Thursday, June 24, 2010

கவியரசரும் மெல்லிசை மன்னரும்

ஜூன்  24 ..கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள்.  ஏன், மெல்லிசை மன்னருக்கும் இன்றுதான் பிறந்த நாள்...  இருவருமே மறக்க முடியாத பல பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள்.  ஒருவர் படைத்தார். ஒருவர் இசைத்தார். கவியரசர் 1927 ஆம் ஆண்டும், மெல்லிசை மன்னர் 1928 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள். மனதில் நின்ற பாடல்களைச் சொல்லும்போது இருவரையுமே நினைத்துக் கொள்ளுங்கள்...!

கண்ணதாசன்...மயங்க வைத்த, கலங்க வைத்த வரிகளுக்குச் சொந்தக்காரர். வனவாசம், மனவாசம், சேரமான் காதலி (சாகித்ய அகாதெமி பரிசு பெற்றது) அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் போன்ற புத்தகங்கள்...

கறுப்புப் பணம், சிவகங்கைச் சீமை போன்ற படங்கள் எடுத்த தயாரிப்பாளர்...

கறுப்புப் பணம் படத்தில் கதா நாயகனாகவே, சூர்யகாந்தி, இரத்தத்திலகம், அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் ஓரிரு காட்சிகளில்...

செம்மொழி மாநாடு தொடங்கியிருக்கிறது...அவரைப் பற்றி யாராவது பேசுவார்களா?

காவியத் தாயின் இளைய மகன். "பாமர ஜாதியில் தனி மனிதன்..  படைப்பதனால் என் பேர் இறைவன்.."  அவர் பார்த்ததெல்லாம் அழகின் சிரிப்பு...!

"மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன்..
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.."

அவர் மறைந்த பிறகு வந்த பாடல் ஒன்று..கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு..  என் காதல் கவிதைக்கு வரிகளைக் கொஞ்சம் தந்து விடு... என்ன ஏக்கம்..?

பக்தி வேண்டுமா?  கிருஷ்ணகானம்...ஆயர்பாடி மாளிகையிலா, புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களா...எது வேண்டும்? இல்லை கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணாவா, அல்லது கங்கையிலே ஒடமில்லையோ பாடலா, கண்ணன் வருவான் பாடலா அல்லது ராமன் என்பது பொன்னி நதி பாடலா...

நாத்திகம்....?  உண்டு..."தெய்வம் என்றால் அது தெய்வம்...  வெறும் சிலை என்றால் அது சிலைதான்...உண்டு என்றால் உண்டு..இல்லை என்றல் அது இல்லை..."

காதல்...  கணக்கிலடங்காதது...எவ்வளவு ஒரு பதிவில் சொல்ல முடியும்..!

"(அவள்) காலையில் மலரும் தாமரைப்பூ.. அந்திக் கருக்கினில் மலரும் மல்லிகைப்  பூ..  இரவில் மலரும் அல்லிப் பூ..  அவள் என்றும் மணக்கும் முல்லைப் பூ.."

ஒரு மே மாதத்தில் கெடு வைத்து முடிய வேண்டும் என்று சொல்லப் பட்ட பாடலுக்கு மே.மே என்று முடியும் வண்ணமே பாடல் எழுதினார் கவிஞர்...(இந்தப் பாடலின் இசைக்கு மெல்லிசை மன்னரை நினைத்துக் கொள்ளுங்கள்..)

"அன்பு நடமாடும் கலைக் கூடமே...ஆசை மழை மேகமே..  கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே..கன்னித் தமிழ் மன்றமே"

இது போல இன்னொரு பாடல் லா,லா என்று முடியும் படி...
"வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா...  தேன் நிலா அல்ல என் தேவியின் நிலா... "
"கம்பனைக் கூப்பிடுங்கள்..சீதையைக் காண்பான்...  கவி காளிதாசன் அவள் சகுந்தலை என்பான்.."

முதல் காதல் தோற்றுப் போனதனால் சிறந்த கவிதைகள் படைத்தாராம்...எல்லோருக்கும் முடிகிறதா என்ன...  காதலில் தோற்றுப் போவது இல்லை..கவிதை எழுதுவது...

"காலங்களில் அவள் வசந்தம்...  கலைகளிலே அவள் ஓவியம்...  மாதங்களில் அவள் மார்கழி...மலர்களிலே அவள் மல்லிகை...  கண் போல் வளர்ப்பதில் அன்னை...  அவள் கவிஞனாக்கினாள் என்னை..."

அவரது ஒவ்வொரு பாடலுக்கும் அவர் வாழ்வில் ஒரு பின்னணி உண்டு என்பார்கள்....எந்த அளவு உண்மையோ...நமக்கு நல்ல பல பாடல்கள் கிடைத்தன....

மனைவி பற்றி...

"ஆழம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்ததுண்டு...  என் வேரென நீயிருந்தாய்..  அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்..."

கணவன் பற்றி மனைவி...?

"சொல்லென்றும் மொழியென்றும் பொருள் என்றும் இல்லை...   சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை (ஆ...ஹா...)...ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையின்றி வேறேதும் இல்லை....நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..."

காதல்...
"பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்..  பாடித் திரியும் காற்றையும் கேட்டேன்...அலையும் நெஞ்சை அவனிடம் சொன்னேன்..அழைத்து வந்தார் என்னிடம் உன்னை...  இந்த மனமும், இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே..."

"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி...  பேச மறந்து சிலையாய் நின்றால் அதுதான் தெய்வத்தின் சன்னதி...அதுதான் காதல் சன்னதி...
காதல் சிறகைக் காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா.."

காதல் தோல்வி....

"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா..  பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா..?"

காதல் தோல்விக்கு காதலியைக் கூடக் காரணமாக்க மனம் வராத காதலன்..

"மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க நேரமில்லை..இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி...ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதைத் தவிக்க வைத்தான்..துவக்கி வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை...உனக்கெனவா நான் பிறந்தேன்..எனக்கெனவா நீ பிறந்தாய்...  கணக்கினிலே தவறு செய்து கடவுள் செய்த குற்றமடி.."

பெற்ற பிள்ளை மறந்து விட்டால்...

"சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை....
...நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளைதானடா...தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா.."

தன் பிள்ளை தான் ஏழ்மை நிலையில் இருக்கும்போது பிறந்து விட்டால்...

"ஏன் பிறந்தாய் மகனே..ஏன் பிறந்தாயோ ...  இல்லை ஒரு பிள்ளை என ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து என் பிறந்தாய் செல்வ மகனே.."

அல்லது ஆறுதலாக,

"பல்லக்கில் பட்டுக் கட்டி பரிசுகள் எடுத்து,  பச்சைப் பவளம் முத்து மாணிக்கம் தொடுத்து, செல்லக்கிளிக்கு வரும் மாமனின் விருது..  அய்யா சிந்தை கலங்காதே நாளைக்கு வருது.. சொர்க்கத்தில் கட்டப் பட்ட தொட்டில்...ஏழ்மை துன்பத்தில் ஆடுதடா இன்றி...மாளிகை மஞ்சம் கண்ட மன்னன் இன்று மாமர ஊஞ்சல் தந்தான் இங்கு.."

தத்துவம்...

"மனிதரில் நாய்கள் உண்டு...  மனதினில் நரிகள் உண்டு..பார்வையில் புலிகள் உண்டு...  பழக்கத்தில் பாம்பு உண்டு...  நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே மானம் பண்பு நியாயம் கொண்ட மனிதனைக் காணவில்லை..."

"பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே...  ஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே...கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்..  அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்...  உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.."

"மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று.."

ஊக்கத்துக்கு...?

"மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்...  ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்..."

"பாதை எல்லாம் மாறி விடும் பயணம் முடிந்து விடும்..  மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் கலைந்து விடும்..."

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்..  வாசல் தோறும் வேதனை இருக்கும்..."

சற்று இல்லை நிறையவே நீளமாகி விட்டது ...  என்ன செய்ய இவர் கவிதைகளையும், மெல்லிசை மன்னரின் இசையையும் கேட்டால்  படித்தால் 

"நெஞ்சம் மறப்பதில்லை...  அது நினைவை இழப்பதில்லை..."

29 comments:

Chitra said...

வாவ்! அற்புதம்..... கண்ணதாசன் அவர்களின் பாடல்களை, "நெஞ்சம் மறப்பதில்லை... அது பாடல்களை இழப்பதில்லை..." என்று அருமையாக தொகுத்து வழங்கி இருக்கீங்க.... :-)

ஹேமா said...

தமிழுக்கு அமுதென்ற பெயர்.
கண்ணதாசன் அவர்களுக்கும் கூட.
மீட்டும் நினைவைத் தந்தமைக்கு நன்றி நன்றி ஸ்ரீராம்.

meenakshi said...

அருமையான பதிவு! நன்றிகள் பல. கூடவே ஒரு பாடலையும் ஒலிபரப்பி இருக்க கூடாதா? இது உங்களுக்கு அநியாயமாக தோன்றவில்லையா? :)

நானும், நான் படித்த ஒரு நிகழ்ச்சியை இதில் நினைவு கூற விரும்புகிறேன். ஒரு முறை சிவாஜி கணேசனுக்கு, கண்ணதாசன் அவர்களுக்கும் ஒரு சிறிய மனஸ்தாபம் இருந்ததாம். அப்பொழுது 'பாலும் பழமும்' படத்திற்கு பாடல் எழுத கண்ணதாசன் வந்திருந்தாராம். அந்த காலத்தில் எல்லாம் சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவருமே பாடல்களுக்கு மெட்டமைக்கும் போதும், பாடல் எழுதும் போதும் அருகில் இருந்து தங்கள் கருத்துக்களை சொல்லி, பாடல்களை தேர்வு செய்வார்களாம். அதனால் கண்ணதாசன் பாடல் எழுத வந்திருந்த போது சிவாஜியும் அங்கிருந்தாராம். ஆனால் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. யார் முதலில் பேசுவது என்ற தயக்கம் இருந்ததோ தெரியவில்லை. அப்பொழுது கண்ணதாசன் சட்டென்று 'என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய், இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய், நான் உன் பேரை தினம் பாடும் குயிலல்லவா' என்று சிவாஜியை பார்த்து கவிதை சொல்ல ஆரம்பித்துவிடாராம். உடனே சிவாஜி அவர்கள் எழுந்து வந்து கண்ணதாசனை அப்படியே அணைத்துக் கொண்டு விட்டாராம். இந்த வரிகளை அப்படியே அந்த படத்தின் ஒரு பாடலுக்கு பல்லவியாக்கி மெட்டமைத்தாரம் மெல்லிசை மன்னர்.

அப்பாதுரை said...

பிறவியின் பயனே இது போன்ற தருணங்கள் தான். நன்றி

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
rk guru said...

அருமையான பதிவு வாழ்த்துகள்..!

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html

Madhavan said...

கண்ணதாசனின், 'அர்த்தமுள்ள இந்து மதம்', நான் விரும்பி படித்த நூல்.

நாஞ்சில் பிரதாப் said...

கலக்கல்... பிரிச்சு மேய்ஞ்சிட்டீங்க.... அருமையான பதிவு...

எம்எஸ்வி, கண்ணதாசன் பாடல்கள் என்னிடம் நிறைய உள்ளன.

தமிழ் உதயம் said...

ஒரு சின்ன பகிர்வு. "காதல் கதை சொல்வேனோ... கட்டில் சுகம் கொள்வேனோ..." என்ற பாடல் முழுக்க முழுக்க னோ., னோ.. (NO) என்றே முடியும்.
நான் M.S.V குறித்து ஒரு பதிவு எழுதி கொண்டிருக்கிறேன்,

அநன்யா மஹாதேவன் said...

மீனாக்ஷிஜி சொன்னது மாதிரியான ஒரு நிகழ்வை என் வீட்டு ரங்கு அடிக்கடி சொல்லி ரசிப்பார். பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?என்ற பாட்டு அவருடைய சின்ன வயசு காதலியை பல வருஷம் கழித்து ஏதோ ஒரு ரயில் சந்திப்பில் பார்த்தாராம். அப்போ தோன்றிய வரிகளாம். எப்பேர்ப்பட்ட கவிஞர்! அவர் சிரஞ்சீவி தான், தன் வரிகள் மூலம் என்றும் வாழ்வார்!

geetha santhanam said...

கண்ணதாசன் அவர்களின் வரிகளை எத்தனை முறை படித்தாலும் எத்தனை முறை கேட்டாலும்
இனிக்கும்.---கீதா

வானம்பாடிகள் said...

நன்றி சொல்கிறேன் ஸ்ரீராம். எத்தனை முத்துக்கள்?ஹ்ம்ம்ம்

LK said...

இந்த மாதிரி நிறைய உதாரணங்கள் உள்ளன, அவரது பல பாடல்களுக்கு அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே காரணம். அசத்தல் பகிர்வுக்கு நன்றி .

thenammailakshmanan said...

கண்ணதாசனின் அருமையான பாடல்கள் ராம் .. நல்ல பகிர்வு..

Jayadeva said...

கண்ணதாசன் வாழ்ந்த காலகட்டமும் சூழ்நிலையுமே தனி. இப்போது நினச்சு பாக்கவே முடியாது. எம்.எஸ்.வி யை "வாடா போடா" என்றுதான் அழைப்பாராம். [இப்போது கோடிக்கணக்கில் வாங்கும் ரஹ்மானை அஞ்சாயிரத்துக்கும் பத்தாயிரத்துக்கும் பாட்டெழுதும் பாடலாசிரியர் யாரவது அவ்வாறு அழைக்க முடியுமா!]. இன்னொன்று எம்.எஸ்.வி அவர்களுக்கு கண்ணதாசன் மேல் அளவற்ற மரியாதை, பிரியம் எல்லாம். வாழும்போது மட்டும் நட்பு பாராட்டிவிட்டு மறைந்து பின்னர் மறந்து விடுவது தான் பணத்திற்காக நட்பு கொள்ளும் பெரும்பாலானோர் செய்வது. கண்ணதாசன் மறைந்த பின்னர் அவருக்கு சிலை வைக்க எம்.எஸ்.வி அவர்கள் அரும்பாடு பட்டு அதைச் சாதித்தும் காட்டினார். கண்ணதாசன் பாடல்கள் பெரும்பாலானவை அவரது சொந்த அனுபவங்கள் அல்லது அப்போதைய அவரது இருந்த சூழ்நிலை இதை வைத்தே எழுதியிருக்கிறார். இது மிகவும் சுவராசியமானது. [இந்த வகையில் நிறைய பாடகள் உள்ளன.] நிறைய மங்கையருடன் தொடர்பு, பெதடின் ஊசிக்கு அடிமையானது எல்லாம் துரதிர்ஷ்டம். "ஒருத்தன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு நான் ஒரு உதாரணம், ஆதனால் எப்படி வாழ வேண்டும் என்று சொல்ல எனக்குத் தகுதி உள்ளது" என்று அவரது புத்தகங்களில் அவர் வேடிக்கையாக எழுதியுள்ளார்!

வல்லிசிம்ஹன் said...

கவிஞர் என்றால் அவர்தான். சிறுவயதில் எல்லா சிடுவேஷன்களுக்கும் நாங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அவர் பாடுவோம்.
அண்ணாவோட மனஸ்தாபம் வந்தபோதும்,''அண்ணன் காட்டிய வழியம்மா ,இது அன்பால் விளைந்த பழியம்மா,
கண்ணை இமையே மறந்ததம்மா'' என்ற
பாடலைப் பாடினதும் அண்ணாவே சமாதானமானதாகச் சொல்வார்கள்.. நல்ல பதிவு ஸ்ரீராம்.

Thameez said...

கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும். அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும். இதை சொல்ல மறந்து விட்டீர்! சிறந்த அஞ்சலி

அப்பாதுரை said...

மலர்ந்தும் மலராத பாதி மலர் என்று சின்னக் குழந்தையை வர்ணிக்கும் கற்பனை, கண்ணதாசன் டாப் 10 வரிகளில் ஒன்று.

சாய்ராம் கோபாலன் said...

I am searching for words to thank. Will wrote later but for now

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

infinite......

meenakshi said...

//காதல் தோல்விக்கு காதலியைக் கூடக் காரணமாக்க மனம் வராத காதலன்..

"மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க நேரமில்லை..//

மன்னிக்கவும். இந்த பாடலில் காதலியைத்தான் கவிஞர் காரணமாக்குகிறார். 'மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை' நீங்கள்தான் 'நேரமில்லை' என்று மாற்றி எழுதி இருக்கிறீர்கள். பரவாயில்லை இதுவும் நன்றாகதான் இருக்கிறது.:)

வல்லிசிம்ஹன் said...

ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது''
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை.
ஒன்றிருக்க ஒன்று வந்தால்
அமைதி என்றும் இல்லை!!

எங்கள் said...

Chitra நன்றி.

ஹேமா நன்றி.

meenakshi,
இதில் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி சம்பவங்கள் அவரவர் சொல்வதுதான். . சிவாஜி ஒரு நண்பரிடம் கவிஞர் எப்படி இப்படி அற்புதமான பாடல்கள் எழுதிகிறார் என்று கேட்ட கேள்விக்கு பதிலாகச்சொல்லப் பட்ட பதில் "நானா பாடறேன்..என்னை அவள் பாட வைக்கிறாள்.. .(முதல் காதலி)

நன்றி அப்பாதுரை,

நன்றி rk guru,

நன்றி Madhavan, அர்த்தமுள்ள இந்துமதம் அவர் குரலிலேயே ஒலி நாடாவாக வந்திருப்பதைக் கூடக் கேட்டிருப்பீர்கள்.

நன்றி பிரதாப்

எங்கள் said...

நன்றி தமிழ் உதயம், உங்கள் பதிவைப் படிக்கக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

நன்றி அநன்யா.

நன்றி geetha santhanam,

நன்றி வானம்பாடிகள்,

நன்றி LK,

நன்றி தேனம்மை,

நன்றி Jayadeva, எம் எஸ் வி, கவியரசர் நட்பைப் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று தோன்றியது. நீங்கள் சொல்வது உண்மை.

நன்றி வல்லிசிம்ஹன், நல்ல பாடல்.

நன்றி Thameez,
ஏகப் பட்ட பாடல்களில் எதைச் சொல்ல, எதை விட? மேலும் பின்னூட்டத்தில் நீங்கள் எல்லோரும் பல பாடல்களை நினைவு கூரலாமே...!

உண்மை அப்பாதுரை, அது போலவே அண்ணன் என்னடா தம்பி என்னடா, மற்றும் இதயம் இருக்கின்றதே போன்ற பாடல்களும். சொல்லாமல் விட்டது ஏராளம்...!

சாய்ராம் நன்றி.... உங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறோம்.

meenakshi, உண்மை... வரி மாறி விட்டது. ஆனாலும் அடுத்த வரி இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி என்று பழியை இறைவன் மேல் போட்டு விடுகிறாரே...!!

நன்றி வல்லிசிம்ஹன்.....இன்னொரு அருமையான பாடல் வரி பகிர்விற்கு...

Jawahar said...

கண்ணதாசன் பற்றி ஒரு சிறப்பான இடுகை. பாராட்டுக்கள். அவரைப் பற்றி நண்பர்களிடம் நான் பேசிய மாலைகளின் நீளம் போதவில்லை!!! பரவாயில்லை. இன்னும் நிறைய மாலைகள் இருக்கின்றன...

http://kgjawarlal.wordpress.com

a.chandarsingh said...

migavum nandri.kannadhasanai patri

neengal ezhuthiyathatku.en manam

migavum santhosa padugirathu.

naan avarai ninaikkatha naal illai

endre kooralam.dhinamum avar

padalaithan paadik konde enathu

velaiyai seithu kondiruppen.

avar padalgalaiyum,

ezhuththukkalaiyum manathil

vaithathalthan nan indru oru nalla

vazhkkai vazhnthu kondu irukkiren.

enakku avarthan GNANA GURU.avarai

endrum marakka maatten.avarai

maranthu irunthal andru nan

irandhu iruppen. ithu saththiyam.

by a.chandarsingh.

arjunchandarsingh@gmail.com.

சாய்ராம் கோபாலன் said...

Jayadeva well said.


அவருக்கு ஈடு அவர் தான். ஒன்றா இராண்டா எடுத்து சொல்ல ?

எம்.எஸ்.வி. / கண்ணதாசன் நட்பு திரையுலகின் ஒரு அற்புதம். படத்தின் நிகழ்வுக்கு ஏற்ப பாடல் காட்சிகளும், பாட்டும் எழுதிய காலங்கள் தமிழ் திரைப்படங்களின் பொற்காலங்கள். இனி அது போல் வருவது கடினம். குத்துபாட்டு கொள்கையில் நம் இளம் தலைமுறையினர் விழ்ந்ததில் - எவ்வளவு கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம் ! இன்றைய பாடல்களை கேளுங்கள் - மெட்டும் கிடையாது, அர்த்தமும் கிடையாது. இதை பாடல்கள் என்று சொல்லும் அவர்களை என்னவென்று சொல்ல.

நானும் அப்பாதுரையும் நேற்று தான் இதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

அவரின் பாடல்கள் எளிமையான வார்த்தையில் விளையாடிய சித்து விளையாட்டு.

- மாழைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவுகண்டேன் தோழி
- எழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல....பாதை வகுத்தப்பின்பு பயந்தென்ன லாபம், பயணம் நடத்திவிடு மறந்திடும் பாவம்"...
- வந்த நாள் முதல் இந்த நாள் வரை.... பறவையை கண்டான் விமானம் படைத்தான் .... எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான், எதனை கண்டான் இந்த மதம் தனை படைத்தான்
- முதல்வர் காமராஜரிடம் சண்டை ஆகி - அவரிடம் திரும்பி சேர விரும்பி எழுதிய பாடலில் உள்ளர்த்தம் வைத்து "அந்த சிவகாமி மகனிடம், செய்தி சொல்லடி - அவரை சேரும் நாள் பார்க்க சொல்லடி" - எவ்வளவு நாசுக்காக சொல்லி இருக்கின்றார். காமராஜர் அம்மாவின் பெயர் சிவகாமி. (பட்டணத்தில் பூதம் படத்தில்)
- "தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா. பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா; பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா - "உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் - பாட்டில் "
- என்ன நினைத்து என்னை அழைத்தாயோ - எனிந்த கோலத்தை கொடுத்தாயோ
- எங்கே நிம்மதி எங்கே நிம்மதி - அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
- உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை
- உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா
- வீடுவரை உறவு - வீதிவரை மனைவி - காடுவரை பிள்ளை - கடைசி வரை யாரோ ?
- யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க, என் காலம் வெல்லும் வென்றபின்னே வான்கட வாங்க
- நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய், நினைவு தராமல் நீ இருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன் ! - ஆகா என்ன ஒரு வரிகள் (இந்த பாடலில் வாயால் வாசிக்கும் விசிலை கேளுங்கள்) - எம்.எஸ்.வி தவிர யாரும் விசிலை வைத்து பாட்டு தனதில்லை என்று நினைக்கின்றேன்.
- காதிலி அருகில் இருப்பதை வர்ணிக்க - "மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில மயங்கிய ஒளியினை போலே, மன மயக்கத்தை தந்தவள் நீயே...." - கேட்டாலே மப்பு வரும் வரிகள்
- நீராடும் கண்கள் இங்கே; போராடும் நெஞ்சம் இங்கே; நீ வாராதிருந்தால் உன்னை பாராதிரிந்தால் - எண்ணம் மாறதிருப்பேன் இல்லையோ - இளம் விதவை மனம் மாறுவதை இதை விட அழகாக கூறமுடியுமா ?

அவர் எத்தனையோ பாட்டு எழுதிவிட்டு போய் விட்டார் - அதை ஒரு இடுகையில் - அதுவும் மருபோழியில் - கஷ்டந்தேன் !!

எங்கள் said...

நன்றி ஜவஹர்... "இன்னும் நிறைய மாலைகள் இருக்கின்றன.." மாலைப் பொழுதின் மயக்கத்திலே,,,?!

a. chandrasingh.... உங்களை, எங்களைப் போன்ற ரசிகர்கள் இதயத்தில் அவர் என்றும் வாழ்கிறார்.

நன்றி சாய்ராம், தனி இடுகை என்ற அளவுக்குப் பிழிந்து எடுத்து விட்டீர்கள்.

சாய்ராம் கோபாலன் said...

//நன்றி சாய்ராம், தனி இடுகை என்ற அளவுக்குப் பிழிந்து எடுத்து விட்டீர்கள்.//

That is why a mention in the last line like this "அவர் எத்தனையோ பாட்டு எழுதிவிட்டு போய் விட்டார் - அதை ஒரு இடுகையில் - அதுவும் மருபோழியில் (sorry for the typo) - கஷ்டந்தேன் !!

Also,

"நன்றி சாய்ராம், தனி இடுகை என்ற அளவுக்குப் பிழிந்து எடுத்து விட்டீர்கள்."

You say this, because of too many pathos songs is it ??

அப்பாதுரை said...

good points சாய்ராம், எங்கள். கண்ணதாசனுடைய சிறப்பு அவருடைய சொந்த கற்பனையை வெளிப்படுத்தியதில் மட்டுமல்ல. கண்ணதாசன் இல்லாவிட்டால் கம்பன் (வண்ணம்), ஔவை (வாசி வாசி சிவா சிவா), கலித்தொகை, குறுந்தொகை என்று சங்கப்பாக்கள் (அத்திக்காய், ஜவ்வாது மேடை கட்டி), பகவத் கீதை (மேனியைக் கொல்வாய்) ... இவை எல்லாம் என்னைப் போல் பாமரனை வந்து சேர்ந்திருக்குமா என்பது சந்தேகம். கண்ணதாசன் வாழ்ந்த காலத்துல நான் வாழ்ந்தேன் என்பதற்கே ரெண்டு பெக் அடிச்சு மெய் மறக்கணுங்க. அர்த்தமுள்ள இந்துமதம் மட்டும் எழுதியிருக்க வேண்டாம் - போதை தீந்ததும் சொல்றேன், ஏற்கனவே வாயைக் கொடுத்து ஒரு முறை மாட்டிக்கிட்ட சமாசாரம்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!