11.2.26

உலக ஜீவராசிகளில் தீமை செய்யும் ஜீவராசி முதலில் கொசு ; அடுத்தது மனிதன்!

 

கேள்வி பதில்கள்: 

பானுமதி வெங்கடேஸ்வரன் :

மற்ற மாத வெள்ளிக் கிழமைகளுக்கு இல்லாத சிறப்பு ஆடி, தை வெள்ளிக்கிழமைகளுக்கு வழங்கப்படுவதற்கு என்ன காரணம்?

# உத்தராயண தட்சிணாயணங்களை அடையாளம் காணும் யுக்தியாக இருக்கும்.

& அறுவடைக்காகவும், விதைக்கவும் உரிய நாட்கள்,  மக்களே வெளியூர் சென்று விடாதீர்கள், காப்பு கட்டி இருக்கு, போகக்கூடாது.  உங்கள் உதவி எல்லாம் எல்லோருக்கும் வேணும், சேர்ந்து விதைப்போம், சேர்ந்து அறுவடை செய்வோம் என்று மக்களை ஓரிடத்தில் தேக்கி வைக்கும் காரணமாக இருக்கலாம்.  சில அம்மன் கோவில்களில் முளைப்பாரி திருவிழா கூட இருக்குமே...  

ஒப்பிடுக பாலமுரளி கிருஷ்ணா, T.M. Krishna

# இருவருமே மேதைகள்.  புது ராகம், சொந்த சாகித்தியம் என்று சிலசமயம் சோதித்தவர் ஒருவர், பரவலாக்கும் முயற்சியில் அத்து மீறுபவர் மற்றவர்.  கெட்டிக்காரத் தனத்தை பல தளங்களில் காட்டியவர் ஒருவர், படைப்பாளிச் சுதந்திரத்தை கொடுமையாகச் சோதித்துப் பார்ப்பவர் மற்றவர். 

இருவருமே இதயத்தைத் தொடவல்ல இசை வழங்கும்  திறன் கொண்டவர்கள்.

நெல்லைத்தமிழன் :

1. இந்த மாதிரி யோகாசனங்களால் என்ன பிரயோசனம் என்று சொல்ல இயலுமா?


# இதனாலெல்லாம் ஒரு பயனும் இல்லை என்று சொல்ல முடியாது.  இதை முறையாகப் பயின்று ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கு பெற்று பதக்கம் வெல்லலாமே.

& அந்தக் காலத்தில் நாம் (!) கல்யாணம் செய்துகொண்ட பெண் கல்யாணம் ஆகி, தேன் நிலவு சென்ற காலத்தில் ஒருநாள் மாலை இப்படி நின்றுகொண்டு இப்பொழுதே எனக்கு ஒரு பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்தால்தான் நான் நேராக நிற்பேன் என்று சொன்னால், நாம் உடனே அதிர்ந்துபோய் கடைக்கு ஓட மாட்டோமா! 

2. பலருக்கும் காசு கொடுத்து இறைவனை தரிசிக்கணுமா என்ற சந்தேகம் வருகிறது.  தியேட்டர், கிரிக்கெட் ஸ்டேடியம், பேருந்து, இரயில் போன்ற பல இடங்களில் சௌகரியத்துக்கேற்ற விலைப்பட்டியல் இருக்கும்போது நமக்கு இந்தச் சந்தேகம் எழுவதில்லையே.

# எந்த இடமானாலும், இறைவன் சந்நிதியே ஆயினும் அநியாய அதிக விலை சரியில்லை என்பது என் கருத்து.  மிக அதிக நெரிசலைக் தவிர்க்க ஒரு யுக்தி என்ற அளவில் தான் தரிசனக் கட்டணம் இருக்க வேண்டும்.  கட்டணம் செலுத்தி தரிசனம் என்பதற்கான டிக்கெட் எண்ணிக்கை அல்லது டிக்கெட் விலை தரமான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 

அதேபோல் சினிமா டிக்கெட் விலைக்கு உச்ச வரம்பு, கருப்பு மார்க்கெட் விற்பனை இவற்றைக் கடுமையாகத் தடை செய்ய வேண்டும்.

3. சிறிய வயதில் சிறிய சிறிய ஆசைகள் நிறைவேறினாலே (குச்சிரொட்டி,  பஞ்சு மிட்டாய் போன்று) மனதில் நிறைந்த சந்தோஷம் இப்போது பெரிய பெரிய ஆசைகள் நிறைவேறினாலும் கிடைப்பதில்லயே. அது ஏன்?

# வயதானால் வருகிற விவேகம்தான்.

4. ரஜினி படம் என்றாலே நம்பர் ஒன் என்று இருந்த காலம் போய், சாதாரண வசூலுக்கே தட்டுத் தடுமாறுகிறாரே. அவர் மனதில் இப்போது என்ன எண்ணம் இருக்கும்?

# நம்மை நம்பி ஏமாந்து பணம் தருகிறவர்கள் இருக்கும் வரை நாம் முயற்சிப்பது தவறில்லை என்று இருப்பதுதான் சாத்தியம்.

5. மனிதர்களுக்கிடையே உயர்வு தாழ்வு, ஜாதி பேதமில்லாத ஏதேனும் சமூகம் உலகத்தில் இருக்கிறதா? இந்தப் படத்தைப் பார்த்த உடனே எனக்கு, காவல்காரர்கள் என்றால் அவர்களை மிருக முகமூடியோடு வைத்திருக்கிறார்களே பண்டைய எகிப்தில் என்று தோன்றியது.

# ஏற்றத் தாழ்வு இயற்கை நியதி. அதில் எதையெல்லாம் சீர் செய்ய முடியும் என்பது மனிதனின் சாமர்த்தியம்.

6. இந்த ஒப்பீட்டைப் பார்த்து மனிதன் கொசுவை விட ரொம்பவே நல்லவன் என்று நினைத்தால், ஒப்பீட்டளவின்படி அவன் நாயைவிட மோசமானவனாக இருக்கிறானே. உங்கள் எண்ணம் என்ன?


# உயர்வு தாழ்வு இரண்டிலும் ஆகக் கடைசி நிலைக்குச் செல்வது மனிதனின் விசேஷம்.

= = = = = = = = =
படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் : 


பஹ்ரைனுக்கு முதன் முதலில் நான் வேலைக்காகச் , சென்றுசேர்ந்தபோது, (1995) இந்த நஃபூரா ரெஸ்டாரண்ட்தான் ரொம்ப ஃபேமஸ் வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட். அங்க ரொம்பவே ஃபேமஸ், வீடு என்று சொல்லப்படும் ஹோம் தோசை. அது ஒண்ணு சாப்பிட்டாலே போதும் என்று தோன்றும். ரொம்ப வருஷமா அது 300 ஃபில்ஸ் என்ற விலையில் (அப்போ சுமார் 40 ரூபாய்) இருந்தது. இந்த மெனுவை புகைப்படம் எடுத்த 2018 ஜனவரில 400 ஃபில்ஸ் (Fils). எனக்கு மறக்க முடியாத ரெஸ்டாரண்ட் இது. ஆனால் பாருங்க.. 2006க்கு அப்புறம் நிலைமை மாறிவிட்டது. பொள்ளாச்சியைச் சேர்ந்த கௌரி கிருஷ்ணா, பிறகு சங்கீதா, அப்புறம் இதற்கிடையில் சரவணபவன் (அது ரொம்ப சுமார்) போன்றவை வந்ததனால் கொஞ்சம் பிஸினெஸ் குறைந்துவிட்டது. இது தவிர வட இந்திய உணவுகளுக்கு ஃபேமஸான செண்ட்ரல் கஃபே, மைசூர் ரெஸ்டாரண்ட் இன்னும் பலவித ரெஸ்டாரண்டுகளும் அங்கு உண்டு. 

அங்கெல்லாம் மூணு ரோடு சந்திப்புல இந்த மாதிரி இடம் இருக்கும். அங்கு புறாக்களுக்கு உணவிடுவாங்க. நானும் இதற்காக, மாதம் ஒரு தடவை 20 கிலோ தானிய மூட்டை வாங்கிவருவேன். தினமும் ஜிம்முக்கோ இல்லை நடைப்பயிற்சிக்கோ காலையில் செல்லும்போது ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் தானியம் கொண்டுபோய் இந்த மாதிரி இடங்களில் போடுவேன். என்னவோ அன்று இருந்த மனது, இன்று எங்கள் வளாகத்தில் வரவில்லை. புறாக்களால் உடலுக்குக் கெடுதி என்றெல்லாம் பல செய்திகளைப் படித்ததனாலேயோ என்னவோ! 


==  = = = 

இதெல்லாம் என்னன்னு தெரியுதா? வீட்டில் வளர்க்கப்படும் பருந்துகள். இவை மிக விலை உயர்ந்தவை. அராபியர்கள் இதனைத் தன்னுடன் விமானத்தில் எடுத்துச் செல்வார்கள். (அப்போ இவை கக்கா போனாலும் யாரும் பெரிதுபடுத்த மாட்டார்கள். ஒருவேளை இவைகளுக்கும் டிக்கெட் உண்டா என்று தெரியலை)


என்னெல்லாம் செல்லப் பறவைகள்னு பாருங்க!

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

Paintings பற்றி ஒரு புத்தகம் வாங்கி இருந்தேன்.  அதிலிருந்து கொஞ்சம் இங்கே..  

எவ்வளவு பழமையான காலத்திலேயே ஓவியங்கள் இருந்திருக்கின்றன என்பதைச் சொல்லும் புத்தகம்.







=========================================================================================


KGG பக்கம் : 

முன்னொரு காலத்தில், சிவாஜி கணேசன், பொம்மை இதழில், சக நடிகர் / நடிகையர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். 

அந்த கேள்விகளும், பதிலும் இங்கே உங்களுக்காக: 

பொம்மை இதழில்  வெளி வந்தது இந்த பதிவு :

​நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு நடிகர் திலகத்தின் பதில்கள்:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகர்களுக்கு பதில் சொல்கிறார் என்று பொம்மை இதழ் அறிவித்தவுடன், அனுபவம் மிக்க புகழ்பெற்ற நடிகர்கள், இளம் நடிகர்கள் அனைவரும் பெரும் உற்சாகம் காட்டினார்கள்.

​சில நடிகர், நடிகையர் நேரில் சில கேள்விகளைச் சொல்லிவிட்டு அடுத்து சந்தித்தபோது "சார் அந்தக் கேள்வி வேண்டாம், இந்தக் கேள்வியைக் கேளுங்கள்" என்று மூன்று நாலு தடவை மாற்றிச் சொன்னார்கள். சிவாஜி கணேசன் பதில் சொல்லும் அளவுக்கு கேள்வி நல்லதாக அமைய வேண்டுமே என்ற விருப்பம் தான் அதற்கு காரணம் என்பதும் புரிந்தது.

​"பொம்மையில் கலைஞர்களிடம் கேள்விகளை வாங்கி வருகிறோம், நீங்கள் பதிலளிப்பீர்களா?" என்று நடிகர் திலகத்திடம் முதலில் கேட்டோம். ஒரு பலத்த சிரிப்பு.

​"இது ஜனநாயகம், யார் யாரை வேண்டுமானாலும் கேட்கலாமே" என்று சொல்லிவிட்டு, "கலைஞர்களின் கேள்விகளை ஒன்றாக திரட்டிக்கொண்டு வாருங்கள், பதில் சொல்லி விடுகிறேன்" என்றார் புதுமையை என்றும் வரவேற்கும் நடிகர் திலகம் உற்சாகமாக.

​ஹிட்லர் உமாநாத் படப்பிடிப்பின் போது ஏ.வி.எம் கலைக்கூடத்தில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொன்னார் அவர். பதில்களைச் சொல்லி வந்தபோது ஒவ்வொரு கலைஞரைப் பற்றியும் அவர் கூறியதையே தொகுத்து ஒரு தனிச் சிறப்புக் கட்டுரை எழுதிவிடலாம், அவ்வளவு சுவையாக இருந்தன.

​நடிகர் திலகத்திடம் நட்சத்திரங்கள் கேட்ட கேள்விகள் இதோ:

​நடிகை லட்சுமி அவர்களின் கேள்வி:   

​"உங்களிடம் நீங்கள் விரும்பும் குணங்கள் எவை? உங்களிடம் நீங்கள் வெறுக்கும் குணங்கள் எவை?"

​நடிகர் திலகத்தின் பதில்:

"எல்லோருக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்பது தான் நீங்கள் முதலில் சொன்னது, அதை நான் விரும்புகின்றேன். ஆனால், எல்லோருக்கும் உதவியாக இருப்பது இருக்க வேண்டும் என்று நினைப்பதே சில நேரம் நம்மையே கவிழ்த்து விடுகின்றது. இதை நான் எப்படி விரும்ப முடியும்?"

​எஸ்.பி. முத்துராமன் அவர்களின் கேள்வி:

​"நடிப்புக்கு இலக்கணம் நீங்கள் என்பதில் எவருக்கும் இரண்டாவது அபிப்பிராயம் இருக்க முடியாது. எங்களைப் போன்ற திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?"

​நடிகர் திலகத்தின் பதில்:

"எல்லோரையும் அணைத்துக் கொள்ளுங்கள், அனைவரது அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் விருப்பம் போல காரியத்தைச் செய்யுங்கள்."

​மேஜர் சுந்தர்ராஜன் கேட்ட கேள்வி:

"நீங்கள் ஏற்று நடித்த பாத்திரங்களிலேயே எது மிகவும் கடினமான பாத்திரம்?"

​நடிகர் திலகத்தின் பதில்:

"நீ எனக்கு கொடுத்ததுதானடா!"

​ஸ்ரீப்ரியாவின் கேள்வி:

"அடுத்த ஜென்மம் எடுத்தால் நீங்கள் யாராகப் பிறக்க விரும்புகிறீர்கள்?"

​நடிகர் திலகத்தின் பதில்:

"அடுத்த ஜென்மத்துல எனக்கு நம்பிக்கையே இல்லை."

கமல்ஹாசன் கேட்ட கேள்வி: 

​"திரையுலகமே உங்கள் நடிப்பைக் கண்டு வியக்கும் போது, நீங்கள் எப்போதாவது யார் நடிப்புத் திறனையாவது கண்டு வியந்ததுண்டா? சொல்லுங்களேன் அவரைப் பற்றி."

​நடிகர் திலகத்தின் பதில்:

"உங்களைப் பற்றியே சொல்கிறேனே, என் கண் முன்னால் இனிதே வளர்ந்த உங்கள் நடிப்பைக் கண்டும் வியந்திருக்கிறேன்."

தேங்காய் சீனிவாசன் கேட்ட கேள்வி:

"செல்வாக்குள்ள கதாநாயகர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திறமையான நடிகர்களைக் கூட தங்கள் படங்களில் இடம்பெறச் செய்யாமல் இருக்கச் செய்வது சரிதானா?"

​நடிகர் திலகத்தின் பதில்:

"செல்வாக்குள்ள கதாநாயகர்கள் அரசியல் ரீதியாக மோதிக்கொள்ளும்போது மற்ற கலைஞர்கள் விலகி இருந்தால் நீங்கள் சொல்லுகின்ற நிலைக்கு ஆளாக மாட்டார்கள்."

நடிகை சத்யகலா கேட்ட கேள்வி:

​"பானுமதி, பத்மினி, சாவித்திரி போன்ற புகழ்பெற்ற நடிகைகளைப் போல விளங்க விரும்புகின்றேன். இளம் நடிகையான நான் நடிப்பில் முன்னேற என்னென்ன வழிமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்?"

​நடிகர் திலகத்தின் பதில்:

"நீங்கள் முன் கூறியவர்களை மனதில் நினைத்துக் கொண்டே இருந்தால் கூட போதும், உங்களுக்கு நடிப்பு தானே வந்துவிடும்."

​வி.எஸ். ராகவன் கேட்ட கேள்வி:

​"கலை உலகின் முடிசூடா மன்னர் நீங்கள். அதுவும் மேடையில் நாடகத்தில் நீங்கள் நடிக்கும்போது காண்போரை பரவசப்படுத்தி விடுவீர்கள். அந்தப் பரவசத்தை மீண்டும் எப்போது காணலாம்?"

​நடிகர் திலகத்தின் பதில்:

"எனக்கு தாய் வீடே மேடை தானே? தாய் வீடு புளித்து விடாது."

​ஜெய்சங்கர் கேட்ட கேள்வி:

​"நடிகர் சங்கத்திற்காக நல்ல பல திட்டங்களுடன் சிறந்த அரங்கத்தைக் கட்டி முடிக்கவும் மற்றும் அதன் வளர்ச்சியிலும் நீங்கள் பெரும் அக்கறை கொண்டிருந்தீர்கள். இந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தலைவருக்காக நீங்கள் போட்டியிடாதது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. ஆனால் உங்களுக்கு? தவிர ஏன் நீங்கள் இந்த முறை போட்டியிட விரும்பவில்லை?"

​நடிகர் திலகத்தின் பதில்:

"என்னை பொறுத்தவரை ஒரு நல்ல காரியம் செய்யும்போது எந்தப் போட்டியும் இருக்கக் கூடாது. அப்படிப் போட்டி ஏற்பட்டால் செய்யும் நல்ல காரியத்துக்கு யாரோ இடைஞ்சல் செய்வதாகத்தான் நான் நினைப்பேன். இம்முறை அப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டது. எந்தவிதமான பிரச்சனைக்கும் ஆளாகாமல் விலகிக்கொள்வதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் விட்டார்களா? சில பத்திரிக்கைகள் படிக்கவும் கூசுகின்ற அளவுக்கு என்னை விமர்சனம் செய்தன. அதை அவர்களாக செய்தார்களோ அல்லது யாராவது சொல்லி செய்தார்களோ? எல்லாவற்றுக்கும் மேலாக உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் எனக்கு துணையாக இருக்கும்போது நடிகர் சங்கத்தின் நல்ல பணிகளில் இருந்து நான் விலகிக்கொள்ள மாட்டேன். தவிர நடிகர் சங்கத்திற்கென செயல்பட ஒரு புதிய அறக்கட்டளை இருக்கின்றது. அதன் மூலமாகத்தான் பல நல்ல காரியங்களைச் செய்ய முடியும் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் எனப் பணிவோடு சொல்லிக் கொள்கிறேன். அந்த அறக்கட்டளைக்கு நான்தான் தலைவன் என்பதையும் யாரும் மறந்துவிட வேண்டாம்."

ஆர்.எஸ். மனோகர் கேட்ட கேள்வி:

​"உங்களுடன் நடிக்கும் நடிகர் நடிகையருக்கு செட்டில் நடிக்க சிரமப்படும் கஷ்டமான காட்சிகளில் நீங்கள் நடிப்பு சொல்லித் தருவீர்கள். உங்களுடன் நடிக்கும்போது நேரில் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் முழுநேர டைரக்டராக சொந்தப் படம் அல்லது மற்ற படத் தயாரிப்பாளருக்காக ஏன் டைரக்ட் செய்யக் கூடாது?"

​நடிகர் திலகத்தின் பதில்:

"எனக்கு அந்தத் துணிவு இன்னும் வரவில்லையே."

​நடிகை ரூபா தேவி கேட்ட கேள்வி:

​"நல்ல சப்ஜெக்ட் என்று தயாரிப்பாளர்கள் வந்து கதை சொல்கிறார்கள். ஆனால் அதில் எனக்கு கொடுக்க இருக்கும் கேரக்டர் எனக்கு விருப்பமுள்ளதாக இருப்பதில்லை. புதுமுகமான எனக்கு இந்த குழப்பமான நிலைமையை சமாளிக்க ஒரு வழிகாட்டும் பதில் தேவை."

​நடிகர் திலகத்தின் பதில்:

"கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும். உங்களுக்கு மட்டுமல்ல இளைஞர் எல்லோருக்கும்தான். உங்களை நீங்கள் புரிந்துகொள்ளும் வயது வந்ததுமே தானாக சரியாகிவிடும். ஆனால் அதுவரை காலம் காத்திருக்க வேண்டும்."

கே.ஆர். விஜயா கேட்ட கேள்வி:

"இளங்கலைஞர்கள் வருகிறார்கள் போகிறார்கள். இரண்டு வருடங்கள் கூட சிலர் நிலைத்திருப்பதில்லை. திரையுலகில் வருங்காலத்தை எண்ணி வளரவும் நிலைக்கவும் விரும்பும் புதிய இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?"

​நடிகர் திலகத்தின் பதில்:

"நான் சொன்னால் கேட்கவா போகிறார்கள்? புதிதாக வருபவர்கள் அன்றைக்கு தாங்கள் கண்டுகொண்டிருக்கின்ற சூழ்நிலையைத் தான் கவனிக்கிறார்கள். அவர்கள் கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்தை உணர்வதில்லை. அப்படி உணர்ந்தால் அவர்களும் நிலைத்து விடுவார்கள் உங்களைப் போல."

சுமித்ரா கேட்ட கேள்வி:

​"இதுவரை சாதித்ததை விட இனிமேல் ஒரு பெரிய லட்சியத்தை சாதிக்க வேண்டும் என்ற திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறீர்களா? அப்படியானால் அந்தத் திட்டம் என்ன?"

​நடிகர் திலகத்தின் பதில்:

"மற்றவர்களுக்குத் தெரியாமல் வைத்திருப்பதுதான் திட்டம் என்பது. காலம் பதில் சொல்லும்போது நீங்களே பார்த்துக் கொள்வீர்கள்."

​நடிகர் திலகத்தின் மேல் நட்சத்திரங்கள் எந்த அளவிற்கு அன்பும் பாசமும் மரியாதையும் கொண்டிருந்தனர் என்பதை இது காட்டுகின்றது. தன்னுடைய அனுபவங்களின் மூலம் மற்றவர்களுக்கு அறிவுரையாகவும் ஆலோசனைகளாகவும் நடிகர் திலகம் பதில் சொல்லியிருப்பது எந்த காலத்துக்கும் பொருந்தும் வகையில் இருப்பதைப் படிக்கும்போது அவருடைய தீர்க்கதரிசனமும் பறந்த மனப்பான்மையும் நல்ல உள்ளமும் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.

​கலை உலகப் பிதாமகனைப் பற்றி கலை உலகத்தைச் சார்ந்தவர்களின் கருத்துக்களை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்வதை பொம்மை இதழ் பெருமையாகக் கருதுகின்றது.

= -= = = = = = = =


12 கருத்துகள்:

  1. கேஜிஜி பகுதியில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இன்று கங்கைகொண்ட சோழபுரம் பயணத்தில் படிக்கணும்

    பதிலளிநீக்கு
  2. பா.மு டி எம்... கலை வேறு தேசப்பற்று நல்ல குணம் நல்ல எண்ணம் வேறு என்பதைப் புரியவைப்பவர்கள். திறமையான பாடலாசிரியர் பார்த்த பெண்களையெல்லாம் அடைய நினைத்த காமாந்தகக் காரனாகவும் அரசியல் பிம்ப்பாகவும் இருந்ததால் நம் மனதில் தாழ்ந்த இடத்தில் இருப்பதைப் போல

    பதிலளிநீக்கு
  3. உலக ஜீவராசிகளில்
    தீமை செய்யும் ஜீவராசி
    முதலில் கொசு ; அடுத்தது மனிதன்!..

    இப்போது கூட ரெண்டு கொசுக்கள்
    அழிக்கப்பட்டன...

    பதிலளிநீக்கு
  4. கேஜிஜி பக்கம் நடிகர் திலகத்தின் பேட்டி அருமை..
    சிறப்பு

    பதிலளிநீக்கு
  5. ///திறமையான பாடலாசிரியர் ///

    தகர டப்பாவின் பாணியே தனி
    என்று பிறகு தானே புரிந்தது!...

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!