வெள்ளையப்பம்
வெள்ளையப்பம்னு
கேள்விப் பட்டிருக்கீங்களா? செட்டிநாட்டுப் பக்கம் செய்யறது பத்தித் தெரிஞ்சிருக்கும்.
இதுவும் கிட்டத்தட்ட
அப்படித் தான். மிகவும் எளிதான ஒன்று. ஆனால் சாப்பிடச்
சுவையானது. இப்போ இன்னிக்குச் சாயந்திரம் அதான் பண்ணப் போறேன்.
அதுக்கு முன்னாடி
இங்கே செய்முறையை எழுதிடறேன். எண்ணெயில் பொரித்தது பண்ணறதே குறைஞ்சு போச்சு. என்றாலும் அவ்வப்போது
என்னிக்கோ ஒரு நாள் பண்ண வேண்டி இருக்கு. :)))))
உளுந்து ஒரு
ஆழாக்கு(200 கிராம்) கழுவிக் களைந்து ஊறவைக்கவும். பின்னர் கொடகொடவென
அரைத்துக் கொள்ளவும்.
உப்பு தேவையான
அளவு. 5 பச்சை மிளகாய், ஒரு அரை அங்குலத் துண்டு இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயத் தூள்
கால் டீஸ்பூன்.
பொரிக்க எண்ணெய்;
தேவையான அளவு.
கொடகொடவென அரைத்த
உளுத்தம் மாவில் அரிசிமாவு, உப்புச் சேர்த்து நன்கு கலக்கவும். மாவு போண்டா
போல் உருட்டிப் போடும் பதத்துக்கு வந்திருக்கும். பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயத் தூள்
சேர்த்துக் கொண்டு, எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு ஒரு சின்னக் கரண்டியால் எடுத்துப்
போடவும். எண்ணெயில் போடும்போதே நன்கு உப்பிக் கொண்டு வரும். மறுபக்கமும்
திருப்பிப் போடவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் வெளியே எடுக்கவும்.
மேலே முறுமுறுவென்றும்
உள்ளே லேயர் லேயராக மிருதுவாகவும் இருக்கும் இது.
இதை அப்படியே சாப்பிடலாம். தொட்டுக்க எதுவும் வேணும்னு எல்லாம்
இல்லை. :))))
நேத்திக்கு அரிசி உப்புமா போட்டதுக்கு போணியே ஆகலை. இன்னிக்கும் அதையே தான் வைச்சுக்கணும்னு நினைச்சேன். ஆனால் நேத்திக்குச் சாயந்திரம் திடீர்னு இது பண்ணினதாலே படம் எடுத்துப் போட வேண்டியதாப் போச்சு.
======================================================================================
பழசிலிருந்து.....
1. ஃ பேஸ்புக்கில் இப்போது நந்து சுந்து என்று ஒரு எழுத்தாளர் நகைச்சுவையாக எழுதி வருகிறார். பிரபலம்.
2. இந்த நந்துசுந்து 1955 குமுதம் இதழில் வந்தது. எனவே இது சீனியர்!
3. பின்னாட்களில் குமுதத்தில் இதே தீமில் குப்பாச்சு குழப்பாச்சு என்றும் ஒரு சீரிஸ் வந்தது. அது மீண்டும் இதுவரை பார்வைக்குக் கிடைக்கவில்லை.
நந்து : சினிமாவுக்கே போவதில்லையென்று தீர்மானம்,
சுந்து : முந்தாநாள் போயிருந்தாயே!
நந்து : அது சினிமா இல்லை. சினிமாஸ்கோப் சினிமாஸ்கோப் பார்த்திருக்கிறாயோ
சுந்து : பார்த்திருக்கிறேன். அதிலே படமே தெரியவில்லை. சத்தம்தான் காதில் விழுந்தது.
நந்து: பேஷ்! ரொம்பப் புதுமாதிரிப் படமோ?
சுந்து: அப்படி ஒன்றுமில்லை. என் முன் ஸீட்டிலே உட்கார்த்திருந்த ஆள் கிராப்பு வெட்டிக்கொள்ளாமல் ஏகமாய்த் தலைமயிரை வளர்த்துக் கொண்டிருந்தான்!
நந்து: நான்கூடக் கிராப்பு வெட்டிக் கொள்ளவேண்டும்.
சுந்து : போன வாரம்தானே வெட்டிக் கொண்டாய்! அதற்குள்ளா இவ்வளவு வளர்ந்துவிட்டது?
நந்து: நான் என்ன பண்ணட்டும்? நல்லெண்ணெய் என்று நினைத்து என் மனைவியின் கூந்தல் தைலத்தைத் தடவிக் கொண்டு விட்டேன்.
சுந்து : உசத்தித் தைலம்தான். உன் மனைவிக்குப் பிரமாதமாய் வளர்ந்திருக்குமே?
நந்து: அதுதான் இல்லை. அவள் தன் கூந்தல் தைலம் என்று என் நல்லெண்ணெயைத் தடவிக் கொண்டு வந்திருக்கிறாள்!
சுந்து : என் வீட்டில் கூந்தல் தைலம் எதுவுமில்லாமலே, ரிப்பனுக்குக் கொள்ளையாய்ச் செலவழிகிறது,
நந்து: உன் மனைவிக்கு அவ்வளவு கூந்தலா?
சுந்து: ஊஹூம். ஊரிலிருந்து என் மைத்துனிகள் நாலு பேர் வந்திருக் கிறார்கள்.
நந்து: என் மாமனார், மாமியார் ஊரிலிருந்து வருவதாயிருந்தது. சாமர்த் மாய்த் தடுத்துவிட்டேன்.
சுந்து: என்ன பண்ணினாய்!
நந்து : அவர்கள் இங்கே வருவதற்குள் நான் அவர்கள் ஊருக்குப் போய் உட்கார்ந்து விட்டேன்.

வெள்ளையப்பம்னு சொல்லியிருக்கீங்களே தவிர அரிசி மாவும் உளுந்து மாவும் கிட்டத்தட்ட ஒரே அளவில் கலக்கியிருக்கீங்க.
பதிலளிநீக்குகொஞ்சம் கடினமான மெதுவடையோ?
வாங்க நெல்லை.. செய்து பார்த்தால்தான் தெரியும்! சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு! சமீபத்தில் கூட நினைவுக்கு வந்தது.
நீக்கு//கொடகொடவென அரைத்த உளுத்தம் மாவில் அரிசிமாவு, உப்புச் சேர்த்து நன்கு கலக்கவும். // அரிசி மாவு எவ்வளவுனு எல்லாம் சொல்லலை. நீங்க போட்டுக் கலக்கும்போது உருட்டும் பதம் வரணும். அதோடு இல்லாமல் உள்ளே வேகும்போது கெட்டியாகப் போய் உட்கார்ந்துக்காமல் மேலே வெந்த வெள்ளையப்பத்தைக் கையால் நசுக்கினால் விரல் உள்ளே போகணும். இதெல்லாம் பழகப்பழக தானே வரும். இதே போலக் காராவடைனு ஒண்ணு இருக்கு. அதுவும் மதுரை ஸ்பெஷல் தான்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குவெள்ளையப்பம்னு சமீபத்துல கல்யாணத்துல வெள்ளையா உள்ளங்கை அளவு ஒரு வஸ்து போட்டால்க. ஒரு விள்ளல் சாப்பிட்டுவிட்டு வைத்துவிட்டேன்.
பதிலளிநீக்குவெள்ளையப்பத்திற்கு எது தொட்டுக்கொள்ளலாம்னு ஶ்ரீராம் சொல்வாரா?
தொட்டுக்கொள்ள கார சட்னி... மதுரையில் நாராயணா ரெஸ்ட்டாரெண்ட் என்று ரேஸ்கோர்ஸ் காலனி எங்கள் வீட்டுக்கருகில் கடை இருந்தது. அதில் வெள்ளையப்பன் போடுவார்கள். வாங்கி வந்து சாப்பிடுவோம். அதைத்தவிர கோபு அய்யங்கார் கடை ரொம்ப பேமஸ்.
நீக்குகோபு ஐயங்கார் கடை வெள்ளையப்பத்துக்குத் தொட்டுக்கு ஒரு பச்சை மிளகாய், கொத்துமல்லிச் சட்னி கொடுப்பாங்க முன்னே எல்லாம். மத்தியானம் சரியா இரண்டு மணிக்குப் போட ஆரம்பிப்பாங்க. மூணு, மூணரைக்கெல்லாம் தீர்ந்துடும். பஜ்ஜி போட ஆரம்பிச்சிருப்பாங்க. மேலாவணி மூலவீதியில் எங்க வீட்டுக்குப் பின்னாடி தான் கோபு ஐயங்கார் கடை, மேலச்சித்திரை வீதியும், வடக்குச் சித்திரை வீதியும் சேரும் முடுக்கில் இருக்கு. கொஞ்சம் தள்ளி மதுரை சோமு வீடு. அவன் இங்கே பாடுவது அங்கே எங்க வீட்டு மாடியில் கேட்கலாம். எங்க போர்ஷனுக்கு மாடி ரூம் உண்டு என்பதால் நான் அநேகமா அங்கே தான் உட்கார்ந்து படிச்சுண்டோ, எழுதிண்டோ இருப்பேன். கூடவே ஒரு பக்கம் சோமு பாடல். தெருவிலேயே முதல் வீட்டில் ஜி.எஸ். மணி ஐயர்.(மதுரை மணி ஐயர் இல்லை.)
நீக்குதூள் பஜ்ஜி கோபு ஐயங்கார் கடையை விட மதுரை மேலமாசி வீதி, மாடர்ன் ரெஸ்டாரென்டில் நன்றாக இருக்கும். ஒரு தூள் பஜ்ஜிக் கலவை வாங்கினால் நாலு பேர் தாராளமாகச் சாப்பிடலாம். சென்னையில் எல்லாம் நான் தூள் பஜ்ஜினு பார்த்ததே இல்லை. ராஜஸ்தான் போனப்புறமாத் தான் அங்கே பண்ணும் பஜியாவும் கிட்டத்தட்ட மதுரை தூள் பஜ்ஜி தான் எனத் தெரிய வந்தது. இப்போவும் வீட்டில் அடிக்கடி தூள் பஜ்ஜி/பஜியா பண்ணினது உண்டு. மாமாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் அதில் கொத்துமல்லித் தழை, பார்ஸ்லி, புதினா, வெந்தயக்கீரை எல்லாமும் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொஞ்சம் வெங்காயம், உ.கி. கொஞ்சம், பிடித்தால் குழை மிளகாய் போட்டுப் பண்ணினால் திரும்பத் திரும்பக் கேட்பார்கள். இதுக்கே மேலே புளிச்சட்னி, பச்சைச் சட்னி ஊத்தித் தருவாங்க வட மாநிலங்களில். நாங்கல்லாம் தொட்டுக்க எதுவும் இல்லாமல் சாப்பிடுவோம். அன்னிக்கு ராத்திரி சூடாகச் சாதம், மிளகு ரசம் வைத்து இதைத் தொட்டுண்டு சாப்பிடுவோம்.
நீக்குஎன் அம்மா குனுக்கு என்று எங்களுக்குப் பண்ணிப்போட்டது, அதிக உளுந்து சிறிது அரிசி வெல்லம் சேர்த்து அரைத்த (ஊறலாம் வைக்கணும் அரிசி உளுந்தை) உருண்டையாக பொரித்துப் போடுவார்கள். கல்யாணமான பின்புதான் கிட்டத்தட்ட கட்டி அடைமாவை பொரித்து குனுக்குன்னு சொல்வாங்க என்பதே தெரியும்.
பதிலளிநீக்குசுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் வெள்ளையப்பன் வீட்டிலேயே செய்திருக்கிறேன். இப்போது செய்முறை எதுவும் நினைவில்லை. எதைப் பார்த்து செய்முறை எடுத்தேன் என்றும் நினைவில்லை. அப்போதெல்லாம் சனிக்கிழமைகளில் ஏதாவது ஒரு புதிய ஐட்டம் முயற்சிப்பேன்! மகன்கள் ரசிப்பார்கள்.
நீக்கு@ஸ்ரீராம் வெள்ளையப்பன் சரி; வெள்ளையம்மா யாரு? வெள்ளையப்பம் (அப்பன் அம்மன்) இருவருக்கும் பிறந்த குழந்தையா?
நீக்குஒரு டம்ளார் பச்சரிசி, அதில் பிடித்த பிடி உளூந்து சேர்த்து தோசை பதத்திற்கு அரைத்து எண்ணெயில் பொரித்து எடுப்பார்கள்.
நீக்குவெள்ளை பணியாரம் என்பார்கள்.தேவகோட்டை பக்கம் அவர்கள் கரண்டியால் எடுத்து ஊற்றி அப்பம் போலவும் செய்வார்கள்.
கொஞ்சம் கட்டியாக அரைத்து குட்டி குட்டியாக கிள்ளி போட்டு பொரித்து எடுத்து பாலில் போட்டு இனிப்பு பால் பணியாரம் என்றும் சொல்வார்கள்.
இது வேறே கோமதி அர்சு. இதில் அரிசி தூக்கலாக இருக்கும். வெள்ளைப் பணியாரம் என்பார்கள். எங்க பக்கத்து வீட்டு தேவகோட்டைக்காரங்க அடிக்கடி பண்ணுவாங்க. தீபாவளிக்கு தீபாவளி எங்க வீட்டுக்கு ஒரு தட்டு நிறையப் பால் பணியாரம், வெள்ளைப்பணியாரம், குழி அப்பம், சாதாரண உளுந்து வடை, இனிப்பு உளுந்து வடை, பஜ்ஜி, செக்கச் செவேர்னு இருக்கும் வரும். அதிரசம் சூப்பராக மிருதுவாக இருக்கும்.
நீக்குவெள்ளையப்பம் வேறே. எங்க அம்மா/அப்பா வீட்டிலே தீபாவளிக்கு தீபாவளி இது கட்டாயம் பண்ணணும். காலை குளிச்சுட்டு, மருந்து சாப்பிட்டு, புது ட்ரெஸ் போட்டுக் கொண்டதும் நேரே தட்டைத் தூக்கிக் கொண்டு வெள்ளையப்பம் சாப்பிட்டப்புறமாத் தான் பட்டாசு, மத்தாப்பு, வெடி எல்லாம். பின்னாட்களில் நம்ம ரங்க்ஸுக்கு இது ரொம்பப் பிடிச்சுப் போகவே என்னை வீட்டிலும் பண்ணச் சொல்லுவார்.
நீக்குகுணுக்கு முற்றிலும் வேறே. என் மாமியார் வீட்டில் புளித்த அடை மாவு மிச்சத்தில் மறு நாள் பண்ணுவாங்க. கல்யாணம் ஆகி வந்தப்புறமா நானும் அப்படிப் பண்ணுகிறேன். ஆனாலும் நவராத்திரிக்கெல்லாம் குணுக்குக்குனு தனியாக ஊற வைச்சு அரைச்சுப் பண்ணுவேன். ஸ்ரீரங்கத்தில் எங்க குடியிருப்பு வளாகத்தில் நான் இதைப்பண்ணும்போதெல்லாம் அனைவரும் விஷயம் தெரிந்து கொண்டு வந்துடுவாங்க. குணுக்குக்காகத் தான் வாந்தேன்னு சொல்லியே வாங்கிட்டுப் போவாங்க. :))))
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குநலம் வாழ்க..
பதிலளிநீக்குவாழ்க.. வாழ்க...
நீக்குவெள்ளையப்பம் செய்முறை இதுதானா?...
பதிலளிநீக்குஅப்படிதான் நினைக்கிறேன்.
நீக்குyessu @ Durai Selvaraj, & @Sriram.
நீக்குநந்துவும் சுந்துவும்...
பதிலளிநீக்குஆகா...
ஓஹோ...!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவெள்ளை அப்பம் செய்முறையும் , படங்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதிருவெண்காட்டில் இருந்த போது கற்றுக் கொண்டேன்.
எங்கள் கல்லூரி பிரின்ஸ்பால் வீட்டு மாடியில் குடியிருந்தோம். பிரின்ஸ்பால மனைவியை அம்மா என்று தான் அழைப்பேன்.
அம்மா சொல்லி கொடுத்தார்கள். உடனே அரைத்து உடனே செய்ய வேண்டும். தக்காளி மிளகாய் வைத்து அரைத்த கார சட்னி தொட்டுக் கொள்ள செய்வார்கள். அவர்கள் பேத்தி கல்யாணத்திற்கு தேவகோட்டை போனபோது காலை டிபனுக்கு வெள்ளை அப்பம் அரைத்து கொண்டே இருந்தார்கள். இலையில் சுடச்சுட போடுவார்கள். எல்லோருக்கும்.
பதிலளிநீக்குநந்துவும். சுந்துவும் பொக்கிஷபகிர்வு நன்றாக இருக்கிறது நகைச்சுவையாக.
முகநூலில் இருப்பதால் நந்து, சுந்துவை நல்லாத் தெரியும். ஆனாலும் அதிகம் படிப்பதில்லை. ஏனோ ஓர் ஈர்ப்பு வரலை. குமுதத்தில் வந்தது நினைவில்லை. குமாரி என்னும் கார்ட்டூன் தாணுவின் ஓவியத்தில் வந்து கொண்டிருந்தது. பின்னர் ஆங்கில ஆர்ச்சி (ஆர்க்கி?) கார்ட்டூன் தொடரை சுஜாதா குமுதம் ஆசிரியராக இருந்தப்போ அச்சு/ஜக்கு என்னும் பெயரில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். குப்பாச்சு/குழப்பாச்சு நினைவில் இருக்கு. முப்பத்திரண்டாம் பக்கத்து மூலைனோ என்னமோ அந்தப்பக்கத்தில் ஏதேனும் செய்திகளை (வில்லங்கமாக?) வெளியிடுவார்கள்.
பதிலளிநீக்கு