கேட்டது கேட்டபடி - இறுதிப்பகுதி.
"நான் முன்பு ஒரு தடவை வந்தப்போ சின்னம்மா அருமையான சுக்குக் காபி தயார் பண்ணிக் கொடுத்தாங்க. அதைக் குடித்தபின் தலைவலி, உடல்வலி, ஜலதோஷம் எல்லாம் போயே போச்சு. அன்றிலிருந்து சுக்குக் காபின்னா சின்னம்மா தயார் செய்து கொடுத்த அந்த சுக்குக் காபிதான் நினைவுக்கு வருது. சின்னம்மா எங்கே? "
"இதோ சமையலறையில்தான் இருக்காங்க. சின்னம்மா - இங்கே வாங்க. முகுந்தன் சாருக்கு சுக்குக் காபி வேணுமாம்."
"அஞ்சே நிமிஷத்துல கொண்டு வரேன் அய்யா" என்று சமையல்கார சின்னம்மா சொன்னார்.
"அட ஜானகீ! இங்கேதான் இருக்கியா! ஆபீசிலேருந்து வந்துட்டியா! ஓஹோ இன்று சனிக்கிழமை! உங்க கம்பெனி அரை நாள்தான் வேலை! அதை மறந்துவிட்டேன். வா வா உன் ரூமுக்குப் போகலாம். உன்னிடம் தனியா கொஞ்சம் பேசணும்."
ஜானகியின் பதிலை எதிர்பார்க்காமல் ஜானகியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஜானகியின் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டான் முகுந்தன்.
"முதல் விஷயமா உன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். உன்னுடைய தோழி மோகனா பற்றி நான் அடித்த கமெண்ட்தான் உன் கோபத்திற்குக் காரணம் என்று எனக்குத் தெரியும். ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில் அந்தமாதிரி பேசிவிட்டேன். என்னை மன்னித்துவிடு."
"பெரிய வார்த்தைகள் எல்லாம் நீங்க என்னிடம் ........"
"முதலில் இந்த நீங்க வாங்க போங்க என்ற மரியாதை வார்த்தைகளை மறந்துவிடு ஜானகி. "
"சரி."
"அப்புறம், நான் உன்னிடம் பிரபோஸ் செய்யலாம் என்று வந்திருக்கின்றேன். உன்னுடைய முழுச் சம்மதத்தைப் பெற்றால்தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று உன் அண்ணன் சொல்லிவிட்டான்!"
"பிரபோஸ்? என்ன பிரபோஸ்?"
"பிசினெஸ்."
"பிசினெஸ் !"
"ஆமாம்டா ஜானகிராமா! நீயும் உன் அண்ணனும் சேர்ந்து இங்கே மா ஜா எண்டர்ப்ரைசஸ் கம்பெனியை சிறப்பாக நடத்தி வருகின்றீர்கள். இந்த கம்பெனியின் மலேசியக் கிளையைத் தொடங்கி, மலேசியக் கிளையின் சி இ ஓவாக நான் செயல்படலாம் என்று இருக்கின்றேன்."
"அட! மலேசியாவிலும் இதே பெயர் வைக்கப் போகின்றீர்களா?"
"கொஞ்சம் பெயர் மாற்றி, மா ஜா மு எண்டர்ப்ரைசஸ் என்று வைத்துவிடலாம் என்று நானும் மாதவனும் முடிவெடுத்திருக்கின்றோம். மா ஜா மு என்றால், மலேசிய மொழியில் என்ன அர்த்தம் என்று தெரியுமாடா?"
"தெரியாதே! என்ன அர்த்தம்?"
" எனக்கும் தெரியாது! எனக்கு மலேசிய மொழியே தெரியாது! "
முகுந்தனும், ஜானகிராமனும் வாய்விட்டு பெரிதாகச் சிரித்தார்கள்!
(முற்றும்)
இது என்னங்க கேடயம்?
பதிவாசிரியர் தாக்க வருகின்ற வாசகர்களிடமிருந்து தப்பிக்க இதற்குப் பின்னே ஒளிந்துகொண்டிருக்கிறார்!