வியாழன், 5 நவம்பர், 2009

சென்ற நூற்றாண்டின் இசை மேதைகள் 02






மதுரை மணி ஐயர். 
தோற்றம் 25-10-1912; மறைவு 8- 6 -1968.


இசை உலகில் அரியக்குடி, மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், மதுரை மணி அய்யர், முசிறி, ராஜரத்னம் பிள்ளை, புல்லாங்குழல் மாலி, வீணை தனம்மாள், சாம்பசிவ அய்யர் போன்றோருக்கு தனி இடம் உண்டு. ஜி. என். பி எனும் நட்சத்திரம் இந்த பட்டியலில் பிறகு வந்து சேர்ந்து பிரகாசித்தது எல்லாருக்கும் தெரியும்.


மதுரை மணி என்றால் எங்கள் குடும்பத்தினருக்கு ஒரு தனி அபிமானம் உண்டு.  மதுரை மணி பாட்டு கேட்க வேண்டும் என்று நீண்ட தூரம் நடந்து சென்று கேட்டு வந்தவர்களை எனக்குத் தெரியும்.  மணி அய்யர் பாட்டு கேட்க என்றே ரெகார்ட் பிளேயர், ரேடியோ, காசட் பிளேயர்  என்று வாங்கிக் குவித்த காலம் ஒன்று உண்டு.  



மணி அய்யரின் வாழ்க்கைக் குறிப்பைத் தேடுபவர்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ள தளத்தைச் சொடுக்கிப் பெறலாம்.


சங்கீத கலாநிதி, கான கலாதரர், இசைப் பேரறிஞர், இன்னும் எவ்வளவோ பட்டங்களுக்கு சொந்தக்காரரான இந்த மேதை, திருமண வாழ்வுக்கு தம் பெரு நோய் காரணமாகத தகுதி  பெற்றிருக்கவில்லை.  அவரது சகோதரி பிள்ளையான திரு டி வி சங்கர நாராயணனை (சங்கரநாராயணன் அவர்களின் தந்தை, திரு டி எஸ் வேம்பு ஐயர் அவர்கள், மதுரை மணி ஐயர் அவர்களுடன் பல மேடைகளில் பாடியவர்) தம் பிரதம சீடராகக் கொண்டவர் இவர்.  அதற்கு முன்பே சாவித்ரி கணேசன் என்ற பெண் சிறந்த சீடராக இருந்து அரியலூர் ரயில் விபத்தில் அகாலமரணம் எய்திவிட்டார்.  


ஸ்வரம் பாடுவதில் நிகரற்று விளங்கிய மதுரை மணி, ராக ஆலாபனைகளை தேவையானபோது  விஸ்தாரமாகப் பாடுவார்.  அந்தந்த கிருதிக்குத் தக்கவாறு சுருக்கமாகவோ, நடுத்தரமாகவோ, விவரித்தோ பாடும் திறன்  மணியின் சிறப்பு. அவரால் பிரபலம் அடைந்த கீர்த்தனைகள் ஏராளம்.  நளினகாந்தி போன்ற அப்போது அபூர்வமாக இருந்த ராகங்களை சர்வ சாதாரணமாக பாடும் திறன் அவரது சொத்து.  தமிழ் கீர்த்தனைகளுக்கு உயிர் கொடுத்து கண்ணில் நீர் வரும்படியாக நிரவல் செய்வது அவரது விசேஷ அம்சம்.  கண் தெரியாத நிலையில் அவர் எத்தனையோ பிறவி என்று நிரவல் செய்யும்போது கேட்போருக்கு மெய் சிலிர்க்கும்.  பக்க வாத்தியக்காரர்களை அரவணைத்து, ஊக்குவித்துச் செல்வது அவருக்கு கை வந்த கலை.


சங்கீத உலகில் இலவசமாகவும் கொடுத்ததை வாங்கிக்கொண்டும் கச்சேரி செய்ததில் மதுரை மணியின் ரெகார்ட் பிறரால் மீற முடியாததாகும். . சுருதி சுத்தம் அவரது பெருமையை இன்னும் கூட்டியது.


"மணி அய்யர்வாள்! போன மாசம் கல்யாணத்திலே உங்க கச்சேரி கேட்டேன். நீங்க பாடின காபி (ராகம்)  அருமை!" என்று பாராட்டிய பெரியவரிடம் "கல்யாணம்னா காபி நன்னா இல்லேன்னா ரொம்ப தப்பாயிடுமே " என்று அவர் ஜோக் அடித்ததை நான் நேரில் கேட்டு ரசித்திருக்கிறேன்.


இயலாது போன அவரது கடைசி நாட்களில், அவரை கைத் தாங்கலாக தூக்கி வந்து மேடை ஏற்றுவார்கள்.  அந்த நிலையிலும் அவர் அளித்த இசை அமுதம் அசல் தேவ லோகத்து சரக்குதான்! 


" ஒரு ஊரில் சங்கீத ரசிகர்கள்  எல்லாரையும் ஒருசேர பார்க்கவேண்டும் என்றால் அங்கு மதுரை மணி கச்சேரி நடக்கும் போது போய்ப்  பாருங்கள் " என்று கல்கி ஒருமுறை சிறப்பித்து எழுதினார்.


Age cannot wither nor custom stale his infinite variety என்று ஷேக்ஸ்பியர் வார்த்தைகளை கையாண்டு பாராட்டினார் அரவங்காடு நண்பர் ஒருவர். முக்காலும் உண்மை. முழுதும் உண்மை.


காஞ்சிப பெரியவர் கூப்பிட்ட போது, 'இன்னும் குளிக்கவில்லையே' என்று சொன்ன மதுரை மணியிடம், "உனக்கு உன் இசைதான் ஆசாரம், அனுஷ்டானம் எல்லாம். குளிக்காட்டா பரவா இல்லே." என்று சொன்னாராம் பெரியவர்.  இதை விட பெரிய பாராட்டு ஒன்று கிடைக்குமா எவருக்கும்!
K.G.Y.Raman  

20 கருத்துகள்:

  1. நான் கர்நாடக சங்கீதம் ரசிக்க ஆரம்பித்ததே GNB மற்றும் மதுரை மணி ஐயர் பாடல்கள் கேட்க ஆரம்பித்த பிறகுதான்... மதுரை மணி பாடல்கள் அத்தனையுமே பிடிக்கும் என்றாலும் கந்தன் கருணை என்ற பாடல், வெள்ளைத் தாமரை பூவிலுருப்பாள், சாரசமுகி ஆகியவை ரொம்பப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  2. 'காண கண் கோடி வேண்டும்' என்று அவர் காம்போதியில் பாடியதை கேட்க காதுகள் ஒரு கோடி வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. இந்த இரண்டு இசை ஜாம்பவான்களைப் பற்றிய அருமையான தகவல்களை அடுத்தடுத்து எழுதி பழைய நினைவுகளை அழகாக இசை மீட்ட வைத்து விட்டீர்கள். நன்றி. மதுரை மணி அவர்கள் பாடிய எல்லா பாடல்களுமே அருமையாக இருக்கும். என் தந்தை, இவர் பாடிய பாடலில் ஒன்றான 'ராமனை கண்ணார' என்ற பாடலை மிகவும் விரும்பி கேட்பார். நானும் அவருடன் பல முறை இந்த பாடலை ரசித்து கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. தகவல்கள் சங்கீதமாய் இருக்கிறது.
    இவர்களை எனக்குத் தெரியவில்லை.என்றாலும் இசையில் நாட்டம் இருப்பதால் விரும்பி வாசிக்கிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  5. என் அப்பா, மாமாமார் இவர் கச்சேரியை நேரே இந்தியா சென்ற போது கேட்டதாக கூறக் கேட்டுள்ளேன். தங்கள் பதிவு தகவல் களஞ்சியமாக உள்ளது.
    இவரை இசைத்தட்டுக்களில் மாத்திரம் ரசித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  6. மதுரை மணி பாடிய நல்ல பாட்டு, எனக்குப் பிடித்த பாட்டு என்று சொல்ல ஆரம்பித்தால் அதற்கு முடிவே இருக்காது என்ற அளவுக்கு அவர் பலப் பல கீர்த்தனைகளை மிகச் சிறப்பாக பாடியவர். என்றாலும் சில ஸ்பெஷல் அயிட்டங்கள் இதோ:

    ஜாலியாக நடையழகு மிளிர்வன.
    தெலிசி ராம, நிஜ மர்மமு, ஓர ஜூபு,

    ஆழமும் அழகும்:
    இது மிகப் பெரிய லிஸ்ட். என்றாலும்: கமலாம்பாம் கல்யாணி, ஸாமஜ வரகமனா, பைரவி, தோடி காம்போதி, சங்கராபரணம் ராகங்களில் எண்ணற்ற உருப்படிகள்.

    உருக்கம்:
    திருவடி சரணம், தூக்கிய திருவடி, தாயுமானவர் பாடல், கற்பகமே கண் பாராய்.

    புதுமை:
    சாரசமுகி, சரச சாம தான, கந்தன் கருணை புரியும், வெள்ளைத் தாமரை. இங்கிலீஷ் நோட், அஷ்டக் கிரக சேர்க்கை சமயம் படிய வேயுறு தோளி பங்கன். சுதந்திரம் வந்த புதிதில் ஜயதி ஜயதி, வாழிய செந்தமிழ், இன்னும் எத்தனையோ.

    வைதேகி சகிதம் போன்ற அருமையான ஸ்லோகங்கள்.

    எதைச் சொல்ல எதை விட! அகாலமாக மரணமடைந்த இந்த மேதைக்கு ரசிகர்கள் லட்சக் கணக்கில் இன்றும் உண்டு.

    பதிலளிநீக்கு
  7. இவ்வளவு பேர் மதுரை மணி அய்யரின் தாயே யசோதாவை மறந்தது விந்தைதான்!
    அருவங்காடு என்றதும் நினைவுக்கு வருவது: இன்னும் அரை மணியில் கச்சேரி - மணி அய்யருக்கு கடுமையான ஜுரம். சபா மெம்பர்கள் சென்று 'வேணும்னா ஜெயராமனை solo வாசிக்கச் சொல்லுவோமா' என்றதும் 'ஏன் சார் என் ஒரே சந்தோஷத்தையும் கெடுக்கிறீர்கள் - நான் பத்து நிமிஷத்தில் ரெடி ஆயிடுவேன் என்று சொல்லி விட்டு வந்து பாடவும்செய்தார்.

    பதிலளிநீக்கு
  8. Mali said
    அவரின் ' கந்தா வா வா ' எவ்வளவு தடவை கேட்டாலும் அலுக்காது. அருமை சகோதரி மீனாட்சி'குறிப்பிட்டது போல என் தந்தையாருக்கும் மதுரை மணி அய்யர்,GNB இருவரும் உயிர் என் தந்தை ஒவ்வொரு கச்சேரியையும் கேட்டு வந்து
    அது பற்றி கூறுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். எங்கள் ஷெனாய் நகர் ஆர்ட்ஸ் Academy யில் மணிஅய்யர் கச்சேரி செய்ய வரும் பொழுது அவரை மேடைக்கு தூக்கிச்சென்று உட்காரவைத்த இருவரில் நான் ஒருவன் என்பதை எண்ணி பெருமை அடைகிறேன் மற்றொரு நபர் யார் தெரியுமா? மதுரை மணி அய்யரின் உடன் பாடி வந்தஇன்ஜினியரிங் படித்த இளைஞர் T. v, சங்கரநாராயணன் ( மதுரை மணி அய்யரின் 'பேர் சொல்ல வந்த அவர் மாமா பிள்ளை')

    பதிலளிநீக்கு
  9. //அவரை மேடைக்கு தூக்கிச்சென்று உட்காரவைத்த இருவரில் நான் ஒருவன் என்பதை எண்ணி பெருமை அடைகிறேன்.//

    உண்மையிலேயே இது மிகவும் பெருமைக்குரிய விஷயம்தான் மாலி அவர்களே. அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று கூட என்னால் பெருமை பட்டுக்கொள்ள முடியாது. நான் பிறக்கும் முன்பே அவர் காலம் முடிந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  10. மதுரை மணியா? GNB யா ? யார் இவர்கள் என்று கேட்பவர்களுக்கு இடையில் அவர்கள் வாழ்ந்த
    காலத்தில் நான் பிறக்கவில்லையே என்று வருந்தும்அருமை சகோதரி மீனாட்சி அவர்களே! அவர்களைப்பற்றி இவ்வளவு தூரம் தங்களை நினைக்க வைத்த பெருமை
    தங்கள் தந்தையையே சாரும்! வாழ்க அவர் பெருமை!

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் எழுதியுள்ளதை படிக்கும்போது என் மாமானாரின் கர்நாடக இசை கேட்கும் ஆர்வம் நினைவுக்கு வருகின்றது. ஒரு சின்ன ட்ரான்சிஸ்டர் வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருப்பார்.

    பதிலளிநீக்கு
  12. Mali said...


    "எங்கள் ஷெனாய் நகர் ஆர்ட்ஸ் Academy யில் மணிஅய்யர் கச்சேரி செய்ய வரும் பொழுது"

    சென்னை ஷெனாய் நகரா ?

    அங்கு உள்ள திரு.வி.கா. உயர் நிலை பள்ளியில் தான் நான் படித்தேன்

    பதிலளிநீக்கு
  13. ஆசிரியர் குழு8 நவம்பர், 2009 அன்று 7:50 PM

    ஆம் - சாய், மாலி அவர்கள் குறிப்பிட்டுள்ளது, சென்னை ஷெனாய் நகர்தான்!

    பதிலளிநீக்கு
  14. நண்பர் சாய்ராம் கோபாலன் அவர்களே!
    நானும் திரு.வி.க ஹை ஸ்கூலில் 1964 ஆம் வருடம் 11thstd . படித்தேன். என் schoolmate
    டாக்டர் மு வரதராசனாரின் பையன் பாரி.தற்பொழுது பாரி பிரபலமான டாக்டர். அந்த வருடம் நான் தமிழ் மாணவர் மன்ற தலைவனாக இருந்து ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை
    நடத்தினேன். தாங்கள் எந்த ஆண்டு அங்கு படித்தீர்கள்?
    My school name is SADASIVAM.

    பதிலளிநீக்கு
  15. MALI said...

    "நண்பர் சாய்ராம் கோபாலன் அவர்களே! நானும் திரு.வி.க ஹை ஸ்கூலில் 1964 ஆம் வருடம் 11th std படித்தேன். தாங்கள் எந்த ஆண்டு அங்கு படித்தீர்கள்?"

    ஐயோ நீங்கள் பெரும் அண்ணா.

    1964ல் பிரம்மா கொஞ்சம் கொஞ்சம் என்னை உலகுக்கு அனுப்பலாமா என்று யோசித்து என் அப்பாவின் வழியாக என் அம்மாவிடம் நீங்கள் படித்த ஒரு வருடம் கழித்து தான் சேர்ப்பித்தார் !!! நான் பிறந்ததே 1966 அண்ணா !!!

    நான் படித்தது 1976-81 வரை (ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை) ! டாக்டர் சிவாஜி பத்மநாபா சிங் பள்ளி முதல்வராக இருந்தார். 81 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் (டோடல்) மற்றும் கணக்கில் முதல் மதிப்பெண் எடுத்தேன். அது அந்தக்காலம் !! முத்தையன், டேனியல், மோகன்ராம், குமாரசுவாமி டீச்சர்கள் இருந்த காலம்.

    போன வாரம் சென்னை வந்து இருந்தபோது சண்டே பள்ளிக்கு வந்தேன். என் நண்பனின் அண்ணன் மற்றும் அவன் alumni சேர்ந்து கட்டிய கழிப்பறைக்கு நானும் பணம் கொடுத்து உதவியது எனக்கு கிடைத்த பாக்கியம். அதை போட்டோ எடுத்து வந்தேன். அதை பற்றி என் ப்ளோகில் எழுதவேண்டும்.

    உங்களை பற்றி அறிந்ததில் சந்தோஷம். சென்னைக்கு மறுபடியும் வரும்போதும் உங்களை சந்திக்க ஆவல். நானும் என் ஆருயிர் நண்பனும் திரு.வி.கா பள்ளிக்கு நிச்சயம் படையெடுப்போம். நீங்கள் அதற்கு பக்கத்தில் இருக்கும் பட்சத்தில் வருவது கஷ்டம் இல்லை.

    - சாய்ராம்

    பதிலளிநீக்கு
  16. நண்பர் சாய்ராம் கோபாலன் அவர்களே! நான் 1964 ஆம் வருடம்
    மட்டும் தான் திரு.வி.க. பள்ளியில் படித்தேன். அந்த வருடம் தான்
    ' பணிவே உருவான" டாக்டர் சிவாஜி பத்மநாப சிங் HM ஆனார் நானும் முத்தையன் மற்றும் குமாரசாமி ஆசிரியர்களிடம் படித்துள்ளேன்
    ஆனால் 'மன்றவாணன்' என்ற ஆங்கில ஆசிரியர் தான் எங்கள்
    ஹீரோ' அவர் உடை உடுத்தும் விதம், பாடம் எடுக்கும் தோரணை,
    முத்து முத்தான எழுத்துக்கள், எல்லாம் அழகோ!அழகு!
    நான் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இல் Joint secretary ஆக பணியாற்றி இரண்டுஆண்டுகளுக்கு முன்பு retire ஆனேன்.
    நானும் தங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்
    என் ID -- sada . shantha @yahoo . co. in Mobile 9444024335

    பதிலளிநீக்கு
  17. KG Gouthaman Sir

    எனக்கு "மாலி சார்" போன்ற நல்லவர்களின் நட்பை பெற்று தந்தமைக்கு நன்றி நவில்கின்றேன்.

    உலகம் சிறியது என்பது திண்ணம்.

    மாலி சார்:

    குமாரசுவாமி என்ற கணித கடவுளால் தான் கணக்கை அறவே வெறுத்த நான் 98 % out of 100 வாங்க முடிந்தது.

    இரண்டு மார்க் கம்மியாக எடுத்ததற்கு என் கணித டீச்சர் தாத்தாவிடம் திட்டு வாங்கியது வேறு விஷயம் !!

    என்னுடைய அவசர குடுக்கையால் "Sin 30 + Cos 60 " என்பதை "sin 30 + cos 30" என்றெண்ணி "1" என்று விடையை எழுதி வெளியே வந்தவுடன் தான் 100 மிஸ் செய்துவிட்டோம் என்று விளங்கியது !!

    அப்படியும் ஸ்கூல் டோடல் மற்றும் கணிதத்திலும் முதல் மார்க் !!

    என் ஆருயிர் நண்பன் "ஆனந்தன்" என்னை ஒரு நாளை போலே சைக்கிளில் டுயஷன் கொண்டு செல்வான். சைக்கிள் ஓட்டும் அளவு நான் வளரவில்லை. அதனால் அவன் தான் ஈஸ்ட் அண்ணா நகரில் இருந்து அரும்பாக்கத்தில் இருந்த குமாரசுவாமி அவர்களின் வீட்டுக்கு அழைத்து செல்வான். நான் அவனுக்கு ரொம்ப கடமைப்பட்டு இருக்கின்றேன்.

    அமெரிக்காவில் இருந்து எப்போது போனாலும் அவன் வீடு செல்லாமல் இருப்பதில்லை, அவன் வீட்டில் சாப்பிடாமல் வருவதில்லை.

    என் குடும்பத்தையே தன் குடும்பமாக நினைக்க அவனால் மட்டும் தான் முடியும்.

    ரஜினியின், குசேலன் படம் பார்த்து நானும் அவனை நினைத்து அழுதேன் அவனும் அதே போல் என்னை நினைத்து அழுது இருக்கின்றான்.

    அப்படிப்பட்ட நட்பு கிடைக்க நான் கொடுத்து வைத்து இருக்கவேண்டும்.

    அவன் சொல்லி தான் நான் திரு.வி.க. பள்ளிக்கு கழிவறை கட்ட பணம் கொடுத்து உதவ முடிந்தது.

    இதற்கு முன்பு ஒரு முறை ஒரு லட்சம் கொடுத்து திரு.வி.க மற்றும் நான் படித்த பச்சையப்பன் கல்லூரியின் ஏழை குழந்தைகளின் செலவை ஏற்றது இன்னுமொரு ஆத்மா திருப்தி.

    "என்ன கொண்டுவந்தோம் கொண்டு செல்ல"

    நாளை மற்றும் மறுநாள் நான் இங்கு அமெரிக்காவில் லோக்கலாக வெளியூர் செல்வதால் கொஞ்சம் பிஸி.

    திரும்பி நியூஜெர்சி வந்தவுடன் தொலைபேசியில் அழைக்கின்றேன்.

    - சாய்ராம் கோபாலன்

    பதிலளிநீக்கு
  18. // ரஜினியின், குசேலன் படம் பார்த்து நானும் அவனை நினைத்து அழுதேன் அவனும் அதே போல் என்னை நினைத்து அழுது இருக்கின்றான். //
    சாய் சார் - கோவிச்சுக்காதீங்க - குசேலன் படத்தை தியேட்டரில் போட்ட தியேட்டர் அதிபர்கள் - அழுததால - ரஜினி அவர்கள் அவர்களுக்கு உதவினார் என்று கேள்விப்பட்டேன். இப்போ உங்களுக்கும், உங்க நண்பருக்கும் ரஜினி அவர்கள் ஏதாவது உதவக்கூடும்!
    மத்தபடி - மாலி சார் நட்பை நான் எங்கே உங்களுக்குப் பெற்றுத் தந்தேன்? நீங்களாதானே - பெற்றுக் கொண்டீர்கள். !!! ஹி ஹி ஹி !!

    பதிலளிநீக்கு
  19. kggouthaman said...

    "சாய் சார் - கோவிச்சுக்காதீங்க - குசேலன் படத்தை தியேட்டரில் போட்ட தியேட்டர் அதிபர்கள் - அழுததால - ரஜினி அவர்கள் அவர்களுக்கு உதவினார் என்று கேள்விப்பட்டேன். இப்போ உங்களுக்கும், உங்க நண்பருக்கும் ரஜினி அவர்கள் ஏதாவது உதவக்கூடும்!"

    ஐயோ, நீங்களும் என்னை சார் - மோர் என்று கூப்பிடாதீர்கள் - நான் சின்ன பய !

    எங்கள் நட்பை நினைத்து அழுதோம் என்றேன்.

    ரஜினி உதவ வேண்டாம், இரண்டு மூன்று கதை அவருக்காக வைத்திருகிறேன் - என்னுடன் படம் பண்ண சொல்லுங்கள் !

    - சாய்ராம்

    பதிலளிநீக்கு
  20. சாய்ராம்! இரண்டு மூன்று கதைகள் திரு ரஜினிக்காகவா!
    போதாது!
    நீங்க நூறு கதை சொன்னா - அவரு ஒரு கதை எடுத்துப்பாருன்னு - நான் நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!