செவ்வாய், 22 ஜூன், 2010

எலும்பு, சதை, இரத்தம், இதயம்!

சமீபத்தில் ஆஸ்பத்திரியில் அடிக்கடி சென்று காத்திருக்கவும்சில இரவுகள் அங்கு தூங்கவும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.  நகரின் மிகச்சிறந்த மருத்துவமனை எனப் பெயர் பெற்ற இடம்.  ஒரு சில இடங்களைத் தவிரமற்றபடி ஓரளவு சுத்தமாகவும்சிறப்பாகவும் பராமரிக்கப் பட்டுவரும் நிறுவனம்ஆனால் இப்போது சொல்லப் போவது நிறுவன நிர்வாகம் குறித்த விமரிசனம் அல்ல.  அங்கு ஏற்பட்ட மாறுபட்ட உணர்வுகள்.


*****
யாருக்கு உடம்பு சரியில்ல?”
என் வீட்டுக்காரருக்கு அம்மா!” 
என்ன ஆச்சு?”
ரோடு ஆக்ஸிடண்ட்தலைலே அடி..”
கவலைப் படாதீங்க.. கடவுளை வேண்டிக்குங்க.. சரியாயிடும்..”
கடவுளை வேண்டி என்ன பிரயோசனம்?  காலைலே உயிர் போயிட்டுது.  அப்பா பணம் கட்டி பாடியை எடுக்க ஏற்பாடு செய்ய வெளியே போயிருக்காரு...”

*****
மூன்று பேர் கூடி சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்தனர்..
“ நான் சொல்றதைக் கேளு.. அவனுடைய காசு எவ்வளவு இருக்கோ அதில் பாதி வரை செலவு செய்வோம்அதற்குள் சரியாகலைன்னா வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போயிடலாம்..”  வயதானவர் சொல்கிறார்


பாதி என்ன கணக்கு?  மீதியை உங்களுக்கு வச்சுக்கப் போறீயளா?:” ஆங்காரமாகக் கேட்பவர் நோயாளியின் மனைவி.  வயதானவர் நோயாளியின் அப்பாவாக இருந்திருக்க வேண்டும்

அப்படியில்லம்மா.  கட்டின சம்சாரம் நீ இருக்கேஉனக்கு ஒரு குழந்த வேறே இருக்கு.  நாளக்கே நாங்க இல்லைன்னு ஆயிட்டா நீ பொழைக்க வேண்டாமா! “

*****

சத்தமாக மூசு மூசு என்று அழுதுகொண்டிருந்தாள் அந்த இளம்பெண்.  அக்கம் பக்கத்தில் இருந்த இரண்டொரு குடும்ப உறுப்பினர்களும் கலக்கமாகக் காணப்பட்டனர்.  நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்முடியவில்லை.

இதோ பாருங்கம்மா.. இங்கே இருக்கிறவங்க எல்லாரும் ஐ.சி.யுவிலே சீரியஸ் கண்டிஷன்லே படுத்துக்கிட்டுருக்காங்க.  நீங்க இப்பிடி அழுதீங்கன்னா எல்லாருக்கும் அதைரியமாப் போயிடும்.  மனசைத் தேத்திக்குங்க... யாருக்கு உடம்பு சரியில்ல?"

தன் வீட்டுக் காரர்அல்லது தன் குழந்தை என்று சொல்லப் போகிறாள் அவள் என்று எதிர் பார்த்திருந்த என்னை வியப்புக்குள்ளாக்கிற்று அவள் சொன்ன பதில்.

“ என் மாமியார் திடீர்னு பேச்சு மூச்சில்லாம படுத்துக்கிட்டு இருக்காங்கய்யா...”

*****
நோயாளிக்கு வயது 81.  அதுவரை ஆரோக்கிய சிகரமாக விளங்கிய அவர் திடீரென்று கொலாப்ஸ் ஆகி விழுந்து விட்டாராம்.  மூளையில் ரத்தக் கசிவு என்று சொன்னார்கள்.  பேச்சு மூச்சில்லாமல் ஐந்து நாளாகப் படுத்திருக்கிறார்.

இரண்டே இரண்டு நபர் மட்டும்தான் பார்த்துவர முடியும் என்ற விதியினால் மன்றாடி அவரைத் தான் போய் முதலில் பார்த்துவிட்டு வந்தாள் அந்த நாற்பது வயதுப் பெண்மணி  பயங்கரமாக அழுகை.  நெஞ்சில் அடித்துக் கொள்ளாத குறைஒரே கண்ணீர் வெள்ளம்  கலக்கம் அசாத்தியமாகத் தெரிந்தது.

தா.. ரொம்பத்தான் கலங்கிப் போறயே... கட்டின பொண்டாட்டி நான் சாதாரணமா இருக்கேன்உனக்கு என்ன “ என்று நோயாளியின் மனைவி சொல்லக் கேட்டதும் அந்தப் பெண்ணை இரண்டாவது முறையாக கவனித்துப் பார்த்தேன்.  என் மனதில் ஒரு குறு குறுப்பு.  அப்படியானால்..  அப்படியானால் இவள் யார்?  அவரது ஆசை நாயகி?  மனதில் விபரீதமாகக் கற்பனை வெள்ளம் கரை புரண்டது.

ஐயோஎனக்கு இவர் மாதிரி யார் செஞ்சிருக்காங்க.. இவரில்லன்னா நான் எங்கேயோ குப்ப மேட்டிலே..”

என் ஆவல் அதிகமானது.  ரொம்ப சாமர்த்தியமாக அருகில் விசாரித்தேன்.

அதுங்களா, இவங்க சீக்காக் கிடக்கிறவரு செஞ்ச உதவியில பெரிய படிப்பு படிச்சு, பெரிய அந்தஸ்துல இருக்குற அம்மா.  பாவம் அவங்களால தாங்க முடியல!”

*****
டாக்டரின் பேச்சில் ஒரு தீர்மானம்ஒரு இறுதித் தன்மை தெரிந்தது.

“ நான் சொல்றதைக் கேளுங்க.. வீட்டுக்குக் கூட்டிக் கிட்டுப் போயிடுங்க.. ஆச்சு அஞ்சு ஆறு நாளாச்சுஇன்னும் கட்ட மாதிரி கிடக்காரு.  செலவும் ஏகப் பட்டதா செய்யணும்.  வயசும் ரொம்ப ஆயிடுச்சு..”

நோயாளியின் உறவினர்கள் கேட்பதாக இல்லை

மூன்றே நாட்களில் நோயாளி கம்பீரமாக தானே நடக்காத குறையாக வீல் சேரில் மகாராஜா மாதிரி டிஸ்சார்ஜுக்குப் பின் வெளியேறினார்.
***** 

மோட்டார் சைக்கிள் விபத்தில் அடிபட்ட சின்ன வயசுக்காரர்கள்,  எண்பதுக்குப் பின் திடீரென்று நினைவிழந்து விழுந்த முதியதுகள்நடு வயசில் குடி காரணமாக சிசிச்சை விளங்காமல் போகும் மிடில் கிளாஸ் ஆண்கள் இப்படியாக இந்த உலகம் தனியான குடிமக்களைக் கொண்டு விளங்குகிறது.  சவம் போல காட்சியளித்தவாறு தள்ளு வண்டியில் தீவிர சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகள்ஏதோ விமரிசனப் பார்வை பார்த்தவாறு மூக்கிலும் தொண்டையிலும் குழாய்களுடன் ஒரு வார்டிலிருந்து ஒரு சோதனைச் சாலைக்கு வேறு வார்டுக்கோ செல்லும் கேஸ்கள்நிஜமாகவே உயிர் போனபின் கொல்லைப் புறவழியாகக் காணாமல் போகும் கேஸ்கள்ஒரு நபர் சிவலோகம் சென்றதும் அந்தப் படுக்கைக்குக் காத்திருந்த அதை ஆக்கிரமிக்கும் ஐ.சி.யு நோயாளிகள் என்று விசித்திரமான கலவையுடன் உயிர்ப்புடன் இயங்குகிறது மருத்துவமனை.  அந்தக் காலத்தில் ஒரு சினிமாப் படமே பிடித்து விடலாம் என்ற அளவுக்கு செலவு பிடிக்கும் இந்த இடத்தில் கார்பரேட் சீக்காளிகள்இன்ஷ்யூரன்ஸ் கவர் இருக்கும் அதிர்ஷ்ட சாலிகள்அலட்சியமாக சிகிச்சை பெறுகின்றனர்.  அப்படி அல்லாத துர்ப்பாக்கியசாலிகள்பையையும் பாங்க் பாலன்ஸையும் சரிபார்த்தவாறு கணக்குப் போட்டு செலவு செய்கின்றனர்.  வீடு மனை போன்றவற்றை விற்றாலும் கட்டு படியாகாத சிகிச்சை செலவுக்கு சரிக்கட்ட கஷ்டப்பட வேண்டும் என்ற அளவில் இருக்கும் மருத்துவச் செலவுகள் என்னைத் திகைக்க வைக்கின்றன.

அரசு ஓரிரண்டு மருத்துவமனைகளையாவது நல்ல நிலையில் பராமரித்து அதன் புகழை நிலை நாட்டினால்நாட்டுக்குச் செய்யும் மிகப் பெரிய தொண்டு.

18 கருத்துகள்:

 1. அருமையான பதிவு...

  உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
  தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
  http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html

  பதிலளிநீக்கு
 2. மனது வலிக்கிறது! நிஜம் தான். ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு கேஸும் ஒவ்வொரு கதை தான். வித்தியாசமான வ்யாதிகள், வித்தியாசமான மனோபாவங்கள்!
  அருமையான தொகுப்பு. என்னை மிகவும் பாதித்தவை, நோயாளியின் தந்தை மூத்தவர் பேசுவதில் எவ்வளவு நியாயங்கள், தீர்க்கதரிசனம் இருக்கிறது? பல சமயங்கள் நானும் பெரியவர்களை எதிர்த்து பேசிவிடுகிறேன். இனியாவது திருந்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.
  அப்புறம் அந்த ‘இன்னொரு’ பெண்ணின் அழுகை! அவளின் நன்றியுணர்வு என்னை சிலிர்க்க வைத்தது! அருமை!

  பதிலளிநீக்கு
 3. உண்மை. மருத்துவமனையில் அதுவும் ICU அருகில் கொஞ்சம் நேரம் பார்வையாளராக இருந்தால் போதும் நாம் புத்தராகிவிடலாம். மருத்துவ செலவுகளைக் குறைக்க அரசாங்கம் ஏதாவது செய்யலாம் (வருமான வரியையும் இன்சூரன்சையும் இணைத்து ஏதாவது செய்யலாம்).---கீதா

  பதிலளிநீக்கு
 4. மருத்துவமனைகளில் எத்தனை விதமான உணர்வுகள்.... எத்தனை பேர், தங்கள் கவலைகள் - வேதனைகளை தாண்டி அடுத்தவரின் வலியை உணர முடியும்? உங்கள் பதிவு, உங்களின் நல்ல மனதையும் அக்கறையையும் அடையாளம் காட்டுகிறது. பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 5. மருத்துவமனை சூழலை கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்:)

  பதிலளிநீக்கு
 6. எங்களூர் வைத்தியசாலைகளை நினைத்தாலே ஒரு பயம்.
  ஒரே வைத்தியசாலை வாடை தந்துவிட்டிர்கள் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 7. என் மாமாவிற்காக இப்போது ஆஸ்பத்திரியில் தான் இருக்கிறேன். உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களே என் மனதில் தோன்றியது.

  பதிலளிநீக்கு
 8. கிட்டத்தட்ட ஆயிரம் கோடி செலவு செய்து நடக்கப் போகிறது தமிழ் மாநாடு. இவ்வளவு பணத்தை அரசாங்க மருத்துவ மனைகளில், மருத்துவ வசதியை பெருக்கவும், சின்ன சின்ன கிராமங்களுக்கு கூட ஓரளவுக்கு மருத்துவ வசதி கிடைக்கவும் அரசாங்கம் வழி செய்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 9. இது என்ன கருத்துரைத்தவர்கள் பட்டியல் திடீரென்று? ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏதாவது பரிசு தரப் போகிறீர்களா?--கீதா

  பதிலளிநீக்கு
 10. ஸ்ரீராம்,
  மருத்துவமனையில் அம்மாவை அட்மிட் செய்யும்போது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கவில்லை.
  எல்லோருடைய எண்ணங்களையும் தகர்த்து அவள் வெளியே வந்து 18 மாதங்கள் நன்றாகவே இருந்தாள்.
  அவளுடன்,மூன்று மருத்துவ மனைகளில் இரண்டு மாதங்கள் கழித்த அத்தனை நினைவுகளையும் கொண்டுவந்துவிட்டீர்கள்.
  இன்சுரன்ஸ் இல்லாமல் பட்ட பாடும் நினைவுக்கு வருகிறது.
  எல்லாம் ஒரு பாடம் தான்.கடவுள் அருளில் எல்லோருக்கும் மருத்துவ வசதி நல்ல படியாகக் கிடைக்கணும்.

  பதிலளிநீக்கு
 11. எனக்கு ஹாஸ்பிட்டல் என்றாலே பயம்...

  ஆனா அங்க நடக்குற விஷயங்கள் சில, நீங்க சொன்னது மனதை தொடும் வண்ணம் இருந்தது..

  அதிலும், மாமியாருக்கு உடம்பு சரியில்லையென அழுத பெண்ணும், கணவன் உடலை வாங்கி போக வந்த பெண்ணும்... :-((

  தொடருங்க..... உங்க இயல்பான நடை பிடிச்சிருக்குங்க..

  பதிலளிநீக்கு
 12. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு கதை. எல்லாம் வீட்டுக்குவீடு வாசப்படி

  பதிலளிநீக்கு
 13. //# சாய்ராம் கோபாலன் (92) //

  என்னங்க, இதை பார்த்தால் எனக்கு வேலை போய்விடும் போலிருக்கே ?!?! எவ்வளவு நேரம் விரயம் செய்து இருக்கின்றேன். இப்போது போடுவதையும் சேர்த்து.

  கொஞ்சம் நாள் "என் ப்ளாக்", "உங்கள் ப்ளாக்" ஏன் எல்லார் ப்ளாக் எல்லாவற்றிகும் டாட்டா விட போகின்றேன். !!

  முதலில் என் பெயரை எடுங்கள் !!!

  அதே போல் இன்னொரு வேண்டுகோள்:

  என்னுடைய தொலைபேசி எண்ணும் creativity ப்ளாக் ஒன்றின் பதிலுக்கு நான் ஈமெயில் அனுப்பியதை அப்படி கட் அண்ட் பேஸ்ட் செய்ததால் இருந்தது. ஏற்கனவே இந்த ஊரில் கண்ட பய கூப்பிட்டு கிரெடிட் கார்டு வாங்கு என்று தொல்லை செய்வான் !!

  பதிலளிநீக்கு
 14. எத்தனை மனிதர்கள் அதில் எத்தனை நோயாளிகள் . உணர்வுகளை அழகாகப் படம்பிடித்துக் கட்டி இருக்கிறது . உங்களின் பதிவு பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 15. ம்ம்.. இங்க சாதி, மதம்னு சண்டை நடக்கும்போதெல்லாம், “டேய், ஒரு எட்டு அரசு ஆஸ்பத்திரிகள் பக்கம் போய்ப் பாத்துட்டு வாங்கடா”ன்னு கத்தலாம் போல இருக்கும்!!

  பதிலளிநீக்கு
 16. என்னங்க இது ஒரு பத்து நாளா ஊர்ல இல்லைனா இப்படியா? எங்கள் போங்காட்டம் - ரன் ஏத்திட்டாங்கப்பா. சாய்ராம், மீனாக்ஷி செஞ்சுரி பக்கமா பலே! சாய்ராம் - உங்க பாஸ் கேட்டா இது உங்க ரெட்டைனு சொல்லிடுங்க தில்லுமுல்லு ஸ்டைல். இப்ப ரன் அவுட்டாவாதீங்க.

  பதிலளிநீக்கு
 17. நாட்டுல நான் தான் வேலை வெட்டி இல்லாம இருந்ததா நெனச்சேன்பா... எங்கள் பாரு! டபுள் செஞ்சுரி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!