பஹல்காம் போலாமா?
"குரு, இந்த நியூ இயர்ல ஃபர்ஸ்ட் ட்ரிப்
ஃபிப்ரவரில போகலாமான்னு....." சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டே வந்த ஷானு குருவின்
முகத்தைப் பார்த்ததும் அமைதியானான். குருவும் ஷானுவும் சாஃப்ட்வேர் துறை. தங்கியிருப்பது
ஒரே அறை.
"எங்க? யாரோட ப்ளான்?" மொபைலைப்
பார்த்துக் கொண்டே சுவாரசியம் காட்டாமல் கேட்டான் குரு
"சித்தார்த்...." சித்தார்த் மீடியாவில்
கேமராவும் கையுமாக இருப்பவன். துடிப்பானவன்.
"அதென்ன? சித்தார்த் நம்ம வாட்ஸப் க்ரூப்ல
போடாம உங்கிட்ட மட்டும்? ராகேஷ், வருணுக்குத் தெரியுமா?" ராகேஷ் ஏர்ஃபோர்ஸ். ஃப்ளைட்
லெஃப்டினன்ட். ஆப்பரேஷன் சிந்தூர் ஹீரோ. வருண் சொந்தத் தொழில்.
"இல்லைடா நீ 'நோ' சொல்லிடுவியோன்னு....
உங்கிட்ட பேசாம எப்படி? நீ ஓகே சொன்னாதான் ட்ரிப்பே"
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே பிரபலமான
இந்த பஞ்சபாண்டவர் நட்புக் குழு. Squad, Crew என்று கல்லூரியில் பேசப்பட்ட குழு இப்போது
பணியில் சேர்ந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருந்தது.
டூர் என்றாலே, முன்னின்று திட்டமிடுபவனே குருதான்.
அவனோடு சித்தார்த்தும் சேர்ந்து கொள்வான். சென்ற வருடம் கஷ்மீருக்குத் திட்டமிட்டது
குருவும், சித்தார்த்தும்தான். ராகேஷ் மட்டும் ட்யூட்டியில் இருந்ததால் கலந்துகொள்ளமுடியவில்லை.
"இல்லை மாமு.... குல்மார்க், சோனாமார்க்....போனவருஷம்
மிஸ்ஸாகிடுச்சே"
"சத்தமில்லாம நைஸா வந்திருக்கான் பாரு... இந்த
சித்தார்த் பய"
"குல்மார்கும் சோனாமார்கும் கூட வல்னரபிள்
தான்டா. எனக்குப் பயமா இருக்கு"
சென்ற வருடம் பஹல்காம் பைசரண் பள்ளத்தாக்கைச்
சென்றடையும் நேரத்தில் தாக்குதல் நடக்க, அந்தக் காட்சிகளும், அந்த இடத்திலிருந்து அடித்துப்
பிடித்து தப்பித்து வந்த அந்த பயமும் இன்னும் விலகியிருக்கவில்லை குருவிற்கு.
ஆப்பரேஷன் சிந்தூர் சமயம் நண்பர்கள் நால்வரும்
ராகேஷிற்காகத் தவித்து அவன் குடும்பத்திற்கும் ஆதரவாக இருந்த தருணங்கள் நிழலாடின. என்னதான்
ஆப்பரேஷன் சிந்தூர் ஹீரோவாக ராகேஷ் கொண்டாடப்பட்டாலும், குருவின் மனதில் அந்தப் போர்
பயம் குல்மார்க் பனியை விட ஆழமாக உறைந்திருந்தது.
"இப்ப செக்யூரிட்டி எல்லாம் டைட். சேஃப்தானாம்.
இப்ப எல்லாரும் போய்ட்டுதானே இருக்காங்க...கமான் குரு. லைஃப் எப்பவுமே த்ரில்லர்தான்.
இட் ஷுட் பி எஞ்சாய்ட்." வருண் குருவைத் தட்டிக் கொடுத்தான்.
"ஓசி ஹீரோ (ஆப்பரேஷன் சிந்தூர்) கிட்ட
கன்ஃபெர்ம் பண்ணீங்களா?"
"கன்ஃபார்ம் பண்ணியாச்சு. இப்ப லீவுலதானே
இருக்கான், ஆனா அவன் வைஃப் இப்ப கன்சீவ்ட். அவன் லீவுல வரதே ரேர். அவன் வருவானா!"
- சித்தார்த்
"வெயிட்....முதல்ல நீ உன் வீட்டுல பெர்மிஷன்
வாங்கிட்டியா?"
"டேய் பயமுறுத்தாத மச்சான்.... அது எப்படியாச்சும்
மெதுவா வாங்கிடலாம்...."
" 'குல்மார்க்லருந்து என் ஸ்வீட்டிக்கு
ஒரு சாக்கு ஃபுல்லும் பனி அள்ளிக் கொண்டுவரேன்.. ஓகேயா' ன்னு சொல்லு.... உருகிடும் எங்க
தங்கச்சி....." - ஷானு.
"மொக்கைக்கு அளவே இல்லை... தாங்கலை" தலையில் அடித்து கொண்டே சமையலறையிலிருந்து கொரிப்பதற்கு நொறுக்குத்தீனியை எடுத்து வந்தான் வருண்.
குழுவில் ராகேஷ், சித்தார்த் தவிர மற்றவர்கள்
எந்தக் கட்டிலும் சிக்காதவர்கள்.
"லீவுல இருந்தாலும் ஏர்ஃபோர்ஸ்ல இருக்கறவங்களுக்குச்
சில ப்ரோட்டகால்ஸ் உண்டு. அவன் வர முடியுமான்னு நான் கேட்டுகிட்டதுக்கு அப்புறம்தான்...அவன்
வந்தாதான் நான் வருவேன்" என்றான் குரு.
"ஹான் அதெல்லாம் அவன் பார்த்துப்பாண்டா!
அவனுக்குத் தெரியாதா என்ன? அவனே வரேன்னு சொல்லிட்டானே!"
ராகேஷ் குருவிற்குத் தைரியமளிக்க குருவும்
கால் மனதோடு யெஸ் சொல்லிவிட்டான். நால்வரும் உற்சாகமானார்கள்.
தில்லியில் ராகேஷ் இணைந்து கொண்டான்.
பிப்ரவரியில் பயணம் என்பதால் குல்மார்கில்
3 நாட்கள் தங்கி, பனியில் மலையேற்றம், பனிச்சறுக்கு விளையாடலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். ஸ்ரீநகரை அடைந்தார்கள்.
"பசங்களா, நாம அங்க போயாச்சுனா மொபைல்
நெட்வொர்க் கிடைக்கறது கஷ்டம்டா. ஸோ வாடகைக்கு வாக்கிடாக்கி எடுத்து வைச்சுக்கிட்டா
நல்லது." - ராகேஷ்.
பனிக்கான உடைகள், ஷூக்கள் க்ராம்பான்ஸோடு புறப்பட்டார்கள்.
ஸ்ரீநகரில் இருந்து குல்மார்க்கிற்குச் செல்லும்
வழியெங்கும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு வியந்தார்கள்.
"இத்தனை அழகிருந்தா ஆபத்துன்னு சும்மாவா
சொல்றாங்க! அதான் பொறாமைல பக்கத்துவீட்டான் சண்டை போடுறான்" ராகேஷ் உடன் இருந்ததால்
குருவின் பயம் கொஞ்சம் குறைந்திருந்தது என்றாலும் எல்லா தெய்வங்களையும் அழைத்துப் பார்த்தான்!
குல்மார்க் சென்றதும் மலையேற்றம்.
"இவன் நாட்டுப் பற்றுக்கு எல்லையே இல்லை.
பாரேன், நம்ம கொடிய பார்க்கற இடத்துல எல்லாம் சல்யூட் அடிச்சிட்டே வரான்!" ராகேஷை
கலாய்த்தார்கள். கலாய்த்தாலும் அவர்களுக்கும் அப்பழக்கம் தொற்றிக் கொண்டது.
பிப்ரவரி மாதத்துக் கடும் குளிர், அந்தப் பகுதியையே
ஒரு வெள்ளைப் போர்வையால் மூடியிருந்தது. கண் எட்டும் தூரம் வரை வெள்ளைதான்.
இரண்டாம் நாள் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்த
போது, சற்று தூரத்தில் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனின் நடவடிக்கை
ஒரு சந்தேகத்தைக் கொடுத்தது ராகேஷுக்கு.
நட்புகள் எல்லோருடனும் வாக்கி டாக்கியில் தொடர்பில்
இருந்துகொண்டே இருந்தவனுக்குத் திடீரென்று குருவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
ராகேஷ் மற்றவர்களுக்குத் தகவல் கொடுத்ததும்
கூடினார்கள். தொடர்ந்து முயற்சித்தும் வாக்கி டாக்கியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.
கண்ணெட்டும் தூரம் வரையில் அவனைக் காண முடியவில்லை.
எல்லோருக்கும் பீதி கிளம்பியது. பதற்றம் தொற்றிக்
கொண்டது.
ராகேஷ் தன்னிடம் இருந்த பைனாகுலர் வழி சுற்றிலும் நோக்கினான். எங்கும் தென்படவில்லை. டக்கென்று அவன் கண்கள் அந்த சந்தேகப் பேர்வழியைத் தேடின. அவனையும் காணவில்லை, அவன் அனுபவ மனது தீவிரமாக வேலை செய்தது. மீண்டும் ராகேஷின் கண்கள் பைனாகுலர் வழியாக குருவைத் தீவிரமாகத் தேடின .
திடீரென ஒரு சரிவின் ஓரத்தில், பனிப்பாறை பிளந்திருந்த
ஒரு குறுகிய பகுதியின் அருகில் ஏதோ அசைவதை ராகேஷ் கவனித்தான்.
"ஹேய்! அங்கதான்! லெஃப்ட்ல அந்தப் பெரிய
பாறைக்குப் பின்னாடி ஒரு குறுகலான பகுதி அங்கேதான் குரு சிக்கியிருக்கணும்!" பைனாக்குலர்
வழியாகப் பார்த்துக் கொண்டே சொன்னவன்.... எல்லோரையும் பார்க்கச் சொன்னான்.
"மச்சான், இப்ப வேற யாரோவும் அங்க வராப்ல
இருக்கு புள்ளியா நகருது.....பாருங்கடா நீங்களும்"
"யெஸ்... ஏதோ ஒரு நடமாட்டம் தெரியுது... ப்ளீஸ்
யாரும் சத்தமா பேசாதீங்க" என்று ராகேஷ் ரகசியமாகச் சொல்லி, மின்னல் வேகத்தில்
அந்தத் திசையை நோக்கிப் பனியில் சறுக்கத் தொடங்கியவன்
மீண்டும் நின்று பைனாக்குலர் வழி பார்த்த போது பனியில் கிடந்தவன் குரு போலத் தெரிந்தது.
'குருவாகத்தான் இருக்கும்' என்று மனதுள் நினைத்துக் கொண்டே மீண்டும் பைனாகுலரைச் சுழற்றிய
போது சற்று தூரத்தில் ஓர் உருவம் வருவது தெரிந்திட அலர்ட் ஆனான்.
ராகேஷின் செயல்பாடுகள் மாறியதைக் கண்டதும், *குருவை இதே போன்று ப்ராங்க் செய்ய நினைத்திருந்த ஷானுவும், கேமராவில் அதைப் படம் பிடிக்க நினைத்திருந்த சித்தார்த்தும், "மச்சி, அதே போல நடக்குதே, ஓ மை காட்" என்று சொல்லிக் கொண்டவர்களின் மனம் திக் திக் ஆனது.* நிலைமை சீரியஸ் என்று உணர்ந்தார்கள்.
"ராகேஷ் வாக்கி டாக்கில மிலிட்டரி பாயின்டை
கான்டாக்ட் பண்ணலாமா?"
"நோ! இந்த வாக்கி டாக்கில பண்ண முடியாது
அது வேற வகை ஹை ஃப்ரீக்வென்சி.....ஸோ... ஷானு, வருண்... ஓடுங்க! ரைட் சைட். நேரா
1 கிலோமீட்டர் தூரத்துல ஆர்மி பாயின்ட் பார்த்தம்ல அங்க போய் விவரம் சொல்லி, என்னைப் பத்தியும் சொல்லி
ஹெல்ப் கூட்டிட்டு வாங்க. க்விக்! நான் ஏற்கனவே அப்பப்ப எங்கங்க போறேன்னு அப்டேட் பண்ணிருக்கேன்.
ஸோ நோ வொர்ரிஸ்... " என்று கட்டளையிட்டான்.
"சித்தார்த், நீ என்னை ஃபாலோ பண்ணு ஆனா
நல்ல கேப் விட்டு ஃபாலோ பண்ணு......இடப்பக்கம் போயிடாத. வலப்பக்கமா பனி சுத்தின பாறை
லேசா தெரியுது பாரு அங்க இரு. கேமராவ ரெடியா வைச்சுக்க..." என்று சொல்லிக் கொண்டே
சறுக்கத் தொடங்கினான்.
எப்போதும் கேமராவை ஸ்டெடியாக இயக்கும் சித்தாத்தின்
நடுங்காத கைகள் நடுங்கத் தொடங்கின.
---------
பனிப் பாறையின் குறுகலான இடத்தில் விழுந்திருந்த
குருவிற்குத் தலை வலித்தது. அருகில் லேசாக வெளியில் தெரிந்த பாறையைப் பிடித்து எழுந்திருக்க
முயன்றான் ஆனால் பனித்தூள் கண்களில் புகுந்து உருகியதில் கண்கள் எரிச்சலாக இருந்தன.
வாக்கி டாக்கியை காணவில்லை. கையுறை நழுவியிருந்தது. காலை அசைத்து வெளியே எடுக்க முயன்றவனுக்கு வலியுடன்
கனமாகவும் இருந்தது.
"ராகேஷ்...." என்று கத்த நினைத்தாலும்
சத்தம் தொண்டைக்குள்ளேயே அமுங்கியது.
யாரோ அருகில் வருவது போலத் தெரிந்திட
"ராகேஷ் நான் இங்க இருக்கேன்" என்று கத்த முயன்றான். முடியவில்லை. அந்த உருவம்
அவனை நெருங்கியதும் இந்திய ராணுவ உடை அணிந்திருந்தது
தெரிந்தது. குருவிற்கு ஒரு கணம் நிம்மதி பிறந்தது. தன்னை அறியாமல் "ஜெய்ஹிந்"
என்று தீனமான குரலில் சொல்லி சல்யூட் அடிக்க முயன்றான்.
"ப்ளீஸ் ஸேவ் மீ. என்னால எழுந்திருக்க
முடியலை.... மை ஃப்ரென்ட் ராகேஷ்..... " என்று ஆங்கிலத்தில் சொல்லத் தொடங்கியவன்
அந்த உருவம் பதில் பேசாததைக் கண்டு சற்றுக் கலவரமடைந்தான்.
குருவை நெருங்கி வந்து குனிந்தது அந்த உருவம்.
அப்போதுதான் குரு கவனித்தான், அந்த முகம் நம் வீரரின் முகம் போலவோ ராகேஷின் முகம் போலவோ இல்லை. அதில் நட்பிற்குப் பதில் ஒரு குரூரமான அந்நியத்தன்மை
தெரிந்தது. வெறி பிடித்த கண்கள். ஏதோ ஒரு வஸ்துவின் வேண்டாத வாடை. அந்த அந்நியன் குருவை
வேட்டையாடும் விலங்கைப் போலப் பார்த்தான். அவன் கையில் உயர் ரகத் துப்பாக்கி. குருவின்
இதயம் ஒரு நிமிடம் நின்று வேகமாகத் துடித்தது.
'நம்ம உயிர் அவ்வளவுதான்... வந்தது வரட்டும்'
பார்த்திருந்த பல படங்களின் காட்சிகள் மனதில் ஓடின.
"என்ன? என்னைக் கொல்லப் போறியா? கமான்... ஷூட்
மி.... ஜெய்ஹிந்...."
"ஜெய்ஹிந்" என்பதைக் கேட்டதும் வெறியேறிய
அந்த உருவம் குருவின் சட்டையைப் பிடித்துக் குரூரமாகத் தூக்கியது.
"இந்த இடத்துல என்ன பண்ணிட்டிருக்க?"
உருது, ஹிந்தி, ஆங்கிலம் கலந்த மொழி.
அவன் அணிந்திருந்தது பழைய ராணுவ ஜாக்கெட்,
அவன் முழங்கையில் ஏதோ ஒரு அந்நிய அடையாளம் இருப்பது தெரிந்தது.
குருவிற்குத் தான் ஏமாந்து போனோமே உடையைப்
பார்த்து என்று மனதில் தோன்றிட, கால்களால் அவன் கால்களை இடற எத்தனிக்க, கால்கள் எதிலோ
சிக்கியிருந்தது போல் தோன்றியது. நிலைதடுமாறினான்.
"ஏதாவது சாகசம் செய்ய நினைச்ச, ஆன் த
ஸ்பாட் ஷூட். ஆனா உன்னை சுட மாட்டேன் இப்ப... நீ சிக்கின வசமா. உன்னை வைச்சுதான் நாங்க
விளையாடப் போறோம்.... " என்று சொல்லிக் கொண்டே குருவின் கைகளைக் கட்டினான். பனிமூடியிருந்த
பாறையின் இடுக்கிற்குள் கையை விட்டான், எதையோ தேடுவது போல...
குல்மார்க் பனிக்கும் மேலாக உறைந்தது குருவின்
சப்த நாடியும். அதே சமயம் குருவின் உள்மனம் ஏதோ உணர்த்தியது. அவன் காதுகள் கூர்மையாகின.
ஆயுதமில்லாமல் சண்டை மற்றும் தற்காப்புக் கலைப்
பயிற்சி அனுபவம் பெற்றிருந்த ராகேஷ், தன் ஸ்கீயிங்க் பேடைக் கழற்றிக் கொண்டு, சத்தமில்லாமல்
அந்த நபரின் பின்னால் பாய்ந்தான். எதையோ பனி இடுக்கில் தேடிக் கொண்டிருந்த அந்த நபர்,
சுதாரிக்கும் முன்பே ராகேஷின் முழங்கை அவன் கழுத்தைப் பின்னால் இருந்து இறுக்கியது..
ஸ்கீயிங்க் பேடை வைத்து அறைந்தான்.
இருவரும் பனியில் உருண்டனர். அவனும் ராகேஷின்
முகத்தைப் பிடித்து எதையோ வைத்துக் கீறினான். ரத்தம் வடிந்தாலும் ராகேஷ் பொருட்படுத்தாமல்
அவனைத் தாக்கினான்.
தூரத்தில் பனிப்பாறையின் மறைவில் நின்றிருந்த
சித்தார்த்துக்குக் கை கால்கள் நடுங்கின. கேமரா இன்று அவன் கையில் ஆடிக்கொண்டிருந்தது.
ஆனாலும், பதற்றத்துடன் அந்த உயிர்ப்போரட்டத்தை ஜூம் செய்து வீடியோ எடுக்கத் தொடங்கினான்.
குரு ஒரு பக்கம் கிடக்க, ராகேஷ் விரோதியுடன்
மல்லுக்கட்டுவதை அவனால் நம்பவே முடியவில்லை.
ராகேஷ், தான் மறைவாக ஷூவில் வைத்திருந்த ரிவால்வரை
டக்கென்று உருவி, தீவிரவாதியின் முழங்கால்களில் சுட்டு அவனை நிலைகுலையச் செய்தான்.
பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள அந்தப் பகுதியில்,
இன்னும் சிலரின் நடமாட்டம் இருப்பது போன்றும் உணர்ந்ததால் ராகேஷ் இன்னும் அலர்ட் ஆனான்.
"குரு, கமான், மெதுவா எழுந்து மேலே போ.
அங்க சித்தார்த் இருப்பான்....க்விக்"
ராணுவ வீரர்கள் ஜீப்பிலும், ஹெலிகாப்டரிலும்
வருவது தெரிந்தது.
ராகேஷ் சற்றும் தாமதிக்காமல் வாக்கி-டாக்கியின்
நீண்ட ஒயரைச் சட்டென உருவி, அந்த நபரின் கழுத்தையும் கைகளையும் சேர்த்துக் கட்டி அவனை
அசைய முடியாமல் செய்தான்.
வந்திறங்கிய ராணுவத்தினரிடம் தன்னை அறிமுகப்
படுத்திக் கொண்ட ராகேஷை அவர்களுக்கும் அடையாளம் கண்டுகொண்டனர்.
அந்த நபரைத் தீவிரமான பாதுகாப்புடன் கைதுசெய்தனர்.
குரு பனிக்குள் புதைந்திருந்த கால்களை மேலே
இழுத்துக்கொண்டு நகர முயன்ற போது, அவனது பனிச்சறுக்குக்
காலணிகளில் இருந்த இரும்புச் சங்கிலியில் ஏதோ கனமான பொருள் மாட்டிக் கொண்டு பனிக்குள்
அவனை இழுப்பது போல இருந்தது.
"ராகேஷ்... இங்கே பாரு! என் கால்ல கனமா
இருக்கு" குரு மூச்சிரைக்கச் சொன்னதும், ராகேஷ் அவசரமாக பனியை விலக்கி குருவின்
கால்களை மெதுவாக பிடித்த போது க்ராம்ப் ஆனில் ஒரு பெட்டி சிக்கியிருப்பது தெரிந்தது.
எடுத்துப் பார்த்தான்.
மிக நவீனமான, நீர் புகாத 'ஹை-டெக்' பெட்டி.
ராகேஷ் அந்தப் பெட்டியின் குறியீடுகளைப் பார்த்ததும் திடுக்கிட்டான். அப்பெட்டியில்
இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி மற்றும் ராணுவ முகாம்களின் மிகத் துல்லியமான
வரைபடங்கள், அதிநவீன 'மைக்ரோ-அசால்ட்' ரகத் துப்பாக்கிகள், சில டிஜிட்டல் உபகரணங்கள்.
ராணுவத்தினரிடம் ஒப்படைத்தான்.
"இந்தாள் இங்கே புதைச்சு ஒளிச்சு வைச்சிருந்து
அதை எடுத்துக் கைமாற்ற வந்திருக்கான். நீ தற்செயலா விழுந்த இடத்துலதான் இந்த ரகசியப்
பெட்டி இருந்திருக்கு. அதைத்தான் அவன் தேடியிருக்கான். நீ மட்டும் இன்னைக்கு இங்க விழாம
போயிருந்தா, நினைச்சே பார்க்க முடியலை. பெரிய விபரீதம் நடந்திருக்கும்டா!" என்றான்
ராகேஷ் வியப்புடன்.
சித்தார்த் தன் கேமராவில் பதிவு செய்துகொண்டே
ஓடி வந்தான்.
சற்று நேரத்திற்கு முன்னான பதற்றமும், பயமும்
இப்போது ஒரு பெரும் சாதனை உணர்வாக மாறியிருந்தன. தான் எடுத்த வீடியோவை ராணுவத்திடம்
ஒப்படைத்தான் சித்தார்த்.
ராகேஷிற்கும் அவனது நண்பர்களுக்கும் நன்றி
கூறினர்.
விடுமுறையில் இருந்த ராகேஷ் தன் துப்பாக்கியை
ஆபத்து சமயத்தில் பயன்படுத்தியிருந்தாலும் அதற்கான சம்பிரதாயங்களை முடித்தான்.
குருவின் தோளைத் தட்டினான். "பயந்துட்டு
இருந்த குரு. இன்னைக்கு உன்னை அறியாமலேயே ஒரு பெரிய ஆபத்தைத் தடுத்துட்ட பாருடா!"
"வாழ்க்கையில இந்த ட்ரிப் இவ்வளவு திரில்லரா
இருக்கும்னு நினைக்கல மாமு!" என்று மரண பயத்திலும் குருவைச் சிரிக்க வைக்க முயன்றான்
ஷானு.
"ஸாரி குரு. அன்னிக்கு உன்னை என்கரேஜ்
பண்ண, 'லைஃப் எப்பவுமே த்ரில்லர்தான். இட் ஷுட் பி எஞ்சாய்ட்' னு சொன்னேண்டா. ஆனா இப்படி
சீரியஸா நினைக்கவே இல்லடா." வருண் அவனைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.
"மரணத்தை நேரில் சந்திச்சிட்டேண்டா. உன்னால
தப்பிச்சிருக்கேண்டா, ராகேஷ்! நோ மோர் ஃபியர். பஹல்காம் போலாமா?"
"ஹேய் குரு... யு? வாட் எ சர்ப்ரைஸ்!!!"
நண்பர்கள் "ஹே" என்று
ஆர்பரித்து குருவைக் கட்டிக் கொண்டனர், அவன் பயம் நீங்கிய மகிழ்ச்சியில்!
'பஹல்காம் போலாமா?' என்ற குருவின் கேள்வியில், பழைய பயம் நீங்கிப் புதிய தன்னம்பிக்கை ஒளிர்ந்தது.
=========================================================================================
கி.பி., 5ம் நுாற்றாண்டு பாய்மர கப்பல்; குஜராத் - ஓமனுக்கு வரலாற்று பயணம்
தொழில்நுட்பம்:
ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா என பெயரிடப்பட்ட இந்த கப்பலில் நவீன காலத்து கப்பலில் இருக்கும் எந்த அம்சங்களும் இல்லை. இன்ஜின் இல்லாமல் முழுக்க முழுக்க பாய்மர தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் சிறப்பு என்னவெனில் மரப்பலகைகளை ஆணிகள் மூலம் இணைக்காமல், தேங்காய் நார் மற்றும் இயற்கை இழைகளால் இணைத்துள்ளனர்.
அஜந்தா குகை ஓவியங்களில் காணப்படும் பாய்மரக் கப்பலை போலவே, இந்த கப்பலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பண்டைய கால நுால்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் எழுதி வைத்த குறிப்புகளையும் பின்பற்றி இந்தக் கப்பலை உருவாக்கியுள்ளனர். அதாவது 1,500 ஆண்டுகளுக்கு முன் இருந்த கப்பல் கட்டுமான தொழில்நுட்பத்தை அப்படியே இந்த காலத்திற்கு நகல் எடுத்துள்ளனர்.
நாகரிகம்:
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா பாய்மரக் கப்பல் நம் நாட்டின் பண்டைய வர்த்தக நாகரிகத்தை பறைசாற்றும் வகையில், குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மேற்காசிய நாடான ஓமன் கடற்கரை வரை தன் பயணத்தை துவக்கியுள்ளது.
இந்தியாவுக்கான ஓமன் துாதர் இசா சலே அல் ஷிபானி முன்னிலையில், நம் மேற்கு கடற்படை தளபதி துணை அட்மிரடல் கிருஷ்ணா சுவாமிநாதன் கொடியசைத்து பயணத்தை துவக்கி வைத்தார். பண்டைய கால நாகரிகத்துடன் பயணிக்கும் பாய்மரக் கப்பல் குழுவினருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாய்மர கப்பலின் சிறப்புகள் * கி.பி., 5ம் நுாற்றாண்டில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தையல் பாய்மரக் கப்பல் தான் ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா * கப்பலுக்குள் தண்ணீர் புகாமல் இருக்க இயற்கை பிசின்கள், பருத்தி மற்றும் எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது இந்திய கடற்படையைச் சேர்ந்தது என்றாலும் போர்க்கப்பல் அல்ல * இக்கப்பல் 64 அடி நீளமும், 21 அடி அகலமும் கொண்டது. உலோகத்தை தவிர்க்கும் 'டன்காய்' எனும் பாரம்பரிய இந்திய முறையை பின்பற்றுகிறது * இதை, கேரளாவைச் சேர்ந்த முதன்மை கப்பல் கட்டும் வல்லுநர் பாபு சங்கரன் தலைமையிலான பாரம்பரிய கைவினைஞர்கள் குழு உருவாக்கியுள்ளது. இதன் நிலைத்தன்மையை உறுதிசெய்ய சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தால் ஆய்வுகள் நடத்தப்பட்டன * இக்கப்பலில் கடம்ப வம்சத்தின் இருதலை பறவையான கண்டபெருண்டா, பாய் மரங்களில் சூரியன் சின்னங்கள், கப்பலின் முகப்பில் சிம்ம யாழி சிலை, ஹரப்பா காலத்து கல் நங்கூரம் போன்ற இந்தியாவின் கடல்சார் வரலாற்றைக் குறிக்கும் பல்வேறு சின்னங்கள் இடம் பெற்றுள்ளன * இக்கப்பல் கட்டும் திட்டம், இந்திய கடற்படை மற்றும் 'ஹோடி இன்னோவேஷன்ஸ்' அமைப்பு ஆகியவற்றின் கூட்டு ஒப்பந்தத்தின் வாயிலாக, கலாசார அமைச்சகத்தின் நிதியுதவியுடன் 2023ல் துவங்கியது * கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கப்பல், மே மாதம் கர்நாடகாவின் கார்வாரில் கடற்படையில் முறையாக இணைக்கப்பட்டது.

அனைவருக்கும் காலை வணக்கம். திரில்லர் கதை எழுதிய கீதாவுக்கு வாழ்த்துகள். என்றும் அங்கே பணி புரியும் வீரர்களுக்கு மனப் பூர்வமான வாழ்த்துகள். ஜாலியாக டூர் கிளம்பிய இளைக்னர்களுக்கு இப்படி ஒரு சோதனை. அதிலிருந்து அவர்கள் மீண்ட வேகம். தீரம் எல்லாமே ஆச்சரியம்.
பதிலளிநீக்குகீதாவின் எழுத்தாற்றல் பிரமிக்க வைக்கிறது.
சகோதரி வல்லிசிம்ஹன் அவர்களுக்கும் காலை வணக்கம். உங்களுக்கு இது மாலையாக இருக்கலாம். முன்பு போல் தங்கள் வருகை மகிழ்வை தருகிறது. இனி தொடர்ந்து வாருங்கள். நன்றி சகோதரி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசகோதரர் வெங்கட்நாகராஜ் நாகராஜ் அவர்களின் தொடர் பதிவில் வந்த பனிச்சறுக்கு படத்திற்கு சகோதரி கீதாரெங்கன் எழுதிய கதை அட்டகாசமாக உள்ளது. அருமையாக எழுதியுள்ளார். நல்ல திறமையான எழுத்து. திரில்ங்கான கதை மிக ஸ்வாரஸ்யமாக இருந்தது. மனமார்ந்த பாராட்டுக்கள்.
இதே படத்திற்கு சென்ற வாரம் நீங்கள் எழுதிய கதையையும் படித்தேன். அதுவும் மிக நன்றாக இருந்தது. சென்ற வார கருத்துக்களின் நடுவில் சொல்ல நினைத்து விடுபட்டு விட்டது. மன்னிக்கவும்.
போட்டி போட்டு கொண்டு எழுதும் உங்களின் இருவரின் திறமைக்கும், ஆர்வத்திற்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
சென்ற வார தங்களுடைய கதையை படித்து வரும் போதே சகோதரர் வெங்கட்நாகராஜ் அவர்கள் பதிவில் படத்தை பார்த்த நினைவு வந்தது. நான் தொடர்ச்சியாக அவர் பதிவை என் சூழ்நிலைகளினால் படிக்கவில்லை. அப்போது அந்தப்படத்திற்கான பகுதி மட்டும் படித்திருந்தேன் . இனிதான் அவர் பதிவை முழுமையாக படிக்க வேண்டும். அவரின் எழுத்தும், பனிசூழ்ந்த மலைப்பயணங்களின் படங்களும் மனதிற்கும், கண்களுக்கும் இனிமையானவை. அவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முருகா சரணம்
பதிலளிநீக்குஉறவுமுறையில் பெரிய காரியம்...
பதிலளிநீக்குசில நாட்கள் ஆகலாம்...