ஒரு வருட எதிர்பார்ப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு வருட எதிர்பார்ப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.2.17

பதிவர்களின் எதிர்பார்ப்புகள் - ஜனவரி எதிர்பார்ப்புகள் - நிறைவுப் பகுதி



     "ஒரு வருடத்தில் அதாவது 2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்?"

     என்ற எங்களின் கேள்விக்கு வலைப்பதிவை நண்பர்கள் பதில் சொல்லும்  நிறைவுப்பகுதியில் இன்று ஜீவி ஸார், கீதா சாம்பசிவம் மேடம், தில்லையகத்து கீதா, மிடில் க்ளாஸ் மாதவி ஆகிய பதிவர்களின் கருத்துக்களைக் காணலாம்.

     இந்தப் பகுதிக்கு பதில் அனுப்பி எங்களை கௌரவித்த அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் நன்றிகள்.



=================================================================






2018-ம்  வருட ஆரம்பத்தில் பொருளாதாரம், கலை, இலக்கியம், விஞ்ஞானம், அரசியல் இவற்றில் என்னன்ன மாற்றங்கள், முன்னேற்றங்கள் வரும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று  ‘எங்கள் பிளாக்’  திரு. ஸ்ரீராம் கேட்டிருக்கிறார்.



                      

மாற்றம் என்பது சயின்ஸ் விதி.  அந்த மாற்றத்தில் தான்  உலகின் உயிர்ப்பே இருக்கிறது.   அந்த விதி அமுலாகவில்லை என்றால்  உலகமே ஸ்தம்பித்துப்  போகும்.



இன்னொன்று.  எந்த மாற்றமும் திடீரென்று ஏற்பட்டு விடுவதில்லை.   இதற்கு அடுத்தது இது என்று அதன் வளர்ச்சிப் போக்கில் ஒரு வழிமுறை இருக்கிறது.   கருவாய் இருக்கும் குழந்தையின் முழு வளர்ச்சியும் முடிந்து வெளிவருவது போல.  முழு மாற்றத்தை  நோக்கிய இந்த படிப்படியான வளர்ச்சி இல்லாது போயின்  அது அரைகுறைப் பிரசவமாகி விடும்.   பூவிலிருந்து நேரடியாக கனி இல்லை;  பூவாகிக் காயாகிக் கனிய வேண்டும்.  



சில  அதிரடி மாற்றங்கள் திடீரென்று தோன்றிவிட்டது போல தோற்றம் கொள்ளுமே தவிர அதன் மாற்றத்திற்கான process  அதனுள்ளேயே புதைந்திருப்பது புலப்படாமல் பூகம்பம் போல சில  நேரங்களில் வெளிப்படுவதால் நமக்கு அப்படித் தோன்றுகிறது.  அந்த பூகம்பத்திற்குப்  பின்னாலும் அதைத் தொடர்ந்த மாற்றங்கள் தொடர்ந்து கொண்டிருப்பது தான் இயற்கையின் விதி. 



இந்திய பொருளாதார வளர்ச்சிப் போக்கில் பணநோட்டு இல்லாத பரிவர்த்தனை என்பதை இலக்காகக் கொண்டதின் ஆரம்பம்  தான் சில ரூபாய் நோட்டுகளின் ஒழிப்பு என்ற பெயரில் அமுலுக்கு வந்திருக்கிறது.   பணநோட்டு இல்லாத பிளாஸ்டிக் அட்டை பரிவர்த்தனைக்கு அடிப்படைக் காரணம்  மக்களின் செலாவணிகள், விற்பனைகள் அத்தனையும் கணக்குக்குள் கொண்டு வருவதற்காகத்தான்.   கணக்கில் வராத எந்த செலாவணியும்  விற்பனையும்  இல்லை என்று ஆகிவிட்டால்  எல்லா செலவுகளுக்கும் விற்பனைக்கும் ஒரு நியாயம் கிடைக்கும்.  கையூட்டு அவலங்கள் குறையும்.  பணம் தன் மதிப்பை இழக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்து நிற்க வழி ஏற்படும்.  விலைவாசிகள் ஒரு  கட்டுக்குள் வரும்.  ஆரம்பத்தில் மருந்து கசந்தாலும்  போகப்போக நீடித்த பலன் எதிர்பார்க்கலாம்.

 


இது ஆரம்ப கட்டம் தான். மாற்றங்களின் நிர்பந்தம் மேலும் மேலும் வளர்ச்சிப் போக்கில் மாறிக்கொண்டே இருக்கும் இயற்கை விதியின் செயல்பாடு ஆகையால் இந்த  பணநோட்டு  இல்லா பரிவர்த்தனை மாற்றம் இப்படி ஆரம்பித்ததே, ஆரம்பித்தவர்களை அடுத்த கட்டத்திற்கு இழுத்துச் செல்லும்.   மத்தியில் ஆளும் ஆட்சி இதை  ஆரம்பித்து வைத்தது என்றால்  அவர்கள் அடுத்த கட்டத்திற்கு இந்த ஆரம்பத்தை நகர்த்திச் செல்லாமல் இருக்க முடியாது.  அடுத்த கட்டம் எதுவாக இருக்கும் என்பது அடுத்த கேள்வி.



அடிமட்டத்தில் ஆரம்பித்த கணக்கில் வராததை கணக்கெடுக்கும் ஆரம்பம் கொஞ்சம் கொஞ்சமாக மேல் மட்டத்தை நோக்கி நகராமல் இருக்க முடியாது.  நகரவில்லை என்றால் ஆரம்பமானதின் காலகட்ட கட்டாயம்,   ஆரம்பித்தவர்களைத் தவிர்த்து விட்டு இதை மேலும் நகர்த்தக் கூடிய திறமைசாலி யார் என்று தேர்ந்தெடுத்து அவர் கையில் மேல் நோக்கி நகர்த்த வேண்டிய கட்டாயத்தின் சாவியை ஒப்படைக்கும்.



எந்த மாற்றங்களும் எந்த ஒரு தனிநபராலும் ஏற்படுவதில்லை.   மாற்றங்கள் இயற்கையானது.   மாற்றங்களுக்கான தேவைகள் திறமையான தனி நபர்களை உபயோகித்துக் கொண்டு அடுத்த அடுத்த மாற்றங்களை நிகழ்த்திக்  கொண்டு முன்னேறுகிறது என்பதே உள்ளார்ந்த உண்மை. அதனாலேயே அவை நிகழ்வதற்கு கருவியாக உபயோகப்படும் நபர்கள் தாம் நமக்குத் தெரிவதால் அவர்கள் சரித்திர புருஷர்களாகின்றனர்.  மஹாத்மாவிலிருந்து இன்றைய பிரதமர்  மோடி  வரை இந்தக் கதை தான்.  


பிரிட்டிஷார்  அடக்குமுறை நுகத்தடியின் கீழ் சிக்கித் தவித்த அவலச் சூழ்நிலைகளும்,  விடுதலை தாகமும்,  மாற்றத்திற்கான தேவையும் தான்  மஹாத்மா என்ற மா மனிதரை உருவாக்கியது.    மன்னர்கள் ஆண்ட சமஸ்தானங்கள் சுதந்திர இந்தியாவுடன் இணைய வேண்டிய காலக் கட்டாய சூழ்நிலையில் வல்லபாய் படேலின் ஆற்றலை காலம் உயபோகித்துக் கொண்டது.    தனியார் வசமிருந்த  வங்கிகள் தேசிய மயமாதலின் போதும்,  மன்னர் மானியங்கள் ஒழிக்கப்பட்டப் போதும் இந்திரா காந்தி அம்மையாரின் தீரத்தையும் விவேகத்தையும் காலம் மிகச் சரியாக கணித்து செயல்படுத்திக் கொண்டது.  கள்ளப் பணமும் கறுப்புப்  பணமும்  குவிந்து நாட்டின் பொருளாதார சுதந்திரத்திற்கு சவால் விடுகிற அவலச் சூழ்நிலையில்  காலம் இன்றைய பிரதமரை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.



ஆக, அடுத்த அடுத்த மாற்றங்களின் நகர்வுகளுக்காக  இந்த சரித்திர நாயகர்கள் செயல்படுவது காலத்தின்  கட்டாயம்.  இவர் இல்லை என்றால் இன்னொருர் இந்த காலத்தின் கட்டாயத்திற்கு உபயோகப்பட்டு  சரித்திர நாயகரின் மகுடத்தைச் சூட்டிக்கொள்வார் என்பதே வரலாற்றின் படிப்பினையாகிப் போன நிதர்சனம்.


இந்திரா காந்தி அம்மையார் வங்கிகளை தேசிய மயமாக்கியதும்,  ராஜிவ் காந்தி தொலைத்தொடர்புத் துறையில் அதன் வேகப்பாய்ச்சலுக்காக விதைகளை ஊன்றியதும்  அது அதன் வளர்ச்சிப் போக்கில் மலர்ச்சி கொண்டு இன்றைய  கட்டத்தில் பணமில்லா பரிவர்த்தனைக்கு அடித்தளமாகியிருக்கிறது.   எதற்காக நகரின் பகுதிக்கு பகுதி கிளைகளைக் கொண்டிருக்கும் வங்கிகள் இருக்கின்றனவோ,   எதற்காக சாதாரண லேண்ட் லைன் தொலைபேசி, ஸ்மார்ட் போன் உபயோகம் வரை வளர்ந்திருக்கிறதோ,  அந்த வளர்ச்சிப் போக்கை உபயோகப்படுத்திக் கொள்ளும்  காலத்தின் கட்டாயமாக பிரதமர் மோடி அவர்களின் செயல்பாடுகளை ஒரே நேர்கோட்டில் பார்க்க வேண்டும்.  அப்படிப் பார்த்தால்  கனிந்து வரும் இன்றைய பொருளாதார மாற்றங்களின் சூட்சுமத்தை ஓரளவு உணரலாம்.  

ஒரு நாட்டின் தனித்த பொருளாதார வளர்ச்சி என்று பேச முடியாத காலம் இது.   எந்த ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி,  வலிமை, நலிவு எல்லாமே உலகப் பொருளாதார எழுச்சியையும் வீட்சியையும் ஒட்டியிருக்கிறது.   உலக நாடுகள் அத்தனையும் பொருளாதார மாயச் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கின்றன.   அந்த பிணைப்பிற்கேற்ப போட்டி போட்டுக் கொண்டு வளர வேண்டிய சூழ்நிலை  இயற்கையான தேவையாக உருவாகியிருக்கிறது.   

இந்தியா போன்ற தேசத்தில் எந்த மாற்றத்தின்  பலனும் சாதாரண மக்களுக்கு நன்மைகள் பயக்குமெனில் அந்த மாற்றம் அவர்களின் ஆசை அபிலாஷைகளையும் உள்ளடக்கிக் கொண்டு மேலும் மேலும் வளர்ச்சிப் போக்கில் வேகமெடுக்கும்.  . 

ஏற்ற தாழ்வுகளும் பொருளாதார சிக்கல்களும் நிறைந்த நாட்டில் தனி நபர் வழிபாடுகளைக் குறைத்துக் கொண்டு காலத்தின் கட்டாயத்திற்கு செயல்படும் சரித்திர நிகழ்வுகளை இனம் கண்டு   கவனம் சிதறாது நோக்கமே குறிக்கோளாக மாறிப் போனால்            மாற்றங்களின் வேகம் பூரணத்தை நோக்கி விரையும்.

பூரணம் என்று எதுவுமில்லாமல் அதுவும் அதற்கு அடுத்த மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய நிர்பந்தம் தான் சரித்திர விசித்திரம்.

ஆக,  2016 இறுதியில்  துவங்கிய  பணமில்லா பரிவர்த்தனைக்கான  ஆரம்ப முயற்சிகளின் நீட்சிப் போக்கு  2017-லும் தொடரும்.   அப்படித் தொடர்வதற்கான பலன்கள்  சாதாரண மக்களை சென்றடைந்தால்,  அதன்  வளர்ச்சி வேகத்தை அவர்கள் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள்..

அடுத்தது  இலக்கியம்.

எது இலக்கியம் என்பது ரொம்பவும் சிக்கலான கேள்வி.  

அதனால் அந்த  சிக்கலில் தலை  கொடுக்காமல்,   எதெல்லாம் இலக்கியம் என்று நாம் பாமரத்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறோமோ அவற்றிலிருந்து ஆரம்பிப்போம்.  ஒட்டு மொத்த இந்தியாவின் முகமே தமிழகம் இல்லை என்றாலும்  நாம் நம்பிக்கொண்டிருக்கிற இலக்கிய வளர்ச்சியில் இங்கு என்ன நடக்கிறது என்பதைப்  பார்ப்போம்.  

ரொம்ப காலமாக தமிழகத்தில் வெளிவரும் நாலைந்து பத்திரிகைகள் தாம்  நாவல்கள்,  சிறுகதைகள் போன்ற இலக்கிய முயற்சிகளுக்கு காவலர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டிருந்திருக்கின்றன.     இந்தப் பத்திரிகைகளில் வெளிவந்த  தொடர்கதைகள் தாம்  புத்தக ஆக்கம் கொண்டு நாவல்களாக நமக்கு தோற்றம் காட்டியிருக்கின்றன.    இந்தப் பத்திரிகைகளில் எழுதி நமக்குத் தெரிந்தவர்கள் தான் எழுத்தாளர்களாக  நம் மனசில் பதிந்திருக்கிறார்கள்.  கல்கியிலிருந்து இன்றைய சுபா,  இந்திரா செளந்திர ராஜன் வரை.

தமிழ்ச்செல்வன்,  வேல. இராமமூர்த்தி,  பாரதிபாலன்,  சிவகாமி,  தேவ காந்தன்,   பூமணி,  கந்தர்வன்,  சோலை சுந்தரபெருமாள்,  இரா. நடராஜன் என்று வெகு ஜன  பத்திரிகை  வெளிச்சத்தில்  முகம் அறியாதவர்கள் நிறையப் பேர் நிறைய   மக்கள்    இலக்கியத்திற்கான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

இவர்கள் பொதுவாக சிறுபத்திரிகைகளுக்குச் சொந்தமானவர்கள்.   தமிழகத்தின் தலைவிதி  சிறு முதலீட்டில்  வெகுவான சிரமங்களை மேற்கொண்டு இலக்கிய தாகங்களுக்காக வெளிவந்து  பொருளாதார இடர்பாடு வேள்வியில் மாய்ந்து போன சிறுபத்திரிகைகள் ஏராளம்.

அந்த ஏராளத்தில் ஏகப்பட்டதை சாதித்தவர்களின் சாதனைகளெல்லாம்  பெரியதொரு   வாசகர் வட்டத்திற்கு அறிமுகமாகமலேயே போய்விட்டன.  கல்கி பத்திரிகை சீராட்டவே  மேலாண்மை பொன்னுச்சாமியைக் கூட  நமக்குத் தெரியும்..








இதே கல்கி பத்திரிகையில்  சமீப இதழ் ஒன்றில் சாரு நிவேதிதா  எழுத்தாளர் பா.வெங்கடேசனின் ‘பாகிரதியின் மதியம்’  படைப்பைப் பற்றிச் சொல்லி   பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் செரித்துக் கொண்டு போகும் நாவல் இது என்று குறிப்பிடுகிறார்.   கடந்த பத்தாண்டுகளில் இது போல் ஒன்றிரண்டு நாவல்களையே சுட்டிக் காட்ட இயல்கிறது என்கிறார்.   இன்றைய நிலையில் கூட வெகுதிரள் பத்திரிகைகள் வெளியிட்டு அடையாளம் காட்டப்படாததால் இப்படிப்பட்ட ஆகச்சிறந்த எழுத்துக்கள் எல்லாம்  பரந்த வாசகர் வட்டம் அறியப்படாமலேயே போயிருக்கிறது.  சொல்லப்போனால்  ஜெமோவும்,  சாருவும்   சமீப காலமாகத்  தான் தமிழகத்து இந்த  நாலைந்து பத்திரிகைகளில்  காணக்கிடைக்கிறார்கள்.    அவர்களுக்கும்  கட்டுரைகள்,  பத்தி எழுத்துக்கள் என்று தான் இடம் கிடைத்திருக்கிறதே தவிர  சிறுகதை, தொடர்கதை என்று  ஆஸ்தான எல்லைக்குள்  உள்ளடக்கப்படவில்லை.    

தனித்த விஷயத்  தெளிவுள்ள வாசகர் வட்டம்  தமிழகத்தின் இந்த நாலைந்து பத்திரிகைகளைச் சீந்தவேயில்லை என்பது இன்னொரு பக்க  உண்மை.   ஜெயமோகனைக் கேட்டால்  தொடர்கதைகளெல்லாம் நாவல்களே  அல்ல என்று  ஒரே போடாகப்  போட்டு விடுவார்.

இந்த நாலைந்து பத்திரிகைகளுக்கும்  சினிமா, அரசியல் என்று  மாய்ந்து மாய்ந்து எழுதவே பக்கங்கள் போதவில்லை.   தொடர்கதை,  சிறுகதையெல்லாம்  தொட்டுக்கொள்ள ஊறுகாய்கள்.    எந்தப்  பகுதி வாசகர்களையும் விட்டு விடக்கூடாது பாருங்கள், அதற்காக  நவீன இலக்கிய  தொடர்புள்ளவர்களுடம் பாலம் போட  சாருவும் ஜெமோவும்.

‘கேட்டால்  சிறுகதை,  தொடர்கதையெல்லாம் யார் சார் படிக்கிறார்கள்?’   என்று நம்மையே திருப்பிக் கேட்பார்கள்.  புத்தகப் பதிப்பாளர்கள் கூட  சிறுகதைத் தொகுப்பு,  நாவல் என்றால் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள்.   மொத்தத்தில் தமிழகத்தில் படைப்பிலக்கியம் என்பது அருகிப் போன காலம் இது. 

என்றைக்கு சகல பகுதி பத்திரிகை வாசகர்களும் ஒருமனதாக விரும்புவது வாசிப்பது சினிமாவும், அரசியல் செய்திகளும் தாம் என்று இந்தப் பத்திரிகைகள் முடிவெடுத்து விட்டனவோ  அப்பொழுது  2017-ம்  இப்படியேத் தான் போகும்.

ஆதி காலத்திலிருந்தே இங்கு வாரப் பத்திரிகைகள் தாம் வாசிப்போருக்கு  நெருக்கமான ஒன்று.   வாசிப்புப் பழக்கமுள்ள குடும்பங்களில்  ஏதாவது ஒரு வார இதழை வாங்குவதையும்  எந்த வேலையும் இல்லாத நேரம் கிடைக்கும் ஒரு நேரத்தில் அதை அனிச்சையாக புரட்டிப் பார்த்து  விசிறி அடிப்பதையும் பரவலாக நீங்கள் பார்க்கலாம்.    அந்தக் காலத்தில்  வாரப்பத்திரிகைகளை மடியாமல்,  கசங்காமல் மேஜை மீது வைத்திருப்பார்கள்.   பத்திரிகைகளில் வரும் பிடித்தமான நல்ல பகுதிகளைக்  கிழித்து பைண்ட் செய்து வைத்திருப்பார்கள்.  பல வாசகர்களின் வீட்டு நூல் நிலையம் என்பது அந்த பைண்டிங்  சேமிப்புகள் தாம்.

தனியாக வெளியிடப்படும்  புத்தகங்களில் இலக்கியம்  படைக்கப்படவில்லையா என்று இன்னொரு கேள்வி பாக்கியிருக்கிறது.   புத்தகங்களின்  அடக்க விலை  எளிய வாசகர்களின் கைக்கு எட்டாத விஷயம்.  மலிவுப் பதிப்பு கூட  பொன்னியின் செல்வனைத் தான் போடுவார்கள்.  அதனால் இலக்கிய வளர்ச்சிப் போக்கில் ஏதாவது மாற்றம் தென்படுகிறதா என்றால் பதில் சொல்லக் கூட முடியாமல் விக்கித்து நிற்கிறோம்.

அதனால்  2017-ம்  பத்திரிகை,  இலக்கியம்  என்று எடுத்துக் கொண்டால்  மண் தேய்ந்து போன இதே வண்டிப் பாதை தான். 




==================================================



கலை பற்றி அதிகம் சொல்லத் தெரியலை என்றாலும் மறைந்து கொண்டிருக்கும் பல கலைகளும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். முக்கியமாய் நாதஸ்வரம். தமிழ்நாட்டிலேயே இன்று நாதஸ்வரம் முக்கியத்துவம் பெறுவதில்லை. அதற்குப் பதிலாகச் செண்டை மேளம் போன்றவை இடம் பெறுகின்றன. இவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது தான். ஆனால் தமிழ்நாட்டுக் கலைக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் இருக்கணுமே! 

அடுத்து இளைஞர்களிடம் சினிமா மோகம் குறையணும். அதன் மூலமாவது தமிழ்நாட்டு அரசியலில் ஓர் மாற்றம் ஏற்படணும். மற்றபடி அரசு கொடுக்கும் இலவசங்களை எதிர்பார்க்காமல் மக்கள் சுயமாகச் சம்பாதித்து எதையும் வாங்கிக்கணும்னு முடிவு கட்டணும். டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூடணும். மக்கள் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேற்றப் பாதையில் நாடு செல்ல மக்கள் ஒத்துழைக்கணும். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலனே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஆட்சியாளர்களுக்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். 

நாடு முழுவதும் பொதுவான கல்வித் திட்டமும், பள்ளிகள் திறக்கும் நாளும் நாடு முழுவதும் ஒன்று போல் இருக்க வேண்டும். மொழிப் பிரச்னை, சீதோஷ்ணப் பிரச்னை என்று இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக இது நடைமுறைக்குக் கொண்டு வரணும். ஆரம்பகால இடையூறுகள் நேரும்; நேரலாம். அதை எதிர்கொள்ள மனப்பக்குவம் மக்களுக்கு வரவேண்டும். தமிழ்நாட்டின் தலையாய பிரச்னையான தண்ணீர்ப் பிரச்னை தீர வேண்டும். முக்கியமாய்க் காவிரிப் பிரச்னை!  இன்னும் இருக்கு. நீளமாப் போயிடும்.




==================================================================

தில்லையகத்து கீதா ரெங்கன்  :





முதலில் எங்களுக்கும் இதனை அனுப்பி எங்கள் கருத்தையும் கேட்டதற்கு எங்கள் ப்ளாகிற்கு மிக்க நன்றி. துளசி தற்போது விடுமுறையில் வீட்டில் இருப்பதால் தன்னால் இதில் பங்குபெற முடியவில்லை என்று தனது வருத்தத்தை எங்கள் ப்ளாகிற்குத் தெரிவிக்கச் சொல்லிவிட்டு, இந்தச் சின்ன தலையில், அதுவும் மூளையைத் தொலைத்துவிட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் என் தலையில் பெரும் பாரத்தைச் சுமத்திவிட்டுத் தப்பித்துவிட்டார்!!!!


அரசியல் பற்றியோ, பொருளாதாரம் பற்றியோ அடுத்து என்ன நடக்கும், நடக்கலாம் என்று எனக்குக் கணித்துச் சொல்லத் தெரியாது. ஆனால், இந்நாட்டின் சாதாரணக் குடிமகன், கடைக்கோடி குடிமகனும் எதிர்பார்க்கும், விரும்பும் சிலவற்றை இங்குக் குறிப்பிடுகிறேன். எல்லாமே “டும் டும்” தான்! “க்கும், லாம்” என்று எனக்குச் சொல்லும் அளவிற்கு அறிவில்லை.


சரி! முதலில் பொருளாதாரத்திற்கு வருகிறேன். எப்போதுமே ஒரு திடீர் மாற்றம் வரும் போது மக்கள் முதலில் எதிர்ப்பார்கள்! பின்னர் அதுவே பழகிவிடும் என்பதால் அமைதியாகிவிடுவார்கள். ஆனால், பிரதமர் மோடி அறிவித்த செல்லா நோட்டுகளைப் பற்றிய அறிவிப்பிற்கு அவ்வளவாக எதிர்ப்பில்லை. காரணம் எல்லோருமே விரும்பிய கறுப்புப் பண ஒழிப்பு. துபாயிலிருந்து புழங்கும் ஹவாலா பணம், கறுப்புப் பணம், மற்றும் கிழக்காசிய நாடுகளில் கேரளத்தவர் அதிகம் வேலைபார்ப்பதால் வரும் பணத்தின் முதலீடும் அதிகம் உள்ள கேரளத்தில் இதனால் சற்று பாதிப்பு அதிகம்தான். நடைமுறையில் வரும் சிக்கல்களை ஆராயாமல் எடுக்கப்பட்ட முடிவு. அதில் சில சிக்கல்கள் எழுந்து எதிர்க்காத மாநிலங்களிலும் சாமானியர்களையும் பாதிக்கும் அளவிற்கு வந்திருப்பதால் அவரது முடிவில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க இயலாது.


ஆனால், இந்தச் செல்லா நோட்டை அறிவிக்கும் முன் ஸ்விஸ் வங்கியில் பதுங்கியிருக்கும் பணத்தை மீட்டெடுப்பேன் என்றதை அவர் நிறைவேற்றியிருக்க வேண்டும். எதையோ சாதிக்க நினைத்து சாமானியர்களையும், சிறு தொழில்களையும் பாதித்த இந்த முடிவிற்கு முன் அவர் பெருந்தலைகளின் ஊழல் பணத்தை வெளியில் கொண்டுவந்திருக்க வேண்டும். விஜய் மால்யாவை கோர்ட்டில் நிறுத்தியிருக்க வேண்டும்.  2 ஜி ஊழல் இதற்கு முன் வெளியில் வந்து யார் என்ன ஊழல் செய்திருக்கிறார்கள் என்று வெளியில் வரவில்லையா என்ன? அவர்கள் சில நாட்களேனும் சிறையில் இருக்கவில்லையா என்ன…அப்படியிருக்க விஜய் மால்யாவை முதலில் நாட்டிற்குள் மக்கள் முன் நிறுத்தியிருக்க வேண்டும். பெரிய முதலைகளின் பணத்தை வெளியில் கொண்டுவந்திருக்க வேண்டும். லாக் செய்திருக்க வேண்டும். ஊழலை ஒழிப்பேன் என்றால் அந்த ஊழல் சாமானியர்களிடம் இல்லையே. பெரிய இடத்தில்தானே இருக்கிறது. இதை எல்லாம் செய்ய முடியாத நிலை என்றால் பிரதமர், முதல் குடிமகன், எல்லா நாற்காலிகளும் வேஸ்ட். அவர்களால் முடியவில்லை என்றால் அட்லீஸ்ட், மீசையை முறுக்கி அறுவாளோடு திரியும் கில்லர்ஜியையோ, அரசியலை அக்கு வேறு ஆணி வேராக பீலாய்ந்து அவர்களுக்குச் சாணக்கியத் தந்திர ஐடியாக்களைக் கொடுக்கும் மதுரைத் தமிழனையாவது கன்ஸல்ட் செய்திருக்கலாம்.


அவர் சொல்லும் கேஷ்லெஸ் பொருளாதாரம் என்பது மிகவும் நல்ல தீர்வு. அதாவது எல்லாவித பண வர்த்தகமும் கணக்கில் வர வேண்டும் என்பதே. ஆனால், நம் நாட்டில் அதை எப்படி அவர் நடைமுறைப்படுத்துவார் என்பது கேள்விக்குறிதான்.
அப்படி வந்தால் எல்லோருமே அட்டை வைத்துக் கொள்ள வேண்டும். தினக் கூலி வேலை செய்யும் ஏழைமக்கள் உட்பட. கேஷ் லெஸ் என்றால் மினிமம் எவ்வளவு என்பது பற்றிய விவாதம் எழத்தான் செய்யும். அமெரிக்காவில் ஒரு டாலருக்கும் தேய்க்கலாம். இவை எல்லாம் நன்றாக ஆராய்ந்த பின் நடைமுறைப்படுத்த வேண்டும். இப்போது நல்ல விஷயங்கள் சில பேசப்படுவது தெரிகிறது. அப்படி நடந்தால்……நல்லதே. வரவேற்போம்…


அதாவது விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் ஒவ்வொரு ஐந்தாட்டுத் திட்டத்திலும் பேசப்பட்டாலும் நடைமுறையில் அதற்கான முக்கியத்துவம் கானல் நீர்தான்.  நடுவண் அரசு தொழில்நுட்பத்திற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில், விவசாயத் துறையிலும் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதே சமயம், காந்தியின் பொருளாதாரத்தையும் உட்படுத்த வேண்டும் அப்போதுதான் கிராமங்கள் உயிர்த்தெழும் உழவர்களுக்குச் சில சலுகைகள் வழங்கப்படும் என்று சொல்லுவதோடு நிறுத்தாமல் எல்லாம் ஒழுங்காகச் சென்றடைகின்றதா என்பதையும் மேற்கொள்ள வேண்டும்.


இந்த நேரத்தில் நிச்சயமாக காந்தியின் பொருளாதாரம் மிகவும் பயன்படும். கிராமத்து மக்கள் நகரங்களை நோக்கி நகர நகர அது ஒரு நாட்டின் வளர்ச்சியை நிச்சயமாகப் பாதிக்கும். விவசாயமும், கால்நடைத்துறையும் வளர்ந்தால் ஒரு நாட்டின் வளர்ச்சி பெருகும் என்பது மறுக்க முடியாத உண்மை. (மோடி குஜராத்தி, காந்தி குஜராத்தி, நீயும் குஜராத்தியா என்று கேட்டு வாட்சப்பில் சுற்றி வராமல் இருந்தால் சரி ஹிஹிஹிஹிஹி!!) விவசாயத்தையும், கால்நடைத் துறையையும் வளர்க்க தொழில்நுட்பத்தைப் புகுத்துகிறேன் என்று ஒழிக்க வேண்டிய ஆன்லைன் வர்த்தகத்தையும், இடைத்தரகர்களையும், மேலும் புகுத்தி ஏழைக் குடியானவர்களிடமிருந்துப் பறிக்கப்பட்டு பெரிய முதலைகளின் கையில் இவை சிக்கிவிடாமல் இருக்க வேண்டும். உழவர்களுக்கு அவர்களது உழைப்பிற்கான, விளைச்சலுக்கான இலாபம் சென்றடைய வேண்டும். உழவர்களே நேரடியாகச் சந்தையில் இறங்க வேண்டும்.


விலைவாசி கட்டுப்படுத்தப்பட வேண்டும். கேஷ்லெஸ் கொண்டுவருவதென்றால், கார்டு தேய்ப்பதால் யாருக்கோ செல்லும் கமிஷன் பணம் கட் செய்யப்பட வேண்டும். பணப்புழக்கம் வேண்டும் என்றாலும், விலைவாசி ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். நியாயவிலைக் கடைகள் பெருக வேண்டும், நியாயமாக நடத்தப்பட வேண்டும். ஏழைக்கும் பணக்காரருக்கும் உள்ள வித்தியாசம் நீங்க வேண்டும்.


ஒரு நாட்டின் முதற்கண் கல்வி. அந்தக் கல்வி நாடு முழுவதும் எந்தவிதப் பாரபட்சமும் இன்றி அமைய வேண்டும். ஏழை பணக்கார வித்தியாசம் இருக்கக் கூடாது. தொடக்கக் கல்விமுதல் எல்லாமே அரசின் கீழ் வர வேண்டும். விஞ்ஞான ஆராய்ச்சிகளும், ஆராய்ச்சிக் கூடங்கள் பெருக வேண்டும். விளையாட்டு மைதானங்கள் இல்லாத கல்விக் கூடங்களை முதலில் மூட வேண்டும். அதே போன்று ஆய்வுக் கூடங்கள் இல்லாத பள்ளிகள், கல்லூரிகளை இழுத்து மூட வேண்டும். கல்வியில் தனியார் கூடாது, டொனேஷன் கூடாது. அரசின் கீழ் வந்துவிட்டால் இவை எல்லாம் ஒழிந்துவிடும். கல்வித் துறையில் பினாமிக்கள், ஊழல் ஒழிய வேண்டும். எந்த “த்துவமும், யிசமும்” இல்லாத ஆட்சியாக இருக்க வேண்டும்


அதே போன்று பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமும் அரசின் கீழ் வர வேண்டும். எல்லோருக்கும் மருத்துவம் நல்ல முறையில் கிடைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும் அவையும் கட்டுப்பாடு, கண்காணிப்பிற்குள் இருக்க வேண்டும். பெட்ரோல் விலை குறைய வேண்டும். கச்சா எண்ணையின் விலை குறைந்தாலும் நம்மூரில் மட்டும் அதன் விலை குறைவதே இல்லை. பன்னாட்டுச் சந்தையில் நம் பணத்தின் மதிப்பு உயர வேண்டும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்


இலக்கியம், கலை உலகம் இதிலெல்லாம் என்ன மாற்றங்கள் வரும் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் தொழில்நுட்பம் பெருகிவருவதால், எல்லாமே அதீதமாகத் தொழில்நுட்பம் சார்ந்து வளர்ந்து வரத்தான் செய்கிறது. இனியும் வளரும் என்பதில் ஐயமில்லை.  இளைய சமுதாயம் பயன் பெரும். சினிமா துறையில் இளைஞரகள் பலர் இறங்குவதால், தொழில்நுட்ப ரீதியாகப் பல வளர்ச்சிகள் வந்துள்ளன. இனியும் உகலத் தரத்திற்கு இணையாக வரும் வாய்ப்புகள் உண்டு. பாடல்கள் தொழில்நுட்ப ரீதியாக நல்ல முன்னேற்றத்துடன் வரலாம்...ஆனால் தரம் பற்றிச் சொல்லத் தெரியவில்லை..


இலக்கிய உலகில் வாசிப்பு குறைந்து வருகிறது. மக்களின் கவனம் வேறு திசையில் இருப்பதால். தொழில்நுட்பம் இலக்கிய உலகில் நன்மையையும் புகுத்தியிருக்கிறது. அதனால் சில கெட்டவையும் இருக்கிறதுதான். நன்மை என்று பார்த்தால் மியப் பெரிய நன்மை, நம்மைப் போன்றோர் எழுதுவதற்கு இந்தத் தொழில்நுட்பம் எவ்வளவு உதவுகிறது! எத்தனை பேர் எழுத முன்வந்து அவர்களது திறமைகள் வெளி வருகின்றன. வயதானோர் முதல் இளம்வயதினர் வரை பலருக்கும் இந்த வலைத்தளம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடவும் உதவி வருவதால் இன்னும் பெருகலாம். தரம்? எப்போதுமே எதுவுமே அதீதமாகும் போது, தரம் சற்றுக் குறையும்தான். நாம் நல்லது மட்டுமே பார்ப்போம்.


மக்களின் வாழ்க்கை முறை மாறிவருகிறது. பணத்தின் வரவினாலும், தொழில்நுட்பத்தினாலும், அதை நல்ல முறையில் பயன்படுத்தாமல், சமூகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இனியும் அப்படி நிகழும். ஒரு பக்கம் ஹைடெக் ஆன்மீகம், மற்றொருபக்கம் சீரழிவுகள். சமுதாயச் சீர்கேடுகள் அதிகரிக்கும் என்ற பயம் இருக்கத்தான் செய்கிறது.


அரசியலைப் பொருத்தவரை.... ஊழலற்ற, பினாமிகளற்ற, மாஃபியாக்களற்ற, சுயநலமற்ற, மக்களின் நலனை மனதில் கொண்ட ஆட்சி வேண்டும். ஃபிடெல்காஸ்ட்ரோவைப் போல் இங்கு இப்போது யாருமில்லையே! புரட்சி செய்யும் ஒரு தலைவர் வேண்டும் எனலாம். பேராசைதான்…இருந்தாலும் ஆசைப்படுவதில் தவறு இல்லையே! சுருக்கமாக மக்கள் மனதில் என்றும் நீங்காது இடம் பெறும் அளவிற்கான கேரிஸ்மாட்டிக் தலைவர், மற்றும் ஆட்சியும் அமைய வேண்டும்.


கீதா


============================================================================



2016 எம் குடும்பத்திற்கு ஒரு சிரமமான ஆண்டாகவே கழிந்தது.  மறக்க முடியாத ஆண்டாகவும்.  அடுத்த ஆண்டுக்குள்  நியாயமான அபிலாஷைகள் பூர்த்தியாக வேண்டும், எனக்கும், எமக்கும், 'எங்களு'க்கும், எல்லோருக்கும்!!


 துறைவாரியாக   தனித்தனியாக இல்லாமல் மொத்தமாக என் எதிர்பார்ப்புகளைச் சொல்லுகிறேன் -




கடந்த ஆண்டுகளின் இயற்கைச் சீற்றத்தின் போது, மனிதம் மலர்ந்ததைப் பார்த்தோம். இயற்கைச் சீற்றத்துக்கு காத்திராமல் எப்போதும் எல்லாருடனும் சுமுகமாகப் பழக வேண்டும் என ஆசை. 'வசுதைவ குடும்பகம்' - உலகமே ஒரு குடும்பம் என்ற உணர்வு மலர ஆசை.


டெக்னாலஜி வளர வளர, அதனைப் பயன்படுத்தி நாமும் முன்னேறுகிறோம். முக்கியமாக, இளைய சமுதாயம் நல்ல முறையிலே இதனைப் பயன்படுத்துகின்றனர்.   பொதுவாக இளைஞரைப் பற்றி பயந்தது போல் அல்லாமல்,  முக்கால்வாசிப் பேர் தெளிவாகவே இருக்கின்றனர்.   மிச்சமிருப்போரும் ஒருதலைக் காதல் மாயையிலிருந்து விலகி, முன்னேற்றப் பாதையில் கவனத்தை செலுத்திட ஆசை. இளைய பாரதம் எம் மகாகவி வரவேற்றதைப் போல் இருக்க ஆசை.


அடுத்த ஜனவரிக்குள் டிமானிடைஸேஷன் புண்ணியத்தில் அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்ட் கைப்பேசி முளைத்து, பயன்படுத்தவும் தெரிந்து  (கறுப்புப்) பணமில்லா பரிமாற்றத்தில் பரிமளிக்க வேண்டும் என்றும் ஆசை!


கலையும் இலக்கியமும் காலத்துக்கு ஏற்ப மாற்றத்தோடு வளரும்.  நம் மக்கள் விழிப்புடனேயே இருக்கிறார்கள் - ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் உள்ள படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.  ஊடகங்களில் சிறுமை கண்டு பொங்குகிறார்கள். இது அதோடு நின்று விடாமல் ஏதேனும் ஆக்கபூர்வமாகவும் மாற ஆசை. 


உதாரணமாக மரம் வளர்ப்பு. இலக்கியத்தில் புத்தக வடிவை விட டிஜிட்டலில் எல்லாம் மாறுகிறது.   எல்லா விஷயத்தையும் ஒரு மவுஸ் கிளிக்கில் தெரிந்து கொள்ளும் காலத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம். அதனால் எழுதுபவர்கள் அனைவரும் நாம் வரலாறு படைக்கிறோம் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட ஆசை.



====================================================================