25.2.11

டாப் ட்வெண்டி ++

    
முழுப் பெயர்களும் பெரும்பாலும் எங்கள் ப்ளாக் இடப் பக்க வரிசையில் கருத்துரைத்தவர்கள் பகுதியில் உள்ளன. 

முதலில் எல்லா கட்டங்களையும் நிரப்புபவர் யார் என்று பார்ப்போம்.
     
இடமிருந்து வலம்:


C1 - C2, A1-A4, B1-B4 : நாங்களும் கொத்திப் போட்டுட்டோம். மன்னிக்கவும்.

C4-C10 : பாடுவாரோ இல்லையோ தெரியவில்லை. பதிவுகள் சுவையாக இருக்கும். முதல் அஞ்செழுத்துக்கள் கொண்டு தமிழ்ப் படங்கள் நிறைய வந்துள்ளன.

D2-D5: அமெரிக்க சாமியே சரணம்.

D9-D10: இப்போ 'எல்'லாம் இவருக்'கே' அடிக்கடி வடை.

E1-E3: இவரு இதுவரை எங்கள் ப்ளாகில் கமெண்ட் போட்டதில்லை. D2-D5 ஜொள்ளருக்காக இங்கே வந்திருக்காரு போலிருக்கு!

E4-E5: பதிவுகளிலும் கமெண்டுகளிலும் கவிதை எழுதும் குழந்தை நிலா

G8-G10: லேட்டாக வந்து சேர்ந்துகொண்டவராயினும் நிறைய கருதுரைப்பவர்.

H1-H5: கவிஞர், மென்பொருள் ஆளர். புதுமை விரும்பி.

 

மேலிருந்து கீழ்:

A5-E5 : மோர்ஸ் கோட் மற்றும் பேப்பர் அளவு பற்றிய புதிருக்கு பதில் கூறி அதிக பாயிண்டுகள் பெற்றவர்.

A6-E6: ஊர் பெயரைக் காணோமே! ! இங்கே குறும்பு ஏதும் செய்யவில்லையே?
                  

A7 - I7 சுவையானப் பதிவுகள் போடுபவர்; இட்லிக்குப் பெயர் போனவர்.

D1-G1: எ பி,  இ ந ஏ, முகநூல், ட்விட்டர் - எல்லாவற்றிலும் எங்களைப்

பின் தொடர்பவர். அந்தக் காலத்தில் இது நம்ம ஏரியா வில் நிறைய படங்கள் போட்டவர். 
                  
E2-H2: எங்கள் பதிவில் எஸ் பி எஸ் பட்டம் பெற்றவர்களில் ஒருவர். எங்கள் ப்ளாக் பதிவுகளில் இவர் கருத்து இல்லாத பதிவு மிகவும் குறைவு.
             
E5-H5 : இந்த மன்னை மைந்தர்களில் ஒருவர், தன வலைப்பூ பெயர், தன் ப்ரோஃபைல்  பெயர் ஆகியவற்றை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்.
        
F3-J3: அப்பாD - இதை முதலிலேயே இங்கே போட மறந்துவிட்டோம் - மூன்று முறைகள் தலையில் குட்டிக் கொள்கிறோம்!
    
F6-I6 : இயற்பெயர் மூன்றெழுத்து, , இந்த வலை ஆசிரியர் பெயர் ஏழு எழுத்து, ஆனால் அவருடைய பெயரை அவர் எப்பொழுதும் இந்த நான்கெழுத்தால் குறிப்பிடுவார்; ஐந்து வலைகள் இவர் ஆளுகையில் !
     
H2-J2: சின்னக் குயில் பாடும் பாட்டு கேட்குதோ இல்லையோ - இவர் கருத்துகள் எங்கள் ப்ளாகில் உங்கள் கண்களில் அதிகம் படும்.
    
F4-J4: ஏழு எழுத்து வலைப்பூ, எழுதும் ஐந்தெழுத்து ஆசிரியர். கட்டுரை, கவிதை காமிரா போட்டிகள் இவர் பங்கேற்றால், நமக்குப் பரிசு கிடையாது. , எல்லாப் பரிசுகளும் இவருக்கே!

கீழிருந்து மேல்:
  
G9-E9: இவர் பெயரில் ஒரு முன்னணி தமிழ் நடிகர் உண்டு. செடி, கொடி, மரம் பற்றி நிறைய விவரங்கள் தெரிந்தவர்.

 

எல் ஷேப்:

A9-C9.C10 : இவங்களைப் பற்றி நாங்க சொல்லமாட்டோம். நீங்கதான் சொல்லணும்.

F9, F8-D8: நகைச்சுவையையும், , நல்ல சுவையான தகவல்களையும் , இதய பூர்வமாகப் பதிவே(பே)த்துபவர்.

I6, J6-J10: 'இது நம்ம ஏரியா' பதிவில் நிறைய படங்கள் போட்டுக் கலக்குபவர். சமீபத்திய எங்கள் ப்ளாக் பதிவில், இவர் பதிந்த கருத்து ஒன்றுக்கு, ஆசிரியர் குழு 'ஆஹா' சொன்னது!

 

பிட்டு பிட்டாக:

H8-H10, I8-I10, J10: நம் தாய் மொழி தோன்றிவிட்டது! !
      
F4,G4,A10,J1,I2,I1: மெல்லிசை மன்னர்களில் ஒருவர். பெயர். ஆனால் இசை உலகை விட இணைய உலகில் அதிகம் பெயர் பெற்று வருகிறார். முதல் இரண்டெழுத்துகள் இங்கே இல்லை. அதனால் 'கோபி' க்க மாட்டார் என்று நம்புகிறோம். .
     
C3, A8,B8, B10,E10,F10 = வண்ணப் பெட்டிகள் : உங்கள் பெயர் ஆறு எழுத்துகளுக்குள் இருந்தால், எங்கள் வாசகராக இருந்தால், அதிகம் கருத்துரைத்தவர் என்றால், உங்கள் பெயரை இங்கே நிரப்பி எங்களுக்கும் சொல்லுங்கள். ஆறு எழுத்துகளுக்கு மேலே என்றால், மற்ற கட்டங்களிலிருந்து கடன் வாங்கிக் கொள்ளுங்கள்.  
                               

23.2.11

ஆனந்த அதிர்ச்சி 02

                         
அந்த தாயத்து அணிந்த நாள் முதல் அனந்தராமனுக்கு நினைத்ததெல்லாம் நடக்கா விட்டாலும், வழக்கமாக அவர் செல்லும் கடை கண்ணிகள், கோவில் குளம், ஜோதிடர் இப்படி எங்கென்றாலும் - அரசாங்க அலுவலகங்கள் தவிர - கூடிய மட்டும் இவர் தேவைகளை அனுசரித்தோ அல்லது இவரின் எதிர்பார்ப்புகளை அனுசரித்தோ எல்லாம் நடந்தேறின. நம்ப முடியவில்லை; என்றாலும் நம்பாமலும் இருக்க முடியவில்லை.
           
 பையனின் கல்லூரி அனுமதி குறித்துத் தெரிந்து கொள்ள இரண்டு வெவ்வேறு ஜோதிடர்களை அணுகி ஆலோசித்த பொழுதுதான் இவருக்கு சந்தேகம் தட்டியது.
                   
தாயத்தின் சக்தி மீது அல்ல. ஜோதிடர்களின் திறமை பற்றி. ஒருவர் என்னடாவென்றால் தாம் இருக்கும் குடியிருப்பிலேயே ஒரு ஓரத்தில் இருந்து பார்த்தவர் போல அவ்வளவு விவரமாக சொல்கிறார். இன்னொருவர் கிரஹ சஞ்சாரங்களைப் பற்றி முன்னவர் போலவே பேசினாலும், தனிப்பட்ட விவரங்களில் கொஞ்சம் கூடத் தெளிவின்றி என்னென்னவோ சொல்லிக் கொண்டு போனார்.    
            
ஆகையால் முன்னவரிடமே மற்ற யோசனைகளையும் கேட்க வேண்டும் அன்று கைக்குட்டையில் முடி போட்டுக் கொண்டார்.    
        
அடுத்த இரண்டு வாரங்களில் அவருக்கு ஆச்சரியமான ஆச்சரியம் காத்திருந்தது. மின் கட்டணம் பற்றி தன் சந்தேகங்களைத் தெளிவு செய்து கொள்ள அருகிலிருந்த துணை மின்  பொறியாளர் அலுவலகத்துக்கு சென்றவர் மயக்கம் போட்டு விழாத குறை. இவர் பற்றியும் இவர் வீட்டில் இருக்கும் மின் சாதனங்கள் பற்றியும் அவர்களுக்கு நிறையவே தெரிந்திருந்தது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நம்மைப் போல் தலையைப் பிய்த்துக் கொள்ளும் ரகமல்ல என்றாலும், "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது " என்று திருப்திப் பட்டுக் கொண்டார்.     
                         
அனந்த ராமனின் வாழ்க்கையில் வந்த வசந்த காலம் அடுத்த சில வாரங்களில் திடீரென முடிவுக்கு வந்தது. தாயத்து வந்து சேர்ந்த சனிக் கிழமைக்கு முன்பு இருந்த நிலைக்கு மாறியதன் காரணம் அவருக்கு விளங்கவில்லை. ஒருக்கால் அந்த தாயத்தை மீண்டும் ஒரு பூஜையில் வைத்து ரீ சார்ஜ் செய்ய முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஆதங்கப் பட்டுக் கொண்டார்.         
             
அந்த நாளும் வந்தது !    

(இன்னமும் ஆனந்த அதிர்ச்சி 01 பகுதியில் கேட்ட கேள்வி ஓபன் ஆக இருக்கின்றது. ஒருவர் மட்டும் சற்றேறக் குறைய சரியான யூகம் செய்துள்ளார்:: அவர் யார் என்று இப்போ சொல்ல மாட்டோம்! மாதவன் - உங்க யூகம் இருபத்து நான்காம் தேதிக்குள் பதிவாகுமா? )

ஆனந்த அதிர்ச்சி மூன்றாம் சுழியில் சாரி - மூன்றாம் பகுதியில் சரியான பதில் வரும் என்று நம்புவோம் - வலையாபதி ஆர் யு லிசனிங்?
               

22.2.11

பேப்பர் கேள்விகள்


அ)  A4 சைஸ் - அளவுகள் என்ன? (மி.மீ X மி.மீ கணக்கில்)

ஆ)  ஒரு A4 SIZE ஜெராக்ஸ் 80 GSM தாளின் எடை எவ்வளவு கிராம்?

இ)  75 GSM தாளை விட அதிகமா அல்லது குறைவா?

ஈ)  80 GSM தாள், 75 GSM தாளை விட எவ்வளவு அதிகம் அல்லது குறைவு?

இந்த நான்கு  கேள்விகளில் எதற்கு சரியான பதில் பதிவு செய்தாலும், பாயிண்டுகள் உண்டு. (ஆனால் ஒவ்வொரு கேள்விக்கும் வெவ்வேறு பாயிண்டுகள்)

வாசகர்கள் இந்தப் பதிவின் கேள்விகளுக்கு, எவ்வளவு சீக்கிரமாக சரியான பதில் பதிவு செய்கின்றார்களோ அதைப் பொருத்தும்கொடுக்கப்படும் பாயிண்டுகள் மாறும்.  
                      

21.2.11

ஆனந்த அதிர்ச்சி 01

               
அனந்தராமனுக்கு ஆச்சரியமான ஆச்சரியம்!    
                        
கொஞ்ச நாட்களுக்கு முன் பொழுது போகாமல் தொலைக்காட்சியில் சானல்களை மாற்றிக் கொண்டிருந்தார்.  அப்பொழுது தொலைபேசியில் யாரோ அழைக்கவும் தொலைக்காட்சியை மௌனம் காக்க வைத்து விட்டு, தொலைபேசியில் பேசியவர் சொன்ன விவரங்களைக் கையில் இருந்த பேப்பரில் குறித்துக் கொண்டார். பிறகு தொலை பேசியில் தொடர்பு கொண்டவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பின நினைவு. பிறகு அதைப் பற்றி அறவே மறந்தும் போனார். சென்ற வாரம் நண்பருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது ஒரு பார்சல் வந்து சேர்ந்தது. கொண்டு வந்தவர், பணம் மூவாயிரத்து நூறு வங்கிக் கொண்டு பார்சலைக் கொடுத்து விட்டுப் போனார். ஏதோ தவறு நேர்ந்து விட்டது என்றறிந்த அனந்தராமன்,  அதை நண்பர் முன் வெளிப்படுத்த வேண்டாம் என்று தாம் ஏதோ அந்தப் பார்சலை எதிர் பார்த்திருந்த மாதிரி ஒரு பாவனையுடன் அதைக் கொண்டு போய் உள்ளே வைத்து விட்டு வந்தார்.  நண்பருடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார். நண்பர்  கிளம்பிப் போன பின், மனைவியைக் கூப்பிட்டு விசாரித்தார். முன்னொரு சமயம் தொலைக்காட்சியில் தங்க வேட்டை நிகழ்ச்சிக்கு ஒரே நாளில் முப்பத்தியாறு குறுஞ்செய்தி அனுப்பின மாதிரி முட்டாள்தனமான காரியம் எதுவும் செய்திருக்கவில்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டார். பின் பார்சலில் என்ன தான் இருக்கும் என்ற குறு குறுப்பில் அதைப் பிரிக்கவும் செய்தார்.    
                          
உள்ளே இருந்த பொருள்கள் பார்த்து ஒரு புறம் சிரிப்பு வந்தாலும் மறு புறம் இது யாருடைய வேலையாக இருக்கக்கூடும் என்ற கேள்வியுடன் தொடர்ந்தவர் உள்ளே இருந்த கடிதத்தில் அவரது பெயர், தொலை பேசி எண் இவற்றைப் பார்த்ததும் சுதாரித்துக் கொண்டார். பின் ஒரு மாதிரியாகத் தாம் ஒரு பேப்பரில் குறித்த எண்ணுக்குத் தம் பெயர் விலாசம் இவற்றை குறுஞ்செய்தியாக அனுப்பியதும் நினைவுக்கு வந்தது.              
                       
உள்ளே இருந்தது ஒரு தாயத்து. சனிக்கிழமை ஒன்பது முதல் பத்தரை தவிர எந்த நேரத்திலும் ஒரு சின்ன பூஜை செய்து விட்டு பின்னர் அணிந்து கொள்ளலாம். அணிந்த சிறிது நேரத்திலேயே நல்ல செய்தி உங்களைத் தேடி வருவது கண்டு ஆனந்தமடைவீர்கள் என்ற குறிப்பு வேறு! ஒரு தட்டில் வைத்து சாமி படத்துக்கு ஒரு பூ போட்ட பின் ஒரு கல்பூர வில்லையையும் ஏற்றி ஆரத்தி காட்டினார். அதற்குப் பின் தாயத்தை எங்கே கட்டிக்கொள்ளலாம் (கழுத்தில்? கையில்? இடுப்பில்?)  என்று சற்று யோசனை செய்த பின், இடுப்பு நல்லது. நிறையப் பேருக்குப் பதில் சொல்வதைத் தவிர்க்கலாம் என்று இடுப்பில் கட்டிக்கொண்டார்.    
           
அடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகள் கொடுத்த அதிர்ச்சிகளிலிருந்து மீண்டு, பழைய அனந்த ராமனாக மாற அவருக்கு சற்று  காலம் பிடித்தது. அப்படி என்னதான் நடந்தது என்கிறீர்களா - ஆனந்த அதிர்ச்சி இரண்டாம் பதிவில் சொல்கிறேனே.
 
(அப்படி என்ன நடந்திருக்கும், எதனால்  என்று யூகிப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.  சரியான யூகம் செய்பவர்களுக்கு பாயிண்டுகள் அளிக்க பதிவாசிரியர் தயாராக உள்ளார்.)
        

18.2.11

சிறு மெழுகும் பேரிங் கழற்ற உதவும்!



மின் விசிறி நின்று போனது. 

கையால் சுற்றுவதே கடினமாக இருந்ததால், பக்கத்தில் இருக்கும் மின் கருவி பழுது பார்ப்பவரை அழைத்தோம்.       
                  
சுமார் ஒரு மணி நேரத்தில் விசிறியைக் கழற்றி பேரிங்குகளை மாற்றித் திரும்பவும் மாட்டி விட்டார். மேல் பக்கம் இருந்த 6202 பேரிங்கைக் கழட்டுவதிலும் மாற்றுவதிலும் எந்த சிக்கலும் இல்லாமல் செய்து விட்டார். ஆனால் கீழே இருந்த 6201 பேரிங்கைக் கழற்ற என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்த்துக் கொண்டே வந்தேன். அவர் பாதி வேலை செய்து முடித்த பின் தான் இதைப் படம் அடுத்து மற்ற நேயர்களுடன் பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்ற, அவ்வாறே செய்துள்ளேன்.

ஒரு குழியில் பொருத்தப் பட்டிருக்கின்ற ஓடி உழைத்த பழைய பேரிங்கைக் கழற்றுதல் சுலபமான வேலை அல்ல. இந்த முறையைப் பயன்படுத்தி, சுலபமாக சர்வீசிங் செய்யலாம்.

வேண்டிய உபகரணங்கள்:
* மெழுகுவர்த்தி (குறைந்தபட்சம் கட்டைவிரல் பருமன் உள்ளது ஒன்று)
* பேரிங்கின் நடுப் பகுதியில் நுழையும் அளவுக்கு ஒரு உலோக உருளை.
* ஒரு சிறிய சுத்தி(யல்).
* கொஞ்சம் பொறுமை,
   
படம் 1 - பேரிங் நடுப்பகுதியில் மெழுகு.
   
படம் 2 - பழைய பிறந்தநாள் வர்த்தி உபயோகப் படுகிறது
           
படம் 3,4,5,6  மெழுகை வைத்து அடிக்க அடிக்க பேரிங் மேலே வருகிறது



 

படம் 7,8 மெழுகை எடுத்து சுத்தம் செய்த பின் புது பேரிங் போட குழி ரெடி.
 










(வாசகர்களும் அவர்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற எளிய யுக்திகளை மற்ற வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே!)
    

17.2.11

மாம்ப(பா)லம்

                
எல்லோர் முகத்திலும் வெறுமையான பரபரப்பு...பரபரப்பான வெறுமை...ஏதோ ஒன்று இருந்தது. பீக் அவர்ஸ் அவஸ்தை.
                             

சென்னை பரபரப்புக்கு எத்தனை பஸ், எத்தனை எலெக்ட்ரிக் டிரெயின்கள் விட்டாலும் போதவே போதாது. ஆரம்பமாகி விட்டது மறுபடி ஒரு நாள்...   
         
வியர்வை நெடி, சாராய நெடி, மல்லிகை வாசனை, வித விதமான பவுடர், சென்ட்களின் நெடி...ஒற்றைக் கையால் மேலே தொங்கிய இரும்பு கைப்பிடிகளைப் பிடித்த படி மக்கள் வெள்ளம்.

பெரும்பாலும் தெரிந்த முகங்கள்..தினமும் பரபரப்பாய் காலை ஓடுவதும் மாலை களைத்த முகத்துடன் திரும்புவதும் வழக்கம். திரும்பும்போது சில காலை பார்த்த முகங்களுடன் பல புதிய முகங்களும் இருக்கும்.

எந்த ஸ்டேஷனிலும் கூட்டமில்லாமல் இல்லை. அலை அலையாக மக்கள்...

திடீரென ட்ரெயின் நடு வழியில் நின்று விட்டது. என்ன காரணமோ...

"நின்னு போச்சு...என்ன இழவாச்சோ...லேட்டாறதே..." முதல் குரல்.

"தினமும் ரோதனை...ஒரு நாளாவது ஆஃபீசுக்கு நேரத்துக்குப் போவ முடியாது..." என் ரெயில் தோழியின் குரல்.

"ஏன்..நீ சீக்கிரம் கிளம்பறது..." இன்னொருத்தி.

"இன்னிக்கி பஸ்லயாவது போயிருக்கலாம்..."

"பஸ்லயா... அங்க பார்..." ஒருத்தி கேலியாக அருகில் தெரிந்த ரோடைக் கை காட்டினாள். அனைத்து வாகனங்களும் வரிசை கட்டி அடைத்து நின்றிருந்த காட்சி எந்த ஆபீஸ் போகிறவர்களையும் கலவரப் படுத்தும்! எந்த அரசியல்வாதி நகர்வலம் போறாரோ...இல்லை என்ன போராட்டமோ...

"இந்த தினப்படி அவஸ்தைக்கு பேசாம தற்கொலை பண்ணிக்கலாம்.." அகிலா சற்று அதிகப் படியான உணர்ச்சி காட்டினாள்.

எனக்குப் பேசக் கூடப் பொறுமை இல்லை. காலை அவருக்கும் எனக்கும் நடந்த லடாயில் மனம் நின்றிருந்தது. ."இப்படியே சண்டை போட்டீங்கன்னா ஒரு நாள் 'சட்'டென எழுதி வச்சிட்டு தூக்குல தொங்கிடுவேன்.." என்று கத்தி விட்டு வந்திருந்தேன். என் சின்னப் பையன்தான் பயந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான்.கிளம்பும்போது மெல்ல அருகில் வந்து "அம்மா...சாயங்காலம் சீக்கிரம் வந்துடு அம்மா...நீயும் நானும் கோவில் போகலாம்னு சொல்லியிருந்தியே...போலாம்மா..." என்றான். எனக்கு அவன் கவலையும் பயமும் புரிந்தது. சிரித்துக் கொண்டே அவன் கன்னத்தைத் தட்டி விட்டு வந்திருந்தேன்.

"ஏய்....உன்னைத்தான்...என்ன கனவு? தூங்கிட்டியா..." கலாவின் குரல்.

"ச்சே..ச்சே..ஏதோ ஞாபகம்...என்ன..."

"நேத்து நைட்டு டீவில புன்னகை மன்னன் படம் போட்டானே பாத்தியான்னு கேட்டேன்..."

நடந்த சண்டையில் அதுக்கெங்கே நேரம்..."இல்லை..பார்த்த படம்தானே..அதுக்கென்ன இப்போ..?"

"சகுந்தலாவோட பக்கத்து வீட்டுப் பொண்ணு ரெண்டு நாளுக்கு முன்னாலே கொளுத்திகிட்டு செத்துப் போச்சாம்...தற்கொலை செய்யறது கோழைத்தனம்னு சொல்லி திட்டிகிட்டு இருந்தா...அதான் கேட்டேன்...அதுல எடுத்த உடனே அது மாதிரி சீன்தானே வரும்..?"

'சுருக்'கென்றது. இங்கேயும் அதே டாபிக். என்ன ஒற்றுமை. நான் ஒன்றும் சீரியஸ் ஆக தற்கொலை எண்ணத்தில் எல்லாம் இல்லை என்றாலும், காலைதான் அது மாதிரி பேசியிருந்ததால் என்னிடமிருந்து இப்படி பதில் வந்தது. "கோழைத்தனமா...அதுக்கு ரொம்ப துணிச்சல் வேண்டும்..."

"வாழ்க்கைக்கு பயந்து ஓடி பிரச்னைகளை எதிர்க்கத் தெம்பில்லாம சாகறதுக்குப் பேரு துணிச்சலா தங்கம்?" கேலியாகக் கேட்டாள் பிரேமா.

பக்கத்தில் நின்றிருந்த ஆண், பெண் அனைவரும் இப்போது இதை கவனித்ததுடன் அவ்வப்போது அவர்கள் கருத்தையும் சொல்லி வந்தனர்.எனக்கு ஏனோ இந்தப் பேச்சைத் தொடர விருப்பமில்லை. மனதில் இனம் தெரியாத பயம் இருந்தது. கதவுக்கு அருகில் நின்றிருந்தோம்.
    
ட்ரெயின் ஏற்கெனவே கிளம்பி ஓடிக் கொண்டிருந்தது.
    
பேச்சு ரெயில் முன் வந்து விழுபவர்கள், தூக்கில் தொங்குபவர்கள், மருந்து குடிப்பவர்கள் என்று பயங்கரமாகவே போய்க் கொண்டிருந்தது.

"என்ன சொல்லு...அது ஒரு நொடி எண்ணம்...அந்த நொடியில தீர்மானிச்சி செய்யறதுதான் தற்கொலை. எவ்வளவு பயங்கரமாயிருந்தாலும்...அப்போ மட்டும் அவங்களை நிறுத்திக் காப்பாத்திட்டா போதும்..அப்புறம் அந்த எண்ணம் வராது...கமல் கூட ரேவதி கிட்ட அதுதான் சொல்லுவார் படத்துல..."

"இல்லடி...நிறுத்தி திட்டம் போட்டு பல நாள் யோசிச்சி சூசைட் பண்ணிக்கிறவங்க இருக்காங்க... ஜோதி ஞாபகமில்லை உனக்கு...?

"..................................." இலேசான மௌனத் தயக்கத்துக்குப் பின் "இருக்கலாம்டி...ஆனால் அது ரொம்பக் கம்மி..."

எலெக்ட்ரிக் ட்ரெயின் சைதாப்பேட்டையிலிருந்து கிளம்பியது.

"இதையெல்லாம் வரையறை செய்ய முடியாதுங்க..." என் அருகில் நின்றவன் முதல் முறையாகப் பேசினான். இவ்வளவு நேரம் பேச்சை கவனித்துக் கொண்டே வந்திருக்கிறான் போலும். கண்ணாடி அணிந்து லேசாய் தலை கலைந்து நடுத்தர வயதை தொட்டுக் கொண்டிருக்கும் வசீகர இளைஞன்.

ரெயில் மாம்பலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

"எதுக்கு தற்கொலை முயற்சி செய்யறாங்க, என்ன கஷ்டம் இதையெல்லாம் பொறுத்தது...சில தற்கொலைக்கு காரணமே கண்டு பிடிக்க முடியாது......... இருக்காது..." என்று நிறுத்தி புன்னகைத்தவன்,

'சட்'டெனத் திரும்பி மேம்பாலத்தைக் கடந்து கொண்டிருந்த இரயிலிருந்து கீழே குதித்தான்.
     
கீழே லாரி, பஸ்கள் கிரீச்சிட்டு நிற்கும் தாறு மாறான ஓசை நொடியில் கேட்டு தேய்ந்தது.