செவ்வாய், 21 செப்டம்பர், 2010

வாசல் தேடி ..

நம்முடைய வாசல் தேடி வருகின்ற விற்பனையாளர்களை நம்ப முடிகின்றதா? doubt #?

வாசல் தேடி வந்து விற்பனை செய்யப்படும் பொருட்களின்  தரம் பெரும்பாலும் மிகவும் தாழ்ந்ததாகவே இருக்கின்றது. இது அனுபவபூர்வமான உண்மை. 

சென்னையில் குப்பை கொட்டிக்கொண்டிருந்த நாட்களில், ஏமாந்த அனுபவங்கள் சுருக்கமாக இதோ: 

1) நினைவிருக்கும் முதல் நிகழ்வு: குரோம்பேட்டையில் ராதா நகரில், (குரோம்பேட்டைக் குறும்பனின் வீட்டுக்கு அருகாமையில் ...?) குடியிருந்த காலத்தில், மூன்று இளைஞர்கள், UNION TRADERS என்று அச்சிடப்பட்ட அட்டைகள் நிறைய கொண்டுவந்து, ஒரு அட்டை இலவசமாக (!) வாங்கிக்கொள்ளுங்கள், உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டுமோ அதற்குத் தகுந்தாற்போல், மாதா மாதம் ஒரு தொகையை நாங்களே வந்து வாங்கிக்கொண்டு, இந்த அட்டையில் பதிந்து, கையெழுத்து போட்டு செல்வோம் என்றனர். தேவையான பணம் சேர்ந்தவுடன், அல்லது குலுக்கல் முறையில் உங்கள் எண்ணுக்கு பரிசு விழும் அதிருஷ்டமிருந்தால் அதற்கு முன்பே பொருள் உங்கள் வீடு தேடி வரும் என்றார்கள். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எந்தெந்தப் பொருட்களுக்காக எவ்வளவு அமவுண்ட் கட்டியுள்ளார்கள் என்றும் புள்ளிவிவரங்களை அனாயாசமாக அள்ளி வீசினார்கள். நான் அதிகம் ஆசைப் படாமல், ஒரு கைக்கடிகாரம் வாங்கிக் கொள்ளலாம் என்ற யோசனையோடு, மாதம் இருபது ரூபாய் கட்டுவதற்கு அரை மனதோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். முதல் தவணை இருபது ரூபாயும் கொடுத்தேன். நல்ல வேளை - அப்போது மாருதி 800 கார் எல்லாம் விற்பனைக்கு வரவில்லை. இல்லையேல் அதற்கு கூட அவர்கள் மாதம் ஆயிரம் ரூபாய், எட்டு வருடங்களுக்கு பணம் கட்டினால் போதும் என்று கூறியிருப்பார்கள். 

அப்புறம் என்ன? அந்த நண்பர்களை, அதற்குப் பிறகு எங்கேயும் காணவில்லை. மூன்று மாதங்கள் கழித்து, அந்த அட்டையில் காணப்பட்ட சைதாப்பேட்டை விலாசம் தேடி (15 சன்னதி தெரு, சைதாப்பேட்டை என்று ஞாபகம் ) ஒரு நாள் சென்றபோது, அந்தமாதிரி ஒரு தெருவே சைதையில் கிடையாது என்று அடித்துச் சொன்னார், இரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே, எருமை மாட்டில் பால் கறந்துகொண்டிருந்த நண்பர் ஒருவர். 
அந்த எருமையும் , 'ரொ ய்... ய்ங்க்' (Right?) என்று கத்தி அதை ஆமோதித்தது. 

2) இரண்டாவது சம்பவம் பல வருடங்களுக்குப் பிறகு, வாசலில் வந்த ஒரு பொன் மானைப் பார்த்து, (ஓ சாரி - மைசூர் சில்க் புடவையைப் பார்த்து,) திருமதி ஆசைப்பட்டுக் கேட்க, அதை ஒரு பெரும் விலை கொடுத்து வாங்கி, ஒரு முறை அதை துவைத்த உடனேயே அது காற்றுப் போன பலூனாக சுருங்கி, சுருணைத் துணி போல காட்சி அளித்தது. வழக்கம் போல அந்த புடவை ஆசாமியை அப்பொழுது பார்த்ததுதான் கடைசி. அநேகமாக அவர் வேறு தெருக்களில் அல்லது வேறு பகுதிகளில் அல்லது வேறு ஊர்களில், இருக்கின்ற என்னைப் போன்ற முகத் தோற்றம் உள்ள ஆட்களைத் தேடி சென்றிருப்பார் என்று நினைக்கின்றேன். 

3) வாசலில் வந்தார் ஒருவர். வாசல் படிக்கு அருகே போடப்படும் இரப்பர் மிதியடிகள் விற்பனை செய்பவராம். அவருடைய விற்பனையாள, விரிவுரைப் பேச்சுகளில், அண்டை மாநில வாடை வீசியது. சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக, அவரிடம் மேசை மீது இருந்த பாராசூட் பாட்டிலைக் காட்டி, 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில், என்னுடைய அனுமானம் சரி என்று உறுதி செய்தது.  

அவர் கொண்டு வந்திருந்த ரத்தினக் கம்பளங்களில் மன்னிக்கவும் ரப்பர் மிதியடிகளில் இரண்டு மூன்று வகைகள் இருந்தன. சிவப்பு, பச்சை, நீல வண்ணங்கள். ஒரு ஐந்து எம் எம் பேஸ் ரப்பர் பலகையில், பத்து எம் எம் உயர ரப்பர் குச்சங்கள். 

என்னுடைய அண்ணன் வேறு எனக்கு 'ஆக்கு பிரஷர்' பற்றி அடிக்கடி சொல்லி, பிரஷர் ஏற்றி வைத்திருந்தார். இந்த வகை மிதியடிகளில் காலை நேரத்தில் காலாற ஜாகிங் செய்தால் சகல ரோக நிவாரணியாக அது செயல் படும் என்று கூறி இருந்தார். வகைக்கு ஒன்றாக வாங்கினேன். விற்பனையாளர் மேலும் என்னை ஊக்குவிக்கும் வகையில், 'சார் இந்த மிதியடி உங்க வீட்டில் இருந்தால், கற்பு இருக்காது.' என்றார். நான் அப்படியே அதிர்ந்து போனேன். 'சார் என்ன வார்த்தை கூறினீர்கள்? கற்பை தெய்வமாகப் போற்றும் மறத்தமிழர்கள் நாங்கள்' என்றேன், ஒரு சிலப்பதிகார சீற்றத்துடன். அவர், 'இல்லை சார் நான் அந்த கற்பை சொல்லலை. மீசை இருக்குமே, அந்தக் கற்பை சொன்னேன்' என்றார். நான் வேகம் தணியாமல், 'ஆமாம் கற்பு என்னும் நிலையை மீசை வைத்திருப்பவர்களுக்கும், மீசை இல்லாதவர்களுக்கும் பொதுவாக வைப்போம் என்று மீசைக்கார மஹாகவி சொல்லி இருக்கிறார்' என்றேன். அவர், 'சார் நீங்க தமிழ் பண்டிட்டு போலிருக்கு. நான் சொன்னது அதோ அந்த கற்பை' என்று சொல்லி சுவரில் ஒரு பல்லியோடு டாம் & ஜெர்ரி விளையாட்டு ஆடிக்கொண்டிருந்த ஒரு கரப்பான் பூச்சியைக் காட்டினார்!

பிறகுதான் தெரிந்தது அவர் கூற வந்த பேருண்மை. அந்த ரப்பர் மிதியடிகளிலிருந்து போகப் போக வீசிய துர் நாற்றத்திற்கு, கரப்பு என்ன, மனிதர்கள் கூட காத தூரம் ஓடிவிடுவார்கள் என்று. அது மட்டும் இல்லை - அந்த மிதியடிகளில் இருந்த ரப்பர் குச்சங்கள் ஒவ்வொரு நாளுக்கும் 50 வீதம் உதிர்ந்து இரண்டே வாரங்களில், கோத்ரேஜ் ஷேவிங் க்ரீம் போட்டு ஷேவ் செய்துகொண்டவர் கன்னம் போல மழு மழுப்பாகியது. 

இப்போ எல்லாம் நான் ரொம்ப உஷாராகி விட்டேன். வாசலில் யார் வந்து, எனக்கு என்ன விற்க முற்பட்டாலும், கண்ணை மூடிக்கொண்டு, 'நோ, வேண்டாம், ஒத்து, பேடா, நஹி..' என்று தெரிந்த மொழிகள் எல்லாவற்றிலும் உரத்த குரலில் கூறிவிட்டுத்தான் கண்ணைத் திறந்து பார்க்கிறேன். சென்ற வாரம் அப்படி கூறிய பிறகு கண்ணைத் திறந்து பார்த்தால் 'thank you sir' என்று சொன்னவாறு, இந்த பகுதியை சேர்ந்த தபால்காரர்  தெருவில் போய்க்கொண்டிருந்தார், கையில் மணி ஆர்டர் ஃபாரம், பணம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு!

30 கருத்துகள்:

  1. வாசல் தேடி வந்தவரிடம் நொந்து நூலான கதைகளின் முடிவாய்.. சொன்ன கதைதான் எல்லாவற்றிலும் சூப்பர்:))!

    பதிலளிநீக்கு
  2. கற்பைக் காப்பவராநீங்க? பலே!
    அது சரி, 'பாராசூட் பாட்டிலை' காட்டினதும் அண்டை மாநிலக்காரர் என்ன சொன்னாருனு சொல்லக்கூடாதா?
    மணியார்டர் இன்னும் வழக்கில் இருக்கிறதா? பெரிய தொந்தரவுங்க... இனாம் கொடுத்தே பாதிப் பணம் போயிடுமே?

    பதிலளிநீக்கு
  3. படங்கள் எல்லாம் எங்கே தேடிப் பிடிக்கிறீங்க? வெரி குட்.

    பதிலளிநீக்கு
  4. கண்ணை மூடிக்கொண்டு, 'நோ, வேண்டாம், ஒத்து, பேடா, நஹி..' என்று தெரிந்த மொழிகள் எல்லாவற்றிலும் உரத்த குரலில் கூறிவிட்டுத்தான் கண்ணைத் திறந்து பார்க்கிறேன். சென்ற வாரம் அப்படி கூறிய பிறகு கண்ணைத் திறந்து பார்த்தால் 'thank you sir' என்று சொன்னவாறு, இந்த பகுதியை சேர்ந்த தபால்காரர் தெருவில் போய்க்கொண்டிருந்தார், கையில் மணி ஆர்டர் ஃபாரம், பணம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு!

    ......அதான், போனவாட்டி நான் உங்கள் வீட்டுக்கு வந்து கதவை தட்டினப்போ, அப்படி சொல்லிட்டீங்களா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... Just kidding!

    பதிலளிநீக்கு
  5. பாவம் நீங்க !

    வாசல் தேடி வாறவங்களை
    அன்பா வரவேற்கணுமாம்.
    சொல்லியிருக்காங்க !

    பதிலளிநீக்கு
  6. நல்லாத்தான் ஏமாந்து இருக்கீங்க

    பதிலளிநீக்கு
  7. //அவருடைய விற்பனையாள, விரிவுரைப் பேச்சுகளில், அண்டை மாநில வாடை வீசியது. சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக, அவரிடம் மேசை மீது இருந்த பாராசூட் பாட்டிலைக் காட்டி, 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில், என்னுடைய அனுமானம் சரி என்று உறுதி செய்தது. //

    can't guess what this means..

    பதிலளிநீக்கு
  8. சுவாரஸ்யமான/உபயோகமான பதிவு. முடிவில் இருக்கும் பஞ்ச் கட்டுரைக்கு மேலும் மெருகூட்டுகிறது.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  9. மாதவன், தேங்காய் எண்ணை பாட்டிலைக் காட்டியதும் அந்த ஆள் ‘ஓயில்’ என்று சொல்லியிருக்கக் கூடும்!

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  10. ஹேமா, சித்ரா பின்னூட்டம் சூப்பருங்க.

    பதிலளிநீக்கு
  11. வாசலில் வந்தவர்களால் நொந்த கதை சுவையாக இருந்தது. அதைவிட அதற்கான படங்களின் தேர்வு சூப்பர்.--கீதா

    பதிலளிநீக்கு
  12. ஒரிஜினல் தேடி வராது..நாம் தான் தேடி போகனும்..

    பதிலளிநீக்கு
  13. ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவர் சார்!! மூணு பேர்கிட்ட (மட்டும்தான்) ஏமாந்துருக்கீங்க!!

    பதிலளிநீக்கு
  14. குரோம்பேட்டைக் குறும்பன்22 செப்டம்பர், 2010 அன்று PM 4:22

    கூகிள் சாட் பண்ணும் பொழுது, நான் இருப்பது குரோம்பேட்டை, ராதா நகரில் என்று நான் சொன்னதை, அப்படியே நம்பிட்டீங்களா! கேட்பது, பார்ப்பது எல்லாவற்றையும் அப்படியே நம்புவதால்தான் உங்களை ஏமாற்றுவது ரொம்ப சுலபம் ஆகிவிட்டது, வீடு தேடிவரும் வியாபாரிகளுக்கு!

    பதிலளிநீக்கு
  15. //ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவர் சார்!! மூணு பேர்கிட்ட (மட்டும்தான்) ஏமாந்துருக்கீங்க!!//

    ரொம்ப ரொம்ப நல்லவர்னு பேர் வாங்க இன்னும் எத்தனை பேரிடம் ஏமாற வேண்டும்?

    :-))

    பதிலளிநீக்கு
  16. // ராமலக்ஷ்மி said...
    ....முடிவாய்.. சொன்ன கதைதான் எல்லாவற்றிலும் சூப்பர்:))!//
    நன்றி. ஏமாந்த கதைகள் இன்னும் நிறைய உள்ளன. அடிக்கடி எழுதுகிறோம்.

    பதிலளிநீக்கு
  17. அப்பாதுரை சார்.
    பாராசூட் பாட்டிலை காட்டினதும், அவர் கூறியது என்ன என்று பின்னூட்டத்தில் ஜவஹர் கூறியுள்ளார் என்று பதிவாசிரியர் கூறுகிறார் என்பதை கூறிக்கொள்கிறோம். (சோடா பிளீஸ்!)

    பதிலளிநீக்கு
  18. அப்பாதுரை சார், படங்கள் கூகிள ஆண்டவர் உபயம். கொஞ்சம் அங்கங்கே எம் எஸ் பெயிண்ட், மற்றும் Capture-A-Screenshot உதவியும் கொண்டு எங்கள் ஆசிரியர் குழு தயாரித்தவை.

    பதிலளிநீக்கு
  19. சித்ரா! பதிவாசிரியர் ஏற்கெனவே, பண வரவை இழந்துவிட்ட சோகத்தில் இருக்கிறார். அவரிடம் இந்த மாதிரி விளையாட்டு செய்தால், 'ஆஹா நண்பர்களையும் இழந்துவிட்டோமோ?' என்று எண்ணி அவர் இமாலயத்திற்கு சென்றுவிடுவார்!

    பதிலளிநீக்கு
  20. // ஹேமா said...
    பாவம் நீங்க !

    வாசல் தேடி வாறவங்களை
    அன்பா வரவேற்கணுமாம்.
    சொல்லியிருக்காங்க !//

    ஆமாமுங்கோ! அவர்களை அன்பாக வரவேற்று, அன்பாக அவர்கள் விற்றதை வாங்கி, அன்பாக பணம் கொடுத்து, அனுபவங்கள் பெற்று, சிரித்த முகத்துடன் புன்னகை மன்னன (இளிச்ச வாயன்) பட்டத்தை வென்றிருக்கின்றார் பதிவாசிரியர்!

    பதிலளிநீக்கு
  21. எல் கே - ஆமாம். ஏமாந்த அனுபவங்களை சொல்லி, எங்கள் வாசகர்களை alert செய்ய உதவியாக இருக்கிறது.
    மாதவன், ஜவஹர், தமிழ் உதயம், கீதா சந்தானம் எல்லோருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. // அஹமது இர்ஷாத் said...
    ஒரிஜினல் தேடி வராது..நாம் தான் தேடி போகனும்..//

    ஆஹா நீங்க பன்ச் டயலாக் எழுத போகலாம் போலிருக்கே!

    பதிலளிநீக்கு
  23. // ஹுஸைனம்மா said...
    ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவர் சார்!! மூணு பேர்கிட்ட (மட்டும்தான்) ஏமாந்துருக்கீங்க!!//

    ஹி.. ஹி..! மூன்றை மட்டும்தான் இப்போதைக்கு இங்கே பதிந்திருக்கிறோம்.
    இன்னும் நிறைய இருக்கு.

    பதிலளிநீக்கு
  24. கு கு அப்போ மெய்யாலுமே நீங்க குரோம்பேட்டையில் இல்லியா?

    பதிலளிநீக்கு
  25. எஸ் கிருஷ்ணமூர்த்தி சார் - ரொம்ப ரொம்ப நல்லவர்னு பேர் வாங்க ஏமாற்றுபவர்களையும் ஏமாற்றத் தெரிந்தால் போதும்.

    பதிலளிநீக்கு
  26. நன்றி அப்பாவி தங்கமணி.

    பதிலளிநீக்கு
  27. அடடா பதிவர் நம்மைப் போல் ஒருவர்!! மற்றவர்களும் ஏமாறுகிறார்கள் என்று தெரியும் போது நாம் மட்டுமே ஏமாளி என்ற தாழ்வுணர்ச்சி நீங்கிவிடுகிறது. மட்டுமன்றி கொஞ்சம்(?) மகிழ்ச்சியும் தோன்றுவது ஏனென்று மனோ தத்துவ நிபுணர் யாரவது விளக்கவும்.

    பதிலளிநீக்கு
  28. மகிழ்ச்சி தோன்றுகிறதா? மோ சி - உங்க அட்ரெஸ் கொடுங்க - ஆட்டோ அனுப்புகிறோம்! :)))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!