28.9.26

"திங்க"க்கிழமை  :: சாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி

 

 சாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடி

ஏற்கெனவே ஒரு முறை இந்த சாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடி பத்தி எழுதி இருக்கேன். நடுவில் கொஞ்ச நாட்களுக்கு இதைச் செய்யவே இல்லை. இப்போ திடீர்னு நம்ம வீட்டில் சாபுதானாவுக்கு வரவேற்புப் பெருகவே இந்த வருஷம் வைகுண்ட ஏகாதசி அன்று விரதத்திற்கான ஆகாரமாக இதைச் செய்தேன். அதற்கு முன்னரும் ஓர் நாள் செய்திருந்தேன். அப்போப் படம் எல்லாம் எடுக்கலை. விரதத்தன்னிக்குக் கொஞ்சம் நிதானமாச் செய்ததால் எல்லாம் ஏற்பாடுகள் செய்து கொண்டு படங்களும் எடுத்துவிட்டு கிச்சடி செய்தேன். இதற்குத் தேவையான பொருட்கள் இரண்டு பேருக்கு மட்டும்

படத்தில் பார்க்கும் உழக்கினால் (ஆழாக்கு) முக்கால் ஆழாக்கு ஜவ்வரிசி. காலையில் செய்வதானால் முதல் நாள் இரவு ஜவ்வரிசியைக் கழுவி ஊற வைக்கணும். நான் இரவில் செய்ததால் அன்று காலை ஜவ்வரிசியைக் கழுவி ஊற வைச்சேன். முதல்நாளே  ஊற வைச்சாலும் நன்றாகவே இருக்கும்.

வறுத்த வேர்க்கடலை, சாபுதானாவின் அளவுக்கே இருந்தால் நல்லது. கூடக் குறைய இருந்தாலும் பரவாயில்லை. இது வறுத்திருந்தால் தோலை நன்கு உரித்துக் கொண்டு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளணும். பின்னர் மிக்சியில் போட்டு ஒரே சுத்துச் சுத்தினால் கொஞ்சம் மாவாகவும் இல்லாமல் ரொம்பக் கொரகொரப்பாயும் இல்லாமல் வரும்படி எடுத்துக் கொள்ளணும். ஒன்றிரண்டு உடைபடலைனாலும் பரவாயில்லை. நன்றாகவே இருக்கும். குஜராத், மஹாராஷ்ட்ராவில் இந்த வேர்க்கடலைப் பொடி தயாரித்து விற்பார்கள். பெரும்பாலும் அவங்க உணவில் அடிக்கடி இடம் பெறுவதால் நிறைய வாங்கி வைச்சுப்பாங்க. நாம எப்போவோ தானே பண்ணறோம். ஆகவே வேர்க்கடலை வறுத்தது வாங்கியோ அல்லது பச்சைக் கடலையை வறுத்தோ சுத்தம் செய்து உபயோகிக்கலாம்.

அடுத்த முக்கியமான பொருள் உருளைக்கிழங்கு. சாபுதானா வடை செய்தாலும் சரி, கிச்சடி செய்தாலும் சரி உ.கி. வேர்க்கடலை இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. நாங்க இரண்டு பேர் தான் என்பதால் 2 கிழங்கு நிதானமாக எடுத்துக் கொண்டேன். அதைத் தோலைச் சீவும் பழக்கம் இருந்தால் சீவலாம். நான் பெரும்பாலும் உ.கி. தோலோடு தான் பயன்படுத்துவேன். நன்கு ஊற வைத்துக் கழுவிக்கொண்டு காரட் துருவலில் சீவிக்கொள்ளலாம். அல்லது பொடியாக நறுக்கலாம். அன்று பொடியாக நறுக்கினேன்.

மிக்சி ஜாரில் பொடி செய்த வேர்க்கடலைப்பொடி, பாத்திரத்தில் நீரில் உ.கி. நறுக்கியது. இன்னொரு பாத்திரத்தில் ஊறிய சாபுதானா.

அடுத்துத் தேவைப்படுவது தாளிக்க எண்ணெய், கடுகு, ஜீரகம். (உபருப்பு, கபருப்புப் போடுவதெல்லாம் உங்க இஷ்டம். நான் போடுவதில்லை) பச்சைமிளகாய் சின்னதாக 2  இஞ்சி ஒரு அங்குலத் துண்டு பொடியாக நறுக்கவும். கருகப்பிலை, கொத்துமல்லி. கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தனியாக வைக்கவும். எலுமிச்சம்பழம் பழத்தில் இருக்கும் சாறுக்கு ஏற்ப ஒன்று அல்லது பாதி.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் (எண்ணெய் நல்ல கடலை எண்ணெயாக இருந்தால் நல்லது. இல்லை எனில் நீங்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்) கடுகு, ஜீரகம் தாளித்துப் பிடிக்குமானால் பெருங்காயப் பொடி போடவும். பின்னர் பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை போட்டு வதக்கி விட்டு உ.கியை நீரை வடித்துப் போட்டு நன்கு வதக்கவும். உ.கி. நசுங்கும் பதம் வரணும். துருவல் எனில் சீக்கிரம் வெந்து விடும்.

பின்னர் ஊற வைத்த சாபுதானாவைப் போட்டுக் கூடவே வேர்க்கடலைப் பொடியையும் போட்டு கையோடு நினைவாகத் தேவையான உப்பைச் சேர்க்கவும். சிறிது நேரம் நன்கு கிளறவும். சாபுதானா தனித்தனியாகப் பிரிந்து நசுங்கும் பதம் வேகும் வரை கிளறவும்.

நன்கு வெந்ததும் மேலே பச்சைக் கொத்துமல்லி தூவிக் கீழே இறக்கி எலுமிச்சம்பழம் பிழியவும். சூடாக இருக்கும்போதே சாப்பிடவும்.


========================================================================================

சுஜாதாவின் கதைகள், திருட்டுத்தனமாக திரைப்படங்களாக உருமாறிய விஷயம்:
சுஜாதா ஒரு முறை ஒரு வாசகரின் கேள்விக்கு, 'மறு பிறவி இருந்தாலும் ஞாபகத் தொடர்ச்சி இல்லையென்றால் அது மறுபிறவியே அல்ல என்பது என் வாதம்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஞாபகத் தொடர்ச்சி அடிப்படையில் ஒரு தமிழ்ப்படம் வந்தது.
>> மாயவன் என்ற அந்தப் படத்திற்கு கதை / வசனம் எழுதிய நலன் குமாரசாமி, சுஜாதா எழுதிய பேசும் பொம்மைகள் நாவலின் மையக் கருவான 'memory download' என்பதை அப்படியே சுட்டு திரையில் கொண்டு வந்திருந்தார்.
மாயவன் படத்தில், இது நாள் வரை பல தரமான படங்களைத் தயாரித்துள்ள சி.வி. குமரன் முதன்முறையாக இயக்குனர் ஆகியுள்ளார். ஆனால், திரைக்கதை / வசனம் எழுதியுள்ள இன்னொரு திறமைசாலி நலன் குமாரசாமி, அட்டகாசமாக மறைந்த மாபெரும் எழுத்தாளர் சுஜாதாவின் பேசும் பொம்மைகள் நாவலை மசாலா, பாடல்கள், சில தேவையற்ற காட்சிகளை சேர்த்து இந்தப் படத்தின் திரைக்கதையாகக் கொடுத்துவிட்டார்.
தெளிவான screenplay இல்லாததாலும், நடித்த பெரும்பாலான நடிகர்கள் மிக சுமாராக நடித்துள்ளதாலும் படம் ரொம்பவே நொண்டியது. இது போன்ற புது முயற்சியைப் பாராட்டினாலும், தமிழ் திரையுலகின் நன்றிகெட்டத்தனத்தை நினைத்து கஷ்டமாக இருக்கிறது. பட ஆரம்பத்தில், ஒரு வரி, "மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் பேசும் பொம்மைகள் கதையைத் தழுவி எடுத்த படம்" எனப் போட்டிருக்கலாம்.
'பேசும் பொம்மைகள்' கதையின் மையக் கருவை நலன் குமாரசாமி மாயவன் படத்துக்காகச் சுட்ட போது வாத்தியாரும் நம்மிடையே இல்லை என்பதால், அப்படியே ஜஸ்ட் லைக் தட் விட்டுவிட்டார்கள்.
>> வாத்தியாரின் "ஜே.கே" குறுநாவலை அப்பட்டமாக, அப்படியே எதுவும் மாறாமல் காப்பி அடித்து "ஏர்போர்ட்" என்ற பெயரில் படம் எடுத்தார் மலையாள இயக்குனர் ஜோஷி.
சத்யராஜ் / கௌதமி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, என்னைப் போல பல வாத்தியார் ரசிகர்கள் அப்போது அதிர்ச்சி அடைந்தது நிஜம்.
இதன்பின், சுஜாதாவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த வாசகர்கள், இதுபற்றி அவரிடம் கேட்டபோது, அவர் பெருந்தன்மையுடன், 'படத்தின் ஆரம்பத்தில் இந்தக் கதையைத் தழுவியது' என ஒரு வார்த்தை போட்டிருக்கலாம் எனக் கூறி அதை அதோடு விட்டுவிட்டார். அது நடந்தது 1992-'93 சுஜாதா தமிழ் திரையுலகில் அவ்வளவாகக் கால் ஊன்றாத காலம். இது போல ஹாலிவுட்டில் நடந்திருந்தால், படத் தயாரிப்பாளரையும், இயக்குனரையும் கோர்ட்டுக்கு இழுத்து, ஒரு வழி செய்திருப்பார்கள்.
>> பாரதி ராஜாவின் நாடோடித் தென்றல்
>> காப்பி மன்னர் விஜய் இயக்கத்தில் வந்த மதராசப்பட்டினம் இரண்டுமே சுஜாதாவின் "ரத்தம் ஒரே நிறம்" கதையின் பாதிப்புதான்.
இதில், நாடோடித் தென்றல் படத்தில் கதை: இளையராஜா, வசனம்: சுஜாதா என்று போட்ட கொடுமையும் நடந்தது.
மணிரத்னம் படங்களையெல்லாம் வெளியான உடன் பார்த்துவிடும் பழக்கம் ஒருகாலத்தில் இருந்தது. பிறகு, எல்லாப் புகழ்பெற்ற இயக்குனர்களையும் போல creative juice காலியாகி, அவரும் மிக சுமாரான படங்களைக் கொடுக்க ஆரம்பித்ததால், அவர் படங்களைப் பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.
>> என் நண்பர் ஒருவர் என்னிடம், "மணிரத்னம் இயக்கி, மண்ணைக் கவ்விய 'காற்று வெளியிடை' சுஜாதா எழுதிய 14 நாட்கள் கதையின் அப்பட்டமான தழுவல்" என்றார்.
பிறகு படத்தைப் பார்த்து திடுக்கிட்டேன். இவ்வளவு தூரம் சுஜாதாவுடன் பழகியவர், ரோஜாவில் ஆரம்பித்து கன்னத்தில் முத்தமிட்டால் வரை சுஜாதாவிடம் வசனப் பங்களிப்பைப் பெற்றவர், 'காற்று வெளியிடை' படத்தின் ஆரம்பித்தில், சுஜாதாவின் '14 நாட்கள்' கதையைத் தழுவியது என்று போடக்கூடாதா? தமிழ் சினிமா உலகில் யாருமே விதிவிலக்கில்லாமல் நன்றிகெட்டவர்கள் தாம் என மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
14 நாட்கள் கதையின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டிராமல் கதையில் இருக்கும் விறுவிறுப்பான சம்பவங்களையம் (முறைப்படி உரிமை பெற்று) சேர்த்திருந்தால், படம் நிச்சய வெற்றி பெற்றிருக்கும். படத்தில் கார்த்தி & கோ தப்பிக்கும் காட்சிகளில் எள்ளளவு கூட விறுவிறுப்பு இல்லை. ஏனோதானோ என்றிருக்கும்.
>> விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 நல்ல படம். மறுப்பதற்கில்லை. ஆனால், கதை அப்படியே சுஜாதா எழுதிய "ஒரு நாள் மட்டும்" சிறுகதையைப் பார்த்து மிகவும் influence ஆகியிருப்பார்கள். சிறுகதையைப் படித்துவிட்டு படத்தைப் பாருங்கள். ஒற்றுமை விளங்கும்.
>> கார்த்தி நடித்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வெளிவந்த திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். வெற்றி பெற்ற இந்தப் படத்தின் கதை பெரும்பாலும் சுஜாதா எழுதிய "ஆஸ்டின் இல்லம்" கதையிலிருந்து "inspire" ஆகியிருக்க வேண்டும். இயக்குனரைக் கேட்டால் சத்தியமாக என் சொந்தக் கற்பனை என சூடம் அணைத்து சத்தியம் செய்ய (எல்லா தமிழ் இயக்குனர்களையும் போல) வாய்ப்பு இருக்கிறது.
>> நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரதீப் ரங்கநாதனின் ட்ராகன் திரைப்படக் கதை, சுஜாதா எழுதிய சிவந்த கைகள் கதையை ஒத்து இருக்கிறது என்று அறிகிறேன். இயக்குனர் சிவந்த கைகள் கதையைப் படித்து inspire ஆகி எடுத்திருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.
>> ஆர் ஜெ பாலாஜி நடிப்பில் வெளிவந்த LKG எனும் படத்தில் பல சீன்கள் சுஜாதாவின் "பதவிக்காக" நாவலின் கதையை அப்படியே ஒத்தி எடுத்தது போல இருக்கும்.
இதில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும்: ஆனந்த விகடன் விமர்சனங்களை எல்லோரும் "ஆஹா ஓஹோ" என்பார்கள், ஆனால் அதில் விமர்சனம் எழுதும் அதிபுத்திசாலிகளுக்கு குறிப்பிட்ட படம் எந்தப் படத்தின் / கதையின் தழுவல் / காப்பி என்பது கூட தெரியாமல்தான் விமர்சனம் செய்வார்கள்.
மேற்குறிப்பிட்ட படங்களில், சுஜாதாவைப் பற்றி ஒரு வார்த்தையோ அல்லது நன்றியோ எதுவுமின்றி, கதையை மட்டும் ஈவு, இரக்கமில்லாமல் காப்பி அடித்துவிட்டு, இயக்குனரின் சொந்தக் கதையைப் போல எடுக்கப்பட்ட படங்கள்.
பகிர்வுக்கு நன்றி #ராம்ஸ்ரீதர், சுஜாதா வாசகர்கள் குழு.

பிரபு ஷண்முகம் பேஸ்புக்

13 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் நலமுடன் வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. கீதாமாவின் ஜவ்வரிசி உப்புமா ஒரே வண்ணக்கலவை. நன்றாக இருக்கிறது. முத்து முத்தாக ஜவ்வரிசி ஊறி இத்தனை பொருட்களையும் சேர்த்து சாப்பிட்டால் வெகு சுவையாகத் தான் இருக்கும். ஜவ்வரிசி உடம்புக்கும் நல்லது. நன்றி கீதாமா.

    பதிலளிநீக்கு
  3. பாவம் சுஜாதா.. அவர் மனைவி சுஜாதாவும் தான். இவ்வளவையும் கண்டு பிடித்துச் சொன்னவருக்கு நன்றி.. அவர்கள் யாருக்கும் ஒரிஜினல் நினைவே இல்லையோ என்னவோ!!!. கதை இலாக்கா கதம்பங்களைத் தயாரித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. கதை, கதைக்கரு, முக்கியக் காட்சிகள் இவற்றில் எதையும் வேறொருவர் படைப்பிலிருந்து அனுமதி பெறாமலும், அவருக்குரிய நன்றியை வெளிப்படுத்தாமலும் படங்களை எடுப்பது தவறு தான். அது கண்டிக்கத்தக்கது என்பதில் சந்தேகமே இல்லை.
    ஆனால் படத்தை விமர்சனம் செய்தவர்கள் இது சுஜாதா கதையின் கரு என்று ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்பது நியாயம் இல்லை. விமர்சனம் செய்பவர்கள் படத்தைப் பார்த்து அதைப் பற்றிய தம் அபிப்ராயங்களைச் சொல்கிறார்கள் . அவர்கள் தமிழில் வெளிவந்த எல்லாவற்றையும் படித்தறிந்து அதற்கப்புறம் தான் திரைவிமர்சனம் செய்ய வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா ?

    பதிலளிநீக்கு
  5. சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜவ்வரிசி (சாபுதானா) செய்முறை பற்றிய புரிதலின் அடிப்படையில் அதற்கு ஒரு லேசான எதிர்ப்பு இருந்து வந்தது. எதனால் என்று எனக்கு இப்போது சரியாக நினைவில்லை. ஜவ்வரிசி என்பது வெறும் மாவுச்சத்து. அதில் வேறு ஏதும் நல்ல அம்சங்கள் இல்லை என்று கூட நம்பப்பட்டு வந்தது. ஆரோரூட் மாவுக்கு கூட இது போன்ற ஒரு புகழ் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் ஒரு சமயம் வாரம் ஒரு தடவை ஜவ்வரிசி கூழ் என்று தயாரித்து ருசித்துச் சாப்பிட்டு வந்த எங்கள் வீட்டில் ஜவ்வரிசி வாங்குவது அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது.

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. சாபுதானா கிச்சடி நன்றாக இருக்கிறது. செய்முறையும் , படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  8. சுஜாதாவின் கதைகள் பற்றி அவை திரைபடமாக ஆக்கப்பட்டது பற்றி எல்லாம் சொன்ன சுஜாதா வாசகர்கள் குழு. பகிர்வை படித்தேன்.

    பதிலளிநீக்கு
  9. /இன்னிக்கு என்ன ரொம்பவே "டல்" அடிக்குது பதிவு? யாருமே வரக் காணோமே? வழக்கமாக வரும் கமலா ஹரிஹரன், துரை செல்வராஜ், பானுமதி வெங்கடேஸ்வரன் திரு ராமன் போன்றோர் ஞாயிறு என்பதால் அவங்களும் லீவ் எடுத்துட்டாங்க போல./

    நேற்றைய கருத்துக்காக பதில் இன்று. எனக்கு மூன்று நாட்களாக பல் வலி பல் வலியினால் கைப்பேசியில் பதிவுகளை படிக்க கூட இயலவில்லை. உணவு உண்ண முடியவில்லை. வலிப் பொறுக்க முடியவில்லை. மருத்துவரிடம் போகவும் வழக்கமான பயம். இன்றுதான் கொஞ்சம் பரவாயில்லை. . இத்தோடு மகன்கள் குடும்பம் இரண்டு நாள்( சனி, ஞாயிறு) விடுமுறைக்கு எங்கள் வீட்டுக்கு வநதிருந்ததினால், வேலைகள் வேறு சரியாக இருந்தன.

    இரண்டு நாள் பதிவில் வந்திருந்த படங்களை பார்த்து ரசித்தேன். அரங்கன் தரிசனம் பெற்றுக் கொண்டேன். இன்றைய பதிவும் நன்றாக உள்ளது. சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் ஜவ்வரிசி உப்புமா, செய்முறை, படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது ஒரு நாள் இப்படியும் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    சுஜாதா அவர்களைப்பற்றி செய்தியையும் படித்து தெரிந்து கொண்டேன். அவருடைய கதைகள் அவர் அனுமதியின்றியும், அவருக்கு ஒரு கௌரவம் தராமலும், கையாண்டது தவறுதான் பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. ஜவ்வரிசி கிச்சடி நன்றாக உள்ளது. படங்களும் செய்முறையும் நன்று.


    சுஜாதாவின் கதைகளும் , படங்களின் விபரங்களும் கண்டோம். எப்படி எல்லாம் கதைகளை சுட்டுக் கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!