Monday, June 21, 2010

அண்டப் புளுகும் ஆகாசக் கோட்டைகளும்.


யாரோ எப்பவோ கிளப்பிவிட்ட பதின்ம வயது நினைவுகள் பதிவுக்காக இல்லாத மூளையை இரண்டு கரங்களால் கசக்கி, அப்போ நினைக்க ஆரம்பித்தவைகளை, இப்போ எழுத ஒரு சிறிய முயற்சி இது. (அந்தச் சமயத்தில் வேறு ஆசிரியர் அந்த டாஸ்க் எடுத்துக்கொண்டதால், நான் எஸ்கேப் ஆனேன்.)

ஒற்றை இலக்க வயதிலிருந்து, இரட்டை இலக்கத்திற்கு மாறிய அல்லது மாறிக்கொண்டிருந்த நாட்களில், என்னை வெகுவாக பாதித்த ஒரு நண்பனின் பெயர், ஸ்ரீனிவாசன்.

ஆரம்ப நாட்களில் நடுவர்கோவில் சன்னதித் தெருவில் இருந்து, பிறகு நான் இருந்த பெருமாள் கோவில் சன்னதித் தெருவிற்கு வீடு மாறி வந்திருந்தான் அவன். 

மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்பு படித்த நாட்களிலேயே, அவனுடைய வீட்டில் இருந்த பழைய குமுதம் இதழ்களை அவ்வப்போது கொண்டுவந்து எனக்குக் கொடுத்து, (அப்பொழுதெல்லாம் எனக்கு ஜோக்குகள் கார்ட்டூன்கள் - எழுத்து கூட்டிப் படிக்கத் தெரியும்; ஆனால் சிரிக்கத் தெரியாது. - புரிந்தால்தானே சிரிப்பதற்கு !!) என்னுடைய இலக்கிய தாகத்திற்கு சிறு தீனிகள் கொடுத்தவன் ஸ்ரீனிவாசன். நான் அவன் கொடுக்கும் புத்தகங்களை வீட்டிற்குக் கொண்டுவந்து, அம்மாவிடம் கொடுத்து, அவர்கள் படித்துவிட்டு மறுநாள் கொடுப்பதை ஸ்ரீனிவாஸனிடம் கொடுத்து - திரும்ப அவன் கொடுக்கும் புத்தகங்களை வீட்டுக்குக் ..... சரி சரி - இப்படி ஆரம்பித்தது எங்கள் நட்பு.

நாங்கள் இருவரும் நேஷனல் ஹை ஸ்கூலில் - ஆறாம் கிளாசில், ஒரு கீற்றுக் கொட்டகையில், வைத்தியநாத அய்யர் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் .......

நானும், என்னுடைய மற்றொரு நண்பன் பாலச்சந்திரனும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரிச்சார்ட் நிக்சனைத் தோற்கடித்து கென்னடி வெற்றி பெற்றதைப் பற்றி சீரியசாகப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது ....(ஹி ஹி - அப்போ என்ன பேசிக் கொண்டிருந்தோம்  என்பது நினைவில் இல்லாததால், இன்னொரு பக்கத்துப் பையன் நாகராஜன் அடித்த ஒரு ஊச ஜோக்கை ஆதாரமாகக் கொண்டு " அமெரிக்க ஜனாதிபதி யாருடி? - ஹூம் அதைப் பற்றி நமக்கென்னடி?" - விக்கி உதவியுடன் இதை எழுதினேன்!) 

வகுப்புக்கு வந்த தமிழாசிரியர் சோமசுந்தரம் அவர்கள், ஒரு சதுர வடிவ டப்பாவை திறந்து, அதிலிருந்து சில கண்ணாடி ஸ்லைடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்லைடுகள் என்றால் என்ன என்று நான் விளக்கம் அளிக்கவேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். நீங்க ஸ்டார் அல்லது பாண்டியன் தியேட்டரில் படம் பார்த்திருந்தால், இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பிக்கு முன்பாக விளம்பர ஸ்லைடுகள் ஒவ்வொன்றாக காட்டுவார்கள். அப்போ சில புதிய மற்றும் பழைய ஹிட் பாடல்கள் அதிக சப்தமாக ஒலிக்க. பக்கத்தில் உள்ள நண்பர்கள்(?) விடுகின்ற பீடிப் புகையும், போண்டாக்களை சத்தமாக மெல்லும் சப்தமும், போண்டாவின் இனிமையான வாசனையும், நாம் சொர்க்க லோகத்தில் உட்கார்ந்திருப்பது போல தோற்றத்தை உருவாக்கும். 

தமிழாசிரியரின் கையில் இருப்பது அந்த விளம்பர ஸ்லைடுகள்தான் என்பதே எனக்கு ஸ்ரீநிவாசன் சொல்லித்தான் தெரியும். அதோடு விட்டானா அவன், அது போல நிறைய ஸ்லைடுகள் தன வீட்டில் உள்ளன என்றான். நான், "அப்படியா?" என்று மட்டும் கேட்டுவிட்டு சும்மா இருந்தேன். அதற்குப் பிறகும், அவன் விடாப்பிடியாக, ' உனக்கு வேண்டுமா?' என்று கேட்டான்.

அங்கேதான் ஆரம்பித்தது ஒரு சாம்ராஜ்யத்தின் சரிவு! நான் 'சரி, எனக்கு பத்து ஸ்லைடு கொண்டுவந்து கொடு' என்றேன். மறுநாளில் ஆரம்பித்து - ஒவ்வொரு  நாளும் நான் ஸ்லைடு எங்கே என்று கேட்டால், அவன் ஒவ்வொரு நாளும் கூறிய பதில்கள் இவை:

* அடாடா மறந்து போயிட்டேன்.
* அம்மா நான் படிக்கவில்லை என்பதால் அதைப் பரண் மேலே வெச்சிட்டா.
* என் தங்கச்சி அதை எடுத்து எங்கியோ ஒளிச்சு வெச்சிட்டா 
* சாப்பிடும்போது அதை எடுத்து பக்கத்துல வெச்சிகிட்டேன். ஆனா ஸ்கூலுக்குக் கிளம்பற அவசரத்தில் எடுத்துக்காம வந்துட்டேன்.
* சிங்கப்பூரிலிருந்து என்னுடைய மாமா வந்திருக்கார். அவர், 'படிக்கிற பையனுக்கு ஏண்டா சினிமா ஸ்லைடு?' அப்படீன்னு திட்டி, அதை வாங்கிக் கொண்டுவிட்டார்.

இந்த இடத்தில் 'நுணலும் தன வாயால் கெடும்' - என்பதற்கிணங்க நான், 'அப்படியா உங்க மாமா சிங்கப்பூரா?' என்று கேட்டேன். அவ்வளவுதான் - இரண்டாம் அத்தியாயம் துவங்கிவிட்டது. ஆமாம், இப்போ ஒரு ஷார்ட் ட்ரிப் - அடுத்த தடவை வரும்பொழுது, எனக்கு காமிரா, கலர் பென்சில், சைக்கிள், சிங்கப்பூர் சட்டை எல்லாம் வாங்கி வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

'ஆ' என்று பிளந்த என் வாயைப் பார்த்ததும் அவன், 'உனக்கும் காமிரா வேணுமா?' என்று கேட்டான். எனக்கு ஒரே சந்தோஷம். வேண்டும், வேண்டும் என்று தலை அசைத்தேன்.

காமிரா கையில் கிடைத்தவுடன், அதை வைத்துக்கொண்டு, அருகில் ஏதாவது தியேட்டரில், கொஞ்சும் சலங்கை படம் ஓடிக்கொண்டிருந்தால், அங்கே போயி, 'சிங்காரவேலனே தேவா' பாடலை அப்படியே காமிராவால் படமாக்கி, அதை வீட்டுக்குக் கொண்டு வந்து, வீட்டிலே அந்த சினிமாவை ஓட்டி, நண்பர்கள் ஞானப்பிரகாசம், கிருஷ்ணமூர்த்தி, பரமசிவம், ஐயப்பன், கார்த்திகேயன், ராமன் எல்லோருக்கும் போட்டுக் காட்டலாம் என்று கணக்குப் போட்டேன். இரண்டு காமிராவாகக் கிடைக்குமா என்றும் கேட்டுவைத்துக் கொண்டேன். ('பாக்கலாம் - மாமாவுக்கு அவர் சிங்கப்பூரிலிருந்து அடுத்த முறை கிளம்பு முன் லெட்டர் எழுதி ஞாபகப் படுத்துகிறேன்'.)


பிறகு, மாமா ஊருக்குப் போனது. அவருக்கு இவன் எழுதிய கடிதம், அவர் இவனுக்கு எழுதிய கடிதம் என்று சுவாரஸ்யமான பல தகவல் பரிமாற்றங்கள் எங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தன. 

நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு ஒருநாள், அரைப் பரீட்சை லீவு சமயம் என்று ஞாபகம். ஸ்ரீனிவாசன் என் எதிரே வந்துகொண்டிருந்தான். 

'எங்கேடா போறே?' என்று கேட்டேன். 
'எங்க மாமாவைப் பார்க்க' என்றான். 
'நானும் வரட்டுமா?'
'உம் வாயேன்'
அவனுடன் சேர்ந்து ராஜநடை போட்டேன். அவனுடைய சிங்கப்பூர் மாமா எப்படி இருப்பார்? நைலான் சட்டை போட்டிருப்பாரா? காமிரா கொண்டுவந்திருப்பாரா? என்ற எண்ணங்கள் என்னை விடாமல் துரத்தி வந்தன. 

அவன் சென்றது, நாணயக்காரத் தெருவில் உள்ள 'நள பீம விலாஸ்' என்னும் ஒரு சாதாரண, வீடு போன்ற ஒரு ஹோட்டலுக்குள்.

அங்கே இருந்தவர்கள் ஸ்ரீநிவாசனின் சித்தப்பாவும், மாமாவும். அவர்களும் எங்களைப் போல சாதாரணக் குடும்பம்தான். ஸ்ரீநிவாசனுக்கு அப்பா இல்லை (காலமாகிவிட்டார்) சித்தப்பாவும், மாமாவும் ஸ்ரீனிவாசனைப் படிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். 

ஸ்ரீனிவாசன் பிறகு, அவன் சொன்ன எல்லாமே இனிய கற்பனைகள்தான் என்று ஒப்புக்கொண்டான்.

எனக்கு ஏமாற்றமாகவும் இருந்தது, அவனுடைய கற்பனா சக்தியைப் பார்த்து ஆச்சரியமாகவும் இருந்தது.

( வாசகர்கள் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த பொய்கள் பற்றிப் பின்னூட்டம் போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த Fantasy தான் பின்னாட்களில் படைப்பாற்றல் திறன் வளர உதவியாக இருக்கும். நீங்க பாண்டசி யை பரப்பியவராக இருந்தாலும் சரி, அல்லது என்னைப் போல அதீதமாக நம்பி பல்பு வாங்கி இருந்தாலும் சரி.) 

14 comments:

LK said...

உங்க நண்பர் மட்டும் இல்லை, நிறைய பேர் இப்படி இருக்காங்க..

அநன்யா மஹாதேவன் said...

ரொம்ப ரொம்ப அழகான அப்பாவித்தனமும் குழந்தைத்தனமும் நிறைந்த நிகழ்வு. முக்கியமா சிங்காரவேலனே தேவா படத்தை தியேட்டரில் திருட்டு வீடியோ எடுத்து நண்பர்கள் பெயர்கள் கூட ப்ளான் பண்ணி போட்டுக்காட்டலாம்ன்னு நீங்க நினைச்சது ரொம்ப அழகு. ரசிச்சு சிரிச்சேன். சும்மாவா சொன்னாங்க? innocence is bliss!

கீதா சாம்பசிவம் said...

உண்மைதான். இப்படி எல்லார் வாழ்விலும் ஒரு சிநேகிதனோ, சிநேகிதியோ இருப்பாங்க. என்னோட சின்ன வயசிலே ஒரு முறை நாவல்பழமோ, இலந்தைப்பழமோ சாப்பிடும்போது கொட்டையை முழுங்கிட்டேன். அப்போக் கூடப் படிக்கும் சிநேகிதி வயிற்றில் மரம் முளைக்கும்னு சொன்னதை நம்பி நான் அழுத அழுகை இன்னும் நினைவில் இருக்கு. இப்படி நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய! :))))))))

கீதா சாம்பசிவம் said...

தொடர

கீதா சாம்பசிவம் said...

மறந்துட்டேனே, மயிலிறகைப் புத்தகத்துக்குள்ளே வச்சு அது குட்டி போடும்னு சொல்லி நம்ப வச்சது, கைவிரல் நகங்களில் வரும் வெள்ளைப் புள்ளிகளை அதிர்ஷ்டப் புள்ளிகள் என்றும், கருடன் வந்து பூப்போட்டான் என்றும் சொல்வது!

ஆஹா, மறக்க முடியாத நினைவுகள்!

அஹமது இர்ஷாத் said...

Nice sharing...

குரோம்பேட்டைக் குறும்பன் said...

நான் கூட சிறிய வயதில் ஒரு இலந்தக்கொட்டையை முழுங்கிவிட்டு, என்னுடைய அண்ணனும் அக்காவும் என் வயிற்றில் மரம முளைக்கும் என்று சொல்லியதைக் கேட்டு, அரண்டு போய் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் உட்கார்ந்திருந்தேன்.

குரோம்பேட்டைக் குறும்பன் said...

மயில் இறகை புத்தகத்துக்குள் வைத்திருந்தது மட்டும் அல்ல - அதற்குப் பக்கத்தில், கொஞ்சம் அரிசியையும் போட்டு வைத்திருந்தேன். மறுநாள் மயிலிறகு குட்டி போட்டிருக்கிறதா என்று காலையில் ரகசியமாக செக் செய்தபோது, என் முதுகில் ரெண்டு போட்டு, இனிமே அரிசியை எடுப்பாயா? என்று கேட்டார் என் அம்மா.

அநன்யா மஹாதேவன் said...

இந்த மயிலிறகு மேட்டர் ரொம்ப அந்யாயம்! அதுக்கு தீனி போட்டது அதை விட கொடுமை. பென்ஸில் சீவி அந்த வுட் பார்ட்டிகிள்ஸ் எல்லாம் புஸ்த்தகத்துக்குள்ளே போடுவோம். மயிலிறகு திங்கறதுக்காம்! கஷ்டம்! பழக்கொட்டை - வயிற்றில் மரம் வளரும் மேட்டர் காலங்காலமா வழங்கி வருது போல இருக்கு! சேம் பின்ச். நல்ல நினைவுகள்!

ஹுஸைனம்மா said...

//அநன்யா மஹாதேவன் said...
பழக்கொட்டை - வயிற்றில் மரம் வளரும் மேட்டர் காலங்காலமா வழங்கி வருது போல இருக்கு! //

அதானே? என் கடைசித் தங்கச்சிய ஆரஞ்சு மரம் முளைக்குன்னு சொன்னதும் அவ அழுதா!! இப்போ என் சின்னவன்கிட்ட (7 வயசு) ‘ஆப்பிள் மரம் முளைக்கும்’னு சொன்னா, அவன், ‘நல்லதுதானேம்மா, இனி ஆப்பிள் காசுகொடுத்து வாங்கவேண்டாமே, மிச்சம்தானே’ன்னு அசால்ட்டாச் சொல்றான்!! :-((

ஹுஸைனம்மா said...
This comment has been removed by the author.
அநன்யா மஹாதேவன் said...

hussainammaa,
unga payyan semma smart!!!

அப்பாவி தங்கமணி said...

நானே இந்த மாதிரி நெறைய ரீல் சுத்தி இருக்கேன் நாலாவது படிக்கறப்ப.... கிட்ட தட்ட அச்சு அசலா இதே போல...ஹி ஹி ஹி... அதை எல்லாம் இங்க சொல்லி இருக்கற கொஞ்ச நஞ்ச இமேஜையும் டேமேஜ் பண்ணனுமா.... ஆஹா.... மி எஸ்கேப்... சூப்பர் பதிவு ஆனா...

Madhavan said...

எங்க ஊருலயும் இதேபோல ஒருத்தன் இருந்தான்.. அவன் சுத்தறதெல்லாம் ரீலுனு தெரிஞ்ச பின்னாடி நாங்க அவனுக்கு வெச்ச பேரு
"பொய்யாழ்வார்"

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!