நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
10.6.12
9.6.12
ஆயிரம் மலர்களே, மலருங்கள்!
'மொளச்சு மூணு இலை விடலை; அதற்குள் ஆயிரம் பதிவுகளா!' என்று வாசகர்கள் ஆச்சரியப்படலாம்.
'எங்களு'க்கு ஒரு வயதாகும்பொ ழுது, நாங்கள் வெளியிட்ட பதிவு இங்கே "ஆண்டு நிறைவு"
ஆனால், இந்த 'ஆண்டு நிறைவு' பதிவு வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பே, (ஓராண்டு பூர்த்தியடையும் முன்பே) எங்கள் ஐநூறாவது பதிவு வெளியாகிவிட்டது!
'எங்கள்' இரண்டு வயது முடிந்து, மூன்றாம் வயதில் காலடி பதித்த பொழுது, (28-06-2011) எழுநூற்று ஐம்பது பதிவுகளைக் கடந்துவிட்டோம். அப்பொழுது நாங்கள் வெளியிட்ட (வாசகர்களுக்கு எங்கள் வணக்கங்கள்) பதிவுக்கு முப்பத்தாறு கருத்துரைகள். அந்தப் பதிவுக்கு பின்னூட்டம் இட்டவர்கள் எல்லோரும் எங்கள் ரசிகர் மன்ற நிரந்தர உறுப்பினர்கள் ஆகிவிட்டார்கள். அதில் ஓரிருவர் மட்டும் இப்போது எங்கள் ப்ளாக் பக்கம் அதிகம் வருவதில்லை.
நிற்க.
நிற்க.
'ஆயிரம்' என்று சொன்னவுடன், என்னென்ன நினைவுக்கு வருகின்றது என்று யோசித்துப் பார்த்ததில் ....
# ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணம் செய்!
# ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணம் செய்!
# கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். (இன்னும் முற்றவில்லை?)
# என்னுடைய பெண்ணுக்கு, நானும் என் பையனும் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்த நாட்களில், சைக்கிளின் பின்னாடியே சந்தோஷமாக ஓடிவந்து, 'மலர்' என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட சிறு பெண். கண்களை மலர மலர விழித்துக் கொண்டு ஆர்வத்துடன், என்னுடைய பெண்ணிடம், "அக்கா அக்கா எங்க வீட்டுல ஆ ..... யிரம் ரூபாய் இருக்கு. நாங்க ரொம்ப பணக்காரவங்க!" என்று சொன்னது ஞாபகம் வருகிறது!
எங்கள் ப்ளாக் ரசிகர் மன்ற உறுப்பினர்கள், அவர்களுக்கு ஆயிரம் என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன என்று, கருத்துரைக்கலாம், எங்களுக்கு எழுதலாம், அவர்களுடைய பதிவில் எழுதலாம்.
*******************************
'எங்கள்' ஆசிரியர்களில் ஒருவர் , ஆயிரமாவது பதிவுக்கு என்ன போடலாம் என்று கேட்டவுடன், சில பாடல்களும், படங்களும் எழுதி அனுப்பி, அந்தப் பாடல்களின் யூ குழாய் இணைப்புக் கொடுக்கலாம் என்று எழுதியிருந்தார். அந்தப் பாடல்கள், படங்கள் பட்டியல் இதோ இருக்கு. உங்களுக்குப் பிடித்த பாடல்களை, கூகிளாண்டவர் உதவியுடன், தேடிப் பார்த்து, ரசித்துக் கொள்ளுங்கள்!
பாடல்கள்:-
ஆயிரம் மலர்களே மலருங்கள்... நிறம் மாறாத பூக்கள்.
ஆயிரம் பூக்கள் மலரட்டும்.... ஆயிரம் பூக்கள் மலரட்டும்.
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்... ஒரு தாய் மக்கள்.
ஆயிரம் திருநாள் பூமியில் வரலாம்.... புது வசந்தம்
ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே..... ஒரு குடும்பத்தின் கதை
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..... கை கொடுத்த தெய்வம்
ஆயிரம் நிலவே வா ..... அடிமைப் பெண்
(இந்தப் பாடல் காட்சியில் ஒரு புதுமை என்ன என்றால், கதாநாயகன் சேலை உடுத்திக்கொண்டும், கதாநாயகி வேட்டி போன்று வெள்ளை உடை அணிந்துகொண்டும் இருப்பதுதான்!)
ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் .... அடுக்குமல்லி
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ..... அரசகட்டளை.
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு.... கற்பகம்
ஆயிரம் நிலவு ஆயிரம் கனவு ....... அவளுக்கென்று ஓர் மனம்.
ஆயிரம் கோடி.... கரிசல் காட்டுப் பூவே.
ஆயிரம் தாமரை மொட்டுக்களே ....அலைகள் ஓய்வதில்லை.
ஆயிரம் ஜன்னல் வீடு .... வேல்
ஓராயிரம் பார்வையிலே... வல்லவனுக்கு வல்லவன்.
ஓராயிரம் கற்பனை.... ஏழைக்கும் காலம் வரும்.
வாரணம் ஆயிரம் - கேளடி கண்மணி.
சுகம் ஆயிரம் என் மனதிலே...... மயங்குகிறாள் ஒரு மாது
சுகமோ ஆயிரம்... துணையிருப்பாள் மீனாட்சி
அழகு ஆயிரம்..உலகம் முழுவதும் .... உல்லாசப் பறவைகள்.
படங்கள்:-
ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆயிரம் ஜென்மங்கள்
ஆயிரம் நிலவே வா
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வசிந்தாமணி.
ஆயிரம் வாசல் இதயம்.
ஆயிரம் பொய்
ஆயிரம் முத்தங்கள்
ஆயிரம் ரூபாய்
ஆயிரத்தில் ஒருவன்.
ஆயிரத்தில் ஒருத்தி
வாரணம் ஆயிரம்
கைதி கண்ணாயிரம்!
நாடகங்கள்:-
ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி.
அலாவுதீனும் ஆயிரம் வாட் பல்பும்
(அப்பாதுரை சார்! அது 1000 இல்லை; 1001 Arabian .... )
நாடகங்கள்:-
ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி.
அலாவுதீனும் ஆயிரம் வாட் பல்பும்
(அப்பாதுரை சார்! அது 1000 இல்லை; 1001 Arabian .... )
(ஆயிரம் தொடர்புடைய மீதிப் பாடல்கள், படங்கள் நினைவுக்கு வருபவர்கள் பின்னூட்டத்தில் பதியலாம்.)
வாழ்த்தப் போகும் வாசகர்கள் எல்லோருக்கும் எங்கள் 1000 நன்றிகள் !
வாழ்த்தப் போகும் வாசகர்கள் எல்லோருக்கும் எங்கள் 1000 நன்றிகள் !
8.6.12
எட்டெட்டு பகுதி 20 :: மாயாவுக்கு அம்மா ஆவி செய்த உதவி!
எட்டெட்டு பகுதி 19 க்கு இது சுட்டி<<
பிங்கியின் போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட் - (ஒரு பகுதி:)
பெயர் : பிங்கி
இனம்: பெண்
வயது: சுமார் இருபது.
உடல் சோதனைக்குக் கொண்டுவரப்பட்ட நாள்: 08-08-08.
இறந்த நேரம்: காலை 08-08.
இறப்புக்கான காரணம்: "பருகிய கோக்க கோலா பானத்தில், சாலிசைக்ளிக் ஆசிட், இப்ரால் (ஆயிரம் எம் ஜி) ஆகியவை கலந்திருப்பது தெரிகின்றது. ஆல்கஹாலில், இவை இரண்டும் கலந்தால், அது உயிருக்கு பேராபத்தை விளைவிக்கும். பரிசோதனையில், வேறு எந்த சந்தேகத்துக்குரிய பொருட்களோ தடயங்களோ கிடைக்கவில்லை. மேலும் இறந்து போன இந்தப் பெண் கல்யாணமாகாத கன்னிப் பெண் என்பதையும் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன."
பிணப் பரிசோதனை தெரிவு செய்த போலீஸ் ஆபீசர் பெயர்: .............."
*****************************************************
(ஆவியுலகில்...)
மாயா: என்னம்மா இது அநியாயமாக இருக்கு! பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிவிட்டதே!
அம்மா: "மாயா நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். 'இந்த உலகத்துக்கு வந்த பிறகு, அந்த உலகப் பிரச்னைகள் நமக்கு வேண்டாம்' என்று. நீதான் கேட்காமல் என்னென்னவோ பிரயத்தனங்கள் செய்தாய். விதியை மதியால் வெல்வதற்குக் கூட விதி சரியாக அமையவேண்டும். மேலும் ..."
மாயா: அம்மா ஓ ஏ சாப்பிட வேண்டிய கோக்க கோலாவை, பிங்கி எப்படி, ஏன் குடித்தாள்?
அம்மா: "உனக்கு மட்டும் சொல்கிறேன். நீ கே வி யிடம் - ஓ ஏ வின் கோக்க கோலா பானத்தில் தன்னிலை அறியும் மாத்திரையைப் போடச் சொன்ன பொழுது, நானும் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய எண்ண அலைகள் 'பரம்' வரை சென்றுவிட்டன. அங்கிருந்து உடனடியாக எனக்கு ஒரு எம் எம் எம் (மானசீக மெயில் மெசேஜ்) வந்தது. அதுல பரம், 'அந்தக் கோக்க கோலாவை, ஓ ஏ பருகக் கூடாது' என்று உணர்த்தியிருந்தார். "
"அந்த நேரத்திலிருந்து, கே வி யின் மனதில், காலு சிங் மனதில் எல்லாம் புகுந்து, என்னென்னவோ செய்துப் பார்த்தேன். எதுவும் பலனளிக்கவில்லை. கே வி, (உனக்கு) மாயாவுக்கு உதவியே தீருவேன் என்று உறுதியாக இருந்தார். காலு சிங், கே வி மாத்திரை கலந்ததைப் பார்க்கவில்லை. மறக்காமல், ரூம் உள்ளே கோக்க கோலாவைக் கொண்டு போய் வைத்தவுடன், அதில் ஆஸ்பிரின் மாத்திரையைப் போட்டுவிட்டான். நல்ல வேளை - அந்த நேரம், ஓ ஏ பாத் ரூமில் இருந்தார். டெலிபோனுக்குப் பக்கத்தில், காலு சிங் கோக்க கோலாவையும், ஆரஞ்சு ஜுசையும் வைத்துவிட்டு அகன்றுவிட்டான். "
"வேறு எந்த வழியும் தோன்றாத நிலையில், மும்பை ஹோட்டல் பிராஜக்ட் பார்த்துக் கொள்ளும் மானேஜரின் மனதில் புகுந்து, அவரை, ஓ ஏ வுக்கு போன் செய்ய வைத்தேன். அவருக்கு ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி, திங்கட்கிழமையன்று லீவு வேண்டியதிருந்தது. இந்த நேரத்தில் போன் செய்தால், ஓ ஏ லீவு கொடுத்துவிடுவார் என்று அவர் மனதில் தோன்றவைத்தேன். அவர் போன் செய்தவுடன், பிங்கி போனை எடுத்தாள்."
"போன் செய்த மானேஜர் 'சும்மா' லீவு மட்டும் கேட்டால், கிடைக்காது என்பதால், போனை பிங்கி எடுத்தவுடன், 'மேடம், மும்பை ஹோட்டல் பிராஜக்ட் மிகவும் சரியாக நிறைவேறி வருகின்றது. ஹோட்டலை, குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே திறந்துவிடலாம் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்' என்று தொடங்கி, மெதுவாக தன்னுடைய லீவு சமாச்சாரத்திற்கு வந்தார்."
"கேட்டுக் கொண்டிருந்த பிங்கிக்கு ஒரே சந்தோஷம். மும்பை ஹோட்டல் பிராஜக்ட் வெற்றிகரமாக முடிந்தால், ஓ ஏ வுடன் தன்னுடைய திருமணம் உடனே நடைபெறும் என்று சந்தோஷமடைந்தாள் அவள். அந்த சந்தோஷத்தில், காலு சிங் கொண்டு வந்து வைத்த குளிர் பானத்தை, அது என்ன என்று கூடப் பாராமல், அனிச்சையாக கையில் எடுத்துப் பருகத் தொடங்கியிருந்தாள் பிங்கி."
(தொடரும்) .... "மாயாவின் அம்மா ஆவி"
(தொடரும்) ..... "பதிவாசிரியர்" (வேறு வழி இல்லை!)
7.6.12
நடக்கும் நினைவுகள் (07)- சைக்கிள் அனுபவங்கள்
காலை நடைப் பயிற்சி கிளம்ப சற்றே நேரமாகி விட்டது. வாசலில் செக்கியூரிட்டி
இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார்! சப்தமில்லாமல் தாண்டிப் போனேன்.
தூங்குபவர்களைத் தொந்திரவு செய்வது எனக்குப் பிடிக்காது! வழக்கமாக கடையைத்
திறந்து சாம்பிராணி போட்டுக் கொண்டிருக்கும் கடையில் பத்து பேர் டீ
குடித்துக் கொண்டிருந்தார்கள்.
தெரிந்த முகம் ஒன்று கைகளைத் தூக்கி சலாம் வைத்ததற்கு கை தூக்கி விட்டு நடந்தேன்.
பின்னால்
'சலசல' வென்று பேச்சுக் குரலோடு சைக்கிள் மணியோசை கேட்டது..."டேய் பெல்
அடிக்காதடா....அமைதியான நேரத்துல தொந்தரவா இருக்கு" என்றான் ஒருவன்...
"அதுக்குதான் மச்சி அடிக்கறது.." என்று பெரிதாகச் சிரித்தபடி
நான்கைந்து சைக்கிள்கள் கடந்து சென்றன. இரண்டு சைக்கிள்களில் முன்புற
'பாரி'ல் இருவர் உட்கார்ந்து கதையடித்தவண்ணம் சென்றனர். 'பைக்கில்தானே
இப்போதெல்லாம் செல்வார்கள்... சைக்கிளில் செல்வது வித்தியாசமாக இருக்கே'
என்று எண்ணியபடி நடந்தேன்...
அந்த பாரில் உட்கார்ந்து செல்லும் அனுபவம் எனக்கும் பல வருடங்கள் முன்பு உண்டு....
என்
நண்பர்கள் நிறைய பேர் சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்களாக இருந்தபோது எனக்கு
மட்டும் சைக்கிள் ஓட்டத் தெரியாதது கஷ்டமாக இருந்த நேரம். அவர்களுக்கு
முன்னால் கற்றுக் கொள்ளவும் 'கெளரவம்' தடுத்தது! என்னுடன் சைக்கிள் ஓட்டத்
தெரியாமல் 'கம்பெனி' கொடுத்துக் கொண்டிருந்த கணபதி எப்போது கற்றுக்
கொண்டான் என்று தெரியாமலேயே திடீரென பெரிய சைக்கிள் ஓட்டி
வெறுப்பேற்றினான். "திருக்காட்டுப்பள்ளி போயிருந்தேன் இல்லே.... அங்க
கத்துகிட்டேண்டா..."
சாதாரணமாக கோடை விடுமுறைகளில் என் நண்பர்கள் பெரும்பாலும் வெளியூர்
சென்று விடுவார்கள்... அந்த நேரத்துக்காகக் காத்திருந்தேன். அந்த ஹவுசிங்
யூனிட்டில் இரண்டு கடைகள் உண்டு. இரண்டில் சாதுவாகத் தெரிந்த கடையில் ஆறு
மாதமாகவே 'பழக'த் தொடங்கியிருந்தேன். நிறையப் புத்தகங்கள் படிக்கும்
சசிகுமார் என்ற அந்த இளைஞன் லைப்ரரி வந்தபோதும் நட்பு அதிகமாக, அவன்
கடையில் அமர்வது, அரட்டை அடிப்பது வாடிக்கையானது.
அவன் கடையில் கருநீலப் பெயின்ட் அடித்து என் முழங்கால் சைசில் ஒரு
சைக்கிள் இருந்தது. அதுதான் என் கவனத்தைக் கவர்ந்தது. தக்க நேரத்துக்காகக்
காத்திருந்தேன். கோடை விடுமுறை வந்து நண்பர்கள் பட்டாளம் குறைந்ததும்
'அவர்' கணக்கிலும் 'நைட்' வாடகையிலும் எடுத்துப் பழகத் தொடங்கினேன்.
முழங்கால் முழங்கைக் காயங்கள் தோன்றின. அந்தச் சின்ன சைக்கிளில் ஏறி
அமர்ந்து ஓட்டத் தொடங்கினால் நேராக வராமல் 45 டிகிரி சாய்மானத்தில் ஓடத்
தொடங்கி, விரைந்து, பக்கப் பிளாட்ஃபார்ம்களைப் பதம் பார்த்து விழுவது
வாடிக்கையானது.
என் 'அவர்' கணக்கு முடியும் நேரத்துக்காக 'நாலாப்பு' 'அஞ்சாப்பு'ப்
படிக்கும் சிறு பெண்கள் சைக்கிளுக்காகக் காத்திருப்பார்கள். என்னைப்
பார்த்துச் சிரிப்பார்கள். என் நேரம் முடிந்து சசிகுமார் கட்டளைப் படி
அப்படியே அவர்கள் கையில் சைக்கிளைத் தந்ததும் அவர்கள் அதில் அனாயாசமாய் ஏறி
ஓட்டத் தொடங்குவது எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்தும்! என்னை வேறு
ஒரு ஓரப்பார்வைப் பார்த்து ஓட்டுவார்கள். கிண்டலோ, பெருமையோ... என்
இயலாமையில் எனக்குக் கோபம்தான் வரும்!
அப்புறம் மெல்ல, மெல்ல சைக்கிள் கைவசம், கால்வசம் ஆனவுடன் அதை விட்டு
இறங்கவே மனம் வராது. இரவு தூக்கத்தில் கூட சைக்கிளில் செல்வது போலவே
இருக்கும்! ஆனால் பெரிய சைக்கிளில் ஏற மனம் துணியாமல் ரொம்ப காலம் கடந்தது.
குரங்குப் பெடல் போட்டு சிலர் ஓட்டுவார்கள். அது இன்றளவும்
எனக்குக் 'கால்' வந்ததில்லை! கொஞ்ச நாள் கால் வைத்து ஏற மேடான ஒரு இடம் வரை
சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நடப்பேன். ஏறி உட்கார்ந்து ரோடை
நோட்டமிடுவேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வாகனமோ, நடைவாசிகளோ இல்லைஎன்றான
பின் வலது பக்கம் பெடலை முக்கால் தூக்கித் தயாராய் வைத்திருந்து, முழு
பலத்தில் அழுத்திக் கிளம்ப வேண்டும். முதல் கொஞ்ச நாள் அந்த வேக
ஸ்டார்ட்டிங் சரி வராமல் பாதி சாய்ந்தபடி சென்று கீழே விழுந்து, அல்லது
விழுமுன் காலை ஊன்றி மறுபடி தள்ளிக் கொண்டு பழைய மேட்டுக்கு வந்து
'ஸ்டார்ட்' செய்வேன்! இறங்கும் நேரம் வரும்வரைக் கவலை இல்லை. இறங்கும்
நேரம் சைக்கிளை ஸ்லோ செய்து நாணல் நாகேஷ் மாதிரி ஒரு மேட்டுக்கு, அல்லது
தந்தி கம்பத்துக்குச் சுற்றி வரவேண்டும்!
சசிகுமார் கடையில் நண்பர்கள் கூடுவதும் வாடிக்கையாக, சில நாட்களில்
மதியங்களில் கடை வசூல் தயவில் அவன் கடையில் இருக்கும் இரண்டு மூன்று
சைக்கிள்களில் நண்பர்களுடன் சினிமா கிளம்புவது தொடங்கியது. அப்போதுதான்
இந்த 'பார்'ப் பயணங்களும் தொடக்கம்! போகும் வழியில் எங்காவது மணல் பகுதி
வந்தால் நான் உஷாராகி விடுவேன். முன்னால் உட்கார்ந்திருக்கும் என்னை
அப்படியே உட்கார வைத்து விட்டு சசிகுமார் "புடி..புடி" என்று கத்திக்
கொண்டே இறங்கி விடுவான். நான் பேலன்ஸ் பண்ண வேண்டுமாம். முதல் கொஞ்ச நாள்
'பப்பரப்பா' என்று விழுந்தாலும் நாளடைவில் பழகி விட்டேன்!
அப்போதும், பின்னால் கல்லூரிக் காலங்களிலும் இந்த பாரில் அமர்ந்து
போகும் ஸ்டைல் எங்களால் மிகவும் விரும்பப் பட்ட ஒன்று. பின்னால் கேரியரில்
அமர்ந்து போவது 'வயசாளிங்க' செய்யும் செயலாகத் தோன்றிய காலம்!
'கர்ள்ஸ்'க்கு முன்னால் ஸ்டைல் காட்டுவதில்லை. முயற்சிக்கும் முன்னரே
பாடம் படித்து விட்டதால் அடக்கி வாசிப்பது வழக்கமாயிற்று. ஒருமுறை
புதுக்கோட்டை ரோடில் வளைந்து வளைந்து 'கட்' அடிக்கிறேன் என்று வந்த போது
ஐந்தாவது 'கட்'டில் சைக்கிள் ஹேண்டில் பார் நிலைகுத்தி ஸ்ட்ரைக் செய்து
திரும்ப, அப்படியே நெஞ்சில் முட்டி, பின் சக்கரம் தூக்கிக் கொண்டு கீழே
விழுந்து தேய்த்துக் கொண்டே சென்ற போது எதிரே ஸ்போர்ட்ஸ் சைக்கிள்களில்
இரண்டு 'கர்ள்ஸ்'....!
பள்ளி செல்லும்போதும் வரும்போதும் சைக்கிளில் தாண்டிச் செல்வோரைக்
காணும்போது "தனியாகத்தானே போறான்... நடந்து போறானே...டபிள்ஸ் ஏத்திட்டுப்
போகணும்னு தோணாதோ... நாம் சைக்கிள் ஓட்டும் போது நடந்து செல்வோரை ஏற்றிச்
செல்ல வேண்டும்' என்றெல்லாம் புரட்சிகர எண்ணங்கள் தோன்றும். எனக்கே
சைக்கிள் கிடைத்தவுடன் இந்த எண்ணங்கள் நினைவிலேயே இல்லை!
மழையில் நனைந்து கொண்டே குமரன் தியேட்டர், யாகப்பா, ராஜா கலையரங்கம்,
ஞானம், அருள், ஜூபிடர் என்று தியேட்டர் தியேட்டராக அலைந்த நாட்கள்
இனிமையானவை. சசிகுமார் நண்பனாகிப் போனதால் அப்புறம் என்னிடம் காசு
வாங்குவதில்லை. அப்புறம் வந்த வருடங்களில் சினிமா பார்க்கும் அலைச்சல், நண்பர்களுடன்
சைக்கிளில் கும்பலாகச் செல்லும் அனுபவங்கள்... இந்த ஜோரில் அப்போது நான்
அவ்வப்போது செய்து கொண்டிருந்த லைப்ரரியன் வேலையைச் செய்ய விடாமல் வந்து
அழைத்து அழைத்து அனத்துவான், அனத்துவார்கள். அதே போல், அவன் கடையில்
நாங்கள் உட்கார்ந்து அவன் தொழிலைக் கெடுத்து அரட்டை அடிக்கும் நேரம்
நோட்டில் பதிவு செய்வது, காற்றடிப்பது போன்ற வேலைகள் செய்வோம். மாலைகளில்
மீனாட்சி கல்லூரி மைதானப் பொருட்காட்சி, மதியங்களில் திரைப் படங்கள்...
சைக்கிள் கற்றுக் கொள்ள ஆரம்பித்த புதிதில் ஒரு சிறு வில்லனும் இருந்தார்.
வசந்தமாளிகை சிவாஜி கணேசன் மாதிரி நெற்றியில் புரளும் முடியுடன் இருப்பார்.
லேசான விபூதிக் கீற்றின் கீழ் சற்றே பெரிய குங்குமப் பொட்டு
வைத்திருப்பார். ஸ்போர்ட்ஸ் சைக்கிளில் சுற்றி வருவார். வேஷ்டி அணிந்து க்ரீம் கலரில் காலர் வைத்த ஒரு மலேஷியா டீ ஷர்ட் அணிந்திருப்பார். எப்போதும்
ஆங்காங்கே தெருக்களில் நின்று அந்தத் தெரு பெண்களிடம் கும்பலாகப் பேசிக்
கொண்டிருப்பார். நான் அந்தக் குட்டி சைக்கிளில் கற்றுக் கொள்ளும்
நாளிலிருந்து என்னை அந்தப் பெண்கள் மத்தியில் நின்று கொண்டு சைக்கிள்
சைசோடு சம்பந்தப் படுத்திக் கிண்டல் செய்வார், அதிகாரம் செய்வார்!
குங்குமப் பொட்டா, லேடீஸ் சைக்கிள் என்று நாங்கள் அழைக்கும், அவர்
ஸ்போர்ட்ஸ் சைக்கிள் என்று சொல்லும் அவரின் அந்த சைக்கிளா, பெண்களுடனேயே
பேசும் பழக்கமா ஏதோ ஒன்று அவரை எனக்குப் பிடித்ததில்லை. அவர் இருக்கும்
தெருவை அவாய்ட் செய்து விடுவேன். கவனிக்காமல் அந்தத் தெருவுக்குள் சென்று
விட்டால் அருகிலிருக்கும் தந்தி கம்பமா, சுவரா ஏது பக்கமோ அங்கு மோதி
விடுவேன்! அப்புறம் வந்த வருடங்களில் அவரை லட்சியம் செய்ததில்லை.
கொஞ்ச நாள் ஸ்கூலுக்கு அண்ணனின் நண்பர் சைக்கிளில் சென்று வந்ததும்,
அப்புறம் மதுரை வந்து சொந்தமாக முதலில் செகண்ட் ஹேன்டிலும், அப்புறம்
புதுசாகவேயும் சைக்கிள் வாங்கிய நினைவுகளும் சுகமானவை. ஹேண்டில் பார்களில்
குஞ்சம் வைத்து, இரண்டு பெல் வைத்து, டைனமோ வைத்து.... அப்புறம் குஞ்சங்களை
நீக்கி விட்டு ஒரு பெல்லை நீக்கி.. (நண்பர்கள் 'பாரி'ல் உட்கார தடையாக
இருக்கிறதென்று) வாரத்துக்கு இரண்டு தரம் சைக்கிளைத் துடைத்து,
அவசரத்துக்குக் கடைக்குப் போக, அங்கிங்கு போக என்று கேட்பவர்களுக்கு
"மன்னிச்சுக்குங்க" என்று பொஸஸிவ் பாசம் காட்டி, அண்ணனுக்கு, அப்பாவுக்கு
டிரைவராய் கிட்டத்தட்ட மதுரை முழுதும் ஒரு சமயம் கோச்சடை வரை, ஒரு சமயம்
கப்பலூர் வரை என்று அவரை சைக்கிளில் டபுள்ஸ் அடித்து, வாரச்சந்தைக்கு
வாராவாரம் சென்று காய்கறி வாங்கி வந்து, மாதாந்திர மளிகைப் பொறுப்பைத்
தலையில் (சைக்கிளில்!) சுமந்து, தங்கையை பள்ளியில் விட்டு,
அழைத்துவந்து...(அப்போது அவளிடம் ஈவ் டீசிங் செய்த சிலரை டீல் செய்த வீர
வரலாறு தனிக்கதை!)... அப்புறம் அவந்தி கரேலி வருகைக்கப் பிறகும் சைக்கிள்
பாசம் விடவில்லை!
ரொம்ப காலம் சைக்கிள் அலுக்கவே இல்லை!
பிற்ச்சேர்க்கை!
இதைத் தொடர்பதிவாக எழுத அழைக்கலாமே என்ற மோகன் குமார் யோசனைக்கு நன்றி. தொடர்ந்ததுண்டே தவிர முதன் முதலாக ஆரம்பித்ததில்லை! எனவே இந்த யோசனையைச் சொன்ன திரு மோகன் குமார் அவர்களையும்,
ரொம்ப நாளாக பதிவே போடாமல் தப்பித்து வரும், இந்தப் பதிவில் குரங்குப்பெடல் பற்றி ரசனையாகச் சொல்லியிருக்கும் பதிவர் ரசிகமணி திரு பத்துஜி அவர்களையும்
இதைத் தொடர அழைக்கிறோம்.... நீங்கள் உங்களுக்கு விருப்பமான எத்தனை பேரை வேண்டுமானாலும் தொடர அழைக்கலாம்.
பிற்ச்சேர்க்கை!
இதைத் தொடர்பதிவாக எழுத அழைக்கலாமே என்ற மோகன் குமார் யோசனைக்கு நன்றி. தொடர்ந்ததுண்டே தவிர முதன் முதலாக ஆரம்பித்ததில்லை! எனவே இந்த யோசனையைச் சொன்ன திரு மோகன் குமார் அவர்களையும்,
ரொம்ப நாளாக பதிவே போடாமல் தப்பித்து வரும், இந்தப் பதிவில் குரங்குப்பெடல் பற்றி ரசனையாகச் சொல்லியிருக்கும் பதிவர் ரசிகமணி திரு பத்துஜி அவர்களையும்
இதைத் தொடர அழைக்கிறோம்.... நீங்கள் உங்களுக்கு விருப்பமான எத்தனை பேரை வேண்டுமானாலும் தொடர அழைக்கலாம்.
4.6.12
நியாயமா? --- சிறுகதை
பஸ்ஸில், கூட்டத்துக்கு நடுவே கொஞ்ச தூரத்தில் ஒரு முகம் என்னை
அடிக்கடி பார்ப்பது போல இருந்தது. சற்று அறிமுகமான முகமாகவும் தெரிந்தது.
நான் பார்ப்பதை அறிந்த அந்த முகமும் என்னைப் பார்த்து புன்னகைத்தது. மனம்
உணருமுன்னமேயா.... என் உதடு அவன் பெயரை உச்சரித்து விட்டது. மூளை முதலில்
உதட்டுக்குத்தான் செய்தியனுப்பியது போலும்! உதடு உச்சரித்ததும் மனமும்
அவனை அடையாளம் கண்டது.
"செங்குட்டுவன்... செங்குட்டுதானே?"
"ஆமாம்... நானும் உன்னைப்
பார்த்ததுமே ரவி மாதிரி இருக்கேன்னுதான் பார்த்துட்டே வந்தேன்..."
உண்மையில் இவன் அண்ணன் சேரன்தான் என் வகுப்பு. இவர்களின் அப்பா தன்
மகன்களுக்கு சேரன், செங்குட்டுவன் என்று அழகாகப் பெயர் வைத்திருந்தார்.
அப்போதெல்லாம் இவன், இன்னும் சில சிறிய வயது பையன்கள், குறிப்பாக என்
வகுப்புத் தோழர்களின் தம்பிகளுடந்தான் என் விளையாட்டு இருந்தது!
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னதான எங்கள் சிறு வயது நினைவுகளைப்
பேசி, சேரனின் அலைபேசி எண், இருக்குமிடம் விவரங்கள் தெரிந்துகொண்டு, பரஸ்பர குசல விசாரிப்புகளுக்குப் பிறகு என் நிறுத்தம் முன்னதாகவே
வந்ததால் விடைபெற்றுக் கொண்டு நான் இறங்கி விட்டேன்.
நான்
சென்றுதான் கடையைத் திறக்க வேண்டும். நகரின் பிரபல மருந்துக் கடைக்
கிளைகளில் ஒன்று அது. நான்தான் இன்சார்ஜ். என் கடையில் இரண்டு பையன்களும்
ஒரு பெண்ணும் வேலை பார்த்தார்கள். நான்தான் பொறுப்பு என்பதால் ஏதோ பெரிய
லெவலில் நினைத்து விடாதீர்கள். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்! பி.எஃப், இ
எஸ் ஐ பிடித்தம் போக எட்டாயிரத்து சொச்சம் கைக்குக் கிடைக்கும்.
அவ்வளவுதான். ஆனால் நாள் முழுக்க ஏ ஸியில் இருக்கலாம்! என் மனைவி ஒரு
தனியார் பள்ளியில் வேலை பார்த்து, அதில் கொஞ்சம் காசு வரும். கிட்டத்தட்ட
ஆயா வேலை. ஆனால் உறவுகளிடமும் தெரிந்தவர்களிடமும் ஆசிரியை என்று சொல்லி
வைத்திருக்கிறேன்! கௌரவம்!
கடை திறந்து வழக்கமான ஊதுபத்தி, சூடச் சம்பிரதாயங்கள் முடிந்து, கொஞ்ச நேர வியாபாரங்கள் கவனித்த பிறகு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தது.
"டேய்... ஹாட்சிப்ஸ்ல
போய் ரெண்டு டீ வாங்கிட்டு வாடா...." சிறுவயது நண்பன் செங்குட்டுவனைச்
சந்தித்தது மறுபடி ஞாபகம் வந்தது. கூடவே கணேஷ் நினைவும் வந்தது.
செங்குட்டுவனைப் பார்த்த சந்தோஷத்தில் கணேஷுக்கு ஃபோன் செய்தேன்.
அவனும் என் சிறுவயதுத் தோழன்தான். ஆறேழு வருடங்களுக்கு முன்னால் தற்செயலாக
இதே கடைக்கு வந்த போது ஆச்சர்யத்துடன் சந்தித்துக் கொண்டோம். அவன் ஒரு
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக அறிந்து கொண்டேன். கிட்டத்
தட்ட என் லெவல். இந்த விவரம் எதற்கு என்கிறீர்களா.... சொல்கிறேன்.
இந்த ஆறேழு வருடத்தில் நானும் கணேஷும் ஏழெட்டு முறை சந்தித்திருப்போம்.
அவ்வளவுதான். தீபாவளிக்கோ பொங்கலுக்கோ அலைபேசியில் அழைத்து சம்பிரதாயமாக
வாழ்த்து சொல்லுவேன். அதுவும் நான்தான் செய்து கொண்டிருந்தேன். அவன் அழைக்க
மாட்டான். அந்த வித்தியாசம் முதலில் நான் உணராமல் இருந்தேன். எனக்கு அந்த
நாளில் அவனுடன் ஊர் சுற்றிய நாட்களும், பார்க் மணலில் மணிக் கணக்கில்
பேசிக் கொண்டும், பல நாட்கள் பேச்சு தேவை இல்லாமல் அருகருகே அமர்ந்திருந்த
நினைவுகளும் இருந்தன. அவனிடம் அவை இல்லை என்பதை அப்புறம் தெரிந்து
கொண்டேன்.
"டேய்... சும்மா பழைய கதையை மட்டுமே பேசறேடா...."
அப்புறம்
அமைதியானேன். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பள்ளிக்
காலத்துக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு அப்புறம் சந்திக்கிறோம்.
இடையில் வெவ்வேறு நண்பர் வட்டம் இருவருக்கும் அமைந்திருக்கும்தான். ஆனால்
நாங்கள் வேறு என்ன பேசிக் கொள்ள முடியும்? இப்போது அவன் என்ன செய்கிறான்,
அவன் வீட்டு நிலவரம் குறித்தும் பேசுகிறேனே.... அப்புறம் ஏன் இப்படிக்
கேட்கிறான்? அந்த பழைய நட்பு என்ன ஆனது? தொடர்ந்து சந்தித்துப் பேசிக்
கொண்டால் தற்காலத்திலும் நெருக்கமாகப் பேச... முடியுமா.... என் சிந்தனையிலேயே
அந்த வார்த்தை முற்றுப் பெறாமல் சந்தேகத்தில் தவித்தது.
எவ்வளவு
நெருக்கமான நண்பர்களாக இருந்தென்ன... காலம் இப்படி ஒரு இடைவெளியை உருவாக்க
முடியுமா? அவன் மனைவி பற்றி, அவன் பிள்ளைகளைப் பற்றி, சம்பிரதாயமாக விசாரிக்க நானும்
பழகிக் கொண்டேன். அவன் அதில் டிகிரி வாங்கியிருந்தான். விலகவும்
முடியவில்லை. எதற்கு விலக வேண்டும்? விரோதம் ஒன்றும் இல்லை. நாங்கள் என்ன
அடிக்கடியோ தினந்தோறுமோவா சந்திக்கிறோம்....? எப்போதோ ஒருமுறை சந்தர்ப்பம்
வாய்ப்பு ஏற்படும் போது சந்திக்கிறோம்.
செங்குட்டுவனைச் சந்தித்த விவரம் சொல்ல அவனைத்தான் அழைத்தேன். அவனும் ஆச்சர்யப் பட்டான்.
"டெல்லியில் இல்லே இருந்தாங்க.... சேரன் எங்கிருக்கானாம்?"
"சிங்கப்பூர்ல இருந்தானாம்.... இப்போ அவனும் சென்னைலதான் இருக்கானாம்.... ஏதோ கம்பெனி பெயர் சொன்னான். ஆடிட்டரா இருக்கானாம்."
என்னைப் பழைய கதை பேசுபவன் என்று சொன்ன கணேஷ் கொஞ்சம் பழைய நினைவுகளுக்குப் போனான்.
சேரனும்
எங்களுக்கு நெருக்க நண்பன்தான். சீரியசாகப் பேசிக் கொண்டிருப்போம்.
அருகில் வந்து "ஓ... பாத் பாத் பாத் பாத் பாத் பாத் பாத் பன் ஜாயே..."
என்று குர்பானி பாடலை இழுத்துப் பாடுவான். இப்போதும் குர்பானி பாடல்
கேட்டால் சேரன் நினைவுடன் எனக்குப் புன்னகை வரும். இன்னொரு பாடல் மதன
மாளிகைப் பாடல்.... 'அண்டர் த மாங்கோ ட்ரீ' என்ற உஷா உதுப் பாடலில் நடுவில்
"மல்லிகைப் பூ..." என்று வரும். வெறுப்பேற்றுவது போல
அருகில் வந்து,அந்த வரியை மட்டும் பாடுவான். சுதந்திரதின விழாவில் கோபால
செட்டியாக வந்து தொப்பையுடன் வசனம் பேசிச் செல்லுவான். எங்களை
முன்வரிசையில் பார்த்ததுமே அவனுக்குத் திக்கத் தொடங்கி விடும்! . அவன்
பேசிய வசனத்தைச் சொல்லி நாங்கள் கிண்டல் செய்ய, கலங்கிய கண்களுடன் அடிக்க
ஓடி வருவான். அப்புறம் சமாதானமாவோம்!
சிந்தனை இதிலும் செயல்கள் வியாபாரத்திலுமாகப் பொழுது ஓடிக் கொண்டிருந்தது.
பல நாட்களுக்குப் பிறகு, சேரனின் அலைபேசி மூலமாக சஸ்பென்சாக ஒருநாள் பேசி அறிமுகம் செய்து கொண்டேன். நான்
எதிர்பார்த்த உணர்வுப் பகிர்வு வரவில்லை. ரொம்ப ஜென்டிலாக சில கேள்விகள்
வந்தன. விசாரித்த போது அவன் வேலை செய்யும் நிறுவனம் நான் இருக்கும்
வீட்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டும் என்று தெரிந்தது.
ஒரு நாள் வந்தான்.
மனைவியிடமும் பெண்ணிடமும் சொல்லி
வைத்திருந்தேன். வாசலில் வண்டி வந்து நின்றபோதே கவனித்தேன். உடையிலேயே ஒரு
தோரணை தெரிந்தது; நடையிலும்!
"வா.......சேரன்....." அவன் தோற்றம் பார்த்ததுமே 'வா'க்கு அப்புறம் 'டா' தானாக வாய்க்குள்ளேயே கரைந்து போனது.
பழசையே பேசுகிறேன் என்ற குற்றச்சாட்டை ஏற்கெனவே வாங்கியிருந்ததால்
இவனிடம் கவனமாக இருந்தேன். ஆனால் நாங்கள் பழகிய நாட்களும், அந்த
ஜோக்குகளும் விளையாட்டும் மனதில் அலையைடித்ததைத் தாங்க முடியாமல் அவனை
நட்புடன் பார்த்தேன். அவன் பார்வையில் பதில் பாசத்தைத் தேடினேன். அவன்
பார்வை வீட்டை அளவெடுத்துக் கொண்டிருந்தது.
மனைவி, பெண் அறிமுகத்துக்குப் பின் அவன் என் வேலை பற்றியும் வருமானம்
பற்றியும் பேசத் தொடங்கினான். ஷேர் என்றான். டீமேட் என்றான். ஒவ்வொரு
மணித்துளியையும் வீண் செய்யாமல் எப்படி சம்பாதிக்கலாம், அவன் எப்படி
சம்பாதிக்கிறான் என்பதைப் பற்றியே பேசினான். அவன் வீட்டு ஏ ஸி பற்றிப்
பேசினான். காரை மனைவி கொண்டு போவது பற்றிப் பேசினான். என்னை அதிகம் பேச
விடவில்லை. நாங்கள் கொடுத்த காஃபியை எட்டிப் பார்த்து விட்டு இடது கை
இரண்டு விரலால் பற்றி அரை மனதாய்க் குடித்தான். அடிக்கடி தனக்குத் தானே
விசிறிக் கொண்டு மின்விசிறியை அதிருப்தியாய்ப் பார்த்தான். மனைவி "தோசை
வார்க்கலாமா" என்று கேட்ட போது நாசூக்காய், ஆனால் திடமாய் மறுத்தான்.
இப்போது என் பழைய ஆர்வம் பறிபோய் இருந்தது. எப்போது இவன் கிளம்புவான், இந்த
செயற்கை நாடகம் எப்போது முடிவுக்கு வரும் என்று மனதில் தோன்ற ஆரம்பித்தது.
இப்படி நினைப்பது எனக்கே ஆச்சர்யமாகவும் வெட்கமாகவும், ஏன், வேதனையாகவும்
கூட இருந்தது.
ஏதோ ஒன்றை இழந்தது போலத் தோன்றியது. எதிர்பார்ப்பே எனது குற்றமோ என்று தோன்றியது.
வயது மாறியது போலவே நட்பும் மாறி விடுமா.... காலத்துடனேயே நினைவுகளும்
அழிந்து விடுமா.... நான்தான் ரொம்ப எதிர்பார்க்கிறேனோ.... இவன் பணக்காரன்
என்று தெரிகிறது... எனக்கு இவன் பணம் பெரிய பாதிப்பாகத் தெரியவில்லையே
.... அப்போது கூட இவன் அப்பா தாசில்தார். என் அப்பா ஒரு சாதாரண
குமாஸ்தாதான்... அப்போது இந்த வித்தியாசம் உறைக்கவில்லையே.... இப்போது
மட்டும் ஏன்...?
கிளம்பினான். முன்பெல்லாம் பிரிய மனமில்லாமல், அம்மாவின் "கதவையே
அப்புறம் திறக்க மாட்டேன்" பயமுறுத்தல்களுக்குப் பின் அரை மனதாகப் பிரிந்து
அவரவர் வீடு திரும்பும் அந்த நிகழ்வு இப்போது எனக்கு ஒரு விடுதலையாகப்
பட்டது. ஏதோ ஒரு செயற்கைச் சூழலில் மூச்சுத் திணறலலிருந்து விடுபட்டு
காற்றோட்டமான சூழலுக்கு வந்தது போல இருந்தது.
"இவர்தானே நீங்கள் சொன்ன அந்த குர்பானிப் பாட்டு நண்பர்... இப்போ..."
ஏதோ சொல்ல வந்த மனைவி என் முகத்தைப் பார்த்து நிறுத்தி விட்டு, "ப்ரியா...
சாப்பிட வா.... நேரமாவுது பார்... ஹோம்வொர்க் செய்யணும் வா..." என்றபடி
உள்ளே சென்று விட்டாள்.
என் மனைவியும், என் பெண்ணும் என்னை ஏதோ அனுதாபத்துடன் பார்ப்பது போலத்
தோன்றியதால், சட்டையை மாட்டிக் கொண்டு வெளியில் கிளம்பி கொஞ்ச தூரம்
நடக்கலாம் என்று வந்து விட்டேன். ஒருவேளை அது என் பிரமையாகவும் இருக்கலாம்.
என் அகத்தின் ஓட்டம் அவர்கள் முகத்தில் தெரிவதாக பயந்தேனோ என்னவோ....
இப்போதைய நண்பர்களில் ஒரே ஒருவன் எனக்கு நெருக்கம். அவனுக்கு ஃபோன்
பேசி வெவ்வேறு விஷயங்கள் பேசினேன். ஏனோ எனக்கு அது தேவையாய் இருந்தது.
மறுநாள் கணேஷுக்கு ஃபோன் செய்து சேரன் வந்து சென்ற விஷயத்தை ஒரு
சம்ப்ரதாயம் போலவே சொன்னேன். வேறு ஏதும் குறையாகப் பேசவில்லை. சேரனும்
அப்புறம் ஃபோனிலும் பேசவில்லை. நேரிலும் மறுபடி வரவில்லை.
நானும் இவர்களோடெல்லாம் மறுபடி பேசவில்லை. காலம் மாற்றி விடும் மன
உணர்வுகளைப் பற்றி, மறந்து விடும் பழசுகளை, நட்பைப் பற்றி அவ்வப்போது யோசனை
ஓடும். அந்தஸ்து நட்பை மறக்கடித்து விடுகிறது என்று கசப்புடன் நினைத்துக்
கொள்வேன்.
கதை இங்கு முடிந்து விடுகிறதுதான். $$ ஆனால்....
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு....
கடைக்குப்
பெண்ணுடன் வந்து விட்ட மனைவியுடன் பெண்ணுக்கு சில பர்சேஸ் செய்ய
கடைத்தெரு கிளம்பினேன். கடையில் வேலை செய்யும் பையன்களிடம் ஆயிரம் முறை
எச்சரிக்கைச் சொல்லி பதினோரு மணிக்குத்தான் கடையை அடைக்கவேண்டும் என்று
சொல்லி, பூட்டி, சாவியை வீட்டுக்குப் போகும் வழியில் என் வீட்டில் கொடுத்து
விடச் சொல்லி விட்டுக் கிளம்பினேன்.
பர்சேஸ்கள் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தோம்.
வீடு திரும்ப மனைவி வலது புறம் திரும்ப, நான் அவளை நேராகச் செல்ல அழைத்தேன்.
"எதுக்குங்க சுத்திப் போகணும்.... இப்படிப் போனா அஞ்சு நிமிஷத்துல வீடு சேர்ந்துடலாம்..."
"இல்லப்பா... நேராப் போனா கீரை இருந்தா வாங்கிப் போயிடலாம்...."
"சும்மா
விடாதீங்க.... இதோ இங்க கிடைக்காத கீரையா.... தெரியுங்க.... அங்க உங்க
இன்னொரு ஃபிரண்டு வேலை பார்க்கற கடை இருக்கு... டீக்கடைல வடை போடறவரு...
அவரை அவாய்ட் செய்யணும் உங்களுக்கு... கடை என்ன கடை... தெருவில் கடை
வச்சிருக்கார்... இதோ பாருங்க... இன்னிக்கி யாரோ தலைவர் வராருன்னு தெருக்கடைகளைத் திறக்க விடாம செஞ்சிருக்காங்க போலீஸ்காரங்க.... அபபடி என்ன
உங்களுக்கு?... அவரும் உங்கள் சிறுவயதுத் தோழர்தானே...."
அவள் காட்டிய திசையில் தெருவோரக் கடைகள் இன்றி, தலைமைத் தபால் நிலையம்
ஒட்டிய தெரு பூரா சுத்தமாக இருந்தது. பேசாமல் அவள் பின் நடந்தேன்.
$$ கதை 'அங்கு' முடிந்தபின் ஆனாலுக்கு அப்புறம் படித்ததைப் பிடிக்காதவர்கள், இந்தக் கடைசி பகுதியை மறந்து விடலாம்!
3.6.12
1.6.12
இளையராஜா....
சமீபத்தில் (விகடனில் என்று நினைவு...) ஒரு சிறுகதை படித்தேன். இளையராஜாவும்
வைரமுத்துவும் மீண்டும் இணையாதது ரசிகர்களுக்குச் செய்யும் துரோகம் என்ற
கருவில். புதுமையாக, நன்றாக இருந்தது. சில பழைய பாடல்களைக் கேட்கும்போது, எனக்கும் அப்படித் தோன்றியதுண்டு. அவர்கள் படைப்பில் வெளிவந்த அந்தப்
பாடல்களை அவர்களே கேட்கும்போது ஒருவரைப் பற்றி இன்னொருவர் நினைக்காமலா
இருப்பார்கள் என்று அந்தக் கதையில் கேட்டிருந்தார்கள்..... ராஜமோகம்,
வாலிபதாகம்... மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனைப்
பூசுகிறேன்.....
"அண்ணே... என்ன அண்ணே டைப் அடிச்சிகிட்டு இருக்கீங்க..."
"இளையராஜா பாட்டு பத்தி எழுதிட்டு நாலஞ்சு பாட்டுப் போடலாம்னுதாண்டா..."
"ஏண்ணே..
இங்க வந்து யார்ணே பா(ட்டு கே)க்கப் போறாங்க ... வேணும்னா அவிங்கவிங்க வூட்லையே
ரேடியோப் பொட்டி, பாட்டு மெஷினு வச்சிருக்காய்ங்க... அவிங்களுக்குப்
பிடிச்ச பாட்ட அதுல கேப்பாய்ங்களா... அத விட்டுப் போட்டு இங்க வந்து
கேப்பாய்ங்களா..."
"உன்ன எவண்டா இப்போ இங்கே கூப்பிட்டது...ச்சே... எழுதற மூடே ஸ்பாயில்
பண்ணிட்டியே... நமக்குப் பிடிச்சுதுன்னு சொன்னா, இங்க வந்து கேக்கறாங்களோ
இல்லையோ... என்ன பாட்டு பத்தி கதையளந்துருக்கோம்னு பாத்துட்டு
அவங்களுக்குத் தோணினதைச் சொல்லிட்டுப் போவாங்கடா... நமக்குப் பிடிச்ச
பாட்டு ஷேர் பண்ணினோம்னு ஒரு ஆத்ம திருப்திதாண்டா.... "
"என்ன திருப்திண்ணே..."
"ஆத்ம திருப்தி... ஏன் கேக்கறே?"
"ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல...சரி எழுதுங்கண்ணே...என்ன பாட்டுண்ணே மொதல்ல..?"
"நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்..."
"ஓ.. பாட்டுல ஒங்களக் கவர்ந்த வரி சொல்றீங்களாக்கும்.... தெரியும்ணே
இந்தப் பாட்டு.... அந்தப் பெண்குரல் சுசீலாம்மாவோ, ஜானகியம்மாவோ
பாடியிருந்தா எப்படியிருக்கும்னு நினைச்சுப்பேன்..."
"பாத்தியா.... இதாண்டா... உனக்கே ஏதோ சொல்லணும்னு தோணுது பாரு..."
"அடுத்துண்ணே....?"
"என்னில் நீயடி.... உன்னில் நானடி..."
"என்ன பாட்டுண்ணே..."
"பாரேன்..."
"யார்ணே அந்தப் பொண்ணு.... அப்புறம் வேற படத்துல ஒண்ணும் நடிக்கலையோ.... பாட்டு எஸ் பி பி குரலுக்காகவே கேக்கலாம்ணே... கார்த்திக் பாட்டு இன்னொன்னு கூட போடுங்கண்ணே..."
"பூ பூ ன்னே வர்றா மாதிரி ஒரு பாட்டுடா.... கேளேன்... இளையராஜா என்ன போடு போட்டிருக்கார் பாரு.."
"சூப்பர்ணே.... அடுத்து..."
"பெண் குரல்ல ஒரு மெலடிடா.... "
"மாலையில் யாரோ மனதோடு பேச..."
"அடுத்த பாட்டு... வேணும்னு செய்யாம பாட்டுக்காகப் போட்டா அதுவும்
கார்த்திக்.. ஜேசுதாஸ் குரலும் ஜானகியம்மா குரலும் இளையராஜா டியூனும்....
செமப் பாட்டுடா... கேளேன்..."
"காற்று வான்கூறும் கருணையின் கவிதை..."
"அடுத்த பாட்டு.... "காலடி ஓசையிலே... யாழிசை கேட்டு வந்தேன்.. எஸ் பி
பி குரலும் ஜானகியம்மா குரலும் இணைந்து.... அந்த ஆரம்ப ஆலாபனை இழையலைக்
கேளேன்.... என்ன இனிமையான பாட்டு தெரியுமாடா.... என்னடா படிக்கிறே..."
"இங்களிஷ்ல
பாட்டுக்கு நடுவுல எழுதிருக்காங்கண்ணே.... அது என்ன வரின்னு புரியுதான்னு
பார்க்கறேன்..." "YOUR BODY IS SOFT AND IT IS IN GOLDEN COLOR! , "WHEN
MEGALA DANCED IN THAT PLACE!..."
"அண்ணே... ஆறு பாட்டாச்சுண்ணே..."
"இருடா இன்னும் இருக்கு.."
"அம்மாடி... ஊரெல்லாம் போலி வேஷம்..."சோகமாவா முடிக்கறது... ஜாலியா ஒரு பாட்டு...
."காதல் பாட்டுதான் பாடிக்கோ ...பாடிக்கோ..."
"போறும்ணே... அலுத்துடும்....பதிவு வேற ரொம்ப நீளமாப் போகுதுண்ணே... "
"டேய்... இன்னும் நாலஞ்சு எடுத்து வச்சிருக்கேண்டா..."
"ஐயோ... போறும்ணே... அலுத்துடும்... "
"இன்னும் ஒண்ணே ஒண்ணுடா.."
"போண்ணே... கேக்கறவங்களை நினைச்சிப் பாருண்ணே... உன்னப் பத்தியே யோசிக்கிறே..."
"............................................................"
"விடுண்ணே... இன்னொரு சந்தர்ப்பத்துல பார்க்கலாம்....அப்புறம் இன்னொண்ணு வழக்கமா சொல்வியே அத்தச் சொல்லி முடிண்ணே"
"என்னடா...."
"அதான் காட்சி முக்கியம் இல்லை கானம்தான் முக்கியம்... அபபடி இப்படிம்பியே...."
"அதான் நீயே சொல்லிட்டியே... சரி விடு அப்புறம் பார்க்கலாம்..."
"விடுண்ணே... இன்னொரு சந்தர்ப்பத்துல பார்க்கலாம்...."
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

















