Musicians of twentieth century லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Musicians of twentieth century லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5.11.09

சென்ற நூற்றாண்டின் இசை மேதைகள் 02






மதுரை மணி ஐயர். 
தோற்றம் 25-10-1912; மறைவு 8- 6 -1968.


இசை உலகில் அரியக்குடி, மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், மதுரை மணி அய்யர், முசிறி, ராஜரத்னம் பிள்ளை, புல்லாங்குழல் மாலி, வீணை தனம்மாள், சாம்பசிவ அய்யர் போன்றோருக்கு தனி இடம் உண்டு. ஜி. என். பி எனும் நட்சத்திரம் இந்த பட்டியலில் பிறகு வந்து சேர்ந்து பிரகாசித்தது எல்லாருக்கும் தெரியும்.


மதுரை மணி என்றால் எங்கள் குடும்பத்தினருக்கு ஒரு தனி அபிமானம் உண்டு.  மதுரை மணி பாட்டு கேட்க வேண்டும் என்று நீண்ட தூரம் நடந்து சென்று கேட்டு வந்தவர்களை எனக்குத் தெரியும்.  மணி அய்யர் பாட்டு கேட்க என்றே ரெகார்ட் பிளேயர், ரேடியோ, காசட் பிளேயர்  என்று வாங்கிக் குவித்த காலம் ஒன்று உண்டு.  



மணி அய்யரின் வாழ்க்கைக் குறிப்பைத் தேடுபவர்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ள தளத்தைச் சொடுக்கிப் பெறலாம்.


சங்கீத கலாநிதி, கான கலாதரர், இசைப் பேரறிஞர், இன்னும் எவ்வளவோ பட்டங்களுக்கு சொந்தக்காரரான இந்த மேதை, திருமண வாழ்வுக்கு தம் பெரு நோய் காரணமாகத தகுதி  பெற்றிருக்கவில்லை.  அவரது சகோதரி பிள்ளையான திரு டி வி சங்கர நாராயணனை (சங்கரநாராயணன் அவர்களின் தந்தை, திரு டி எஸ் வேம்பு ஐயர் அவர்கள், மதுரை மணி ஐயர் அவர்களுடன் பல மேடைகளில் பாடியவர்) தம் பிரதம சீடராகக் கொண்டவர் இவர்.  அதற்கு முன்பே சாவித்ரி கணேசன் என்ற பெண் சிறந்த சீடராக இருந்து அரியலூர் ரயில் விபத்தில் அகாலமரணம் எய்திவிட்டார்.  


ஸ்வரம் பாடுவதில் நிகரற்று விளங்கிய மதுரை மணி, ராக ஆலாபனைகளை தேவையானபோது  விஸ்தாரமாகப் பாடுவார்.  அந்தந்த கிருதிக்குத் தக்கவாறு சுருக்கமாகவோ, நடுத்தரமாகவோ, விவரித்தோ பாடும் திறன்  மணியின் சிறப்பு. அவரால் பிரபலம் அடைந்த கீர்த்தனைகள் ஏராளம்.  நளினகாந்தி போன்ற அப்போது அபூர்வமாக இருந்த ராகங்களை சர்வ சாதாரணமாக பாடும் திறன் அவரது சொத்து.  தமிழ் கீர்த்தனைகளுக்கு உயிர் கொடுத்து கண்ணில் நீர் வரும்படியாக நிரவல் செய்வது அவரது விசேஷ அம்சம்.  கண் தெரியாத நிலையில் அவர் எத்தனையோ பிறவி என்று நிரவல் செய்யும்போது கேட்போருக்கு மெய் சிலிர்க்கும்.  பக்க வாத்தியக்காரர்களை அரவணைத்து, ஊக்குவித்துச் செல்வது அவருக்கு கை வந்த கலை.


சங்கீத உலகில் இலவசமாகவும் கொடுத்ததை வாங்கிக்கொண்டும் கச்சேரி செய்ததில் மதுரை மணியின் ரெகார்ட் பிறரால் மீற முடியாததாகும். . சுருதி சுத்தம் அவரது பெருமையை இன்னும் கூட்டியது.


"மணி அய்யர்வாள்! போன மாசம் கல்யாணத்திலே உங்க கச்சேரி கேட்டேன். நீங்க பாடின காபி (ராகம்)  அருமை!" என்று பாராட்டிய பெரியவரிடம் "கல்யாணம்னா காபி நன்னா இல்லேன்னா ரொம்ப தப்பாயிடுமே " என்று அவர் ஜோக் அடித்ததை நான் நேரில் கேட்டு ரசித்திருக்கிறேன்.


இயலாது போன அவரது கடைசி நாட்களில், அவரை கைத் தாங்கலாக தூக்கி வந்து மேடை ஏற்றுவார்கள்.  அந்த நிலையிலும் அவர் அளித்த இசை அமுதம் அசல் தேவ லோகத்து சரக்குதான்! 


" ஒரு ஊரில் சங்கீத ரசிகர்கள்  எல்லாரையும் ஒருசேர பார்க்கவேண்டும் என்றால் அங்கு மதுரை மணி கச்சேரி நடக்கும் போது போய்ப்  பாருங்கள் " என்று கல்கி ஒருமுறை சிறப்பித்து எழுதினார்.


Age cannot wither nor custom stale his infinite variety என்று ஷேக்ஸ்பியர் வார்த்தைகளை கையாண்டு பாராட்டினார் அரவங்காடு நண்பர் ஒருவர். முக்காலும் உண்மை. முழுதும் உண்மை.


காஞ்சிப பெரியவர் கூப்பிட்ட போது, 'இன்னும் குளிக்கவில்லையே' என்று சொன்ன மதுரை மணியிடம், "உனக்கு உன் இசைதான் ஆசாரம், அனுஷ்டானம் எல்லாம். குளிக்காட்டா பரவா இல்லே." என்று சொன்னாராம் பெரியவர்.  இதை விட பெரிய பாராட்டு ஒன்று கிடைக்குமா எவருக்கும்!
K.G.Y.Raman