புதன், 23 ஜூன், 2010

" நான் எப்போ கிளம்பணும் ? "







குஜுலு தன் அக்கா உமா பள்ளிக்குக் கிளம்புவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"பப்லு....எல்லா புக்கும் இன்னிக்கி கொண்டு போகாதே...முதல் நாள்...ஒரு நோட்டு போதும்..." அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து வந்தது. 

"சரிம்மா...தெரியும்மா...." உமா சத்தமில்லாமல் உள்ளே வைத்த புத்தகங்களை வெளியே எடுத்து வைத்தாள். 

"சாப்பிட வா...டைம் ஆகுது பார்...மத்தியானத்துக்கு இதோ எடுத்து வச்சிருக்கேன் பார்..." 

குஜுலு என்கிற ஷோபா ஏக்கத்துடன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியே வந்த அம்மா ஷோபாவைப் பார்த்தாள்... 

இது யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்...

"குஜுலு... உனக்கும் பசிக்கிறதா செல்லம்...நீயும் வா..சாப்பிடலாம்" என்றாள் மென்மையாக. 

"என்னை அப்படிக் கூப்பிடாதே...எனக்கு ஒண்ணும் இப்போ வேண்டாம்..." என்றாள் குஜுலு லேசான விரோதத்துடன். 

"நீதானம்மா அப்படி உன்னைக் கூப்பிடச் சொல்லி சொன்னதே..." அம்மா அவள் தலையை கோதி விட்டாள். 


உமாவை பப்லு என்று கூப்பிடுவதைப் பார்த்து தன்னையும் அதே போல செல்லமாக ஏதாவது பெயர் சொல்லி அழைக்க வேண்டும் என்று அடம் பிடித்து, தானே குஜுலு என்று கூப்பிடுங்கள் என்றும் சொன்னவள் இவள்தான். 



"இப்போ வேண்டாங்கறேன் இல்லே...உமா குரங்குக்கு மட்டும் ஃபீஸ் கட்டி புத்தகமும் வாங்கிட்டீங்க...எனக்கு ஏன் கட்டலைன்னு கேக்கறேன்...நான் எப்போ போறது?" மேற்கொண்டு பேசமுடியாமல் குஜுலு குரல் விசும்பியது. 



உடலின் செல்கள் வளர்ந்து பிரிந்து அழிய வேண்டும்....இதற்கு அபோப்டொசிஸ் என்று பெயர்.... 



போன வாரமே அப்பாவிடம் ஞாபகப் படுத்தியிருந்தாள். 
"அப்பா...ஸ்கூல் திறக்கப் போகுது...போன வருஷ ஆனுவல் பரீட்சையே மூணு பரீட்சை எழுதலை...டாக்டர் கிட்ட சீட்டு வாங்கிக் காட்டிக்கலாம்னு சொன்னீங்க...வாங்கினீங்களாப்பா..."

"இன்னும் இல்லைடா செல்லம்..."
"டீச்சர் கேப்பாங்கப்பா...திட்டுவாங்க...இந்த வருஷ ஃபீஸ் வேற நாளைக்குள்ள கட்டணுமாம்...அபி சொன்னா...அவங்க அம்மா கட்டிட்டாங்களாம்.."
"கட்டுவோம்டா .."

சில செல்கள் வளர்ந்து பிரிகின்றன..ஆனால் அழிவதில்லை..

மூன்றாவது படிக்கும் ஷோபா முழுவருஷப் பரீட்சையில் மூன்று பரீட்சை எழுத முடியாமல் போன காரணம் அந்த வயிற்று வலி.... 

தாங்க முடியாமல் துடித்தவளை இரண்டு மூன்று ஆஸ்பத்திரி அழைத்துப் போனார்கள் அப்பாவும் அம்மாவும். 

மற்ற இரண்டு இடங்களில் சொன்ன மாதிரி அடையாறில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் அழைத்துப் போனார்கள். அவர்கள் உள்ளே சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். ஷோபிக் குட்டிக்கு அவர்கள் பேசியது புரியவில்லை.  ஸ்கூலுக்குதான் லேட்டாகப் போகக் கூடாது. ஆஸ்பத்திரிக்குமா..?

அழிவதில்லை என்பதோடு கட்டுப்பாடில்லாமல் வளர ஆரம்பிக்கிறது. உடலெங்கும் பரவுகிறது... 

அதற்கப்புறம் அப்பாவோ அம்மாவோ இவளைத் திட்டுவதில்லை. உமா சண்டை போட்டால் கூட உமாவை அழைத்துச் சென்று விடுகிறார்கள்.
அதெல்லாம் சரிதான்...ஆனால் எப்போது புத்தகம் வாங்கி, எப்போ அட்டை போட்டு... 
அப்பப்போ வயிற்று வலி தாங்க முடியலைன்னு அழறேனே அதனால ஸ்கூல்ல போயும் அழுவேன்னு பயப்படறாங்களோ... ? 
திரும்பவும் வயிற்று வலி தொடங்குவது போல இருந்தது...மறைத்துக் கொள்ளப் பார்த்தாள்...ரெண்டு நாள் முன்னால் ராத்திரி இப்படி வலி வந்து விடாமல் அழுதபோது சித்தப்பா உட்பட எல்லோரும் அருகில் நின்று கண் கலங்கியது ஞாபகம் வந்தது...

இப்படி உடலெங்கும் பரவும் இந்த செல்கள் உடலின் இயல்பான இயக்கத்தை பாதித்து உயிருக்கே எமனாகிறது..

"நான் போயிட்டு வரேம்மா...போயிட்டு வரேன் சித்தப்பா...அப்பா... வரேன்...ஏய் குஜுலு...வரேண்டி..." பையை மாட்டிக் கொண்டு கிளம்பிய உமா இவள் முகம் போன போக்கைப் பார்த்து, மெதுவே பையைக் கீழே வைத்தாள்.
"என்ன ஷோபி...வலியா?.."
"ஆமாண்டி..." முனகலாகச் சொன்னாள் ஷோபா.
"அம்மா...அப்பா..." கத்தினாள் உமா.
எல்லோரும் கூடி விட்டார்கள்.
சித்தப்பா மெல்ல சாய்ந்து படுத்திருந்த ஷோபாவை மடியில் தாங்கி "என்னம்மா.." என்றார்.
லேசாகத் தலையைத் தூக்கி, "வலிக்குது.." என்றாள். தலை மெல்லச் சாய்ந்தது.
"ஷோபா..."
"குஜுலு..."
"ஷோபிக் குட்டி..."
எழவில்லை.

இவற்றைக் **கேன்சர் செல்கள் என்கிறார்கள்.

சித்தப்பா உடைந்து கதறி அழுதார்....
"கடவுளே....கஷ்டப் படுத்தாம எடுத்துக்கோன்னு வேண்டினேன் ..அதையாவது நிறைவேத்தி வச்சியே..."   
(உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை) 
** கான்சர் மேலும் சில விவரங்களும், மற்றும் முன்னேச்சரிகைத் தடுப்பு நடவடிக்கைகளும் - எங்கள் அடுத்த பதிவில். 

15 கருத்துகள்:

  1. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை)


    .......... touching story.....!

    பதிலளிநீக்கு
  2. மனம் கணக்கிறது நண்பா. அந்த குஜீலுவை நினைத்து............

    பதிலளிநீக்கு
  3. நண்பரே காலையில் கண் கலங்க வைக்கும் சம்பவம்.. எழுதுங்கள் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லோரும் ஒரு நாள் போகத்தான் போகிறோம். ஆனால் இந்த மாதிரி எல்லாம் ஒரு கொடுமையான நோயின் வலி எல்லாம் அனுபவிப்பது இறப்பது என்பது என்ன கர்மாவோ!

    பதிலளிநீக்கு
  5. மனிதர்கள் முதலில் உயிர் வாழ கடவுளை வேண்டுகிறார்கள். எதுவும் முடியாத பட்சத்தில் வலியில்லாத மரணத்தையாவது கொடு என்று யாசிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  6. அநியாயச் சாவு. புண்ணியம் செய்தவர்கள் சீக்கிரம் இறைவனை அடைகிறார்கள்.

    பெறோருக்கு யார் பதில் சொவது.
    கண்முன்னே ஒரு பூ உதிர்ந்தது.

    பதிலளிநீக்கு
  7. மனம் கனக்கிறது. வார்த்தைகள் வரவில்லை. கடவுளை அலங்கரிக்க சென்றதிந்த மலர் என்று தேற்றிக் கொள்ளுங்கள்.--கீதா

    பதிலளிநீக்கு
  8. ரொம்பவே கஷ்டமா இருக்குது..
    என்ன செய்ய.. நம்மள மீறி ஒரு சில விஷயங்க இருக்கத்தான் செய்யுது.

    பதிலளிநீக்கு
  9. அய்யோ, போன ஆஸ்பத்திரி பதிவுலயே கலங்கிப் போயிட்டேன். இப்ப இப்படி வேறயா? வலியில்லாம எடுத்த வரை ஆண்டவனுக்கு நன்றி(ன்னு சொல்லவும் மனசு வரலை).

    பதிலளிநீக்கு
  10. மனம் கனக்கிறது.என்றாலும் எம் கையில் எதுவுமில்லை.வலி இல்லாமல் அடுக்தவர்களுக்கும் கஸ்டம் கொடுக்காத மரணமும் அதிஸ்டம்தான் !

    பதிலளிநீக்கு
  11. இன்னிக்கு என்ன ஆச்சு? வானம்பாடிகள், மங்குனி அமைச்சர், இப்போ நீங்க எல்லாரும் என்னை அழ வைக்கிறதுன்னே கங்கணம் கட்டியிருக்கீங்களா?
    மனத்தை நெகிழ வைக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  12. குரோம்பேட்டைக் குறும்பன்23 ஜூன், 2010 அன்று PM 7:42

    அய்யா - ஆஸ்பத்திரியில் ஆரம்பித்து, கான்சர் பற்றி எழுதி, அடுத்த பதிவும் மருத்துவப் பதிவா? கொஞ்சம் மாற்றுப் பதிவு ஏதாவது போடுங்களேன். ஒரேயடியாக ஆஸ்பத்திரி வாசனை அடிக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. கு கு அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி,
    அரசரும் மன்னரும் நாளை நம் பதிவில்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி.....

    Chitra
    புலவன் புலிகேசி
    LK
    meenakshi
    வானம்பாடிகள்
    தமிழ் உதயம்,
    வல்லிசிம்ஹன்
    geetha santhanam
    Madhavan
    ஹுஸைனம்மா
    பெயர் சொல்ல விருப்பமில்லை

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!