16.2.11

காஃபி டெக்னாலஜி




காஃபி...
                        
நமக்கு ரொம்பப் பிடித்த விஷயம். ஆனால் நாம் அதைப் பற்றி ரொம்ப சிந்திப்பதில்லை. இருந்த ஒன்று இல்லாமல் போகும்போது இருந்ததன் அடையாளமே அப்போதுதான் உணரப்பட்டு இல்லாத குறை நன்றாகத் தெரியும். ஜீவி சார் இதைப் பற்றி எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது. அவர் பெரிய விஷயங்களுக்கு எழுதி இருந்ததை இங்கு சின்ன விஷயத்துக்கு நினைவு கூர்கிறேன்! உயிரில்லாத ஒரு விஷயத்துக்கு உபயோகப் படுத்திக் கொள்கிறேன்!
            
குடித்துக் கொண்டே இருந்து விட்டு (காஃபிதாங்க..) நடுவில் இல்லாமல் போனால் கஷ்டமாகத்தான் இருக்கும். அப்போதுதான் அதன் அருமை தெரியும்! இரண்டு நாள் முன்பு ஜவஹரின் பதிவைப் படித்ததும் நாமும் ஒரு காபி அடிக்கலாம் என்று தோன்றியது. அது அப்படித்தான்...பக்கத்திலிருப்பவர் காபி குடித்தால் நமக்கும் குடிக்க வேண்டும் என்று தோன்றும்!!
                  
தஞ்சாவூர்க்காரனாக இருந்து விட்டு நல்ல காஃபி பற்றி சொல்லா விட்டால் எப்படி..! டிகாக்க்ஷன் காபிதான் பெஸ்ட். இன்ஸ்டன்ட் காபி வேஸ்ட்.
                       
ஆனாலும் குடிக்கும் காஃபி நல்லா இருக்க வேண்டாமா...எனக்குத் தெரிந்த சில டிப்ஸ்....
                      
முதலில் ஃபில்டர்...
                
ரொம்பப் பெரிய துளைகள் இல்லாமல் சிறிய துளைகள் உள்ள ஃபில்டர் தேவை.
                          
ஈரமில்லாமல் காய்ந்து இருக்க வேண்டும். துளைகள் அடைத்துக் கொண்டு இருக்கக் கூடாது.
                    
நல்ல காஃபிப் பொடி - பழையதாக இல்லாமல் புதிதாய் - ஸ்பெஷல் கிரேடும், முதல் தரமும் கலந்து அரைத்ததாக இருக்கலாம். கொஞ்சம் சிக்கரி இருக்க வேண்டும். ஆனால் கொஞ்சம்தான். இல்லாமல் இருந்தால் காஃபியில் கனம் இருக்காது. நிறைய இருந்தால் காஃபியில் சுவை இருக்காது. (கட்டுப் படியும் ஆகாது!) அரைக் கிலோவுக்கு இருபத்தைந்து கிராம் அல்லது ஐம்பது கிராம் சிக்கரி சேர்க்கலாம்.
                         
அந்த காஃபிப் பொடியை ஃபில்டரில் போடுமுன்பு அரை ஸ்பூன் சர்க்கரையை தூவிக் கொண்டு, ஃபில்டரில் முக்கால் பாகம் வருமளவு பொடியை ஸ்பூனால் சரித்த வகையில் போட வேண்டும். ஸ்பூனால் லேசாக அதை அமுக்கி விட வேண்டும். லேசாகத்தான். பிறகு மேலேயும் லேசாக சர்க்கரை தூவ வேண்டும்.
                     
தண்ணீரைக் நன்றாகக் கொதிக்க வைத்து, கொதிக்கும் போது ஃபில்டரில் தண்ணீரை விட வேண்டும். மூடியோ, டபராவோ போட்டெல்லாம் தட்டக் கூடாது. தானாய் இறங்க வேண்டும்.

முதல் நாலு சொட்டு டிகாக்ஷன் இருக்கே, அதான் விசேஷம்,

கவர்ப் பாலில் கலக்கக் கூடாது...அப்போது கறந்த பாலில் கலக்கணும்.
          
பாலில் தண்ணீரே விடாமல் காய்ச்ச வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் காய்ச்சினால் காஃபி நல்லா வரும்.
               
சூடு குறையுமுன் ஒரு டம்ளரில் ஆடை இல்லாத பாலை விட்டு டிகாக்க்ஷனை (முதல் நாலைந்து சொட்டு மட்டும் விட்டால் ரொம்ப விசேஷம்!) மெல்ல கலக்க வேண்டும். அதிகமாகவும் விட்டு கறுப்பாகக் கலக்கக் கூடாது. குறைவாய் விட்டு வெள்ளையாகவும் இருக்கக் கூடாது. அழகிய காபிக் கலரில் இருக்க வேண்டும்! இந்தக் கலவை ஒரு டெக்னிக்.
                
சர்க்கரை பெயருக்குத்தான் போட வேண்டும். நிறையப் போட்டால் அதன் பெயர் காஃபி இல்லை..பாயசம்! குடிக்கும் போது சர்க்கரை போட்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்கும் அளவு மட்டும் போட வேண்டும்.
                   
அதை எடுத்து ஒன்று அல்லது இரண்டு ஆற்று மட்டும் டபராவில் ஆற்றி நுரையுடன் குடிக்க ஆரம்பிக்க வேண்டும்.
                    
காபி போட்ட உடன் குடிக்க வேண்டும். ஃபிளாஸ்க்கில் வைத்தோ, சொம்பில் ஊற்றியோ (அலுவலகங்களில் சில சமயம் அபபடி வாங்கி வருவார்கள். சின்ன வயதில் என் நண்பர்கள் வீட்டில் அவர்கள் அம்மாக்கள் "குண்டான்ல காபி வச்சிருக்கேன். போய் மொண்டு குடி" என்பார்கள். எனக்குத் தண்ணீர் ஞாபகம் வரும்) கொண்டு வந்து குடித்தால் தரம் கம்மிதான்... ஃபிளாஸ்கின் 'வாசனை' வேறு சேர்ந்து கொண்டு நல்ல காஃபியின் மணம், சுவையைக் கெடுத்து விடும்.
                           
தஞ்சாவூரில் பெரும்பாலான கடைகளில் காபி நன்றாக இருக்கும். கும்பகோணத்திலும். ஜவஹர் சொல்லியிருப்பது போல கும்பகோணம் டிகிரி காஃபி ஃபேமஸ். மதுரையில் விசாலம் காபிக் கடையில் கொஞ்சம் எதிர்பார்க்கலாம். சென்னையில் சரவணபவன், விவேகானந்தா என்று சில கடைகள்...எல்லா இடத்திலும் 'சர்க்கரை கம்மியாப் போட்டுப்பா' என்று சொல்லி விட வேண்டும். நம்மைப் பாவமாக பார்ப்பார்கள். "பாவம்! சர்க்கரை வியாதி போல இருக்கு"
                          
அவர்களுக்கு என்ன தெரியும் நம் சுவை ஞானம்..! சர்க்கரை கம்மி என்று சொன்னால் தானாகவே டிகாக்ஷனை அதிகமாக விட்டு 'இஷ்ட்ராங்'காக காபி கொண்டு வைத்து விட்டு பெருமையாகப் பார்ப்பார்கள்.
                
இந்தக் கஷ்டத்துக்கு வீட்டிலேயே காபி போட்டு விடலாம்!

15.2.11

யோசனை சொல்லுங்கள்...


உலகக் கோப்பைக்கு அடுத்த அட்ராக்ஷன் தமிழ் நாட்டில் தேர்தல் வருகிறது. தனியாக, சேர்ந்து, கூட்டணி, என்றெல்லாம் ஆரம்பித்து விட்டார்கள். மத்திய அரசு (நடுவண் அரசு!) தமிழக அரசை அதிகாரம் செய்து அதிக இடங்கள் பெறுவதற்கு வாய்ப்பு வந்திருப்பதாக பத்திரிக்கைகள் கணிக்கின்றன. காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆட்சி அமைந்தால் அமைச்சரவையிலும் பங்கு கேட்கலாம், அங்கம் வகிக்கலாம் என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கிறது.
             
'முதல்வர்கள் மாநாட்டுக்காக' டெல்லி சென்ற முதல்வர் அங்கிருந்தே ஆலோசிக்காமல், யோசிக்காமல் அவர்கள் கூட்டணியில் பா ம க இருப்பதாகச் சொன்னதையும், மருத்துவர் ஐயா அதை மறுத்து அவர்கள் செயற்குழு கூடி முடிவு செய்யும் என்றும் சொன்னதையும், (அட, எப்போதும் பிகு செய்யும் கலைஞரே தாங்கள் கூட்டணியில் இருப்பதாகச் சொல்கிறார் என்றால் நாம் கூட அதிக டிமாண்ட் செய்யலாம் என்ற கணக்கு இருந்திருக்கும்) கலைஞர் உடனே இல்லை, இல்லை என்று சமாளித்ததையும், அப்புறம் மீண்டும் மருத்துவர் கலைஞர் எண்ணம் வீண் போகாது என்று வழிக்கு வந்ததையும் பார்த்தோம்.

அம்மா என்ன சொல்கிறார், கேப்டன் யார் பக்கம் சேருவார் என்பதெல்லாம் யூகங்களாகவும், கணிப்புகளாகவும் வந்து கொண்டிருக்கின்றன.

இதெல்லாம் இருக்கட்டும்..அரசியல் வேண்டாம்...(அப்போ இவ்வளவு நேரம் மாஞ்சி மாஞ்சி டைப் அடித்திருப்பது என்னவாம்..!)

எனக்குத் தோன்றுவது எந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் கூட்டணியே கூடாது. ஆட்சியைப் பிடிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எதிரெதிர் கொள்கைகளை (அபபடி ஒன்று இருக்கிறதா என்ன) உடைய கட்சிகள் இந்த கொள்கையில் ஒன்று பட்டு கூட்டணி அமைப்பதும் மக்கள் வோட்டுப் போடுவதும் போதும்.

எல்லாக் கட்சியும் தனித் தனியாகத்தான் நிற்க வேண்டும். நோ கூட்டணி. ஆட்சியைப் பிடிக்க இவர்கள் அலைவது சேவையோ நூடுல்சோ செய்ய அல்ல என்று மக்களுக்குத் தெரியும். ஒரு முறை வென்றால் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நிச்சயம் என்ற முறை ஒழிக்கப் பட வேண்டும். அந்த ஆட்சியை திரும்பப் பெற அடுத்த ஐந்தாண்டுகள் காத்திருக்காமல் பயனில்லா ஆட்சி, சுயநல ஆட்சி, என்று இருக்கும் பட்சத்தில் ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ வருடத்துக்கு ஒருமுறையோ திரும்ப அழைக்கும் வசதி ஏற்படுத்தப் பட வேண்டும். தகுதி இல்லை என்று திருப்பி அழைக்க்கப் பட்டவர்கள் அடுத்த பத்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம் ஏற்பட வேண்டும். (இந்தக் காலத்தில் சட்டங்களை யார் மதிக்கிறார்கள் என்கிறீர்களா...அதுவும் சரிதான்) அதே சமயம் திரும்பத் திரும்ப தேர்தல் என்கிற முறையும் கட்டுப்படியாகாது. வேறு மாற்று வழிதான் யோசிக்க வேண்டும். இரண்டாவதாக வந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்!

காவிரிப் பிரச்னையோ, முல்லை பெரியாறு பிரச்னையோ, கச்சத் தீவுப் பிரச்னையோ...இந்த மாதிரி பிரச்னைகள் அரசியல்வாதிகளின் சுயநலத்தில் அலைக்கழிக்கப் பட்டு கூட்டணி தர்மங்களுக்காகவும், சொந்த லாபங்களுக்காகவும் சரியாக எடுத்தாளப் படாமல் இருக்கின்றன. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள்.

நீங்கள் இந்த மாதிரிப் பிரச்னைகளை தீர்க்கும் இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்? கர்நாடகமோ, கேரளமோ பாகுபாடு பார்க்காமல் எல்லோரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் இந்த மாதிரிப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு தீர்வு சொல்ல உங்கள் கைவசம் ஏதாவது விரிவான திட்டம் யோசனையில் வருகிறதா நண்பர்களே... அமைச்சர்களும் அதிகாரிகளும்தான் யோசிக்க, திட்டங்கள் போட முடியுமா? நாம் போட்டாலும் அவர்கள் செயல் படுத்தப் போவதில்லை!

மழை நாளில் அளவுக்கதிகமாகப் பெய்யும் மழை நீர் ஒவ்வொரு வருடமும் அதிக அளவு கடலுக்குப் போவதும், கோடைக் காலத்தில் தண்ணீர்ப் பிரச்னை வருவதும் தொடர்கதை. மழை நீர் சேகரிப்பு மக்களிடையேயே கூட பெயரளவில் செய்து சான்றிதழ் பெற்று விடுகிறார்கள். நதி நீர் இணைப்பு என்பது பேச்சளவில் மட்டும்.
               
இதற்கெல்லாம் என்ன தீர்வு..? 
   

13.2.11

ஞாயிறு - 84


காணி நிலம் வேண்டும் பராசக்தி!
ஆனால் ...


'ராணி நிலம்' வேண்டாம்!

11.2.11

குட்டிச் சுவரில் வெட்டி அரட்டை - 2

              
சன் டீவியில் வரும் 'அசத்தப் போவது யாரு' நிகழ்ச்சியில், வாய்ப்பு கிடைக்கும் போதும் ஞாபகம் வரும்போதும் மதுரை முத்துவின் பங்களிப்பைப் பார்க்கத் தவற மாட்டேன்! இன்று அவர் சொன்ன ஒரு ஜோக்: ஸாரி ஜோக்குகளில் ஒன்று..!
 
ஒரு அம்மாவும் பெண்ணும் ஏதோ காரணத்தால் திடீரென உயரமான இடத்திலிருந்து தவறி கீழே விழுகிறார்கள். வழியில் அம்மா ஒரு மரத்தைப் பிடித்துத் தொங்க, குழந்தையையும் ஒரு கையில் பிடித்துத் தொங்குகிறாள். உதவிக்கு ஆள் கூப்பிட்டு அலறுகிறாள். கீழே ஒரு ஃபுட்பால் கோல் கீப்பர் வர, 'கையை விடு, நான் பிடிச்சுக்கறேன் ' என்று தைரியம் சொல்ல, தாய் குழந்தையை விடுகிறாள். அவனும் சரியாய் குழந்தையை கீழே விழாமல் கேட்ச் பிடித்து விடுகிறான். கை தட்டியே பழகிப் போன நம்ம மக்கள் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவார்களா...தட்டுகிறார்கள். அதைக் கேட்ட உடனேயே மைதான நினைவு வந்து விட்ட அந்த ஃபுட்பால் கோல் கீப்பர் கையில் பிடித்த குழந்தையை கீழே வைத்து காலால் ஓங்கி ஒரு....

முதலில் சிரித்தாலும் பின்னர் சற்று கொடூரமாகத் தோன்றியது. கற்பனையை ரொம்ப ஓடவிடக் கூடாது. PKS இல் கமல் 'பழமொழி சொன்னால் அனுபவிக்கணும், ஆராயக் கூடாது' என்பாரே..அது போல ஜோக் சொன்னா சிரிக்கணும்...கற்பனை செய்யக் கூடாது!

என் நண்பர் ஒருவருக்கு இதே போல (?) தொழில் சார்ந்த சங்கடம் ஒன்று நேர்ந்ததாகச் சொன்னது நினைவு வந்தது. அவர் மருத்துவத் துறையில் பணி புரிபவர். பணியில் இருக்கும் போது உடன் வேலை செய்யும் பெண் ஒருத்தி வந்து தன் மகள் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறாள். கர்ப்ப காலத்தில் மருத்துவமனைகளில் சோதிக்கும்போது LMP, EDD என்று குறிப்பார்கள். முதலாவது Last menstrual period, இரண்டாவது Expected Delivery Date..

மருந்து, மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றின் Expiry Date பற்றியே எழுதி பேசிப் பழகிய இவர்கள் சில சமயம் ஜோக்காகவும் சில சமயம் மறந்து போயும் Retire ஆகும் சக ஊழியர்களை உங்களுக்கு எப்போ Expiry Date என்று கேட்பதுண்டு. அது போல இவரிடமும் உன் மகளுக்கு எப்போ EDD என்று கேட்பதற்கு பதிலாக, வேகமாக எப்போ Expiry Date என்று கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாராம்.

ரொம்பவும் சங்கடப் பட்டுப் போன இருவருமே அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆகும் வரை டென்ஷனாகவே இருந்ததைச் சொல்லியிருக்கிறார்...!

இது மாதிரி அவரவர்கள் தங்கள் வேலையில் உபயோகிக்கும் டெக்னிகல் வார்த்தைகளை நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பயன் படுத்துவது குறித்து சுவாரஸ்யமாக இருந்தால் நண்பர்களும் அதைப் பகிரலாமே!!

####################################

எம் ஜி ஆர் ஆசைப் பட்டு ஆனால் நடக்காத, அப்புறம் கமலஹாசன் ஆசைப் பட்டு நடக்காத ஒரு விஷயம் நடிகர் விக்ரமுக்கு கிடைத்திருக்கிறதாம். அதாவது வந்தியத் தேவனாக நடிக்கும் வாய்ப்பு. மணிரத்னம் இயக்கமாம். இவ்வளவுதான் செய்தி. கல்கியில் பார்த்தது.  
   
ஏற்கெனவே படித்து ரசித்த ஒரு கதையை படமாக்கும்போது சில் சிக்கல்கள் உண்டு...நாம் ரசித்த கேரக்டர்களின் உருவம் நம் கற்பனையை ஒட்டி ஒரு விதமாக நம் மனதில் இருக்கும். ஏதோ ஒரு நடிகர்அந்தப் பாத்திரங்களை ஏற்கும்போது நம் மனம அவரை அந்த கேரக்டராக ஏற்பது கடினம். ரசிக்குமோ...?

அதே கல்கியில் நம் சக பதிவர்கள் ராமலக்ஷ்மி கவிதையும், உழவன் கவிதையும் வந்திருக்கிறது. நீங்கள் கூட கவிதைகள் எழுதி kalki@kalkiweekly.com க்கு அனுப்பலாம் என்கிறது கல்கி. 
   
வந்தியத் தேவனைப் பற்றிச் சொல்லும்போது இன்னொரு செய்தியும் சொல்ல வேண்டும். மக்கள் தொலைக்காட்சியில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' தொடர் எடுக்கப் போவதாகவும், அதில் நீங்களும் நடிக்கலாம் என்று சொல்லி புகைப் படத்துடன் அப்ளை, மன்னிக்கவும் விண்ணப்பிக்கச் சொல்கிறது மக்கள் டிவி.. மறுபடி மன்னிக்கவும், மக்கள் தொலைகாட்சி.

#####################################௩

சல்மான் இனிமேல் ஹிந்தித் திரையுலகை பாலிவுட் என்று சொல்லாதீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். Hindi Filmi என்ற வார்த்தையிலிருந்து HI-Fi என்று சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்!
(அப்போ தமிழ்த் திரையுலகை, TA-FI என்றும், கன்னடத் திரையுலகை, KA-FI என்றும் சொல்லலாமோ?)
##########################################
உலகக் கோப்பை கிரிக்கெட் பக்கத்தில் வந்து விட்டது. சச்சின் அடுத்த உலகக் கோப்பை விளையாடுவாரா என்று மக்கள் இப்போதே கவலைப் பட ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் இந்த ஆட்டமே ஆரம்பிக்கவில்லை. இந்திய டீமே அவரை நம்பி இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அவரே அடுத்த உலகக் கோப்பை பற்றி ஒன்றும் சொல்லாத நிலையில் தோனி "Frankly speakking, and practically speaking this will be Sachin's last world cup..." என்கிறார். இவர் யார் அதைச் சொல்வதற்கு என்று தெரியவில்லை. ஒரு அலெக்ஸ் ஸ்டுவர்ட் 44 வயது வரை விளையாடலாம் என்றால் why not Sachin? கிட்டிப்புள் ஆடுவது போல தோனி அடிக்கும் ஷாட் ஒன்றைப் போட்டு அவரை விட்டே "ஹெலிகாப்டர் ஷாட்" என்று சொல்ல வைத்திருக்கிறார்கள்!! நகைச்சுவை? விளம்பரங்களுக்கு கோடிகளில் ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்கிறார்கள். என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!

எல்லா ஆங்கிலச் சேனல்களும் உலகக் கோப்பை ஒளிபரப்பு என்று தொடங்கி விட்டார்கள்! ஒரு நாள் முழுக்க ஒரே செய்திகளை ஒட்ட இவர்களுக்கும் ஏதாவது கிடைத்து விடுகிறது..! முன்னாள் அமைச்சர் கைது...எகிப்து....
                 
ரொம்ப நாட்களுக்குப் பிறகு எங்களுக்கு ஃப்ரீ சேனலில் CNN IBN வருகிறது!
                                      

9.2.11

நாய் மனம் 2


(சென்ற பதிவின் தொடர்ச்சி)
 

மறுநாள் காலை அல்ல, அடுத்த இரண்டு மூன்று நாள் காலைகள் எதிர்பார்ப்போடுதான் விடிந்தன. ஆனால் ஏமாற்றம்தான்.
           
ப்ரௌனி வரவில்லை.
    
"வேண்டாம்னுதானே துரத்திட்டீங்க...நான் ஏன் வரணும்" மனதுக்குள் ப்ரௌனியின் உருவம் தோன்றி பேசியது போல இருந்தது.
                

நாட்கள் செல்லச் செல்ல மெல்ல மெல்ல மறந்து போகும் என்று எண்ணியிருந்ததும் நடக்கவில்லை. தண்ணீர் என்றாலே ப்ரௌனிக்கு பயம் குளிக்க வரமாட்டேன் என்று அடம் பிடித்து தரையைத் தேய்த்துக் கொண்டே வருவாள். ஆனால் குளிக்கும்போது சமர்த்தாக இருப்பாள். தண்ணீர்க் குவளை அல்லது பாட்டிலை அவள் கண்ணில் காட்டினால் போதும் சென்று ஓரமாகப் பதுங்கி விடுவாள். அப்படிப் பட்டவள் அடித்துப் பெய்யும் மழையில் என்ன செய்கிறாளோ என்று மனைவி கவலைப் பட்டாள்.  
                    

"நேரத்துக்கு சாப்பாடு வைப்போம்...அதையே சரியாய்ச் சாப்பிடாது...இப்போ என்ன செய்யுதோ...யார் கொடுப்பாங்க அதுக்கு சோறு...!' சின்னவள் உணர்ச்சி வசப் பட்டாள்.
               
ஏதாவது பேப்பர் சத்தப் படுத்தினாலே குரல் கொடுக்கும் "எனக்கு எங்கே" என்பது போல...தீனி ஏதாவது சாப்பிடும்போது பாட்டி அதைச் சொல்லி மாய்ந்து போனாள்.
                           

ஆட்டோக்காரரை அப்புறம் பார்த்த போது அந்தப் பக்கம் சவாரி போனீங்களா கண்ணுல பட்டதா என்று கேட்ட போது 'சும்மா இருங்க சார்' என்று சொல்லிச் சென்றார்.
                       

திரும்பி வந்து விடும் என்று எண்ணிதான் கொண்டு விட்டோமோ என்று சந்தேகம் வந்தது. அவர்களும் கூட அந்தப் பக்கம் ஓரிரு முறை சென்று வந்த போது கண்ணில் படவில்லை.
               
"வீட்டுக்கு வரேன்னு வந்து ஏரியா மாறியிருக்கும்"
   

"வண்டியில் எங்காவது அடி பட்டிருக்குமோ"
                

வீட்டைச் சுற்றி தினமும் பார்வை அலைவதை தடுக்க முடியவில்லை.
                       

நடுவில் ஒருநாள் பெரியவன் கல்லூரியிலிருந்து வந்த போது அந்த ஏரியாவில் ப்ரௌனியைப் பார்த்ததாக பரபரப்புடன் சொன்னான்.
           

"அப்போ உயிரோடதான் இருக்கு..."
         

"அப்பாடா..."
               

அந்த வாரக் கடைசியில் புதிய எண்ணம் வந்தது. அது நம்மை விட்டுப் போய் இரண்டு மாதம் இருக்குமா? அதைச் சென்று பார்த்ததால் என்ன?            

என்ன அசட்டுத் தனம் என்று யாருக்கும் கேட்கத் தோன்றவில்லை. 
      

"போகும்போதே பிரியாணி எல்லாம் வாங்கிப் போய் விடுவோம்..."
                

"மட்டன் பிரியாணின்னா அதுக்கு ரொம்ப இஷ்டம்.."
                       

"போய் குடுத்திட்டு சாப்பிட்டதும் கொஞ்ச நேரம் இருந்துட்டு நைஸா வந்துடலாம்..."    

"அதெப்படி? அது உன்னை விடவே விடாது...கூடவே வந்துடும்..."  
                   

"வராது...முதல்லயும் அப்படிதான் சொன்னாங்க...வரல்லையே..."    
                

"அப்போ அதுக்குத் தெரியாது...இப்போ அனுபவம்..விடவே விடாது"
                

"வராது..."  
              

"வந்தால்..."  
                 

"வராது...வந்தால்...வந்தால் என்ன செய்யலாம்...கூட்டிட்டு வந்துட வேண்டியதுதான்.."   
                    

'சட்'டென எல்லார் முகத்திலும் ஒரு புன்னகை வந்து அமர்ந்தது.   
                   

"முன்னாடி சொன்ன கஷ்டம் என்ன ஆச்சு?"    
                                    

"பார்த்துக்கலாம்.."  
                           

ஆசிஃபிலிருந்து மட்டன் பிரியாணியுடன் கிளம்பிப் போனார்கள். அந்த இடம் வந்தது. ப்ரௌனியைக் காணோம். பிரியாணியுடன் கேனத் தனமாக அமர்ந்திருந்தார்கள். வேறு சில நாய்கள் பிரியாணி வாசனையை மோப்பம் பிடித்து வந்து வாலாட்டின.     
                 

பைக்கிலும் காரிலும் சென்றவர்கள் லேசாகத் திரும்பிப் பார்த்தபடி சென்றார்கள்.          

"அன்னிக்கி நீ பார்த்தது ப்ரௌனிதானாடா?"    
           

"அட என்னப்பா...எனக்குத் தெரியாதா..."    
                       

அவர்கள் கண்கள் நாலாபுறமும் பார்த்தபடி இருந்தன. நேரம் செல்லச் செல்ல அலுப்பு வந்தது. முட்டாள்கள் போல உணர்ந்தனர். யோசனையில்லாமல் உணர்ச்சி வசப் பட்டு வந்து விட்டோம் என்று தோன்றியது.    

"அப்பா...அங்க பாரு.."      

சற்று தூரத்தில் ப்ரௌனி...ஆம்...ப்ரௌனியேதான்...மெல்ல வந்து கொண்டிருந்தது. எதையோ தேடிய அதன் அழகிய கண்கள் மோப்பம் பிடித்தபடி இவர்களைப் பார்க்க,      

   

உடம்பை வளைத்து, குனிந்து நிமிர்ந்து ஓடி வர ஆரம்பித்தது.  
                                   

முதலில் அவன் மேல் பாய்ந்தது. பயப்படும் அளவு காலை வளைத்து, சுற்றி சுற்றி வந்து மேலே உராய்ந்தது. அதன் குரல் சுற்றி உள்ள நாய்களைக் கலவரப் படுத்தியது. அவை இவர்களை கவனமாகப் பார்த்து விட்டு சற்று தளளி நின்றன.     
              

மனைவியை, பையன்களை என்று ஆனந்த அழுகையுடன் சுற்றி சுற்றி வந்து மேலே பாய்ந்து நக்கி அன்பை வெளிப் படுத்தியது ப்ரௌனி.  
                   

பிரியாணியைப் பிரித்து வைத்தார்கள். உடனே சாப்பிடவில்லை. அதை முகர்ந்து பார்த்து விட்டு மறுபடி இவர்களிடம் வந்தது. திரும்ப பிரியாணியை ஒரு பார்வை.   
            

"போய்ச் சாப்பிடு.."     
                    

போய்ச் சாப்பிட்டது.    
             
காத்திருந்தனர். சாப்பிட்டது. பக்கத்தில் வந்து புலிக் குட்டி போல உட்கார்ந்து மற்ற நாய்களைப் பார்த்தது.அதன் நெற்றியைத் தடவியபடி தூக்கி ஆட்டோவினுள் விட்டான்.

வழக்கம் போலவே முரண்டு பிடித்தது.   
                 
"பயன்தாங்குள்ளி...வழக்கம் போலவே பயப்படுது...லூசு..வீட்டுக்குப் போறோம்.."என்றாள் மனைவி.   
                       

புதிதாய் வந்த இரு நாய்கள் குரல் கொடுத்தன. ப்ரௌனி அவைகளைப் பார்த்து வாலாட்டியது. அவைகளிடம் ஓடி ஏதோ சொல்வது போல அருகே நின்று விட்டு மறுபடி இவர்கள் அருகே வந்தது.          
               

"என்னடி..சொல்லிக்கிட்டு வந்துட்டியா.." மனைவி கிண்டலாகக் கேட்டாள்.          
                        

வாலாட்டிய ப்ரௌனி, திரும்ப அந்த நாய்களிடம் சென்றது.  
                   

அவை மெல்ல திரும்பி நடக்கத் தொடங்கின.      
                
            
இவர்கள் விக்கித்து நின்றார்கள்.   
          
"ப்ரௌனி...ப்ரௌனி..."  
    

திரும்பிப் பார்த்த ப்ரௌனி லேசாக வாலாட்டியது. சற்றே தயங்கி நின்று விட்டு மறுபடி திரும்பி அதன் தோழர்களுடன் செல்லத் தொடங்கியது...அவற்றின் நடை மெல்லோட்டமாக மாறியது...!   
   

தூரத்தே சென்று மறைந்தது.  
                  

(முற்றும்!)

     
             

8.2.11

நாய் மனம் 1

  
ஆட்டோவில் வைத்து அழைத்துச் சென்ற போது வழக்கம் போலவே இப்போதும் ப்ரௌனி லேசான பயத்துடன் அவன் முகத்தை நிமிர்ந்து, நிமிர்ந்து பார்த்த படி, அவ்வப்போது லேசாக நக்கியபடி வந்தது.

அவனுக்கு மனசு கஷ்டமாக இருந்தது.
        
'தெரிந்திருக்குமோ...? இதெல்லாம் இவைகளுக்கு உள்ளுணர்விலேயே தெரிந்து விடும் என்பார்களே...'   

இதற்கு முன்பு இரண்டு மூன்று முறை ப்ரௌனி ஆட்டோவில் பயணித்திருக்கிறது. இரண்டு முறை ப்ளூ க்ராசுக்கு - தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள. ஒரு முறை மாமா வீட்டுக்கு. மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது அது குட்டி. ஆட்டோவில் ஏறவே ஏறாது. இறங்கி ஓடி விடும். ஏற்றி, இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஆட்டோ கிளம்பி விடடால் ஜாக்கிரதை உணர்வுடன் லேசான உடல் நடுக்கத்துடன் மடியில் இருக்கும்.

அழகிய கண்கள் ப்ரௌனிக்கு. கன் திறக்காமல் இருக்கும்போது ரகு கொண்டு வந்து காண்பித்தான். காண்பித்தான் என்பதை விட ஆசை காட்டினான். சின்னவளுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

"அப்பா...அப்பா...வீட்டுலையே வச்சிக்கலாம்பா..."

"வேணாம்பா...பல வகைல தொந்தரவு..." முன் அனுபவங்கள் இருந்தன அவனுக்கு.

இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய முடியாமல் எங்கேயும் போக முடியாது. அது மட்டும் அல்லாமல் அதன் காலம் முடியும்போது மனதுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும்.

பெண் கேட்பதாக இல்லை. அம்மாவின் சிபாரிசு பிடித்தாள் . அவளுக்கும் உள்ளூர ஆசை இருந்திருக்க வேண்டும்.

"ஏண்டி...அவதான் கேட்கிறாள்ன்னா....உனக்கு பழைய அனுபவம் ஞாபகமில்லையா.."

அவள் அப்பா செத்ததுக்குப் போகும் போது வீட்டில் அப்போது இருந்த செல்லத்தை என்ன செய்வது யாரிடம் விட்டுப் போவது என்று நின்றது ஒரு அனுபவம்.

ஆனாலும் மெஜாரிட்டி வென்றது. அவனுக்கு நாய்கள் எப்போதுமே இஷ்டம். முன் ஜென்மத்தில் அவன் நாயாக இருந்திருப்பானோ என்னமோ என்று நினைத்துக் கொள்வான்.

அழகிய கண்களுடன் அழகாக வளர்ந்தது. ஒரு கயிறு கட்டி பழக்கினான் பையன். நாயைக் கட்டி வளர்ப்பது சரியா என்று சில சமயம் தோன்றும். சுதந்திரமாய் திரிய வேண்டியவற்றை கட்டி வைத்து கொடுமை செய்கிறோம் என்று தோன்றும்.

நல்ல சாப்பாடு வேளா வேளைக்கு போடறோமே... என்பாள் மனைவி...என்பான் பையன்... என்பாள் பெண்!

ஏதோ சமாதானங்கள்.

குட்டி நாய் செய்யும் சேட்டைகள் கண்கொள்ளாக் காட்சி. முன் கையை தூக்கி ஆட்டி ஆட்டி அது விளையாட வரும் அழகு...

குதித்து உருண்டு புரண்டு செய்யும் அட்டகாசங்கள்....பெரிதாய் வளர்ந்தும் கூட அது மடியில் வந்து அமர்ந்து கொண்டாடும் சொந்தம்...அப்பப்பா...மனிதர்களை எப்படி அன்பினால் கட்டிப் போடுவது என்று நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றன இவைகள்.

அவர்கள் இதை நாய் என்று என்றும் சொன்னதில்லை. ப்ரௌனிதான்... பெண் நாய் வேறு எனவே அவள் இவள்தான்..!

"ஏங்க நாட்டு நாய் மாதிரியிருக்கு..."

"அட...டர்னா வெரைட்டிங்க..." என்பான் ..அது ஒரு வகை என்று நினைத்து விட்டு விடுவார்கள். தெரு நாய் என்பதைத்தான் 'டர்னா' என்று சொல்லப் பழக்கியிருந்தான்..
----------------------

நினைவிலிருந்து மீண்டான்.

தெரிந்த ஆட்டோக்காரர். ப்ளூ கிராசில் விடலாம் என்ற போது நண்பர்கள் சிலர் உடம்பு சரியில்லாத நாயைத்தான் அவர்கள் எடுப்பார்கள் என்றார்கள்.

டிராஃபிக் இல்லாத இடமாகத் தேடினார்கள்.

ப்ரௌனி சுற்றுமுற்றும் இரைக்க இரைக்க பார்த்த படியே வந்தது. அவனையும் அடிக்கடி திரும்பி திரும்பிப் பார்த்தது.

"எவ்வளவு நம்பினேன் உன்னை.." என்று கேட்கிறா மாதிரி இருந்தது. 'நிச்சயம் தெரிந்திருக்கும் நான் செய்யப் போகும் துரோகம்' என்று நினைத்துக் கொண்டான். அதை பார்ப்பதைத் தவிர்த்தான். கண் கலங்கினா மாதிரி இருந்ததாகத் தோன்றியது... அது இவன் கையை வேக வேகமாக இருமுறை நக்கியது!

"நீ சமர்த்தா இருந்திருக்கணும்....பக்கத்து வீட்டு கோழியைக் கடிச்சே..பையன்களோட ஃ பிரெண்ட்ஸ் ரெண்டு பேர் மேல பல்லு வச்சே... ஆம்பளை நாய் சிநேகம் வேற..."

மனைவி அதனிடம் சொல்வது போல தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்.

முன்னர் ஒருமுறை வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக இதை நண்பர் ஒருவரிடம் விட்ட போது கண் கலங்கி அழுதவள் இவள்..."பொண் குழந்தை...! வெள்ளிக் கிழமையும் அதுவுமா எனக்குத் தெரியாம யார் கிட்டயோ கொடுத்துட்டீங்க...நான் ஏதோ சும்மா சொன்னேன்.." என்றவள்...

அந்த நண்பர் இதை வைத்துக் கொள்ள முடியாமல் மறுநாளே கொண்டுவந்து விட்ட போது நிம்மதியாகத்தான் இருந்தது.

இப்போது அந்தச் சமாதானங்கள் எல்லாம் இல்லை. விட்டு விடலாம் என்று ஒரு மனதாய்த் தீர்மானம். பையனும் பெண்ணும் அவ்வளவு கஷ்டப் பட்டா மாதிரி தெரியவில்லை.

ஒரு மாதிரி அலைந்து வண்டி நடமாட்டம் இல்லாத இடமாக நிறுத்தினார்கள்.

அவனுடைய சகோதரி ஃபோன் செய்தாள். அவளுக்கும் அவனைப் போலவே நாய்களிடமும் கூடுதலாகப் பூனைகளிடமும் கொள்ளைப் பிரியம்.

வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தவள் வேறு வழி இல்லை என்ற போது கோப சோகத்துடன் சமாதானமானாள். இப்போது பேசியவள்,

"தனி இடம் தனி இடம்னு ஆள் இல்லாத இடத்துல அவளை விட்டுட்டு வராதடா...சாப்பாட்டுக்கு என்ன செய்வாள்..." என்றாள்.

கஷ்டமாகத்தான் இருந்தது. தண்ணீரே பார்க்காத நாய்களைக் கூட திடீரென தண்ணீரில் தூக்கிப் போட்டால் அவை நீச்சலடித்து வந்து விடுவதைப் பார்த்திருக்கிறான். அவை எங்கே போனாலும் பிழைத்துக் கொண்டு விடும் என்று தேற்றிக் கொண்டான்.

முதலில் இறங்க மறுத்தாள் ப்ரௌனி. ஆட்டோவிலேயே அமர்ந்து சுற்றுப் புறம் ஆராய்ந்தாள்.

'இங்கதான் என்னை விடப் போறியா' என்பது போல அவனை ஒரு பார்வை, 'இதுதான் இனி நான் வாழ வேண்டிய இடமா' என்பது போல அந்த இடத்தை ஒரு பார்வை....

அவன் இறங்கி சற்று தூரத்தில் நின்று கொண்டான்.

மெல்ல இறங்கினாள். இங்கும் அங்கும் நடந்தாள். அவன் அருகில் வந்தாள். ஏதாவது ஆச்சர்யகரமான சமிஞையை எதிர்பார்த்தான் போலும். அவள் அவனைக் கடந்து போனதும் கொஞ்சம் ஏமாந்தான். இன்னும் கொஞ்ச தூரம் போய் அவனை திரும்பிப் பார்த்தாள். இன்னும் மெல்லோட்டமாக ஓடினாள்.

இவன் 'சட்'டெனத் திரும்பி ஆட்டோவில் ஏறினான்.

"திரும்பிப் பார்க்காம வாங்க சார்" - ஆட்டோக் காரர்.

திரும்பிப் பார்த்தபடிதான் வந்தான். ப்ரௌனி திரும்ப ஓடி வந்தது போலத் தோன்றியது.

ஆட்டோ திரும்பி வேகமெடுத்தது. திரும்பிப் பார்க்கையில் ஒரு பைக் காரன் சடன் ப்ரேக்கிட்டு ப்ரௌனியைத் தவிர்த்துப் பறந்தான்.

மறுபடி அவன் சகோதரி ஃபோன் செய்து நடந்ததைக் கேட்டு தெரிந்து கொண்டாள். ஆறுதலும் சொன்னாள். "அவை எந்த சூழலுக்கும் பழகி விடும்...இது கடவுளின் முடிவு...விடு..."  
    
"நாளைக் காலைல பாருங்க...நம்ம வூட்டு வாசல்ல நிக்கும்..: ஆட்டோக்காரர்.
              
அவனுக்கும் அது நிச்சயம் நடக்கும் என்று தோன்றியது.

ஆனால் .....  
(தொடரும்)