3.6.26

அரசின் இலவசங்களை நீங்கள் வாங்கியிருக்கீங்களா? & சரோஜா தேவி 02.

 

கேள்வி பதில்கள் : 

பானுமதி வெங்கடேஸ்வரன்:

சிறப்பு பட்டிமன்றத்தில் தலைப்பு கொடுக்கச் சொன்னால் என்னென்ன தலைப்புகள் தருவீர்கள்?


# இன்றைய நிலவரத்துக்கு : 
" அண்ணாமலை விலகல் பா.ஜ.கட்சிக்கு பின்னடைவா இல்லையா ? ".

அண்ணாமலை விலகல் பா.ஜ.க யுக்தியா அல்லவா ?

" குட்டிச்சுவராகக் குறுக்குவழி சொந்தப் படம் எடுப்பதா கட்சி ஆரம்பிப்பதா ? "

& மக்களை அதிகம் கெடுப்பது சீரியல்களா அல்லது சினிமாவா? 

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் திருமணம் செய்துகொள்ள தடையாக இருப்பதன் காரணம் பெண்களின் அதீத எதிர்பார்ப்புகளா அல்லது ஆண்களின் படிப்பு/வேலை/ சம்பளம் போதாது என்பதாலா?

நெல்லைத்தமிழன் : 

1. பழைய காலத்தில் கிணற்று, ஆற்று நீரைத்தான் உபயோகித்தார்கள்,  அரணிக்கட்டையைத்தான் உபயோகித்தார்கள் (நெருப்பு உண்டாக்க), நடந்துதான் போனார்கள் என்று இப்போதைய காலத்திலும் அதையே தொடர்வது சரியா? (சன்னியாசிகளும்)   

# சரி தப்பு என்று சொல்ல நாம் யார் ? " நீயும் ஏன் அப்படிச் செய்வதில்லை " என்று கேட்டால் பதில் சொல்லலாம்.  இஷ்டப்பட்டுச் செய்வதும் வேண்டாம் என்று தவிர்ப்பதும் அவரவர் இஷ்டம்.  எனக்கு அப்படிப் பழைய வழக்கங்களை கஷ்டப்பட்டு தொடர்ந்தாக வேண்டும் என்ற எண்ணம் சரியாகத் தோன்றவில்லை.

 என் நண்பரின் தந்தையார் ஆசாரசீலர். மகன் வசிக்கும் ஃப்ளாட்டில் தங்க மாட்டார்.  நீர் அருந்த மாட்டார்.  கிணற்று நீர் மட்டுமே குடியல் குளியல்.  அவர் ஆசாரம் அப்படி.  பெரிய வித்வான். சநாதனி.

& அந்தக் காலத்துக்கு சரியாக இருந்த பல விஷயங்கள் இந்தக் காலத்துக்குப் பொருந்தாது. 

2.  இரண்டு நாட்களில் வாக்கு செலுத்தும் நாள், நாளைக்கு வாக்கு எண்ணிக்கை, என்று இருந்தாலும், கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பு என்று அதில் நாம் ஆர்வம் காட்டுவதன் காரணம் என்ன?  

# எனக்கும் அது புரியவில்லை.  சில நாட்களில் சரியான தகவல் வரும் என்று இருக்கும் போது செலவு செய்து ஊகங்களைப் பெறுவது என்ன பிரயோசனம் ?  அது சரியாகவும் இருப்பதில்லை.

& சும்மா பொழுதுபோக்குதான் ! 

3.  யாராக இருந்தாலும், நம்ம ஆளு, நம்ம ஊரு, நம்ம மொழி, நம்ம மாநிலம், தென்னிந்தியா, நம்ம நாடு என்று பாகுபாடு பார்த்து நட்புக் கொள்கிறோமே அதன் காரணம் என்ன?   

# மனிதருக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் இருக்கிற குழுப் பிடிமானம்தான்.  பாதுகாப்பை நாடுவது உயிர்களின் இயல்பு. அது சாதி முதலான உள்வட்டங்களில் இருப்பதாக நினைப்பது பழக்க வழக்கத்தினால் தொடர்கின்ற குணவிசேஷம்.

4.  அரசின் இலவசங்களை நீங்கள் வாங்கியிருக்கீங்களா?  நம்மால் பணம் கொடுத்து வாங்க முடியும் என்ற நிலையிலும் ரேஷன் பொருட்கள், இலவசங்களை நாம் வாங்கிக்கொள்வது நியாயமா?  

# எனக்கு விருப்பமில்லாமலே நான் இல்லாத சமயம் வீட்டுக்கு வந்து தரப்பட்ட மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வெவ்வேறு கிடைக்காதவர்களுக்குக் கொடுத்து சரி செய்ததாகத் திருப்திப் பட்டேன் ! இலவச ரேஷன் நான் வாங்கியதில்லை.

& சென்னையில் இருந்தவரை எந்த இலவசப் பொருட்களையும் நான் வாங்கியதில்லை. வோட்டுக்குப் பணம் வாங்கியது இல்லை. எனக்கு ரேஷன் கார்டு கூட எப்பொழுதோ இருந்ததை அ தி மு க காலத்திலேயே ஏதோ ஒரு அரசனங்க அலுவலகத்தில் கொடுத்து - அதன் பிறகு அவர்கள் திருப்பித் தரவில்லை. சில நாட்கள் தொடர்ந்து கேட்டதும் கிடைக்காததால், அதன் பிறகு அதை மறந்துவிட்டேன். 

5.  இலவசமாகக் கிடைப்பதை நாம் ஏன் இவ்வளவு ஆசைப்பட்டு பெற்றுக்கொள்கிறோம், தேவை இல்லாவிடினும்? இயல்பாகவே மனித மனம் கஞ்சத்தனமானது என்று எடுத்துக்கொள்ளலாமா?

# " கடனாகக் கிடைத்தால் கனவானுக்கு இரண்டு யானை " என்று ஒரு சொல் வழக்கு உண்டு. மலிவு, இலவசம் இரண்டுக்கும் ஒரு கவர்ச்சி உண்டு.  பொது மேடையில் நம்மை அழைத்து ஒரு அறுபது ரூபாய் பூப்போட்ட டவலை பொன்னாடை என்று சொல்லி அணிவித்தால் ஒரு திருப்தி உண்டாவது போல்.  (எனக்கு ஒருமுறை நிகழ்ந்தது) இது கஞ்சத் தனமல்ல மலிவான ஆசை.

= = = = =

படமும் பதமும் :

நெல்லைத்தமிழன் : 


மானிடப் பிறப்பைப் பற்றி ஔவையார் எழுதிய பாடல் உங்களுக்கு நினைவிருக்கும். மனுஷனாப் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறக்கணும் என்றெல்லாம் சொல்வார். எந்த ஒரு பிறவி எடுத்தாலும் அதிலும் நம் முன்வினைப் பயன் இருக்கும். பசுமாடாகப் பிறந்தால் கோயிலின் கோசாலையில் அல்லது ஆஸ்ரம கோசாலையில் இருக்கும் மாடாகப் பிறப்பு கிடைக்கலாம் இல்லையென்றால் கசாப்புக்காக வளர்க்கப்படுவதாகவும் இருந்துவிடலாம். பாருங்க.. குதிரையாகப் பிறந்தால், அரசனின் குதிரையாக இருந்தால் அதற்கான மதிப்பே தனி. மேலே உள்ளது குதிரைக்கு உள்ள தங்க கவசம். அதன் மீதுதான் அரசர் அமருவார். இந்தப் படம் நான் பாரிஸ் சென்றிருந்தபோது அங்கிருந்த இராணுவ மியூசியத்தில் எடுத்தது. அப்போ அரசருடைய குதிரையாகப் பிறந்தால் மிகச் சிறப்பானதா என்று கேட்டால், அப்படி இல்லை. அரசனுடைய குதிரையாகப் பிறந்திருந்தாலும், அதன் ஆயுட்காலத்தில் போர் இல்லாத சமாதானமான அரசருடைய காலத்தில் பிறந்திருந்தால் கொடுத்துவைத்திருக்கிறது என்று சொல்லலாம். இல்லையா?


போருக்குச் செல்லும்போது, அரசருக்கான குதிரைக்கு அணிவிக்கும் உடை. பார்க்கவே நல்லா இருக்கு இல்லையா?


விதவிதமான இராணுவ உடைகள்.  பெண்கள் அணியும் சுடிதாரின் பாட்டம் போல இருக்கிறதே என எண்ணாதீர்கள். பெண்கள், ஆண்களிடமிருந்துதான் நாகரீகங்களைக் காப்பியடித்தார்கள் என்று சொன்னால், மறுக்க இயலுமா?


இல்லை..இல்லை... நான் இன்னும் அந்த வேலைக்குப் போகலை. அரசர்கள்லாம் இருந்திருந்தால் அவங்க பக்கத்துல நின்னு படம் பிடிச்சிருக்கலாம். இல்லையே.. இருந்தது சிப்பாய்கள்தாம். சரி போனாப் போகுதுன்னு போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன். 


நெப்போலியன் போனபர்ட் - சமாதி.. ஃப்ரான்ஸ்.  யாருப்பா அந்த நெப்போலியன்னு கேட்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். ஃப்ரெஞ்ச் தளபதி, அரசர்.  ஃப்ரான்ஸின் 17ம் நூற்றாண்டு வரலாற்றில் முக்கியமானவர். இவருடைய கதை சுவாரசியமானது.  அவர் செயிண்ட் ஹெலெனா தீவில் புதைக்கப்பட்டார் (ஆஃப்ரிகா, 1821). பிறகு 1840ல் அங்கிருந்து அவரது சவப்பெட்டி அகழ்ந்து எடுக்கப்பட்டு பாரிஸில் இந்த இடத்தில் வைக்கப்பட்டது.


ஆமாம். நானும் அங்க போயிருக்கேன் இல்லையா? அதுக்கான படம் இது.  இந்த ஏரியா முழுமையும், முன்பு, இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான இடமாக இருந்தது (16ம் நூற்றாண்டிலிருந்து).

இந்த இடத்தில் நிறைய சமாதிகள் (அழகழகானவை) இருக்கின்றன. அரசர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள். ஒருவேளை அவங்க எழுந்து வந்தால் அவர்களுடன் படம் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். வெறும்ன அலங்கார சமாதி முன்னால படம் எடுத்துக்கிட்டு என்ன பிரயோசனம்?


அங்கு சாதாரண (அதாவது இராணுவத்தில் முக்கியஸ்தர்கள், ஆனால் அரசர்கள் அல்லர்) மற்றவர்களுக்கும் சுவற்றில் சமாதி இருந்தது. அந்தப் பகுதியே கொஞ்சம் அமானுஷ்யமாகத் தெரியுதா?


நெப்போலியன் சமாதி:  அதில் சேர்க்கவேண்டிய விஷயங்கள்:   வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர் என்று எடுத்துக்கொண்டால் அதில் முதலாவதாக இருப்பது நெபோலியன் போனபர்ட். அவனது வாழ்நாட்களைவிட அதிகமாக அவனைப்பற்றி புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. சுமார் 30,000.  அவனை, அவனுடைய கடைசி காலத்தில் ஆர்சனிக் விஷத்தை வைத்து அவனுடைய ஜெனெரல் மோந்தோலன் கொன்றுவிட்டான் என்று அபிப்ராயப்படுகின்றனர்.  செயிண்ட் ஹெலெனா தீவில் இருந்த அவனது சமாதியை அகழ்ந்தெடுத்து பாரிசில், இராணுவ மியூசியம் அருகே அடக்கம் செய்த படத்தைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். அகழ்ந்தெடுக்கும்போது, சவப்பெட்டியையும் திறந்து பார்த்தார்களாம். அவனுடனிருந்தவர்கள் மிக வயதாகியிருந்தபோதும், நெபோலியனின் சவம் கிட்டத்தட்ட அப்படியே இருந்ததாம். இதன் காரணம் செயிண்ட் ஹெலெனா தீவின் வெப்பநிலை அல்லது ஆர்சனிக் விஷம் நெப்போலியன் உடலில் இருந்த தண்ணீரை உறிஞ்சியது  இருக்கலாம் என்கின்றனர்.

== = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜா தேவி 
பகுதி 02 : நா நா 

சரியாக காலை பத்து மணிக்கு பாபாவின் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. 
கதவைத் திறந்தான் பாபா. 


நின்றிருந்த ஆள் நீலக் கலர் டீ சர்ட் அணிந்திருந்தான். கண்ணாடி, மீசை தாடி, சிக்கனப் புன்னகை. தோளில் மாட்டியிருந்த லாப்டாப் பையைக் கழற்றி கைகளில் வைத்திருந்தான். கூட்டத்தில் நின்றால் சட்டென்று அடையாளம் காண முடியாத சாதாரண முகம். 


" ஹலோ மிஸ்டர் பாபா?"
" யெஸ்" 
" அ யம் நாநா. மே ஐ கமின்?" 
" வாங்க" 
" ஷூ காலோடு உள்ளே வரலாமா? ஒன்றும் ஆட்சேபணை இல்லையே?" 
" ஷூவைக் கழற்றி விட்டு ஸாக்ஸ் காலுடன் உள்ளே வாங்க" 
" நன்றி" என்று சொன்னபடி ஷூவைக் கழற்றி ஸாக்ஸுடன் உள்ளே வந்தான் நாநா. 
அறை முழுவதும் சுருக்கமாக ஒரு நோட்டம் விட்டான். 
பாபாவிற்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். லாப்டாப் பையை எதிரே இருந்த மேஜை மீது வைத்தான்.



" இனிமேல் நான் கேட்க வேண்டிய விஷயங்களை வரிசையாக கேட்கிறேன். நீங்க பதில் சொல்லுங்க." என்றான் பாபா. 
" சரி" 
" நீங்க ஸேல்ஸ்மேனா?"
" இல்லை" 
" ஹோம் மார்க்கெட்டிங் B2C etc?"
" என் நோக்கம் குறித்து அப்படி எல்லாம் ஒரு வார்த்தை அல்லது ஒரு வாக்கியத்தில் சொல்லிவிட இயலாது. கொஞ்சம் விரிவாக சொல்ல வேண்டும்."
" சரி சொல்லுங்க. கேட்கிறேன்." 
" என் இப்போதைய தேடல் ஒரு பிஸினஸ் பார்ட்னர்." 
" என்ன முதலீடு செய்ய வேண்டும்?"
" இப்போதைக்கு எந்த முதலீடும் வேண்டாம். பிறகு தேவைப்பட்டால் சொல்கிறேன்." 
" அப்படி என்ன அதிசய பிஸினஸ்?"
" நான் பல மாத ஆராய்ச்சிக்குப் பிறகு சில விஷயங்களை கண்டு பிடித்துள்ளேன்." 
" சரி" 
நாநா தன் லாப்டாப் பையைத் திறந்து இரண்டு சிறிய பெட்டிகளை வெளியே எடுத்தான். 
" இது சரோஜா மெமரி கார்டு. இந்த இன்னொன்று சரோஜாதேவி மெமரி கார்டு " 
" சரோஜாதேவி தேவி எல்லாம் செத்து ஒரு வருஷம் ஆகப் போகிறது. இப்போ அவங்க மெமரி ஸேல்ஸ் ஆகுமா? " 
" யார் அந்த சரோ.. ... ஓ நீங்க அந்த நடிகை பத்தி சொல்றீங்களா! இது வேற சமாச்சாரம். என்ன என்று சொல்றேன் கேளுங்க." 
" நான் சொல்லும் சரோஜா மற்றும் சரோஜாதேவி ஒரு acronym அதாவது சுருக்கச்சொல்" 
" மேஜர் சுந்தர்ராஜன் உங்களுக்கு தூரத்து உறவா? எல்லாத்தையும் மொழி பெயர்த்து சொல்றீங்க!" 
" ஹா ஹா!  குட் ஜோக். அதாவது நல்ல... " 
" ஐயா ஐயா வேண்டாம் ஐயா .. நீங்க ஆங்கிலத்திலேயே சொல்லுங்க நான் புரிந்து கொள்கிறேன். " 
" ஓ கே. இதோ ...
S = Simulated
A = Astrological
R = Research 
O = Oriented 
J = Jataka 
A = Analyser

இதை தமிழில் சொல்ல ஆரம்பித்தால் .. " 

" இதோ பாருங்க மிஸ்டர் நா நா - வேண்டாம் அந்த விஷப் பரிட்சை !! தமிழில் சொன்னால் குழப்பம்தான் அதிகமாகும். ஆங்கிலத்திலேயே இருக்கட்டும்!" 

" அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்."  

" இந்த சரோஜா கார்டை ஒரு analyser gadget ல போட்டு உங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம், பிறந்த நேரம் எல்லாவற்றையும் துல்லியமாக கொடுத்துவிட்டால், உங்களுக்கான அடிப்படை அதிர்வு எண் (vibration number ) தெரிந்துவிடும். அதன் அடிப்படையில் உங்கள் நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே கணித்து சொல்ல முடியும். " 

" அப்போ கொஞ்சம் இருங்க. நான் உள்ளே போய் என்னுடைய ஜாதகத்தைக் கொண்டுவருகிறேன். அதில்தான் என்னுடைய பிறந்த நேரம் எல்லாம் இருக்கும். " 

" சரி. கொண்டு வாங்க பா பா. "

(தொடரும்) 

29 கருத்துகள்:

  1. சிறப்புப் பட்டிமன்றத் தலைப்பில்,

    இன்றைய இளைய தலைமுறைக்கு பக்தியை ஏற்படுத்துவதில் யாருக்குப் பங்கு அதிகம், பெற்றோர்களுக்கா அல்லது சமூகத்துக்கா?

    பள்ளியில் நீதிபோதனை, தமிழ் பக்தி இலக்கியங்களின் பாடல்கள் மாணவர்களை நல்வழிப்படுத்துமா இல்லை தற்காலத்துக்குச் சம்பந்தமில்லாதவைகளா?

    போன்ற நல்ல தலைப்பெல்லாம் நினைவுக்கு வரவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நல்ல தலைப்புகள்!

      நீக்கு
    2. திருக்குறளில் இந்து தத்துவ வெளிப்பாடு -- உதாரணத்திற்கு பொட்டில் அடித்த மாதிரி நான்கு குறள்கள் சொல்லி எதிராளியின் வாயை அடைக்கவும். அடுத்த வாரத்தில் ஆரானும் முயற்சி செய்யவும்.

      நீக்கு
    3. மலர் மிசை ஏகினான் மாணடி சேர்வார்
      நிலமிசை நீடுவாழ் வார்

      ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
      இந்திரனே சாலும் கரி

      மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
      தாயது எல்லாம் ஒருங்கு

      உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
      விழிப்பது போலும் பிறப்பு

      தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
      தாமரைக் கண்ணான் உலகு

      நீக்கு
  2. இனி சரோஜாவைப் பிடிக்கும் என்று சொல்லி யாரேனும் அடிக்க வந்தால் இப்படிச் சொல்லித் தப்பிக்க முடியுமா என்று பார்க்கணும்.

    சிந்துபாத் படக் கதையை வரியா எழுதினால் ஒரு வாரத்துக்கு ஒரு பத்தி கூடத் தேறாது. அந்த டெக்னிக்கில் நீங்க கதை எழுதறீங்க.

    இரண்டு மூன்று மடங்குகள் ஒரு வாரத்தில் எழுதினால் பெட்டரா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சி செய்கிறேன்.

      நீக்கு
    2. உரையாடல் வடிவாக எழுதினால் சுலபமாக இருக்கிறது.

      நீக்கு
    3. நான் ஒரு சோம்பேறி!

      நீக்கு
  3. அந்தக் காலத்தில் சரியாகிருந்த விஷயம் இப்போது பொருந்தாது என்று தெரிந்தும் கல்லுரல், குமுட்டி அடுப்பு, மண்பானை பரணி என பின்னோக்கிப் போறாங்களே. அதற்கு என்ன சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  4. இந்த அல்பமான ஆசையைத்தான் கவுண்டமணி, ஃப்ரீயா குடுத்தா மக்கள் பினாயிலயும் குடிக்கத் தயங்க மாட்டாங்கன்னு சொன்னாரோ?

    பதிலளிநீக்கு
  5. சரோஜாதேவிக்கு பதில் எல்.விஜயலெஷ்மினா எங்க காலத்து சுவாரஸ்யம் கிட்டியிருக்கும். தவிர எல்.வி.க்கு கூட இப்படி வார்த்தைக்கு வார்த்தை.
    கொஞ்சம் இருங்க.வாசல்பக்க காலிங் பெல் அடிக்குது..
    அநேகமாக நா.நா.வாகத் தான் இருக்கும்.
    பார்த்துட்டு வர்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார், சரோஜா தேவி பெயரைப் படித்து வந்தாரா இல்லை விஜயலக்ஷ்மி (வரலெக்ஷ்மி கேள்விப்பட்டிருக்கேன்) பற்றிக் குறிப்பிய வந்தாரா இல்லை தொடர்கதை படிக்கும் ஆசையில் வந்தாரா என்று பட்டிமன்றம் வைக்கலாம் போலிருக்கே

      நீக்கு
    2. எல்.விஜயலக்ஷ்மி பற்றி கேள்விப் பட்டதில்லையா? நன்றாக நடனம் ஆடுவார். குடியிருந்த கோயில் படத்தில் 'ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்..' பாடலுக்கு எம்.ஜி.ஆரோடு நடனம் ஆடியவர். திருமணமாகி மலேஷியா சென்றதும், சி.ஏ., சி.பி.ஏ. எல்லாம் படித்து கம்பெனி வைத்து நடத்தினாராம்(ஹிந்துவில் இவரைப் பற்றிய கட்டுரை வந்தது)

      நீக்கு
    3. ஜெய்சங்கரின் படங்களில் முக்கால் வாசி அவரோடு தான் நெல்லை.
      சகலகலாவல்லி.

      நீக்கு
    4. வாங்க ஜீவி சார். வணக்கம்!

      நீக்கு
  6. மக்களை அதிகம் கெடுப்பது இரண்டுமல்ல. இணையம்.

    ஆண் பெண் திருமணத் தடைக்குக் காரணம் பெற்றோர்கள். இருவருக்கும் 23,24 க்குள் திருமணம் செய்துவைக்காமல் காலத்தை நீட்டிக்கிட்டே போனால், இருவரும் ரொம்பவே மெச்சூராகி, எதிர்பார்ப்புகள் எங்கோ போய், குடும்ப அமைப்பு சிதைவதில் முடியுது.

    பதிலளிநீக்கு
  7. பட்டிமன்றத் தலைப்புகள் சுவாரஸ்யம். முதலிரண்டு தலைப்புகளுக்கு எ.பி. வாசகர்கள் பதில் அளிப்பார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஜக வளரணும்னா கட்சிக்கு புதுத் தலைவர்கள் இளைஞர்கள் வேணும். அண்ணாமலையை, குறுகிய கால லாபம் எனக் கருதிக்கொண்டு கூட்டணி மாற்றி டம்மியாக்கி, அவர் விலகும் வரை போனது பெரும் பின்னடைவு. பாஜகவை அது இருபது வருடங்கள் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிட்டது. பாஜகவின் தமிழக, தபிழிசை, முருகன், நயினார், வானதி கட்சிக்கும் தமிழர்களுக்கும் எதுவும் செய்த மாதிரித் தெரியவில்லை.

      பாஜக யுக்தியாக இருக்காது. அண்ணாமலை தன்னைப் பலியிட, சம்மதிக்க மாட்டார். ரஜினி போன்ற தேசத்தின்மீது பிடிப்புக் கொண்ட பிரபலங்களுக்கும் பாஜகவை ஆதரிப்பதில் இருக்கும் தயக்கம் தனிக்கட்சி அண்ணாமலையை ஆதரிப்பதில் இருக்காது.

      நீக்கு
    2. நல்ல கருத்துரை. நன்றி.

      நீக்கு
  8. கனடாவில் இருக்கும் தமிழர்கள் ஒருவிஷயம் சொல்கிறார்கள், மற்ற மாநில மக்களிடம் இருக்கும் ஒற்றுமை தமிழர்களிடம் கிடையாதம், எதிரே இருப்பவன் தமிழன் என்று தெரிந்து விட்டால் நகர்ந்து போய் விடுவார்களாம். :00

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற மாநில மக்கள், தன் மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று அறிந்துகொண்டால் அவங்க தாய்மொழில பேச ஆரம்பிப்பாங்க. தமிழர்கள் மாத்திரம் உடனே ஆங்கிலத்தில் பேசிக்க ஆரம்பிப்பாங்க. இதுதான் வெளிநாடுகளில் என் அனுபவம்.

      நீக்கு
  9. ///தமிழர்கள் மாத்திரம் ஆங்கிலத்தில் பேசிக்க
    ஆரம்பிப்பாங்க... ///

    தமிழ்நாட்டிலும் இந்த நிலை
    வர இருக்கின்றதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் எல்லாமே ததிங்கிணதோம்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!