நம் வீட்டிலென்றால் நான்கைந்துக்கும் மேல் சாப்பிடலாம்.

      நீக்கு
    7. நான் பூரி செய்யும்போது நன்றாகவே வரும். பூரி மசாலாவைப் பற்றி மனைவியிடம் பிரஸ்தாபித்தபோது, ஒரு இரண்டு நாட்கள் கொஞ்சம் ஃப்ரீயாக விடுங்கள், முடியவில்லை என்று சொல்லிவிட்டாள். நேற்றைக்கு நான் வெளியிலிருந்து உணவு ஆர்டர் செய்வேன் என்று எதிர்பார்த்தாள் போலிருக்கு. எனக்கு வெளி உணவு சுத்தமா பிடிக்காது. அவளுக்கோ, தனக்கு மாத்திரம் ஆர்டர் செய்வது சுத்தமாகப் பிடிக்காது. என்ன செய்ய?

      நீக்கு
    8. // ஆசிர்வாத் செலக்ட்தான் //

      அதேதான் இங்கயும்.. என்னவோ மாவு பிசைவதில் கோளாறா... தண்ணீர்க் கோளாறா தெரியவில்லை.

      நீக்கு
    9. வணக்கம் சகோதரரே

      பூரிக்கு சற்று கெட்டியாக (சப்பாத்திக்கு தளர்வாக மாவு ரெடி பண்ணுவதை போலில்லாமல்) மாவு தயார் செய்தால், எண்ணெய் அதிகம் குடிக்காமல், உப்பலாக வரும். இரண்டாவது பொரித்தெடுத்தவுடன் சூடாக இருக்கும் போதே சாப்பிட்டு விடுவது நல்லது. (பூரிக்கும் தன்னழகை ரசித்தார்கள் என்ற நிம்மதி, சந்தோஷத்தில் நாம் சாப்பிட்டு முடிக்கும் வரை பூரிப்பாகவே இருக்கும்.:)) ) நன்றி.

      நான் பேசாமல் கதையில் அந்த பாட்டியை, "அடை அவியலுக்கு" பதிலாக"பானி பூரி" செய்ய வைத்திருக்கலாம் என நினைக்கிறேன்.

      ஏனென்றால்,

      பானி... ஜல(ம்) தோஷத்தை குறித்து அளவளாவுகிறோம்.
      பூரி... கதையை விட பூரியைப்பற்றி நிறைய பேசுகிறோம். அதனால்தான் அப்படிச் சொல்கிறேன். ஹா ஹா ஹா.

      எப்படியோ இன்றைய பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு கௌதமன் சகோதரருக்கும், உங்களுக்கும் என் அன்பான நன்றிகள்

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  4. ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களது நேர்த்தியான கைவண்ணத்தில் அருமையான சிறுகதை...
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இன்றைய சிறுகதையை படித்து தாங்கள் தந்த கருத்துரைகள் கண்டு மிகவும் மனம் மகிழ்ந்தேன். தங்களது "அருமை" என்ற ஊக்கம் நிறைந்த பாராட்டுக்கள் என் ஆக்கத்திற்கு நல்ல ஊட்டசத்தான டானிக்காக இந்து செயல்படுமென என நம்புகிறேன். உங்களது அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  5. கைத்தல பேசியில் கதை படிப்பதெல்லாம் இப்போது வெகு சிரமமாக இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      ஆம். இதை முன்பே பதிவுகளில் சொல்லியுள்ளீர்கள். பொடிதாக இருக்கும் எழுத்துக்களை கைப்பேசியில், ஒவ்வொரு தடவையும் மேலும் கீழுமாக பெரிதாக்கி படிப்பது சிரமமானதொன்று என்பதை நானும் உணர்வேன். தற்சமயம் தங்கள் கண்கள் முழுவதுமாக நலமாகி உள்ளதா? மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று வந்தீர்களா? இருப்பினும் தங்களது அத்தனை சிரமங்களுக்கிடையேயும், இன்றைய கதை பகிர்வை தப்பாது வந்து படித்து நீங்கள் தந்த கருத்துக்கள் என் மனதில் மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றன. உங்களது அன்பிற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. சீக்கிரம் முற்றிலும் குணமாகி பழைய பன்னீர்செல்வமா செல்வாண்ணா வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்று நான் எழுதிய கதையை பகிர்ந்து, என் எழுத்தார்வத்திற்கு துணையாக இருந்த உங்களுக்கு என் அன்பான நன்றி சகோதரரே. ஏதோ அந்தப்படங்களைப்பார்த்ததும், தவிர சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் அன்றைய கதைப் பகிர்வுக்கு, கருத்துரையில் சகோதரர் நெல்லைத்தமிழரின் "நானும் இதற்கு ஏதாவது கதை எழுதப்போகிறேன்" என்ற ஆர்வத்தை பார்த்ததும், உடனே அவர் அதை மறு வாரத்தில் செயல்படுத்திய உற்சாகத்தை படித்ததும், எனக்கும் இந்தப் படங்களை வைத்து ஏதாவது எழுத வேண்டுமென தோன்றி விட்டது. அதன் விளைவு இந்தக்கதை.

    எப்போதும் சற்று விரிவாகவே கதைகள் எழுதும் எனக்கு இது ஒரு சவால் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதனால் எனக்குள் இந்த சிறுகதையை உற்பத்தி செய்து எழுத வைத்த இறைவனுக்கும், ஊக்கமளித்த நம் குடும்ப நட்பான பானுமதி வெங்கடேஸ்வரன், நெல்லைத்தமிழர் அவர்களுக்கும் என் பணிவான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உடனே நான் அவசரமாக எழுதிய இந்தக் கதையை அங்கீகரித்து நல்ல படங்களுடன் இன்று வெளியிட்ட, சகோதரர்கள் கௌதமன், ஸ்ரீராம் அவர்களுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி சகோதரரே. இக்கதை எப்படியிருந்தாலும், அதன் போக்கு எவ்வாறிருந்தாலும், அனைவரும் வந்து படித்து நல்ல கருத்துரைகளை தருவீர்கள் என நம்புகிறேன். நம் நட்புகள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.. நன்றி.. நன்றி.. நன்றி...

      நீக்கு
    2. பல நன்றிகளுக்கும் பதிலாக என் நன்றி.

      நீக்கு
  8. /// தற்சமயம் தங்கள் கண்கள் முழுவதுமாக நலமாகி உள்ளதா?..//

    இல்லை.... வயதாகிக் கொண்டிருக்கும் நிலையில்
    சற்று மங்கலாகவே உள்ளது..

    தங்களது பிரார்த்தனைக்கு நெஞ்சார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இப்போது இந்த கைப்பேசியை பார்ப்பதில் எனக்கும் சிறிது பார்வை தடுமாற்றம் வந்துள்ளது. இல்லை தாங்கள் சொல்கிற காரணத்தினாலுமோ என்னவோ எல்லாமே மங்கலாக தெரிகிறது. எந்த வகை கண்ணாடியும் நானும் இதுவரை பயன்படுத்தியதில்லை. சரியாகி விடும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன். உங்களுக்கும் எந்த வித மருத்துவமுமின்றி தானாகவே சரியாகட்டும். பிரார்த்தித்துக் கொள்கிறேன். இறைவனை மனதாற வேண்டும். நல்லதையே அவன் நடத்தித் தருவான். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. உங்களை விட வயதானவர்கள் கண்களெல்லாம் குணமாக்க முடிகிறது செல்வாண்ணா.. உங்களுக்கும் சீக்கிரம் சரியாகும்.

      நீக்கு
  9. கமலாக்கா, படங்களுக்கான Lighter version கதை, எழுதியிருக்கீங்க. கொஞ்சம் புன்னகைக்க வைத்தது! இதுக்குப் போயி அலட்டிக்கலாமான்னு மனசுக்குள் பாட்டும் போச்சு!!! ஹாஹாஹா...

    உதவியாளருக்கும் அடை அவியல் சூடாகக் கொடுக்கும் வரியை வாசித்ததும் எனக்கு என் அம்மா நினைவு வந்துவிட்டது. அவரின் உதவியாளர் ரத்னம் அவங்க வந்ததும் உடனே என் அம்மா கேட்பது, 'சாப்பிட்டியா? முதல்ல காபிய குடி. சாப்பிடலைனா சொல்லு சாப்பாடு தரேன், சாப்பிட்டுட்டு செய் என்று சொல்வாங்க. ரத்னமும் உரிமையோடு சொல்வாங்க என்ன வேண்டும்னு. சில சமயம் வேலை செய்துவிட்டு சாப்பிடறேன்னு சொல்வாங்க அம்மா சுடச் சுடக் கொடுப்பாங்க. எனக்கும் அதே போன்ற மனமா.....
    அதன் பின்னான வாழ்க்கையில் உதவி செய்பவருக்கு, இரண்டாம் டிகாக்ஷன் மூன்றாம் டிகாக்ஷனில் காபி கொடுத்ததைப் பார்த்தப்ப ஆச்சரியம்,. காலம் காலமாகச் செய்துவந்தவர் அவர் அந்த வீட்டில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /படங்களுக்கான Lighter version கதை, எழுதியிருக்கீங்க. கொஞ்சம் புன்னகைக்க வைத்தது! இதுக்குப் போயி அலட்டிக்கலாமான்னு மனசுக்குள் பாட்டும் போச்சு!!! ஹாஹாஹா../

      ஹா ஹா ஹா. நீங்கள் சொன்னவுடன் ரஜினி அவர்களும் வந்து "என்னடா பொல்லாத வாழ்க்கை..! இதுக்குப் போயி அலட்டிக்கலாமான்னு" . சொல்வது போல் எனக்கும் தோன்றியது.

      படங்களுக்கு ஏற்ற சின்ன கதை. நான் கருவை முக்கியமானதாக எடுத்துக்கவில்லை என்பது வாஸ்தவந்தான். மேலும் அவர்கள் இருவரும் எழுதியது போலவே, அது ஒரு சிறுகதையாக வரவேண்டுமே என்பதற்காகவுந்தான்.. ( இல்லாவிட்டால் என் வழக்கப்படி நெடுங்கதையாகி படிப்பவர்களுக்கு போரடிக்குமே என்ற நல்லெண்ணங்களும் ஒரு காரணம் ஹா ஹா ஹா.)

      எங்கள் வீட்டில் ஒரு உதவியாளரை ஒரு சந்தர்ப்பத்தை தவிர்த்து நான் இதுவரை தொடர்ந்து வைத்துக் கொண்டதேயில்லை. என் மகளை உண்டாகியிருந்த அந்த முதல் இரு மாதத்தில் எனக்கு அவ்வளவு முடியாமல் இருந்தது. எங்கள் முதல் இரு குழந்தைகளையும் (மகன்கள்) பார்த்துக் கொண்டு, அவர்களை பள்ளிக்கு கொண்டு விடுவது வீட்டின் பிற வேலைகள் என மிக சிரமமாக இருந்ததால், அக்கம்பக்கம் நட்புகளின் யோசனைபடியும், என் கணவரின் சம்மதபடியும், ஒரு இரண்டு மாதங்களுக்கு ஒரு உதவியாளரை அமர்த்திக் கொண்டேன். அவர் நான் காலை பள்ளிக்குச் சென்று திரும்பி வந்ததும் வந்து விடுவார். அப்போது சென்னையில் வீட்டில், தண்ணீர் பிரச்சனை வேறு. வெளியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்துதான் எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டும். நான் சாப்பிடும் உணவை அவருக்கும் தந்து விட்டு, அவருடன் சேர்ந்துதான் சாப்பிடுவேன். அவர் வந்த சில நாட்களில் அவருக்கும் நம் உணவில். அவ்வளவாக நாட்டமில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன். சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து முன்கூட்டியே கடனாக வேறு எதிர்பார்க்கத் துவங்கினார். பிறகு இரு மாதங்களில் நானே உடல்நலம் நன்றாகி எல்லா வீட்டு வேலைகளையும் நானே செய்து கொள்வதாக கூறி, அந்த மாத சம்பளம் போக அவருக்கு மேற்கொண்டு சிறிது பணத்தையும் கொடுத்து நிறுத்தி விட்டேன். , அன்றிலிருந்து இதுநாள் வரை வீட்டின் வேலைகளை நான் ஒருத்தியாகவே சமாளித்து வருகிறேன். ஏனோ இந்தக்கதை எழுதும் போது இவையும் எனக்கு நினைவுக்கு வந்தது.

      உங்கள் அம்மாவின் செயல் மகிழ்ச்சியை தருகிறது. நம் வேலைகளை பகுர வருபவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துவது சிறந்த செயல். நாளடைவில் அது சரிவர செய்ய இயலாமல் போதும் வருத்தமான நிகழ்வுகள்தான். என்னசெய்வது? மாறுபட்ட மனித குணங்களை உண்டாக்குவது "அவன்" செயல்தானே..! தங்கள் விபரமான கருத்துரைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  10. இன்றைய படத்துக்கு ஏற்ற நல்லதோர் சிறுகதையை தந்த திருமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      கதையை படித்து ரசித்து தந்த தங்களது பாராட்டிற்கு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் சகோதரி. தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  11. ஜோதி வரும்போது இவன் அடை அவியல் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் தப்பாக நினைத்துக் கொள்வாளா?  ஏன்?  என்ன காதலி அவள்!!!  உபவாசம் இருந்து வரவேற்க வேண்டுமா என்ன!!!

    அட தாத்தா வேற பக்கா ஃபிராடா இருக்காரே!  ஆனால் பாட்டிக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கே...! 

    ஆனா பாவம் ஏன் மகனையும் மருமகளையும் மேல அனுப்பிட்டீங்க...   நான் அதை வன்மையா அப்ஜெக்ட் பண்றேன்.   அவங்களை விட்டு வச்சிருந்தீங்கன்னா அவர்களாவது இந்த அடை அவியலை சாப்பிட்டிருப்பார்கள் இல்லே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இன்றைய கதைக்கு கருத்துச் சொல்ல
      உங்களைத்தான் இதுவரையில் காணவில்லையே.. என நினைத்துக் கொண்டேயிருந்தேன். என் டெலிபதியில் நீங்கள் வந்து விட்டீர்கள். உங்களுக்கு நூறு ஆயுசு சகோதரரே. .

      /ஜோதி வரும்போது இவன் அடை அவியல் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் தப்பாக நினைத்துக் கொள்வாளா? ஏன்? என்ன காதலி அவள்!!! உபவாசம் இருந்து வரவேற்க வேண்டுமா என்ன!!!/

      அதுதான் இன்றைய காதலின் நிலை. அவளின் முகச்சுளிப்புக்கு சற்றேனும் ஆளாகலாமா? :))

      /ஆனால் பாட்டிக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கே...! /

      ஆம்.. பாட்டி அந்தக்கால மனைவி அல்லவா? .

      /ஆனா பாவம் ஏன் மகனையும் மருமகளையும் மேல அனுப்பிட்டீங்க. அவங்களை விட்டு வச்சிருந்தீங்கன்னா அவர்களாவது இந்த அடை அவியலை சாப்பிட்டிருப்பார்கள் இல்லே?/

      ஹா ஹா ஹா. ஆகா..! நானா அனுப்பினேன்...! அவர்களாகவே கதையில் பாட்டிதான் பேரனை வளர்க்க வேண்டுமென கிளம்பி விட்டார்கள். இரண்டாவது கன்னத்தில் கை வைத்தமாறு இருக்கும் இந்த படங்களுக்கு ஏற்ப ஒரு கதை என்று யோசித்ததில், அதுவும் "சிறுகதை" என சிந்தித்ததில், (படங்களின் தொடர்ச்சியாக சகோதரர் நெல்லைத் தமிழரின் கதைக்கு அடுத்தப்படியாக வர வேண்டுமே எனவும்) அரை நாளில் கைப்பேசியில் தட்டச்சு செய்து உதித்து வந்த கதை. (இதில் கன்னத்தில் கைகளை வைத்தவர்கள் மட்டுமே குறி. அவர்களை மட்டுமே வைத்து கதை பின்னப்பட வேண்டுமென நினைத்தேன். மறைந்தவர்களின் மறைவுக்கு நானும் உங்களைப் போலவே அனுதாபப்படுகிறேன்.) கதையை நன்கு ரசித்துப் படித்து ஊக்கம் மிகுந்த கருத்துரைகள் தந்த உங்களுக்கு என அன்பான நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  12. ஸ்ரீமதி கமலாஹரிஹரன்

    /// தற்சமயம் தங்கள் கண்கள் முழுவதுமாக நலமாகி உள்ளதா?..///

    இல்லை., வயதாக ஆக சற்று மங்கலாக இருக்கின்றது..
    அடுத்த மாதத்தில் தஞ்சைக்கு புதிதாக வந்திருக்கின்ற மதுரை அரவிந்த் மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டும்...

    தங்களது ஆறுதலுக்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

      இப்போது கண் பார்வை மங்கினால், கண்கள் பரிசோதனை செய்து கொள்வதும், அதற்கு முன்பு போல் அனேக கட்டுப்பாடுகள் இல்லாமல் விரைவில் (ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றாலும்) குணப்படுத்த நிறைய வழி முறைகள் வந்து விட்டன. இதை சிறுவயதிலேயே (அதாவது நாற்பது, நாற்பத்தைந்து) செய்து கொண்டு நலமடைந்தவர்களும் இருக்கிறார்கள். நமக்குத்தான் மருத்துவமனைக்கு செல்ல சற்று பயமாக இருக்கிறது. எனக்கு இப்போது பல வருடங்களுக்கும் மேலாக காது கேட்கும் திறன் குறைந்துள்ளது. அதனால் கண் பார்வை நன்றாக உள்ளதென நினைத்துக் கொண்டிருந்தேன். மருத்துவரிடம் செல்ல பலவிதங்களில் எனக்கும் பரிந்துரைகள் வருகிறது ஆனால் இப்போது எனக்கும் கண் பார்வை சற்று மங்கலாக உள்ளதென நினைக்கிறேன்.அனைத்தும் சரியாகிட ஆண்டவன் துணையாக இருப்பான் என நம்புகிறேன்.

      நீங்கள் வீட்டின் துணையோடு தைரியமாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்து விட்டு வாருங்கள். எவ்வித சிரமங்களுமின்றி கண் பார்வை பழையபடிக்கு சிறப்பாக இருக்க ஆண்டவன் அருள்வார். கவலை வேண்டாம்.

      உங்களது அன்பான பதிலுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  13. நான் எபியில் படத்திற்கு கதை என்பதாக அப்பாவின் மகள் என்றொரு கதை எழுதியிருக்கின்றேன்..

    அதெல்லாம் பொற்காலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      /நான் எபியில் படத்திற்கு கதை என்பதாக அப்பாவின் மகள் என்றொரு கதை எழுதியிருக்கின்றேன்../

      மீள் வருகை தந்து தந்த தங்களின் அன்பான தகவல்களுக்கு நன்றி. நீங்கள்தான் எ. பியில் அருமையான பல குடும்பக் கதைகள், அறிவார்ந்த யதார்த்தமான பல கதைகள், பக்தியும், வாய்மையும் நிச்சயம் ஒருநாள் வெற்றியை சந்திக்கும் என்னும்படியான கதைகள் என நிறைய கதைகள் எழுதியிருக்கிறீர்களே..! எல்லாமே நாங்கள் மிக விரும்பி படித்திருக்கிறோம்.

      உங்கள் கதைகளை ஆர்வத்துடன் படித்து உங்கள் எழுத்துகளை கண்டு வியக்கும் ஒரு வாசக, வாசகிகளில் நானும் ஒருத்தி. . . இப்போது நீங்கள் குறிப்பிட்ட கதையையும் நான் படித்திருப்பேன். முதல் பாராவை பார்த்தால் நினைவு வந்து விடும். இப்போது உங்களின் கண் பார்வை குறையினால் நீங்கள் அதிகம் எழுதவில்லை. உங்கள் திறமை மிகுந்த எழுத்துக்களை நாங்களும் மிகவும் மிஸ் செய்கிறோம். கூடிய விரைவில் தங்கள் கண்கள் நலமடைந்து பல கதைகளை தாருங்கள் படித்து ரசிக்க காத்திருக்கிறோம்.உண்மையில் எங்களுக்கு அதுதான் பொற்காலம். விரைவில் அக்காலம் திரும்பட்டுமென இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  14. படங்களுக்கு பொருத்தமாக அழகாக கதை எழுதி விட்டீர்கள் கமலா. 'வாழ வைக்கும் காதலுக்கு ஜே' என்று முடித்திருக்கிறீர்கள். சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகையும், கருத்தும் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

      இந்தக் கதை எனும் "செடி" இன்று எ. பியில் வெளிவந்ததற்கு, தாங்கள் "படத்திற்கேற்ற கதை" என்று மத்யமரில் மிக அருமையாக எழுதி வெளியிட்ட "விதைதான்" காரணம். உங்களின் முயற்சி கண்டு என்னுடைய பயிற்சிகளும் பயனடைந்திருக்கிறது. அன்று உங்களது கதைக்கும், இன்று உங்களது பாராட்டுதலுக்கும் உங்களுக்கு என் மனப்பூர்வமான, அன்பான நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!