23.9.26

உங்களுக்கு மிகவும் பிடித்த பத்துப் பாடல்களை வரிசைப்படுத்த இயலுமா? + சரோஜாதேவி பகுதி 17

 

கேள்வி பதில்கள் :'

நெல்லைத்தமிழன்:

1 திரைப்படப் பாடலை நாம் ரசித்துக் கேட்ட காலம் என்று ஒன்று இருந்தது. இசை, அர்த்தம் எல்லாம் சேர்ந்திருந்தது. நம் காலத்தை இசையமைப்பாளர்கள் பாடலாசிரியர்கள் வளப்படுத்தினார்கள். ஏன் தற்காலத்தில் அப்படிப்பட்டவர்கள் இல்லை? அல்லது நமக்கு ரசிப்புத் தன்மை குறைந்துவிட்டதா?   

# ரசிப்பு தன்மை மாறி வருகிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது தாம் தூம் என்று தாளக்கட்டு மட்டுமே பிரதானமாகவும் இஷ்டம் போல உடம்பை வளைத்து நெளித்து ஆடுவது டான்ஸ் ஆகவும் போய்விட்ட நிலையில் மெலடி பொருள் செறிவு என்றெல்லாம் சினிமா பாடல்களில் தேடுவது பயனற்றது.

2.உங்களுக்கு மிகவும் பிடித்த பத்துப் பாடல்களை வரிசைப்படுத்த இயலுமா?  

# முயற்சிக்கிறேன்.

சிங்கார வேலனே தேவா 

சரவணப் பொய்கையில் நீராடி..

கண்ணன் ஒரு கைக்குழந்தை

பிருந்தாவனமும் நந்த குமாரனும்

கண்களும் கவிபாடுதே‌

சின்னக் கண்ணன் அழைக்கிறான்

ஒரு நாள் போதுமா

மருதமலை மாமணியே

சின்னஞ்சிறு கிளியே 

அமுதும் தேனும் எதற்கு?

& எனக்கும் மேலே உள்ள பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். இன்னும் சில பாடல்கள் சேர்த்து சொல்லவேண்டும் என்றால் .. 

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் 

கர்ணன் படப் பாடல்கள் எல்லாம் 

காதலிக்க நேரமில்லை படப் பாடல்கள் எல்லாம் 

முல்லை மலர் மேலே மொய்க்கும் வந்து போலே 

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்  

3.சின்ன வயதில் அப்பா அம்மாவை ஏமாற்றிய சம்பவங்கள் உண்டா? பகிர இயலுமா?  

# உண்டு. காலணா அரையணா கமிஷன்தான்.

& அம்மாவை ஏமாற்றியது உண்டு. எல்லாம் மிட்டாய் மேட்டர்தான்!  

4.எந்த வயதில் உங்களுக்கு பக்தி அல்லது கோயிலுக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் உண்டானது?  

# 15, 16 வயதில்.

& 5 வயதில் 

5. கோயில்களில் பிரசாதம் கொடுப்பதன் காரணம் என்ன? வெளியூரிலிருந்து தரிசனத்திற்கு வருபவர்களுக்கான சிறிய உணவாக அது ஆரம்பமாயிருக்கலாமா?

# இருக்கலாம். மக்களை கோயில் பக்கம் ஈர்க்க பிரசாதம் என்பதை  ஒரு யுக்தியாகவும் பயன்படுத்தியிருக்கலாம்.

& நான் 5 வயதில் கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்ததே மார்கழி மாத பஜனை பார்த்து, பொங்கல் வாங்கி சாப்பிடத்தான்! 

கீதா சாம்பசிவம் : 

1. இரண்டு திரை நக்ஷத்திரங்களின் சந்திப்பினால் நாட்டுக்கு/மாநிலத்துக்கு என்ன பலன் ஏற்பட்டு விடும்?

# எதுவுமில்லை.  நட்சத்திரப் பைத்தியங்கள் இருக்கும் வரை இந்த மாதிரி பிரச்சாரங்களும் இருக்கும்.

& ஒரு சுக்கும் இல்லை! 

2. இந்தத் திரைப்பட மோகம் தமிழ் மக்களிடமிருந்து போகவே போகாதா?

# திரைப்பட மோகமே பரவாயில்ல என்கிற மாதிரி வேறு ஒரு மோசமான விஷயம் வந்தால் தான் போகும் போலிருக்கிறது. நம்ம கர்மபலன் ! என்ன செய்ய ?

& மக்கள் எல்லோருக்கும் ஞானம் வந்துவிட்டால் போய்விடும். 

3. ஆண் குழந்தையோ, ,பெண் குழந்தையோ சில குழந்தைகள் ஐ பாட், மொபைல் போன் ஆகியவற்றில் காமிக்ஸ், அல்லது வீடியோ கேம்ஸில் மூழ்கி இருப்பது சரியில்லைதான். ஆனால் இந்தக் குழந்தைகளைத் திருத்திக் கொண்டு வருவதில் பெற்றோர் தோல்வி அடைவது ஏன்?

# பிறரைத் திருத்துமுன் உன்னைத் திருத்திக் கொள் -  என்று சொல்வார்கள். பெற்றோர்களே மொபைலில் மூழ்கிக் கிடந்தால் பிள்ளைகள் எப்படி சரியாக முடியும் ?

4. பெற்றோரே குழந்தைகளுக்கு இவற்றைப் பயன்படுத்தச் சொல்லிக் கொடுத்துட்டுப் பின்னால் தடுத்தால் அது சரியா?

#   சரி இல்லைதான்.

5. இதனால் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பெறுகிறதா? அல்லது படிப்பில் ஊக்கம் குறைகிறதா?

#   இல்லை.

6. சில பள்ளிகளில் வாரம் ஒரு முறை கணினி அல்லது ஐபாட் மூலம் சில பாடங்களைக் கற்பிக்கிறார்கள் என்பது உண்மையா? இது ஏற்றுக் கொள்ளக் கூடியதா?

#  தெரியவில்லை.  நல்ல முயற்சி என்று தோன்றுகிறது.

& எதிர்காலம் AI கைகளில். எனவே தமெனா போன்றோருக்கு பாவனா போன்ற AI ஆசிரியைகள் கிடைத்தால் அது நல்லதே. 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

தீபாவளியில் எதை அதிகம் ரசிப்பீர்கள்?

அ. புத்தாடை                                                                                                                                      ஆ. பட்சணங்கள்                                                                                                                                    இ. பட்டாசு வெடிப்பது                                                                                                                        ஈ. தொலைகாட்சியில் பட்டிமன்றங்கள்                                                                                    உ. தீபாவளி மலர். 

# வாணம், ஆடை, பட்சணம்.

& : ஊ !! (அக்கம் பக்கத்து பெண்குழந்தைகளை!) 

= = = = = = = = = =

படமும் பதமும் :

நெல்லைத்தமிழன் :

கத்தாரில் விலாஜியோ மால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. அதில் எங்கள் குழுமத்தின் கடைகளும் இருந்தன. அந்த மாலில், மாலுக்குள்ளேயே படகில் செல்லும்படியாக நீர் வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது. (கத்தார் பெரிய பணக்கார நாடு).  பொதுவாக இந்த மாதிரி மாலுக்குள்ளேயே நீர்வழித்தடத்தைப் பார்த்ததில்லை. 

இதில் படகில் செல்ல 10 ரியாலோ இல்லை 5 ரியாலோ அப்போது. நான் சென்று பார்க்கவில்லை. (தண்ணீர் பட்டு டிரெஸ் ஈரமாகிவிட்டால் என்ற எண்ணம்தான்)

மாலின் ஓரிடத்தில் ஏறி, எந்த இடத்தில் இறங்கிக்கொள்ள வேண்டுமோ அங்கு இறங்கிக்கொள்ளலாம். அவ்வளவு பெரியது அந்த மால். இந்த மாதிரி நீர்த்தடம் கொண்ட மால், துபாயில் கிடையாது. 

= = = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற வாரம் - சுட்டி : பகுதி 16 : நிச்சயதார்த்தம் 

இனி 

இந்த வாரப் பகுதி. 

பகுதி 17 : வருவாய் வரும் வழிகள் 

நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வாரம் கடந்தது. 

ஜயராமன் வீட்டார் மும்முரமாக கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துகொண்டு இருந்தார்கள். 

பாபா ஒவ்வொரு நாளும் அலுவலகம் செல்வதுபோல நாநா வீட்டிற்குப் போய் வேலை பார்த்து வந்தான். 

இருவரும் சேர்ந்து பாவனாவின் உதவியுடன் சில சிறிய கேஸ்களை தீர்க்க காவல் துறைக்கு உதவினார்கள். அருவ வழியும் அவர்களுக்கு உதவியாக இருந்தது. 

ஒருநாள் நாநாவிடம் " நம்ம BE (Banana Enterprises) கம்பெனிக்கு வருமானங்கள் எங்கேயிருந்தெல்லாம் வருகிறது?" என்று கேட்டான். 

நாநா, " பாவனா - நம்ம கம்பெனி வருமான வழிகள் பற்றி பாபாவுக்கு சுருக்கமாக சொல்லு" என்றான். 

பாவனா : " சொல்றேன் பாஸ். அதுக்கு முன்னே நம்ம தமெனா  கேட்ட ஒரு உதவியை சொல்லிவிடுகிறேன். இந்த நவராத்திரி லீவு சமயத்தில் அவங்க ஸ்கூலுல ஒரு டூர் போக ஏற்பாடு செஞ்சிருக்காங்களாம். அதுக்கு விருப்பம் இருப்பவர்கள் ஆயிரம் ரூபாய்  பணம் கட்டி சேந்துகொள்ளலாமாம். தமெனாவுக்கு ஊரெல்லாம் சுத்திப் பார்க்க ஆசையாம். நாநா அண்ணன் கிட்ட சொல்லி பர்மிஷனும் பணமும் வாங்கிக்கொடுங்க அக்கா - என்று நேற்று சொன்னாள் "   

நாநா : " அட ! உல்லாசப் பயணமா! ஓ கே - நிறைய இடங்களை சுற்றிப் பார்த்தால்தான் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். தமெனா நிச்சயம் டூர் செல்லட்டும். தமெனா இன்று இங்கே வரும்போது அவள் போக இருக்கின்ற இடங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த இடங்களைப் பற்றிய படங்கள், செய்திகள் எல்லாவற்றையும் அவளுக்கு விவரமாக சொல்லு. முன்கூட்டியே விவரங்கள் தெரிந்தால், அந்த இடங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாகவும், உதவியாகவும் இருக்கும். நான் இப்போதே ஆயிரம் ரூபாயை அறுஷ்காவுக்கு அனுப்பி, பணத்தை தமெனாவுக்காக கட்டிவிட சொல்கிறேன்" 

பாவனா : " ஓ கே பாஸ். இப்போ பாபாவுக்கு விவரங்கள் சொல்கிறேன். பாபா நீ ரெடியா? " 

பாபா : " நான் ரெடி பாவனா. இன்னும் ரெண்டு வயசு கூட முடியாத குழந்தை நீ! எனக்குக் கொஞ்சமாவது மரியாதை கொடுத்து பேசவேண்டாமா?  " 

பாவனா : " அதெல்லாம் முடியாது. என்னுடைய பாஸ் நாநாவை வாடா போடா என்று அழைப்பவர்களை நானும் வாடா போடா என்றுதான் சொல்லுவேன்" 

பாபா : " ரொம்ப உத்தமம் - எதையோ சொல்லிக்க - ராட்சஸி !" 

பாவனா :" சரி - பாபா நம்ம வரலாறு சொல்றேன் கேட்டுக்க. பனானா எண்டர்பிரைஸஸ் தொடங்கியதும், அகில இந்திய அளவில், ஒரு விளம்பரம் செய்தோம். 

 Project : EarnExt Money. 

We invite applications from all individuals who are qualified and are employed. If you want to earn extra income, please send your application to Banana Enterprises Chennai. 

Application form 

Name: 

Mobile number: 

Aadhaar Number:

Address: 

email id:

Current employment: 

Brief summary about the applicant's talents and skills: 

இந்த வகை விளம்பரத்தை அந்தந்த வட்டார மொழியில் வெளியிட்டோம். 

தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிட்ட இந்த விளம்பரத்திற்கு நல்ல பலன் இருந்தது. "

பாபா : " என்ன பலன்?" 

(தொடரும்) 

90 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள். கட்டார் மால் மிக சிறப்பு. இதை லாஸ் வேகஸ் இல் தான் பார்த்திருக்கிறேன். பணக்கார நாடுதான். ஆப்ராவும் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க! வாங்க!! ரொம்ப நாளாச்சு எங்கள் பக்கம் வந்து!

      நீக்கு
    2. அவ்வப்போது வருகிறேன்மா. கணினி யிலோ, மொபைலிலோ அதிக நேரம் செலவழித்தால் தலைவலி நிச்சயம்:)

      நீக்கு
  2. கொடுத்திருக்கும் பாடல்கள் அனைத்தும் இனிமை. என்றும் ரசித்துக் கேட்பவை. பி பி எஸ்ஸின் பிறந்த நாள் வேற..''நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'' இனிமையோ இனிமை. பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் உம் மனதில் பதிந்த ஒன்று. மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
  3. தேர்ந்தெடுத்த அத்தனை பாடல்களும் மிக மிக இனிமை. இப்போது வரும் நிறைய பாடல்கள் மனதில் நிற்பதில்லை.பழமையில் ஊறிவிட்ட மனம் காரணமாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. சமீப காலங்களில் கூட ஒன்றிரண்டு மெலோடியஸாக உள்ளன.

      நீக்கு
    2. காலையிலேயே ஶ்ரீராமை வம்புக்கு இழுக்கறீங்களே. நீங்க இளையவராக இருப்பதால் சமீப கால மெலடியும் கேட்கறீங்க. ஶ்ரீராம், எஸ்பிபி காலத்தை விட்டு வரவில்லை என்பதால் இத்தகைய சமீப மெலடிகள் அவர் காதில் விழுந்து வெள்ளி வியாழனில் பகிரப்படும் பாக்கியத்தைப் பெறவில்லையா?

      நீக்கு
    3. அப்படியும் இருக்கலாம்!

      நீக்கு
  4. பாக்யராஜ் சாரின் ஏரிக்கரைப் பூங்காற்றே மிகப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில பாடல்கள் நம் நினைவுல் தங்கிவிடுவதன் காரணம், அது தொடர்பான நிகழ்வு நம் வாழ்வில் நடப்பதால்தான் என்பது என் எண்ணம். என் நண்பன் அவன் விரும்பியவளிடம் ப்ரொபோஸ் செய்தபோது தூரத்தில், தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே படம் ஒலித்துக் கொண்டிருந்ததை பல தடவைகள் என்னிடம் சொல்லியிருக்கிறான். நானும் எண்பது பேர்கள் இருந்த பார்ட்டியில் என் காதலை (அப்படீன்னு அப்போ நினைச்சுக்கிட்டு) அவளுக்குத் தெரிவிக்கும் விதமாக, நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா பாடலை மேடையில் பாடியது நினைவுக்கு வருது.

      நீக்கு
    2. உண்மை, உண்மை, முற்றிலும் உண்மை. அந்த வகையில் எனக்குப் பிடித்த பாடல் : " இரவும் நிலவும் வளரட்டுமே .."

      நீக்கு
    3. ஆஹா, நெல்லை சொல்லவே இல்லையே, உங்க ஹஸ்பன்டுக்கு இது தெரியுமா? அப்பாடா, என் வேலை முடிச்ஞ்சது. :)))

      நீக்கு
    4. நாராயண நாராயண!

      நீக்கு
  5. தமிழர்களின் திரைப்பட மோகம் பற்றிக் கேள்வி கேட்ட கீதா சாம்பசிவம் மேடம், தான் படித்த புத்தகம், கலியுக தர்மம், வேப்பமர நிழலில், மன அமைதிக்கான நூறு வழிகள் போன்ற புத்தகங்களைப் படித்து எப்போவாவது விமர்சனம் எழுதியிருக்காங்களாஇல்லை தொலைக்காட்சியில் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதியிருக்காங்களா? என்பதே என் டவுட்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, நெல்லை என் ஆரம்ப காலப் பதிவுகளைப் பார்க்கவோ படித்ததோ இல்லை என்பதைத் திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறார். அப்போதெல்லாம் தொடர் பதிவு என்னும் பெயரில் பிடித்த புத்தகம், பிடித்த ஊர், பிடித்த எட்டு விஷயங்கள், என்றெல்லாம் எழுதி இருக்கோம். அதோடு கூட தமிழ்ப் புத்தகங்களைப் பற்றி மட்டும் எழுதும் பதிவுகளும் இடம் பெறும். அதில் நான் படித்த புத்தகங்கள் பற்றியும் விமரிசனங்களும், கருத்தும் எழுதி இருப்பேன். நான் அவற்றில் திரும்பத் திரும்ப கல்கியின் "அமரதாரா" பற்றிக் குறிப்பிட்டிருப்பதைப் படித்த ரேவதி சிம்ஹன் எங்க வீட்டுக்கு முதல்முறை வந்தப்போ எனக்கு இரண்டு பாகங்கள் அமரதாரா புத்தகங்களையும் பரிசளித்தார். தொலைந்து போயிருக்குனு நான் நினைச்ச அந்தப் புத்தகம் இப்போ நான் ஸ்ரீரங்கம் போனப்போத் தேடிக் கண்டு பிடிச்சு இங்கே எடுத்துட்டு வந்திருக்கேன்.

      அதே போல் முதல் முறை அம்பேரிக்கா போனதைப் பத்தின பதிவுகளிலே அம்பேரிக்க வாஷிங் மிஷின் அனுபவம், எலக்டிரிக் அடுப்பில் சமைத்தது, மத்தியானங்களில் திரைப்படங்கள் பார்த்ததுனு எழுதினதோடு அல்லாமல் படங்களின் விமரிசனங்களும் எழுதி இருக்கேன். ஏன் இப்போக் கூடக் கொஞ்ச நாட்கள் முன்னர் நான் பார்த்த சில படங்களைப் பற்றி எழுதி ஸ்ரீராம் கூட வந்து பார்த்துக் கமென்டிட்டுப் போயிருக்கார். நெல்லை சரியாவே பார்ப்பதோ, படிப்பதோ இல்லைனு தெளிவாகி விட்டது. ஹெஹெஹெஹெ.

      நீக்கு
    2. இரண்டு நாட்கள் முன்னர் கூட "மொத ராத்திரி" படம் பற்றிய விமரிசனத்தை எழுதி இருக்கேன். (ஹெஹெஹெ) ஒரு சின்ன விளம்பரந்தேன். :))))

      நீக்கு
    3. அந்தப் பட விமர்சனம்தான் என் மனதில் நின்றதே தவிர, நீங்க போன யுகத்துல எழுதின புத்தக விமர்சனங்கள் அல்ல.

      நீக்கு
  6. உண்மையைச் சொன்னால் இதுதான் எனக்குப் பிடித்த டாப் பத்து திரையிசைப் பாடல்கள் என யாருமே வரிசைப்படுத்த இயலாது. நம் இசையமைப்பாளர்கள் அவ்வளவு அதிகமான ரசித்து மயங்கும் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள், பாடலாசிரியர்களும் நம் மனம் ஆழ்ந்து உருகும்படியான வரிகளையும் கோர்த்திருக்கிறார்கள். நம் மன நிலையைப் பொறுத்து, மயக்கமா கலக்கமா, சட்டி சுட்டதடா கை விட்டதடா, பிறக்கும்போதும் அழுகின்றான், ஜனனி ஜனனி என்று லிஸ்ட் போட முடியாத நீண்ட வரிசையைக் கொண்டிருக்கும் பாடல்களில் எத்தனை முறை நம் மனது ஆழ்ந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. தீபாவளியில் நாம் எதை ரசிக்கிறோம் என்பது நம் வயதையும், பாலினத்தையும் பொறுத்தது. சின்னப் பசங்க வெடி, பதின்மம் உடை மற்றும் பெண்கள் முன்னால் வெடித்து வீரம் காண்பிப்பது, பட்சண ஆசை, பெண்களுக்கு பட்சணம் பகிர்கிறேன் என்ற சாக்கில் தன் உடை, மற்றவர்கள் உடையைப் பற்றிப் பேச்சு, நடுத்தர வயதில் பட்சணத் தட்டோடு பட்டிமன்றம் பிற நிகழ்ச்சிகள், வயதானால் இன்னுமொரு நாளே... ஆமாம் இன்னைக்கு நியூஸ் என்ன? என்ற விசாரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே, அதே! ஆனால் நியூஸ் தீபாவளி ஸ்பெஷல் கிடையாது. நித்ய விசாரம்.

      நீக்கு
  8. கதையில் பிடித்த நடிகைகளின் பெயரைப் போட்டு பிரயோசனம் இல்லை ராசா... படங்கள் எங்கே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையில் பிடித்த நடிகைகள் எங்கே வந்திருக்காங்க.‌விம் போட்டு விளக்கவும்.

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. கேள்விகளும், பதில்களும் அருமை.
    பழைய பாடல்கள் நிறைய இருக்கிறது, புதிய பாடலும் சில இருக்கிறது.
    பாடல் கேட்பது பிடித்த விஷயம். மொழி பேதம் இல்லாமல் எல்லா மொழி பாடல்களும் கேட்டோம் இசை இனிமையாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  11. //சில பள்ளிகளில் வாரம் ஒரு முறை கணினி அல்லது ஐபாட் மூலம் சில பாடங்களைக் கற்பிக்கிறார்கள் என்பது உண்மையா? இது ஏற்றுக் கொள்ளக் கூடியதா?//

    கல்வி கற்பிக்க படுவது டிஜிட்டல் சாதனங்களில். ஆசிரியர் நேரடியாக கற்பித்தாலும் இங்கு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மடி கணினி கொடுத்து விடுகிறார்கள் அதில் தான் பிள்ளைகள் வீட்டுப்பாடம் எல்லாம் செய்கிறார்கள்.

    சிறு வயதில் புத்தக வாசித்தல் இவ்வளவு பக்கம் ஒரு நாளில் படிக்க வேண்டும் என்று சொல்லி விடுவார்கள். மின் புத்தகங்களை வாசிக்க சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பழக்கம்.

      நீக்கு
    2. ஆமாம், அம்பேரிக்காவிலே ஹோம்வொர்க்கை ஆன்லைனில் பண்ணும் முறை எங்க பெரிய பேத்தி ஒன்றாம் வகுப்புப் படிக்கையிலேயே ஆரம்பிச்சாச்சு. குழந்தைகளின் அம்மாவுக்கும் இந்தத் தகவலை மெயிலில் அனுப்பிடுவாங்க. இங்கே கு.கு.வுக்கும் அப்படித் தான் வருது. அதைத் தவிரவும் எழுதும் அனுபவம் வேண்டும்னு அப்பியாசப் புத்தகம் வைச்சும் எழுத வைக்கிறாங்க. அதில் தான் கு.கு.வுக்குப் பிடிக்கவே பிடிக்காது. அதுவும் ஒரு வாரத்துக்கான வீட்டுப்பாடம் முழுதும் ஞாயிறன்றே கொடுத்திருப்பாங்க. அவங்க அம்மா இரண்டு நாட்களில் எல்லாத்தையும் முடிச்சுட்டு அப்புறமா நீ தாராளமாக விளையாடப் போகலாம் என்பாள். ஆனால் கு.கு ஒரு நாள் வீட்டுப்பாடத்தை முடிச்சுடுத்துனா பின்னர் அந்தப் புத்தகத்தை மூடி வைச்சுடும். அதான் ஸ்கூலில் வேறே பண்ணறேனே. இங்கேயும் முடிச்சாச்சுனு சொல்லிடும். :))))))

      நீக்கு
  12. தீபாவளியை ரசித்த காலங்கள் போய் விட்டது. அதுவும் ஒரு பண்டிகையாக வந்து போகிறது இப்போது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதுதான் காரணம்.

      நீக்கு
    2. பழைய பதிவுகளில் மதுரை நவராத்திரி அனுபவங்கள், தீபாவளி அனுபவங்கள், தலை தீபாவளி அனுபவம், கல்யாணம் ஆகிக் கூட்டுக் குடும்பமாக இருந்தப்போ உள்ள தீபாவளி அனுபவம்னு எல்லாத்தையும் எழுதி இருக்கேன். அம்பத்தூரில் இருந்தவரை, நவராத்திரி, தீபாவளி, பொங்கல் எல்லாமுமே நல்லா ரசிச்சுக் கொண்டாடி இருக்கோம். ஜாம்நகரில் நவராத்திரி அனுபவங்கள் நன்றாக இருந்ததையும் எழுதி இருப்பேன். இப்போல்லாம் அந்த ஈடுபாடே இல்லாமல் போய் விட்டது.

      நீக்கு
  13. தங்கை கத்தாரில் உள்ள தன் மகன் வீட்டு போய் இருந்த போது இந்த மாலில் படகில் போனதை படம் அனுப்பி இருந்தாள். நன்றாக இருந்தது.
    நெல்லை எடுத்த படங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. கதை நன்றாக போகிறது, தமெனா போகும் உல்லாச பயணத்தில் போகும் இடங்களின் விவரங்கள் எல்லாம் சேகரிப்பது தமெனாவுக்கு மகிழ்ச்சியும் தரும், உதவியாகவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌதமன் சார்தான் அழகான தமன்னாவை தமெனா என தேமேன்னு எழுதியிருக்கார்னா, நீங்களுமா?

      நீக்கு
    2. இன்னமும் அறு(!)ஷ்கா ரசிகர் சண்டைக்கு வரவில்லை. அவர் கதை படிப்பதில்லை என்பதால் நான் தப்பித்து வருகிறேன்!

      நீக்கு
    3. கதை பாத்திரத்தோட பேரை மாற்ற முடியுமா நெல்லை.

      நீக்கு
  15. ஆமாம்.

    மார்கழி என்றாலே மாலவனோ, ஆண்டாளோவா முதலில் வருகிறார்கள் நினைவுக்கு? குளிர்காலையில், கோவில் சாக்கில், இந்த நெய்மணக்கும் வெண்பொங்கல்தான் முன்னே வந்து, தங்கப் பதக்கம் வாங்கிவிடுகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு எப்போது கூடாரை வெல்லும் சீர் திருப்பாவையைக் கேட்டாலும், மனம் சர்க்கரைப் பொங்கலில் ஆழ்ந்துவிடும். நான்கு வயதில் திருவாடானை சிவன் கோயிலுக்கு மார்கழி மாதம் சென்று வெண்பொங்கல் வாங்கியது நினைவுக்கு வருது. அப்போதே கோயிலுக்கு அதிகாலையில் செல்லும் வழக்கம் வீட்டில் எனக்கு மட்டும் உண்டு.

      நீக்கு
    2. ஆமாம்,அதுவும் மதுரையில் எல்லாம் வீட்டுக்கு வீடு அன்னிக்கு முக்கியமாப் பண்ணுவது அக்கார அடிசில் தான். என் அம்மா எப்போவுமே சர்க்கரைப் பொங்கலில் குறைந்த பக்ஷமாக அரைப்படி பாலாவது விடுவார்கள். எங்களுக்கும் அந்த ருசியே பழக்கம். மதுரையில் இருந்தவரை மார்கழி மாதங்களில் தம்பியும் நானுமாக எல்லாக் கோயில்களுக்கும் போய்விட்டுக் கடைசியா கோஷ்டி நடக்கையில் வடக்குக் கிருஷ்ணன் கோயிலுக்கு வருவோம். அங்கே இருந்து வீடு பக்கம். அங்கே கோஷ்டியில் கலந்து கொண்டு வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், எ.சாதம், புளியோதரைனு வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போயிட்டு அதைப் பகிர்ந்து சாப்பிட்டுவிட்டு அம்மா சமையலிலேயும் ரசம் சாதம் சாப்பிட்டுவிட்டு அதையே மத்தியானத்துக்கும் எடுத்துக் கொண்டு பின்னர் பள்ளிக்குப்போவேன். மனமெல்லாம் உற்சாகம் நிரம்பிய நாட்கள் அவை.

      நீக்கு
  16. பிடித்த பத்துப் பாடல்கள் எனப் பழையபாடல்களின் நினைவை, லேசாகக் கிளறிவிட்டதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  17. கே.பி.ஜனா. அவர்கள் தன் வலைத்தளத்தில் "காதுக்கு ஏ.ஸி" என்று பி. பி ஶ்ரீனிவாஸின் பாடல்களை பகிர்ந்து இருக்கிறார் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  18. காலங்களில் அவள் வசந்தம்!...

    பாடலுக்குப் பின் தான் மற்றவை எல்லாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் பாடல் !

      நீக்கு
    2. என்னது.... எபில ஶ்ரீராம் தவிர மத்தவங்களுக்கு இளமை திரும்புகிறதே

      நீக்கு
  19. குவைத்தில் இருந்த போது கத்தார் சென்று பார்க்க
    வேண்டும் என நினைத்துக் கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  20. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.

    இனிமையான பழைய பாடல்களை மறக்கவே முடியாது. கேள்விக்கான பதிலிலும், கருத்துகளில் வந்த பாடல்கள் அனைத்தும் எனக்கும் பிடித்தமானவை. . அந்த இசையும், பாடலின் பொருட்செறிவும், அதற்கேற்ற நடன அசைவுகளும் நம்மை கட்டிப் போட்டவை. சோக பாடலானாலும், தத்துவ பாடலானாலும் நம் மனதிற்கு இதம் அளிப்பவை..

    தீபாவளி கொண்டாட்ங்கள் இப்போது ஒரு சாதாரண நாளாகி விட்டது. ஏனெனில், இப்போது நினைத்தவுடன் புது துணிகளை வாங்கியும், ஆசைப்பட்ட பட்சணங்களை எப்போது வேண்டுமானாலும் வாங்கியோ , செய்த ருசிக்கலாம் என்ற மனநிலை தீபாவளியை சாதாரண நாளக்கி விட்டது. வெடிகள் வெடிப்பதில் அப்போதிருந்த ஆர்வம் இப்போதில்லை. வெடிகளின், பட்டாசுகள் விலையும் வானைத் தொட்டு விட்டது. அப்போதே "காசை கரியாக்காதே" என்று எச்சரித்த நம் பெரியவர்கள் இப்போதிருந்தால், "இவ்வளவு காசு தந்து, சிறு பொட்டலமாய் ஒரு பட்சணம் மாதிரி வெடிகள் வாங்க வேண்டுமா.? "என்பார்கள். மேலும் இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் வெடிக்க தடா வந்து விட்டது. ஆக மொத்தம் தீபாவளி பண்டிகை ஒரு தினசரி வந்து போகும் ஒரு நாள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான சூப்பர் கருத்துரை! நன்றி. தீபாவளி : உண்மை, உண்மை.

      நீக்கு
    2. அதைவிடக்்கொடுமை... பட்சணங்கள் பல கடைகளிலும் வாங்கும் ருசிக்கும் வசதி வந்துவிட்டதால், அம்மா கைருசி, ஆசை ஆசையாகச் செய்வது இதெல்லாம் பழங்கனவாக ஆகிவிட்டது.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    சகோதரர் நெல்லைத் தமிழர் அனுப்பிய கத்தார் மால் படங்கள் அழகாக இருக்கிறது. இதையெல்லாம் இப்படி படங்களில் பார்த்து ரசிக்க வேண்டியதுதான். நேரில் சென்று பார்க்க இயலாது என நினைக்கிறேன். இங்கு சென்ற அவராவது அந்த நீர்வழித் தடத்தில் படகில் சென்று அனுபவித்து இருக்கலாம். சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதே பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      நீக்கு
    2. அதுல அப்போ ஆர்வம் இல்லை கமலா ஹரிஹரன் மேடம். மற்றபடி பயணங்களில் பலவற்றின் அனுபவத்தை ஆர்வத்தோடு பெறுவேன், சங்கோஜம் கிடையாது. பல படங்களைப் பகிரும்போது புரிந்துவிடும்.

      நீக்கு
  23. நெல்லை அனுப்பி இருக்கும் இந்தப்படம் (கத்தார்) பார்த்ததும் எனக்கு அம்பேரிக்காவின் டெக்சாஸில் அமைந்திருக்கும் சான் அன்டோனியோ நகரம் நினைவில் வந்தது. அங்கே இம்மாதிரியாகவே ஆற்றங்கரையின் ஓரங்களில் முழுதும் கடைகள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள்னு இருக்கும். அந்தப் பகுதியில் அங்கே இந்த ஆற்றங்கரை ஓரமாக "ரிவர் வாக்" எனப்படும் பொழுதுபோக்கு ரொம்பப்பிரபலம். நாம் நடந்தும் போய்ப் பார்க்கலாம். அங்கேயே படகிலும் பயணம் உண்டு. படகிலும் போகலாம். நானும் ரங்க்ஸும் மட்டும் ஒரு சின்ன வட்டப்படகில் போனோம். பையரும் மருமகளும் வேறே படகு. நாங்கள் தனியாகத் தான் போனோம். ஆனால் அந்த ஆறே நம்மை வழி நடத்துகிறது எனத் தோன்றியது. கடைசியில் முடியும் இடத்துக்கு வந்த பின்னர் ரொம்பவே மகிழ்ச்சியாகவும் ஏதோ சாதிச்சுட்டாப்போலயும் தோன்றியது. படங்கள் எல்லாம் இருக்கு. ஆல்பத்தில் பார்க்கணும். இது ஒரு சரித்திரப் பிரசித்தி பெற்ற ஊரும் கூட. டெக்சாஸ் சுதந்திரத்துக்காகப் பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த சுதந்திரப்போரில் பங்கு பெற்ற கட்டிடம் "அலமோ" என அழைக்கப்படுகிறது. அங்கே ஓர் ம்யூசியமும் இருக்கு. யுனெஸ்கோ இந்தக் கட்டிடம் ஊர் எல்லாவற்றையும் உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் சேர்த்திருக்கு. நெல்லையின் படம் அந்த ஊரைத் தான் நினைவூட்டியது. அதனால் உடனே இந்தக் கருத்து. மற்றவை படிச்சதும்.

    பதிலளிநீக்கு
  24. அம்மாவை எல்லாம் ஏமாற்றியதில்லை. அப்பாவுக்குத் தெரியாமல் ஒரு சில திரைப்படங்கள் சிநேகிதியுடன் காலைக்காட்சிக்குப் போனது உண்டு. காலை ஒன்பது மணிக்கு முன்னால் அப்பா பள்ளிக்குப் போயிடுவார். மேமாசி வீதி "பழனி என்ற சந்திர" தியேட்டரில் (ஆலால சுந்தர விநாயகர் கோயிலுக்குக் கொஞ்சம் முன்னால், சம்பந்த மூர்த்தித் தெரு அருகே இருந்தது.) காலைக் காட்சி என்று ஆரம்பித்துப் பழைய படங்களைப் போடுவார்கள். அங்கே தான் பார்த்திபன் கனவு, இன்னும் சில பெயர் நினைவில்லாத பழைய படங்கள் பார்த்தேன். மதுரை கான்சாமேட்டுத் தெரு அருகே இருந்த/இருக்கும் மீனாக்ஷி தியேட்டரில் "ஆராதனா" இன்னும் சில ஹிந்திப்படங்கள் பார்த்திருக்கேன். சிம்மக்கல் படித்துறைக்குப் போகும் வழியில் "கல்பனா" தியேட்டரில் சில படங்கள்னு பார்த்திருப்பேன். இங்கே பெரியம்மா (என் அப்பாவின் மன்னி) என்னைப் படத்துக்கு அனுப்பி வைப்பார். இது தான் அப்பாவை ஏமாத்தின வரலாறு. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் என் அண்ணனும் அப்பாவுக்குத் தெரியாமல் பார்த்துவிட்டு, சீ இந்தப் படத்தையா பார்த்தோம் என்று நொந்துபோன படம்: சித்தி.

      நீக்கு
  25. கதையில் கல்யாணச் சுறுசுறுப்பே இல்லையே? சத்திரம், ஊர்வலம், பக்ஷணங்கள்னு எல்லாம் ஆர்டர் கொடுத்தாச்சா? காடரர் யாரு? அறுசுவை நடராஜனை வைக்காட்டியும் அவர் உறவினர் ரமேஷின் காடரிங்காவது இருந்தால் நல்லது. சாயந்திரம் ரிசப்ஷனுக்கு முன்னால் ஒரு புதினா வடை போடுவாங்க பாருங்க, சொர்க்கம்! இப்போல்லாம் மாத்திட்டாங்களோ என்னமோ தெரியலை. கடைசியா 23 இல் ஒரு உறவினர் கல்யாணம் ஸ்ரீரங்கத்திலேயே, அதுக்குப் போனது தான். அப்புறமாக் கல்யாண சாப்பாடே சாப்பிடலை. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பனைதானே - உங்களுக்குப் பிடித்த எல்லாவற்றையும் கற்பனை செய்துகொள்ளலாம்!

      நீக்கு
  26. தமன்னாவைத் "தமெனா" ஆக்கிட்டீங்க. இந்தப் பாத்திரத்துக்கு இந்தக் கதையில் என்ன வேலை? யோசிக்கிறேன். முதலில் சஸ்பென்ஸ் த்ரில்லரோனு நினைச்சேன். பின்னர் குடும்பக் கதையோனு நினைச்சு பாவனா வந்தப்புறமா வழக்கமான ஏஐ கதையோ என்றும் யோசித்தால் கதை எங்கெங்கெல்லாமோ போகுது. வருமானம் முறையாகவே ஈட்டி இருப்பாங்கனு நினைக்கிறேன். இல்லாட்டி மாட்டிக்கறது தான் கதையின் முக்கிய நிகழ்வா?

    பதிலளிநீக்கு
  27. @ நெல்லை

    ///என்னது.... எபில ஶ்ரீராம் தவிர
    மத்தவங்களுக்கு இளமை திரும்புகிறதே...///

    அவரோட வழியே தனி!...

    பதிலளிநீக்கு
  28. கேள்வி பதில்கள் நன்றாக இருந்தன.
    தீபாவளிஆடை, பட்சணம், மத்தாப்பு என்பதுடன் அக்கம் பக்கத்து பெண் குழந்தைகளை ..ஹா....ஹா.....ரசித்தேன்.

    பாடல்கள் தெரிவு அருமை.

    பதிலளிநீக்கு
  29. கேள்வி பதில்கள் நன்றாக இருந்தன.
    தீபாவளிஆடை, பட்சணம், மத்தாப்பு என்பதுடன் அக்கம் பக்கத்து பெண் குழந்தைகளை ..ஹா....ஹா.....ரசித்தேன்.

    பாடல்கள் தெரிவு அருமை.

    பதிலளிநீக்கு
  30. பட்டி மன்றம் என்பதைப் படித்ததும் நினைவில் வருவது முன்னெல்லாம் ஜஸ்டிஸ் மஹாராஜன், எஸ்.எம்.இஸ்மயில், குன்றக்குடி அடிகளார், கிரிதாரிலால் பிரசாத், சா.கணேசன் ஆகியோர் தனித்தனியாகவும் குழுவாகவும் நடத்திய பட்டி மன்றங்கள் தாம். அதிலும் கம்பன் கழகப் பட்டிமன்றங்கள் சென்னை வானொலியில் நேரலையில் ஒலிபரப்புச் செய்வாங்க. சீக்கிரம் வேலைகளை முடித்துக் கொண்டு அப்பா, அம்மா, அண்ணா, நான், தம்பி எல்லோருமே பக்கத்து வீட்டு ரேடியோவில் பட்டி மன்றம் கேட்க உட்காருவோம். அதைத் தவிர்த்தும் நேரேயும் மதுரைத் தமிழ்சங்கம் மூலம் நடந்த சிலவற்றை ஆடி வீதியில் நடத்திக் கேட்டிருக்கோம். கல்யாணம் ஆகி வந்ததும் அதெல்லாம் கேட்க நேரம் இல்லாமல் போய்விட்டது. இந்த சன் தொலைக்காட்சிப் பட்டி மன்றங்களை நான் ஒரு தரம் கூடப் பார்த்ததில்லை. சென்னை தூர்தர்ஷனிலும், பின்னர் வந்த பொதிகையிலும் ஒரு சில கேட்டிருந்தாலும் அவ்வளவாய் எடுத்துக் கொண்ட தலைப்பு ரசிக்கவில்லை. பொதிகையில் மருத்துவர் ஒருத்தர் புதிர் நிகழ்ச்சி நடத்துவார். அது ரொம்பவே நன்றாய் இருக்கும். அநேகமாய்க் கேந்திரிய வித்யாலயா மாணவ மணிகள் கலந்துப்பாங்க என்பதால் ( அகில இந்திய அளவில் நடக்கும்) எங்க குழந்தைகள் அவற்றைப் பார்ப்பாங்க. பின்னர் கேபிள் வந்தப்புறமாப் பொதிகை தவிர்த்து மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நன்றாக இருக்கும். ஒரு பெண் தினமும் ஒரு பதிகம் தேவாரத்திலிருந்து பாடுவார். அடுத்து ஒரு பாசுரம். நல்ல கலைஞர்களாய்த் தேடிப் பிடித்துப் போடுவார்கள். கர்நாடக இசைக்கலைஞர் திருமதி சௌம்யா கூட அதில் ஞானசம்பந்தர் பாடலைப் பாடி இருக்கார். ரவிகிரணுடன் கூட அவர் ஓர் தொடர் இசை நிகழ்ச்சி கூட நடத்தினார்.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!