16.11.25

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 32 :: நெல்லைத்தமிழன்.

 

 தஞ்சை பெருவுடையார் கோயில்

உலக பாரம்பர்யச் சின்னங்கள் என்று யுனெஸ்கோ சிலவற்றை அங்கீகரிக்கிறது, அவற்றை எதை வைத்து அறுதியிடுகிறார்கள் என்பது சில நேரங்களில் வியப்புக்குரியதாக இருக்கிறது.  உதாரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர், சுந்தரவனக் காடுகள் என்றெல்லாம்  அவர்கள் பாரம்பர்யச் சின்னமாகச் சொல்லும்போது, இயற்கையை எப்படி பாரம்பர்யச் சின்னங்களாக அறிவிக்கமுடியும் என்று தோன்றுகிறது  தாலிபான்கள் பாமியன் புத்தர் சிலைகள் என்று ஆஃப்கானிஸ்தானில் உள்ள பாமியன் மலைத்தொடர்களில் மனிதர்களால் செய்யப்பட்டவற்றை மதவெறியில் அழித்தபோது யுனெஸ்கோவினால் ஒன்றும் செய்ய இயலவில்லை. 

என்னைக் கேட்டால் மனித யத்தனத்தினால் செய்த சாதனைகளை மாத்திரம், அதுவும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருந்தால் மாத்திரம் உலக பாரம்பர்யச் சின்னங்கள் என்று அறிவிக்கவேண்டும். இயற்கையாக உள்ளவற்றை பாரம்பர்யச் சின்ங்கள் என்று அறிவிப்பது தேவையில்லாத வேலை. உண்மையை ஒத்துக்கொள்ளும் தைரியம் இருப்பவர்களுக்கு, ‘உலக பாரம்பர்யச் சின்னமாக’ அறிவிக்கும் தகுதி கொண்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கோயில்கள் நூற்றுக்கணக்கில் இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் உண்டு (இந்தியா என்று குறிப்பிடும்போது அகண்ட பாரதத்தின் பகுதியாக இருந்த பாகிஸ்தானையும் உள்ளடக்கியதுதான். ஆனால் அங்கு இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்ட, அழிந்த நிலையில் உள்ளன). இந்தியாவை விட்டால் நாம் சீனாவைக் குறிப்பிடலாம். இதைத் தவிர என் நினைவுக்கு வருபவை, உரோமப் பேரரசும், பாரசீகமும், எகிப்தியப் பேரரசும்தான்.

இன்றுடன் தஞ்சை பெரியகோயில் பற்றிய பதிவு நிறைவு பெற்றுவிடும். ஒரு சில படங்களையே நிறைவுப் பகுதியில் கொடுத்துள்ளேன்.

தஞ்சைப் பெரிய கோயில் செல்லவேண்டும் என்றால், வாரப் பகுதியில் (வார இறுதியில் அல்ல) வெயில் குறைந்த அதிகாலையில் சென்றுவிடவேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு பகுதியாக நாம் ரசித்துக் காண முடியும். புகைப்படங்களையும் எடுக்க முடியும். மதியம் நடப்பது கடினம். கூட்டம் அதிகமாகிவிட்டால், ரசிப்பதும் புகைப்படங்கள் எடுப்பதும் கஷ்டமாகிவிடும். 






தஞ்சைக் கோயிலை நாம் பார்ப்பதற்கு பாண்டிய மன்னனும் ஒரு முக்கியக் காரணம். சோழர்கள் மாளிகை, அரண்மனை போன்ற பலவற்றையும் முழுவதுமாக இடித்து இருந்த இடமே தெரியாமல் ஆக்கிய பாண்டியன், கோயில்களுக்கு ஒரு சேதத்தையும் விளைவிக்கவில்லை. தஞ்சை பெரிய கோயிலிலேயே அம்மனுக்கான கோயிலைக் கட்டியவன் பாண்டிய மன்ன ன். இதுதான் நம் மண்ணின் மரபு.  வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்தவர்களுக்கு இந்த மண்ணின் பாரம்பர்யம் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கொள்ளையடிப்பது, அடுத்தவர்கள் மதத்தைச் சார்தவைகளை அழித்தொழிப்பது, அதனைத் தங்கள் தொழுகைக்கான இடமாக மாற்றுவது, சமாதிகளைக் கட்டுவது போன்றவைதான். இதற்கு முக்கியக் காரணம் அவர்களிடம் கலாச்சாரம் பண்பாடு போன்றவை இல்லாததுதான்.  நம் பண்பாட்டில், இம்மை மறுமை, மறுபிறப்பு, பாவம் புண்ணியம் போன்று இருக்கின்ற முறைகள் ஓரளவு நமக்கு ஒழுக்க நெறியைக் கற்றுக்கொடுக்கின்றன. வாழ்வில் ஒழுங்காக நடந்துகொள்ள மதம் மற்றும் அதன் நெறிகள் தேவை என்றால் பாரதத்தைத் தவிர வேறு எங்கு அவற்றைக் காண முடியும்?

இராஜராஜனின் பள்ளிப்படை

தஞ்சை பெருவுடையார் கோயிலை விட்டுக் கிளம்புகிறோம். அதன் தொடர்ச்சிக்குப் போவதற்கு முன்பு, இந்த இடத்திலேயே இராஜராஜன் பள்ளிப்படை என்று சொல்லப்படும் இடத்தைப் பற்றியும் பார்த்துவிடுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  (நான் ஜூன் 2022லும் ஆகஸ்ட் 2024லிலும் அங்கு சென்றிருக்கிறேன்). மிகப்பெரிய சோழ சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்திருந்தாலும் ராஜராஜனின் பெயர் அவனுடைய பொதுநலத்தாலும், அனைவரும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் வியந்து பார்க்கும்படியான ராஜராஜேச்வரத்தைக் கற்பனை செய்து அதனை தஞ்சையில் கட்டியதாலும்தான் இப்போதுவரை புகழுடன் இருக்கிறது.

அப்படிப்பட்ட மன்னனின் பள்ளிப்படை இருந்த இடத்தை நாம் காணவேண்டாமா?

அதற்குச் செல்லும் வழி மிகக் குறுகலாக உள்ளது. பள்ளிப்படை அமைந்திருக்கும் நிலமே ஒருவரின் குத்தகை நிலமாக இருந்து தற்போது பள்ளிப்படையைச் சுற்றியுள்ள இடம் மாத்திரம் விடப்பட்டிருக்கிறது.


தலையில் இரு பாதங்களுடன் (சிவபாத சேகரன்) தன் பெயருக்கேற்றபடி, உருத்திராட்ச மாலையுடன் காட்சி தரும் ராஜராஜ சோழனின் இந்தத் திருவுருவம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடீஸ்வரர் கோயிலின் முன் மண்டபத்தில் அமைந்துள்ளது (எத்தனை கோயில்களை இன்னும் நாம் காணவேண்டியுள்ளது)



சிறிய மண்டபம் கட்டி சிவலிங்கத்தை நேராக்கி வைப்பதற்கு முன்பு அவனுடைய பள்ளிப்படையின் நிலைமை. இந்த லிங்கத்தை நேராக வைப்பதற்காக இட த்தை ஐந்தடிக்கு மேல் தோண்டியும்  போய்க்கொண்டிருந்த தாம்.  பிறகு கயிறு கட்டி லாரியின் மூலம் ஓரளவு நிமிர்த்தியிருக்கிறார்கள். ஆவுடையார் இல்லை. ஆவுடையார் இல்லாமல் பல லிங்கங்கள் பல கோயில்களில் இருக்கின்றன. இந்தப் பகுதிகளிலும் நீங்கள் அவற்றின் படங்களைப் பார்ப்பீர்கள்.

ஆனால் இதுதான் ராஜராஜனின் பள்ளிப்படையா என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. அருகில் இருக்கும் பால்குளத்தி அம்மன் கோயிலிலுள்ள தூணில் இருக்கும் கல்வெட்டுச் செய்திகளை வைத்து இராஜராஜனின் (சிவபாதசேகரனின்) திருமாளிகை பழுதுபட்டு அதனைப் பழுதுபார்த்த செய்தியைச் சொல்கிறது. அந்தத் திருமாளிகை சிவபாதசேகர மங்கலத்தில் இருந்தது என்று சொல்கிறது.  முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், முடிகொண்டான் ஆற்றுப் படுக்கையில் இருந்த ராஜராஜ சோழனின் பள்ளிப்படையைப் புதுப்பிக்கப்பட்டது என்று கல்வெட்டு உண்டு.  இந்த சிவலிங்கம் இருக்கும் ஊர் முன்னாளில் புவனமுழுதுடையாளூர் என்று மன்னனின் தேவியின் பெயரால் அமைந்திருந்தது.  அந்தப் பெயர் காலப்போக்கில் சுருங்கி உடையாளூர் என்று மாறிவிட்டதாம். எல்லாம் பழையாறையைச் சேர்ந்த பகுதிதான். ராஜராஜசோழன் தன் கடைசி காலத்தில் பழையாறையில்தான் வசித்தான் என்பதாலும், பால்குளத்து அம்மன் கல்வெட்டாலும் இதுதான் இராஜராஜசோழனின் பள்ளிப்படை இருந்த இடம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். (இன்னொன்று, ராஜராஜ சோழன் கடைசிக் காலத்தில் இருவரும் சேர்ந்துதான் சிவ தரிசனம், தானங்கள் செய்துவிட்டு வந்திருக்கிறார்கள்.  லோகமாதேவி இராஜராஜசோழன் மறைந்ததும் உடன்கட்டை ஏறியிருக்கிறாள்)

இந்த உடன்கட்டை ஏறிய செய்தியை எழுதும்போது சில விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. விலைபோன சுகி சிவம், ஒரு காணொளியில் தான் ஒருவனே authority என்று நினைத்து, தமிழர்கள் மரபு இடுகாடுதான், பிணத்தை எரிப்பது என்பது வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த ஆரியர்களால் கொண்டுவரப்பட்ட மரபு என்று பேசியிருக்கிறார். அதையும் கேட்கும் கூட்டம் கைதட்டுகிறது. ஒருவராவது எழுந்து, என்ன இந்த உளறல் பேச்சு என்று கேட்கும் தைரியமோ அல்லது படிப்போ பெற்றிருக்கவில்லை என்பது எனக்கு வியப்பைத் தருகிறது. பண்டைய இலக்கியங்களில் சுடுவதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். ‘தோடுடைய செவியன்’ கூடப் படித்திராத ஒருவர் இந்து மதத்தைப்பற்றி எல்லாம் அறிந்தவர் போலப் பேசுவது, அவர் விலைபோனதைத்தானே குறிப்பிடுகிறது?  இராஜராஜசோழனின் தாய் உடன்கட்டை ஏறியிருக்கிறாள் (சுந்தரச் சோழனுடன்). தமிழில் சுடுகாடு, இடுகாடு என்று இரண்டும் உண்டு. எரித்ததைப் பற்றி புராணங்களும் இதிஹாசங்களும் பேசுகின்றனர். இந்த மாதிரி புல்லுருவிகளுக்கு ‘சொல்லின் செல்வர்’ என்று பட்டம் கொடுத்தவர்கள் அவர்கள் முகத்தை எங்குபோய் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. பள்ளிப்படையையும், இறந்தவரைப் புதைத்து அதன் மீது சிவலிங்கத்தை அமைத்து கோயிலாக்குகிறார்கள் என்று சொல்வர். அதற்கும் ஆதாரம் கிடையாது. இறந்தவர்களின் சாம்பலை (அத்தியை) ஒரு பாத்திரத்தில் இட்டு, அதன் மீது ஒரு பலகையிட்டு அதன்மீதுதான் இலிங்கம் அமைத்து கோயில் கட்டும் மரபு இருந்திருக்கிறது. அப்போ பண்டைய தமிழரின் ‘தாழி’ என்பது என்ன? என்னுடைய புரிதலின்படி, மிகப் பழைய தமிழ்க் குடிகள், இறப்பு வராமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பவரை, ஒரு தாழியில் இட்டு, அந்தத் தாழியிலேயே ஒரு சில நாட்கள் உணவும் தண்ணீரும் இட்டு வைத்துவிடுவதுதான் வழக்கம். இறந்தவர்கள் எல்லோரையும் தாழியில் இட்டுப் புதைத்தார்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.

அதுவும் தவிர, ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் என்பதற்கு ஒரு வரலாற்று ரீதியான ஆவணமும் கிடையாது. இந்த சப்ஜெக்டுக்குள் சென்றால் அதில் நிறைய விவாதக் கருத்துகள்தாம் வரும். ஆனால் ஒருவரும் வரலாற்று ஆதாரத்தைக் காண்பிக்க மாட்டார்கள். இதனை எதிர்த்து விவாதம் புரிந்தால், அதற்கு மேல் அவர்களுக்கு வாதம் செய்ய வரலாறு துணை வராது. ‘ஆரிய’ என்ற பதத்திற்கு அர்த்தம் ‘தலைவனே’, ‘மேன்மை பொருந்தியவனே’ என்பது. இராமாயணத்தில் இராமனை சீதை விளித்துச் சொல்லும்போது ‘ஆர்ய’ என்ற பதம் வருகிறது. மற்றபடி ஆரியபட்டா போன்ற பெயர்களைத் தவிர ஆரிய என்ற வார்த்தை எங்கே வருகிறது?





ஆணவத்துடன் தஞ்சைக் கோயிலை மிதிக்கும் அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்வை முடிக்கும் சோழ மன்னன் இராஜராஜ சோழனின் பள்ளிப்படையில் அவனது அஸ்தியின் மீது வைக்கப்பட்டுள்ள சிவலிங்கம்.  சிவலிங்கம் வெகு ஆழமாகச் செல்கிறது என்று சொல்கின்றனர்.

முன்பு இந்தப் பகுதியில் நிறைய சிதிலங்கள் இருந்தன என்றும் ஒவ்வொன்றாக வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டது, இங்கிருந்த தூண் ஒன்றுதான் பால்குளத்தி அம்மன் கோயிலுக்கும் சென்றது என்று சொல்கிறார்கள்.  பாண்டிய மன்னன் இந்தப் பள்ளிப்படையையும் அழித்தான் என்பதற்கெல்லாம் ஆதாரமில்லை.   அடுத்தமுறை உடையாளூரில் இருக்கும் கைலாசநாதர் கோயிலுக்குச் செல்லவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். இதுவும் இராஜராஜன்காலத்துக் கோயில்தான். இந்தக் கோயிலுக்கு சோழ மன்னன் நிறையச் செய்திருக்கிறான். 

இராஜராஜன் உருவாக்கிய தஞ்சைப் பெரியகோயில் பற்றிப் பதிவுகளில் பார்த்த நாம், அவனுடைய பள்ளிப்படையுடன் இந்தப் பகுதியை முடிப்பது சாலப் பொருத்தமே.  இந்தப் பகுதியை முடிக்கும்போது எனக்கு 60களில் வந்த திரைப்படப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. (தத்துவப் பாடல்களையே வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீராம் போடாததன் காரணம் இன்னும் சின்னப் பிள்ளையாகவே இருப்பதா? எபி ஆசிரியர்களில் பலர், தத்துவப் பாடல்களில் உருகும் வயது கொண்டவர்களாக இருப்பரே. கொஞ்சம் சொன்னால்தான் என்ன?)

இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான் - அதை

இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி

பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி

இறந்தவனை - அப்படி


இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான் - அதை

இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்


தாயாரின் வேதனையில் பிறக்கிறான் - மனுஷன்

தன்னாலே துடிதுடிச்சு இறக்கிறான் - இடையில்

ஓயாத கவலையிலே மிதக்கிறான் - ஒரு நாள்

உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - அப்படி


இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான் - அதை

இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்


இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்

இன்பத்திலே சில நாள் துன்பத்திலே சில நாள்

அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்

கண்ணீர் சிந்திடவே கடைசி வழி ஒரு நாள் - அப்படி

இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான் - அதை

இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான். 

தஞ்சை கோவிலை ஓரளவு சுற்றிப் பார்த்த பிறகு வெளியில் வந்தோம். அங்கு திரு.ராஜா என்னும் இவரைச் சந்தித்தேன். இவர் சோழர் காலக் கோயில்கள் மட்டுமல்ல தென்னிந்தியக் கோவில்களுக்கான வழிகாட்டி. இவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர், எங்களை புள்ளமங்கை கோவிலுக்குச் செல்லச் சொன்னார். அங்கு அழகிய சிற்பங்கள் உண்டு என்றார் (இவர் வைத்திருந்த நாட்காட்டியில் அந்தச் சிற்பங்களின் படங்கள் இருந்தன). பல்வேறு நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களுடன் பயணித்து பல்வேறு கோவில்கள், சிற்பங்கள் பற்றி விளக்குவாராம். ஒரு முறை இவருடன் பயணித்த பலர், அவர்களது நண்பர்களுக்கும் இவரது தொடர்பு எண்ணைக் கொடுத்து வழிகாட்டியாக வரச் சொல்லுவார்களாம். நிறைய விஷயங்கள் தெரிந்த இவரைச் சந்தித்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

பிறகு பெருவுடையார் கோவிலிலிருந்து புறப்பட்டு மதிய உணவை முடித்துக்கொண்டோம். (தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் நல்ல சாப்பாடு கிடைப்பதில்லை. கும்பகோணம் விதிவிலக்கு.)  

அடுத்து நாம் பார்க்கப்போவது தஞ்சை சரபோஜி அரண்மனை மற்றும் மியூசியம். அதற்குப் பிறகுதான் நாம் வரலாற்று வழிகாட்டி திரு ராஜா அவர்கள் சொன்ன ஆலந்துறையார் கோயிலுக்குச் செல்லப்போகிறோம்.

குறிப்பு : 

இந்த தொடரின் அடுத்த பகுதி 33 நெல்லைத்தமிழன் எழுதியுள்ள சிறிய 3 வாரத் தொடருக்குப் பிறகு மீண்டும் தொடரும். 

clue : 

Ripley's Believe It or Not!

76 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். காலைப் ப்ரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய தஞ்சை கோவில், மற்றும் இராஜராஜசோழர் பற்றிய செய்திகள் நன்றாக உள்ளது. கோவில் படங்கள் எப்போதும் போல் அழகு. இராஜராஜசோழ மன்னரின் பள்ளிப்படை பற்றிய விபரங்களை படித்தறிந்து கொண்டேன். அவரின் பள்ளிப்படை படங்களும் நன்றாக உள்ளது. தத்துவங்கள் பற்றிய விசாரங்களுடன் , பொருத்தமான பாடலுடனும், இன்றைய பதிவை (பெருவுடையார் கோவில் பதிவை) நிறைவுறச் செய்தது சிறப்பு. இறுதியில் இறைவனடி கிடைப்பது பெரும் பாக்கியந்தானே..! இதன் தொடர்ச்சியாக அடுத்தப்பதிவையும் எதிர்பார்க்கிறேன். நடுவில் 3 வாரங்கள் நீங்கள் எழுதும் புதிய தொடர்பகுதியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளிப்படைக்கும் சென்றிருப்பதால் தொடர்ச்சியாக அதனையும் இந்தத் தொடரில் சேர்த்து எழுத முடிந்தது. வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. உதாரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர், சுந்தரவனக் காடுகள் என்றெல்லாம் அவர்கள் பாரம்பர்யச் சின்னமாகச் சொல்லும்போது, இயற்கையை எப்படி பாரம்பர்யச் சின்னங்களாக அறிவிக்கமுடியும் என்று தோன்றுகிறது //

    எனக்கும் இதே தோன்றும் நெல்லை. இது என்ன வகை என்று. சிரிப்பும் வந்தது.

    பாமியன் புத்தர் சிலைகளை தாலிபன்கள் 2021 ல் அவங்க தலைவர் ஒமர் அறிவுரைப்படி மதவெறியில் அழித்ததை வாசிச்சப்ப என்ன கொடுமைன்னு தோன்றியது. ஆனால் பாருங்க அதுக்குப் பிறகு அதுங்களுக்கு இப்ப அதெல்லாம் பாரம்பரியம்னு தோன்றியிருக்கிறது அவங்க பாரம்பரியத்தோடு இப்ப புத்த சிலைகளை மீண்டும் புதுப்பித்தும் இருப்பவற்றைக் காக்கவும் வேணும்னு சில மாதங்கள் முன்ன தோன்றியிருக்குன்னு செய்தியில் வாசித்த நினைவு.

    ஒரு வேளை இப்ப இந்தியாவோடு கொஞ்சம் நல்லிணத்துல (அவங்களுக்கு இந்தியாவின் மீதும் இந்தியத்தலைவர் மீதும் மரியாதை வந்திருப்பதாகச் சில சுற்றுலா பயணிகள் சொல்லியிருபப்தையும் வாசிக்க நேர்ந்தது. அதனால் பாரம்பரிய புத்தர் சிலைகளையும் ஸ்தூபிகளையும் பராமரிக்கணும் என்று தோன்றியிருக்காம்.!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கப் போனால் ஆஃப்கானிஸ்தானும் இந்தியாவும் வரலாற்று தொடர்பாக நல்ல ஒரு உறவு உண்டு ஆனால அது தாலிபன்களால் கொஞ்சம் சிதைந்தது. ஆனால் இப்ப ஆஃப்கானிஸ்தானோடு ஒரு நல்ல diplomatic உறவு வைத்திருக்கிறது நம்ம இந்தியா காபூலில் நம்ம எம்பஸியின் இயக்கத்தை மீட்டிருக்கிறது. கூடவே தீவிரவாதங்களை எதிர்த்து முடக்கவும் செயல்படுகிறது. இப்படியான நல்லிணக்கம் எப்படி உருவானது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும்.

      கீதா

      நீக்கு
    2. அப்படி அறிவித்தாலாவது இயற்கையை மக்கள் கொஞ்சம் விட்டு வைப்பார்களா என்கிற நப்பாசையோ என்னவோ..   காடுகளை அழித்து கான்க்ரீட் காடுகளாக்கி வசித்து வருகிறோம்.  இயற்கையை சின்னாபின்னமாக்கி சுனாமி முதல் புயல் வரை எல்லாவற்றையும் மாற்றி வைத்திருக்கிறோம்.

      நீக்கு
    3. வாங்க கீதா ரங்கன். பாமினி மலைத்்தொடரை அழித்தபோது அவர்கள் முரட்டு மத வெறியர்கள். இப்போது நாட்டை வழிநடத்திச் செல்லும் நிலைமையில் இருப்பதால் நாகரீகம் எட்டிப் பார்க்கிறது.

      நீக்கு
    4. ஆப்கானிஸ்தான், அகண்ட பாரத்த்தின் ஒரு பகுதிதான். காந்தகாரிலிருந்துதான் காந்தாரி சகுனி வந்தனர். நாடு, அதனை வழிநடத்துவது என்பது எல்லோருக்கும் பொதுவான நடைமுறையைப் பின்பற்றுவது என்ற வகையில் சேரும். அதனால்தான் பல அரபு நாடுகள் மாறிவிட்டன, மாறிக்கொண்டிருக்கின்றன

      நீக்கு
    5. வாங்க ஶ்ரீராம். எல்லா நாடுகளுக்கும் வளர்ச்சி தேவை, அதற்காக இயற்கையை அழிப்பதும் தேவை. தங்களை உலகநாடுகளைவிடப் பெரியவர்கள் என நினைத்துக்கொள்பவர்கள், பிற நாடுகளை இந்த மாதிரி இயற்கையைப் பாதுகாக்கணும் என அறிவுறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் அதைப் பின்பற்றுவதில்லை.

      நீக்கு
    6. //தாலிபன்கள் 2021 ல்// ???????

      நீக்கு
    7. பாமியன் புத்தர் சிலைகள் அழிக்கப்பட்டதைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கோம். தி/கீதா குறிப்பிட்டிருக்கும் வருடம் தவறு எனக் கருதுகிறேன்.

      நீக்கு
    8. ஆமாம் கீசா மேடம். 2001 க்குப் பதிலா தட்டச்சும்கோது 2021னு வந்துவிட்டது போலிருக்கு

      நீக்கு
  4. நான் ஒன்றரை வருடங்களுக்குமுன் சென்று இருந்தபோது ராஜராஜன் நினைவிடம் வேறு தோற்றம் கொண்டிருந்தது.  அப்போதே நான் படங்கள் பகிர்ந்திருந்தேன்.  ஏதோ ஒரு குடும்பம் அந்த இடத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் சொந்த இடத்தில் இத்தகைய வரலாற்றுச் சின்னங்கள் இருந்தால் நமக்கு எவ்வளவு பதட்டம் வரும்? இருந்தாலும் இந்த இடத்தை இந்த அளவிலாவது வைத்திருப்பது சிறப்பு

      நீக்கு
  5. சும்மா சாதாரணப் பாடலைப் போட்டாலே காலங்கார்த்தால இந்த மாதிரி பாட்டா என்று கேட்கிறார்கள்.இந்தப் பாடலைப் போட்டால்...!    இருந்தும் என் மனதில் இன்னும் காதல் உணர்வுகளும், இயற்கை ரசனைகளும் மாறவில்லை என்பதும் உண்மைதான்! 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. த்த்துவப் பாடல்களும் மிகச் சிறப்பானவை. அதனை எழுதுவதற்கும் எவ்வளவு படிப்பும் அனுபவமும் தேவை.

      நீக்கு
  6. அப்புறம் ஒரு விஷயம்..  நீங்கள் சொல்லி இருக்கும் பாடல் அசோகன் சொந்தக் குரலில் பாடியது.  பாடல் கண்ணதாசன் என்று நினைத்திருந்தால் ஏமாந்து போவீர்கள்.  ஆலங்குடி சோமு எழுதிய பாடல்.  இதில் இதைவிட இன்னொரு நல்ல தத்துவப் பாடல் உண்டு.  "இரவும் வரும் பகலும் வரும் இரண்டும் ஒன்றுதான்.."  ஜெய்சங்கரின் முதல் படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.. அசோகன் பாடியதா? எனக்கு மிகவும் பிடித்த பாடல். இரண்டாவதாக்க் குறிப்பிட்டிருக்கும் பாடலும் மிகவும் பிடிக்கும். இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான். இவற்றைப் பகிரலாம்.

      நீக்கு
  7. என்னைக் கேட்டால் மனித யத்தனத்தினால் செய்த சாதனைகளை மாத்திரம், அதுவும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருந்தால் மாத்திரம் உலக பாரம்பர்யச் சின்னங்கள் என்று அறிவிக்கவேண்டும்.//

    டிட்டோ!

    //இயற்கையாக உள்ளவற்றை பாரம்பர்யச் சின்ங்கள் என்று அறிவிப்பது தேவையில்லாத வேலை.//

    தேவையில்லாத வேலை என்பதை விட அதில் கொஞ்சம் கூட அர்த்தமும் இல்லையே.

    நம்ம ஊர் கோயில்கள் பாரம்பரியச் சின்னங்களை யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும் என்றுதான் சுதாமூர்த்தி பார்லிமென்டில் பேசினாங்க. பெரிய லிஸ்ட் கொடுத்தாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில்களைப் பாரம்பர்யச் சின்னமாக இறிவிப்பதில் ப்ராக்டிகல் பிரச்சனை இருக்கானு பார்க்கணும். அந்த இடங்கள் சுற்றுலாத் தலங்கள், கோயில் நடைமுறைகள் கூடாது என்று.

      நீக்கு
    2. கோயில்களைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பதில் தெய்விகம் காணாமல் போய் அந்தக் கோயிலும் எல்லாச் சுற்றுலாத் தலங்களைப் போல் ஒன்றாக மாறி விடுகிறது. காஞ்சி கைலாசநாதர் கோயிலைப் போல! :(

      நீக்கு
    3. கோயில்களைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பதில் தெய்விகம் காணாமல் போய் அந்தக் கோயிலும் எல்லாச் சுற்றுலாத் தலங்களைப் போல் ஒன்றாக மாறி விடுகிறது. காஞ்சி கைலாசநாதர் கோயிலைப் போல! :(

      நீக்கு
    4. தஞ்சைப் பெரிய கோயில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் எல்லாம் வழிபாடுகள் இல்லாமல் இருந்தவை தானே! பிற்காலங்களில் தான் வழிபாடுகள் நடக்க ஆரம்பித்தன. தஞ்சைக் கோயிலை நான் முதல் முதல் பார்த்தப்போ பெருவுடையாரைப் பூட்டிய கதவுக்கு வெளியே இருந்து தான் பார்த்தோம். அதோடு குறிப்பிட்ட நேரம் தான். இப்போ மாதிரி அபிஷேக ஆராதனைகளோ, பிரதோஷ வழிபாடுகளோ, அன்னாபிஷேகங்களோ அப்போதெல்லாம் இருந்ததில்லை. உள் நாட்டவர் குறைவாகவும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுமே அதிகம் இருப்பார்கள்.

      நீக்கு
    5. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது. காஞ்சி கைலாயநாதர் கோயிலில் பூசை நடைபெறுகிறது என்றாலும், அந்தக் கோயில்்சுற்றுலாத் தலம் போன்றே உள்ளது.

      நீக்கு
    6. ஆமாம், பல கோயில்கள் வழிபாடுகள் இல்லாமல் இருந்தன. தற்போது அவற்றில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. காஞ்சி கைலாசநாதர் மூலவரைப் படம் பிடிக்கத் தவறிவிட்டேன். மூன்றடிக்கும் குறையாத உயரமுடைய நல்ல பெரிய அகலமான லிங்கேஸ்வரர். நிறைய சுற்றுலாப் பயணிகள். ஆனால் காவல் இல்லை. அதனால் அவங்க பெயரைப் பொரித்துவிடும் அபாயம் இருக்கிறது.

      நீக்கு
  8. பாகிஸ்தானில் இருக்கும் கோவில்களில் அழிந்தவை தவிர இப்பவும் விழா கூட நடப்பதாகத் தெரிந்தது. பாரம்பரியமான கோவில்கள் இப்பவும் செயல்படுவதாகவும் காணொளிகள் பார்த்தேன். ஆச்சரியமாகவும் இருந்தது. ஹிங்க்லாஜ் மாதா மந்திர், அப்புறம் பஞ்சமுகி ஹனுமான் மந்திர், இன்னொன்று கட்டாஸ் ராஜ் கோவில், சிவன் கோவில் அங்கு குளம் இருக்கு ஏழு கோவில்கள் இருக்காம். மகாபாரதத்துக்கும் முன்ன இருந்த கோவில்னு தகவல். இங்கு சென்று வர பாகிஸ்தான் விசா கொடுக்குதாம்.

    எனக்கு இப்படி வேற்று நாடுகளில் குறிப்பா பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் நாடுகளில் நம்ம ஊர் விஷயங்கள் இருக்கணுமே ஏனென்றால் அகண்ட பாரதத்தில் இருந்தவை என்பதால் இப்ப என்ன எப்படின்னு பார்ப்பதுண்டு.

    அப்படி அறிந்தவை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு வழியில்லாமல் சில கோயில்களை முற்றிலும் அழிக்காமல் வைத்திருக்கிறார்கள். அங்கு, தனி நாடு அமைந்த பிறகு இந்துக் கலாச்சாரம் அனேகமாக சீரழிந்துவிட்டது.

      நீக்கு
  9. நாம் சீனாவைக் குறிப்பிடலாம். இதைத் தவிர என் நினைவுக்கு வருபவை, உரோமப் பேரரசும், பாரசீகமும், எகிப்தியப் பேரரசும்தான்.//

    பர்மா, கிழக்கு வங்காளம், இந்தோனேஷியா, மலேஷியா தாய்லாந்து அங்கோர்வாட் கம்போடியா என்று சொல்லலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பர்மா.... கம்போடியா... இந்த லிஸ்டெல்லாம், ராஜேந்திர சோழன் படையெடுத்து கால் பதித்ததால்தான். அதற்கு முன்பு அப்படி இருந்திருக்க வாய்ப்பு குறைவு, காரணம் மீன்பிடித் துறைமுகங்கள் அவை

      நீக்கு
  10. எந்த இடத்திற்குமே குறிப்பாக இப்படிய பாரம்பரிய கோவில்கள் கலைக்கட்டிடங்கள் அதாவது உள்ளே இல்லாமல் வெளியில் இருப்பதைப் பார்க்க கொஞ்சம் குளிர்நாட்களில் வெயில் வரும் முன் சென்று பார்த்திட வேண்டும்தான் நீங்க சொல்வது போல். அதுவும் செருப்பு போடாமல் போக வேண்டிய பகுதிகளில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படித்தான், நவம்பரில் காஞ்சீபுரம் சென்றால் நல்லா இருக்கும் என்று நினைத்துச் சென்றேன். வெயில் சொல்லி மாளலை. தமிழகத்தில் எந்த மாதமுமே வெயில் அதிகம்தான் போலிருக்கிறது.

      நீக்கு
  11. கூட்டம் அதிகமாகிவிட்டால், ரசிப்பதும் புகைப்படங்கள் எடுப்பதும் கஷ்டமாகிவிடும். //

    இது ரொம்பவே.

    படங்கள் சூப்பர். ப்ளாக் ப்ளாக்கா சிற்பங்கள் செதுக்தி வைச்சிருக்காங்க பாருங்க.

    //சோழர்கள் மாளிகை, அரண்மனை போன்ற பலவற்றையும் முழுவதுமாக இடித்து இருந்த இடமே தெரியாமல் ஆக்கிய பாண்டியன், கோயில்களுக்கு ஒரு சேதத்தையும் விளைவிக்கவில்லை. தஞ்சை பெரிய கோயிலிலேயே அம்மனுக்கான கோயிலைக் கட்டியவன் பாண்டிய மன்ன ன். இதுதான் நம் மண்ணின் மரபு. //

    ஆமாம், இப்ப கூட நேற்று பாசிட்டிவ் செய்தியில் வந்தது போல நாம எதிரிகளின் முகாம்களைத்தான் தவிடுபொடியாக்குகிறோம் வேறு எங்கும் கை வைப்பது குறியே இல்லை.

    //தலையில் இரு பாதங்களுடன் (சிவபாத சேகரன்) தன் பெயருக்கேற்றபடி, உருத்திராட்ச மாலையுடன் காட்சி தரும் ராஜராஜ சோழனின் இந்தத் திருவுருவம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடீஸ்வரர் கோயிலின் முன் மண்டபத்தில் அமைந்துள்ளது //

    நெல்லை தேடித் தேடி நிறைய பார்த்திருக்கீங்க அவற்றை எங்கெங்கு இருக்கு என்பதையும் ரிலேட் பண்ணிச் சொல்லவும் செய்யறீங்க நல்ல நினைவுத்திறன் ப்ளஸ் தேடல்கள் பகிர்தல்கள் உழைப்பு.

    பாராட்டுகள் நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதா ரங்கன். நினைவுத்திறன் குறைவு.

      நீக்கு
  12. புவனமுழுதுடையாளூர் //

    அழகான பெயர்.

    பள்ளிப்படை பற்றி முன்னர் நீங்க சின்னதாக ஒரு குறிப்பு அதாவது பாதை பற்றிச் சொல்லிய நினைவு.

    படங்கள் எல்லாம் அருமை. உங்க மூலமா பார்த்துக் கொள்ளலாம்.

    சுகிசிவத்தை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. தன்னம்பிக்கைக்கும், கர்வத்திற்கும் சிறு இழைதான் வித்தியாசம். அவர் பேச்சில் கர்வம் தொனித்தது. எனவே....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'தன்னம்பிக்கை' 'கர்வம்'... சுகி சிவத்துக்கு இதெல்லாம் கிடையாது. ஏதோ காரணம், மாட்டிக்கொண்டுவிட்டார்... ஜால்ரா தட்டுகிறார். எதில் மாட்டிக்கொண்டார் என்று யாரேனும் கண்டுபிடித்தால்தான் உண்டு.

      புவனம் முழுதும் உடையாள்-இதுவே உடையாளூராக ஆயிற்று. பெயர் அழகாக இருக்கிறது அல்லவா?

      நீக்கு
  13. பகிர்ந்திருக்கும் பாடல் நல்ல பாடல். உண்மையைச் சொல்லும் பாடல்.

    நெல்லை, ஏற்கனவே வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகள். தத்துவம் எல்லாம் தெரியாமலா சொல்லுங்க?

    வெள்ளி ஜாலியாகப் போகட்டுமே! நாங்க எல்லாம் சின்ன பசங்களாக்கும்!

    நீங்களும் சொல்லியிருக்கீங்களே உங்க அபார்ட்மென்ட் குழுவில் பெரியவங்க குழுவில் இல்லாமல் சின்னவங்களோடு பழகத்தான் பிடிக்கும்னு!!!!!!! பெரியவங்க தத்துவங்களையே பேசிட்டிருந்தா உங்களுக்குப் பிடிக்குமா சொல்லுங்க!!!!!

    அதனால சின்ன பசங்க ஸ்ரீராம், நான்.....

    ஸ்ரீராமை நல்லா வம்புக்கு இழுத்திருக்கீங்க!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளி ஜாலியாப் போகட்டுமே... சரியான கருத்துதான். ஆனால், நாங்கள்லாம் சின்னப் பிள்ளைங்க என்று சொல்வதுதான் இடிக்குது. சின்னப் பிள்ளைங்களுக்கும் வாழ்க்கைத் த்த்துவம் தெரியாண்டாமா?

      நீக்கு
  14. வழிகாட்டி அவர்களை இங்கு சொன்னது மிகவும் சிறப்பு நல்ல தகவல், நெல்லை.

    க்ளூ புரியுது! சூப்பர். அடுத்த வாரம் சுவாரசியம்..நெல்லையின் அட்வென்சர்ஸா!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் காசுக்காக வேலை பார்ப்பார்கள். சிலர் அதில் ஆத்ம திருப்தியும் பெருமிதமும் அடைவர்.ராஜா அவர்கள் அப்படிப்பட்டவர்னு மனதில் தோன்றியது

      நீக்கு
  15. ஸ்ரீராம், கூட இராஜராஜன் நினைவிடம் பற்றிய படங்கள் பகிர்ந்தாரோ என்று நினைவு... இவ்வளவு நேரம் அதை நினைவுக்குக் கொண்டு வர.... யாரோ அதைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும்..அதாவது பாதுகாப்பிற்கு...என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரும் பகிர்ந்திருந்தார். ஆனால் நிறைய படங்கள் எடுக்கவில்லை என்று நினைவு (புகழ் பெற்ற விஜயநகர இடத்தையே படங்கள் எடுக்கத் தவறிவிட்டார், கர்நாடகாவிற்கு வந்திருந்தபோது)

      நீக்கு
  16. நாங்களும் உடையாளூரில் தேடிக் கொண்டு போனோம். ஆனால் சரியாக வழிகாட்டுபவர் யாரும் கிடைக்கலை. சோழன் மாளிகை என்றொரு இடம் வயல்களுக்கு நடுவே இருந்தது. இதுவாக இருக்கலாம் என யூகமாகச் சொன்னார்கள் சிலர். இன்றைய பதிவும் அதற்கான சிறப்பான எழுத்தும் உங்கள் ஆதங்கமும் வெகு சிறப்பு. இங்கே எல்லாம் போயிருப்பதால் நன்கு ரசிக்க முடிந்தது. பாடல் தேர்வும் நன்றாகவே இருந்தாலும் வெள்ளிக்கிழமையன்று இந்தப் பாடலை வெளியிட்டால் ரசிக்க யாருமே இருக்க மாட்டார்கள். அனைவருமே வெள்ளிக்கிழமையும் அதுவுமா இந்தப் பாடலா என்பார்கள். முதலில் ஸ்ரீராமே இன்னமும் இளமையில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பதால் போட மாட்டார் என உறுதியாகச் சொல்லலாம். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். நாங்கள் சோழன் மாளிகையைப் பார்க்கவில்லை. வயல்களின் நடுவே சிதைந்த படிமங்கள் மாத்திரம் இருப்பதால். அங்கு உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கே பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை, பால்குளத்து அம்மன், உடையாளூர் ராஜராஜ சோழன் பள்ளிப்படை, பசுபதி கோயில் கோன்ற பல இடங்கள் தெரியவில்லை.

      ஆம். வெள்ளிக்கிழமை சென்டிமென்ட், காலையில் சோகப் பாடல்கள்... பாவம் ஶ்ரீராம். காதல் பாட்டுக்களை மாத்திரம் பகிர வேண்டிய சூழல். அதிலும் பாப்புலர் பாடல்களைப் பகிராமல் அந்தப் படத்தில் அமைதியாக்க் கிடக்கும் இன்றொரு பாடலைத் தேடிப் பகிர்வார். ஹா ஹா ஹா

      நீக்கு
  17. பதில்கள்
    1. சரணம் சண்முகா.இந்தத் தடவை பழமுதிர்ச்சோலை சென்றிருந்தோம். திருச்செந்தூர் முருகன் அருள் புரியவில்லை

      நீக்கு
  18. அன்பின் நெல்லை
    தாங்கள் திருக்கண்டியூர் வந்து சென்ற போது பாடநாசத்துக்கு அருகில் புள்ள மங்கலம் ஆலந்துறையார் கோயிலுக்குச் சென்றோமே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். உங்களுடன் அங்கு சென்றிருக்கிறேன். இன்னும் இரண்டு முறைகள் சென்றிருக்கிறோம்.

      நீக்கு
  19. உடையாளூர் சிவலிங்கம் பற்றி -
    மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் மாறுபட்ட கருத்துகள் இருக்கும். ஆயிரம் வருடப் பழைமை, பல்வேறு மாறுதல்கள். யாரால் சரியான சரித்திரத்தைச் சொல்ல இயலும்? பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை வளாகத்திலேயே குந்தவை புதைக்கப்பட்ட இடம் இருந்ததாகவும், பிறகு எல்லாவற்றையும் சுத்தமாக ஆக்கி சமன் செய்துவிட்டதாகவும் அங்குள்ளவர் முன்பு சொன்னார்.

      நீக்கு
  20. UN என்பதே ஒரு பல்லில்லா பாம்பு. அவர்கள் heritage என்ற ஆங்கில வார்த்தையில் சில இடங்களை குறிப்பிடுகிறார்கள். இந்த heritage என்பது பாதுகாத்து போற்றுதற்குரியது என்று கருதினோம் என்றால் அர்த்தம் சரியாகி விடுகிறதல்லவா?
    Aryans came from North. இது மெக்காலே கற்பித்தது. தோலின் நிறம் கொண்டு வகைப்படுத்தப்பட்டது. இது எனது அனுமானம். இருந்துட்டு போகட்டுமே. ஒரு களங்கமும் இல்லை. சரி.
    கீதா ரங்கன் கொஞ்சம் நாட்களாக கமெண்ட் அதிகம் போடுகிறார். என்ன குஷியோ? தெரிந்து கொள்ள ஆசை.
    இந்த வார பதிவு பிடித்த கொள்கைகளை நியாயப்படுத்தும் விதமாக அமைந்தது ஒரு குறையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார் பாதுகாத்து போற்றர்குரியது இந்த பூமி முழுவதுமே அல்லவா? தொல்லியல் துறையின் அர்த்தம் வேறு.

      மெக்காலேக்கு இந்த நாட்டைப் பற்றி என்ன தெரியும்? கேரள அழகிகளும் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்ற அர்த்தம் த்வனிக்குறதே.

      கீதா ரங்கனுக்கு நேரப் பற்றாக்குறை. வாய்ப்பு கிடைக்கும்போது எழுதிவிடுகிறார்.

      சிலவற்றை நாம் நம்புகிறோம். மாற்றுக் கருத்துகளில் சாரமில்லை என்று தோன்றுவதால் அப்படி எழுதினேன்..

      நீக்கு
  21. /// இராஜராஜ சோழனின் பள்ளிப்படையில் அவனது அஸ்தியின் மீது வைக்கப்பட்டுள்ள சிவலிங்கம். ////

    இதுவே சரியான தகவல் என்று படுகின்றது...
    மாறாக சோழனின் சமாதி என்பதில் தான் குழப்பம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துறவிகள் தவிர பிறருக்கு சமாதிகள் அமைக்கப்படுவதில்லை. அஸ்தி மீதுதான் பள்ளிப்படைஅமைக்கப்பெற்றன. கொஞ்சம் அதீதமாகச் சொல்லி பெருமைப்படுஙதற்காக சமாதி எனச் சொல்கின்றனர்.

      நீக்கு
  22. தகவல்கள் சிறப்பு..
    பதிவு அருமை..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு

  23. அன்பின் நெல்லை
    ///இந்தத் தடவை பழமுதிர்ச்சோலை சென்றிருந்தோம். திருச்செந்தூர் முருகன் அருள் புரியவில்லை///

    பழமுதிர்ச் சோலையிலே
    பார்த்தருள் செய்தானடி!..
    அங்கங்கு சென்றாலும்
    இங்கென்று வந்தானடி!!...அன்பின்

    பதிலளிநீக்கு
  24. அன்பின் நெல்லை
    ///இந்தத் தடவை பழமுதிர்ச்சோலை சென்றிருந்தோம். திருச்செந்தூர் முருகன் அருள் புரியவில்லை///

    பழமுதிர்ச் சோலையிலே
    பார்த்தருள் செய்தானடி!..
    அங்கங்கு சென்றாலும்
    இங்கென்று வந்தானடி!!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் முதல் தடவை, பழமுதிர்ச்சோலை செல்வது. பிறகு நூபுர கங்கைக்கும் சென்றோம். பழமுதிர்ச்சோலை பஞ்சாம்ருதம் இனித்தான் டேஸ்ட் பார்க்கணும்

      நீக்கு
  25. படங்களை இரசித்தேன் தமிழரே அலைபேசியில் படிப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது அகவை குறைந்து கொண்டே போவது ஓர் காரணம் பிறகு பெரிதாக்கி படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி நலமா? 'அகவை குறைவதால் படிப்பது சிரமம்' ஹாஹா ஹா. புதிய பதிவுகள் ஏன் எழுதவில்லை?

      நீக்கு
  26. முதலாவது சிற்பம் , தஞ்சை கோவில் உட்புகும் வாயில் , உள் வாயில் ஊடாகபெரியகோவில் படங்கள் அருமை

    பள்ளிப்படை கோவில் முதலும் கண்டோம் மீண்டும் தகவல்களுடன் விரிவாக கண்டோம்.

    மிகவும் நன்றாக வாரா வாரம் தொடர்ச்சியாக வரலாற்று சரித்திரங்களுடன் பெரியகோவில் முக்கியத்துவங்களை சிறப்பாக தந்துள்ளீர்கள் பாராட்டுகள். நன்றிகள். உங்கள் பதிவு பலருக்கும் பயன்படும்.

    தொடர்ந்தும் பல பதிவுகளை எமக்கு அறியத் தரும் உங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். உங்கள் பாராட்டிற்கு நன்றி

      நீக்கு
  27. தத்துவ பாடலுடன் பெரிய கோவில் சரித்திரம் முடித்திருந்ததும் அருமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  28. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  29. பதிவு அருமை , படங்களும் , செய்திகளும் தத்துவ பாடலும் அருமை. அசோகன் பாடியது அந்த படத்தில் அவர் நடிப்பு மிக அருமையாக இருக்கும்.
    நல்ல நடிகர் அவரே பாடி நடித்த படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இன்றுதான் தெரியும், இது அசோகன் பாடிய பாடல் என்று. நான் மிகவும் ரசிக்கும் பாடல் இது.

      நீக்கு
  30. டி .ஆர் பாப்பா இசை அமைத்த படம் மிகவும் அருமையான பாடல் பகிர்வு
    இதே படத்தில் இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான் என்ற பாடலும் தத்துவ பாடல்தான். அதுவும் மிக அருமையாக இருக்கும்.
    ஜெயசங்ககரின் முதல் திரைப்படம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படத்தைத் தேடிப் பிடித்துப் பார்ப்பது என்று முடிவு செய்திருக்கிறேன்.

      நீக்கு
  31. என் கணினி அனுமதிக்கும் போது பின்னூட்டம் போட வேண்டியது உள்ளது .
    பள்ளி படை படங்கள் , செய்திகள் எல்லாம் அருமை.
    நான் பள்ளிபடை பார்த்தது இல்லை, என் கணவர் பார்த்து இருக்கிறார் அவர்கள் பார்த்த கோவில் விவரங்கள் உள்ள கையேட்டில் அந்த குறிப்புகள் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எப்போதும் அவருடன் செல்வீர்களே. நீங்கள் எப்படி பள்ளிப்படை பார்க்காமல் விட்டீர்கள்?

      நேரம் கிடைத்தால் அவர் கையேட்டை வைத்து ஒரு பதிவு போடுங்கள். நன்றி

      நீக்கு
    2. //நேரம் கிடைத்தால் அவர் கையேட்டை வைத்து ஒரு பதிவு போடுங்கள்.//

      போட நினைத்து இருக்கிறேன் நெல்லை. நான் அதை பேஸ்புக்கில் போடுங்களேன் உங்கள் கையெழுத்து பதிவை என்ற போது இப்போது கூகுளில் தேடினால் விவரங்கள் கிடைக்கும் என் பதிவு பழசு ஆகி விட்டது என்றார்கள். கோயிலின் அமைப்பை எல்லாம் படம் வரைந்து வைத்து இருப்பார்கள் போகும் பாதையின் படம் வரைந்து வைத்து இருப்பார்கள். கண்டிப்பாய் உங்களுக்காக போடுகிறேன்.
      நன்றி நெல்லை. சாரின் நினைவு நாள் வருகிறது. அப்போது போட முயற்சி செய்கிறேன்.

      நீக்கு
  32. இப்போது கீதா சொல்லி ஒரு செய்தி கேள்வி பட்டேன் திரு. பாலசுப்பிரமணியம் ஐயா மறைந்த செய்தி அவர் மயிலாடுதுறையில் எங்கள் வீட்டுக்கு வந்தது, அவருடன் கோயில்களுக்கு சென்றது எல்லாம் மனதில் வந்து போகிறது அவர் குடும்பத்தினர்களுக்கு இறைவன் ஆறுதலை தர பிரார்த்தனை செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று வாட்சப் குழுமத்திலும், தனிப்பட எனக்கும் இந்தச் செய்தி வந்தது. அவரை நான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எல்லோருக்கும் பிடித்த மனிதர் அவர். அவர்கள் குடும்பத்திற்கும் இரங்கல் செய்தி அனுப்பிவிட்டேன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!