7.11.25

நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் கன்னிக்கரும்பு உன்னை எண்ணி சாறாகும்

இளமைக்காலங்கள் 1983 ல் வெளியிடப்பட்ட படம்.,  மோகன் ஜனகராஜுடன் அறிமுகமாக சசிகலா, ரோஹிணி, பாலாஜி ஆகியோர் நடித்த படம்.  எழுதி இயக்கி இருந்தவர் மணிவண்ணன்.  இசை இளையராஜா.

உபயோகமில்லாத ஒரு கொசுறுத் தகவல் நான் இந்தப் படத்தை மதுரை சக்தி சிவம் தியேட்டரில் பார்த்தேன்.

முதல் பாடல் 'ஈரமான ரோஜாவே'..  கே ஜே யேசுதாஸ் பாடியது.  இந்தப் பாடலை மத்தியமாவதி ராகத்தில் அமைத்திருக்கிறாராம் இளையராஜா.  

காலேஜ் ஸ்ட்ரைக்கில் நடக்கும் கலவரத்தில் கதாநாயகி சசிகலாவின் அப்பா இன்ஸ்பெக்டர் டேவிட் கொல்லப்பட, ஸ்ட்ரைக்கை தொடங்கியது மோகன்தான் என்று நினைத்தும், அப்பா சாவுக்கு காரணம் அவன்தான் என்றும் அவனை வெறுத்து ஒதுக்குகிறாள் சசிகலா.  அப்போது மோகன் (மைக் இல்லாமல்) பாடும் பாடல் இது.  மழைக்கு நடுவே சோகமாக அவள் இருக்கும் தெருவில் தெய்வம் தந்த வீடு ஜெய்கணேஷ் மாதிரி  பாடி வருவார்.  

பாடல் வைரமுத்து.  மத்தியமாவதியை சோகமான பாடலுக்கு உபயோகித்திருக்கிறார் இளசு.

இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும் ஒரு யு டியூப் தளத்தில் பார்த்த ரசிகர் ஒருவரின் கமெண்ட் ஒன்றையும் இங்கு பகிர்கிறேன்.

யார் இந்த மணிவண்ணன்?
கோவை சூலூரை சேர்ந்த மணிவண்ணன், பாரதிராஜாவின் ‘"கிழக்கே போகும் ரயில்’" திரைப்படத்தால் பெரிதும் கவரப்பட்டு தான் எழுதிய நூறு பக்க திரை விமர்சனத்தை பாரதிராஜாவிற்கு அனுப்பி வைத்தார். அவரது உள்ளார்வமிகுதியை உணர்ந்த பாரதிராஜா, மணிவண்ணனை சந்திக்க விரும்பினார். பாரதிராஜா "கல்லுக்குள் ஈரம்’' திரை படத்தை இயக்கும் போது, தன்னுடைய உதவியாளராக அவரை சேர்த்துக் கொண்டார். அதனை தொடர்ந்து நிழல்கள், டிக் டிக் டிக், காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை, ஆகாய கங்கை, லாட்டரி டிக்கெட், நேசம் போன்ற படங்களுக்கு கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் புதிய வார்ப்புகள், கொத்த ஜீவிதாலு (தெலுங்கு), கிழக்கே போகும் ரயில் (தெலுங்கு), ரெட் ரோஸ் (ஹிந்தி) மற்றும் லவ்வர்ஸ் (ஹிந்தி) படங்களில் உதவி இயக்குனராகவும் பட்டை தீட்டப்பட்ட பின் "கொடிப் பறக்குது’' திரைப்படத்தில் அறிமுக வில்லனாக ஒளிர்ந்தார்.
1982-ல் வெளியான ‘'கோபுரங்கள் சாய்வதில்லை’' தான் மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படம் என்று எடுத்துக் கொள்ளலாம்! அதைத் தொடர்ந்து, இளமைக் காலங்கள், இருபத்தி நாலு மணிநேரம், நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், அமைதிப்படை, நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ உட்பட சுமார் ஐம்பது திரைப்படங்கள் இயக்கியுள்ளார். ‘கொடி பறக்குது’ திரைப் படத்தில் இடம்பெற்ற அறிமுகவில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிகாட்டி தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதை உறுதி செய்தார் என்பதுதானே நிதர்சனம்! பன்முகத்திறமை கொண்ட மணிவண்ணன் தனது 58வது வயதில் மாரடைப்பால் காலமாகி விட்டபோதிலும் உலகம் உள்ளவரை அவர் திறமை காட்டிய படைப்புகள் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது! சரி... பாடலிற்கு வருவோம்! "நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை என் காதலி…" சோகத்திற்கு தாலாட்டுபாடும் வரிகளை திரைக்கதைக்கு ஏற்றவாறு புனைந்த பாடலாசிரியர் வைரமுத்துவின் கவித்துவத்தை போற்ற வார்த்தைகளை தேடுகின்றேன். இந்தப் பாடல் காட்சி முழுவதும் நாயகன் மோகன் மழையில் நனைந்தபடி பாடுவதாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். இளையராஜாவும் தன் பங்கிற்கு பாடலை ரசித்தோரை இசைமழையில் நனையவிட்டார் என்று எடுத்துக்கொள்ளலாமா? சில பாடல்கள், சில வேளைகளில் கான கந்தர்வன் KJ.ஜேசுதாஸின் குரலில் ஒலிக்க வேண்டுமென்பதற்காக உருவானது போன்றதொரு தோற்றம் ஏற்படுகிறதல்லவா?
இந்தப் பாட்டிற்கும் அது பொருந்தும் என்பது தானே நிஜம்!
இளையராஜாவின் ஆரம்பகால திரைப்பாடல்களில் இடம்பெற்ற இசைக்கோர்வையின் தேரோட்டம் எங்கேயோ அழைத்துச் செல்வது போன்றதொரு பிரமை!
இளமைகால கனவுகள் நிறைந்த பசுமையான நினைவுகள் யாவும் என்னை பின்னோக்கி அழைத்துச் செல்வதின் அழகே தனி தான்!
அவற்றையெல்லாம் நினைத்து நினைத்து ஓராயிரம் ஓவியங்கள் தீட்டலாம்; ஒரு நூறு கவிதைகள் புனையலாம்; ஏன் பலவாறு கதைகளைக் கூட வார்த்தெடுக்கலாம் அல்லவா? யாருக்கு, எதற்கு, எவ்வாறு முக்கியத்துவம் கொடுத்து ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்வதற்குள் பாடல் முடிவுற்றது துரதிர்ஷ்டம் என்றே எண்ணத் தோன்றுகிறதோ? முழுமைபெறாத நிலவை போன்று எனது கனவுகளும் தேய்ந்து விட்டதல்லவா? ஈரமான விழிகளை தழுவியபோது சுற்றுமுற்றும் பார்த்தேன். யாருமில்லை. ஆனால் வருடிய கைவிரல்களில் விழிநீருடன் சேர்ந்து கண் மையும் பற்றிக் கொண்டதும் வெறும் ஒரு கனவு தானா? கனவுகள் தொடர ஆசை படுகிறேன்..
. நிற்க... முப்பத்தியெட்டு ஆண்டுகள் யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் திடுதிப்பென நகர்ந்து விட்டபோதிலும் இப்பாடலின் மீதுள்ள மோகம் மட்டும் இன்னமும் குறையவில்லை!
காதிற்கினிய அருமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.

*******************************

ஈரமான ரோஜாவே
என்னை பார்த்து மூடாதே
ஈரமான ரோஜாவே
என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம்
போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
ஈரமான ரோஜாவே
என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம்
போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
உன் வாசலில் என்னை கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே 
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடிவா சிந்து
ஈரமான ரோஜாவே
என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம்
போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோணி 
ஈரமான ரோஜாவே
ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே
ஏங்காதே என் அன்பே ஏங்காதே

==============================================================================================

நடிகை பாரதி அளித்த பேட்டி ஒன்றில்

'உயர்ந்த மனிதன்’, 'நாடோடி’, 'அவளுக்கென்று ஒரு மனம்’, 'தங்கச் சுரங்கம்’, 'மாயமோதிரம்’ என்று அந்தக் காலப் படங்களின் கதாநாயகி பாரதி இன்றும் சின்னத்திரையில் பிஸியாக இருக்கிறார்! அசப்பில் வைஜயந்திமாலா பாலி சாயலில் இருக்கும் பாரதி, பேசுவதும் நடப்பதுமே அபிநயம் நிறைந்த நாட்டிய நாடகம் போல் இருக்கிறது. ''சினிமா நடிகைகள் அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த முடியாது என்ற எண்ணத்தைப் பொய்யாக்கி வாழ்ந்து வருகிறேன்'' என்று பெருமையுடன் சொல்லும் பாரதி, தன் வாழ்க்கை பற்றிய சில சுவாரஸ்யமான அனுபவங்களை விவரித்தார். அவரது பேட்டியிலிருந்து...
''மகாராணி கல்லூரியில் பி.யூ.ஸி. முதல் வருஷம் படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரியில் நான் கலந்துகொண்ட நடன நிகழ்ச்சியின் போட்டோக்களை நோட்டீஸ் போர்டில் ஒட்டி வைத்திருந்தார்கள். நடிகர் கல்யாண்குமார் அப்போது புதுமுகம் தேடிக் கொண்டிருந்த நேரம்... என்னை நடிக்க கூப்பிட்டார்கள். எனக்குப் பிடிக்கவில்லை.
சினிமா பார்க்ககூட தியேட்டருக்கு எங்களைக் கூட்டிப்போகாத கன்சர்வேடிவ் குடும்பம் என்னுடையது. யாராவது ஆண் சற்று நேரம் தொடர்ந்தாற்போல உற்றுப் பார்த்தால் தர்மசங்கடமாக இருக்கும்.
எனக்கு நடிப்பதில் துளியும் இஷ்டமில்லை. என் கல்லூரி ஆசிரியர்களோ, ''நீ அழகா இருக்கே. நல்லா நடனமாடுறே. தேடி வந்த வாய்ப்பை தவறவிடாதே!'' என்று அறிவுரை சொன்னார்கள். கல்லூரியை விட்டுப் போக மனமில்லாமல் விருப்பமின்றி நடிக்க ஆரம்பித்தேன்.
இரண்டு வருடம் ரொம்ப கஷ்டப்பட்டேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என்று பல மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அந்தந்த மொழிப் படங்களில் நடிக்கும்போது அந்தந்த மொழியைக் கற்றுக் கொள்வேன். அப்படி இன்று எனக்கு எட்டு மொழிகள் தெரியும்.
தமிழில் முதல் படமே பெரிய பேனர். 'உயர்ந்த மனிதன்’ படத்தில் நடித்தேன். அடுத்து பத்மினி பிக்சர்ஸின் 'நாடோடி’ படத்தில் எம்.ஜி.ஆரோடு நடித்தேன்.
தெலுங்கில் 'அனக அனகா’, 'ஒக்க தண்ட்ரி’, 'ஆட பில்லல’, 'தண்டரி புட்டிந்தி கௌரவம்’ ஆகிய படங்கள் எனக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தன.
கன்னடத்தில் கிருஷ்ணதேவராயா படம் வெள்ளிவிழா கண்டதோடு எனக்கு மாநில விருதையும் பெற்றுத் தந்தது.
முதலில் மனதுக்குள் அழுது கொண்டே நடித்த நான், பிறகு இது கடவுள் கொடுத்த வரம் என்று சமாதானம் ஆகிவிட்டேன். இதுதான் தொழில் என்று ஆனபிறகு அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
பள்ளி - கல்லூரிகளில் விளையாட்டில் ஆர்வமும், திறமையும் அதிகம். பின்னாளில் விளையாட்டு வீராங்கனை ஆவேன் என்று கற்பனை செய்தேன். ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கனவு கண்டேன்.
ஆனால், விதி வலியது. அது கொண்டு செல்லும் பாதையில்தான் போக வேண்டும். காலத்தின் கைகளில் நாம் வெறும் பொம்மைதான் என்பதை காலம் எனக்கு உணர்த்தியது.
தொழில் என்றான பிறகு நடிப்பில் அதிகக் கவனம் செலுத்தினேன். என் முதல் 'டேக்’ டைரக்டர் சொன்னபடி செய்ததால் ஓகே ஆகிவிட்டது. நான் ஒரு சின்சியர் ஸ்டூடண்டாக இருந்தது எனக்குப் பெருமளவு உதவியது. நடிப்பிலும் நடனத்திலும் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது.
ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு மாதிரி, சினிமா தொழிலின் இயல்பும் எல்லோருக்கும் தெரியும். கடவுள் எல்லோருக்கும் அறிவைக் கொடுத்திருக்கிறார். அதை வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவரவர் பொறுப்பு.
எனக்கு வம்பு பேசுவதும், வெட்டி அரட்டை அடிப்பதும் பிடிக்காது. படப்பிடிப்பு தளத்தில் நடித்து முடித்து அடுத்த ஷாட்டுக்கு காத்திருக்கும்போது கையில் ஏதாவது புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டுவிடுவேன். அல்லது, ஸ்ரீராமஜெயம் எழுதுவேன்.

நான் தமிழில் நடிக்க வந்த போது என் பெயரை மாற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொன்னார். அவர்கள் சொன்ன எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. அறுபது வயதுக்காரிக்கான பெயர்போல் இருந்தது. அதோடு என் அப்பா, அம்மா எனக்கு வைத்த பெயரை நான் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? முடியாது என்று மறுத்துவிட்டேன்.
நான் எப்போதும் கால் மேல் கால் போட்டு அமர்வது வழக்கம். எனக்கு அது வசதியாக இருக்கிறது (பேசும்போதும் கால் மேல் கால் போட்டுத்தான் அமர்ந்திருந்தார்). ஆனால் மற்றவர்கள் என்னிடம், 'கால் மேல் கால்’ போடாதீர்கள். அதுவும் எம்.ஜி.ஆர். முன்னால்’ என்று எச்சரித்து வைத்திருந்தார்கள்.
கால் மேல் கால் போட்டால் என்ன? தரையில் வைத்தால் என்ன? மரியாதை மனதில் இருந்தால் போதாதா என்று விவாதித்தாலும் மற்றவர்கள் சொன்னதால் எம்.ஜி.ஆர். முன் கால் மேல் கால் போடாமல் அமர்ந்திருப்பேன். அவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்த அடுத்த விநாடியே ஆட்டோமேடிக்காக கால்மேல் கால் போட்டுக் கொண்டு விடுவேன்.
ஒரு முறை அவர் வருவதைக் கவனிக்காமல் நான் கால் மேல் கால் போட்டிருந்ததை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். பந்துலு சார் எம்.ஜி.ஆரிடம் 'அவ சின்னப்பெண். தெரியாம செய்துட்டா’ என்றாராம். எனக்கு இப்படிப் போலி மரியாதை தருவதில் நம்பிக்கை இல்லை.
என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்றாகக் கவனித்து அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்பவள். சினிமா நடிகைகளுக்கு இயல்பான, அமைதியான குடும்ப வாழ்க்கை கிடையாது என்ற நிலை இருந்தது. அதை மாற்றி நடிகைகளாலும் எந்தப் பிரச்னையும் இன்றி குடும்பம் நடத்த முடியும் என்று நிரூபிக்க விரும்பினேன்.
சினிமாக்காரரைத் திருமணம் செய்ய விரும்பவில்லை. என் பணம், புகழ் பார்த்து வந்தால் பலனில்லை. சுற்றி எவ்வளவோ பார்த்துவிட்டோம். அப்பா, அம்மா பார்த்து வைக்கிறவரை திருமணம் செய்துகொள்வோம் என்று நினைத்தேன்.
இதற்குள் தங்கைகளுக்குக் கல்யாணமாகிவிட்டது. '21, 22 வயசுல இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களே’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். பந்துலு இயக்கத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நல்ல கணவன் கிடைக்க ராகவேந்திரரை வேண்டிக் கொள்ள சொன்னார்கள். நல்ல மனதோட ஒரு மனிதர் கணவராகக் கிடைத்தால் அவரோடு மந்திராலயம் வருவதாக வேண்டிக்கொண்டேன்.
'மனபௌகித சொசெ’ என்ற படத்தில் நடிக்கும்போது நான் சீனியர். விஷ்ணுவர்தன் ஜூனியர். அவருக்கு என்னிடம் பயம். இருவரின் குடும்பமும் கன்சர்வேடிவ். அவர் முதலில் என் பெற்றோரிடம்தான் நன்றாகப் பழகி நல்ல பேர் எடுத்தார். என் பெற்றோர்தான் இவரைப் பற்றி என்னிடம் பேச்செடுத்தார்கள். என் வேண்டுதலின்படி என்னை நேசிக்கிற மனிதரே எனக்குக் கணவராக ஆனதும் கணவரோடு மந்திராலயம் போய் நன்றி சொன்னேன்.
இனிமையான, அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்தினேன். நானே கடைக்குப் போய் பொருட்களை வாங்கி வருவேன். திருமணமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கணவர்தான் 'உனக்குப் பிடித்தால் தொடர்ந்து நடி’ என்றார். எனக்குப் பிடித்த, பொருந்துகிற வேடங்கள் கிடைக்கும்போது நடிக்கிறேன்.
இனிய குடும்பம், திருப்தியான தொழில் என்று சந்தோஷமாக இருக்கிறேன்.''

என்னை விட எல்லாருமே கிரேட் ஆர்டிஸ்ட் நான் நடித்த காலத்திலும் சரி இப்போது இருக்கும் நடிகர் நடிகர்களும் சரி எல்லாருமே ரொம்ப கிரேட் இவர்களுக்கு எல்லாம் முன்னாடி நான் ஒன்றுமே இல்லை நான் ரொம்ப சின்னவ நடிப்புல சின்ன ஆர்டிஸ்ட் சிவாஜி செட்டில் வந்து உட்காரும்போது அந்த கேரக்டரா தான் உக்காருவார் ஏதோ ஒரு கேரக்டர் சொல்லி இருப்பாங்க செத்துக்கொள்ள வந்து அவர் அந்த கேரக்டரா தான் வருவார் ஏதும் பேச மாட்டேன் யார்கிட்டயும் பேச மாட்டார்

========================================================================================

'இளமைக்காலங்கள்' படத்தில் இன்னொரு பாடல் 'இசைமேடையில் இன்பவேளையில்' 

பாடல் கங்கை அமரன்.  இந்தப் பாடலை இளையராஜா தர்பாரி கானடா ராகத்தில் அமைத்திருக்கிறார் என்பது சுவாரஸ்யமான தகவல்.

பாடலின் ஆரம்பம் ஒரு ஹம்மிங்.  அப்புறம் இளையராஜா ராஜாங்கம் ஆரம்பம்.  அந்த ஆரம்ப இசையைக் கேளுங்களேன்..  பாடலில் SPB வரும் ஆரம்ப இடம் பல்லவியில் ஒரு மென்மையான ஹம்மிங்குடன் SPB குரல் வரும்.  முதல் சரணத்தை அவரே தொடங்குவார்.  

தான் குரு போல நினைக்கும் எஸ் ஜானகி அம்மாவுடன் பாடி இருப்பார்.  ஜானகி அம்மாவின் திறமைகளை, பெருமைகளை அடிக்கடி பேசிக் கொண்டே இருப்பார் SPB.  முகபாவங்கள் மாறாமல் ஜானகி அம்மா வெளிப்படுத்தும் குரலின் பல்வேறு குழைவுகள், ஏற்ற இறக்கங்கள்..  குழந்தை போலவும் பாடும் திறமை, கிழவி போலவும் பாடும் திறமை.,,,  முதலியவற்றை வியந்து பாராட்டுவார். 

முதன் முதலில் ஒரு கல்லூரி விழாவில் ஜானகி அம்மா நடுவராக இருக்க, முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை இவர் எதிரில் பாடச்சொல்ல, ஒவ்வொருவராக பாடியதும், 'சட்'டென்று எழுந்த ஜானகி  அம்மா மேடையிலேயே "நீங்கள் இரண்டாவது பரிசு என்று சொல்லி இருக்கும் இவருக்கல்லவா முதல் பரிசு கொடுத்திருக்க வேண்டும்?  எப்படி, ஏன் இரண்டாவது பரிசு கொடுத்தீர்கள்?" என்று வாதிட்டாராம்.  பரிசு வாங்க வந்த SPB யிடம் "தம்பி..  உங்கள் குரல் நன்றாயிருக்கிறது...  நீங்கள் ஏன் சினிமாவில் முயற்சி பண்ணக்கூடாது?" என்று கேட்டாராம்.  "எனக்கு தமிழ் தெரியாது" என்று SPB சொன்னாராம்.  பிறகு ஜானகியம்மாவின் வார்த்தைகளைக் கேட்டு, தமிழ் கற்று சினிமாவில் முயற்சித்து வெற்றி பெற்றாராம்.  அவரது அந்த புகழ் நிலைக்கு மூல காரணமும் ஜானகியம்மாதான் என்று நன்றியுடன் அடிக்கடி நினைவுகூர்வார்.  பின்னாட்களில் அவருடனேயே இணைந்து பல நல்ல பாடல்களைத் தந்துள்ளார்.
..

S. Janaki  : இசை மேடையில்
இந்த வேளையில்
சுக ராகம் பொழியும்

 இசை மேடையில்
இந்த வேளையில்
சுக ராகம் பொழியும்
இளமை……நெருக்கம்
இருந்தும்…… தயக்கம்

 இசை மேடையில்
இன்ப வேளையில்
சுக ராகம் பொழியும்

SPB  : அஹாஹா அஹா ஹா


S. Janaki : இளமை……நெருக்கம்
இருந்தும்…… தயக்கம்

SPB  : முத்தம் தரும் ஈரம்
பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து
முகம் துடைக்கும்
முத்தம் தரும் ஈரம்
பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து
முகம் துடைக்கும்

S. Janaki : நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனியெங்கும் பூ வசந்தம்
நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனியெங்கும் பூ வசந்தம்
கன்னிக்கரும்பு……
உன்னை எண்ணி சாறாகும்

SPB  மற்றும் S. Janaki :
இசை மேடையில்
இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்
குழு : ஆஆ…ஹா…ஆ…ஹா…

SPB  : இளமை நெருக்கம்
இருந்தும் தயக்கம்

S. Janaki : பப்ப பப பப்ப பப ப…
பப்ப பப பப்ப பப பா…
பப்ப பப பா… பப்ப பப ப…

SPB  : பப்ப பப பப்ப ப…
பப்ப பப பப்ப ப…

S. Janaki: கன்னி மகள் கூந்தல் கலைந்திருக்க
வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க
கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க
வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க

SPB  : போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேன் எடுக்க
போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேன் எடுக்க
தங்க கொழுந்து தொட்டவுடன் பூவாக

SPB  மற்றும் S. Janaki :
இசை மேடையில்
இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்
குழு : ஆஆ…ஹா…ஆ…ஹா…

SPB  : இளமை நெருக்கம்
இருந்தும் தயக்கம்

SPB மற்றும் S. Janaki :
ம் ஆஹா ஹா லலா லலா
ம் ஆஹா ஹா லலா லலா

47 கருத்துகள்:

  1. ஈரமான ரோஜாவே மிகவும் ரசிக்கும் பாடல். இசைமேடையில்... ஹாஸ்டல் காலங்களை நினைவுபடுத்துகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை ..... படத்தின் பெயருக்கு ஜஸ்டிஃபிகேஷன் வந்துவிட்டது.

      நீக்கு
  2. படங்களைப் பார்த்ததும் வயதாகியும் இந்த நடிகைகள் எவ்வளவு குஷியாக இருக்கிறார்கள் என்று தோன்றியது. இல்லை, அதுவும் நடிப்பு தானோ?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். ஹேமமாலினி இந்த வயதிலும் கென்ஸ்டார் விளம்பரத்தில் இளமையாக தோன்றி விளம்பரம் செய்கிறார். கனவுக்கன்னியை இப்பொழுது கனவுக்கிழவி என்று சொல்ல முடியவில்லை!!

      நீக்கு
  3. திருப்பித் திருப்பி வரும் அதே பாடல் வரிகளைப் பார்த்ததும் அனாவசியமாக நீட்டுகிறார்களோ என்று அவெர்ஷனாக இருந்தது. அதுவும் அந்த இரண்டாவது பாடலில் 'இசை மேடையில் இந்த வேளையில்..' என்ற வரியை அடிக்கடி பார்த்த பொழுது புதுப்புது வார்த்தைகள் கிடைக்கத் துப்பில்லாமல் எழுதினதையே எழுதி ஒப்பேத்துகிறார்களோ என்ற எரிச்சல் தான் மிஞ்சியது.

    மனசிலே பட்ற ஒண்ணைச் சொல்றேன். கேட்டுக்கங்க.. எல்லாம் இசை தான், ஸார். அது மட்டும் இல்லேனா இவங்க லட்சணம் எல்லாம் ஊத்திக்கிட்டு போயிடும் ஸார்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்... சமீபத்தில் ஸ்டாண்ட் அப் காமெடிகள் அலெக்ஸ் வாதாபி கணபதி பாடலை எடுத்துக்கொண்டு இப்படித்தான் கிண்டல் செய்தார். பல்லவி வரிகள் திரும்பத் திரும்ப வருவது இயல்பு. வரிகளை வெறுமனே வாசிக்காமல் நேசிக்கவும்!! வெறும் வாசிப்பு மட்டும் இல்லாமல் , கூடவே பாடலைக் கேட்டால் அது ஏன் அப்படி திரும்பத் திரும்ப வருகிறது என்றும் தெரியும்!

      நீக்கு
  4. பதில்கள்
    1. முருகா சரணம். வாங்க செல்வாண்ணா... வணக்கம்.

      நீக்கு
  5. ஸ்ரீராம், அனுஷ்கா பிறந்தநாளுக்கு அவர் நடிக்கும் பாடல் ஏதாவது
    பகிர்வார் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல்களில் அனுஷ்காவை போட்ட குழப்பிக் கொள்வதில்லை! அவர் பார்க்க மட்டும்தான்.

      நீக்கு
  6. இரண்டு பாடல்களுமே சிறப்பானவை...
    அப்போது சிங்கப்பூரில் இருந்தேன்.,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி செல்வாண்ணா.... நான் மதுரையில் இருந்தேன்!!!

      நீக்கு
  7. தண்ணீரில் மூழ்காது
    காற்றுள்ள பந்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணோடு உறவாடி
      கையோடு நீ வந்து...

      நீக்கு
    2. ஹா... ஹா.... ஹா.... மேலே பாடல் வரிகளில் என்ன கொடுத்திருக்கிறேன் என்று படித்தீர்களா? இது சும்மா நான் அமைத்தது!

      நீக்கு
  8. இளமைக் காலங்கள் சசிகலா வெற்றி விழாவில் கமலோடு நடித்தாரோ?இப்போது எங்கே இருக்கிறார்? அந்தப் படத்தில் 'ராகவனே ரமணா ரகுவீரா..' என்று ஒரு நல்ல பாட்டு உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா... இது ஒரு சிரமம்! நான் ராகவனே ரமணா பகிர்ந்து இருந்தால் இதில் ஈரமான ரோஜாவே என்று ஒரு பாடல் இருக்கும் என்று கமெண்ட் வரும்..!! :))

      நீக்கு
  9. பாரதியின் அழகு குறையவே இல்லை. வைஜெயந்தி மாலா சாயல் என்பதை விட, மாதுரி தீஷித் ஜாடை என்பஹு பொருத்தமாக இருக்குமோ?
    பாரதியின் பேட்டி காணொளி நானும் பார்த்தேன். அவர் உயரமாக இருந்ததால் சிவகுமார் அவரோடு நடிப்பதை தவிர்த்தாராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இதிலும் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறேன்

      நீக்கு
  10. தண்ணீரில் மூழ்காது
    காற்றுள்ள பந்து...
    என்னோடு நீ
    பாடி வா சிந்து..

    - அப்போது சிறந்த நகைச்சுவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா.... ஹா.... மேலே பாடல் வரிகளில் என்ன கொடுத்திருக்கிறேன் என்று படித்தீர்களா? இது சும்மா நான் அமைத்தது!

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. முதல் பாடல் அடிக்கடி கேட்ட பாடல் , அடுத்த பாடல் சில தடவை கேட்டு இருக்கிறேன், மனதில் நிற்காத பாடல், பாரதி பேட்டி படித்து இருக்கிறேன், மீண்டும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா... எனக்கு முதல் பாடலை விட இரண்டாவது பாடல்தான் பிடிக்கும்!! நடிகை பாரதி பேட்டரி இணையத்தில் வருவது தானே? அவள் விகடன் காரர்கள் எடுத்த பேட்டி.

      நீக்கு
  13. முதல் பாடலும் , அடுத்த பாடலும் ஒரே படமா ? இன்பமாக பாடும் பாடல் முதலில் இடம் பெற்று இருக்க வேண்டுமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக நான் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவோ கடைசியாக வெளியிடும் பாடல் என் தெரிவில் முதலிடம் பிடித்திருக்கும் பாடலாக இருக்கும் . எனவேதான் என்றும் இந்தப் பாடல் இரண்டாவதாக பகிர்ந்தேன். சோகம் தீர்ந்து சந்தோஷம் வந்துவிட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்!!

      நீக்கு
  14. ஈரமான ரோஜாவே பாட்டு ரொம்ப ரசித்த பாடல். கல்லூரியில் மேடையில் பாடியும் இருக்கிறேன்! இப்பவும் கேட்டு ரசித்தேன், ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா.... இந்தப் பாடல் தான் அந்த காலங்களில் ஃபேமஸ். பொதுவாக சோக ராகம் தானே அனைவரும் சுகமாக ரசிக்கும் ராகமாக இருக்கும்.

      நீக்கு
  15. யுட்யூபில் கமென்ட்ஸில் இப்படி நீளமாகவும் கருத்துகள் வருகின்றனவா? ஆச்சரியமாக இருக்கிறதே. பதிவு போலப் போட்டிருக்கிறார்! சுவாரசியமான தகவலும் கூட.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் ஆச்சரியமாகத் தான் இருந்தது. சில சமயங்களில் இப்படியும் உண்டு . ஏதோ ஒரு ரசிகர் எழுத வேறு இடம் இல்லாமல் இங்கு கொட்டி தீர்த்து இருக்கிறார்!!

      நீக்கு
  16. பாரதியா இவங்க? குறிப்பிட்டிருக்கும் படங்களைக் சும்மாவேனும் இவங்க வரும் சீனைப் பார்க்கவேண்டும். பாரதி என்று ஒரு நடிகை இருக்கிறார் என்பதும் விவரங்களும் எனக்குப் புதுசு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடோடி, தங்கச் சுரங்கம் என்று பல படங்களில் நடித்திருக்கிறார் பாரதி.

      நீக்கு
  17. கல்லூரியை விட்டுப் போக மனமில்லாமல் விருப்பமின்றி நடிக்க ஆரம்பித்தேன்.//

    விருப்பமின்றி நடித்தேன்னு இன்னும் சிலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதெப்படி விருப்பமின்றி நடிக்க முடியும் புரியலை....

    விருப்பமில்லாத கல்யாணம், விருப்பமில்லாத வேலை....விருப்பமில்லாத பள்ளி கல்லூரி இதெல்லாம் ஓகே....பாடத்தை விருப்பமில்லாமல் படிக்க முடியுமா? ரொம்பச் சுமார் மார்க்தானே கிடைக்கும்....இல்லை ஃபெயில் ஆவோம். அப்படித்தானே கலையும் விருப்பமில்லைனா எப்படி நடிக்க வரும்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா அப்போதும் இப்போதும் எப்போதும் அது ஃபேஷன் தான்!

      நீக்கு
  18. அதோடு என் அப்பா, அம்மா எனக்கு வைத்த பெயரை நான் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? முடியாது என்று மறுத்துவிட்டேன்.//

    எனக்கு இப்படிப் போலி மரியாதை தருவதில் நம்பிக்கை இல்லை.//

    அட! நல்ல சுய சிந்தனை ....தைரியம்...

    நிறைய சுவாரசியமான விஷயங்கள். விஷ்ணுவர்த்தன் கேள்விப்பட்ட பெயர் நடிகர் ஆனால் எப்படி இருப்பார் என்று தெரியலையே பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று நடிகர் அஜித் பேட்டி படித்தபோது அவரும் அதையே சொல்லி இருந்தார்

      நீக்கு
  19. ஜானகி அம்மாவின் திறமைகளை, பெருமைகளை அடிக்கடி பேசிக் கொண்டே இருப்பார் SPB. முகபாவங்கள் மாறாமல் ஜானகி அம்மா வெளிப்படுத்தும் குரலின் பல்வேறு குழைவுகள், ஏற்ற இறக்கங்கள்.. குழந்தை போலவும் பாடும் திறமை, கிழவி போலவும் பாடும் திறமை.,,, முதலியவற்றை வியந்து பாராட்டுவார். //

    கூடவே ஜானகியிடம் ரொம்பவே குறும்பும் செய்வார் அதை அவரே சொல்லியிருக்கிறார்.

    மேடை விஷயம் இப்பதான் தெரிகிறது ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேடை விஷயம் என்று இல்லை... பாடல் ரெக்கார்டிங் போதும் இதே போல குறும்புகள் உண்டு. ஒரு முறை அவருக்கு இருமல் என்று எஸ்பிபி ஏதோ அவர் சாப்பிடும் இருமலுக்கான ஒரு மாத்திரையை கொடுத்து விட ,எல்லா மாத்திரையும் எனக்கு அலர்ஜியாகும் எனக்கு என்ன மாத்திரை சரியாக இருக்கும் என்று என் கணவருக்கு தான் தெரியும் என்று ஜானகி அம்மா சொல்லியும் எஸ் பி பி மாத்திரை கொடுத்து சாப்பிட வைத்துவிட ஜானகி அம்மா அலர்ஜியால் அவஸ்தை பட்டு கணவர் வரும் வரை தவித்துப் போனாராம்

      நீக்கு
  20. இரண்டாவது பாட்டும் நிறைய கேட்டதுண்டு. தர்பாரி கனடா என்பது இடையில்தான் தெரியும் அழகாகப் போட்டிருக்கிறார் ராஜா. தர்பாரி கனடாவை இப்படியும் பயன்படுத்த முடியும் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீ பாதி நான் பாதி கண்ணே பாடலுக்கு ஆரம்பத்தில் வலஜி ராகத்தில் ஆரம்பித்த பிறகு ராகம் மாற்றி போட்டிருக்கும் வித்தையை கார்த்திக் இளையராஜாவிடமே கேட்டிருந்தார். அவர் சொன்ன பதில் ரொம்ப சுவாரஸ்யம். அதைத்தான் நான் உங்களுக்கு அனுப்பி இருந்தேன் .உங்களுக்கு அது ஓடவில்லை, ஓபன் ஆகவில்லை என்று சொன்னீர்கள்.

      நீக்கு
  21. இரண்டு பாடல்களும் கேட்டு இருக்கிறேன்.
    இன்று மீண்டும் கேட்டேன்.

    பாரதியின் பேட்டி இப்போதுதான் கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடலைக் கேட்டு ரசித்ததற்கும், பாரதி விஷயம் படித்ததற்கும் நன்றி மாதேவி.

      நீக்கு
  22. //அவள் இருக்கும் தெருவில் தெய்வம் தந்த வீடு ஜெய்கணேஷ் மாதிரி பாடி வருவார்//

    மிகப் பொருத்தமான வார்த்தை ஜி நானும் நினைத்தேன்.
    அன்றைய காலங்களில் ஆர்க்கெஸ்ட்ராவில் இந்தப்பாடல் நிச்சயம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா... உங்களுக்கும் அப்படி தோன்றியதா? நன்றி ஜி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!