விபத்தில் தீப்பிடித்த எலக்ட்ரிக் பஸ்; லாரி டிரைவர்களால் தப்பிய 21 பேர்
கருமத்தம்பட்டி : கோவை அருகே நள்ளிரவில் மேம்பால தடுப்பு சுவரில் மோதிய எலக்ட்ரிக் பஸ் தீப்பிடித்து எரிந்து நாசமானது. பஸ்சுக்குள் சிக்கிய 21 பயணியரை, லாரி டிரைவர்கள் கண்ணாடியை உடைத்து உரிய நேரத்தில் மீட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. திருச்சியில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு புறப்பட்ட தனியார் எலக்ட்ரிக் பஸ், திருப்பூர், அவிநாசி வழியாக கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. டிரைவர், கண்டக்டர் உட்பட, 26 பயணியர் இருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை சேர்ந்த டிரைவர் பசுபதி, 29, பஸ்சை ஓட்டினார். அவிநாசி ரோட்டில், கருமத்தம்பட்டி அடுத்த தனியார் பள்ளி அருகே மேம்பாலத்தில் நள்ளிரவு, 2:30 மணிக்கு வந்தபோது, மேம்பால தடுப்பு சுவர் மீது பஸ் மோதி, தீப்பிடித்து எரிய துவங்கியது. பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்ததால், கதவை திறக்க முடியவில்லை. அந்த நேரம், அவ்வழியே சென்ற லாரி டிரைவர்களான விருதுநகர் மாவட்டம், திருச்சுழியை சேர்ந்த சபரிமலை, 29, ரமேஷ், 29 ஆகியோர் விபத்தை பார்த்து, உடனே பஸ் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, பஸ்சுக்குள் தவித்த பயணியரை விரைவாக மீட்டனர். தீப்பற்றிய பஸ்சில் இருந்து, பயணியர் அனைவரும் மீட்கப்பட்டதால், அவர்கள் தீக்காயமின்றி தப்பினர். இந்த தீ விபத்தில் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டதால், இரு லாரி டிரைவர்களையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த போலீசார், அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, கவுரவப்படுத்தினர். அதே நேரம் பால தடுப்பு சுவரில் மோதியதில் காயமடைந்த பயணியர் 21 பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கருத்தம்பட்டி போலீசார் மற்றும் சூலுார் தீயணைப்பு படையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
==============================================================================================
இந்தக் காலத்தில் இப்படியும் சில டாக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
டாக்டர் கோபி. அவரது மனைவி டாக்டர் ஹேமப்பிரியா. மதுரையில் மருத்துவமனை வைத்திருக்கிறார்கள்.
நம்பவே முடியாத ஒரு மாபெரும் மருத்துவ சேவையை இந்த டாக்டர் தம்பதிகள் இருவரும் இணைந்து செய்து வருகிறார்கள். இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் ஏழைக் குழந்தைகள் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து முழுக்க முழுக்க இலவசமாகவே அவர்களுக்கு சிகிச்சை செய்து குணப்படுத்தி வருகிறார்களாம்.
"டாக்டர் ஹேமப்பிரியாவுக்கு மதுரைதான். ஆனால் டாக்டர் கோபிக்கு சேலத்துக்குப் பக்கத்தில ஒரு சின்ன கிராமம்."
"இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணம்? எதனால் ஆரம்பித்தார்கள் இப்படி ஒரு வித்தியாசமான சேவையை ? காரணம் இருக்கிறது. சேலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கோபி, குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சையில் சிறப்பு மருத்துவம் படித்தவர். கஷ்டப்பட்ட குடும்பம்தான். அரசாங்கம் கொடுத்த கல்வி உதவித் தொகையிலும், அப்பா வாங்கிக் கொடுத்த கடன் தொகையிலும்தான் டாக்டருக்கு படித்து முடித்திருக்கிறார் இந்த கோபி. மருத்துவக்கல்லூரியில் படிக்கும்போதே உடன் படித்த மாணவி ஹேமப்பிரியாவோடு பழக்கமும் நெருக்கமும் ஏற்பட ...
கோபியின் இரக்ககுணம் ஹேமாவை ஈர்த்திருக்கிறது. இருவரையும் கல்யாணத்தில் இணைத்திருக்கிறது. மருத்துவ படிப்பை முடித்த பின் சென்னை பெங்களூர் ஹைதராபாத் எல்லா இடங்களிலும் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் டாக்டராக பணிபுரிந்து கை நிறைய சம்பாதித்து வந்திருக்கிறார் டாக்டர் கோபி.
ஆனால் அவர் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது சதீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணி புரியும்போதுதான். அங்கேதான் ஒரு ஆறு வயது சிறுமியை, தன் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கப் போகும் ஒரு குழந்தையைச் சந்தித்தார் டாக்டர் கோபி.
அந்தச் சிறுமியின் இதயத்தில் ஏதோ ஒரு இனம் தெரியாத கோளாறு. அது முற்றிய நிலையில் மூச்சுத் திணறி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க, அவசரம் அவசரமாக டாக்டர் கோபியிடம் அவளை அழைத்து வந்தார் அவளது அம்மா. கோபி கேட்டார்: "எப்போதிலிருந்து அம்மா இந்தப் பிரச்சனை இருக்கிறது?" அந்த அம்மா அழுதுகொண்டே, "இவ பிறந்து ஆறு மாதத்திலேயே ஆஸ்பத்திரியில கண்டுபிடிச்சுட்டாங்க டாக்டர். அப்பவே ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னாங்க."
டாக்டர் கோபி கொஞ்சம் கோபத்துடன்தான் கேட்டார். "அப்புறம் ஏம்மா உடனடியா அறுவை சிகிச்சை பண்ணல ?" அந்த அம்மா கண்ணீர் வடித்தபடி பதில் சொன்னாள்: "ஆபரேஷன் பண்ண நிறைய செலவாகும்னு சொன்னாங்க. அந்த அளவிற்கு பணம் எங்ககிட்ட இல்லை டாக்டர்."
டாக்டர் கோபி எதுவும் பேசாமல் அந்த குழந்தையின் மருத்துவ ரிப்போர்ட்களை திரும்பத்திரும்ப பார்த்தார். அந்த அறிக்கைகளின்படி, நோய் கண்டு பிடிக்கப்பட்ட ஆறாவது மாதத்திலேயே, அவள் குழந்தையாக இருக்கும்போதே தாமதம் செய்யாமல் உடனடியாக அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவள் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் இப்போது... பிரச்சினை எல்லை மீறி எல்லாமே கை நழுவிப் போய் விட்ட இந்த நிலையில்... எந்த ஒரு சிகிச்சையும் கை கொடுக்கப் போவது இல்லை. என்ன முயற்சி செய்தாலும் அந்த சிறுமியை காப்பாற்ற வழியேதும் இல்லை. மனமுடைந்து போனார் டாக்டர் கோபி. அன்றிரவு வெகுநேரம் தூங்காமல் விழித்திருந்தார்.
"என்னங்க ஆச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ?"என்று மனைவி கேட்க, "ஒன்றுமில்லை ஹேமா. எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. எந்தப் பாவமும் செய்யாத அந்த ஆறு வயது குழந்தை வெகுவிரைவில் நம் கண் முன்னாலேயே
இறந்து போகப் போகிறதே, இதற்கெல்லாம் யார் காரணம் அல்லது எது காரணம் ?"
கணவன் சொன்னதைக் கேட்ட அந்த நொடியே ஹேமாவின் தூக்கமும் தொலைந்து போனது. அன்று இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய இது பற்றி நிறைய பேசினார்கள். உரிய காலத்தில் சிகிச்சை கொடுக்காததால் உயிரை இழக்கப் போகும் அந்த ஆறு வயது சிறுமி மட்டும் அல்ல. ஆண்டுதோறும் நம் நாட்டில் பல குழந்தைகள் இப்படித்தான் பரிதாபமாக உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். சரியான நேரத்தில் இதயத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறை கண்டுபிடிக்க முடியாதது ஒரு காரணம். அப்படியே கண்டு பிடித்தாலும் சிகிச்சை செய்ய தேவையான மருத்துவ வசதிகளும் பணவசதியும் இல்லாதது இன்னொரு முக்கியமான காரணம். இதன் காரணமாக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகளின் பரிதாப மரணம். 'இதற்கெல்லாம் என்னதான் தீர்வு' என்று கேட்டார் ஹேமா. கோபி அமைதியாகப் பதில் சொன்னார். "இதற்கான தீர்வுக்கு நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும்." "என்ன சொல்கிறீர்கள் கோபி ?" "ஆமாம் ஹேமா. நாம் தனி ஆளாக நின்று இந்த காரியத்தைச் சாதிக்க முடியாது. இதற்காக ஒரு ஃபவுண்டேஷன் உருவாக்க வேண்டும்." "இந்த சதீஷ்கர் ஊரிலா ?" "இல்லை. இது நமக்கு புது இடம். நமக்குத் தேவையான ஒத்துழைப்பு அவ்வளவு சீக்கிரத்தில் இங்கு கிடைத்து விடாது. இதை நமக்கு நன்கு தெரிந்த இடத்தில் ஆரம்பிப்பதுதான் நல்லது."
இப்படித்தான் மதுரையில் உதயமானது லிட்டில் மொபெட் ஹார்ட் ஃபவுண்டேஷன்.
( little moppet heart foundation) எதற்காக சென்னை போன்ற பெருநகரங்களை விட்டுவிட்டு மதுரையை தனது சேவைக்கான இடமாக டாக்டர் கோபி தேர்வு செய்தார்? "அதற்குக் காரணம் இருக்கிறது. மதுரையை சுற்றி நிறைய சின்ன சின்ன கிராமங்கள் இருக்கின்றன. இங்கே உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. இந்த கிராமத்து மக்களுக்கு சிகிச்சைக்கு செலவழிக்க போதுமான பணமும் கையில் இல்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைப் பருவத்தில் எளிதாகக் கண்டுபிடித்து குணப்படுத்தக்கூடிய ஒரு நோயை, ஆரம்ப கட்டத்திலேயே எப்படிக் கண்டு பிடிப்பது, அதற்கு என்ன சிகிச்சை செய்வது என்ற அடிப்படை மருத்துவ அறிவு இங்கே கொஞ்சம் கூட இல்லை. அதனால்தான் சென்னையை விட்டு விட்டு மதுரையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்." ஆரம்பித்த வேகத்திலேயே அடுத்தடுத்து ஏராளமான இடங்களில் இலவச மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தினார் டாக்டர் கோபி. மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி, ராமநாதபுரம், பரமக்குடி போன்ற தென் மாவட்டங்களில் நடத்திய இந்த முகாம்களில், பிறவி இதயநோய் உள்ள ஏராளமான குழந்தைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். மதுரையில் உள்ள தேவதாஸ் மருத்துவமனை, இந்த குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை செய்ய அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க... இதுவரை நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சைகள் செய்து அந்த பச்சிளம் குழந்தைகளின் உயிரை பத்திரமாக காப்பாற்றியிருக்கிறார்கள். அனைத்துமே இலவசமாக.
"எல்லாமே இலவசம் என்பது சரி. நீங்கள் உங்கள் குடும்பத்தை எப்படி நடத்துகிறீர்கள் டாக்டர் கோபி ?" சிரித்தபடி இதற்கு பதில் சொல்கிறார் அவரது மனைவி ஹேமா. "பண வசதியில்லாத பரிதாப நிலையிலுள்ள குழந்தைகளுக்கு மட்டும்தான் இங்கே நாங்கள் இலவசமாக சிகிச்சை செய்கிறோம். பணம் இருக்கிறவர்கள் வெளியே உள்ள ஹாஸ்பிடல்களில் இருந்து கூப்பிட்டால், என் கணவர் ஆபரேஷன் செய்து விட்டு அதற்குரிய ஃபீஸ் வாங்கி கொண்டு வருவார்.
நானும் என் பங்குக்கு வீட்லயே குழந்தைகளுக்கான பேபி ஃபுட் தயார் செய்து ஆன்லைனில் அதை விற்பனை செய்கிறேன். எங்களுக்கும் எங்கள் இரு குழந்தைகளுக்கும் இது தாராளமாகப் போதும்." சில நொடிகளின் அமைதிக்குப் பிறகு ஹேமா தொடர்ந்து சொல்கிறார்: "நாங்கள் இருவரும் வெளியிடங்களுக்குச் சென்று பிராக்டீஸ் செய்தால் கண்டிப்பாக இதைவிட பலமடங்கு பணத்தை சம்பாதிக்கலாம். ஆனால் இந்த ஏழை குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கும் இலவச சிகிச்சையினால், அந்தக் குழந்தைகளின் முகங்களிலும் அவர்கள் பெற்றோரின் முகங்களிலும் காணப்படும் திருப்தியையும் நிறைவையும் எத்தனை கோடிகள் கொடுத்தாலும் நாம் பார்க்க முடியாது." டாக்டர் கோபி, டாக்டர் ஹேமப்பிரியா, இருவருக்கும் நமது நல் வாழ்த்துக்கள்..!
ஏராளமான இணைய தளங்களில் தேடி எடுத்த, டாக்டர் தம்பதியினரின் புகைப்படங்களையும், அவர்களிடம் சிகிச்சை பெற்று நலமுடன் வாழும் குழந்தைகளின் புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு தன்னலமற்ற சேவையை இந்த டாக்டர் தம்பதியினர் ஆரம்பிக்க மூல காரணமாக இருந்த அந்த ஆறு வயதுக் குழந்தை.. அவள் புகைப்படத்தை எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. சரி. அதனால் என்ன ? உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு தேவதையின் படத்தை, அந்த குழந்தையின் படத்துக்கு பதிலாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த தேவதைதான் இந்த டாக்டர் தம்பதிகளின் மனமாற்றத்திற்கும் மருத்துவ சேவைக்கும் காரணம்.
எங்கிருந்தோ நம்மைப் பார்த்து புன்னகைக்கும் அந்த சின்னஞ்சிறு தேவதையை
இங்கிருந்தே நான் வணங்குகிறேன், வாழ்த்துகிறேன்..!
================================================================================
94 வயதான ஒருவரை தினமும் அதிகாலை 3:30 மணிக்கு படுக்கையில் இருந்து எழுப்புவது எது? பழக்கம் இல்லை. கடமை இல்லை. ஆனால் நோக்கம் என்ன. சென்னை கோபாலபுரத்தில், பேப்பர் தாத்தா என்று அன்பாக அழைக்கப்படும் கே. சண்முகசுந்தரம், நகரம் தூங்கும்போது தனது சைக்கிளில் கிளம்புகிறார்.. 2000 களின் முற்பகுதியில் இருந்து, அவர் ஒவ்வொரு நாளும் 50 பால் பாக்கெட்டுகள் மற்றும் 60 செய்தித்தாள்களை தவறாமல் டெலிவரி செய்து வருகிறார். காய்ச்சல் அவரைத் தடுக்கவில்லை. மழை தடுக்கவில்லை. . கொரோனா தொற்றுநோய் கூட அவரைத் தடை செய்ய முடியவில்லை. . அவர் பேப்பர் விநியோகம் முடித்ததும், ஒரு திருமண மண்டபத்தை அடைகிறார். , அவர் அன்று விநியோகித்த ஒவ்வொரு பேப்பரையும் வார்த்தைக்கு வார்த்தை படிப்பார். “எனக்கு காய்ச்சல் இருக்கும்போது கூட, நான் ஒரு நாளையும் தவறவிடுவதில்லை. மக்களுடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே, நான் வீட்டிலிருந்து எப்போதும் என் சைக்கிளில் வெளியே செல்வதில்லை,” என்று அவர் தி இந்துவிடம் புன்னகையுடன் கூறினார். இது வெறும் வேலை அல்ல. அதன் கண்ணியம். ஒழுக்கம். இயக்கத்தில் இருக்கும் வாழ்க்கை. முன்னாள் தண்ணீர் கேன் சப்ளையர் மற்றும் ஆட்டோ பாகங்கள் வியாபாரி, அவர் ஆறு குழந்தைகளை வளர்த்தார், தனது மனைவியை கவனித்துக்கொள்கிறார், மேலும் அவரது பத்து பேரக்குழந்தைகள் அவரை மெதுவாகச் செல்லச் சொன்னாலும், இன்னும் வேலைக்குச் செல்லக் கிளம்பி விடுகிறார். “அவர் தினமும் காலையில் எனக்கு உத்வேகம் அளிக்கிறார்,” என்று ஒரு பக்கத்து வீட்டுக்காரர் கூறினார். “அவரைப் பார்ப்பது உங்களை சிறப்பாகச் செய்யத் தூண்டுகிறது.” ஏனென்றால் பேப்பர் தாத்தாவைப் பொறுத்தவரை, சைக்கிள் வெறும் போக்குவரத்து மட்டுமல்ல. அது அவரது உண்மை. அவரது சுதந்திரம். அவரது நோக்கம். #சென்னை #நேர்மறை செய்திகள் #ஊக்கமளிக்கும் #ரியல் லைஃப் ஹீரோ #ஊக்கமளிக்கும் [பேப்பர் தாத்தா, சென்னை, உள்ளூர் ஹீரோ, ஊக்கமளிக்கும், மூத்த குடிமகன், கோபாலபுரம்]
பெட்டர் இந்தியா - பேஸ்புக் - நன்றி JKC ஸார்.
========================================================================================
என் அலுவலக அனுபவங்கள்.
கொச்சு புக், கொச்சு புக்
JKC
சென்ற வாரம்
“ஓலை பட்டாசு” வாசித்திருப்பீர்கள். அதில் உள்ள கொக்கோகம் புத்தகம் பற்றியும்
தெரிந்திருப்பீர்கள். அதன் தாக்கமே இக்கதை/சம்பவம் “கொச்சு புக்”, என்னுடைய
திருவனந்தபுர வாசத்தை நிரந்தரமாக்கியது.
1975க்கு
முன்னர் ISRO ஒரு தன்னாட்சி (autonomous) நிறுவனம் ஆக இருந்தது. நிதி DAE
(Department of Atomic Energy) பட்ஜெட்டில் இருந்து
ஒதுக்கப்பட்டது. ISRO வில் பல யூனிட்டுகள். நான் TERLS எனப்படும் Thumba
Equatorial Rocket Launching Station என்ற யூனிட்டில் பர்ச்சேஸ் பிரிவில் காம்ப்ட்டோமீட்டர்
அசிஸ்டன்ட் ஆக வேலையில் 1970இல் சேர்ந்தேன்.
வேலைக்கு
சேரும்போது தரப்பட்ட விதிமுறைகள், மற்றும் கண்டிஷன்கள்.
ஒரு வருடம்
ப்ரொபேஷன், ஆபீஸ் வர போக இலவச ஆபீஸ் பஸ். இலவச மருத்துவ வசதி. என்னுடைய ஷிப்ட் முதல் (8 - 16.30) ஷிப்ட். முதல் ஆளாக வந்து
செக்யூரிட்டி யில் சாவி வாங்கி ஆபீசை திறக்க வேண்டும்.
ப்ரொபேஷன்
காலத்தில் எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கப்படலாம். ப்ரொபேஷன் நன்
நடத்தையுடன் முடிந்தவுடன் வேலை நிரந்தரம் செய்யப்படும். நிரந்தரம் என்றாலும் ஒரு
மாத நோட்டீஸ் அல்லது ஒரு மாத சம்பளத்துடன் வேலையை விட்டு நீக்க அதிகாரம் உண்டு.
SLV
எனப்படும் செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட்டுக்குக்காக எல்லோரும் முழு மூச்சுடன்
வேலை செய்து கொண்டிருந்த நாட்கள். கிட்டத்தட்ட எல்லா பணியாளர்களும் பாபா அணுசக்தி
ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து மாற்றல் வாங்கி வந்த, பழம் தின்று கொட்டை போட்ட
மலையாளிகள். புதிதாகச் சேர்ந்த நான் மட்டுமே அலுவலக அனுபவம் இல்லாமல் இருந்தவன்.
எல்லோருக்கும் வேலையில் ஒரு அர்ப்பணிப்பு, பிடிப்பு இருந்தது..
இரண்டு
மற்றும் நான்காம் சனிக்கிழமை தவிர பாக்கி எல்லா நாட்களும் வேலை நாட்கள்தான். மதிய
சாப்பாடு இடைவேளை தவிர மற்ற நேரங்களில் இருக்கையை விட்டு வெளியில் செல்ல அனுமதி
இல்லை. டீ காபி போலும் கான்டீன் பாய் கொண்டுவந்து மேஜையில் கொடுப்பார். வேலை
அதிகமானதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டி
வரும். Overtime payment உண்டு. சம்பளம் போதாமையால் கிட்டத்தட்ட எல்லோரும் OT
பார்ப்பது வழக்கம்…..சாதாரணமாக ஆபீசர் கையெழுத்து தேவையில்லாத filing, ஆர்டர்
செய்த பொருள் கிடைக்கவில்லை என்ற நினைவூட்டல் கடிதங்கள் என்று ஒத்திப்போட்ட
வேலைகள் பல அன்று செய்யப்படும்.
வேலையில்
சேர்ந்தபோது என்னுடைய சம்பள ஸ்கேல் 150-5-240. OT
எல்லாம் சேர்த்து பிடித்தங்கள் போக கையில் 200 ரூ கிடைக்கும். அதில் 100ரூ
வீட்டுக்கு மணியார்டர் அனுப்பி விடுவேன். அலுவலக பஸ் இலவசம், ஆகவே
போக்குவரத்துக்கு செலவு செய்ய வேண்டியதில்லை. . அலுவலக கான்டீன்
மானியத்துடன் செயல்பட்டது. டீ 15 பைசா, காபி 25 பைசா,
இனிப்பு 20 பைசா, காரம் (வடை, போண்டா,பஜ்ஜி) 10 பைசா. பொரியல், அவியல், சாம்பார்,
தயிருடன் சாப்பாடு 65 பைசா. எல்லாவற்றிற்கும் கூப்பன்தான் கொடுக்க வேண்டும். இப்படி அலுவலகம் என்றால்
என்ன, எப்படி வேலை செய்கிறது என்பதையும் கற்றுக் கொண்டு வந்தேன்.
என்ன,
தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் எங்கெங்கோ போகிறானே என்கிறீர்களா? சரி போதும்.
மேற்கூறிய விஷயங்கள் கதையை புரிந்து கொள்ள கொஞ்சம் அவசியம் தான். கதைக்கு
வருகிறேன்.
எப்போதும்
போல் அந்த ஞாயிற்றுக்கிழமையும் OT செய்பவர்கள் வந்து அவரவர் வேலையை செய்தோம்.
நானும் என்னிடம் இருந்த பேப்பர்களை அதனதன் பைல்களில் பைல் செய்தேன்.
ஆஃபிஸில் A R
C பணிக்கர் என்பவர் ஒரு சப் செக்சன் தலைவர். அவரது மனைவி ராதாம்மா
அவருக்கு typist. இருவரும் நிறைய சர்வீஸ் போட்டவர்கள், மத்திய வயதினர். பம்பாய்
BARC இலிருந்து வந்தவர்கள்.. அன்று அவர்கள் வரவில்லை.
அடுத்த நாள்
திங்கள் அன்று காலை ஆபீஸ் இயங்க ஆரம்பிக்கும் நேரம். ஒரு சலசலப்பு, Typist
ராதாம்மாவின் typewriter அடியில் இரண்டு கொச்சு புக்….. கொச்சு புக் எனப்படுவது
தமிழில் கம்பிக்கதைகள் என்று கூறப்படும் ஒன்று. கொக்கோகம் போன்றதே….. அதை அவர்
கணவரிடம் காண்பிக்க அவர் பர்ச்சேஸ் ஆஃபீசர் ஷெனாயிடம் புகார் செய்தார்.
ஒரு விசாரணைக்கு ஏற்பாடாகியது. கொச்சு புக்கை லேடி டைப்பிஸ்ட்
மேஜையில் வைப்பது படுக்கைக்கு விளிப்பது போன்ற குற்றம். ஒரு சீரியஸ் குற்றம்.
மூவர் குழு…
பர்ச்சேஸ் ஆஃபீசர் ஷெனாய், துணை பர்ச்சேஸ் ஆஃபீசர்கள் மோகன்ராம், பாலகிருஷ்ணன் ….
விசாரணையை ஆரம்பித்தனர்.
OT செய்ய
வந்தவர்கள் ஒவ்வொருவராக விசாரணைக்கு விளிக்கப்பட்டனர்.
கேட்கப்பட்ட
கேள்விகள் பொதுவே பின்வருபவையாக இருந்தது.
நேற்று
ஆபீசுக்கு வந்தாயா?
வேறு
யாரெல்லாம் ஆஃபீஸுக்கு வந்திருந்தனர்?
நீ இந்த
கொச்சு புக்கு களை கொண்டு வந்தாயா?
வேறு யார்
கொண்டு வந்தார் என்பது தெரியுமா?
உனக்கு
தெரியும் நீ சொல்ல மறுக்கிறாய்?
என்ற
ரீதியில் இருந்தன.
என்னுடைய
முறை வந்தது.
என்னிடமும்
இந்த கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் என்னுடைய உண்மையான பதிலைக்
கூறினேன். கடைசி கேள்விக்கப்புறம் கேள்விகள் திசை மாறின. எல்லோரும் மறுத்த
நிலையில்,... ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி…. என்பது போல் புதிதாக
சேர்ந்த என்னை குற்றப்படுத்தினர்.
“சார்
எனக்குத் தெரியாது, யார் கொண்டு வந்தார் என்பது”
“உன்னுடைய
ப்ரொபேஷன் இன்னும் தீரவில்லை தெரியுமா…. நினைத்தால் இப்போதே உன்னை வேலையை விட்டு
நீக்கி வீட்டிற்கு அனுப்ப முடியும். உண்மையைச் சொல்”
“உண்மையைத்தான்
சொல்கிறேன், எனக்குத் தெரியாது”
“அப்போ நீ
தான் கொண்டு வந்திருக்க வேண்டும்”
“சார் எனக்கு
மலையாளம் தெரியாது, இது போன்ற புத்தகங்களை பார்த்தது கூட இல்லை” என்று அழுது
விட்டேன்.
என்ன
நினைத்தார்களோ “சரி போ” என்று அனுப்பிவிட்டார்கள்.
வெளியில்
வந்தவுடன் சீனியர்கள் என்னை சமாதானப்படுத்தினர். அவர்கள் கூடி பணிக்கரிடம் பேசி
“இது வெளியில் போகாமல் இருக்கட்டும். நமக்குள் தீர்த்துக் கொள்ளலாம். புகாரை வாபஸ்
வாங்கிக்கொள்ளுங்கள்.” என்று வேண்டிக்கொண்டனர்.
பின்னர்தான்
புத்தகங்களை கொண்டுவந்தது “கோபி என்கிற கோபிநாதன் நாயர் என்பதும், வீட்டில்
பிள்ளைகள், மனைவி ஆகியோருக்கு தெரியாமல் வாசிக்க OT நாளில் கொண்டு வந்ததும்,
அவசரமாக ஒளிக்க typewriter அடியில் வைத்தது, பின்னர் மறந்து போனது …. என்பனவற்றை
அறிய நேர்ந்தது.
இப்படியாக
பறிபோகவிருந்த வேலையை இறுக்கமாக பிடித்துக் கொண்டேன்.
அதற்கு பின்
பல கெட்ட பழக்கங்களை …. புகை பிடித்தல், தண்ணி அடித்தல், ரம்மி போன்றவற்றை கற்று, தண்ணி அடிப்பதை மட்டும்
ப்ரொபேஷன் தீரும் முன் விட்டு விட்டது, (வேறே ஒண்ணும் இல்லீங்க,
செலவு கட்டு படியாகலீங்க), ரம்மி கம்ப்யூட்டர்
டிவிஷனுக்கு மாறுதல் ஆன போது விட்டது, புகை பிடித்தல் 40 ஆண்டுகள் தொடர்ந்தது
(எங்க டைரக்டரே செயின் ஸ்மோக்கர்) என்று பல அனுபவங்கள் தனிக்
கதைகள்.
லாரி டிரைவர்களும் டாக்டர் தம்பதிகளும் என்னை வியக்க வைக்கின்றனர்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
வாங்க நெல்லை.. போற்றுவோம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம், பிரார்த்தனைகள்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
விபத்து நேர்ந்த பேருந்திலிருந்து அதில் பயணித்த மக்களை காப்பாற்றிய லாரி டிரைவர்களை மனதாற பாராட்டுவோம்.
சிறு குழந்தைகளை காப்பாற்றுவதே தங்களது வாழ்வின் லட்சியமாக கொண்டிருக்கும் டாக்டர் தம்பதிகளை பாராட்டுவோம். அவர்களின் சேவை அவர்கள் குடும்பத்தை வளமாக வாழ வைக்கும்.
94 வயதிலும், சுறுசுறுப்பாக இயங்கி வரும் பேப்பர் தாத்தா நலமுடன் இந்த சேவையை தொடர்ந்து செய்து வர இறைவனை பிரார்த்திப்போம்.
மூன்றுமே நல்ல செய்திகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதை பகிர்வுக்கு பதிலாக சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் அலுவலக அனுபவங்கள் குறித்த பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. அப்போதெல்லாம் நூறு ரூபாய் சம்பளத்துடன் மாதம் முழுவதும் வாழ்வை சிறப்பாக நடத்தி வந்துள்ளோம். இப்போது ஆயிரக்கணக்கில் சம்பளங்கள் வந்தாலும், மாத இறுதியில் பற்றாக்குறைகள்தாம். இது காலத்தின் மாறுதலா? இல்லை காலத்தின் மேல் பழி சுமத்தி நாம் காணும் மாற்றங்களா? என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.
நல்லவேளை..! அலுவலக பணிக்கு பங்கம் வராமல் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு இறைவன் துணையாக இருந்தார். சிலரின் தவறுகள் நமக்கு கெடுதல்கள் உண்டாக்கி விடும் நேரத்தில் உண்மை என்றுமே அதை முறியடித்து வெற்றியை தேடித்தரும். சகோதரரின் அனுபவங்கள் பதிவு அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அப்போதெல்லாம் நூறு ரூபாய் சம்பளத்துடன் மாதம் முழுவதும் வாழ்வை சிறப்பாக நடத்தி வந்துள்ளோம். இப்போது ஆயிரக்கணக்கில் சம்பளங்கள் வந்தாலும், மாத இறுதியில் பற்றாக்குறைகள்தாம்...இது காலத்தின் மாறுதலா? இல்லை காலத்தின் மேல் பழி சுமத்தி நாம் காணும் மாற்றங்களா? என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.//
நீக்குஆமாம் கமலாக்கா நிறைய பேசலாம்.
காலம் மாறிக் கொண்டேதான் இருக்கும் கமலாக்கா. அதன் மீது பழியைப் போடுவதை விட, எந்தெந்த மாற்றங்களுக்கு நம்மை உட்படுத்திக் கொள்ள வேண்டும் எதற்குக் கூடாது என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். நம் பட்ஜெட் நம் கையில் என்று திட்டமிட்டால் சமாளிக்கலாம். மனம் இதற்கு மிக முக்கியம்.
இந்தப் பள்ளியில் சேர்த்தால்தான் நம் குழந்தைகள் நன்றாகப் படிக்கும் என்று ஒரு மாயையில் நாம் ஊரிலேயே உசந்த பள்ளியில் சேர்க்கிறோம். அதற்கான ஃபீஸை யோசித்துப் பார்த்தால்? குழந்தைகளுக்கு 5, 12 வயதிற்குள் எது தேவை எது தேவையற்றது என்பதை மெதுவாகப் புரிய வைக்கணும் அறிவியல் ரீதியாகவும். அவர்களின் கேள்விகளுக்கும்...
தேவையில்லாமல் பல பொருட்களை வாங்குகிறோம் இல்லையா? அதைக் குழந்தைகளும் பார்ப்பதால் அவர்களுக்கும் வரும் அப்பழக்கம்.
அதுவும் இப்போதைய தலைமுறையினரின் பொருளாதாரப் பார்வை என்னைப் பல சமயங்களில் பயமுறுத்தும். கடைக்குப் போனால் பார்க்க முடிகிறது.
எனவே பட்ஜெட் நம் கையில்.
கீதா
/தேவையில்லாமல் பல பொருட்களை வாங்குகிறோம் இல்லையா? அதைக் குழந்தைகளும் பார்ப்பதால் அவர்களுக்கும் வரும் அப்பழக்கம்./எனவே பட்ஜெட் நம் கையில்.//
நீக்குஉண்மைதான்..! யோசித்து செலவு செய்வதால் மாதம் கொஞ்சம் பணத்தை சேமிக்கலாம். ஆனால், அப்படி சேர்த்து என்ன பண்ணப் போகிறாய் .? போகும் போது கொண்டு செல்ல முடியுமா? என்பது போன்ற தத்துவங்கள் பேசுகிறவர்களை என்ன செய்ய முடியும்? உண்மைதான்.. ஆனால் அந்த தத்துவப்படி நாமும் அன்றைய காலகட்டத்தில் (அநத நூற்றுக்கணக்கான வருமானத்தில் கண்டபடி செலவுகளை செய்திருந்தால்) நடந்து கொண்டிருந்தால், இளைய தலைமுறைகள் விருப்பப்படி படிக்க வைக்க இயலுமா? அப்படி அவர்கள் பெறும் கல்விதானே அவர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் மூலதனம்.
இப்போது பயங்கர செலவுகளை மேற்கொள்ளும் குடும்பங்களை நினைத்தால், எனக்கும் இதுதான் மனதில் தோன்றும். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
பொதுவாக லாரி ஓட்டுனர்கள் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது. ஆனால் எல்லோரும் எப்போதும் மோசம் கிடையாது என்பது புரிவது சந்தோஷம். இந்த கருத்துதானே செவ்வாயன்று மாலன் கதையில் கூறப்பட்டது?
பதிலளிநீக்குடாக்டர் தம்பதிகளின் சேவை மகத்தானது.
ஜெயகுமார் சாரின் அலுவலக அனுபவம் இப்போது படிக்க சுவாரஸ்யம், அப்போது அவர் எப்படி பதட்டப்பட்டிருப்பார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. நிஜமாகவே கொச்சு புத்தகத்தை டைப் ரைட்டர் அடியில் வைத்தவருக்கு தண்டனை எதுவும் கிடைக்கவில்லையா?
பதிலளிநீக்குபுத்தகத்தை வைத்தது தவறான நோக்கத்தில் அல்லவே? ஒளித்து வைக்க ஒரு இடம் என்று தற்காலிக மறைவிடம். மறப்போம், மன்னிப்போம் என்ற வகையில் அது மன்னிக்கப்பட்டது. ஆனால் பொதுவாக இது போன்ற புத்தகங்கள் வாசிப்பது தெரிந்த ரஹஸ்யம் தான்.
நீக்குJayakumar
கோபி, ஹேமா மருத்துவ தம்பதியர்களைப் பற்றிப் படித்த போது மனம் நெகிழ்ந்து என்னை அறியாமல் கண்ணில் நீர் வந்தது அதுவும் அந்த சத்தீஸ்கர் ஆறு வயதான சிறுமியின் நிலை மனதை என்னவோ செய்தது/ பாவம் இப்படி எத்தனை ஏழைக் குழந்தைகள் இல்லையா? மருத்துவரின் கேள்வி ...அவரை இந்தச் சேவைக்கு drive பண்ணியது தான். இப்படிச் சிலருக்கே இம்மாதிரியான கேள்விகள் எழுந்து சேவை செய்ய வைக்கிறது. வாழ்த்துகள் இருவருக்கும். வாழ்க பல்லாண்டு!
பதிலளிநீக்குபலரும் விதி, முன் ஜென்மம் னு சொல்லி கடந்து விடுவாங்க. அட்லீஸ்ட் அப்படிச் சொன்னாலும், அப்படி நம்பும் மருத்துவர்கள் அதற்கான தீர்வுகளையும் சொல்லி, மருத்துவ அறிவியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கும் மருத்துவர்களும் உள்ளனர் என்பதை சமீபத்தில் அறிந்தேன், நட்பின் மூலம்.
கீதா
இந்த டாக்டர் தம்பதியினர் ஆரம்பிக்க மூல காரணமாக இருந்த அந்த ஆறு வயதுக் குழந்தை.. அவள் புகைப்படத்தை எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. சரி. அதனால் என்ன ? உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு தேவதையின் படத்தை, அந்த குழந்தையின் படத்துக்கு பதிலாக நினைத்துக் கொள்ளுங்கள். //
பதிலளிநீக்குஅழகாக எழுதியிருக்கிறார். இதைத்தான் மேலே கருத்தில் சொல்லியிருக்கிறேன். கண்டிப்பாக ஒரு மிகப் பெரிய சேவைக்கு விதைத்த தேவதைதான்.
அந்தக் குழந்தை என்ன ஆனாளோ? பாவம்.
எழுதியவர் மிகவும் உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறார், ஜான் துரை.
கீதா
பஸ் எரியும் படம் மனதில் பீதியைக் கிளப்பியது. லாரி ட்ரைவர்கள் வாழ்க. நல்ல உள்ளங்கள் எல்லா இடங்களிலும் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். ஆனால் நாம் தான் கண்டு கொள்ளத் தவறுகிறோம்.
பதிலளிநீக்குகீதா
கோபாலபுர மூத்த குடுமகன் தாத்தாவுக்கு வாழ்த்துகள். கண்ணியம் ஒழுக்கம்....வாவ் போட வைக்கிறார். பகிர்ந்த ஜெ கே அண்ணாவுக்கும் நன்றி.
பதிலளிநீக்குகோபாலபுரம் என்றதும் வேறொரு தாத்தா நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியலை ஆனால் ....சரி அடுத்த வரி வேண்டாம்.
கீதா
ஜெ கே அண்ணாவின் அனுபவத்தை நினைக்கையில் அன்று எவ்வளவு பதற்றப்பட்டிருப்பார் என்று புரிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குஇதே போன்ற ஆனால் வேறு விதமான ஒரு அனுபவம் அதுவும் வெளிநாட்டில் நெருங்கிய பந்தத்துக்கு நடந்தது.
எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் வெளியிடத் தயக்கமாக இருந்ததால் வெளியிடாமல். பெயர்கள் இல்லாமல் சொன்னால் போச்சு.
கீதா
பல உயிர்களை காப்பாற்றிய லாரி ரைவர்கள்,
பதிலளிநீக்குடாக்டர் தம்பதிகளின் சேவை வியக்க வைக்கிறது பணத்துக்குப் பின்னால் ஓடும் கூட்டத்தினர்கள் மத்தியில் தமது நலன் கருதாது சேவையாற்றும் தம்பதிகள், பாராட்டுகள் என்பதை விட வணங்குகிறோம் அவர்களை.
J.k.பக்கம் கண்டோம்.