சனி, 11 செப்டம்பர், 2010

மஹாகவி பாரதி நினைவுகள்..




செப்டெம்பர் பதினொன்று. பாரதியார் (நினைவு) தினம்.


பாரதியார் வரகவி. நினைத்த மாத்திரத்தில் நினைத்த பொருள் பற்றி கவி பாடும் வல்லமை பெற்றவர். எதுகை, மோனையுடன் வார்த்தைகள் விழும்போது அவரே ஆச்சர்யப் பட்டுப் போவாராம்.

.


மவுன விரதம் இருப்பார். சமயங்களில் பதினைந்து நாள் கூட பேசாமல் இருப்பார். ஒரு வினோதம். பேச மாட்டாரே தவிர கவிதை புனைந்தவுடன் வாய் விட்டுப் பாடுவார்.


தீவிர சக்தி தாசர். ஆனால் மூட நம்பிக்கைகளை எதிர்ப்பார். கார்த்திகை சமயங்களில் வெளியில் எண்ணெய் விளக்கு வைப்பது, சமுத்திரத்தில் காசு போட்டு குளிப்பது போன்றவற்றுக்கான விளக்கங்கள் உதாரணம்.


பாடல்களை இயற்றியபிறகு அவர் அதை பாவத்துடன் பாடிக் காட்டும்போது கேட்கும் மனைவி, மகள்கள், நண்பர்கள் ஒன்றிப் போய் கண்ணீர் விடுவதோ பரவசமாவதோ உண்டு. “பக்தியினாலே இந்தப் பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடி என்று பாடும்போது காமப் பிசாசைஎன்னும்போது காலால் தரையை ஓங்கி மிதித்தும், ‘தாமதப் பேய்எதிரில் நிற்பது போல் அறைந்தும் பாடுவாராம்.

பாரதியார் நன்கு அறிந்த மொழிகள். தமிழ், ஆங்கிலம், காசிக்குச் சென்ற போது கற்ற சமஸ்கிருதம், ஹிந்தி, புதுவையில் ஃப்ரெஞ்சுப் பாஷை, வஙகாளி, முதல் உலக யுத்தம் தொடஙகியதும் ஜெர்மன் பாஷை, லத்தீன், உருது, சென்னையில் இருந்த போது தெலுங்கு, கடைசி நாட்களில் அரபி, மலையாளம்...! தெலுங்கு பாஷை ரொம்ப்ப் பிடிக்குமாம். சுந்தரத் தெலுங்கு... எனினும் அவர் பாடியது “யாமறிந்த மொழிகளிலே...


பிடித்த கீர்த்தனைகள்..மாருபல்க, நகுமோமு,சக்கனிராஜ, ஜெயஜெய கோகுலபால...

பெண் விடுதலை பற்றிப் பாடிய பாரதி செல்லம்மாவை அப்படி வைத்திருக்கவில்லை. இவர் சொல் மீறி ஊர் சென்ற செல்லம்மாவின் பட்டுப் புடவைகள் கிழிக்கப் பட்டு தலைப் பாகையாயின! பாத்திரங்கள் கடையில் போடப் பட்டன. செல்லம்மாவை விவாக ரத்து செய்து மறுகல்யாணம் செய்யப் போவதாய் பயமுறுத்தினார்! ஊரிலிருந்து வந்ததுமே செல்லம்மாவின் தந்தை இறந்த செய்தி கேட்டும் முதலில் அவரை விடாமல் பின்னர் ‘பெருந்தன்மையாய்மனைவியை ‘மன்னித்துஊருக்கு அனுப்பி வைத்தார்.


குள்ளச் சாமியார் போன்ற சிலரால் கஞ்சா போன்ற போதை வஸ்த்துக்கள் உபயோகிக்கும் வழக்கம் வந்தது.

பால்ய விவாகத்துக்கு எதிரி. தன் பெண்கள் இருவருக்கும் அப்படிச் செய்யக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார். அதனால் வீட்டில் பந்துக்களிடையே மனஸ்தாபமும் தோன்றியது. ஆனால் தன் நண்பர் ஸ்ரீ ஸ்ரீ சாரியாரின் புதல்வி யதுகிரி திருமணம் ஆகிச் செல்லப் போகிறாள் என்ற போது அவர் யதுகிரிக்கு புகுந்த வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று 1915 களிலேயே கொடுத்த அறிவுரைப் பட்டியலைப் பற்றி தனிப் பதிவே போடலாம்...!


கடைசி நாட்களில் மருந்தின் மேல் வெறுப்புற்று சாப்பிட மாட்டேன் என்றவரை அவர் பெண் சகுந்தலா கொடுத்தால் சாப்பிடுவார் என்று சொல்லிக் கொடுக்கச் சொன்னார்களாம். மிகுந்த ப்ரயாசைக்குப் பின் அவரும் கொடுத்தாராம். முதலில் மறுத்த பாரதி பிறகு வாங்கிப் பருகி விட்டு, “அம்மா, நீ கொடுத்தது மருந்தில்லை...பார்லி தண்ணீர்..பரவாயில்லைஎன்று கண்ணை மூடி விட்டாராம்.


மரணத்தை வெல்ல வழி தேடுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பாராம். 'ஓம்' என்ற வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தையை தயார் செய்ய தேடிக் கொண்டிருந்தாராம்.


மரணத்தை வென்று விட்டார்தான்..

19 கருத்துகள்:

  1. பாரதியாரை இன்னும் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்களா? பரவாயில்லையே?
    பாஞ்சாலி சபதம் படித்த பொழுதெல்லாம் புல்லரிக்கும்...

    பதிலளிநீக்கு
  2. ”நான் தான் காலத்த மீறி கனவு கண்டு ஏமாந்துட்டேன். நீயும் அப்படி ஆகிடாத” என்ற பாரதி படத்தில் வரும் இந்த வசனம், பாரதியின் வாழ்வினை 2 வரிகளில் வெளிப்படுத்துகிறது.

    ---

    சிறிது நாட்களுக்கு முன், பாரதியின் நண்பர் ஒருவரின் பேட்டியைப் படித்தேன். எந்த வலைத்தளம் என்று நியாபகம் இல்லை. கண்டால் சொல்கிறேன். மிக அருமையான கட்டுரை அது.

    பதிலளிநீக்கு
  3. பாரதி நினைவு நாளன்று எனது முந்தைய கவிதை ஒன்றை "எங்கள்" வாசகர்களுக்கு வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன்.

    "அன்னை உண்டெனில் பாரதி!இக்கவிதைக்குத்
    தந்தை உண்டெனில் - பாரதி!
    உன்னைப் புகழ்ந்திட பாரதி! ஓராயிரம்
    ஏட்டிலும் இயலுமோ பாரதி?
    விண்ணின் மதிதனைப் பாடிடப் புலவர்
    கோடிபல கோடியாய்க் கூடிடத்
    தண்மதி அழகினிற் குன்றிற்றோ? தேயாமதி
    நின்போல் புகழ் கூடிற்றோ?

    எல்லோரும் ஒன்றென்று உரைத்திட்டாய் அதைச்
    சொல்லி எல்லோரினும்நீ உயர்ந்திட்டாய்!
    மெல்லத் தமிழினிச் சாகுமென்றாய் , தமிழ்
    கொல்லும் எமனைநீ ஏகுமென்றாய்!
    வல்லஉன் விழியால் பார்த்திட்டாய் கதிர்
    பல்யுகம் வாழஒளி சேர்த்திட்டாய்!
    மெல்ல உன்மீசை முறுக்கிட்டாய் கோடி
    பல்லாயிர வர்க்காண்மை பெருக்கிட்டாய்"

    பதிலளிநீக்கு
  4. இளையராஜாவின் குரலில் பாரதி பாடல் ஒன்றும் சேர்த்துவிடுங்களேன் ஸ்ரீராம் !

    பதிலளிநீக்கு
  5. இந்த மகாகவியின் நாளை நினைவு கூற வைத்ததற்கு மிக்க நன்றி.
    'நல்லதோர் வீணை செய்தேன்' கவிதை வரிகளில் மனம் உருகி கதறி இருக்கிறது பலமுறை. 'நெஞ்சுக்கு நீதியும்' இந்த பாடலில் 'எள்ளளவும் பயனின்றி....' என்ற வரிகளை கேட்கும் ஒவ்வொரு முறையும் மெய் சிலிர்த்து போகும். சமீபத்தில் தான் இவரது 'மோகத்தை கொன்று விடு.....' கவிதையை மகாராஜபுரம் சந்தானத்தின் குரலில் கேட்டேன். மனம் கலங்கி அழுதே விட்டேன். இப்பொழுது நான் அடிக்கடி கேட்கும் பாடலில் இதுவும் ஒன்றாகி விட்டது. மாபெரும் மேதை, தீர்க்கதரிசி. பின்னோக்கி குறிப்பிட்டது போல் 'காலத்தை மீறி கனவு கண்டு ஏமாந்த கவி'.

    பதிலளிநீக்கு
  6. //குள்ளச் சாமியார் போன்ற சிலரால் கஞ்சா போன்ற போதை வஸ்த்துக்கள் உபயோகிக்கும் வழக்கம் வந்தது.//


    அப்படிப் போகிற போக்கில் இங்கே "மாவா" மென்று கொண்டே குதப்புகிற ராகவன்கள் மாதிரிச் சொல்லிவிட முடியாது!

    தொடர்ந்து வாட்டிய வறுமை, மனைவி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கையறு நிலை சமயங்களில் உந்தித்தள்ள, பாரதி லாகிரிவஸ்துக்களைப் பயன்படுத்தியது, சிலகாலம் கடையத்தில் தன் மனைவியோடு இருந்த தருணங்களில்,அவரை அறிந்தவர்களால் சொல்லப் பட்ட விஷயம் தான்!

    நானறிந்த வரை வேறெந்த சாமியும் அதற்குக் காரணமில்லை!

    பதிலளிநீக்கு
  7. பாரதியை நினைவு கொண்டது,
    நல்லது.
    ஒரு நெஞ்சு பொறுக்கிதில்லையேவும்'

    ''சொல்லடி சிவசக்தியும்
    ஒளிபடைத்த கண்ணனை அழைத்துக் கொண்டு விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  8. பாரதியை சரியாக பயன்படுத்தாமல் உலகம் வாட விட்டதாலோ என்னவோ ,பாரதியின் செய்திகளில் எங்காவது நன்றாக இருந்திருக்கவேண்டுமே எனும் ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்..
    நிறைய புதிய செய்திகள்..ஒரு மொழியில் உருப்படியாக எழுதுவதற்கே கடினமாக இருக்கும் பொழுது , எத்தனை மொழிகள் கற்றுள்ளான் ஞான பாரதி.

    பாரதியின் பாடல்களில் இலயிப்பு கொண்டு நினைவாக ஒரு பதிவு இட்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  9. //பின்னோக்கி said...

    ”நான் தான் காலத்த மீறி கனவு கண்டு ஏமாந்துட்டேன். நீயும் அப்படி ஆகிடாத” என்ற பாரதி படத்தில் வரும் இந்த வசனம், பாரதியின் வாழ்வினை 2 வரிகளில் வெளிப்படுத்துகிறது.

    ---

    சிறிது நாட்களுக்கு முன், பாரதியின் நண்பர் ஒருவரின் பேட்டியைப் படித்தேன். எந்த வலைத்தளம் என்று நியாபகம் இல்லை. கண்டால் சொல்கிறேன். மிக அருமையான கட்டுரை அது.//

    First para - absolutely true.

    Please share.

    ============
    பாரதியை பொறுத்தவரை அவரின் நினைவுகள் - மனதை அழுத்தும்

    பதிலளிநீக்கு
  10. மிகவும் அருமையான பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. பாரதியாரைப் பற்றி நினைவு கூர்ந்து எங்களையும் அவர் நினைவிலாழ்த்தியதற்கு நன்றி. காலனை வெல்ல முடியாவிட்டாலும் காலத்தை வென்ற கவிஞர்.--கீதா

    பதிலளிநீக்கு
  12. விலை மதிக்கமுடியாத தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி....

    பதிலளிநீக்கு
  13. பாரதியைப் பற்றி.. தகவல்களுக்கு நன்றி..
    படங்களும் அருமை.. :-))

    பதிலளிநீக்கு
  14. பாரதியின் பதிவை படித்தேன் நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  15. மறந்துட்டேன்.... ஞாபகப் படுத்தியதற்கு நன்றி. நல்ல இடுகை.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!