திங்கள், 7 ஜூன், 2010

முருங்கைக்காய் ஜாக்கிரதை

அதோ டிரைவர் பக்கத்தில் இருக்கும் சீட்டில் உட்கார்ந்திருப்பது யாரு? நம்ம ராஜசேகர் போலிருக்கிறதே?அவர் மாதிரி இருக்கும் வேறு யாரோவாக இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. ஏன் என்றால், அதே கறுப்புப் பெட்டி. தண்ணீர் பாட்டில் வைக்க ஒரு துணிப் பை.  வித்தியாசம்? துணிப்பையிலிருந்து எட்டிப் பார்க்கும் மூன்று முருங்கைக் காய்கள்! அவர் தனிக்கட்டை + ஒன்டிக்கட்டை + கட்டை பிரம்மச்சாரி. அதுமட்டும் அல்ல, அவருக்கு வெந்நீர் தவிர வேறு ஒன்றுமே சமைக்கத் தெரியாது! அவர் ஏன் முருங்கைக்காய் வாங்கினார்?  வழக்கமாக நாங்கள் இறங்கி நடக்கும் அதே ஸ்டாப்.  ஆங், அவரேதான்.  வேக வேகமாக நானும் பேருந்தின் பின் வழியே இறங்கி ஓடிப் போய் அவருடன் சேர்ந்து நடந்தேன்.

'எப்பொழுதிலிருந்து சமையல் கத்துகிட்டீங்க? நீங்க தான் நம்ம பேட்டை பிரம்மச்சாரிகள் சங்கத் தலைவர் ஆயிற்றே?' என்று கேட்டுக் கொண்டே அவருடன் காலை எட்டிப் போட்டேன். சொல்கிறேன் என்பது போல தலையை ஆட்டினாரே தவிர மனிதர் இன்னும் முருங்கைக்  காய் மர்மத்தை உடைப்பதாக இல்லை.  இதோ அவர் இருக்கும் வீடும் வந்து விட்டது.  என்ன இது! மூன்று காய்களையும் உருவி வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட எத்தனித்தவர் சற்றுத் தயங்கி விட்டு, "நீங்கள் முருங்கைக் காய் சாப்பிடுவீர்கள் தானே?" என்று கேட்டார். 

கை தானாகவே முருங்கைக்காய்களை நோக்கி நீண்டாலும், "உங்களுக்கு உபயோகம் இல்லை என்றால் பின் ஏன் வாங்கினீர்கள்?  ஏதோ ஒரு படத்தில் கதாநாயகன் சோப் விற்க வந்த பெண் அழகாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக வீடு கொள்ளாத அளவு சோப் வாங்குவது போல் வருமே, அப்படி ஏதாவது அழகான .." என்று ஆரம்பித்த உடனேயே பையின் காது இரண்டையும் பிடித்துப் பிரித்துக் காட்டினார். உள்ளே தண்ணீர் பாட்டிலுடன் இருந்தவற்றைக் கண்டதும் எனக்கு மயக்கமே வந்தது.  நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருந்தன.   'கறுப்புப் பெட்டியில் வைக்க இடம் இல்லாததால் இதில் வைத்தீர்களோ?' என்றதும் சிரித்துக் கொண்டே பெட்டியையும் திறந்து காட்டினார். 

ஒரு துண்டு, இரண்டு கோப்புகள், அவசரத்துக்கு சாப்பிட ஒரு பிஸ்கட் பாக்கெட், ஒரு சாக்கலேட் பார்.  நக வெட்டி போன்ற சமாச்சாரங்கள் மட்டுமே இருந்தன. மீதி இருந்த காலி இடத்தில் பையில் இருக்கும் பணத்தையும் வைத்து, இன்னும் ஒரு நானோ கார் வாங்கும் அளவுக்குப் பணம் வைக்க இடம் இருந்தது. 'என்னய்யா இது?' என்ற பாவனையுடன் நான் அவரைப் பார்த்தேன். அவர் சொன்னார்," நான் பாங்கிலிருந்து வருகிறேன். என்னை யாராவது குறி வைத்து என் பெட்டியை அல்லது பணபபையை அபகரித்துப் போகப் பார்க்கும் பட்சத்தில், முருங்கைக் காய்கள் நீட்டிக் கொண்டிருக்கும் பையை என்னிடமே விட்டு வைப்பது உறுதி " என்றார்.  நானும் நண்பரின் முன் ஜாக்கிரதையை எண்ணி வியந்து கொண்டே முருங்கைக் காய்களுடன் வீட்டுக்கு நடையைக் கட்டினேன். 

15 கருத்துகள்:

 1. கலக்கல் ஐடியாவா இருக்கே? சூப்பர்!

  பதிலளிநீக்கு
 2. ஆகா.... ஐடியா மணி கதையா இருக்கே... டாப்பு...
  உண்மையில் இந்த ஐடியாக்கள் வொர்க் ஆவுட் ஆகும்...

  பதிலளிநீக்கு
 3. அதானே பார்த்தேன். பிரஹம்மசாரிக்கு எதுக்கு முருங்கை (முந்தானை முடிச்சு படம் மாதிரி நண்பர் வீட்டில் ஒரே ரவுசு இருக்கும் இப்போது !!). ஆனந்த விகடனில் அன்னாளில் "மதன்" சார் முன் ஜாக்கிரதை முத்தண்ணா என்று கார்டூன் வரைவார். அதை போல் இருக்கே இது !

  பதிலளிநீக்கு
 4. நல்லவேளை நானும் ஏதொ ஓர் படத்துல பாண்டியராஜன் சூட்கேஸ் கொண்டு போய் மார்க்கெட்ல காய்கறி வாங்குவாரே அப்படியாக்கும்னு நினச்சேன்...னானும் இப்படித்தான் எளிதில் யோசிக்க முடியாத விதங்களில் பணத்த எடுத்துகிட்டு சுத்துவேன்...எங்கம்மா புலம்பிட்டே வருவாங்க. அவங்ககிட்ட தந்தா நல்ல கெட்டியா நெஞ்சோட சேத்து பத்திரமா(??) அணைச்சுகிட்டே வருவாங்க. நாந்தான் கிண்டலடிப்பேன்...ம்மா..நீங்க தூக்கிட்டு போறத பாத்தா திருடிட்டுதான் மத்த வேலைங்க பாப்பாங்கன்னு!! நல்ல பதிவு. :))

  பதிலளிநீக்கு
 5. முருகைக்காய் ஒன்று மட்டும்தான் இன்று நாம் தைரியமாக சாப்பிடக்கூடிய காய்.

  ஏனென்றால் அதற்கு
  no pesticide used
  no insecticide used

  வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 6. அட...நல்லாருக்கே!ஆனாலும் கள்ளன் இந்தப் பதிவைப் பார்த்தால் முருங்கைக்காய் வச்சிருக்கிற பைகள்தான் இனிக் களவெடுப்பான் !
  கவனம் !

  பதிலளிநீக்கு
 7. i do not eat 'drum stik' but never thought of such an use..
  great.. innovative thinking..

  I remember my Paternal uncle who carried the Question paper for exams in a old white(pale) coloured, dirty look bag(up to school by walk). He was a head master then.

  பதிலளிநீக்கு
 8. முருங்கக்காயில் இத்தனை விஷயமா? :-)

  பதிலளிநீக்கு
 9. யதிராஜ சம்பத் குமார்8 ஜூன், 2010 அன்று பிற்பகல் 8:21

  எவனாவது கொஞ்சம் டெக்னாலஜி தெரிஞ்ச திருடனா இருந்து இந்த கதைய படிச்சா நிச்சயமா முருங்கைக்காய் பையதான் இனிமே தூக்கிட்டு போவான்.

  இனிமே வேற ஐடியா பண்றது நல்லது.

  பதிலளிநீக்கு
 10. குரோம்பேட்டைக் குறும்பன்8 ஜூன், 2010 அன்று பிற்பகல் 10:27

  யதிராஜ் அவர்கள் சொல்வது போலவே நானும் யோசித்தேன். எனவே நான் பணம் எடுத்துக்கொண்டு பஸ்ஸில் சென்றால் அந்தப் பையில் முருங்கைக் காய்களுக்கு பதில் புடலங்காய் ஒன்றை உடைத்து போட்டு எடுத்துச் செல்லலாம் என்று இருக்கின்றேன். இந்த இரகசியத்தை யாரும் பகல் கொள்ளை பக்கிரியினிடம் சொல்லிவிடாதீர்கள்.

  பதிலளிநீக்கு
 11. நல்ல முன் ஜாக்கிரதை பேர்வழிதான் போங்க!
  பதிவு அழகா எழுதி இருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 12. நல்ல ஐடியாதான்.
  இன்னோரு யோசனை.பைகளில் இரண்டு பாகமாக தைத்துக் கொள்ளலம். அடியில் பணமும் மேலெ
  கீரை,கொத்தமல்லி,மு.காய் போன்ற காய் எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளலாம்:)
  ஒரு லட்சம் னால் ரெண்டு பைகள் வேண்டும் தானே.

  பதிலளிநீக்கு
 13. ஆஹா... சரியான முன்ஜாக்கிரதை முத்தண்ணா போல இருக்கே... சூப்பர்

  பதிலளிநீக்கு
 14. இனி முருங்கைக் காய் பைன்னா அபேஸ் பண்ண வேண்டியது தான்!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!