old memories லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
old memories லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25.5.10

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...

சுசித்ரா, சங்கர், ராஜு, ரவி, சுஜாதா...என்றும் சுறுசுறுப்புடனே..ஆரோக்கியம் கொண்ட நல்ல குடும்பம் ..



இது ஒரு பழைய விளம்பரப் பாடல்...எந்தப் பொருளுக்கு என்று தெரிகிறதா? 


இருபது, முப்பது வருடங்களுக்கு முந்தைய கோக கோலா விளம்பரம் நினைவிருக்கிறதா? "இன்பமூட்டிடும் கோக கோலா..இன்பமூட்டிடும் ஜோக். பிகினிக்கி விருந்து பார்ட்டி..யாவருக்கும் மகிழ்வூட்டி..நேசக் கரம்தனை நீட்டி...இன்பமூட்டிடும் கோக கோலா..." ஞாபகம் வருதா?

007 பனாமா ப்ளேட் மற்றும் பினாகா (பின்னர் சிபாகா) டூத்பேஸ்ட்டும் ரேடியோவில் விளம்பதாரர் நிகழ்ச்சியாக நடத்திய கீத் மாலா ரொம்பப் பிரபலம். அதிலும் பினாகா கீத் மாலா வில் ரேட்டிங்கில் ஒலிபரப்பப்பட்ட ஹிந்திப் பாடல்கள் கேட்க இரவு காத்திருப்போம்...ஓரிரு வரிகள்தான் ஒலி பரப்புவார்கள்..ஆனாலும் கேட்போம்.
***
இந்த விளம்பதாரர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவர் "உங்கள் நண்பன் L R நாராயணன்" குரல் இன்னும் நினைவில் ஒலிக்கிறது..!

சில விளம்பரங்களும், படங்களும் கீழே...நினைவிருக்கிறதா...இன்னும் விற்பனையில் இருக்கின்றனவா?

யார் வரைந்த ஓவியமோ...!


இப்போது(ம்) இவை வருகிறதா...


சபாஷ்...சரியான போட்டி..(அப்போது..!)



போட்டிக் குடும்பம்...!


வாசகர்கள், அவர்களுடைய மனம் கவர்ந்த பழைய, புதிய விளம்பரங்கள் குறித்து கருத்துகள் பதியலாம். 

3.3.10

பதின்ம வயது...தொடர் பதிவு

பதின்ம வயது...


அந்த வயதின் விசேஷங்கள் இன்று உணரப் படுவது போல் அன்று உணரப் பட்டனவா? எனக்குத் தெரியாது. நான் உணர்ந்ததில்லை. இன்று அதற்கு விசேஷ அர்த்தங்களும் கவனிப்பும் தந்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உபதேசங்கள் கிடைக்கின்றன..அன்று கவனிக்கப் படாமல் கடந்து போன நாட்கள் அவை.

என்பதாலேயே, என்னென்ன நடந்தது என்று நினைவில் கொண்டு வருவது சிரமமாயுள்ளது. நன்றி ஹேமா, எங்களை/என்னை இந்தத் தொடர் பதிவில் அழைத்ததற்கு..

சைக்கிள் ஓட்டும் அனுபவங்களை பின்னோக்கி தன் பக்கங்களில் கொஞ்ச நாள் முன்பு சொல்லியிருந்தபோது எனக்கும் அந்த நினைவுகள் வந்தன. பெரிய சைக்கிளில் கால் எட்டாது என்பதால் என் உயரமே இருந்த ஒரு சைக்கிளை எடுத்து ஓட்டி, ஓட்டி கீழே விழுந்து மெல்ல,மெல்ல சைக்கிள் பழகியது இந்தப் பருவத்தில்தான்...பழகியதும் விமானம் ஓட்டும் அனுபவத்தை விடப் பரவசப் பட்ட நினைவு...பழகும் முன் பள்ளியிலிருந்து நடந்து வரும்போது சைக்கிளில் செல்வோர் என்னை அழைத்துச் செல்ல மாட்டார்களா என்று ஏங்கி, நாம் சைக்கிள் பழகினால் நடந்து போவோரை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற லட்சியம் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டவுடன் இனிதே மறைந்தது...

நண்பர்களோடு வீட்டு வசதிக் குடியிருப்பிலிருந்து நடந்தே கிளம்பி பள்ளியை அடையும் வரை தீபாவளிக்கு/பொங்கலுக்கு பார்த்த படத்தின் கதையை சொல்லியபடியே நடந்த நாட்கள்..(கார்த்தி : "நேற்று நான் இந்தப் படத்தைப் பார்த்துட்டேன்...நீ சொன்ன இந்த சீன்ஸ் அதுல வரவில்லையே...? நான் : "கட் பண்ணியிருப்பாண்டா..") கதை விடும் உத்தி தெரிந்து கொண்ட நண்பர்கள், வீட்டு வசதிக் குடியிருப்பில் மாதம் ஒருமுறை ஓசியில் பார்க்கும், அவர்களும் பார்த்து விட்ட, படத்தின் கதையைக் கூடக் கேட்பார்கள்.

அம்மாவுக்கு திடீரென காது கேட்காமல் போன போது என்னென்ன வகையில் உதவிகள் செய்யலாம் என்று யோசித்து, யோசித்து செய்த வேலைகள்,

வெளியிலிருந்து வீடு வந்தால் காலிங் பெல் மேலே கயிறு கட்டி, அந்தக் கயிற்றின் இன்னொரு முனையில் சோடா மூடிஇணைத்து, அம்மாவின் கை மணிக் கட்டில் லூசாகக் கட்டி, ஒரு முறை இழு பட்டால் அண்ணன், இருமுறை என்றால் நான், மும்முறை என்றால் தங்கை என்று ரகசிய கோட் தயார் செய்து..

நேசித்த பெண் பின் யோசிக்க வைத்தாள். உருப்படாமல் போனதால் உண்மைக் காதல் இல்லை என்ற முடிவுக்கு வந்தது,

நூலகர் அவ்வப்போது 'ஓபி' அடித்து வெளியில் போக உதவி செய்து, 'நூலகராய்' இருந்தது, அந்த உதவியை பயன் படுத்தி...

கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தியது, கதைகள் கையாலேயே எழுதியது, பத்திரிகையில் வந்த பிரபல ஓவியர்களின் படங்களின் அவுட்டரை வரைந்து முகம் வரைந்து நூலகரின் உதவியுடன் நூலகத்தில் வைத்தது, படித்தவர்கள் கருத்தை அங்கேயே கேட்டு அடுத்த இதழில் 'பிரசுரித்தது',

மழை பெய்ய ஆயத்தமாகும் பகல் பொழுதின் கருமேக நிழல் மனதில் இனம் தெரியா பரவசம் ஒன்று ஊட்ட, சைக்கிளில் ஆளில்லா தெருக்களில் கன்னா பின்னா என்று ஓட்டி சுற்றுவது, முதல் மழைத் துளி முகத்தில் எப்போது விழும் என்று பரவச எதிர்பார்ப்பு,

நேசித்த பெண்ணின் முன் வீரம் காட்ட, சுதந்திர தின விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கபடியில் களையிழந்து வழிந்தது,

கிரிக்கெட்டில் சேர்த்துக் கொள்ளச் சொன்னபோது சேர்த்துக் கொண்ட நண்பர்கள் பந்து பொறுக்கிப் போட மட்டும் உபயோகப் படுத்திக் கொண்டது,
பதின்மங்களின் பெரும் முற்பகுதி தஞ்சையிலும், சிறு பிற்பகுதி மதுரையிலும்...

பழகிய ஊரை விட்டுப் பிரிந்த சோகத்தில் பள்ளி செல்லாமல் உருப்படாமல் போனது,

என்ன காரணம் என்றே தெரியாமல் தஞ்சையிலும் மதுரையிலும் நினைத்தாலே இனிக்கும் படத்தை திரையிட்ட நாட்கள் எல்லாம், திரையிட்ட இடங்கள் எல்லாம் பார்த்து, அத்தனை டிக்கெட்டையும் சேர்த்து வைத்தது,

வீட்டை விட்டு அவ்வப் போது ஓடிப் போகும் நண்பனின் தந்தை கோர்ட்டில் வேலை செய்ததால் எங்களை மிரட்டியே அவனை எங்களை விட்டே தேட வைத்து வீட்டில் சேர்க்க வைத்தது,

வாண்டையார் வீட்டிலும், ஜட்ஜ் வீட்டிலும் மாங்காய்கள் திருடியது, மாட்டிக் கொண்டு ஒரு பகல் பூரா மோட்டார் ரூமில் சிறை வைக்கப் பட்டது,

சலுகை விலையில் தைத்துத் தரப் படும் ஏழுமலை டெய்லரின் தொள தொள டிராயரை அணிந்து கொண்டு முதலில் கூச்சத்துடன் பின்னர் மரத்துப் போய் பள்ளி சென்று வந்தது,

ஒரு தீபாவளிக்கு திடுக்கிடும் திருப்பமாய் யாகப்பா தியேட்டர் அருகே இருந்த நவ நாகரீக 'பாரத்' டெய்லர்க் கடையில் இறுக்கமாக டிராயர்கள் தைக்க ஆரம்பித்தது,

சனிக்கிழமை காலைக்காட்சி , அருள் தியேட்டரில் லாரல் ஹார்டி படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது எட்வின், ஸ்வார்ட்ஸ் வாத்தியார்களால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிடித்துக் கொண்டு வரப் பட்டு வகுப்பில் விடப் பட்டது,

தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று முயற்சி செய்த நண்பனை காப்பாற்ற முயற்சிக்காமல் 'உண்மை நண்பனாய்' அவனுக்கு அந்த முயற்சியில் உதவியது,

சுவாரஸ்யமாய் ஒன்றும் இல்லை,

உருப்படியாயும்....

நானும் எழுதி விட்டேன் பதின்ம வயது நினைவுகள், கேட்டுக் கொள்ளப் பட்டதற்காக..

மேலும் தொடர யாரை அழைப்பது...யார் யார் எழுதி விட்டார்கள் என்றும் தெரியாததால் யார் யார் விரும்புகிறார்களோ அவர்கள் தொடரலாம்...

எங்கள் சாய்ஸ்..இதயம் பேத்துகிறது ஜவர்லால், ஆதிமனிதன், மாதவன்,

உங்கள் அனுபவங்களையும் இங்கு பகிர்ந்து கொள்ளலாம். 

17.10.09

தீபாவளி தீபாவளிதான்..

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் போல, அன்று ரிலீஸ் ஆகும் புதுப் படங்களை முதல் நாள் முதல் ஷோவே பார்ப்பது போல பழைய நினைவுகள் கிளர்ந்தெழுவதும் தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு பக்கத்திலும் அவரவர் நினைவுப் பதிவை படிக்க வேண்டியதும் அவ்வண்ணமே.....!

சில விஷயங்கள் பொதுவானவை. சில பிரத்யேகமானவை. அவரவர்க்கு அவரவர் அனுபவம்.

நினைவு தெரியாத வயதில் பெற்றோரின் கட்டாயத்துக்காக எழுந்து, கண்களில் கண்ணீருடன் எண்ணெய் தேய்த்துக் குளித்து, பயந்து பயந்து ஊசி வெடியில் தொடங்கி, பிறகு சிறிது சிறிதாக பெரியவர்களாகத் தொடங்கும் போது வெடியின் அளவும், வெடிக்கும் ஸ்டைல் மாற செய்யும் பந்தாக்களின் அளவும் கூடிக் கொண்டே போகும்.

முதலில் நம் வீட்டு வாசலில் நண்பர்கள் வெடித்தால் உரிமைப் பிரச்னையாகப் பார்க்கப் பட்டு, பிறகு குப்பை விழும் அளவில் மானப் பிரச்னை இருக்கிறது என்பதை உணரத் தொடங்கிய கால கட்டத்தில் நண்பர்களை நம் வீட்டு வாசலில் 'சேர்ந்து வெடிக்கலாம் வா' என்று சீனப் பிரதமர் போல அழைத்து வெடிக்கத் தொடங்குவோம். சூட்சுமம் புரிந்த நண்பர்கள் மாநாடு போட்டு அடுத்த தீபாவளியில் அவசரத் தீர்மானம் போட, பிறகு எல்லார் வீட்டிலும் 'சேர்ந்து வெடிப்பது' என்ற தீர்மானம் ஒருமனதாய் நிறைவேறும்!

குப்பை மானம் மலையேறும் நாளும் உண்டு. வீட்டு வாசலில் வெடி வெடித்து சற்றே சம்ப்ரதாயத்தை முடித்த உடன், சிலபல வெடிகளை பையில் திணித்துக் கொண்டு நண்பர்கள் வீடு ஒவ்வொன்றாக சென்று, ஜமா சேர்ந்து வீதி வலம் கிளம்புவோம். நண்பர்களுக்குள் சொல்லிக்கொள்ளப் படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு. நண்பர்களின் சகோதரிகளைப் பற்றி யாரும் பேச மாட்டோம். அவர்களிடம் சகஜமாக நாங்களும் சகோதர பாவத்தில்தான் பேசுவோம். ஒவ்வொரு தெருவிலும் சில வீடுகள் அருகில் நின்று எங்கள் ஜமா இளைப்பாறும். 'பேசி'க் கொண்டிருப்போம். காத்திருந்தது வீண் போகாது! அகாரியமாய் வெளிப் படும் மின்னல் தேவை இல்லாத குப்பையை வெளியே கொட்டும், அல்லது ஒரு மத்தாப்பூவோ, புஸ் வாணமோ விடும். ஜமாவில் காத்திருந்த சம்பந்தப் பட்ட நண்பன் அல்லது ஜமாவே வெடி வெடிப்பதில் லேட்டஸ்ட் பயங்கர டெக்னாலஜியை அரங்கேற்றும். அவை ஒரு சிறிய மறைமுக இதழோரக் குறுஞ்சிரிப்புடன் acknowledge செய்யப் படும்!

காசு இல்லாத காரணத்தால் கொண்டாடாத தீபாவளி ஒன்றிரெண்டு வரும். அப்போது நண்பர்கள் மத்தியில் வீட்டில் யாராவது தெரியாத அல்லது இல்லாத ஒரு உறவினர் சாகடிக்கப் படுவார். காலை எல்லார் வீட்டிலும் வெடி சத்தம் கேட்கும்போது நம் வீட்டில் செய்ய முடியாத துக்கம் வார்த்தைகளாய் வெளிப் பட்டு அப்பா, அம்மாவைத் தாக்கும். அவர்கள் எந்த மாதிரி வேதனையில் இருந்திருப்பார்கள் என்று அப்போது உணர முடியாத பருவம்.

இப்போது அவைகளை நினைத்துப் பார்க்கும்போது சுகமான சந்தோஷங்கள், சொல்ல முடியாத சோகங்கள் மனதைக் கவ்வினாலும், நம் வீட்டுக் குழந்தைகள் நாம் பெற்ற இன்பங்களை பெற வேண்டும் என்று எல்லாம் செய்யும்போது நம் நினைவுகள் பின்னோக்கிப் போவதை தடுக்க முடியவில்லை. நாங்கள் அந்தக் காலத்தில் இருந்தது ஐநூறு வீடுகளுக்கும் மேல் இருந்த வீட்டு வசதிக் குடியிருப்பு. ஆட்கள், நண்பர்கள், பொழுது போக்குகள் அதிகம். இப்போது கட்டிடக் காடுகளாகிவிட்ட (வார்த்தை உபயத்துக்கு நன்றி ஹேமா!) இந்த நாளில் என் மகன்களுக்கு பக்கத்தில் வீடுகளும் குறைவு. கவனத்தை திசை திருப்ப டிவி என்ற மிகப் பெரிய அரக்கன் இயற்கை சந்தோஷங்களை பறித்து விடுகிறது...

தீபாவளி தீபாவளிதான்...