23.11.25

ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் மியூசியம்-லண்டன் 1/3 :: நெல்லைத்தமிழன்

 

கோயில் பதிவுகளுக்கு இடையில் மாறுதலாக என்ன எழுதலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நான் முன்னமே சில பல நாடுகளுக்கு பிரயாணம் செய்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். அந்த பிரயாணங்களைத் தொகுத்து எழுதலாமா என்று யோசித்தேன். என் புகைப்படத் தொகுப்பில் நான் பல முறை சென்ற லண்டன் பகுதிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, நான் அங்கு பார்த்த ‘ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்’ மியூசியம் பகுதியைப் பார்த்தேன். அதையே மூன்று வாரங்களுக்கு படப் பகிர்வுகளாகப் பகிரலாம் என்று தோன்றியது.

நான் ஏதேனும் நாடுகளுக்குச் சென்றால் கிடைத்த அவகாசத்தில் என்ன என்ன இடங்களைப் பார்க்கலாம் என்று யோசித்துத் திட்டமிடுவேன். சில நேரங்களில் சென்ற இடங்களுக்கே மீண்டும் செல்வேன். சும்மா ஹோட்டல் அறையில் உட்கார்ந்து பொழுதைக் கழிக்க மாட்டேன். பொதுவா காலையில் சீக்கிரம் எழுந்து அன்று செய்யவேண்டிய வேலைகளைச் செய்வேன். அதுபோல, மிகவும் அசதியாக உணர்ந்தாலன்றி வேலை முடித்துத் திரும்ப வரும்போது அறையில் உட்காரமாட்டேன்.  எனக்கு  இந்த மாதிரிப் பயணங்களில் உணவு என்பது ரொம்ப முக்கியமானதல்ல. அங்கு கிடைக்கும் மணமூட்டப்பட்ட பாலோ இல்லை வேறு ப்ரெட்டோ எனக்குப் போதுமானது. ஒரு வாரம் தங்கும்படி நேர்ந்தால், ஒரு நாள் அந்த இடத்தில் உள்ள  இந்திய உணவகத்துக்குச் செல்வேன் (அது எவ்வளவு தொலைவில் இருந்தாலும்).

அப்படி ஒரு தடவை சென்றிருந்தபோது அலுவலக வேலையை முடித்துவிட்டு லண்டன் டியூப் ஸ்டேஷனுக்குச் செல்ல நடந்தபோது வழியில் இந்த ‘நம்பினால் நம்புங்கள்’ மியூசியத்தைப் பார்த்தேன்.  உடனே டிக்க்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டேன். இந்த மியூசியத்தைப் பற்றி எனக்கு முன்னமே ஏதும் தெரியாது. 

அங்கு பல தளங்களில் வித்தியாசமானவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். சில பல தளங்கள் ஆச்சர்யப்படுத்தின. சில கொஞ்சம் உவ்வே ரகம்தான். அதனால் என்ன? நான் எடுத்த படங்களில் பலவற்றை உங்களுடன் பகிர்ந்துவிட்டால் உங்களுக்கே தெரிந்துவிடப்போகிறது.  

அது ஒரு கிறிஸ்மஸ் நேரம். அதனால் சாலைகளில் அலங்காரங்கள் மிகுந்திருந்தன. இந்த மாதிரிப் பயணங்களில் நான் பெரும்பாலும் ஒன்றையும் வாங்கமாட்டேன். பசங்களுக்காக ஏதேனும் பார்த்தால் வாங்குவேன். ஒரு தடவை என் பெண்ணுக்கும் பையனுக்கும் ஆளுக்கு ஒரு வித்தியாசமான அலார்ம் க்ளாக் வாங்கிக்கொடுத்தேன். காலையில் பொதுவாக அலார்ம் வைத்துக்கொள்பவர்கள் எல்லோரும், அலார்ம் அடித்தவுடன் அதனை ஸ்டாப் செய்து தூக்கத்தைத் தொடர்வார்கள். இதில் விதிவிலக்குகள் இருக்கா என்ன? அந்த அலார்ம் க்ளாக்கில் என்ன விசேஷம் என்றால், அலார்ம் அடித்தவுடன் அதன் மீது பொருத்தப்பட்டிருக்கும் ஒன்று பறந்து விழுந்துவிடும். அதனை எழுந்து எடுத்து கடிகாரத்தில் பொருத்தினால்தான் அலார்ம் நிற்கும். எழுந்துவிட்டால் பிறகு தூங்க நினைக்கும் வாய்ப்பு குறைவு என்பதால்.  

நான் எப்போதுமே நாலைந்து அலார்ம் வைத்துக்கொள்வேன். கடைசி அலார்மில் எழுந்துகொள்வேன் (காலை 5 மணிக்கு எழுந்துகொள்ள 4, 4:15, 4:30, 5 என்று அலார்ம் வைப்பேன்). என்ன ஒரு விநோத பழக்கம் பாருங்கள்.

எங்க வீட்டில் (அனேகமா என் பெண் ஆரம்பித்த வழக்கமாகத்தான் இருக்கும்) பசங்களின் சிறு வயதிலிருந்தே (எல் கேஜிக்கும் முன்னாலேயே) ஹாலில் உள்ள சுவர் கடிகாரத்தில் நேரத்தை 10 நிமிடங்கள் அதிகமாக்கி வைத்திருப்பார்கள். அப்போதுதான் நேரமாவதை உணர்ந்து அவசர அவசரமாக பள்ளி, கல்லூரி, ஆபீஸுக்குத் தயாராவர்களாம்.  இத்தனை வருடங்களுக்குப் பிறகு, பசங்களெல்லாம் வீட்டில் இல்லை. அதனால் சென்ற மாதம்தான் ஹால் கடிகாரமும் சரியான நேரத்தைக் காட்டும்படி மாற்றினேன். எனக்கு உள்ள விநோத பழக்கம், எல்லா இடத்திலும் கடிகாரம் இருக்கணும். பாத்ரூமிலும் கடிகாரம் மாட்டியிருப்பேன். படுக்கை அறையில், இரண்டு இடங்களில் கடிகாரம் மாட்டிவைத்துள்ளேன்.

சரி..இப்போது மியூசியத்தில் நான் பார்த்தவைகளைப் பார்க்கலாம்.

வெஸ்ட் மினிஸ்டர் சிட்டி கவுன்சிலின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்காக வைக்கப்பட்டிருந்த அலங்காரம். நீர்க்குமிழி போன்ற அலங்காரம்.

“நம்பினால் நம்புங்கள்” மியூசியத்தின் நுழைவாயில். 

வாசல்ல யாரும் நெட்டையான ஆளு வரவேற்கலை. பொம்மைதான். ஆனால் அவர் உயிருடன் இருந்த நெட்டை மனிதர். 


முதல் படம், உலகின் உயரமானவரின் மாடல். நின்ன இடத்திலிருந்தே உள்ளே வருபவரின் பாக்கெட்டில் நிறைய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிடலாமோ? இரண்டாவது படம், அழகிய குண்டூசி (Push Pin)களால் வரையப்பட்ட ஓவியம். படத்தில் உள்ளது ஓஃப்ரா வின்ஃப்ரே.


பல்குத்தும் குச்சிகளால் செய்யப்பட்ட ஜூடாஸ் சிற்பம் (ஜூடாஸ் என்பவர் இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவர். 30 வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்தவர். பிறகு குற்ற உணர்வால் தற்கொலை செய்துகொண்டவர்). இந்தச் சிற்பத்துக்கு 50,000 toothpicks உபயோகித்திருக்கிறார்கள். தாடிக்கு மாத்திரமே 5,000 குச்சிகளாம். இதைச் செய்ய 3 வருடங்கள் ஆனதாம் (உடனே.. இது என்ன வேலையத்த வேலை என்று உங்கள் மனதில் தோன்றுமே)

வேஸ்ட் பிளாஸ்டிக்கையும் சில பல கரண்டிகளையும் வைத்து எவ்வளவு அழகாக இந்தக் குதிரையைச் செய்திருக்கிறார்கள் பாருங்க. காற்றைவிட வேகமாக ஓடுகின்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன.

திபெத்தில், இறந்த முன்னோர்களின் எலும்புகளை வைத்து ஆபரணங்கள் செய்து அணிந்துகொள்வது, இறந்தவர்களுக்குச் செய்யும் மரியாதை என்று நினைத்தார்களாம். அதிலும் அறிவின் இருப்பிடமான மண்டையோட்டை, நன்கு அலங்கரித்து கழுத்தில் அணிந்துகொண்டால், இறந்தவருடைய ஞானம் தங்களுக்கும் வரும் என்று நம்பினார்களாம். இந்த மண்டையோட்டு முகமூடி மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தீர்களா? எப்படி அழகுடன் செதுக்கியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.  (காலைல உனக்கு என்னப்பா இந்தக் கொலைவெறி… யாருடைய மண்டையோட்டையோ கூர்ந்து கவனித்து அறுபது வித்தியாசங்களை எழுதச் சொல்லுவ போலிருக்கே)

ஐந்து கால் தவளையும்,  திமிங்கிலத்தின் காதில் உள்ள பகுதியும் (Ear drumக்கெல்லாம் தமிழ் வார்த்தை படித்திருக்கிறேன். இப்போ மறந்துவிட்டது)

Oriental Dragon Chair – பழைய காலத்தது. 

பழங்குடியினரின் முகமூடி (என்னா உயரம்). இரண்டாவது படம் சீன வீரனின் உலோகப் பதுமை


முழுவதும் கம்பளி நூலினால் செய்யப்பட்ட ஃபெராரி கார். இதற்கு 12 மைல் நீளமான நூலை உபயோகித்திருக்கிறார்கள். இங்கிலாந்தில், கலைப் பள்ளிக்கான ப்ராஜக்டாக இதனை மாணவர் ஒருவர் செய்திருக்கிறார்


எம்மாம் பெரிய சேர். நல்லவேளை, சேர்ல உட்கார படிகள் வச்சிருக்காங்க. இல்லைனா ஏணி எங்க இருக்குன்னு தேடவேண்டியிருக்கும்.


இது Peel Trident எனப்படும் மூன்று சக்கர சிறிய கார். 1965-66ல் தயாரிக்கப்பட்டது. 45 கார்களே தயாரித்திருக்கிறார்கள். இப்போதும் அவற்றை ஓட்டும்படியாகச் செய்திருக்கிறார்கள். பார்க்க விளையாட்டுக் கார்கள் போன்று தெரிந்தாலும், இத்தகைய வாகனங்கள் மிக உபயோகமானவை என்று நினைக்கிறேன். 

அடுத்து வருவது, பிறப்பினால் ஏற்படும் குறைபாடுகள். விலங்குகளில் இத்தகைய குறைபாடுகள் ஏற்படும்போது இரட்டைத் தலை, மூன்று கால்கள், ஒட்டிப்பிறப்பது என்று ஆகிவிடுகிறது. பார்ப்பதற்கு கொஞ்சம் அசூயையாக இருந்தாலும், இவையும் இருந்தன என்பதற்காக சில படங்களைச் சேர்த்துள்ளேன்.

இதை எழுதும்போது எனக்கு, மனிதனின் அதீத ஆசைக்காக விலங்குகளின் இயற்கை உடலையே மாற்றும் போக்கு நினைவுக்கு வருகிறது. பெங்களூர் சாலைகளில் நான் நிறைய கறவை மாடுகளைப் பார்ப்பேன். அவற்றின் மடு, அதீத பெரிதாக இருக்கும். இயற்கையாகவே இருக்காது.  நிறைய பால் கறக்கவேண்டும் என்பதற்காக செயற்கை முறையில் மாற்றப்பட்ட மாடுகள் இவை. சரி..இணையத்தில், அதிகமாக பால் கறக்கும் வெளிநாட்டு மாடுகளைப் பற்றிப் படித்தால், அவற்றின் படங்களைப் பார்த்தால் ரொம்ப கொடுமையாகத் தெரியும். கழுதைக்கு முதுகில் மூட்டை ஏற்றுவது போல, அந்த மாடுகளின் மடி அவ்வளவு பெரியதாகத் தெரியும். அதைத் தூக்கிக்கொண்டு,  மாடுகளின் பின்னங்கால்கள் எவ்வளவு சிரமம் படுமோ.  இந்த ஆர்கானிக் காய்கறி என்ற பிஸினெஸ் போல, சமீப காலங்களில் ஏ2 வகை பால், மற்றும் பால் பொருட்கள் என்று ஆரம்பித்திருக்கிறார்கள். 

மூணுகால் சேவல், அஞ்சு கால் ஆட்டுக்குட்டி. இதையெல்லாம் பார்க்கும்போது சேவலுக்கு எவ்வளவு கால்னு சந்தேகம் வந்துடும் போலிருக்கு.

பாவம். இந்த மாதிரி பிறப்பில் கோளாறு இருந்தால் அந்த உயிர் என்ன பாடுபடும்? (ஒருவேளை, அடுத்த ஜென்ம ம் என்று ஒன்று இருந்தால் நாம இரண்டு பேரும் சண்டையே போடாம ஈருயிரும் ஓருடலுமா இருக்கணும்னு வேண்டிக்க நினைத்து, அவசரத்துல ஓருடலா இருக்கணும்னு வேண்டியிருப்பாங்களோ? இதுக்குத்தான் கடவுள்ட எதையும் வேண்டக்கூடாது, அவன் பார்த்து என்ன தர்றானோ அதுலயே திருப்தியடையணும்னு பெரியவங்க சொல்றாங்களோ?)

சமீபத்தில் இங்கு சிட்டி மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக்கொண்டிருந்தபோது, நான் வழக்கமாக வாழைக்காய் வாங்குபவர், நான்கு வாழைக்காய் 50 ரூ என்று கூறுகள் வைத்திருந்தார். அதில் ஒரு கூறை என்னிடம் கொடுத்து இதில் ஆறு வாழைக்காய் இருக்கின்றன என்றார். நாலு வாழைக்காய் தவிர இரட்டை வாழைக்காய். நான் அந்த வாழைக்காய் வேண்டாம் என்றேன். அதற்கு அவர், இரட்டைக் குழந்தை பிறந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவோம். வாழைக்காய் இரட்டையா இருந்தால் வேண்டாம்கிறீங்களே என்றார். நான், அது சரி, இரட்டைக் குழந்தை ஒட்டிப் பிறந்தால் உங்களுக்குச் சந்தோஷமா இருக்குமா என்று கேட்டேன். இயற்கைக்கு மாறாக இருக்கும் காய்களை நான் வாங்குவதில்லை.

முன் காலத்துல அரசுக்கு உரிய மூத்தவன், தன் தம்பி தனக்கு எதிராக ஏதாவது செய்வானோ என்ற பயத்துல அவனைக் கண்காணிப்பதிலேயே காலம் செலவழித்து, அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், அவன் செய்வது எல்லாமே எனக்கு உடனுக்குடன் தெரியணும் என்று கடவுள்ட வேண்டியிருப்பானோ?

பசுவைப் பார்த்தால் மனதில் பரிதாபம் தோன்றுகிறது இல்லையா?


முதல் படம், பாட்டில் மூடிகளைக் கொண்டு வரையப்பட்ட ஒரு ஓவியம் (ஒபாமாவின் மனைவி என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை). அடுத்தது, அலிபியஸ் என்னும் எகிப்தைச் சேர்ந்தவர் (பழையகாலம்). 43 செண்டிமீட்டர் உயரமே கொண்டவர். தேசத் துரோகக் குற்றச் சாட்டிற்கு ஆளானபோது அவரைச் சிறையில் வைத்தார்கள். (அதாவது கிளிக்கூண்டில் சிறையில் வைத்தார்கள்)


வண்ணத்துப் பூச்சிகளால் வடிவமைக்கப்பட்ட கென்னடியின் ஓவியம். 

தட்டச்சு விசைகளினால் (இதுதானா Key board switch க்குத் தமிழ்?) வரையப்பட்ட ஆப்ரஹாம் லிங்கன்.


கேத் மிடில்டன் அவர்களை ஒரு ஓவியர், உதட்டுச் சாயத்தால் கேன்வாஸில் முத்தம் கொடுத்தே உருவாக்கிய ஓவியம். ஒவ்வொரு ஓவியத்தை உருவாக்கவும் 3-4 வாரங்களாவது ஆகுமாம். (எங்கள் பிளாக்லயும் இருக்காங்க.. அனுஷ்கா பிடிக்கும், தமன்னா பிடிக்கும், பாவனா பிடிக்கும்னுட்டு. இப்படி ஏதாவது முயற்சி பண்றாங்களா?)

யூ டியூபில் நாம் தப்பித் தவறி ஏதேனும் வீடியோ பார்த்துட்டோம்னா உடனே அதற்குப் பிறகு அது தொடர்பான காணொளிகள் வந்துக்கிட்டே இருக்கும். இப்படித்தான் நான் தவறுதலாக கேத் மிடில்டன் (அவங்க எதிர்கால ராணி-பிரிட்டனுக்கு) காணொளி ஒன்று பார்த்துவிட்டேன். அதற்குப் பிறகு ஒரே அக்கப்போர் காணொளிகள்தாம்.  இவரையும் இவருடைய மகளான சார்லெட் பற்றியும் ரொம்ப நல்லவிதமாக காணொளிகள்ல சொல்றாங்க. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பிரிட்டிஷ் அரசுக்குரியவர்களைப் பற்றிய காணொளிகளைப் பாருங்க. நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ளலாம்.

இனி அடுத்த வாரம் தொடர்வோமா? (அக்கப்போர் அல்ல,  நம்பினால் நம்புங்கள் மியூசியத்தில் பார்த்தவற்றைத் தொடர்வோம்)

(தொடரும்) 

80 கருத்துகள்:

  1. அலார்ம் அடித்தவுடன் அதன் மீது பொருத்தப்பட்டிருக்கும் ஒன்று பறந்து விழுந்துவிடும். அதனை எழுந்து எடுத்து கடிகாரத்தில் பொருத்தினால்தான் அலார்ம் நிற்கும். எழுந்துவிட்டால் பிறகு தூங்க நினைக்கும் வாய்ப்பு குறைவு என்பதால். //

    அட! நல்ல ஐடியா! குழந்தைகளுக்கு ரொம்பப் பிடித்திருக்கும்!

    ஆனால் நம்ம வீட்டில் அலார்ம் வைக்கும் பழக்கம் இல்லவே இல்லை. ஆனால் சமீப காலத்தில் இரவு அகால நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டிய நேரம் மட்டும் ஒரு முன்னெச்சறிக்கைக்காக அலார்ம் வைத்துக் கொண்டாலும் அடிக்கும் முன்னரே எழுந்துவிடுவது!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் பிடித்தருந்தாலும், தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு அலார்மை நிறுத்தணும். அதனால அவங்க அதை உபயோகித்த மாதிரித் தெரியலை.

      நம் உடலில் இயற்கையான அலார்ம் பெரும்பாலும் நம்பக்கூடியது.

      நீக்கு
  2. நானும் எங்கு சென்றாலும் பொருட்கள் வாங்கும் வழக்கம் இல்லை. ரொம்ப அரிது. வாங்கினாலும் பயன்படுத்துவதானவைதான்.

    மற்ற கலைப் பொருட்கள் வாங்கி வைக்க ஆசை என்றாலும் பராமரிப்பு வீடு மாறுதல் என்று ரொம்பக் கடினமாக இருப்பதால் வாங்குவது இல்லை. ஆசைப்படும் புத்தகமே வாங்க முடியலை அப்புறம்தானே மற்றவை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருட்கள் இடத்தை அடைத்துக்கொள்ளும். அதுபோல உணவு வகைகளை வாங்கினாலும் தேவையில்லாமல் எடையைக் கூட்டும்.

      நீக்கு
  3. ​மாற்றப்பட்ட ஞாயிறு பதிவு. இது போன்ற பராக்கு பார்க்கும் பதிவுகளும் ஒரு அறிவு விருத்திக்குத்தான்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். ஒரேடியாக சரித்திரத் தொடர் போல வந்தால் போரடிக்குமோ என்ற எண்ணம்தான். நான் பார்த்தவைகளையும் இங்கு பகிர்ந்துகொள்ளலாமே என்ற எண்ணம்தான்.

      நீக்கு
  4. நீர்க்குமிழி அலங்காரம் சூப்பர். நெட்டை மனிதர் பொம்மைன்னு தெரியுது

    அந்த நெட்டை மனிதரின் இடுப்பளவிற்குதான் நான் இருப்பேன் என்று நினைக்கிறேன் நினைத்துப் பார்த்ததும் புன்சிரிப்பு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயரமாக இருக்கணும் என்று பலருக்கும் ஆசையிருக்கும். ஆறு அடிக்கும் குறைவாக, 5 1/2 அடிக்கும் மேலாக ஆண் இருப்பது அழகு. அதற்கு மேல் என்றால் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.எங்கள் வளாகத்தில் ஒரு பெண் ஆறடிக்கும் அதிக உயரம் (35 வயது)

      நீக்கு
  5. பல்குத்தும் குச்சிகளால்//

    நம்ம ஊரிலும் வைக்கோலால், தேங்காய் நாரால் செய்யப்படும் ஓவியங்கள், பொம்மைகள் பிரமாதமாக இருக்கும். அதே போன்று உடைந்த கண்ணாடித் துண்டுகள், என்று... மரக் குச்சிகள் சின்ன கிளைகள் என்று...

    நம் ஊரில் இதுக்கு பொருட்காட்சி உண்டா?

    கைவினைக் கலைஞர்கள் செய்து வைப்பதை வெங்கட்ஜி பகிர்ந்ததுண்டு அவர் தளத்தில்.

    எங்கள் கல்லூரியில் wealth from waste என்று ஒரு போட்டி வைப்பதுண்டு அதுவும் எங்கள் துறை பொருளாதாரம் என்பதால் இவங்கதான் அதை நடத்துவாங்க. நிறைய செய்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பற்றியும் புதிய பதிவுத் தொடரில் வரும். மேலைக் கலைஞர்களின் படைப்புகளுக்கு பெரிய சந்தை உள்ளது. ஜெய்ப்பூர் ஓவியங்கள் மிகச் சிறியவை, நுண்ணிய படைப்புகள். அதற்கான சந்தை வரும்போது மிகப் பிரபலமாக்க்கூடும்.

      நீக்கு
  6. பல்குத்தும் குச்சியால் செய்யப்பட்ட ஜூடாஸ் சிற்பம் மிக அருமையாக இருக்கு. ஜூடாஸ் பற்றிய விவரம் பள்ளியில் அறிந்ததுண்டு.

    குதிரை வாவ்! பாய்ச்சலில் பறப்பது போன்று!!!!

    திபெத்தில், இறந்த முன்னோர்களின் எலும்புகளை வைத்து ஆபரணங்கள் செய்து அணிந்துகொள்வது,//

    காசியிலேயே அகோரிகள் அப்படித்தான் அணிவார்களாம். டைரக்டர் பாலாவுக்கும் அவங்க அப்படிச் செய்ததைக் கொடுத்து அவர் அணிந்திருப்பதைப் பேட்டியில் சொல்லியிருந்தார்.

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னோர்களின் எலும்புகளை உபயோகப்படுத்துவது ஆப்பிரிக்கப் பழங்குடியினரிடமும் உண்டு. திபெத்தைப் போல கலை நயம் கிடையாது.

      நீக்கு
  7. இந்த மண்டையோட்டு முகமூடி மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தீர்களா?//

    அழகு.

    வெறுப்பாக எலலம் இல்லை. அது நம் மனதைப் பொருத்துதான். கலையாகப் பார்க்கும் போது.....இதே போல தீட்டப்படாத மண்டை ஓட்டை ஒரு காளியோ யாரோ கையில் வைத்திருப்பது போன்று உண்டே படங்கள்...காளிக்கு மண்டை ஓடு மாலை அணிவிப்பது உண்டே! அப்போது தோன்றாதது இப்ப தோன்றுமா? அது தெய்வம் என்று பார்ப்பதால்? ஸோ எல்லாம் நம் மனசுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுவுமே நம் மனதைப் பொறுத்ததுதான். நாம் எப்படி அதனை உள்வாங்குகிறோம் என்பது முக்கியம்.

      நீக்கு
  8. ear drum - செவிப்பறை! செவிச்சவ்வு

    திமிங்கலத்தின் காதில் உள்ள இப்பகுதியைக் கூட வைச்சிருக்காங்களா!! ஆச்சரியம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு அதனைப் பார்க்கும், தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லையே

      நீக்கு
    2. திமிங்கிலம் தன் இறப்பு நேரம் வரும்போது, தண்ணீரின் மேலே உயரமாக எழும்பி பொத்தென்று தண்ணீரில் விழுந்து அப்படியே ஆழ்கடலின் தரையை நோக்கிச் சென்று இறந்துவிடுமாம்.

      நீக்கு
    3. திமிங்கிலத்தின் மரணம் ஒரு ஆச்சர்யம்.  அதற்கு தன் மரண நேரமும் உணர முடிவதே பெரிய ஆச்சர்யம்.

      நீக்கு
    4. பறவைகளுக்கும் சில விலங்குகளுக்கும் அப்படியே. மனிதர்களில் பலருக்கும் தனக்கு இறப்பு வருகிறது என்பது தெரியுமாம், குறைந்தபட்சம் ஓரிரு நாட்கள் முன்பு.

      நீக்கு
    5. ஆமாம் நெல்லை திமிங்கலம் பற்றி ஒரு டாக்குமென்டரி பார்த்தப்ப இந்த விஷயம் தெரிய வந்தது. ஆச்சரியப்பட்டேன்.

      கீதா

      நீக்கு
  9. ஐந்து கால் தவளை - மனுஷனுக்கும் ஆறு விரல்கள் சிலருக்கு இருக்குமே.....

    கம்பளி நூலால் செய்யப்பட்டிருக்கும் கார் அசத்தல் ரொம்பவே கவர்கிறது.

    மூன்று சக்கர கார் ரொம்பவே உபயோகம் இப்ப என்று தோன்றுகிறது. ஆனா பின்னாடி ஒரு சக்கரத்துக்குப் பதிலா முன்னாடி வைச்சா ஆட்டோ போலாகிடுமோ!!!!!

    பெரிய நாற்காலி கண்டிப்பா எனக்கு ஏணி வேண்டும்! படி வைச்சிருக்கறது நல்லா இருக்கு. முன்ன காலத்துல ராஜா ராணி பயன்படுத்தியிருப்பாங்களோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய நாற்காலி, நான் மற்றவர்களைவிடப் பெரியவன் எனக் காண்பிக்க. அரசர்கள் உபயோகித்திருக்கணும். இப்போ இருக்கும் டிராபிக்குக்கு, சிறிய கார்கள் இன்னும் இடைஞ்சல்.

      நீக்கு
  10. இயற்கைக்கு மாறாக இருக்கும் காய்களை நான் வாங்குவதில்லை//

    இரட்டை வாழைக்காய்....அதுவும் இயற்கைதானே நெல்லை? அதில் எந்த வித பயமும் கிடையாது. அது போலத்தான் கத்தரிக்காய் கூட சிலப்போ இரட்டை பார்க்க முடியும். நமக்கு அது மனதில் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியிருப்பதால் அப்படித் தோன்றுகிறது.

    அறிவியல் படி அவை பாதுகாப்பானதுதான்.

    கொசுறு - சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிவது ஆயுர்வேதத்தின் படி நலல்து இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரட்டை வாழை, கத்தரி போன்றவற்றில் தவறு இல்லையா? ஜீன் மாற்றம் நிகழாமல் எப்படி அவை உண்டாகும்? அவை நமக்குக் கெடுதல் இல்லையா?

      நீக்கு
    2. இல்லை நெல்லை அப்படித்தான் ஒரு அரங்கில் அறிவ்யல் படிச் சொல்லிக் கேட்டேன். நான் படிக்கும் காலத்தில் எனக்கு அக்ரிகல்சுரல் எக்கனாமிக்ஸ் பாடம் உண்டு. என் ஆசிரியையின் கணவர் வேளாண்மைத் துறையில் டாக்டரேட். அப்போது நம்ம வீட்டின் பின்புறம் வாழை கத்தறி எல்லாம் காய்க்குமே அதில் இரட்டை வந்தப்ப அவரிடம் கேட்டப்ப சொன்னது. அப்ப அவர் எங்கள் கிராமத்தில் விவசாயப்பண்ணை இருந்ததே. மண் பரிசோதனை மையமும் இருந்தது. அது இப்ப பக்கத்துக் கிராமத்தில் பீமநகரிக்கு மாறிவிட்டது.

      அப்ப என்ன கெமிக்கல் போட்டோம்? ஒன்னும்கிடையாது.

      கீதா

      நீக்கு
    3. அவர் எங்கள் ஊர் விவசாயப்பண்ணையில் வேலை செய்தார் ஒரு வருடம் என்று நினைவு.

      கீதா

      நீக்கு
    4. பிடி கத்தரி, ஜீன்கள் மாற்றப்பட்ட காய்கறி பழங்களால் ஆபத்து இல்லையா?

      நீக்கு
  11. பிறப்பால் ஏற்படும் சில சங்கடங்கள் உள்ள படங்களில் பசு மட்டுமல்ல, எல்லா விலங்கினங்களுமே மனதிற்கு கஷ்டமாக இருந்தது பாவமாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்சியப்படுத்தியிருந்தாலும், பார்க்கும்போது பாவமாகத்தான் இருந்தது. இறைவன் கொடுக்கும் தண்டனையோ?

      நீக்கு
  12. அலிபியஸ் உயரம், பாட்டில் மூடியில் Michelle Obama (தமிழில் இதை எழுதவில்லை காரணம் அது மஹாராஷ்டிராவின் ஒரு உணவின் பெயரின் உச்சரிப்பு கிட்டத்தட்ட!!!!!! ஹாஹாஹா)

    வண்ணத்துப் பூச்சிகள்னா? அவை மடிந்த பிறகு அதைப் பாதுகாத்து செய்யப்பட்டதா?

    தட்டச்சு விசைகளினால் (இதுதானா Key board switch க்குத் தமிழ்?) வரையப்பட்ட ஆப்ரஹாம் லிங்கன்.//

    இதுகொஞ்சம் பரவலாகப் பலரும் செய்வது ஆனால் அது ரொம்பப் பரவலாக இல்லாத காலத்தில் செய்திருப்பதால் கொஞ்சம் அதிசயமாக இருக்கலாம்.

    கேத் மிடில்டன் அவர்களை ஒரு ஓவியர், உதட்டுச் சாயத்தால் கேன்வாஸில் முத்தம் கொடுத்தே உருவாக்கிய ஓவியம். //

    அட!!!!!

    எல்லாமே ரொம்ப ரசித்தேன் நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்ததற்கு மிக்க நன்றி. ஶ்ரீராம் ஒருவேளை நான் உதட்டுச் சாயத்தினால் வரையப்பட்ட ம்மிதா பைஜு படத்தைப் போட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாரோ?

      நீக்கு
    2. ஒரு டெஃபமேஷன்  போடலாமா என்று யோசிக்கிறேன்!!

      நீக்கு
    3. ஏற்கனவே உங்களுக்கு அலைச்சல் ஜாஸ்தி. இதுல, வக்கீல்கிட்ட (அல்லது டாக்டர் கிட்ட) மாட்டினால் ஏண்டா போனோம் என எண்ணும் அளவு அலைய விட்டுருவாங்க ஶ்ரீராம்.

      நீக்கு
    4. நெல்லை, படம் தான் வரையணுமா என்ன? கவிதையிலேயே படம் வரைந்தவர் நம்ம ஸ்ரீராம்!!!!

      கீதா

      நீக்கு
    5. ரசிக்கும் மனது கொண்ட ஶ்ரீராமுக்கு கவிதை வருவது ஆச்சர்யமா என்ன?

      நீக்கு
  13. (எங்கள் பிளாக்லயும் இருக்காங்க.. அனுஷ்கா பிடிக்கும், தமன்னா பிடிக்கும், பாவனா பிடிக்கும்னுட்டு. இப்படி ஏதாவது முயற்சி பண்றாங்களா?)//

    ஹாஹாஹாஹா உங்களையும் சேர்த்துத்தானே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தத் தமன்னா இப்போ இருந்திருந்தால் முயற்சித்திருக்கலாமோ?

      நீக்கு
    2. நான் முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கேன்..  இன்னும் உருவமா வரலை!!!

      நீக்கு
    3. நெல்லை, இப்பவும் நல்லா இருக்காங்க லேட்டஸ்ட் பார்க்கலையா ஒரே ஃபோட்டோஸா வருதே!!!

      ஸ்‌ரீராம், சிரித்துவிட்டேன்!!!!

      கீதா

      நீக்கு
    4. //இப்பவும் நல்லா இருக்காங்க லேட்டஸ்ட் பார்க்கலையா// தெய்வம் என்றால் அது தெய்வம்..வெறும் சிலை என்றால் அது சிலைதான். உண்டு என்றால் அது உண்டு. இல்லை என்றால் அது இல்ல்ல்லை...

      நீக்கு
  14. படங்களும் தகவல்களும் நன்று.....

    எங்கள் பிளாக் - முத்த ஓவியம்...... அட..... என்னவொரு ஆசை..... 😀

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். ஓவியரின் முயற்சி வியக்க வைத்தது. நன்றி

      நீக்கு
    2. நான் எழுதி இருந்த முத்தாக கவிதையை அல்லது கவிதைகளை நினைவுகூராமைக்கு எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

      நீக்கு
    3. முத்தக் கவிதைகள் எழுதியிருந்தீர்களா என்ன ஶ்ரீராம்.? தமன்னா உதடு சேராமை, சதுரம் என்றெல்லாம் சொல்லி கோடிக்கணக்கான (ஹா ஹா ஹா) ரசிகர்களைக் காயப்படுத்திட்டீங்களே

      நீக்கு
    4. நெல்லை மறந்டுட்டீங்களா!!!!! ஸ்ரீராம் ஒரு முத்தக் கவிதை எழுதியிருந்தாரே!!! கூடவே பல கவிதைகளை ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல முத்தாகவே வரைவந்துண்டே!!!!

      கீதா

      நீக்கு
    5. நன்றி கீதா... உங்களுக்கு பரிசாக

      பரிசாக

      பரிசாக...


      ஒரு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி கொள்ளுங்கள்.

      நீக்கு
    6.  இங்கு பதிவைப் படித்து விட்டு பேஸ்புக் சென்றால், மிகுந்த ஆச்ச்ர்யமாக மெமரீஸ் பகுதியில் இது வந்திருந்தது.  கொண்டு வந்து விட்டேன்.  நான் எழுதிய மு கவிதைகளில் ஒன்று...

      A

      முத்தத்தில் நின்னு
      முத்தம் கொடுத்தா
      சத்தமும் கேட்கும்
      மொத்த ஜனமும் பார்க்கும்..
      மெத்தை எல்லாம் பாழாப்போகுது
      சித்த உள்ள வாடி..

      நீக்கு
    7. கவிதை நன்று. புது மணத் தம்பதியின் அவசரத்தை உணரமுடிகிறது. அது சரி.. முற்றம் உள்ள வீட்டில் வாழ்ந்திருக்கிறீர்களா?

      நீக்கு
    8. நாகையில் என் தாத்தா பாட்டி வீடு (கேஜிஜி இருந்த வீடுகள்) மற்றும் என் அப்பாவின் மாமா வீடு சேங்காலிபுரத்தில் என்று இவ்வகை வீடுகளுக்கு சென்று தங்கி இருக்கிறேன். சேங்காலிபுரத்தில் அந்த வீடு இன்னும் அப்படியே இருக்கிறது.

      நீக்கு
    9. எசப்பாட்டு.

      முத்தத்தில் நிறுத்தி
      முத்தமழை பொழிந்தேன்
      சத்தம் கேட்டால் என்ன
      மொத்த பேரும் பார்த்தால் என்ன
      ஐந்து வயது பேத்தி பொன் குஞ்சு.

      Jayakumar

      நீக்கு
    10. //இவ்வகை வீடுகளுக்கு சென்று தங்கி இருக்கிறேன்.// - கூர்க்கில் இத்தகைய இடத்தில் தங்கினேன். தங்கியிருந்த நாட்களெல்லாம் தூரல், மழை என்று இருந்தது. முற்றத்தில் நீர் விழுந்தது, அதன் சப்தம், வாசனை என்று எல்லாவற்றையும் ரசிக்க முடிந்தது. ஒரு நாள் படங்கள் பகிர்கிறேன்.

      நீக்கு
    11. //ஐந்து வயது பேத்தி பொன் குஞ்சு.// - ஒரு வருடம் முன்பு இங்கு வளாகத்தில் நடந்தது. சிறிய குழந்தைகள் இரண்டு (3 வயது இருக்கலாம்). வளாகத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது அதில் ஒரு குழந்தை தடுக்கி விழுந்துவிட்டது. நடந்துகொண்டிருந்த எனக்கு பதட்டமாகி, குழந்தைக்கு உதவி செய்ய யத்தனித்தபோது, 'நஹீ' என்று அது சொல்லி, அதுவே எழுந்து நடக்க ஆரம்பித்தது. இப்போதுள்ள ஜெனெரேஷனுக்கு தாத்தாவின் முத்தத்தை ஏற்றுக்கொள்ளும் பொறுமை இருக்கிறதா என்ன?

      நீக்கு
  15. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்றைய ஞாயறு பதிவு நன்றாக உள்ளது. ஞாயறில் லண்டன் மியூசியம் பதிவு வித்தியாசமாக அமைந்துள்ளது மகிழ்ச்சி. அலாரம் அடிக்கும் கடிகாரமே ஒரு வித்தியாசமே..! ஆம். எழுந்த பின் மறுபடி படுக்கப் பிடிக்காது.இந்த அலாரம் கண்டு பிடித்தவருக்கு ஒரு பாராட்டுக்கள்.

    அங்கு நுழைவாயிலில் உள்ள உயரமான மனிதரின் பொம்மை, குண்டூசி சிற்பம், பல் குத்தும் குச்சிகளால் செய்யப்பட்ட உருவமென அனைத்துமே நன்றாக உள்ளது.

    பிறவியிலேயே கால்கள் அளவுக்கு அதிகமாக, உருவம் மாறுபாடான அமைந்த விலங்குகள், மனிதர்களை பார்க்கும் போது மனதுக்குள் வருத்தம் வரும். நம்மை இந்தப்பிறவியில் ஒழுங்காக படைத்த அந்த இறைவனுக்கு ஒரு நன்றியை மனது சொல்லும்.🙏. நாமும் இதற்கு முந்தைய பிறவிகளில் எப்படியெல்லாம் இருந்து வந்திருக்கிறோமோன்னு மனது நினைத்துப் பார்க்கும். அந்த நிமிடம் மன சஞ்சலத்தில் இறைவனுடன் மிக நெருங்கியிருப்போம். எல்லாம் வினைப்பயன் என்றாலும், இவைகளைப் பார்க்க மனது இடங்கொடுப்பதில்லை.

    இரட்டையாக ஒட்டிய பழங்கள், காய்கறிகளும் பார்க்கவே சங்கடந்தான். ஆனால், 60 வயதை கடந்தவர்கள் (ஆண், பெண் இருபாலாரும்) இதை தைரியமாக சாப்பிடலாமென கூறுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு இனி குழந்தை பேறுக்கு சந்தர்ப்பம் இல்லை என்பதால். இதுபோலுள்ள காய்களை, பழங்களை சாப்பிட்டால் மனிதர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் என்பது ஒரு மூடநம்பிக்கையா , உண்மையா என்பதும் தெரியவில்லை. ஆனால், மனதில் ஏற்படும் அச்சந்தான் ஒரு விளைவுகளுக்கும் காரணமாகிறது என்பது உண்மை.

    ஏனைய படங்களும் மிக வித்தியாசமாக உள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிறவி மாறுபாடுகளைக் காண சங்கடமாக இருக்கும். இன்னும் சங்கடமான பகுதிகள் இந்தத் தொடரில் வரும்.

      இரட்டையாக ஒட்டியவைகளை இப்போதும் நான் வாங்குவதில்லை. மனதுதான் காரணம்.

      ரசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  17. இன்று புது வீட்டுக்கு பெயர்வு... பிறகு சந்திக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புது வீடு வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் துரை செல்வராஜு சார். வாழ்த்துகள்.

      நீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. எந்த ஊராயிருந்தாலும் அதிகாலை எழுந்து விடும் பழக்கம் மிக மிக பாராட்டத்தக்கது.  அலார்ம் ஐடியா சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீக்கிரம் எழுந்தால், நிறைய நேரம் கிடைக்கும். சமீப வருடங்களில் நடைப்பயிற்சிக்காக வெகு சீக்கிரம் எழுந்துவிடுகிறேன், பிரயாணங்களின்போது.

      நீக்கு
  20. புது வீட்டில் எல்லா நன்மைகளும் இறைவன் அருளால் கிடைக்கட்டும்
    வாழ்த்துகள், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  21. ரிப்ளி நம்பினால் நம்புங்கள் புத்தகமாக லைப்ரரியில் பார்த்திருக்கும் நினைவு.  இன்றைய பகுதியில் பெரிய ஆச்சர்யம் எதுவும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அங்கு போயிருந்தபோது பெரிய ஆச்சர்யம் எதுவும் ஏற்படலை. காசு வேஸ்ட் என்ற எண்ணம்தான் தோன்றியது. ஆனால் மேடம் துஸ்ஸாட் மியூசியம் அப்படியல்ல

      நீக்கு
  22. கிளிக்கூண்டில் சிறை இருந்த எகிப்தியர்...   உயரமும் சிறைக் கூண்டும் ஆச்சர்யம்.  உணவாக நெல்மணிகள்தான் கொடுத்திருப்பார்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றுதான் பேரழகன் நகைச்சுவைக் காட்சிகள் பார்த்தேன். அந்த சிநேகாவிடம்தான் உங்கள் கேள்விக்கான பதிலைக் கேட்கணும்.

      நீக்கு
  23. பயணத்தில் பார்த்த மியூசியம் படங்கள், மற்றும் தகவல்கள் அருமை.
    என் அப்பாவும் எந்த ஊர் மாற்றல் ஆகி போனாலும் அந்த ஊரின் கோயில் மற்றும் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து விடுவார்கள். நாங்களும் அப்படி எந்த ஊர் பேனலும் முடிந்தவரை பார்த்து விடுவோம்.

    நம்பினால் நம்புங்கள்’ மியூசியத்தின் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. அதியசங்கள் நிறைய இருக்கிறது இறைவன் படைப்பின் அதிசயங்களை சொல்கிறேன். அவைகள் வாழும் காலம் கடினமாக இல்லையென்றால் பரவாயில்லை சிரமத்துடன் எப்படி வாழமுடியும்? வாழ்ந்நு இருக்கும்?

    அலாரம் எழுந்து கொள்ளவில்லை என்றால் பறந்து வந்து நம் மேல் விழுமா அதை எடுத்து மாட்டினால்தான் அலாரம் நிற்கும் என்றால் அதை வேலைசெய்யவிடாமல் செய்து விட்டு தூங்குவார்கள் இப்போது உள்ள புத்திசாலி குழந்தைகள்.

    அலாரம் அடிக்கவில்லை என்றாலும் உடலுக்குள் உள்ள அலாரம் எழுப்பி விட்டு விடுகிறது. உடல் சற்று நேரம் ஓய்வு எடு என்றாலும் காலை வேலைகள் எல்லாம் கெட்டுவிடும் எழுந்துதான் ஆக வேண்டும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் காலையில் சீக்கிரம் எழுந்துகொள்ள வேண்டுமானால், அலார்ம் இல்லாமலேயே தானாக முழிப்பு வந்துவிடும். அதுபோல ஓரளவுக்கு மேல் என்னால் தூங்க முடியாது. வெகு அபூர்வமாக வாழ்க்கையில் ஓரிரு முறைகள் காலை எட்டு மணி வரை தூங்கியிருக்கிறேன். அந்த நாளே சரியாக வராது.

      நீக்கு
  24. ஓவியங்களை ரசித்தேன் வண்ணத்துப்பூச்சியால் கென்னடி ஓவியம் அருமை.
    மேலும் உயர்தமனிதர், பாய்ந்து ஓடும் குதிரை நீர்குமிழி அலங்காரம், உயர்ந்த சேர் மாயோனின் நாற்காலி போல இருக்கு

    பதிலளிநீக்கு
  25. வித்தியாசமான மியூசியம்.

    படங்களும் நன்று.

    அதிசய மிருகங்கள் கண்டோம். அவற்றின் பிறப்பு , வாழும் சிரமம் , நினைத்தால் பரிதாபம்.

    ஓவியங்கள் நன்றாக இருக்கின்றன.

    ஹா....ஹா.... தமன்னா அனுஷ்கா ஓவியங்கள் எங்கள் ப்ளாக்கில் வந்தாலும் வரும்.:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள்.

      நானும் ஸ்ரீராமும் எப்போதும் ஒரே சொல்தான். பேச்சு மாறமாட்டோம். எங்களுக்கு எவ்வளவு வயசானாலும் தமன்னா, அனுஷ்கா விடமிருந்து மாறிவிட மாட்டோம் (இருந்தாலும் என்னைப்பற்றி எனக்கே ஒரு டவுட்டு)

      பிறப்பு, வாழும் சிரமம்.. ரொம்பவே பரிதாபம்தான். நன்றி

      நீக்கு
  26. /// புது வீடு வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் துரை செல்வராஜு சார். வாழ்த்துகள்.. ///

    தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  27. படங்களை இரசித்தேன் தமிழரே....
    இதில் குதிரை படத்தை எனது தளத்தில் உபயோகப்படுத்தி இருக்கிறேன். தற்போதுதான் தெரிந்தது இது லண்டன் மியூசியம் என்பது தகவல்கள் சிறப்பு. தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி... இதம்பாடல் வழியாகச் சென்றேன். பரமக்குடியைத் தொட்டுச் சென்றேன். உங்களை நினைத்துக்கொண்டேன். நலமா?

      நீக்கு
  28. புத்தம் புதுசு போல்
    முத்தின வயசில்
    சித்தம் கலங்கி
    பித்தம் தலைக்கேறி
    பத்தும் பறந்து போய்
    மொத்த சபை முன்
    சத்தம் வர
    முத்தம் கொடுத்தால்
    கொத்தும் உதடோ
    ஒத்தும் உதடோ
    பொத்தும் உதடோ
    கத்தும் கிடைக்கும்
    மொத்தும் கிடைக்கும்
    குத்தும் கிடைக்கும்
    மொத்தத்தில் சோலி
    சுத்தம், வாத்யாரே ;-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க திருவாழ்மார்பன். ஆன வயசுக்கு அடையாளம் தெரியாமல், எப்பவோ கொடுக்கவேண்டியதை இப்போ கொடுத்தால், மொத்தத்தில் மொத்துதான் கிடைக்கும்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!