வியாழன், 1 மார்ச், 2012

ஏழிசை மன்னர், கான கந்தர்வ நாயகன் -

                                
பவளக்கொடி முதல் சிவகாமி வரை....  
           

இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கும்போது தெரிந்த விஷயம் எம் கே டி பாகவதர் பிறந்ததினம் மார்ச் ஒன்று. (1910) சரி, ஒன்றாம் தேதி இவரைப் பற்றி எழுதலாமே என்றுதான் தோன்றியது. புத்தகத்தைப் படித்த உடன் எழுத இருப்பது ஏழிசை மன்னரைப் பற்றி மட்டுமல்லாமல் இந்தப் புத்தகம் பற்றிய அறிமுகமாகவும் சொல்லி விடலாம் என்று தோன்றியது.


                 
2010 ஆம் வருடம் பாகவதரின் நூற்றாண்டு வருடம். அதை ஒட்டி வெளிவந்திருக்கும் புத்தகம் இது.
                  
மாலதி பாலன் எழுதி, விகடன் பிரசுரமாக வெளி வந்துள்ள 'ஏழிசை மன்னர் எம் கே டி பாகவதர்'  என்ற இந்தப் புத்தகம் எம் கே டி பாகவதரின் பலப் பல சிறப்புகளை எடுத்துச் சொல்கிறது.


                
(ஆசிரியர் பற்றிய குறிப்புகள் சற்று கஷ்டப் பட்டாவது படிக்க முடியும் என்று நினைக்கிறேன்!)

சிறு வயதில் கேட்ட இவர் பாடல்களை வைத்து நான் அப்புறம் அவற்றை முத்திரைப் பாடல்களாக வைத்துக் கொண்டு (!) ராகம் கண்டு பிடித்திருக்கிறேன்!
              
எம் கே டி பாகவதர் பாடல்களில் ஒன்றையாவது கேட்காதவர்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாமா... அப்படி இருந்தால் (குறிப்பாக) 'சிவபெருமான் கிருபை வேண்டும், உன்னையே அன்புடன் வாரியணைத்து, உனையலால் ஒரு துரும்பசையுமோ, ராஜன் மகராஜன், எந்தன் ஜீவப்ரியே சியாமளா, காந்தியைப் போலொரு சாந்த ஸ்வரூபனை ' போன்ற சில பாடல்களையாவது கேட்டு விடுங்கள்...


பாகவதர் தன் கடைசிக் காலத்தில் வறுமையில் வாடினார், பஸ்ஸில் எல்லாம் போனார் என்றுதான் நானும் கேட்டிருந்தேன். இந்தப் புத்தகம் அதை முற்றிலும் மறுப்பதுடன் அவரின் பல பெருந்தன்மையான, மென்மையான, மேன்மையான குண நலன்களைச் சொல்கிறது. 


தமிழகத்தின், இல்லை, இல்லை இந்தியாவின் முதன்முதல் சூப்பர்ஸ்டார் பாகவதர்தான். முதல் படத்திலேயே சிகரம் தொட்ட இரண்டே இந்திய நடிகர்கள் இவரும் சிவாஜி கணேசனும்தான் என்று சொல்கிறது. (சிவாஜி பின்.....னால் வந்தவர்.)


ஹொன்னப்ப பாகவதர், அந்த பாகவதர் இந்த பாகவதர் என்று நிறைய பேர் இருந்தாலும் தமிழ் நாட்டில் பாகவதர் என்றால் தமிழக மக்கள் மனதில் வருவது அவர் எம் கே டி மட்டும்தான் 
              

இவர் சாரீர சௌந்தர்யத்தில் மட்டும்தான் படங்கள் ஓடுகின்றன என்று தயாரிப்பாளர்கள் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், முசிறி சுப்ரமணிய ஐயர் போன்றவர்களை எல்லாம் நடிக்க அழைத்து வர அவர்கள் நடித்த படங்கள் இவ்வளவு வெற்றி பெறாமல் அவர்கள் இசை உலகுக்கே திரும்பிச் சென்ற கதையையும் சொல்கிறது புத்தகம். 
                         
லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் MKTயும் என் எஸ் கிருஷ்ணனும் கைதானார்கள், அப்புறம் கஷ்டப்பட்டு விடுதலையானார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம் செஷன்ஸ் கோர்ட், ஹை கோர்ட் அப்புறம் லண்டன் உச்ச நீதி மன்றம் (பிரிவி கவுன்சில்) என்று சென்ற அந்தக் கொலை வழக்கைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறது இந்தப் புத்தகம். 


அவருக்கு விடுதலை வாங்கித் தந்த புகழ் பெற்ற வி எல் எதிராஜ் பற்றிய குறிப்புகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. இவரைப் பற்றி ராண்டார் கை எழுதிய சில கட்டுரைகள் படித்த நினைவு இருக்கிறது. இந்த வி எல் எதிராஜுக்கு டியூஷன் எடுத்தவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்! இதை இப்படியும் சொல்லலாமோ   டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனிடம் டியூஷன் படித்தவர் வி எல் எதிராஜ்!
                     
நாமெல்லோரும் எம் ஜி ஆரின் கவர்ச்சியைப் பற்றிப் பேசுவோம். எம் ஜி ஆர் பாகவதரின் கவர்ச்சியைப் பற்றி சிலாகித்துப் பேசியிருக்கிறார். அவர் இருந்த இடம் விளக்கு போட்டது போல இருந்ததாம். அவர் சென்ற உடன் மின் விளக்குகள் எரிந்த போதும் இருளாகி விட்டது போல மக்களுடன் சேர்ந்து அவரும் உணர்ந்தாராம்.
                        
சிறை புகுமுன் அவர் நடித்திருந்த படங்கள் ஒன்பது மட்டுமே.
                     
அவர் நடித்த ஹரிதாஸ் படம் மூன்று தீபாவளிகள் தொடர்ந்து ஓடியது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சிவகவி, அசோக்குமார் போன்ற படங்களும் அரை வருடம் ஒரு வருடம் என்று ஓடிய படங்கள். பத்து வாரம் ஓடிய அவர் படம் தோல்விப் படம் என்று அறியப் பட்டது! அந்தக் காலத்தில் நிறையப் படங்கள் வந்திருக்காது என்றுதான் நானும் நினைத்திருந்தேன். அந்த வருடத்தில் வெளிவந்த முப்பது படங்களுக்கு நடுவில் வெற்றி பெற்ற படங்களாம் ஒவ்வொன்றும். 
                   
சிந்தாமணியில் அவர் பாடிய பாடல்களை ஒலித்தட்டாக மாற்றக் கேட்டபோது சில காரணங்களால் அவர் முதலில் மறுக்க, துறையூர் ராஜகோபால சர்மாவை வைத்து (அவர் குரல் பாகவதர் குரல் போலவே இருக்குமாம்) பாட வைத்து வெளியிட, மக்கள் அது நகல் என்று இனம் கண்டு கொண்டதும், பின்னாளில் பாகவதரே அந்தப் படத்தின் பாடல்களை ஒலித்தட்டில் பாட முன்வந்து பாடியபோதும் அந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பாட மறுத்து விட்டாராம். எனவே அந்தப் பாடல் பாகவதர் குரலில் படத்திலும், அதே பாடல் து.ரா.சர்மா குரலில் ஒலித்தட்டிலும் இருக்குமாம். 
               
சிந்தாமணி படத்தின் மிகப் பெரிய வசூல் வெற்றியைத் தொடர்ந்துதான் மதுரையில் சிந்தாமணி என்ற தியேட்டரே கட்டப் பட்டது.
                  
பாகவதரின் 'சத்யசீலன்' படத்தில்தான் ஜி ராமநாதன் இசையமைப்பாளராக அறிமுகமானார். அசோக்குமாரில் எம் கே டியின் நண்பனாக முதன் முதல் ஒரு முழு கதாபாத்திரத்தில் நடித்தார் எம் ஜி ஆர். பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்தில்தான் (இந்தப் படத்தின் வசனகர்த்தா புதுமைப் பித்தன். படம் முடியுமுன்னரே காச நோயில் அவர் இறந்து விட, கடைசி சில காட்சிகள் மட்டும் வேறு ஒருவர் எழுதி முடிக்கப் பட்டதாம்) எம் ஜி ஆரும், வி என் ஜானகியும் முதலில் சந்தித்துக் காதலாகி, மனம் புரிந்தனராம். வி என் ஜானகி பாபநாசம் சிவனின் அண்ணன் மகள் என்பது எனக்கு இப்போதுதான் தெரியும்! ராஜமுக்தியில்தான் பி. பானுமதியையும் தமிழில் முதலில் அறிமுகப் படுத்தினார் பாகவதர். 
                  
அம்பிகாபதி மறுபடி சிவாஜியை வைத்து எடுக்கப் பட்டபோது கம்பராக நடிக்க முடியுமா என்று கேட்டபோது அன்புடன் மறுத்து விட்டாராம் பாகவதர்.  சிவாஜிக்கு மற்ற படங்களில் தந்தை வேடம் ஏற்கத் தயார், ஆனால் அம்பிகாபதியாக நடித்த நானே அதன் மறுபதிப்பில் கம்பராக நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாராம்!
              
அவர் கஷ்டப்பட்ட நாட்களில், அவருக்கு உதவ டி ஆர் மகாலிங்கம், எஸ் எஸ் ராஜேந்திரன், பட அதிபர்கள், தொழிலதிபர் ஹரிராம் சேட் என்று பலர் முன்வந்தாலும் அதை மறுத்தே வந்திருக்கிறார் பாகவதர். டி ஆர் மகாலிங்கம் இவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்திலேயே தன் மகனை பள்ளியில் சேர்த்த விழாவுக்கு இவரின் இசைக் கச்சேரியை ஏற்பாடு செய்து ஒரு லட்ச ரூபாய் வழங்க, அத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து அவர் மகன் சுகுமார் கையிலேயே கொடுத்து 'நல்லா படிக்கணும்' என்று சொல்லி விட்டு வந்தாராம். அந்தக் காலத்தில் ஒரு லட்ச ரூபாய் என்பது இன்றைய ஒரு கோடி ரூபாய்க்குச் சமம். ஹரிராம் சேட் வற்புறுத்திக் கொடுத்த செவர்லே காரில்தான் கடைசி வரை பயணித்தாராம். அதே ஹரிராம் சேட் இவருக்காகக் கட்டிக் கொடுத்த மாளிகையை ஏற்க மறுத்த பின் அவர் காரை வற்புறுத்தி இவர் உபயோகிக்க வழங்கினாராம்- பாகவதரிடம் சங்கீதம் பயின்று, தனிக் கச்சேரி எல்லாம் கூட செய்திருக்கும், அவர் அதை இவருக்கு தந்தது குரு தட்சணையாக!  அறிஞர் அண்ணா சொர்க்க வாசல் என்ற படத்தில் நடிக்க அழைத்தபோது அண்ணாவை நேரிலேயே சந்தித்துப் பேசியவர், பக்திமானாக அறியப்பட்ட தான் அவர் படத்தில் நடிப்பது பொருத்தமாக இருக்காது என்று அன்புடன் மறுத்து விட்டாராம்.
               
உண்மையும் நீதியும் ஜெயிக்கும் என்று நம்பிய அவர் சிறையிலிருந்து விடுதலை ஆனவுடன் முருகன்தான் காப்பாற்றியதாக நன்றி சொல்ல வடபழனி முருகன் கோவிலுக்குத்தான் சென்றாராம். பின்னாளில் சர்க்கரை நோய் வந்தபோது மருத்துவ உதவியை நாடாமல் தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலில் போய் வேண்டிக் கொண்டு அங்கேயே கட்டில் போட்டு படுத்திருந்தாராம். இன்சுலின் போட்டுக் கொண்டாலும் சரியான சிகிச்சை, முறையான சிகிச்சை காலத்தே செய்யாமல் போனதால் தனது நாற்பத்தொன்பதாவது வயதில் மறைந்தார்.
                 
சிறையிலிருந்து வெளியில் வந்தபின் புதிய படங்களை அவர் ஒத்துக் கொள்ளாமல் இசைக் கச்சேரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆனால் அது கட்டுப் படியாகாமல் அப்புறம் அவரே சொந்தப்படம் எடுத்து என்று மறுபடி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழிசை மட்டும்தான் பாடுவேன் என்ற அவர் பாணி சபாக் காரர்களுக்கு பிடிக்காததால் வாய்ப்பு தர மறுக்கப் பட்டது - தமிழிசைச் சங்கம் தவிர, என்கிறது புத்தகம். 
                    
அவர் நடித்த கடைசிப் படமான சிவகாமி படத்தின் காட்சிகள் அவரது நிஜ வாழ்க்கையை ஒட்டி அமைந்திருந்தன. சிவகாமி படத்தில் டி எம் எஸ் பாடிய ஒரு பாடல் ரொம்பப் பிரபலம். "வானில் முழு மதியைக் கண்டேன்... வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்.." என்ற பாடல்தான் அது.


நலிவுறும் நடிகர்களுக்கு சத்தமில்லாமல் பல உதவிகள் செய்து வந்தார் என்றும் தெரிகிறது. தெலுங்குக் கீர்த்தனைகள் எல்லாம் பாடம் செய்திருந்தும் தமிழிசையின் மேல் தீராத காதல் கொண்டிருந்தார். தமிழிசை மட்டுமே பாடினார். கச்சேரிகளிலும் அவரை அதுபோன்ற சங்கதிகள் பாட விடாமல் மக்கள் 'டாக்கி' பாடல்களைப் பாடச் சொல்லியே கேட்டு இன்புற்றனர்.
                  
புத்தகத்தின் இறுதியில் சுப்புடு, கல்கி, எம் ஜி ஆர் உட்பட பல பிரபலங்கள் எம் கே டி பற்றி எழுதி இருப்பதும், எம் கே டியே சங்கீதம் பற்றி எழுதி இருப்பதும் இருக்கின்றன. அதில் அவர் இசைக் கருவிகள் பாடலை மூழ்கடிப்பதாகச் சொல்லப் படும் கருத்துகள் 1949 இல் சொல்லப் பட்டிருந்தாலும் இன்றைய நிலைக்குப் பொருந்துவது போலத் தோன்றுவது விந்தை! இப்போது பாகவதர் இருந்தால் என்ன சொல்வாரோ.... வாலி (வழக்கம் போல) எம் கே டி பற்றி ஒரு கவிதை  பாடியிருக்கிறார். 
                   
இது போல பல சுவாரஸ்யமான தகவல்கள் புத்தகத்தில். மொத்தத்தில் மிஸ் பண்ணக் கூடாத சுவாரஸ்யமான புத்தகம். 
                     
 197 பக்கங்கள் 80 ரூபாய் மட்டும்!  
                     

19 கருத்துகள்:

  1. சுவையான கட்டுரை. புத்தகத்தை லிஸ்டில் சேர்த்துவிட்டேன்.
    'ஏழிசை' என்றால் என்னவென்று நெட்டில் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும்.
    வானில் முழு மதி - கேட்டு எவ்வளவு வருசமாச்சு! நாலஞ்சு தடவை தொடர்ந்து கேட்டேன். ரொம்ப நன்றி.

    பதிலளிநீக்கு
  2. எழுத்தாளர் விந்தன் அவர்கள் 'தினமணி கதிரி'ல் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை 'எம்.கே.டி. பாகவதர்' என்கிற பெயரில் தொடராக எழுதினார். அது புத்தகமாகவும் வெளி வந்திருக்கிறது. முடிந்தால் அந்தப் புத்தகமும் கிடைக்கிறதா என்று பாருங்கள். சில சந்தேகங்கள் தெளிய உதவலாம்.

    இவர் கடைசியாக எடுத்த 'சிவகாமி' படம் தான் சரியாக ஓடாமல் இவர் வாழ்க்கையின் பொருளாதார ரீதியாக சரிவுக்குப் பெரும் காரணமானதாகச் சொல்வார்கள். அந்தப் படத்தின் டைரக்ஷன் பொறுப்பையும் பாகவதரே ஏற்றிருந்தார். அந்தப் படம் பற்றிய குமுதம் விமரிசனம் இன்னும் நினைவில் நிற்கிறது. டைரக்ஷன் குறைகளைப் பட்டியலிட்டு படு கிண்டலான விமரிசனம்.

    புத்தக ஆசிரியர் மாலதி பாலன் பற்றியும் குறிப்புகள் கொடுத்திருக் கலாம். அந்தப் புத்தகத்தில் இருந்தால்
    இப்பொழுது கூட அதை நீங்கள் குறிப்பிடலாம்.

    பதிலளிநீக்கு
  3. பல தகவல்களும் பத்து நாட்களுக்குள்ளாக வேறொருவர் எழுதிப் படித்தேன். ஆனால் அவர் பிறந்த நாள் மார்ச் ஒன்று எனத் தெரியாது. நல்ல அலசல். கட்டுரை அருமை. பாகவதர் ஏழ்மையில் இறந்ததாகத் தான் நானும் நம்பிக் கொண்டிருந்தேன். மேற்சொன்ன கட்டுரையைப் படிக்கும்வரை.

    வி.என்.ஜானகி விஷயம் ஊரறிந்த ரகசியமாச்சே! :))))))

    பதிலளிநீக்கு
  4. என்னவோ போங்க, பின் தொடரும் ஆப்ஷன் வராமல் கமென்டவே பிடிக்கலை. யாருக்கும் அது உறுத்தவே இல்லை போல! நான் தான் கிடந்து அடிச்சுக்கறேன். :)))))))

    பதிலளிநீக்கு
  5. அந்த அசத்தலான தமிழ் உச்சரிப்பு. இப்போவும் பாடறாங்களே,

    பருவாயில்ல, பருவாயில்லனு! எங்கே போய் முட்டிக்கிறது! :(

    பதிலளிநீக்கு
  6. ஜீவி சார்....குறிப்புகள் சேர்க்கப் பட்டுள்ளன. படிக்க முடிகிறதா என்று பாருங்கள். விந்தன் எழுதிய புத்தகம் இருக்கிறது.....இங்கில்லை....! மதுரையில் இருக்கிறது. அதனால் அந்தப் புத்தகத்திலிருந்து குறிப்பெடுக்க முடியவில்லை!

    பதிலளிநீக்கு
  7. ஆசிரியர் பற்றிய குறிப்புகள் படிக்க முடிகிறது. பன்முகத் திறமை கொண்டவராக இருக்கிறார். அவர் பணி சிறப்பானது. நல்லதொரு ஆய்வு.

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு. எம்.கே.டீயின் குரலும், தெளிவான உச்சரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர் பாடிய பாடலில் பாபநாசம் சிவன் அவர்கள் எழுதிய 'வள்ளலை பாடும் வாயால்' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடலும் அழகு, பாடல் வரிகளும் அழகு. பலமுறை கேட்டிருக்கிறேன். இன்று இந்த பதிவை படித்தபோதும் ஒரு முறை கேட்டேன். :)

    எல்லா பாடல்களையும் ஒரு முறை கேட்டேன். என்னதான் சொல்லுங்க, கடைசி பாட்டுல மனசு அப்படியே கப்புன்னு நின்னுடுச்சு. ஹிஹிஹிஹி......

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான புத்தக அறிமுகம்.உங்க பதிவிலிருந்து பாகவதர் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.நன்றி.

    திரும்ப திரும்ப கேட்டும் விதமான சிறப்பான பாடல்கள் தேர்வு செய்து கொடுத்திருக்கீங்க அருமை.

    பதிலளிநீக்கு
  10. எங்கள் ப்ளாக்1 மார்ச், 2012 அன்று AM 8:49

    // கீதா சாம்பசிவம் said...
    என்னவோ போங்க, பின் தொடரும் ஆப்ஷன் வராமல் கமென்டவே பிடிக்கலை. யாருக்கும் அது உறுத்தவே இல்லை போல! நான் தான் கிடந்து அடிச்சுக்கறேன்.//

    கூகிலாண்டவரின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என்று நினைக்கின்றோம்!

    பதிலளிநீக்கு
  11. முழுப்புத்தகத்தையும் படித்த திருப்தி. அன்றைய சூப்பர்ஸ்டார்களை விட இப்போதைய சூப்பர்ஸ்டார்கள் நிறைய விபரமானவர்கள். பொருளாதார ரீதியான இறக்கங்கள் ஏற்படாமல் பார்த்து கொள்கிறார்கள். ஹரிதாஸ் திரைப்படத்தை 80களில் மத்தியில் பனிரெண்டு ரீலுக்கு சுருக்கி புத்தம் புது காப்பியாக வெளியிட்டப்போது - திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  12. ஒரு நல்ல நினைவஞ்சலி.
    இன்று நாம் பொய்மையில்
    பல உண்மையான முகங்களை
    மறந்து கொண்டிருக்கிறோம்.
    இன்று என்பது நேற்றையின் வளர்ச்சி என்பது
    பலருக்கும் புரியாது
    போனதால் பழமையையும்
    பழமையானவர்களின்
    பெருமை தெரியாமல் மதிக்காமலிருக்கிறோம்.
    கட்டுரைக்கு நன்றி.........

    பதிலளிநீக்கு
  13. //சிறு வயதில் கேட்ட இவர் பாடல்களை வைத்து நான் அப்புறம் அவற்றை முத்திரைப் பாடல்களாக வைத்துக் கொண்டு (!) ராகம் கண்டு பிடித்திருக்கிறேன்!//
    அவர் பாடல்களின் சிறப்பே அதுதான்.சாருகேசி என்றால் முதலில் நினைவுக்கு வருவது ”மன்மதலீலையை”தான்.
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  14. http://www.geetham.net/forums/showthread.php?31392-M-K-Thyagaraja-Bhagavathar-83-songs

    பதிலளிநீக்கு
  15. பதிலுக்கு நன்றி. படிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  16. அழகாயும் இருக்கிறார்.கம்பீரமான சுத்தமான உச்சரிப்போடு பாடல்கள்.இன்று முழுமையாக மாறிக்கிடக்கிறதே இந்த இசை.இதுவும் ஒரு ரசனை.எனக்குப் பிடித்திருக்கிறது இவரது சில பாடல்கள் !

    பதிலளிநீக்கு
  17. மிகவும் அருமையான பதிவு. "சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே..." எனக்கு மிகவும் பிடிக்கும். அதிகாலையில் "ராஜன் மகராஜன்.." பாடலைக் கேட்டதில் திருவெற்றியூர் சென்று தியாகராஜனை தரிசித்த மன நிறைவு.. இந்த நாளை இனிதாக்கியது இப்பதிவு.

    பதிலளிநீக்கு
  18. KANNIL NEERAI VARAVAZAITHUVITTEERGAL.

    NANDRI
    KARUNAKARAN
    CHENNAI

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!