சில விஷயங்கள் பொதுவானவை. சில பிரத்யேகமானவை. அவரவர்க்கு அவரவர் அனுபவம்.
நினைவு தெரியாத வயதில் பெற்றோரின் கட்டாயத்துக்காக எழுந்து, கண்களில் கண்ணீருடன் எண்ணெய் தேய்த்துக் குளித்து, பயந்து பயந்து ஊசி வெடியில் தொடங்கி, பிறகு சிறிது சிறிதாக பெரியவர்களாகத் தொடங்கும் போது வெடியின் அளவும், வெடிக்கும் ஸ்டைல் மாற செய்யும் பந்தாக்களின் அளவும் கூடிக் கொண்டே போகும்.
முதலில் நம் வீட்டு வாசலில் நண்பர்கள் வெடித்தால் உரிமைப் பிரச்னையாகப் பார்க்கப் பட்டு, பிறகு குப்பை விழும் அளவில் மானப் பிரச்னை இருக்கிறது என்பதை உணரத் தொடங்கிய கால கட்டத்தில் நண்பர்களை நம் வீட்டு வாசலில் 'சேர்ந்து வெடிக்கலாம் வா' என்று சீனப் பிரதமர் போல அழைத்து வெடிக்கத் தொடங்குவோம். சூட்சுமம் புரிந்த நண்பர்கள் மாநாடு போட்டு அடுத்த தீபாவளியில் அவசரத் தீர்மானம் போட, பிறகு எல்லார் வீட்டிலும் 'சேர்ந்து வெடிப்பது' என்ற தீர்மானம் ஒருமனதாய் நிறைவேறும்!
குப்பை மானம் மலையேறும் நாளும் உண்டு. வீட்டு வாசலில் வெடி வெடித்து சற்றே சம்ப்ரதாயத்தை முடித்த உடன், சிலபல வெடிகளை பையில் திணித்துக் கொண்டு நண்பர்கள் வீடு ஒவ்வொன்றாக சென்று, ஜமா சேர்ந்து வீதி வலம் கிளம்புவோம். நண்பர்களுக்குள் சொல்லிக்கொள்ளப் படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு. நண்பர்களின் சகோதரிகளைப் பற்றி யாரும் பேச மாட்டோம். அவர்களிடம் சகஜமாக நாங்களும் சகோதர பாவத்தில்தான் பேசுவோம். ஒவ்வொரு தெருவிலும் சில வீடுகள் அருகில் நின்று எங்கள் ஜமா இளைப்பாறும். 'பேசி'க் கொண்டிருப்போம். காத்திருந்தது வீண் போகாது! அகாரியமாய் வெளிப் படும் மின்னல் தேவை இல்லாத குப்பையை வெளியே கொட்டும், அல்லது ஒரு மத்தாப்பூவோ, புஸ் வாணமோ விடும். ஜமாவில் காத்திருந்த சம்பந்தப் பட்ட நண்பன் அல்லது ஜமாவே வெடி வெடிப்பதில் லேட்டஸ்ட் பயங்கர டெக்னாலஜியை அரங்கேற்றும். அவை ஒரு சிறிய மறைமுக இதழோரக் குறுஞ்சிரிப்புடன் acknowledge செய்யப் படும்!
காசு இல்லாத காரணத்தால் கொண்டாடாத தீபாவளி ஒன்றிரெண்டு வரும். அப்போது நண்பர்கள் மத்தியில் வீட்டில் யாராவது தெரியாத அல்லது இல்லாத ஒரு உறவினர் சாகடிக்கப் படுவார். காலை எல்லார் வீட்டிலும் வெடி சத்தம் கேட்கும்போது நம் வீட்டில் செய்ய முடியாத துக்கம் வார்த்தைகளாய் வெளிப் பட்டு அப்பா, அம்மாவைத் தாக்கும். அவர்கள் எந்த மாதிரி வேதனையில் இருந்திருப்பார்கள் என்று அப்போது உணர முடியாத பருவம்.
இப்போது அவைகளை நினைத்துப் பார்க்கும்போது சுகமான சந்தோஷங்கள், சொல்ல முடியாத சோகங்கள் மனதைக் கவ்வினாலும், நம் வீட்டுக் குழந்தைகள் நாம் பெற்ற இன்பங்களை பெற வேண்டும் என்று எல்லாம் செய்யும்போது நம் நினைவுகள் பின்னோக்கிப் போவதை தடுக்க முடியவில்லை. நாங்கள் அந்தக் காலத்தில் இருந்தது ஐநூறு வீடுகளுக்கும் மேல் இருந்த வீட்டு வசதிக் குடியிருப்பு. ஆட்கள், நண்பர்கள், பொழுது போக்குகள் அதிகம். இப்போது கட்டிடக் காடுகளாகிவிட்ட (வார்த்தை உபயத்துக்கு நன்றி ஹேமா!) இந்த நாளில் என் மகன்களுக்கு பக்கத்தில் வீடுகளும் குறைவு. கவனத்தை திசை திருப்ப டிவி என்ற மிகப் பெரிய அரக்கன் இயற்கை சந்தோஷங்களை பறித்து விடுகிறது...
தீபாவளி தீபாவளிதான்...
I agree. தீபாவளியின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு,உவகை: புதுப்பாவாடை சட்டை தாவணி புடவை அணிந்த உள்ளூர் தாரகைகள் தான்.
பதிலளிநீக்குசுவாரசியமான பதிவு. ரசித்துப் படித்தேன். சகோதரிகளை குறிப்பிட்டுப் பேசுவது கிடையாது என்று ஒரு எழுதா ஒப்பந்தம் அல்லது புரிந்துணர்வு என்பது தரமான மனித நேயத்தை வெளிப்படுத்துகிறது.
பதிலளிநீக்கு