மோகன்ஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோகன்ஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.3.16

கேட்டு வாங்கிப் போடும் கதை :: கூளம்



நண்பர், எழுத்தாளர் மோகன்ஜி யின் படைப்பு இந்த வாரம் 'கேட்டு வாங்கிப் போடும்  கதை'பகுதியில்.

நண்பர் மோகன்ஜியின் தளம் வானவில் மனிதன்.  பாசமான நண்பர்.  கவிஞர்.   கதைகள், கட்டுரைகள் எழுதுவார்.

 இந்தக் கதைக்கு ஒரு முன்னுரை போலவே கடந்த வாரம் தனது தளத்தில் விக்ரமன் ஸார் பற்றி அவர் ஒரு  பதிவை வெளியிட்டு இருக்கிறார்.   சுப்பு தாத்தா உட்பட எல்லோரும் அந்தப் படைப்பைப் படிக்க அங்கு ஆவலுடன் காத்திருக்க, அந்தப் படைப்பு இங்கு வெளியாவதில் எங்களுக்குப் பெருமை.  நன்றி மோகன்ஜி!   'கதை குறித்த உங்கள் கருத்தையும் அனுப்பிவிடுங்கள் ஜி'  என்று கேட்டிருந்தேன்.  இதோ அவரது பதிலும், அதைத் தொடர்ந்து அவர் கதையும்.

==============================================================

இந்தக் கதை குறித்த ஒரு அறிமுகம்

நலம் தானே!  ‘எங்கள்பிளாக்’ ஸ்ரீராம் என்னிடம் ஒரு கதையைஅனுப்பக் கேட்டபோது எழுத்தாளர் விக்கிரமன் சார் அவர்களிடம் ‘அமுத சுரபி’ இதழுக்காய் நான் தந்த இந்தக் கதை நினைவுக்கு வந்தது.  இதை எழுதி இருபத்து மூன்று வருடங்களாகி விட்டன. அமரர் விக்கிரமன் அவர்களிடம் எனக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. ஒரு சந்திப்பின் போது எனது கதையொன்றை தரச் சொன்னார்.  இணைத்துள்ள கதையை தந்தேன்.  கதைக்கு ‘பேப்பர் ரோஸ்ட்’ என்று தலைப்பு வைத்திருந்தேன். கதை மிக நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்.  தலைப்பை மட்டும் ‘கூளம்’ என்றோ ‘பழையன கழிதலும்’ என்றோ மாற்றிக்கொள்வதாயும் சொன்னார்.  ‘கூளம்’ நல்லா இருக்கு சார்! என்றேன்.


அந்த சமயம்,தமிழ்நாட்டை விட்டு நான் ஆந்திராவின் ஒரு மூலைக்கு மாற்றலாகி இருந்த நேரம்.. அந்தக் கதை வெளி வந்த விவரமோ, இதழோ, எதுவும் என்னிடமில்லை. கதைக்கு நான் வைத்த ‘பேப்பர் ரோஸ்ட் என்ற பெயர் ஏன் வேண்டாமென்று அவர் சொன்னார் என்பது, நீங்கள் கதையை முடிக்கும்போது உணர்வீர்கள்.


விக்கிரமன் சார் எளிமையானமனிதர்.  நான் சந்தித்த இனிமையான ஆளுமைகளில் முக்கியமானவர்.  அவரை பற்றி ஒரு அனுபவப்பகிர்வை ‘வானவில் மனிதனில்’ எழுதத் தூண்டிய ஸ்ரீராம் அவர்களுக்கு என் நன்றி!
நான் தவறாமல் ரசித்து உலாவும் வலைத்தளம் எங்கள் BLOG.  வானவில் மனிதனுடன் மிக நெருக்கமான வலைப்பின்னல் கொண்டது. அதில் இந்தக் கதை இடம்பெறுவது எனக்கு மகிழ்ச்சியே!

இனி கூளம் சிறுகதை!


 =====================================================================


கூளம் 

மோகன்ஜி



மதுரம் காலையிலேயே சபேசனை பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டாள்.  

“இன்னும் நாற்பதே நாள்.. நம்ப அம்பி அமெரிக்காவுலேயிருந்து குடும்பத்தோட இங்க வந்துடுவான். அவன் எத்தனை சாமான் செட்டோட வருவானோ?  காலம்காலமா சேத்து வச்சிருக்கேளே, பொட்டி பொட்டியா புஸ்தகமும் காகிதமுமா ...கூளம்.. கூளம்... இதையெல்லாம் உடனடியா காலி பண்ற வழியைப் பாருங்கோ.  சொல்லிட்டேன்....  இண்டு இடுக்குவிடாம அப்படி என்னத்தைதான் திணிச்சு வைப்பேளோ?  மாத்தலான  ஒவ்வொரு ஊருக்கும் உங்களோட இந்த பொக்கிஷத்தைக் கடத்தறத்துக்குள்ள எனக்கு உயிர் போய் உயிர் வரும்.. ரிட்டையர் தான் ஆயாச்சே?  இன்னுமென்ன இருக்கு? இதையெல்லாம் தலைலே கட்டி எடுத்துகிட்டா போகப் போறோம்?”


“ஏன்? ஒண்ணு பண்ணேன்... நான் போயிட்டா கட்டை, வரட்டி  வாங்க வேண்டாம். என்மேல இதையெல்லாம் குமிச்சு என்னை கரையேத்திடேன்”


“காலங்காத்தால நல்ல வார்த்தை வாயில வருதா?  வயசானா ஒரு நிதானம் வேண்டாம்?  உங்கச் செல்ல மருமக போன விசை வந்தப்போ சொன்னாளே.... ‘மாமாவுக்கு ஒரு கல்யாண மண்டப ஹால் கூட பத்தாதும்மா!’ ன்னு... என்னத்தையோ பண்ணுங்கோ..  எனக்கென்ன?  ரயிலடிக்கு வண்டி ஏத்திவிட வருவேளா இல்லே நானே போகவா?"


“வந்துத் தொலயறேன்.. நீ உன் மூட்டையக் கட்டிகிட்டு கிளம்பு.. உங்கண்ணா தந்த சீதனம்னு வத்தலும் ஊறுகாயும் வாரிக்கிட்டு வர வேண்டாம்..  ஏற்கெனவே உனக்கு பி.பி எகிறிக் கிடக்கு”


மதுரம் அப்படி எங்கு போகப் போகிறாள்?....  தன் அண்ணன் வீட்டுக்கு மூணு நாள் போய் வருவதற்குள் இந்த ஆராட்டம்..


ஸ்டேஷனுக்கு போகும்போது மதுரம் சமாதானமாகி விட்டாள். 


“டிக்கெட், பணமெல்லாம் எடுத்துகிட்டியோன்னோ?”


எழும்பூர் ரயிலடியிலிருந்து திரும்பும்போது பஸ்ஸில் மருமகளின் அங்கலாய்ப்பாய் மதுரம் சொன்னதுதான் சபேசன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. பிள்ளை வாங்கிக் கொடுத்த வீடுதான். மூன்று ரூமிலும் அலமாரிகள், லாப்ட்டுகள், கட்டிலின் கீழ் என்று அட்டைப் பெட்டி, கள்ளிப் பெட்டி என்று கட்டுக்கட்டாய் காகிதங்கள், பைல்கள், புத்தகங்கள். லேசில் ஒரு கடுதாசியை சபேசன் தூக்கி எறிந்துவிடமாட்டார்.


‘மதுரம் சொல்வதும் உண்மை தானே? .எதற்காக இவற்றையெல்லாம் சுமந்து கொண்டிருக்கிறேன்? இவற்றை வைத்துக் கொண்டு என்னதான் செய்யப் போகிறேன்? வீட்டுக்கு போனதும் பழசையெல்லாம் ஒழிக்க வேண்டியதுதான். வேறு ஒன்றும் தலை போகிற வேலையில்லை. செய்துவிட வேண்டியது தான்.’ பரபரவென்று தீர்மானமாய் மனசில் பட்டுவிட்டது.  சட்டென்று ஒரு விரக்தியும் விடுபடலும் உணர்ந்தார். 


வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஒரு முறை சுற்றிலும் நோட்டம் விட்டார். உண்மைதான். ஒரு கொடோனாகத்தான் வீட்டை  அடித்து விட்டிருக்கிறோமென்று பட்டது. அப்புறமாய்ப் பார்த்துக் கொள்ளலாம் எனும் நினைப்பு எழுமுன்னர் வேலையைத் தொடங்கிவிட வேண்டும் என்ற உத்வேகம் எழுந்தது. அதே சுருக்கில் வடக்குக்கோடி அறை லாப்டில் இருந்த அட்டை டப்பாக்களை ஸ்டூல் மேலேறி நின்றுகொண்டு கீழே இறக்கினார். பெரிய பெட்டிகள் சிலவும் இருந்தன. பால்கனிக்கு வந்து வாட்ச்மேனை கூப்பிட்டார். 

அவன் உதவியோடு பெட்டிகளனைத்தையும் இறக்கியாயிற்று. பெட்டிகளை அரைவட்டமாய் தள்ளிவிட்டு கத்தி, கத்திரிக்கோலுடன் நடுவில் அமர்ந்தார்.  


முதல் பெட்டியைப்பிரித்தார். இரண்டு கட்டுகளாய் தன் குழந்தைகளின் பள்ளிக்கூட பிராகிராஸ்கார்டுகள். அம்பி எனும் விக்னேஷ் எப்போதும் முதல் ராங்க் தான் ! இது உமாவின் கார்டு அல்லவா? எட்டாங்கிளாஸ் ‘ஏ’ பிரிவு. காலாண்டில் இருபத்தியெட்டாம் ராங்க். கணக்கில் நாற்பத்தியொன்று.... கழுதை.. லேசில் படிக்க உட்காருவாளா என்ன ? ஆனாலும் ரேங்க் கார்டில் கையெழுத்து வாங்கு முன் அவள் போடும் நாடகம் இருக்கிறதே!… தன் விரல்களில் சொடுக்கெடுத்து, அன்று மட்டும் சபேசன் குளிப்பதற்கு வெந்நீர் விளாவி,‘ நீயேன் கண்ணு இதெல்லாம் செய்யிறே?’ என்று கேட்டால், ’என் செல்ல அப்பாவுக்கு நான் செய்யாமல் வேறு யார் இதெல்லாம் செய்வாங்க என்று புஜத்தைக் கட்டிக் கொள்வதும், ஆபீஸ் செல்வதற்கு செருப்பை மாட்டிக் கொள்ளும் சமயம் ‘அப்பா..’ என்று கீழ்க்குரலில் குழைந்து பிராகிராஸ்கார்டை கையெழுத்து வாங்க நீட்டுவதும்.... 

‘என் அருமை மகளே ! நீயேன் பெரியவளானாய்? ஏன் என்னை விட்டு எங்கோ பிறந்த ஒருவனுக்காய் நாடு விட்டு நாடு போய் சமைத்துப் போட்டு,, குழந்தைகள் பெற்றுக் கொண்டு.. இங்கே வரும் சமயமெல்லாம் அவர்களைப் பற்றியே ஓயாமல் பேசிக்கொண்டு..... இந்தக் கிழவனுக்காய் உனக்கு சற்றேனும் நேரமிருக்கிறதா உமா?’


ஒரு அட்டை ஃபைலில் இருந்து விழுந்த போட்டோவைக் கண்டபோது  புன்னகை அரும்பியது... இது தானும், மதுரமும் கல்யாணமான பத்து நாட்களில் எடுத்தது.. வாசன்ஸ்டூடியோ என்ற நீல வில்லை கீழோரமாய்... 


“அம்மா சாரை நல்லா ஒட்டி நில்லுங்கம்மா”.


மதுரத்துக்குத்தான் என்ன வெட்கமும் மருட்சியும் கண்களில்??


“போறும், பொழுதுக்கும் புருஷனை ஒட்டிண்டு திரிய வேண்டாம்.. நாலு பேர் வரப்போக இருக்கிற வீடு.. ஏகாங்கி லோக ரட்சகான்னு ‘ஓ’ன்னு நிக்கிற குடும்பமில்லே இது..” 

அம்மாவின் வார்த்தைச் சாட்டை இப்போதும் காதுகளில் வீறியது. 'மதுரா.. நிறையத்தான் பட்டுட்டே..'


மனைவிக்கு தான் எதுவுமே செய்யவில்லையோ என்ற எண்ணமும், அது தந்த கழிவிரக்கமும் சபேசனுக்கு கடைவிழிகளில் கண்ணீராய் தகித்தது. மிச்ச காலமேனும் உனக்கு அனுசரணையாய் இருப்பேன் மதுரா..  மதுரா என்று மனசு அரற்ற, மீண்டும் காகித அடுக்குகளின் நடுவில் உட்கார்ந்தார்.


அடுத்த கள்ளிப்பெட்டியை தரையில் சாய்த்தார். அந்த மெலிந்திருந்த மஞ்சள் நிற ஃபைலை கண்டவுடன் சபேசனுக்கு சட்டென்று முதுகில் சொடுக்கி விட்டாற்போல் இருந்தது..  மெள்ளஃபைலைத்திறந்தார். 

முதல் காகிதமே,. ’ஏன் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்ற அலுவலக மெமோ. 

நிறுவனத்தின் சார்பில் சபேசன் இட்ட ஒரு ஒப்புதல் கையெழுத்தால் ஏற்பட்ட பத்தாயிரம் ரூபாய் நஷ்டத்திற்கு ஒழுங்கு நடவடிக்கை. தன்மேல் விசாரணை நடந்த ஒரு ஆறு மாதகாலம் தன் மனதில்  பாறாங்கல்லாய் விழுந்த மரண வேதனை. சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல்... எல்லோரும் தன்னைப் பார்த்து கைக்கொட்டி சிரிப்பது போல் குமைந்து தலைகவிழ்ந்து ஊர்ந்த நாட்கள். 

கையிலிருந்த மெமோ அந்த வேதனையின் சாசனமாய் ஓரங்கள் மடங்கிசபேசனை மீண்டும் அந்த ரணகளத்தில் தள்ளியது. குற்ற உணர்வும் பதைபதைப்பும் இருண்ட மேகமாய் சட்டென்று அவர் மேல் கவிந்தது. மறக்க முயன்றும் முடியாமல் அந்த நிகழ்வு இறுகி மனதின்ஆழத்தில் கசடாய் படிந்திருந்தது. அந்தக் கசடைக் கிளறாதவரை துக்கமில்லை. கட்டையோடு தான் அந்தக் கசடும் கரையும்..


கடைசியில் அலுவலகம் அவரை மன்னித்து விட்டது. ‘பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் இருக்கும் போது இப்படி கவனக் குறைவாக இருக்கலாமா?’ என்று அவருடைய உயரதிகாரி சாதாரணமாய்த்தான் சொன்னார்.  சபேசன்தான் தன்னையே மன்னித்துக் கொள்ளவில்லை. இனி பதவி உயர்வுக்கென முயல்வதில்லை என்ற வைராக்கியம் ஏற்பட்டு விட்டது. அலுவலகப் பொறுப்பில் தான் இருந்த நிலையிலேயே சொச்ச காலத்தையும் தள்ளினார்.


எல்லாமும் படக் காட்சிபோல் சபேசனின் மூடியிருந்த கண்களிலாடின. இந்த மெமோவை என்ன செய்வது.? தன் இடப்புறமாய் இருத்திக் கொள்ள வேண்டி வைத்த சில தாள்களோடு அதை வைத்தார். எதற்கு இந்த வடுவை இன்னும் சுமக்க வேண்டும் ? 

மெமோவை மீண்டும் கையிலெடுத்தார். இரண்டாய்க்கிழித்தார். நாலாய், பதினாறாய், நூறாய் உருத் தெரியாமல் அது துணுங்கியது. வாயருகில் அந்தக் குப்பலைக் கொண்டு வந்து வாய்குவித்து வேகமாய் ஊதினார். ஆனாலும் பலம் குன்றிய அந்த ஊதலில், அத் துணுக்குகள் பரவலாய் சிதறாமல், சபேசன் மடியிலேயே விழுந்தன. அவற்றை உதறித் தள்ளினார். 

படபடவென்று வந்தது. சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டார். எழுந்து போய் பனியன் நனைய மடமடவென்று தண்ணீரை வாயில் சரித்துக்கொண்டு மீண்டும் காகித அடுக்கல்கள் மத்தியில் அமர்ந்தார். இந்தக் காகிதங்களைக் கிழித்து எறிந்து ஒழிப்பது போல் நினைவுகளையும் ஒழிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’. 


இந்த பெட்டியோடு, அடுத்த மூன்று பெட்டிகளிலும் அலுவலகக் காகிதங்கள்.  மாதச ம்பளக் குறிப்புகள், விடுப்பு விண்ணப்பங்களின் கார்பன் காப்பிகள், பயணப்படி காகித நகல்கள், இன்னமும் ஏதேதோ அடைந்திருந்தன.


அந்த குப்பலிலிருந்து சில‘ராமபாண’ பாச்சைகள் ஓடின. அதன்வடிவத்தைப் பார்த்து அப்படியொரு பேரை அதற்கு வைத்தவன் ஒரு நல்ல ரசிகன் என்று எண்ணிக்கொண்டார்.


நிறம் பழுத்து ஏறத்தாழ மக்கியிருந்த அந்தக் காகிதங்கள் கிழிக்க லகுவாக மெத்தென்று அவர் விரல்களின் இழுப்பிற்கு கிழிபட்டன. சபேசனுக்கு இந்த அழிப்பு நாடகத்தில் ஒரு உற்சாகமோ அல்லது வெறியோ உண்டாகி கட்டுக்கட்டாக காகிதங்களை துவம்சம் செய்யலானார். 

முப்பத்தெட்டாண்டு கால அலுவலக வரலாறு.. யாருக்கு வேண்டும். தந்த சம்பளத்துக்கு பலமடங்கு உழைத்துக் கொட்டி, தின்ற உப்புக்கு பிரதி செய்தாகிவிட்டது


இது வரை ஏழெட்டு அட்டைப்பெட்டிகளில் இருந்தவை மோட்சம் பெற்றிருந்தன. இன்னமும் நிறைய இருக்கிறது. மனது மீண்டும் மாறி இன்னும் இந்தக் காகித சிலுவையை சுமக்க யத்தனிக்குமுன் இவற்றின் சுவடே இல்லாமல் அடித்துவிட வேண்டும்.. மதுரம் திரும்ப வந்து கூளம் ஒழிந்த காலியிடத்தை தன் ஆச்சர்யத்தாலும் சந்தோஷத்தாலும்நிரப்பிக்கொள்ளட்டும்.


இந்தக் கள்ளிப்பெட்டியில் இருப்பது  தினசரி மற்றும் வாரப் பத்திரிக்கைகளில் இருந்து கத்தரித்து சேமித்தவை. எளிய யோகமுறை, வேப்பிலையின் பயன்கள், குழந்தைகளுக்கு எதை எப்படி சொல்லித் தருவது?, ஆன்மீக உபதேசங்கள், ஏதேதோ கட்டுரைகள், சில கதைகள் ... எல்லாமே உதிரியாய் அடுக்கி இருந்தன. இதில் தேவையானவை என்ன.. இப்போது எதைப் படிக்கிறோம்?  எதுவுமில்லை..... 

பெட்டியோடு வேண்டாமென்று ஒதுக்கினார். 

பழைய ரீடர்ஸ் டைஜெஸ்ட் கட்டுகள், ஏதோ இலக்கிய பத்திரிக்கைகள், ராமஜெயம் எழுதின நோட்டு புத்தகங்கள்., கடிதக் கட்டுகள்,ஏதோ ஜாதகக் குறிப்பு ‘ஸ்வஸ்திஸ்ரீ நிகழும் பிரஜோத்பத்தி வருஷம் மாசி மாதம்...‘ எல்லாமும் ஒதுக்கப்பட்டன.  மூலைக்குஒதுங்கின. 


கழித்துக் கட்டும் மனவோட்டம் சபேசனை ஆட்கொண்ட பின், ஒழித்தல் வேகம் பிடித்துவிட்டது.‘இவற்றையெல்லாம் ஒரு ஆயுளுக்கும் சேர்த்து, ஏதோ ஒரு சமயம் உபயோகிக்கப் போகிறோம் என்றுதான் எல்லோருமே எல்லாவற்றையும் சேமிக்கிறார்கள். எதிர்ப்பார்த்த அந்தக் காலம் வருவதற்கு முன்னரே எல்லாமும் முடிந்து விடுகிறது.. வீண்.. எல்லாமுமே வியர்த்தம்... எதற்கும் அர்த்தமில்லை என்று எண்ணிக்கொண்டார்.


அடுத்த ஆறுமணி நேர துவந்த யுத்தத்தில், கால்கள் திமிரேறி இழுத்ததால் ஒரு முறை மட்டுமே எழுந்தார்..  ஆச்சு..  ஏறத்தாழ முடிந்து விட்டது..


இருக்கட்டும் என்று ஒதுக்கிக் கொண்டது சில பழைய போட்டோக்களும், குழந்தைகள் கிறுக்கிய சில தாள்களும்,குழந்தைகளின் கல்யாணப்பத்திரிக்கைகளும்,சில புத்தகங்கள் மட்டுமே.


அறையின் அத்தனை மூலைகளிலும் கிழிபட்ட காகிதங்களும், புத்தகங்களும், காலி பெட்டிகளும் குவிந்து கிடந்தன. வாட்ச்மேன் வேணுவிடம் பத்து ரூபாய்க் கொடுத்தால் எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போய் விடுவான்.


சபேசன் பாத்ரூமுக்குள் நுழைந்தார். சோப்பைக் கையிலெடுத்துக் குழைத்தார். கையழுக்கு சோப்பைக் கருப்பாக்கி விட்டது.. சுத்தப்படுத்தும் வஸ்துவைக் கூட அழுக்காக்க மட்டுமே முடிந்த தன் உள்ளங்கைகளை ஒரு முறை பார்த்துக் கொண்டார். கொட்டும் நீரில் கைகள் சுத்தமானது. உள்ளங்கைகள் சிவந்து பளீரிட்டது. முகத்தில் நீரை வாரிவாரி அடித்துக்கொண்டார். காசித்துண்டால் துடைத்தபடி ஹாலுக்கு வந்தார். மணி நாலாகிவிட்டது. அகோரமாய்ப் பசித்தது. மதியம் ஏதும் சாப்பிடவில்லை எனும் நினைவே அப்போதுதான் வந்தது.


சமையலறைமேடையில்சாதம்வடித்து,கத்தரிக்காய்க் கறியும், வத்தக்குழம்பும் செய்து வைத்திருந்தாள். எனினும் அதை  சாப்பிடத் தோன்றவில்லை. வெளியில் போனால் தேவலைபோல் தோன்றியது. வேட்டியை மாற்றி,சட்டையையும் மாட்டிக்கொண்டு வீட்டையும்பூட்டிக்கொண்டு லிப்டில் இறங்கினார். எதிர்ப்பட்ட வாட்ச்மேனை அரைமணி நேரம் கழித்து குப்பைகளை அகற்ற வரச் சொல்லி விட்டு மஹேந்திர விலாஸ் ஹோட்டலை நோக்கி நடந்தார். 


சட்டென்று ஒரு பெரும் காற்று வீசி மூச்சைத்திணறடித்தது. புழுதி கிளம்பியது. வீதியில் கிடந்த காகிதங்கள் காற்றில் சுழன்றன. வேட்டி நுனியை பிடித்தபடி ரோட்டோரம் இஸ்திரிவண்டியின் அருகே  ஒதுங்கி நின்றார். காற்று வெளியில் சுழன்ற காகிதங்கள் அவரைச் சுற்றி கும்மியடிப்பது போல் சபேசனுக்குதோன்றியது.. காற்று அடங்க ஹோட்டலுக்குள் நுழைந்தார்.  ஓரிருவர் மட்டும் காபி அருந்தியபடிஅமர்ந்திருந்தனர். 


“என்ன சார் வேணும்?”


“லைட்டா என்னப்பா இருக்கு?”


“போண்டா பஜ்ஜியெல்லாம் இன்னமும் அரைமணிக்காகும்.. தோசை ஐட்டங்கள் தான் இருக்கு.”


“சரி.. ஒரு பேப்பர் ரோஸ்ட்கொண்டா”


“சரி சார்..”


‘பேப்பர்’ரோஸ்ட்..  சை!!..'  சபேசன்நாக்கைக்கடித்துக்கொண்டார்.