27.2.26

ஏமாந்த அனுபவங்கள்

 

ஐயோ அப்புறம் என்ன ஆச்சு

JKC

ஓடையில் விழுந்து …

நான் மட்டுமா, நான், என்னுடைய புது ஸ்கூட்டர். 4 வயதான இரண்டாவது மகன் எல்லோரும் தான். ஏன். எங்கு, எப்படி என்று கேட்கிறீர்களா?  கொஞ்சம் விவரமாக சொல்கிறேன். கதையில் அவசியம் அல்லாத விவரங்களும் உண்டு.  

திருவனந்தபுரம் சமவெளி இல்லாமல் சிறு சிறு குன்றுகளும் கடற்கரைப்பக்கம் கொஞ்சம் சமமாகவும் இருக்கும் சிறு நகரம். மூன்று  ஆறுகள் (வாமனபுரம் ஆறு, கிள்ளி ஆறு, கரமனை ஆறு), அதில் கலக்கும் உப நதிகளான தோடுகள் (வாய்க்கால்கள்), இத்தோடுகளில் சேரும் இயற்கை உருவாக்கிய ஓடைகள், இவ்வோடைகளின் பக்கத்தில் சாலைகள்  என்று இருக்கும்/இருந்த அழகிய ஊர். தற்போது எப்படி என்று கேட்காதீர்கள்.  

இந்த தோடுகளில் நகரத்தின் நடுவே செல்லும் ஆமையிழைஞ்சான் தோடு மிகவும் பிரசித்தம். (ஆமை நீந்தும் வாய்க்கால்). இந்த தோடில் சேரும் ஒரு ஓடை தான் சிறகுளம் ஓடை. ஒரு ஆர்டீசியன் கிணறில் இருந்து வெளியேறும் உபரி நீர் வழிந்தோடும் ஓடை. 

இவ்வோடை ரோடில் இருந்து சுமார் 6 அடி ஆழத்தில் 6 அடி அகலத்தில் இரண்டு பக்கமும் ரோடில் இருந்து 3 அடி  தடுப்பு சுவரும் உள்ள ஒன்று. வஞ்சியூர்  என்பது இடத்தின் பெயர். இந்த ஓடையின் கரையில் இருந்தது தான் 1988இல் நான் குடியிருந்த வீடு. 2 வருடத்திற்கு ஒரு முறை வீடு மாறி ஐந்தாவதாக குடி வந்த வீடு.  கொசு தொந்திரவு, சாக்கடையான ஓடையின் நாற்றம் என்ற சில மைனஸ் பாய்ண்டுகளுக்கு இடையில் 250 ரூ வாடகையில் 4 அறைகள், அடுக்களை என்று இருந்த சிறு வீடு. தண்ணீர் பஞ்சம் இல்லை.

ஒரு படம் மாதிரிக்காக. தடுப்பு சுவர் கற்பனையில் வைத்துக்கொள்ளுங்கள்.

நான்காம் சம்பளக் கமிஷனும், ஜனவரி 1986 இல் கிடைத்த பதவி உயர்வும் சேர்ந்து மாத வருவாயில் ஒரு ஏற்றத்தை கொடுத்தது. ஆகவே ஆஃபிஸில் ஒரு டூ வீலர் லோனுக்கு விண்ணப்பித்தேன். அந்தக் காலத்தில் புதிய டூ  வீலர் வேண்டுமானால் பதிவு செய்து காத்திருக்கவேண்டும். ஏற்கனவே வெஸ்பா XE புக் செய்தது கான்செல் ஆகிவிட்டது. அதற்குப் போட்டியாக என்பீல்ட், சில்வெர்ப்ளஸ் என்ற மொபெடையும் பஜாஜ் cub என்ற 100 cc ஸ்கூட்டரையும் விற்பனைக்கு விடுத்தன.  எல்லாவற்றிற்கும் புக்கிங் செய்து கான்செல் ஆகிவிட்டன. 

அன்றைய காலகட்டத்தில் மத்யமருடைய ஸ்டேட்டஸ் கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ், பைக்/ஸ்கூட்டர், கலர் டிவி, வாஷிங் மெஷின்  போன்ற white goods வைத்திருக்கிறார்களா என்பதின் மூலம் அளவிடப்படும். லோன் வாங்கி ஸ்கூட்டர் வாங்குவது சாதாரணம்.. 

ஸ்கூட்டர் லோன் 10,000 Sanction ஆகியது. இனி ஸ்கூட்டரை கண்டுபிடிக்க வேண்டும். பலரும் திருச்சி நிஷா மோட்டார்ஸ் சென்று புது லேம்பெரட்டா வாங்கி கொண்டு வந்தார்கள். நாங்கள் பாப்பணம்கோடு தீதி பஜாஜ் சென்று விசாரித்தோம். ஒரு cub ஸ்கூட்டர் உடன்  வேண்டும் என்று கேட்டோம். எங்களுடைய அதிர்ஷ்டம் அலாட்மென்ட் கிட்டிய ஒருவர் அதை கான்செல் செய்ய அங்கே அல்லோட்மென்ட் லெட்டரை கொடுத்திருந்தார். சாதாரணமாக அலாட்மென்ட் கான்செல் ஆனால் அவருடைய பேரில் வந்த ஸ்கூட்டர், வரிசையில் உள்ள அடுத்த ஆளுக்கு கொடுக்கப்படவேண்டும். 

இங்கே தான் ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட் செய்யப்பட்டது. ஸ்கூட்டர் அல்லோட்மென்ட் ஆனவர் வாங்கியது போல் பில் இட்டு பின்னர் ரிஜிஸ்டர் செய்து, அந்த ஸ்கூட்டரை அவர் எங்களுக்கு விற்ற மாதிரி காண்பித்து ரிஜிஸ்திரேஷன் என்னுடைய பெயரில்  மாற்றி ஹைபாதகேஷன் செய்து எல்லா வேலைகளையும் முடித்து ஸ்கூட்டர் RC டெலிவரி கொடுப்பதாக ஒரு அட்ஜஸ்ட்மென்ட். இதற்கு செலவு தொகையாக 500 ரூ பிரீமியம் கொடுக்க ஒப்புக்கொண்டேன். அப்படியாக வீட்டுக்கு பின் வீட்டில் இருக்கும் ஒரு மெக்கானிக் சென்று பச்சை கலர் பஜாஜ் cub ஸ்கூட்டரை கொண்டு வந்து வீட்டில் நிறுத்தினார். 

L லைசென்ஸ் எடுத்து ஸ்கூட்டர் ஓட்ட பழகிக்கொண்டேன். கொஞ்சம் தைரியம் கிடைத்து ஆபீஸ் வரை ஓரிரண்டு நாட்கள் சென்று வந்தேன். 

அன்று ஆபீசில் நண்பர் ஒருவர் அவருடைய மகளின் 5 வயது பிறந்த நாள் கொண்டாடுவதாகவும் அதற்காக ஒரு சின்ன பார்ட்டி வைப்பதாகவும், சாயந்திரம்  குடும்ப சமேதம் வந்து பங்கெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆபிசிலிருந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டில் முன்பே கூறியிருந்தபடி மனைவியும் மகனும் புறப்பட்டு தயாராக இருந்தனர். 

அவருடைய வீட்டிற்கு ஸ்கூட்டரில் செல்லலாம் என்று ஒரு தோணல், பந்தா. அதன்படி ஸ்கூட்டரை ரோடில் கொண்டு வந்து ஸ்டார்ட் செய்து முன்பக்கம்  பையனை நிறுத்திவிட்டு பின் சீட்டில் மனைவியை இருக்கச் சொன்னேன். அவர் இதுவரை எந்த வாஹனத்திலும் பின் சீட்டில் இருந்து பயணம் செய்யாதவர். ஆகவே அவர் ஸ்கூட்டர் வேண்டாம் என்று மறுத்தார். நான் விடாப்பிடியாக 'ஏறு' என்று சொல்லிவிட்டு பிரேக்கில் இருந்து காலை எடுத்துவிட்டு, கிளட்ச் ரிலீஸ் செய்தது தான். 

அடுத்த வினாடி நான், ஸ்கூட்டர், பையன் எல்லாம் சாக்கடையில் கிடந்தோம் 

ஐயோ அப்புறம் என்ன ஆச்சு? 

எதிர்த்த வீடு,  பக்கத்து வீடு என்று நிறையப் பேர் சாக்கடையில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்களின் தயவால் மேலே ஏறி வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு பார்ட்டிக்குப் போவதை கேன்சல் செய்தேன். அடுத்த வீட்டுக்காரர் பரிசோதித்து  விட்டு இருவருக்கும் வெளிக்காயம் எதுவும் இல்லை, எதற்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று வரலாம் என்று கூறி எங்களை ஜெனரல் ஆஸ்பத்திரி கேஷுவால்ட்டிக்கு கூட்டி சென்றார். உள்காயமும் இல்லை, வீட்டிற்குத் திரும்பினேன். 

அன்று முதல் இது வரையிலும் மனைவி ஸ்கூட்டரில் என் பின்னால் அமர்ந்து பயணம் செய்ததில்லை. 

பின்னர்தான் பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள்  எப்படி ஸ்கூட்டர் சாக்கடைக்குள் விழுந்தது ன்பதை விளக்கினர். மனைவி ஸ்கூட்டரில் புட்ரெஸ்ட்டில் காலை எடுத்து வைக்கும்போது முன்சக்கரம் தூக்கி விட்டது அதோடு கிளட்ச் ரிலீஸ் செய்ய ஸ்கூட்டர் பறக்கும் குதிரை போல் பறந்து தடுப்பு சுவரையும் தாண்டி சாக்கடைக்குள் தொப்பென்று விழுந்தது. இதுவே நடந்தது. 

இப்படியாக வீட்டிற்கு முன்புள்ள சாக்கடையில் ஒரு ஞானஸ்நானம் பெற்றேன். God blessed me.   

=========================================================================================

தமிழ் படும் பாடு பற்றி நா பா...

மொழி பெயர்ப்பில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் என்ன என்பதைக் கூறுமுன், தாய்மொழியிலேயே சுயமாக எழுதும்போதுகூட மொழி பெயர்த்தது போல் எழுதும் ஒருவகைப் புதுப் பிழையை முதலில் கவனிக்கலாம்.

ஆங்கிலம், இந்தி, வடமொழிகளின் தொடர்பால் சிதைந்து - கெட்ட வாக்கியங்களும் தமிழில் களையாய் முளைத்து வழங்குகின்றன. தமிழ்ப் பெண்ணுக்கு வெள்ளைக்காரியின் 'கவுன்' அணிந்த மாதிரியும், வெள்ளைக்காரப் பெண்ணுக்குத் தமிழ்ப் புடவையைக் கட்டின மாதிரியும் சில வாக்கியங்கள் உண்டாகி வழங்குகின்றன. பல மொழிப் பயிற்சி காரணமாகவும் பெரிய மனிதர்களின் வாய்களில் புகுந்து புறப்படுகிற பெருமையைக் கண்டும். பலர் இத்தகைய வாக்கியங்களை அங்கீகரித்தாலும் இவை தமிழ் மொழி மரபுக்கு ஏலாதவை.

'நான் அதற்கு முயற்சிக்கிறேன்.

இரயிலில் உங்களுக்குப் பக்கத்தில் எனக்கும் கொஞ்சம் இடம் போட்டு வையுங்கள்.'
'அந்த விழாவில் அவசியம் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது நடந்தது'.

'நீங்கள் மிகவும் மோசமானவராக இருக்கிறீர்கள்!*

'பரீட்சார்த்தமாக இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய உத்தேசபூர்வமான நோக்கமல்ல. "அருகாமையில் உள்ள இடம்.

'முயல்கிறேன்'- என்றெழுதினாலே தன்வினை ஒருமையில் அமையும். 'முயற்சிக்கிறேன்' என்பது பிழை 'இடம் ஒழித்து வையுங்கள்.' 'இடம் விட்டு வையுங்கள்' என்பது மரபுக்கு ஏற்கும். ' இடம் போட்டு வையுங்கள்" எனப் போடுதல் என்ற சொல்லைப் பயன்படுத்துதல் தவறு. பங்கு எடுத்துக் கொள்ளுதல்'-என்பது 'டேக் பார்ட்' என்ற ஆங்கிலத் தொடரின் தழுவல். 'ஒரு நூறு' என்னும் தொடர் தரும் பொருளை 'நூறு' என்ற எண்ணும் பெயர் ஒன்றே தரும். ஒன்றுக்கு மேற்பட்டால் சொல்லுக்கு முன் இரண்டு, மூன்று என்ற அடைமொழி முன் அமைய வேண்டியதுதான். 'ஒருநூறு' என்பதில் 'ஒரு' என்ற சொல் வீணான மிகைச் சொல். 'நீங்கள் மிகவும் மோசமானவர்'- என்றாலே எழுவாயும் பயனிலையும் முடித்துக் காட்டுஞ் சொல்லும் சரியாக அமைந்த முழு வாக்கியமாம். 

'இருக்கிறீர்கள்' - என்பது அனாவசியமான சொல். அருகில் என்ற பதமே பக்கத்தில் எனப் பொருள்படும். அருகாமை என்றால் தொலைவு. பிற மொழியிலிருந்து தனிச்சொற்களை அமைத்தலும், பயன்படுத்தலும் ஏற்றதாக இருப்பினும் 'பரீட்சார்த்தம்' 'உத்தேசபூர்வம்' - போன்று இருமொழி இணைந்து பிரியாது ஒரு தொடராய் நிற்கும் பிறமொழிச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவது நல்லதாகாது.

இன்னும் அழகுக்காவது சில சொற்களுக்குப் பக்கத்தில், சில சொற்கள் உடன் தொடராமல் தவிர்க்க வேண்டும். 'அப் பொருள் இப் பொருளை விடச் சிறிது பெரிது; இந்த வாக்கியத்தில் 'சிறிது பெரிது' என்ற முடிப்பில் இரண்டு சொற்களும் ஒன்றோடொன்று இணையத் தயங்கி இணங்காமல் விட்டிசைத்து நிற்பது தெரியவில்லையா? 'சற் றுப் பெரிது' என்றோ சற்றே பெரிது என்றோ இருந்தால் அழகாகப் பொருந்தும்.

'அப்படிச் செய்யாமற் போயிருந்தால் நன்றாக இல்லாமலிருந்திருக்கும்'-என்று ஒரு வாக்கியம்.  இதில் முன்னும் பின்னும் சொற்கள் அழகாகச் சேரவில்லை. 'செய்யாமற் போயிருந்தால்'-' இல்லாமலிருந்திருக்கும்' - - இரண்டு இடங்களிலுமே வார்த்தைகள் ஒட்டாமல் நலிந்து அழகு குன்றி முரண்பட்டு ஒலிக்கின்றன. இல்லாமலிருந்திருக்கும்; இருந்திராது- என்ற தொடர்களில் உடன்பாடும், எதிர்மறையும் அருகருகே நின்று தண்ணீரும்- எண்ணெயும் போல ஒட்டாமலிருக்கின்றன.

'திருட்டுக்காகத்தான் திருடன் திருடுகிறான்' என்பது சரியல்ல. ஒரே சொல் திரும்ப வருவது செய்யுளில் அணி. வசன நடையில் பொருளின் மந்தகதிக்கு அதுவே காரணம். அவனவன் அவனவனுடைய காரியத்தை அவனவன் பாட்டுக்குக் கவனித்துக்கொண்டு போக வேண்டும்' என்று எழுதுவதில் சொல் அடுக்கிக்கொண்டு முடுக்கினாலும் பொருள் தயங்கித் தேங்கி மந்தப்படுகிறது.

உணர்ச்சி வாக்கியங்கள், வினா வாக்கியங்கள் -என்று இத்தகைய வாக்கியங்களில் புதிய நடைகளையும், புதிய குறியீடுகளையும் மேற்கொள்வதாக எண்ணிப் பிறழ்ந்த முறைகளை மேற்கொள்கின்றனர் சிலர். இனி மொழி பெயர்ப்பின் போது கவனிக்க வேண்டிய முறைகளைப் பார்க்கலாம்.

எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு எதைக் கொணர்ந்தாலும் அடிப்படையாகக் கவனிக்க வேண்டிய தொன்று உண்டு. எந்த மொழியிலிருந்து மொழிபெயர்த்தது என்பதைவிட எந்த மொழியினருக்கு அதைப் பதிய வைக்கப் போகிறோம் என்பதுதான் மிகமிக முக்கியம் வார்த்தைகளை மொழி பெயர்க்கிறோமா, கருத்துக்களை மொழி பெயர்க்கிறோமா, படிக்கிறவர்களுக்கு அவர்கள் படிக்கிற மொழியிலே புரிந்துணர்வு (understanding) ஏற்படச் செய்ய வேண்டுவது அவசியமானது. வார்த்தைக்கு வார்த்தையை மொழிபெயர்ப்பது என்ற தீவிரக் கடமையுணர்ச்சியைவிட அர்த்தத்தை மொழிபெயர்க்கும் இங்கிதமே பயன் தருவது. வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பது வார்த்தையின் அர்த்தத்தை மொழிபெயர்ப்பது என்ற இரண்டு விதங்களில் அர்த்தத்தை மொழி பெயர்ப்பதுதான் சாமர்த்தியமானது. I will take stock of the situation' என்பதை, "நிலைமையைக் கணக்குப் பார்ப்பேன்" என்று மொழி பெயர்ப்பதைவிட நிலைமை யைக் கண்டறிவேன் " என்று மொழிபெயர்ப்பதே அர்த்த நிறைவைத் தயக்கமின்றி உணர வைக்கும். 'Red Carpet  Welcome' என்பதைச் "சிவப்புக் கம்பள வரவேற்பு" என மொழிபெயர்ப்பது பயனளிக்குமா அல்லது "சிறப்பான வரவேற்பு" என்றோ "விசேட வரவேற்பு" என்றோ அர்த்த பாவம் மட்டும் விளங்குமாறு மொழிபெயர்ப்பது பயனளிக்குமா என்று சிந்திக்க வேண்டும். அதே போல் 'Fishing in troubled water' என்பதைக் "குழப்பத்தில் மீன் பிடித்தல்" என மொழி பெயர்க்கலாமே ஒழிய" கஷ்டப்பட்ட நீரில் மீன் பிடித்தல்" என மொழிபெயர்க்க முடியாது.

உலகின் பெரும்பாலான மொழிகளிலிருந்து தமிழுக்கு நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு வந்திருக்கின்றன. சில மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது கடினமாகவும், இன்னும் சில மொழிகளிலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பது சுலபமாகவும் இருக்கிறது. திராவிட மொழி இனங்களில் எதிலிருந்தும் (மலையாளத்திலிருந்தோ, கன்னடத்திலிருந்தோ, தெலுங்கிலிருந்தோ) தமிழில் மிகமிகச் சுலபமான மொழி பெயர்ப்புச் சாத்தியமாகிறது. இதற்குச் சான்று மேற்படி திராவிட மொழி இனங்களிலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பாகி வந்திருக்கும் சிறுகதைகளும், நாவல்களுமேயாகும். சூழ்நிலையாலும் மொழி, இன அடிப்படையாலும், இந்த மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் பெரும்பாலான நூல்கள் வெற்றியடைந்துள்ளன.

புதிய பார்வை - நா பார்த்தசாரதி 1969

===================================================================================

ஏமாந்த அனுபவம் - பேஸ்புக் - அனன்யா  2016

அது அஞ்சலி வந்த 1990-1991.

குவாட்டர்லி லீவுக்கு பாம்பேயில் தில், ஆஷிக்கி, தில் ஹை கே மாந்த்தா நஹி இத்தியாதி பாடல்களுடன் அப்பாவுடன் வாசம்.

ஆஃபீஸ் குவாட்டர்ஸ் ரஹேஜா டவுன்ஷிப் மலாட் ஈஸ்டில் கொடுத்திருந்தார்கள்.

தி நைனா கார்த்தால ஐஞ்சரைக்கே சாணித்தண்ணியை எடுத்துண்டு வாசல் தெளிச்சு கோலம் போட ஆஃபீஸ் போய்டுவார். அவருக்கு பெட்டர் ரோட்டில் வேலை.
 
அம்மாவுக்கு சதா ஃப்ளாட் மக்களுடன் எதாவதொரு அஜெண்டா இருக்கும். வாக்கிங் போவார், ஜாலியாக இருப்பார். வீட்டில் நானும் தங்கைமணியும்.
டூ இன் ஒன்(அதை அப்படித்தான் சொல்லோணும், அதர்வைஸ் சாமிக்குத்தம் ஆய்டும்) இருந்ததால் சதா இளையாராஜா SPB ஸ்மரணையில் சஞ்சரிப்போம்.
தனியாக 1500 சதுரடி வீட்டில் நானும் இவளும் மட்டும் தனித்திருந்த ஒரு காலையில் வாசலில் பெல். விஸிட்டர்ஸ் என்று பார்த்தால், பால், பேப்பர், கரி பிஸ்கட் விற்பனையாள் - இந்த மூவரைத் தவிற வேறு யாரும் வரமாட்டார்கள்!
இப்போது கையில் பச்சைக்குத்திய சற்றே இளமையான பெண்.
கையில் குழந்தை, 8-10 ஒட்டடைக்குச்சி.

குழப்பத்துடன் பார்த்தேன். கதவைப் பார்த்துக்கொண்டே, 603 ஹைன்னா? என்றாள். நானும் கதவைப் பார்த்துக்கொண்டே, அவ நம்பிக்கையுடன் மண்டையாட்டினேன். "நீச்சே ஆப்கே மம்மீ நே யே தேனேகோ கஹா" என்றபடியே ஒன்றை நீட்டினாள்.அபார்ட்மெண்ட் கட்டியே மூன்று மாதங்கள் தான் ஆகிறது, அதற்குள் எதற்கு ஒட்டடைக்குச்சி என்றெல்லாம் அனலிட்டிக்கலாக யோசிக்கத்தெரியாத அசட்டு பருவம். (இப்போவும் அப்படியே, ஹிஹி)

பொறுப்புடன் ஒட்டடைக்குச்சியை வாங்கி வைத்குக்கொண்டேன். அவள் கொடுத்துவிட்டு நிற்கவே, ஓ பணமும் கொடுக்க வேண்டுமே! என்று நினைவு வந்தவளாய், கித்னா என்றேன். பச்ப்பன்் ருப்யே என்றாள். அம்மா வீட்டுச்செலவு பணம் வைத்திருக்கும் டப்பாவை எடுத்து, ஐந்து பத்து ரூபாய்கள் ஒரு ஐந்து ரூபாய் நோட்டு எல்லாம் எடுத்து, ஒழுங்காக எண்ணி சரிபார்த்து எடுத்துக் கொடுத்தேன்.

வாங்கிக்கொண்டு போனாள்.  
 
நவீன திஉவிளையாடல் ரங்கனாதன் கணேஷண்ணா மாதிரி எங்கே போனாளோ தெரியாது. காக்கா ஓஷாகிவிட்டாள் அந்த கிராதகி.

அம்மா வாக்கிங் போய்விட்டு வந்தார், நானும் ஒரு உத்தமபுத்திரி போல், அம்மா ஒட்டடைக்குச்சி வாங்க சொன்னீங்களே, வாங்கிப்டேன் என்று பலத்த பெருமையுடன், ஒரு சென்ஸாஃப் அக்காம்ப்ளிஷ்மெண்டுடன் சொன்னேனா? அம்மா எவ்ளோடீ என்றார். ஐம்பத்தி அஞ்சு ரூபாயாம்மா! என்று நான் சொன்னதும், அவர் மயக்கம் போட்டு விழுந்தார்.

இல்லியாம். தட் கிராதகி ஏமாத்திஃபைட் மீ. ஐ, ஒன் இன்னொஜெண்ட் கேள். அடுத்த ஒரு வாரம காலனி பூரா நான் காலணியானேன் எல்லோர் உதட்டிலும் என் பேர் தான். லாஃபிங் ஸ்டாக். மஜூம்தாரின் மனைவி தான் ஓவராக காண்டேத்தினார். அய்யோ, நான் ஒரு புடவை வாங்கியிருப்பேனே என்று அங்கலாய்த்தார். எது? அம்பத்தைஞ்சு ரூபாய்க்கு புடவையா? உம்மூஞ்சி மாதிரின்னா இருக்கும் அது என்று மிகச்சத்தமாய் மநசுக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்!

இப்பிடி ஏமாந்துட்டாளே என்று கை கொட்டி ஷிரித்தார்ஹள்ள்!

இன்ஸ்பயர்ட் ஃபர்ம் Sriram Balasubramaniam நீங்களும் ஏமாந்த சோணகிரித்தனத்தை தொகுத்து ஒன் போஷ்ட் புட்டின்கலாமே?

அநன்யா என்னைக் குறிப்பிட்டிருக்கிறாரே என்று நீங்கள் புருவத்தில் கேள்விக்குறி போடுவது தெரிகிறது.. விவரம் இதோ...



==============================================================================

முதலில் ஒரு அறிமுகம்...

கவிஞர் விக்ரமாதித்யன் (அ. நம்பிராஜன்) நவீனத் தமிழ் இலக்கியத்தின் முதன்மையான கவிஞர்களில் ஒருவர், 60 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர். 16-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளைப் படைத்துள்ளார். சாதாரண வார்த்தைகளில் மந்திரத் தன்மையையும், யதார்த்தமான வாழ்வியலையும் பாடுவதில் வல்லவர். இவர் 2021-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது பெற்றவர். விக்ரமாதித்யன் குறித்த முக்கிய விவரங்கள்: பிறப்பு: செப்டம்பர் 25, 1947. இயற்பெயர்: அ. நம்பிராஜன் (உத்திராடன் என்ற புனைபெயரிலும் எழுதியுள்ளார்). படைப்புகள்: 'நாடோடியின் கால்தடம்', 'கூண்டுப் புலி' (பிரபலமான கவிதை) போன்றவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். பாணி: தமிழ் மரபிலக்கியத்தின் மீது ஆழ்ந்த அறிவும், நவீனக் கவிதைச் சூழலில் தனித்துவமான பாணியும் கொண்டவர். 2021-ல் விஷ்ணுபுரம் விருது பெற்றார்.

விகடன் 2016 தீபாவளி மலரிலிருந்து....

நான் கவிஞன் ஆனதுக்கும் கர்மவினைதான் காரணம்னு எழுத்தாளன் ஆனதுக்கும் என் முழுசா நம்புறேன். ஆனா, நடிகன் ஆனது எனக்கும் என் குடும்பத்துக்கும் நல்வினையா, தீவினையானு எனக்குச் சொல்லத் தெரியலை. 'நீர் வழிப் படூஉம் புணை' போல இந்த வாழ்க்கை என்னை அதன் போக்கில் அடிச்சிட்டுப் போகுது. நான் வாழ்வென்னும் நதி தீரத்தில் ஏகாந்தமா மிதக்கிறேன். அதைச் சரியாவே செய்றேன்" அதிர அதிரச் சிரிக்கிறார் கவிஞர் விக்ரமாதித்தன். நெஞ்சம் வரை இறங்கி வழியும் வெண்தாடி, நரைப்பூத்த தலைக் கேசம், அதை ஆமோதிப்பதுபோல காற்றில் ஆடுகின்றன. "தமிழின் முக்கியக் கவிஞராக இருந்துகொண்டு சினிமாவில் துக்கடா கேரக்டர்களில் நடிகிறீர்களே?" எனக் கேட்டதற்குத்தான் அந்தப் பதில்.

'எனக்குப் பிடித்த கவிஞர் விக்ரமாதித்தன் பிச்சைக்காரராக என நடித்ததைப் பார்த்தபோது, என் கண்கள் கலங்கிவிட்டன' எழுத்தாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி வருந்தியிருந்தார். அந்த வருத்தம் உங்களுக்கும் உண்டா?"

"என் மீதுள்ள அன்பின் மிகுதியால் அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். அவருக்கு என் நன்றி. ஆனா, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் வேலையைச் சிறப்பா செய்தேன். இயக்குநர் பாலா என்னை கவிஞர் என்ற மரியாதையோடு தான் நடத்தினார். தவிரவும், 'உங்களை நடிக்கவெக்கலாம்னு பாலா சார் விரும்புறார். உங்களுக்கு விருப்பமா?'னு என்கிட்ட முதலில் கேட்டது. அப்போ ஒளிப்பதிவாளர் செழியனிடம் உதவியாளரா இருந்த என் இளைய மகன் சந்தோஷ் ஸ்ரீராம்தான். அதனால் வருத்தம் துளிகூட இல்லை. நான் ஒண்ணும் முழுமையான நடிகன் கிடையாது. சந்திரபாபு, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், காக்கா ராதாகிருஷ்ணன்... இவங்களைப் போன்ற ஜீனியஸ் கோலோச்சிய சினிமா உலகத்துல நான் எப்படிச் சொல்லிக்க முடியும், 'நானும் ஒரு நடிகன்தான்'னு. என் அப்பா என்.ஏ.சுந்தரம் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட். அதுதான் எனக்கும் சினிமாவுக்கும் இருக்கும் சின்ன பந்தம்!"

"உங்கள் அப்பா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா?"

"ஆமாம்... 'கப்பலோட்டிய தமிழன்' படத்துல சோல்ஜரா வருவார். 'இருவர் உள்ளம்' படத்துல வக்கீல் கேரக்டர். 'ஆடிப்பெருக்கு' படத்துல டி.டி.ஆர் வேடத்துல நடிச்சிருப்பார். அவர் பண்ணினதுலேயே பெரிய கேரக்டர்னா ருத்ரய்யாவோட ரெண்டாவது படம் 'கிராமத்து அத்தியாயம்'ல கதாநாயகனுக்கு அப்பா கேரக்டர்!"

"சினிமால நீங்க யார் ரசிகர்?"

"சிவாஜி கணேசன். 'தங்கப் பதுமை', 'நானே ராஜா', 'பராசக்தி' 'துளி விஷம், இல்லற ஜோதி, தெய்வப்பிறவி படங்கள்ல நடிச்ச ஆரம்ப கால சிவாஜி ரசிகன் 

"உங்கள் பால்யம் பற்றிச் சொல்லுங்க?"

"வறுமையும் வேதனையும் பசியும் நிறைஞ்சது என் பால்யம். அஞ்சாவது பாஸ் பண்ணின பிறகு, 1958-ம் ஆண்டு தொடங்கி ஏழு வருஷம் குழந்தைத் தொழிலாளியா, நான் பார்க்காத வேலைகளே மளிகைக் கிடையாது. கடைப் பையன், சித்தாள் வேலை, இட்லி விக்கிறவன், காயலாங்கடை உதவியாளர், ஹோட்டல் கிளீனர், கட்பீஸ் ஸ்டோர் உதவியாளர்னு ஏகப்பட்ட வேலைகள். அதுக்குப் பிறகு அஞ்சு வருஷம் கழிச்சி சென்னை மேற்கு மாம்பலம் கார்ப்பரேஷன் ஸ்கூல்ல, ஆறாம் வகுப்பு சேரப் போனபோது டெஸ்ட் வெச்சாங்க. அதுல 'பொன்'கிற வார்த்தைக்கு 'பொண்'னு எழுதினேன். அதனால மறுபடியும் அஞ்சாங் கிளாஸ்லயே போட்டுட்டாங்க. அப்படிப் 

"இதுக்கு இடையில நீங்க எப்போ கவிதை எழுத ஆரம்பிச்சீங்க?"

"நான் கவிதை எழுதுறதுக்குக் காரணம் சென்னையும் கண்ணதாசனும்தான். அப்போ, புரட்சி நடிகர் மன்றம், எஸ்.எஸ்.ஆர் மன்றம், அண்ணா மன்றம், நாவலர் மன்றம்னு தெருவுக்குத் தெரு தி.மு.க மன்றங்கள் இருக்கும். அங்கே கிடைக்கிற பத்திரிகைகளை வாசிப்பேன். அப்படி வாசிச்ச புத்தகங்கள்ல ஒண்ணுதான், 'கண்ணதாசன் கவிதைகள்'. கவிதைகளோட சொல்லாட்சி எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. கவிதை எழுதனும்னு எனக்கு உந்துதல் வந்தது அப்போதான். தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் கவியரங்கம் நடக்கும்; தவறவே விடமாட்டேன். என் மனசு முழுக்க கண்ணதாசன் இருந்த காலகட்டம் அது."

"உங்க கவிதைகளை கண்ணதாசன்கிட்ட காண்பிச்சிருக்கீங்களா... அவர் என்ன சொன்னார்?'

"என் ஒரு கவிதையைக்கூட காண்பிச்சது இல்லை. ஆனா, ரெண்டு முறை அவரை பேட்டி எடுத்திருக்கேன். எம்.எஸ்.உதயமூர்த்தி ஆரம்பிச்சு மணியன் பொறுப்பில் வெளிவந்த 'மயன்' பத்திரிகையில நான் புரூஃப் ரீடர். அப்போ கண்ணதாசனோட 'சேரமான் காதலி' நாவல் சாகித்ய அகாடமி விருது வாங்கியது. அப்பவும், 'துக்ளக்' பத்திரிகையிலேர்ந்து அனந்து வெளியே வந்து ஆரம்பிச்ச 'விசிட்டர்' பத்திரிகையின் மதுவிலக்கு கவர்ஸ்டோரி சம்பந்தமாகவும் அவரைப் பேட்டி எடுத்திருக்கேன்!"

"குழந்தைத் தொழிலாளி, ஹோட்டல் சர்வர், கேஷியர், பத்திரிகையாளர்... இன்னும் என்னென்ன வேலைகள் எல்லாம் செஞ்சுருக்கீங்க?"

சுகுமாரன், "பெரும்பாலான நவீன இலக்கியவாதிகள் புத்தகத்துக்கு புரூஃப் பார்த்திருக்கேன். பிரமிள், தேவதேவன், வண்ணதாசன், கலாப்ரியா... இவங்களோட புத்தகங்களில் பெரும்பாலானவை என்னால் புரூஃப் பார்க்கப்பட்டவை. அவர்கள் அதற்காக எனக்கு சன்மானம் தருவார்கள். பிரமிள் தந்தது கிடையாது. ஆனால், அதை வேறு வழியில் வாங்கிவிடுவேன். அப்புறம் குன்றக்குடி அடிகளார் ஆதீனத்தில் அட்டெண்டர் வேலை... அவருக்கு வருகிற திருமணப் பத்திரிகைகளுக்கு வாழ்த்து எழுதித் தருவது. அதில் நான் தொடர்ந்து இருந்திருந்தால், வாழ்க்கையில் செட்டில் ஆகியிருப்பேன். ஆனால், 'இது என் வேலை அல்ல' என மூணாவது நாளே தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேன்."

"அப்படின்னா உங்க வேலைதான் என்ன?"

"நான் ஆரம்பத்துல சொன்னதுபோல, நான் கவிஞனா இருப்பது என் கர்மவினை. கவிதை எழுதுறதும் கவிதை பற்றி எழுதுறதும்தான் என் வேலை. ஒரு கவிஞன் மிஞ்சி மிஞ்சிப் போனால், ஒரு பத்தாண்டு காலம் கவிதை எழுதலாம். அதன் பிறகு கவிதை எழுத காலமும் மொழியும் அவனை அனுமதிக்காது. பாண்டித்தியமும் இருந்தால், இன்னும் மொழியில் சகல ஒரு பத்தாண்டுகள் 
அனுமதிக்கும். அந்தக் காலத்துக்குள் அவன் எழுதிய நல்ல கவிதைகள் பத்தா இருவதா, முப்பதா, நாற்பதாங்கிறது அவனவன் கொடுப்பினை. அதுக்கு மேல ஒரு கவிஞனால் ஒன்றும் செய்துவிட முடியாது. நாமளாவே நம்மை ஏறக்கட்டிக்கிறது நல்லது. அல்லது வேற வேலை பார்க்கப் போயிடணும்."

"அந்தக் கணக்குப்படி பார்த்தா நீங்க கடைசிக்காலத்துல இருக்கீங்கனு சொல்லலாமா?"

"கடைசிக்காலம் இல்லை... கவிதையில் என் முடிஞ்சிருச்சுங்கிறதுதான் யதார்த்தம். மனசு அதை காலம் ஒப்புக்க மாட்டேங்குது. இதைச் சொல்றதால எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை."

"நீங்க காதலிச்சிருக்கீங்களா?"

"அடேயப்பா... எத்தனை காதல்கள் (பெருங்குரலெடுத்துச் சிரிக்கிறார்) எதைச் சொல்ல, எதை விட? ஆனா, ஒரு நல்ல காதலனால் மட்டும்தான் நல்ல கவிஞனாக இருக்க முடியும். பெண்மையைக் கொண்டாடத் தெரியாதவனால் ஒரு கவிதைகூட எழுதிவிட முடியாது."

"நீங்க எவ்ளோ போதையில இருந்தாலும் சைவம்தான் சாப்பிடுவீங்களாமே?" 

"ஆமாம்... 'பொய் சொல்லக் கூடாது, ஏமாத்தக் கூடாது, போட்டி போடக் கூடாது'னு நல் இயல்புகளைச் சொல்லித்தானே நம்மை வளர்த்திருப்பாங்க. மெட்டீரியல் லைஃப்ல இதுபோன்ற நல்லியல்புகள் எல்லாம் நம்மளைவிட்டுப் போயிருச்சு. அதனால, சின்ன வயசுலேர்ந்து நான் பழகிட்டு வந்த சைவ உணவுப் பழக்கத்தை விடக் கூடாதுன்னு உறுதியா இருக்கேன். சைவ உணவு சாப்பிடறதுனால நான் நல்லவன்னு சிலர் நம்புறாங்க. இது ஒரு கிரெடிட்தானே? மற்றபடி, அசைவ உணவுப் பழக்கம்கொண்ட எல்லா நண்பர்கள் வீட்டுலயும் சைவ உணவு சாப்பிட்டிருக்கேன்!'

"நீங்க சொல்றதுபடி பார்த்தா அசைவ உணவு சாப்பிடறது கெட்ட பழக்கம்னு ஆகுதே?"

"என் நாற்பது வயசுல இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தா... 'ஆமாங்க அசைவ உணவு ஏற்புடையது அல்ல'னு ஏதாவது சொல்லியிருப்பேன். இப்போ இந்தக் கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லைனுதான் சொல்லணும். அப்புறம் நாம எல்லாருமே புலால் உணவு சாப்பிட்டு அதுலேர்ந்து மாறி வந்தவங்கதானே? எனக்கு இருப்பது சாதி சார்ந்த சைவப் பற்று அல்ல. தமிழ்ப் பற்று, கவிதைப் பற்று மாதிரி இருக்கிற சைவப் பற்று. மற்றவர்களின் உணவுப் பழக்கத்தை நல்லது கெட்டதுன்னு சொல்ல நாம் யார்?"

"இவ்வளவு காலத்துக்குப் பிறகு இந்த வாழ்க்கை உங்களுக்கு என்ன சொல்லுது?"
"என் உலகம் ரொம்பச் சுருங்கிருச்சு. 'அண்ணாச்சி வர வர முதுமக்கள் தாழி ஆகிட்டார்'னு விளையாட்டா சொல்வார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். இந்த வாழ்வே ஒரு கர்மவினைதான். கர்மவினைனு சொன்னதும் இந்து மதம் சொல்ற கர்மவினைனு நினைச்சுக்காதீங்க. விக்ரமாதித்தன் இந்துத்துவம் பேசுறான்னும் நினைச்சிராதீங்க. நான் சொல்ற கர்மவினை... 'தீதும் நன்றும் பிறர்தர வாரா'னு கணியன் பூங்குன்றனார் சொன்ன, 'நீர் வழிப் படூஉம் புணைபோல... ஆரூயிர் முறைவழிப் படும்' கர்மவினை. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'னு வாழ்வைக் கொண்டாடச் சொல்லும் கர்மவினை!"

"அந்தக் கணக்குப்படி பார்த்தா நீங்க கடைசிக்காலத்துல இருக்கீங்கனு சொல்லலாமா?"

"கடைசிக்காலம் இல்லை... கவிதையில் முடிஞ்சிருச்சுங்கிறதுதான் என் காலம் யதார்த்தம். மனசு அதை ஒப்புக்க மாட்டேங்குது. இதைச் சொல்றதால எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை."

===========================================================================================





================================================================================================

கோல்கொண்டா கோட்டை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை சொல்லும் அ சா ஞானசம்பந்தம்.

=================================================================================

52 கருத்துகள்:

  1. அடுத்து கோல்கொண்டா பற்றி எழுதணும்னு ஆரம்பிச்சேன். இப்போ பாத்து காணொளி போட்டுட்டீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா. ஹா.. ஹா... வாங்க நெல்லை.. எனக்கென்ன தெரியும்? இது சில வாரங்களாகவே டியூ!

      நீக்கு
  2. இன்றைக்ம் பல்சுவையாக பதிவு இருக்கு. மாற்றணும் என்பதற்காக, பாடலைப் பெஇரலை போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல்கள்தான் நேற்றே போட்டாச்சே நெல்லை.. பார்க்கவில்லையா? கேட்கவில்லையா?

      நீக்கு
  3. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏமாறுவதற்குச் சொல்லியா தரணும்? இயல்பா நடப்பது தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ அதையும் 'ஹையோ.. அப்புறம் என்னாச்சு' வில் எழுதலாமே... யாருமே அனுப்பலை!

      நீக்கு
    2. எழுதி அனுப்பினதுக்கே உங்கள்டேர்ந்து கமென்டைக் காணோம். மெயில் பார்க்கறீங்களான்னே தெரியலை

      நீக்கு
    3. உங்களிடமிருந்து வந்த மெயிலுக்கு பதில் சொல்லி விட்டேன், தேதி சொல்லி விட்டேன் என்று நினைவு.  ஆனால் அப்புறம் என்ன ஆச்சுவுக்கு ஒன்றும் வரவில்லை.

      நீக்கு
    4. ஆ.... எப்போதும்போல நான்தான் மெயிலைப் பார்க்கலையா?

      நீக்கு
  4. சில்வர்ப்ளஸ்... 90ல் நான் வாங்க நினைத்த வண்டி. அப்கோவே, அதாவது இளமையிலேயே பழகி இருந்தால் தைரியம் இருந்திருக்கும். எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாது. எக்காரணம் கொண்டும் பின்னால் உட்கார்ந்து பயணிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அவந்தி கரேலி - அண்ணனுக்காக வாங்கியது - ஓட்டி இருக்கிறேன். அப்பா,அம்மா, பாஸ், தங்கை இன்னொரு சைட், எல்லோரையும் டபுள்ஸ் அடித்திருக்கிறேன்!

      நீக்கு
  5. தமிழ் பற்றி நாபா எழுத்து சூப்பர். நிறைய தவறுகளைச் சுட்டிக் காட்டுது. நல்ல பெஇர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்னன் ஞாபகத்தில் இருக்காரா?

      நீக்கு
    2. எனக்கு அவரைப் பிடிக்காது. என் அப்பா ரொம்ப சிலாகிப்பார், ஒரே துறை என்பதால்.

      நீக்கு
    3. நன்னனையா?  எனக்கும் பிடிக்காது.  ஆனாலும் அவர் பேச்சும் தமிழும் ரசிப்பேன்.

      நீக்கு
  6. பெயர்ப்பு என்றால் என்ன?
    ஒரு உதாரணம் : அந்த இடத்தில் இருந்த கற்பாறையைப் பெயர்த்து இந்த இடத்தில் வைத்ததும் அழகாக இருக்கிறது.
    ஒன்றை அப்படியே அந்த இடத்திலிருந்து எடுப்பது தான் பெயர்ப்பு.
    அந்தக் காலத்தில் மொழிபெயர்ப்பு என்ற வார்த்தையை இந்த அர்த்தத்தில் தான் சர்வ சாதாரணமாக உபயோகித்து வந்தோம்.
    அதனால் நா.பா.வின் மீது தப்பில்லை.
    ஆனால் காலத்தின் செழுமையில் மொழிபெயர்ப்பு என்ற வார்த்தைதை இப்பொழுதெல்லாம் உபயோகிப்பதில்லை.
    அதற்கு வேற்றுச்சொல் வந்த பிறகு தான் அந்த 'பெயர்ப்பு' வார்த்தை அவ்வளவு சரியில்லை என்று இப்பொழுது தெரிகிறது.
    அட! அது என்ன அந்த வேற்றுச்சொல்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொழி மாற்றம்னு சொல்றீங்களா ஜீவி சார்? ஒரு மொழியில் உபயோகிப்பதை, இன்னொரு மொழியில் அதே சந்தர்ப்பத்தில் எப்படி உபயோகிப்பாங்க அதே தட்டில் இருக்கும் மக்கள்னு தெரிந்து மொழிபெயர்த்தால் படிக்க நல்லா இருக்கும். பல மொழிபெயர்ப்புகள் படிக்க சகிக்காது. அதிலும் கூகுள் மொழிபெயர்ப்பை ஆதாரமா வச்சிக்கிட்டு முழிபெயர்க்கறாங்க.

      நீக்கு
    2. வாங்க ஜீவி ஸார்.. ஆமாம், அட, அதென்ன வேற்றுச்சொல்?

      நீக்கு
    3. நம்ம நெல்லை சொல்லிட்டாரே!..

      நீக்கு
  7. திரைப்படத்தின் தாக்கம் நம்மிடம் அதிகம். சலங்கை ஒலி படம் பார்த்தப்பறம் இன்னமும் என் மனதில் ஷைலஜா ராங்கிக்காரி என்ற பிம்பம்தான். விக்ரமாதித்யறை ஒரு கவிஞர் என மனம் ஏற்றுக்கலை, அவரது திரைப் பங்களிப்பால்.வில்லன்கள் படத்தைப் பார்த்தாலே, அவங்க மனைவியை எவ்வளவு கொடுமைப்படுத்தறானோ எனத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர் நடித்து நான் ஏதாவது படம் பார்த்திருக்கிறேனா என்று யோசிக்கிறேன். அல்லது நான் பார்த்த எந்தப் படத்தில் இவர் நடித்திருந்தார் என்று யோசிக்கிறேன். சமீபத்தில் தலைவர் தம்பி என்றொரு ஜீவா படம் பார்த்தேன். அதில் ஒல்லியாக ஒரு தாடி வருகிறார். இவர்தானா என்று ஆராய வேண்டும்!

      நீக்கு
  8. அது சரி, கோல்கொண்டா என்ற பெயர் எப்படி வந்தது?
    அப்படியே நம்ம திண்டுக்கல்? எதனால் இந்தப் பெயர்?
    இப்படி யோசிக்க யோசிக்க எத்தனை எத்தனை பெயர்கள்?
    அவற்றிற்கான எத்தனை காரணங்கள்!
    சத்தியமா சொல்றேன். 'நாம் -- நம் சொந்த பொழைப்பு' என்று நம்மைத் தாண்டி ஒண்ணுமே தெரியாமல் தான் அன்றாட வாழ்க்கையை நாமெல்லாம் ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.
    இதெல்லாம் தெரிந்து என்ன ஆகப் போகிறது என்று கேட்கிறீர்களா?
    'அதுவும் சரி தான்' என்று டக்கென்று பதில் சொல்ல முடியவில்லை.
    யோசனை ஓடுகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓடுகிற யோசனைகளை இங்கும் பகிர்ந்து கொள்வீர்கள் என்றுதான் நம்புகிறேன், விரும்புகிறேன்!

      நீக்கு
    2. ஜீவி சார்.... நம் சோழர்கள் பல்லவர்கள் வரலாற்றைப் படிக்கும்போது புதுப் புதுச் செய்திகளை அறிந்துகொள்கிறேன். கும்பகோணம் இருபது தடவைகள் போயிருந்தாலும் காண வேண்டிய சரித்திரச் சின்னங்கள் ஏராளம். ஒரு தடவை மனைவியுடன் தஞ்சை பெரியகோயில் போயிருந்தபோது அங்கு வந்திருந்த ப்ளஸ் 2க்களுக்கு ராஜராஜன் பெயர் பொறித்த கல்வெட்டுகளைக் காண்பித்து அதன் முக்கியத்துவம் சொன்னேன். இதிலென்ன இருக்கு என்ற அசிரத்தை, ஆர்வம் இன்மை. மனைவி ஏன் டயம் வேஸ்ட் பண்ணினீங்க என்றாள். அது சரி.. தெரியாவிட்டால் இப்போ என்ன? நம் முந்தைய முந்தை தலைமுறை அமெரிக்காவில் நேடிவ் குடியினருக்கு என்னானது, நியூசிலாந்தில் பூர்வகுடிகள் உரிமை பறிக்கப்பட்டது எப்படி எனப் பலவற்றையும் தெரிந்துகொள்ளாமல் மறைந்தார்கள். என்ன கெட்டுப்போச்சு?

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  10. மன்னிக்கவும் நண்பர்களே.. இன்றைய நாளை மறந்து விட்ட காரணத்தால் இப்போது அவசரமாக இரண்டு படங்கள் சேர்த்திருக்கிறேன் பதிவில். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் பதிவை மறுபடி பார்த்து விடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ.. உங்களுக்கே மறந்து விட்டதா.! முன்பெல்லாம் வாரம் இன்று இந்த நாள் என்பதை எபி நினைவூட்டி விடும். இப்போதைய தினசரி மாறுதல்கள் நன்றாக இருக்கிறது. தினமும் ஒரு வாரப் புத்தகம் ஒன்றை படித்த நிறைவையும் தருகிறது. ஆனால், நாள் குறித்து ஒரு தடுமாற்றம் அவ்வப்போது ஏனோ வருகிறது. அது நீங்கள் சொல்வது போல கொஞ்சம் பழகினால், சரியாகி விடுமென நினைக்கிறேன். தற்போது சேர்த்தப் பதிவையும் படிக்கிறேன். நன்றி

      நீக்கு
    2. நினைவில் வைத்து இன்றைய பதிவை அவருக்கு சமர்ப்பிக்க நினைத்து சேர்த்து வைத்திருந்தேன். சுத்தமாக கடைசி நேரத்தில் மறந்து போனது.

      நீக்கு
    3. அது திரு சுஜாதா பற்றியது என இப்போதுதான் பார்த்தேன். எழுத்துலகிலும் , திரையுலகிலும் கொடி கட்டி பறந்த அவரது நினைவுகளை நம்மால் மறக்க முடியாது. படித்து விட்டு வருகிறேன். நன்றி.

      நீக்கு
  11. கவிஞர் விக்ரமாதித்யன் வித்தியாசமானவர் தான்.
    அவர் பற்றி இந்தக் குறிப்பை வாசிக்க ஆரம்பித்து, எம்.எஸ்.உதயமூர்த்தி, மணியன், எம்.ஜி.ஆர்....என்று மேயத்துவங்கிய மனரை பலவந்தமாகப் பிடித்திழுத்து மறுபடியும் விக்ரமாதித்யனில் நிறுர்துவதற்குள் பெரும்பாடாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்...   ரசிச்சீங்க, பிடிச்சிருந்ததுன்னு சொல்லுங்க... 

      நீக்கு
  12. @ நெல்லை

    ///கூகுள் மொழி பெயர்ப்பை ஆதாரமா வச்சிக்கிட்டு
    முழி பெயர்க்கறாங்க.///

    அருமை... அருமை

    பதிலளிநீக்கு
  13. வெள்ளிக்கிழமை
    விடியும் நேரம்
    வாசலில் கோலமிட்டேன்...

    மங்களகரம்!..

    அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்குப்
    புரியும் என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறாக எதுவும்  இந்தப் பதிவில் இல்லை என்றே நம்புகிறேன் செல்வாண்ணா 

      நீக்கு
  14. ​நா பா ஆகட்டும், விக்ரமாதித்யன் ஆகட்டும் எழுத்தாளர்கள் எல்லோரும் அவர்கள் கூறுவது 100 சதவீதம் சரியே என்று வாதிப்பவர்களாக இருப்பது ஏன் என்று புரியவில்லை. காலத்திக்கேற்ப மொழியும் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் மாறுவது இயல்பு என்பது பொய்யோ?

    ஸ்ரீராம் நீங்கள் ஏமாறக்கூடிய, ஏமாறவேண்டிய வயசில் தான் ஏமாந்திருக்கிறீர்கள். அனுபவம், பாடம்.

    பதிவு முழுமை பெறாது போல் ஒரு தோணல்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெறாது பெறாதது இரு திருத்திக்கொள்ளவும்

      நீக்கு
    2. // காலத்திக்கேற்ப மொழியும் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் மாறுவது இயல்பு என்பது பொய்யோ?//

      இல்லை, அதுதான் சரி என்று நானும் நினைக்கிறேன்.  வாங்க JKC  ஸார்...  அதனால்தான் ஆங்கிலத்தால் இந்த அளவு வளர முடிகிறது இல்லையா? 15 L

      நான் அப்புறமும் ஏமாந்திருக்கிறேன்.  நிறைய...  2019 ல் மறக்க முடியாத பாடம் கற்றுக் கொடுத்தார் ஒரு பில்டர்...

      நீக்கு
    3. // பதிவு முழுமை பெறாது போல் ஒரு தோணல். //

      எனக்கும்..  ஏதோ ஒன்று குறைவது போல...

      நிறைய பகிர்ந்தாலும்  நீ..... ளம் என்கிறீர்கள்!!!

      நீக்கு
  15. பெங்களூரு கீதப்புயல் மதியம் 12 மணிக்குமேல் எங்கள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

    பதிலளிநீக்கு
  16. தலைப்பின் முதல்
    வார்த்தைக்காகச்
    சொன்னேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   அதுவா?  அதனால் பரவாயில்லை செல்வாண்ணா 

      நீக்கு
  17. ஒரு துறைல எக்ஸ்பர்ட்னா (துறைபோகியவர் னு தமிழ்ல எழுதினா எத்தனை பேருக்குப் புரியும்) அவர் பர்ஃபக்டா மற்ற நடத்தைகள்ன இருக்கணும்னு அவசியமில்லை. எடுத்துக்கொண்ட துறையை நல்லா செய்தா போதும். சுஜாதா பகுதியைப் படித்தபின் மனதில் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சொல்வது கிட்டத்தட்ட இப்போது ஜீவி ஸார் சொல்வது போல..  எல்லோரும் ஒன்றைப் பற்றி கவனித்து பேசிக்கொண்டிருக்கும்போது அதிலிருந்து புதிதாக ஒன்று முளைத்தால் வித்தியாசமாகத்தான் இருக்கும்!  ஆனால் உங்கள் கருத்துக்கு அவரே பதில் சொல்லி இருக்கிறார்.    அதாவது தீர்ப்பை உங்களுக்கே விட்டு விடுகிறார்.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பதிவு அருமை. சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களது "அப்புறம் என்ன ஆச்சு." இறுதியில் திகிலாக இருந்தது. நல்லவேளை... அவரும், அவரது மகனும் அடிகள் பலமாக படாமல் தப்பித்தார்களேயென இறைவனுக்கு நன்றி கூறிக் கொண்டேன். அவர் தமாஷாக எடுத்துக் கொண்டபடி இதைக்கூறினாலும், அந்த நிமிடம் இருவரும் பட்ட அவஸ்தைகள் கண் முன் வந்து நிற்கின்றன. சில சமயங்கள் இப்படியாகி விட்டதே என பல வருடங்கள் மனதில் வந்து நின்றபடி இருக்கும். இறைவன் அருளால் அன்றைய பொழுது விபத்து ஏதுமில்லாமல் நடந்துள்ளது.

    தாங்கள் ஏமாந்த கதை போல் நானும் சிறுவயதில் ஒரு வருடம் முன் படிக்கும் பெண்ணிடம் புத்தகங்களை விலை பேசி தந்து விட்டு அவளுடன் அல்லாடியிருக்கிறேன். என் வகுப்புகென வாங்கிய பழைய புத்தகங்களுக்கு அப்புத்தகத்தை கொடுத்தவரிடம் பணம் தர முடியாத நிலை. வீட்டில் தினமும் திட்டுக்கள். அப்போதெல்லாம் இந்த மாதிரி பழசை தந்து, பழசைத்தானே வாங்கி படிப்போம். இப்போதுள்ள படிப்பு முறைகள் வேறு. இப்போது ஒவ்வொரு வகுப்புக்கும் (,3,4,5) புதிது புதிதாக வாங்குவதற்கே பல ஆயிரங்கள் தேவைபடுகிறது. எங்கள் காலத்தில் எங்கள் குழந்தைகளுக்கும் அப்படித்தான் வாங்கினோம் என்பதால், அது இப்போது பழகியும் விட்டது. நம் காலம் மறக்க முடியாத காலம். அதைச் சொன்னால் கூட நம் குழந்தைகள் கொஞ்சமா து காது கொடுத்து கேட்பார்கள். இப்போதுள்ள குழந்தைகளுக்கு எதுவும் சொல்லவும் முடியவில்லை.

    அநன்யா அவர்களது கதையும் படிக்க நன்றாக இருந்தது.அது போல் நானும் அம்மா இல்லாத போது பொருளை கோட்டை விட்டு ஏமாந்திருக்கிறேன்.இப்போதும் அவர்கள் அதை மறக்காமல், சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை சொல்வது போல எல்லோரிடமும் இப்படி ஏமாந்த கதைகள் நிறைய இருக்கும். துணிச்சலுடன் நான் ஏமாந்தேன் என்று சொல்வோர் குறைவு! என்ன சொல்றீங்க!

      நீக்கு
    2. "முன்" "பின்" முரணாக வந்து விட்டது. "பின்" என திருத்தி வாசிக்கவும்.

      நீக்கு
    3. /துணிச்சலுடன் நான் ஏமாந்தேன் என்று சொல்வோர் குறைவு! என்ன சொல்றீங்க!/ உண்மைதான். சிறுவயதில் ஏமாறுவது அவ்வளவாக தெரிவதில்லை. வீட்டில் திட்டுக்கள் கிடைக்குமே என்ற பயம் மட்டுதான் முன்னாடி வந்து நிற்கும். அதைச் சொல்வதும் இப்போதைக்கு ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை. ஆனால், இப்போது தெரிந்த நட்புகளிடமும், உறவுகளிடமும் ஏமாறும் போது, மனதில் வலி உண்டாகிறது. இதை பெருமையாக பிறரிடம் சொல்ல இயலவில்லை. ஆனால், "சுவரிடமாவது சொல்லி அழு." என்ற பழமொழிபடி வெளியிட்டு விட்டால் மன அழுத்தம் வர வாய்ப்பில்லை. நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!