சனி, 26 ஜூன், 2010

"சார்...நீங்க அவசியம் வரணும்..."

அவரை அலுவலக நண்பர் என்று சொல்லலாம். கேஷ் கலக்ஷனுக்காக வருவதில் பழக்கம். நல்ல நண்பர். இனிமையாகப் பேசுவார். நெருக்கமாகப் பழகுவார். சமீபத்தில் கலெக்ஷனுக்காக வந்தவர் வேலை முடிந்ததும் வண்டியிலிருந்து ஒரு தோல் பை எடுத்தார். பிரித்தார். ஒரு கல்யாணப் பத்திரிகையை எடுத்தார்.

"சார்! தப்பா நினைச்சுக்காதீங்க..." என்று தொடங்கினார்.

கல்யாணப் பத்திரிக்கை கொடுப்பதில் அல்லது வாங்குவதில் தப்பாய் நினைக்க என்ன இருக்கும்...ஏதாவது வில்லங்கக் கல்யாணமா...அல்லது கடன் கிடன் கேட்கப் போகிறாரோ..? ஜாக்கிரதையாக பதிலேதும் சொல்லாமல் ஒரு மத்தியப் புன்னகையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"பையனுக்கும் பொண்ணுக்கும் கல்யாணம்.."

என்னது... மனதுக்குள் பெரிய எழுத்துகளில் அதிர்ந்தேன்.

குனிந்து கல்யாணப் பத்திரிகையை எடுத்து சிரத்தையாய் என் பெயரை எழுதிக் கொண்டிருந்தார். குழப்பத்துடன் ஒரு வேளை இரண்டு பத்திரிக்கை எடுக்கிறாரா என்று பார்த்தேன். ஊஹூம்...ஒன்றுதான்...

"யாருக்கு கல்யாணம்.." இப்போ சரியாய்ச் சொல்வார் பார் என்று நினைத்துக் கொண்டேன்.

"என் பையனுக்கும், என் பொண்ணுக்கும் மதுரைல கல்யாணம்.."

குழப்பறாரே....சரி அவரே சொல்லட்டும்...

"ரெண்டு பேருக்கும் அலையன்ஸ் பார்த்து முடிவு பண்ணினோம். முதல் நாள் என் பையனுக்கும், அடுத்த நாள் அதே மேடையில் என் பெண்ணுக்கும் கல்யாணம்...உங்களால அங்க வர முடியாது என்று தெரியும்...இங்க, இந்த ஊர்ல அடுத்த மாதம் ரிசெப்ஷன் வச்சிருக்கேன்.. அவசியம் வரணும்."

"அடேடே..சந்தோஷம் சார்...கண்டிப்பா வர்றேன்..."

"வர்றேன் இல்லை சார்..வர்றோம்னு சொல்லுங்க... வீட்டுலயும் அழைச்சிகிட்டு வரணும்.."

"கண்டிப்பா....அவசியம் வர்றேன்...ச்சே..வர்றோம்..."

"அப்புறம் ஒரு விஷயம் ... இந்த ஏரியாவுல உங்களைத் தவிர வேறு யாருக்கும் பத்திரிக்கை வைக்கலை... நான் உங்க கூட அப்படிப் பழகி இருக்கேன்..." அப்படியில் அபபடி ஒரு அழுத்தம்...!

உஷாராவதற்குப் பதில் நெகிழ்ந்தேன்... உடனே செல்லை எடுத்து ரிமைன்டர் எல்லாம் போட்டுக் கொண்டு அவருக்கும் காண்பித்தேன்.

"பார்த்தீங்களா....அவசியம் வருவேன்...சீ... வருவோம்..."

சந்தோஷமாக விடை பெற்றார்.

அப்புறம் அது மறந்தே போனது. வேலைப் பளுவில் சுத்தமாக நினைவில்லை. அந்த நாளும் வந்தது. காலையும் மதியமும் செல் இசைத்து இசைத்து நினைவூட்டியது. போகலாமா வேண்டாமா என்று குழப்பம். மனைவி, குழந்தைகள் வேறு இடத்துக்கு செல்லும் வேலை இருந்ததால் அவர்கள் கவலைப் படவில்லை. மெல்ல மெல்ல தவிர்த்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

நாலு மணி போல அவரிடமிருந்து ஃபோன் வந்தது.

"சார்...மறந்துடாதீங்க.... மழை வர்றா மாதிரி இருக்கு... அதைக் காரணமா காட்டி வராம இருந்துடப் போறீங்களேன்னுதான் ஃபோன் பண்றேன்.... அவசியம் வந்துடுங்க..."

அட...என்ன அன்பு...ச்சே, போக வேண்டாம்னு நினைச்சோமே...

"இல்லை சார்! ஞாபகம் இருக்கு.... "

"ஓகே சார்...வந்துடுங்க...எட்டு மணிக்கு முடிஞ்சிடும்... ஒன்பதரை மணிக்கு அவர்களுக்கு டிரெய்ன்... கிளம்பிடுவாங்க...என்னடா இதை எல்லாம் சொல்றேனேன்னு பார்க்காதீங்க... உங்க கிட்ட உரிமையாச் சொல்றேன்..."

மறுபடியும் குற்ற உணர்வில் தவித்துப் போனேன். ச்சே..போக வேண்டாம்னு நினைச்சோமே...

ஆறரை மணிக்குக் கிளம்பினேன்...

பையன் மதியானமே ஒரு மொய்க கவர் வாங்கி வந்திருந்தான்...

எட்டு மணிக்குள் முடிந்து விடும் என்று சொல்லியிருந்தாரே...நாம் லேட் ஆக இருப்போம் கூட்டமாக இருக்கப் போகிறது என்று பார்த்தால் பத்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். தெரிந்த முகம் ஒன்று கூட இல்லை. யாரும் வா என்றும் கூப்பிடவில்லை. அவர்களும் அதே ஃபீலிங்கில் இருந்திருக்கலாம்..! தயக்கத்துடன் மெல்ல சுற்றுமுற்றும் பார்த்தவாறு சென்று கா...லியாய் கிடந்த பல சேர்களில் ஒன்றில் அமர்ந்தேன்.

நிமிடங்கள் கரைந்தன. இன்னும் கொஞ்சம் பேர் வந்தார்கள். நண்பரைக் கண்ணில் காணோம்.

எவ்வளவு நேரம் காத்திருபப்து.... முக்கால் மணி நேரம் கடந்தும் நண்பரைக் காணோம்....யாரையாவது கேட்கலாம் என்றால் யாரும் லட்சியம் செய்வதாகவும் தெரியவில்லை. எல்லோருக்கும் இதே பிரச்னை இருக்குமோ... ஸ்பீக்கரில் பாட்டு வேறு காதைக் கிழித்தது...

மாப்பிள்ளைகளையும், மணப் பெண்களையும் மாறி மாற்றி வித வித போஸ்களில் கிளிக்கித் தள்ளிக் கொண்டிருந்தார் ஃபோட்டோக்ராபர்.

எல்லோருமே பரிசை எப்போது கொடுக்கலாம் என்று பின்னால் சாப்பாட்டு மேசையை கவனித்த வண்ணமிருந்தார்கள்.

ஒன்று ஜோடிகள் மேடையில் அமர வேண்டும். அல்லது மணப் பையன், பெண்களின் பெற்றோர் கண்ணில் பட வேண்டும். நண்பரின் பையன், பெண் யார் என்று தெரிய வேண்டுமே...!

இன்னொரு பிரச்னை வேறு... இருந்தது இரண்டு ஜோடிகள்....என்னிடம் ஒரே ஒரு மொய்க கவர்...! அது ஞாபகம் இல்லாமல் போய் விட்டது.

பொறுக்க முடியாமல் ஃபோன் செய்து பார்த்தேன்...

"சார்..! வந்துட்டீங்களா...கீழ ஹோட்டல் வாசல்ல நின்னு வழி சொல்லிக்கிட்டு இருக்கேன்... நிறையப் பேருக்குத் தெரியாதே..."

அரை மணி கழித்து மேலே வந்தவர் முகத்தில் ஒன்றும் உற்சாகமில்லை. எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை போலும். எனக்குதான் அவரைப் பார்த்ததும் 'அப்பாடா... தெரிந்த ஒரே முகம் வந்து விட்டது' என்று இருந்தது.

"என்ன சார்..இவ்வளவு சொன்னேன்...வீட்டுல அழைச்சுகிட்டு வரலையா..? இருநூறு சாப்பாடு சொல்லி இருந்தேன்....நூறு கூடத் தேறாது போல இருக்கு..." அவர் பார்வை சாப்பாடு மேசை பக்கம் சென்று வந்தது.

இங்குமங்கும் ஓடி அலுவலக நண்பர்களை கவனித்தார். என் பக்கம் பார்வையைத் தவிர்த்தார். எனக்கும் ஒரு மொய்க கவரை வைத்திருப்பதன் சங்கடம் இருந்தது!

கொஞ்ச நேரம் கழித்து கீழே இறங்கி பக்கம் வந்தவரை மடக்கி கவரை எடுத்து அவரிடம் நீட்டினேன். வாங்கி சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு நகர்ந்தார். கொஞ்சம் யோசித்து விட்டு சாப்பிடப் போனேன்.

நீதி....

உறவினர் இல்லத் திருமணம் போகலாம்....

நண்பர்கள் இல்லத் திருமணம் போகலாம்.... அவர்கள் மனைவி, பெற்றோர் ஆகியோரைத் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் இன்னும் நாலைந்து நண்பர்களாவது கூட வந்திருப்பார்கள். உங்களை மட்டும்தான் கூப்பிடறேன் என்று சொல்லும்போதே முடிவு செய்து விட வேண்டும். மணப் பெண்ணோ மண மகனோ மட்டும்தான் தெரியும் என்றாலும் சங்கடம்தான். ஆனால் வந்திருப்பவர்களிலாவது ஓரிரு தெரிந்த முகங்களாவது இருக்க வேண்டும்...!

சாப்பிட்டு விட்டு வந்து "அப்போ.... சந்தோஷம் சார்...! கிளம்பறேன்..." என்றேன். சொல்லாமல் வரக் கூடாதே.... தாம்பூலம் வாங்கிக் கொண்டு வந்தால்தான் அவர்களுக்கும் நல்லது...

கை கூப்பினார்... பக்கத்தில்தான் தாம்பூலப் பைகள் இருந்தன. "சரி சார்...போயிட்டு வாங்க..." விரைந்து வேறு பக்கம் நகர்ந்து சென்றார்.

கிளம்பி கீழே இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

16 கருத்துகள்:

  1. சரி விடுங்க அவரோட கஷ்டம் அவருக்கு ..

    பதிலளிநீக்கு
  2. என்னக்கு தெரிந்து நிறைய பேர் இப்படி சொல்லி மட்டிகொள்கிறார்கள். அந்த மிச்சமாகும் சாப்பாட்டை அருகில் இருக்கும் அனாதை இல்லத்துக்கு அனுப்பலாம்.

    பதிலளிநீக்கு
  3. பயங்கர சஸ்பென்ஸா இருந்துச்சு படிக்கும் போது. கடைசியில புஸ்ஸீன்னு போச்சு :).

    ஆமாங்க. தெரியாத கல்யாணத்துக்கு போனா, சாப்டோமா, கிஃப்ட் குடுத்துட்டு உடனே எஸ்கேப் ஆகிடணும். சும்மா உட்கார்ந்துகிட்டு பராக்கு பார்க்குறது ரொம்ப கஷ்டமான வேலை. எப்படித்தான் அவ்வளவு நேரம் பராக்கு பார்த்தீங்களோ தெரியலை :)

    பதிலளிநீக்கு
  4. குரோம்பேட்டைக் குறும்பன்26 ஜூன், 2010 அன்று 2:44 PM

    அலுவலகத்தில் நான் வேலைக்கு சேர்ந்த புதிதில், என்னுடன் வேலைக்கு சேர்ந்த ஒருவர் - மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் சகோதரிக்குக் கல்யாணம் என்று அழைத்திருந்தார். எல்லோருமே புதுமுகங்களாக இருப்பார்கள் என்பதால் நான் அந்தக் கல்யாணத்திற்குப் போகவில்லை. பிறகு அவர் என்னைப் பார்க்கும்பொழுது 'ஏன் வரவில்லை?' என்று கேட்டார். நான் உடனே, 'அட என்ன சார் இப்படி சொல்றீங்க? ரிசப்ஷன்ல என்னை பார்க்கவே இல்லையா? இல்லை மறந்துட்டீங்களா?' என்று கேட்டேன்.
    அவர் அதற்கு, "ஓ! அப்படியா? சாரி."
    என்று சொல்லி நகர்ந்தார். ஆனால், அலுவலக நண்பர்கள் அந்தக் கல்யாணத்திற்கு கலேக்ஷனுக்கு வந்தபோது, சகாக்கள் என்ன அமவுண்ட் போட்டார்களோ அதே அமவுண்ட் நானும் போட்டேன்.
    ஒரு கல்யாண அழைப்பு வருகிறது, அங்கு அழைப்பவரைத் தவிர வேறு யாரையும் நமக்குத் தெரியாது என்றால், அந்தப் பக்கம் போகாமல் தப்பித்துவிடுவது நல்லது.

    பதிலளிநீக்கு
  5. கதை சொல்லச் சொல்ல என்ன ஆகப்போகுதோ......மாதிரி இருந்திச்சு.எனக்கு இப்போ குழப்பம்.அவர் வருந்தி அழைச்சது மொய்யுக்காகவா இல்லை சாப்பாட்டுக்காகவா ?

    பதிலளிநீக்கு
  6. ஹெல்லோ நாங்க வர மாட்டோம்.
    visit my bloger(naloosu.bloagspot.com)

    பதிலளிநீக்கு
  7. கதை நல்லா இருக்குதுங்க... :-)

    பதிலளிநீக்கு
  8. தொழில் நிமித்தமா பழக்கம் ஏற்பட்டு, அதனால் அந்த விசேஷங்களுக்கு போகும் போது, வாங்கன்னு யாரும் கூப்பிடலனா கூட வருத்தப்படக்கூடாது.
    நம்மல யாருக்கும் தெரியாதே. மொய்ய கொடுத்தோமா, சாப்பிட்டோமான்னு வந்திடணும்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல பாடம் தான் போங்க..
    ஹ்ம்ம்.. என்ன குழப்பம் இருந்தாலும் மதிச்சு வந்தவங்களை ஒழுங்கா உபசரிக்கணும்..
    சரி இனிமே எங்க போகலாம் போக வேனம்ம்னு முடிவு பண்ண ஈஸி ஆச்சு.. :)

    பதிலளிநீக்கு
  10. இவ்வளவு அழகாக் கூப்பிடத்தெரிஞ்சவருக்கு உபசாரம் செய்யவும் ஆட்களை ஏற்பாடு செய்யத்தெரியணுமே.

    ஒரெ பொண்ணு ஒரே பையனோ என்னவோ. தம்பி தங்கைகள் (அவருக்கு.அவர் மனைவிக்குன்னு )யாராவது கவனித்திருந்தால் இத்தனை குறை இருக்காது.
    மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு வர மாதிரிதான் நிறைய இருக்கு.
    கிஃப்ட் கவர் கொடுத்ததும், நம்மச் சாப்பிடச் சொல்லுவார்கள். ஆனால் யாரும் இல்லாமல் போகத் தயக்கமாக இருக்கும் ,.சாப்பிடாமல்,தாம்பூலப் பை வாங்காமல் வந்த திருமணங்களும் உண்டு:))))
    நன்கு தெரிந்தவர்கள் திருமணத்துக்கு மட்டுமே போவது என்று தீர்மானம் வந்துவிட்டது..

    பதிலளிநீக்கு
  11. எங்கள் BளாG, ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  12. கற்பனையில்லை என்கிற நிச்சயம் உண்டு; ஏனென்றால் கற்பனை எனில் இவ்வளவு அனுபவபூர்வமான யதார்த்தம் இருக்க வழி இல்லை:)

    இந்த மாதிரி சமயங்களில், நம்மை மாதிரியே இருக்கிற, நமக்கு ஒத்து வரும் போலத் தோற்றமளிக்கிற முகம் ஜாடை உள்ள யாரையாவது பிடித்து, 'குறைந்த கால அவகாச'த் தோழமைக்கு உட்படுத்திக் கொள்வது தான், சரியான வழி. இருக்கவே இருக்கு அரசியல், சினிமா, ஸ்போர்ட்ஸ், சுற்றுச்சூழல் என்று எத்தனையோ.. எதையாவது தட்டுப்படற டாப்பிக்கைத் தொட்டு விட்டால் போதும், கொஞ்ச நேரத்தில் பாருங்கள், நாலைந்து பேர் கொண்ட குழுவாக இது பெருக்கம் கொண்டு, கல்யாணத்திற்கு நம்மை அழைத்தவர்களை விட, இந்த புத்தம் புதிய சகவாசம் நெருக்கமாகி விடுவார்கள். இடையிடையே, "சார் சொல்றது தான்,சரி!" என்று தெரியாத இடங்களில் இருந்தெல்லாம் சப்போர்ட் வேறே. அரைமணி நேரமானாலும், பின்னாடி நினைவு கொள்ளும் அளவுக்கு சில தருணங்கள் சுகமாகக் கழிவதுமுண்டு. சாப்பாட்டு பந்திக்குப் போகும் பொழுது கூட, பத்து பேர் புடைசூழ ராஜநடையில் போகலாம்.
    அரட்டை மாதிரி அணுக்கத் தோழன் வேறு யார் இருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  13. ஹா...ஹா.... உண்மைதான் ரோமியோ... என்ன கஷ்டமோ அவருக்கு...

    நல்ல யோசனை Software Engineer, நிறைய பேர் அப்படிச் செய்கிறார்கள் என்று கேள்விப் பட்டுள்ளோம்.

    ஒண்ணுமேயில்லை Madhavan. அதுதான் விஷயம்!

    நன்றி பின்னோக்கி... அவர் கஷ்டத்தைப்புரிந்து கொண்டீர்கள்.

    சரியான யோசனை குரோம்பேட்டைக் குறும்பன்.

    ஹேமா.... என்னவோ அவரைக் கூப்பிட்டு விட்டார். ஏனோ அங்கு அபபடி இருந்து விட்டார். சில நேரங்களில் சில மனிதர்கள்....

    நன்றி meenakshi.

    நன்றி Chitra.

    உண்மை தமிழ் உதயம். அதைத்தான் கதைல அவர் செஞ்சிருக்கார்னு நினைக்கறோம்.

    Ananthi.... இது மறுபக்கம். இதுவும் சரிதான்.

    வாங்க வல்லிசிம்ஹன், அழகாச் சொல்லலி இருக்கீங்க. ஆனால் இப்போதான் எல்லாவற்றையும் கான்ட்ராக்டுக்கு விட்டுடறாங்களே ... வாழ்த்துக்கு நன்றி.

    வாங்க ஜீவி சார்... "கற்பனையில்லை என்கிற நிச்சயம் உண்டு; ஏனென்றால் கற்பனை எனில் இவ்வளவு அனுபவபூர்வமான யதார்த்தம் இருக்க வழி இல்லை" இதைப் பாராட்டாக எடுத்துக் கொள்கிறோம்.! நீங்கள் சொல்லியிருக்கும் யோசனை அற்புதமான யோசனை. நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!