21.2.26

பாசுரம் முன்னுரை - பகுதி 8 :: நான் படிச்ச கதை

 

 நாலாயிர திவ்யப் பிரபந்தம் வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் பகுதி 8 

ஆளவந்தார், தன் ஆச்சார்யரான மணக்கால் நம்பி சொன்னபடி, குருகைக் காவலப்பனைச் சந்தித்து அவரிடம் உள்ள ரஹஸ்யத்தைப் பெற்றுக்கொள்ள வருகிறார் என்று சென்ற வாரம் நிறுத்தியிருந்தேன். குருகைக்காவலப்பரைப் பார்த்து, தனக்கு யோகரஹஸ்யத்தைச் சொல்லித்தரவேண்டும் என்று கேட்டார் ஆளவந்தார். அதற்கு குருகைக்காவலப்பன், தன்னுடைய இறுதிக்காலம், வருகிற தை மாசம் பூச நட்சத்திரச் சேர்க்கையான பகல் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் வருகிறது. அதற்குச் சற்று முன்பு வந்தால் உபதேசிக்கிறேன் என்று ஒரு ஓலை நறுக்கில் எழுதித் தந்தார். 

ஆளவந்தாரும் திரும்ப திருவரங்கத்துக்கு வந்து தன்னுடைய கைங்கர்யங்களைச் (தினசரி வேலைகளைச்) செய்துகொண்டு வந்தார். இப்படி இருக்கும்போது திருவரங்கத்தில் திரு அத்யயன உத்ஸவம் நடக்க ஆரம்பித்தது. திருவத்யயன உத்ஸவம் என்பது வைகுண்ட ஏகாதசி தொடங்கி பகல் பத்து, இராப்பத்து என்று இருபத்தோரு நாட்கள் நடக்கும் விழா (டிசம்பர் 29ல் வைகுண்ட ஏகாதசி. மார்கழி மாதம்). ஆளவந்தார் அந்த விழாவுக்குச் சென்றபோது, அரையர் சேவை (அதாவது திருவரங்க உற்சவர் அழகிய மணவாளர் முன்பு, திருவாய்மொழி பாசுரங்களை இராக பாவத்துடன் சேவிப்பது) நடந்துகொண்டிருந்தது. அப்போது திருவரங்கப் பெருமாள் அரையர் (இவர் ஆளவந்தாரின் கடைசி மகன். இருந்தாலும் அரையர் சேவை பண்ணும்போது, பாசுரங்களைப் பாடும் சமயம், அந்த நம்மாழ்வாரே பெருமாள் முன்பு பாசுரங்களை அர்த்தலயத்தோடு சேவிப்பதாக ஐதீகம்) திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றைச் சேவித்துக்கொண்டிருந்தார். அது திருவாய்மொழியின் பத்தாம் பத்தில் இரண்டாவது பத்துப் பாசுரங்களான, திருவனந்தபுரம்  பற்றிய கெடுமிடராயினவெல்லாம் என்று தொடங்கும் பாசுரங்கள். அதில் எட்டாவது பாசுரத்தை அரையர் பாடும்போது, ‘நடமினோ நமர்களுள்ளீர்’  வார்த்தைகள் வரும் சமயம், ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் பார்த்து திரும்பத் திரும்பச் சேவித்தார். அந்தப் பாசுரத்தைப் பார்க்கலாமா? 

கடுவினை களையலாகும்* காமனைப் பயந்தகாளை*

இடவகை கொண்டதென்பர்* எழிலணி அனந்தபுரம்*

படமுடையரவில் பள்ளி* பயின்றவன் பாதம்காண*

நடமினோ நமர்களுள்ளீர்!* நாம் உமக்கறியச் சொன்னோம். (10-2-8) 

பொருள்: அழகு அணிந்த திருவனந்தபுரம் என்ற திவ்யதேசம், மன்மதனைத் தனக்குப் பிள்ளையாகக் கொண்ட பெருமான், தனக்கு இருப்பிடமாகக் கொண்ட இடம். அந்தப் பெருமாளைச் சேவித்தால்,  நம்முடைய பாபங்கள் அனைத்தும் விலகும்.  நம்முடைய சம்பந்தம் பெற்றவர்களே (ஆழ்வார் இப்படிச் சொல்கிறார்), அங்கு படங்கள் உடைய பாம்புப் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும் அனந்தபத்மனாபனின் திருவடிகளைச் சேவிக்க உடனே செல்வீர், நாம் உங்களுக்கு இதனைத் தெரிவித்தோம். 

படமுடை அரவு-படங்கள் உடைய பாம்பு,  கடுவினை-கொடிய வினகள், நமர்கள்-நம்முடைய சம்பந்தம் பெற்ற வைணவர்கள் 

தம்முடைய மகன் சேவிக்கிறார் என்று ஆளவந்தார் நினைக்கவில்லை. நம்மாழ்வாரே தனக்குக் குறிப்பால், திருவனந்தபுரத்துக்குச் செல்லச் சொல்கிறார் என்று நினைத்த ஆளவந்தார், தன் சிஷ்யர்களுடன் திருவனந்தபுரம் நோக்கி பல்லக்கில் விரைந்துவிட்டார். அங்கு சென்று கோயிலை அடைந்து அனந்தபத்மனாபனைச் சேவித்து அங்கு சில நாட்கள் தங்கியிருந்தார். அப்போது ஒரு நாள், குருகைக் காவலப்பன் தன்னிடம் கொடுத்த ஓலை முறி நினைவுக்கு வந்து அதனை எடுத்துப் பார்க்க, அன்றைய தினம் குருகைக்காவலப்பன், தாம் பரமபதிக்கப் போவதாகச் சொல்லிய தினம், நேரம் கடந்துவிட்டதை உணர்ந்தார். யோகாப்பியாச ரஹஸ்யம் கிடைக்காததும் ஆச்சார்ய அனுக்ரஹமே என்று உணர்ந்துகொண்டார் ஆளவந்தார்.  அதனால் வைணவர்களுக்கு தியானம் செய்யும் வழிமுறை கிடைக்காமலேயே போய்விட்டது.

திருவனந்தபுரம் திவ்யதேசம் பற்றி நம்மாழ்வார் பத்துப் பாசுரங்கள் பாடியிருக்கிறார். அதில் முதல் பாசுரத்தைப் பார்க்கலாமா? 

##கெடும் இடராயவெல்லாம்* கேசவா வென்ன* நாளும்-

கொடுவினை செய்யும்* கூற்றின் தமர்களும் குறுககில்லார்*

விடமுடை அரவில்* பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்*

தடமுடை வயல்* அனந்தபுரநகர் புகுதும் இன்றே.  (10-2-1)   

பொருள்: கேசவா என்று கேசவனின் நாமத்தைச் சொன்னால், நம் இடர்கள் எல்லாமே தொலைந்துபோகும். நாளும் கொடுமைகளைச் செய்ய நிற்கின்ற யம தூதர்கள் எல்லோரும் நம்மை அணுகமாட்டாது ஓடிவிடுவர். விஷமுள்ள பாம்புப் படுக்கையில் விரும்பிப் படுத்துக்கொண்டிருக்கும் அனந்தபத்மனாபன் இருக்கின்ற, வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற தடாகங்கள் நிறைந்த வயல்களுடைய திருவனந்தபுரமாகிய திவ்யதேசத்தை இன்றே புகுவோம். 

தடமுடை-தடாகங்கள் உடைய, சுரும்பு அலற்றும்-வண்டுகள் ரீங்காரம் செய்யும், கூற்று-யமன், தமர்கள்-அவனைச் சேர்ந்தவர்கள், விடமுடை அரவு-விஷங்கள் நிறைந்த அனந்தாழ்வான் என்று சொல்லப்படும் ஐந்து தலை நாகம் 

இறைவனுக்கு கேசவன் என்ற திருநாமத்திற்குப் பல காரணங்கள் இருந்த போதிலும், இங்கு, கம்ஸனது ஏவுதலால், குதிரை வடிவெடுத்து கிருஷ்ணனை அழிக்க வந்த கேசி என்ற அசுரனை வதம் செய்ததால் கேசவன் என்ற திருநாமம் சொல்லப்படுகிறது. அவன் ஒரு விரோதியை அழித்தான். ஆனால் அந்த நாமம், நமக்கு விரோதிகளான ப்ராரப்த சஞ்சித கர்மங்கள் என்ற பாகுபாடுகள் இல்லாமல் எல்லா விரோதிகளையும் அழிக்கும் வல்லமை உடையது என்பது பொருள். 

தொடர்வோம்...

******************************************************************************************

நான் படிச்ச கதை

சைபார்க் மனிதன்

கதையாசிரியர்: ஜானி JJP

Tamil film industry. asst director. அகில உலக ஏலியன் ரசிகர்மன்ற தலைவர். அமானுஷ்யம், திரில்லர், ஏலியன் சார்ந்த அறிவியல் கதைகள் எழுத பிடிக்கும். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. அதிசயங்களை எதிர்பாருங்கள்.

Ebenezer Paul Sahayam·

மகனே Johny jjp எங்களைவிட்டு  கடவுளிடம் 27-05-2021 சென்று விட்டாய்.  உன் கதைகளை படித்தேன், ஆனால் உன் திரைக்கதைகள் லாக்டவுன் முடிந்து ரிலீஸ் ஆனவுடன் ஊருக்கு வருவேன் என்றாய் ஆனால் கடவுளிடம் சென்று விட்டாய் நீ பணியாற்றிய படங்களை எப்படி பார்ப்போம்?

Dad. Ebenezer

ஆசிரியர் அறிமுகம் இது போதும்.

 முன்னுரை.

இதுவரை இப்பகுதியில் அறிவியல் சார்ந்த புனைவுகள் (science fiction) இடம் பெற்றதில்லை.  புகழ் பெற்ற அறிவியல் புனைவுகள் சுஜாதாவை தவிர வேறு யாரும் எழுதியதாக என் அறிவில் படவில்லை. ஓரளவில் ராண்டர் கய் மற்றும் ஜாவர் சீதாராமனையும் எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் கதைகள் கிடைக்கவில்லை. அந்த அளவில் சுஜாதா வெற்றி பெறுகிறார்.  சுஜாதா எழுதிய சில புனைவுகளில் உள்ள நிகழ்ச்சிகள், மற்றும் சில உபகரணங்கள் வியக்க தக்க வகையில் சில வருடங்களில் நிகழ்ந்ததை சுட்டி காட்ட முடியும். அத்தகைய எழுத்தாற்றல் அவருடையது.  

கொடுக்கப்பட்டுள்ள கதை ஒரு திரைக்கதை போன்று இருப்பது., காரணம் திரைத்துறையில் உள்ள ஒருவர் எழுதியது. கதை புனைவு என்றே சொல்ல முடியும்.

ஒரு அறிமுக எழுத்தாளர் என்ற முறையில் கதையை வாசிக்கலாம். சிறப்பு என்று சொல்வதற்கில்லை. ஏலியன் என்ற சொல் இங்கு வேற்று கிரக வாசிகள் என்ற முறையில் கையாளப்பட்டுள்ளது, அல்லாமல் வேற்று நாட்டு மனிதர்கள் என்ற முறையில் அல்ல.  

கதை sirukathaigal.com இல் இருந்து எடுக்கப்பட்டது.

சைபார்க் மனிதன் 

இமையமலை பகுதியில் ஏலியன் நடமாட்டத்தை கண்காணிக்கவும், ஏலியன் பற்றிய ஆராய்ச்சிக்கும், இந்திய அரசாங்கம் ரகசியமாக ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை ராணுவத்துடன் இணைந்து நடத்திவருகிறது. திடீரென ராணுவ தலைமை அலுவலகத்தில் இருந்து அங்கு தகவல் ஒன்று வருகிறது.

எப்பொழுதும் அமெரிக்காவில் மட்டுமே தென்பட்ட UFO (UNIDENTIFIED FLYING OBJECT) எனப்படும் பறக்கும் தட்டுக்கள் முதல் முறையாக இந்தியாவில் இமைய மலைப்பகுதியில் இந்திய ராணுவ எல்லையில் ராணுவ வாகனம் ரோந்து செல்லும் பொழுது சில வினாடிகள் அவர்கள் முன் தோன்றியுள்ளது. உடனே நமது ராணுவ வீரர்கள் அதை பீரங்கியால் தாக்கி உள்ளனர். பதிலுக்கு அவர்களும் லேசர் ஒளியால் தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் அந்த UFO சுட்டு வீழ்த்தப்பட்டது. மேற்கு திசையில் பாதுகாப்பு கோபரத்தில் இருந்து சுமார் இருபதாவது கிலோமீட்டர் தொலைவில், பத்து பேர் கொண்ட நமது ராணுவ குழு அந்த UFO வை சுற்றி பாதுகாப்பில் உள்ளது. UFO பற்றிய ஆராய்ச்சியாளர்களும் ஏலியன் பற்றிய ஆராய்ச்சியாளர்களும் உடனே அந்த இடத்திற்கு வரவும் என்பதே அந்த தகவல்.

வருட கணக்கில் காத்திருந்த அந்த நிகழ்வு இப்பொழுது நடந்துள்ளது. உடனே ஆராய்ச்சியாளர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர். அந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜானும் ஒருவர். ராணுவ படை சூழ ஜானும் டாக்டர் ஒருவரும் ஆர்வமாக அந்த இடத்தை நோக்கி தனி இராணுவ வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். ஜானிற்கு இந்த அனுபவம் புதுவிதமாக இருந்தது. போன விடுமுறையில் வால்பாறை சென்ற பொழுது அங்கு ஒரு இடத்தில் யானை இறங்கிய செய்தியை உள்ளூர்வாசிகள் மூலம் கேள்விப்பட்டவுடன் ஜானும் அவன் நண்பர்களும் யானையை பார்க்க நடு இரவில் அந்த இடத்தை தேடி சென்றது ஞாபகத்திற்கு வருகிறது. யானையை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஒருபுறம், திடீரென யானை சாலையில் நம்மருகே வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் ஒருபுறம் இருக்க, பயத்தில் யானையை பார்க்க சென்ற அதே பீலிங் இப்பொழுதும் ஏற்படுகிறது. இவ்வளவு நாள் ஏலியனையும் UFO வையும் எப்பொழுது பாப்போம் என்றிருந்த ஆர்வம் இப்போது இரண்டையும் பார்க்க போகிறோம் என்றவுடன் அச்சமாக மாறியுள்ளது. அதற்கு காரணம் அந்த UFO வின் உள்ளே இருக்கும் ஏலியன்கள் நம்மை விட மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கலாம், அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவைகளாக இருக்கலாம் என்பதே.

சுமார் அரைமணிநேர பயணத்துக்கு பின் அந்த இடத்தை அடைகின்றனர். புகை மூட்டதிற்க்கு நடுவே அந்த பறக்கும் தட்டு தலைகீழாக கவிழ்ந்து கிடக்கிறது. அழகிய வேலைபாடுகளுடன் கூடிய வெளிப்புற தோற்றம். அதன் அடிப்பாகம் பளபளக்கும் தன்மையோடு கண்ணாடிபோல் உள்ளது. ரெக்கை ஏதும் இல்லாமல் சிறுவர்கள் விளையாடும் அழகிய விளையாட்டு பொருள் போன்று இருக்கிறது. லேசான …..ம்…… என்ற தொடர் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

வண்டியில் இருந்து இறங்கி, ஜானும் அவர் குழுவினரும், மற்றும் டாக்டர் ஒருவரும் அந்த அதிசய காட்சியை பார்த்தவாறே அந்த UFO நோக்கி செல்லும்பொழுது, திடீரென அந்த ஹம்மிங் ஓசை அதிகமாகிறது. ராணுவம் உசார் ஆகிறது. ராணுவ வீரர்கள் அந்த UFO வை தாக்க தயார் நிலையில் உள்ளனர். ஜானும்,மருத்துவரும் திரும்ப பாதுகாப்பாக வண்டிக்கே சென்று விடுகின்றனர்.

அந்த சத்தம் இன்னும் அதிகமாகிறது. அதன் வெளிப்புறம் முழுவதும் மின்மினுக்கும் லைட் அணைந்து அணைந்து எறிகிறது. திடீரென கவிழ்ந்து கிடக்கும் UFO வின் கதவு திறப்பது போல் சத்தம் கேட்கிறது. ராணுவ வீரர்கள் பயத்துடனும் சற்று தைரியத்துடனும் அந்த கதவை நோக்கி குறிவைத்து தாக்குவதற்கு காத்திருக்கின்றனர்.

அப்பொழுது திடீரென அவர்கள் பின்புறம் இருந்து தாக்கப்படுகிறார்கள். அந்த இடம் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. லேசர் ஒளி, குண்டுகள் போல் அவர்கள் மேல் பட்டு தெறிக்கிறது. அந்த தாக்குதலை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. தாக்குபவர்களும் புகையில் சரிவர தெரியவில்லை. ராணுவ வீரர்கள் மறைந்திருந்து தாக்குகிறார்கள், சிறிது நேர தாக்குதலுக்கு பிறகு புகை லேசாக விலகவும் தாக்குவது நம்மை போல் முக மூடி அணிந்த மனிதர்கள் தான் என்பது தெரிகிறது. மனிதர்கள் தான் ஆனால் கையில் வித்தியாசமான ஆயுதம்.

ஜான் சற்று தொலைவில் இன்னொரு UFO நிற்பதை பார்கிறார். ராணுவ வீரர்களும் அந்த UFO வை பார்கின்றனர். ஏலியன் என்றால் விசித்திர தோற்றத்தில் இருக்கும் என நினைத்தால் எப்படி மனிதர்கள் போல் இருக்கிறது. இல்லை இவர்கள் வேற்று கிரகத்தில் வாழும் நம்மை போன்ற மனிதர்களா..? இல்லை மனித வேடமிட்ட ஏலியன்களா என அடுக்கடுக்காக அவர்களுக்குள் கேள்விகள் எழுகிறது.

அப்பொழுது நான்கு பேர் கொண்ட அந்த முக மூடி அணிந்திருந்த குழு நாலா பக்கமும் தாக்குதலை நடத்தி கவிழ்ந்து கிடந்த UFO வின் அருகில் வருகின்றன. அதன் தாக்குதலை சமாளிக்க இயலாமல் ராணுவம் UFO வை விட்டு பின்வாங்குகிறது. அந்த உருவங்கள் தொடர்ந்து அக்கினியால் தாக்கி கொண்டு முன்னேறுகிறது. ராணுவ வீரர்கள் எவ்வளவு சுட்டாலும் அந்த உருவங்களுக்கு ஏதும் ஆகவில்லை. அந்த நான்கு பேரில் ஒரு உருவம் அந்த UFO வின் கதவில் கை வைக்கிறது அவ்வளவு நேரம் இருந்த அந்த ஹம்மிங் சத்தம் நின்று விடுகிறது.

சிறிது நேர இடைவெளிக்கு பின் கதவு திறக்கிறது. மேலிருந்து கீழ் அடுக்காக இரண்டு தலையுடன், மூன்று கண்களுடன், நான்கு கைகள் மற்றும் நான்கு கால்கள் கொண்ட ஒரு விசித்திர ஜந்து நடக்க முடியாமல் தட்டு தடுமாறி உள்ளே இருந்து வெளியே வந்து சரிந்து விழுகிறது.

அந்த விசித்திற ஜந்துவை பார்த்து ராணுவ வீரர்கள் மிரட்சியடைகிறார்கள். ஜான் அந்த விசித்திர ஜந்துவை போட்டோ எடுக்க முயற்சிக்கிறார். மொபைல் சுவிட்ச் ஆப் ஆகிறது. அந்த விசித்திர ஜந்து தான் ஏலியன். அப்படியானால் மனிதர்களைப் போல் இருக்கும் அந்த உருவங்கள் யார். எப்படி குண்டு காயங்கள் அவைகளை ஒன்னும் செய்யவில்லை. உடலில் எங்கிருந்தும் ரத்தம் வரவில்லை, என ஜான் ஆழ்ந்த யோசனையில் இருக்கும்பொழுது சட்டென ஒரு யோசனை வருகிறது. வாக்கி டாக்கியில் மேஜர்க்கு ஒரு தகவல் தருகிறார். அந்த காயம்பட்ட ஏலியனை தூக்கி கொண்டு அந்த உருவங்கள் தொடர்ந்து எதிர்த்து தாக்கியவாறு தாங்கள் வந்த UFO வை நோக்கி நகருகின்றன. அந்த உருவங்களில் ஒன்று அந்த பழுதடைந்த UFO வை நோக்கி கையில் இருந்து ஒரு நீல நிற ஒளியை அடிக்கிறது அந்த ஒளி பட்ட அடுத்த நொடி அந்த UFO திடீரென பளபளப்பாக ஒளியை கக்கி காற்றுடன் கரைந்து போகிறது.

 

திடீரென UFO மறைந்த காட்சியை கண்ட ராணுவ வீரர்களும், ஜான் மற்றும் குழுவினரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் வந்த UFO வின் அருகில் வந்ததும் ஏலியனை மற்ற மூன்று உருவமும் தூக்கிகொண்டு கதவை திறந்து உள்ளே சென்றன. கீழ் இருந்து ஒரு உருவம் மட்டும் எதிர்த்து ராணுவ வீரர்களை தாக்கிகொண்டு இருந்தது. ஜான் சொன்ன ஆலோசனைப்படி மேஜர் அந்த உருவத்தை தாக்கினார். அடுத்த நொடி அந்த உருவம் சுருண்டு விழுந்தது. அதை பார்த்த ராணுவ வீரர்கள் உற்சாகமாயினர். அதே போல் மற்றவைகளையும் சுட்டு வீழ்த்த ஆயத்தமாகிய அடுத்த நொடி அந்த UFO வில் இருந்து நீல நிற ஒளி அந்த வீழ்த்தப்பட்ட உருவத்தின் மீது பட்ட அடுத்த நொடி அந்த உருவம் காற்றில் கரைந்து போனது. கதவடைக்கபட்டு UFO நொடிப்பொழுதில் மேலெழும்பி மறைந்தது.

ராணுவ வீரர்கள் UFO மறைந்த இடத்தை வானில் தொடர்ந்து தாக்கி கொண்டு இருகின்றனர். மேஜர் கையை உயர்த்தவும் தாக்குதல் நிறுத்தபடுகிறது. அதற்குள் வண்டியில் இருந்து ஜானும் டாக்டரும் இறங்கி வருகிறார்கள்.

மேஜர், சுடப்பட்டு அந்த உருவம் வீழ்ந்த அந்த இடத்தை நோக்கி நடக்கிறார். ஜானும் அவர் பின்னால் சென்று அந்த இடத்தை பார்க்கிறார். அங்கிருந்த பனிக்கட்டியில் ஒரு சொட்டு இரத்தம் மட்டும் உறைந்து இருக்கிறது. ஜான் அந்த இரத்தம் உள்ள பனிக்கட்டியை எடுத்து டாக்டரிடம் கொடுக்கிறார். அவர் அதை வாங்கி டெஸ்ட் டியூபில் பத்திரமாக மூடி எடுத்து கொள்கிறார்.

மேஜர், ஜானை பார்த்து, எப்படி கண்டு பிடுச்சீங்க…? நீங்க சொன்னது கரெக்ட் தான்.. தேங்க்ஸ்.. என சொல்லியவாறு, கைகளை தட்டி மூவ்… மூவ்… என கத்தவும், அடுத்த நொடி அணைத்து ராணுவ வீரர்களும் ஓடி சென்று வாகனத்தில் ஏறினர். ஜானும், மருத்துவரும் ஓடி சென்று வாகனத்தில் ஏறவும் வாகனம் அங்கிருந்து ஆராய்ச்சி மையம் நோக்கி நகர்ந்தது.

ஆராய்ச்சி நிலையம் வந்ததும் மருத்துவரையும், ஜானையும் அவர்கள் ஆராய்ச்சிக்கூட வாசலில் இறக்கி விட்டுவிட்டு ராணுவ வாகனம் அலுவலகம் சென்றது. மருத்துவரும் ஜானும் ஆராய்ச்சி நிலையத்தினுள் செல்கின்றனர். டாக்டர் அந்த பனிக்கட்டியில் உள்ள இரத்தத்தை வெளியே எடுத்து மைக்ரோஸ்கோப்பில் வைத்தவாறு, அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த, அந்த மில்லியன் டாலர் கேள்வியை ஜானிடம் கேட்கிறார். டாக்டர் ராணுவத்தில் சேர்ந்து ஆறு மாதத்திற்குள் ஏலியனை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்னும் அவர் அந்த பிரம்மையில் இருந்து மீளவில்லை.

டாக்டர் :- அப்படி மேஜர்கிட்ட நீங்க என்ன சொன்னீங்க..? அந்த பெரிய உருவம் தான் ஏலியன்னுனா அப்படியானால்  அந்த மனித உருவில் இருந்தது எது ? எப்படி அந்த ஒரு உருவம் மட்டும் மடிந்தது..? அப்படி அந்த உருவத்துக்கு மட்டும் இரத்தம் வந்தது..? மற்ற உருவங்களுக்கு ஏன் காயம் ஏற்படவில்லை…?

என அடுக்கடுக்காக கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார்.. அவரை பார்த்து புன்சிரிப்பு சிரித்த ஜான் அங்கிருந்த போர்டில் “ சைபார்க் மனிதன் ” என எழுதுகிறார். டாக்டர் புரியாமல் ஜானை பார்க்கிறார்.

ஜான் :- “Cybernetic Organism என்பதன் சுருக்கம் தான் Cyborg – சைபார்க். இது, நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படும் செயற்கை உறுப்புகள் கொண்ட ஒரு உயிரினம்.”நாம இப்பதான் மனித உடலில் இயந்திரங்களைப் பொருத்தி சோதனைகள் மேற்கொண்டு வர்றோம் உயிரினமும் இயந்திரமும் ஒருங்கிணைந்து செயல்படும் அமைப்பைத்தான் சைபர்க் என்கிறார்கள்.“உயிர் மின்னியல் ( அதாவது பயோனிக்ஸ் ) விஞ்ஞானிகள், மனித உடலின் உறுப்புகள் இயங்கும் விதத்தை ஆய்வுசெய்து, அவற்றைப் போலவே இயங்கும் இயந்திரங்களை வடிவமைத்துவருகிரார்கள். செயல்பட முடியாத உறுப்புகளுக்கு மாற்றாகவோ செயலிழந்த நிலையில் உள்ளவற்றுக்கு ஆதரவளிப்பதற்காகவோ இந்த உயிர் மின்னியல் உறுப்புகள் பொருத்தப்படுகின்றன. சில உயிர் மின்னியல் சாதனங்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உங்களுக்கும் தெரியுமே…

டாக்டர் :- டயாலிசிஸ் இயந்திரம், பேஸ்மேக்கர், கைகளையோ கால்களையோ இழந்துவிட்டால் அவற்றுக்குப் பதிலாக மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய பயோனிக்ஸ் உறுப்பு, பயோனிக்ஸ் நாக்கு , பயோனிக்ஸ் கண் , பயோனிக்ஸ் குரல்வளை , இப்படி நவீன யுகத்தில் அனைத்திற்குமே மாற்று வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் பயோனிக்ஸ் மூக்கு உருவாகலைன்னு நினைக்குறேன். ஆனா சைபார்க் பத்தி நான் கேள்வி பட்டதில்லை..

ஜான் :- Cyborg என்றால் மனிதனோடு இயந்திரத்தை இணைத்து, அந்த இயந்திரம் மனித கட்டுப்பாட்டில் இயங்கி, அது அவன் உடலின் அங்கமாக பாவிக்கப்படுவது. அப்படிப்பட்ட மனிதனை Cyborg மனிதன் என்று சொல்கிறோம்.

உலகின் முதல் Cyborg மனிதர் நீல் ஹார்பிசன் (Neil Harbisson). இவர் 1984ல் லண்டனில் பிறந்தவர். பிறந்த நாள் முதல் அவருக்கு பார்வை குறைபாடு இருந்து வந்தது. அவர் கண்களால் வர்ணங்களை உணர இயலாது. உங்க பாசைல சொல்லனும்னா Colour Blindness. அனைத்தும் கருப்பு வெள்ளை சாயலில் தெரியும் (Grey Scale Vision). 2003ம் ஆண்டு, சில விஞ்ஞானிகளுடன் சேர்ந்து இந்த குறைபாட்டிற்கு மாற்று கிடைக்குமா என்று தன்னை ஆராய்ச்சி பொருளாக ஆக்கிக்கொண்டார்.

இதன் விளைவாக ஒரு புது கருவி கண்டுபிடிக்கப்பட்டது. வெளி உலகில் இருந்து வர்ணங்களை உணரும் உணரியை தன் மூளைக்குள் பொருத்தினார்கள். அதன் Antenna அவர் தலையின் பின் பகுதியில் இருந்து புடைத்துக்கொண்டு மேற்புறமாக வளைத்து நெற்றியின் மேல் நீட்டியவாறு அமைக்கப்பட்டது. அவர் பார்க்கும் திசையில் இருக்கும் வர்ணத்தை அந்த உணரி உள்வாங்கி அதை ஒலியாக மாற்றி அவர் மூளைக்கு அனுப்பி கேட்கச்செய்யும். அதாவது அவரால் வர்ணத்தை பார்க்க இயலாது கேட்க இயலும். ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு ஒலி அலைவரிசை அந்த கருவியில் பதித்தார்கள். உதாரணமாக ஐந்து வித நிறங்களை காட்டினால் ஐந்து வித சப்தம் கேட்கும். அவர் சிறுவயதில் இசையும் ஓவியமும் கற்றிருந்தார் அதனால் கேட்கும் ஒளிக்கு ஒரு musical noteஉடன் ஒப்பிட்டுக்கொண்டார். அவருக்கு முதலில் கடினமாக இருந்தது, ஏனெனில் 24 மணிநேரமும் அந்த கருவி ஒளியை புணர்ந்து சப்தித்துக்கொண்டே இருந்தது. அவற்றை கேட்டவாரே எட்டு வருடங்கள் கழித்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் மூளை பழகிக்கொண்டது. இப்போது அதை ஒரு ஆறாம் உணர்வாக ஏற்றுக்கொண்டது.

உலகில் உள்ள எல்லா பொருளும் ஏதோ ஒரு ஒளியை பிரதிபலிக்கிறது அல்லவா. இந்த மொத்த உலகத்தையே ஒரு இசை களமாக உணர, அது ஒரு புது பரிமாணமாக அவருக்கு ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் அவருக்கு கனவு படங்களாய் அல்லாமல் இசையாய் கேட்க ஆரம்பித்துவிட்டது, சிந்தனையிலும் அப்படிதான். அவரால் நம் முகநிறத்திற்கு வரும் ஒலியை musical notes ஆக குறித்துக்கொண்டு, நம் முகத்தின் mp3 Audio பைலை நமக்கு ஈமெயில் செய்வார். நம் முகத்தை தினமும் நாம் ஆடியோவாக கேட்டு கொள்ளலாம். அடுத்தக்கட்டமாக அவரால் சாதாரணமாக கேட்கும் குரலும், இசையும் வர்ணத்தோடு ஒப்பிட முடிந்தது. இப்போது மாறாக குரலிற்கு உருவம் கொடுத்தார். ஒவ்வொருவர் குரலுக்கும் ஒரு வர்ண ஓவியம். அவரை பொறுத்தவரை சப்தமும் வெளிச்சமும் ஒன்றுபோல் ஆகிவிட்டது. சமீபத்தில் Infrared மற்றும் Ultraviolet ஒலி அலைவரிசையை கிரகிக்கும் Antenna புதுப்பிக்கப்பட்டது. மனிதனால் காண முடியாத அலைவரிசையை கூட இப்போது அவரால் கேட்க முடியும். ஒரு Super Human போல மாறி விட்டார். ரஷிய அரசாங்கத்திற்கு இவரும் விஞ்ஞானிகளும் விண்ணப்பம் அளித்து அவரை முதல் Cyborg மனிதராக அங்கீகரிக்க சிபாரிசு செய்யப்பட்டது.. இதன் விளைவாக அவர் பாஸ்போர்ட்டில் அந்த ஆண்டெனா உடன் புகைப்படம் எடுத்து புதிதாக அச்சடித்து தந்தார்கள். நீண்ட ஆலோசனைக்கு பிறகு அக்கருவியை அவர் உடலின் அங்கமாக அரசு ஏற்றுக்கொண்டது.

டாக்டர் :- ஓகே ..அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ..?

ஜான் :- சம்பந்தம் இருக்கு. போன வாரம் நீங்க ஒரு ராணுவ வீரருக்கு ஒரு ஆபரேசன் பண்ணீங்கள்ள அது என்ன ஆபரேசன் ?

டாக்டர் :- அது துப்பாக்கி சூட்டில் காலை இழந்த ராணுவ வீரர் ஒருவருக்கு புதுசா கண்டுபித்த செயற்கை கால்கள் அதான் நீங்க சொன்ன பயோனிக் கால்களை பொருத்தி அவரை முன்னாடி போல் சாதாரணமாக இயங்க வைத்தோம்..

ஜான் :- மனிதனோடு இணைக்கப்பட்ட இயந்திரம் இப்பொழுது ஐந்து சதவீதம் என்றால், போகப் போக அது கூடி நூறு சதவிகிதம் என்று ஆகும். உடலின் அணைத்து பாகங்களுக்கும் ஒரு மாற்று உறுப்பு இருக்கும். நம் மூளையின் ஆற்றலை ஆதாரமாக கொண்டு இயங்குபவையாக இருக்கும்.  இன்னும் 100 வருடங்கள் போனால் Technological Singularity என்றழைக்கப்படும் பூரண ஒருமை நிலை வந்துவிடும். இந்த ஒருமைக்கு அப்பால் புதிதாக உருவாக்க எதுவும் இருக்காது . பூமியில் உள்ள அனைத்து மனிதர்களும் இயந்திரமாக மாறி இருப்பார்கள். அதன்பின் நமக்கு இயற்கை தேவையில்லை, மழை தேவையில்லை, உணவு தேவையில்லை, சூரிய ஒளிமட்டும் போதும். அந்த சக்தியில் அனைவரும் வாழக்கூடும். ஏன் அதுகூட தேவைப்படாமல் போகலாம். Self Sustained Life Form எனப்படும் தனக்கு தேவைப்படும் அணைத்து சக்தியையும் தானே தயாரித்துக்கொள்ளும் நிலை வந்திருக்கும். பிறகு பூமி இருந்தால் எதற்கு, இல்லாவிட்டால் எதற்கு. சூரியன் வெடித்தாலும் பரவாயில்லை, பிறப்பு இல்லை ஏனெனில் இறப்பு இல்லை .மூப்பு இல்லை பழுது மட்டுமே. புதிய உறுப்பை மாற்றி அதை சரிசெய்து விடுவார்கள். நாம் பார்த்தது இதற்கு முந்தைய ஸ்டேஜ் உடலின் மற்ற அனைத்து பாகங்களையும் இயந்திரமாய் மாற்றி மனித மூளையை மட்டுமே இயற்கையாய் வைத்து அதை அவர்கள் கட்டுப்பாட்டில் இயங்க வைத்து, ஏலியனால் உருவாக்கப் பட்டதுதான் இந்த சைபார்க் மனிதன்.

டாக்டர் :- அப்ப.. மேஜர்கிட்ட நீங்க அந்த சைபார்க்கை தலைல சுட சொல்லியிருக்குறீங்க கரெக்டா..?

ஜான் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டுகிறார். டாக்டரும் BLOOD TEST ரிசல்ட்டை பார்த்தபின்பு, ஜானை பார்த்து இது மனித இரத்தம் தான் என உறுதி செய்கிறார்.

ஜான் :- நம்மை விட ஏலியன்கள் பல நூறுவருடம் விஞ்ஞானத்தில் முன்னோக்கி உள்ளனர். அடுத்த உலகப்போர் மனிதர்களுக்கு இடையானது இல்லை. ஏலியனால் அடிமைபடுத்தபட்ட சைபார்க் மனிதர்களுடனும் தான்.

என கூற டாக்டருக்கு, எதிர்காலம் சற்று நேரம் கண்முன்னால் வந்து போனது.

 கதை sirukathaigal.com இல் இருந்து பெறப்பட்டது. கதையின் சுட்டி

======>ஏலியன்  <========

https://www.nationalgeographic.com/science/article/worlds-first-cyborg-human-evolution-science

ரஜினியின் எந்திரன் படம் இவருடைய ஐடியாவை அடிப்படையாக கொண்டதோ?

ஒரு அமெச்சூர் எழுத்தாளர் என்ற முறையில் இது வெற்றி பெறுகிறது. ஏலியன் என்ற பதம் E T என்ற சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. AVATAR சினிமா, மனிதனை உருவத்தில் மாறறுவதை காட்டியது. இத்தகைய கதைகளை ஒன்று சேர்த்து இந்தக் கதையை இந்திய சூழலுக்கு ஏதுவாக மாற்றி அமைத்ததில் ஆசிரியர் வெற்றி அடைந்திருக்கிறார். கதையை மேல் நோட்டமாக வாசிப்பவர்களுக்கு ஒன்றும் புரியாது. கொஞ்சம் நிதானமாக இரண்டாம் முறை வாசித்தால் புரியாதவை புரியும்.  பாராட்டுக்கள் பெற ஆசிரியர் உயிருடன் இல்லை என்பது துரதிர்ஷ்டம்.  

சுஜாதா அவரது ========> அன்புள்ள அப்பா <========சிறுகதையில் அவரது அப்பா அவரிடம் சாகும் தருவாயில் பயானிக்ஸ் என்றால் என்ன என்று  கேட்டதாக எழுதியிருந்ததும் ஒரு நிமிடம் பிளாஷ் ஆகியது.

13 கருத்துகள்:

  1. சிறுகதை, கதை என்ற அடிப்படையிலிருந்து விலகி, ஆவணம், செய்தி என்ற நிலைக்கு வந்துவிட்டது. சிறுகதை ஈர்க்கவில்லை.

    எந்த ஒரு விஞ்ஞானக் கதைக்கும், மனிதனின் ஆதார சுருதிகளான, பாசம், நியாயம், நீதி போன்ற போராட்டம் இருக்கும். அத்தகைய படங்கள்தாம் வெற்றிபெறுமே தவிர, சீரணிக்க இயலாத வெறும் மெஷின் கதைகள் அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எந்த ஒரு விஞ்ஞானக் கதைக்கும் மனிதனின் ஆதார சுருதிகளான....//

      ஆஹா! அருமை நெல்லை. வைர வரிகள்.

      நீக்கு
    2. ​55 ஆண்டுகளுக்கு மேல் வசித்ததால் சொந்த ஊராகிவிட்ட திருவனந்தபுரத்தையம், பத்மநாபனையும் பாடிய பாசுரங்களுடன் பாசுர வியாக்யானம் ஆரம்பித்ததில் மிக்க மகிழ்ச்சி நெல்லை.

      ஆம் சிறுகதை ஈர்க்கவில்லை தான். குறைகளை பட்டியல் இட மனம் ஒப்பவில்லை. காரணம் ஆசிரியரின் மறைவும்.

      Jayakumar

      நீக்கு
  2. ஆளவந்தார் குறுகைக் காவலப்பரைச் சந்திக்காமல் விட்டது துரதிர்ஷ்டமே! யோகாப்பிய ரகஸ்யம் ரகஸ்யமாகவேப் போய்விட்டது நமக்குப் பெரிய இழப்புதான்.
    /கேசவா என்று கேசவனின் நாமத்தைச் சொன்னால், நம் இடர்கள் எல்லாமே தொலைந்துபோகும்/
    இறைவனுக்கு எத்தனையோ நாமங்கள் இருக்கையில் ஆழ்வார் "கேசவன்" என்ற நாமத்தை இங்கு கையாள்கின்றார். எதுகை, மோனை, சீர், இத்தியாதி இலக்கணக் காரணங்கள் இருந்தாலும் ஏதோ ஒரு விசேஷம் இருக்கோ இந்த நாமத்தில்? த்வாதச நாம வ்யாசத்திலோ அல்லது சந்தியாவந்தனத்தில் அங்கவந்தனம் செய்யும்போதோ முதலில் "கேசவா"தான் வருகின்றது (அதுவும் "நாராயணா"விற்கு முன்னால்). என்ன காரணம்? நீங்கள் கூறியது போல் கேசியை சம்ஹாரம் செய்தது மட்டுமல்லாமல் பல காரணங்கள் இந்தப் பெயருக்கு உண்டு என்றும் கேள்விப் பட்டிருக்கின்றேன். இந்த நாமத்தை முன்னிலைப் படுத்துவதற்கு ஏதாவது விசேஷ காரணம் உண்டா?

    பதிலளிநீக்கு
  3. நம்மாழ்வார் (நம்மாழ்வார் இருந்த இடத்தை விட்டு அகலாமல் எல்லாம் மனக் கண்ணால்தானே தரிசனம் செய்தார்?) ஸ்ரீரங்கநாதருக்கு மங்களாசாசனம் செய்த பாசுரங்களுக்கு அரையர் சேவையில் முக்கியத்துவம் அளிப்பது உண்டா? அப்படி இருந்தால் எந்தப் பாசுரம் முக்கியத்துவம் பெறுகின்றது? ஏன்?
    சமயம் வாய்க்கும்போது, நம்மாழ்வார் ஏன் திருப்பதி பெருமாள் மேல் அதிகப் பாசுரங்கள் மங்களாசாசனம் செய்தார் என்றும் சற்றே விளக்குங்கள்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு


  5. //யோகாப்பியாச ரஹஸ்யம் கிடைக்காததும் ஆச்சார்ய அனுக்ரஹமே என்று உணர்ந்துகொண்டார் ஆளவந்தார்.//

    ஆளவந்தாருக்கு குருகைக்காவலப்பர் யோகரஹஸ்யத்தைச் கற்றுக் கொடுக்க முடியாமல் போனதும் இறைவன் திருவுள்ளம் தான் போலும்.

    ஆளவந்தார் குருவை உணர்ந்து கொண்டார்.

    //தன்னுடைய இறுதிக்காலம், வருகிற தை மாசம் பூச நட்சத்திரச் சேர்க்கையான பகல் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் வருகிறது. அதற்குச் சற்று முன்பு வந்தால் உபதேசிக்கிறேன் என்று ஒரு ஓலை நறுக்கில் எழுதித் தந்தார். //

    அந்த நேரம் ஆளவந்தார் போக முடியாமல் போனது அனந்தபத்மனாபனின் லீலை தானே!

    // நமக்கு விரோதிகளான ப்ராரப்த சஞ்சித கர்மங்கள் என்ற பாகுபாடுகள் இல்லாமல் எல்லா விரோதிகளையும் அழிக்கும் வல்லமை உடையது என்பது பொருள். //

    பாசுரம் பொருள் விளக்கம் அருமை

    கேசவன் என்ற திருநாமத்திற்கு விளக்கம் அருமை.
    கேசவா நம்மிடம் இருக்கும் விரோதிகளை அழிக்கட்டும்.

    அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  6. அரை ஐயர் என்பது அரையர் ஆகிவிட்டதோ ? ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  7. சைபார்க் மனிதன் கதை நன்றாக இருக்கிறது.

    //அடுத்த உலகப்போர் மனிதர்களுக்கு இடையானது இல்லை. ஏலியனால் அடிமைபடுத்தபட்ட சைபார்க் மனிதர்களுடனும் தான்.

    என கூற டாக்டருக்கு, எதிர்காலம் சற்று நேரம் கண்முன்னால் வந்து போனது.//

    டாக்டருக்கு , எதிர்காலம் சற்று நேரம் கண் முன்னால் வந்து போனது போல நமக்கும்.

    //UFO வில் இருந்து நீல நிற ஒளி அந்த வீழ்த்தப்பட்ட உருவத்தின் மீது பட்ட அடுத்த நொடி அந்த உருவம் காற்றில் கரைந்து போனது. கதவடைக்கபட்டு UFO நொடிப்பொழுதில் மேலெழும்பி மறைந்தது.//

    கலையரசி என்று எம்.ஜியார் . பானுமதி நடித்த படத்தில் இப்படித்தான்
    ஒரு காட்சி வரும் இரண்டு எம்.ஜி.ஆர் அதில் ஒருவர் கோமாளி இப்படித்தான் உரு தெரியாமல் மறைந்து போவார் மின்னல் போல ஒன்று வந்து அவரை தாக்கும்.

    பதிலளிநீக்கு
  8. அச்யுதம் கேசவம் ராம நாராயணம்
    கிருஷ்ண தாமோதரம் வாஸூதேவம் ஹரிம்
    ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
    ஜானகி நாயகம் ராமசந்த்ரம் பஜே!

    --- ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய
    அச்சுதாஷ்டகம்.

    பதிலளிநீக்கு
  9. டாக்டர் உ.வே. வெங்கடேஷ். அவர்கள் இன்று அதிகாலை தமது திவ்ய பிரபந்த உரையின் போது கோபாலன் என்ற பெயர் தான் கோவலன் என்றானது என்றார்.
    சிலப்பதிகார கோவலன் நினைவுக்கு வந்து அசந்து போனேன்.
    ஒவ்வொரு பெயரின் உள்ளடகத்திலும் எவ்வளவு இருக்கிறது என்பது நிச்சயம் ஆய்வுக்குரிய விஷயம் தான்.

    பதிலளிநீக்கு
  10. //இரண்டு தலையுடன், மூன்று கண்களுடன், நான்கு கைகள் மற்றும் நான்கு கால்கள் கொண்ட ஒரு விசித்திர ஜந்து நடக்க முடியாமல் தட்டு தடுமாறி உள்ளே இருந்து வெளியே வந்து சரிந்து விழுகிறது.//

    ஜான் பார்த்து விட்டார் ஏலியனை. ஆர்வமாக இருந்தார் அல்லவா?

    பதிலளிநீக்கு
  11. கேசவன் -- அழகிய கூந்தலுடைய அழகன். (கூந்தல்- கேசம்)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!